Friday, August 27, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 18

ஜலப்பிரவாகத்தில் வலம் எது? இடம் எது?

வாழ்க்கையும் அப்படித்தானே! கவனமாக இருக்கின்றவனுக்கு சோதனைகளைத் தாண்டுவது சுலபம். ஆனால் தன்னை மறந்து, தன்னை இழந்து போகின்றவனுக்கு வாழ்க்கையில் சுனாமியைச் சந்தித்துதானே ஆக வேண்டும்? ’தத்துவங்களைக் குப்பையில் போட்டு விடு,’ என்று சொல்லவும் ஒரு கூட்டம். மனிதன் அமைதியை இழந்து வாழ வேண்டிய நிலைக்கு அவனே காரணியாகும்.

ஆற்றிலே நீந்திக் கொண்டிருந்த சங்கரனுக்கு ஆதியின் குரல் கேட்டும் திசை தெரியாமல் போகக் கூடாத பக்கமே சென்று கொண்டிருந்தான். ஒரு சுழல் அவனை இழுத்து முறுக்கிற்று. மேலே தலை தூக்க முடியாமல் அழுத்தி எங்கோ இழுத்துக் கொண்டு போயின.

சங்கரனுக்கு அம்மா சொன்ன மார்க்கண்டேயன் கதை அப்போது நினைவுக்கு வந்தது:

ஈசனை இறுகப்பற்றிக் கொள்வாரை எமன் நெருங்குவதற்கு அஞ்சுவான்

ஈசன் எங்கே?அவன் எங்குதான் இல்லை?நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவன்; இந்த நீர்ச்சுழலில் இல்லாமல் போய்விடுவானோ?

நம்பிக்கை! இறை நம்பிக்கை- இந்த நம்பிக்கை சொல்லைச் சரியாகப் புரிந்திருக்கின்றோமா?

இறை நம்பிக்கையுள்ளவன் அவன் வாழ வேண்டிய மனத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; இறை நம்பிக்கையுள்ளவன் அவன் படைத்த உயிர்களிடம் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பிள்ளைப்பருவத்தில் சங்கரன் தாயின் வார்த்தைகளைப் பெரிதும் மதிப்பவன். அந்தத் தாயும் தன் மகனுக்குச் சொல்ல வேண்டியவைகளை நல்ல கதைகள் வடிவில் சொல்லி இருக்கின்றாள்.

இன்றைய காலத்தில் தாய்க்குக் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த நேரமில்லை. பல வேலைகள் இருப்பது உண்மைதான். ஆனால் தொலைக்காட்சிக்கு அடிமையாகி மூன்று வயது குழந்தையைக் கூட ட்யூஷன் என்ற பெயரில் அனுப்பிவிடும் கொடுமையைப் பார்க்கும் பொழுது வேதனை எழுகின்றது.

சங்கரனின் தாயாரால் ஒரு ஞானி உதயமாகின்றார். பல தாய்மார்களின் சினிமா மோகத்தால் சாத்தான்கள் உருவாகின்றனர்.

நல்லவை கடவுள்; கெட்டவை சாத்தான்கள்!

சுழலில் அகப்பட்டு நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் சங்கரனுக்கு அம்மா சொன்ன மார்க்கண்டேயன் கதை நினைவிற்கு வந்தது. சங்கரன் நம்பிக்கை ஆழமானது. அர்த்தமுள்ளது.

இரு கரங்கள் அவனைத் தழுவின. மரணத்திலிருந்து இரண்டு உயிர்களும் தப்பிக் கரை ஏறின.

ஒரு உயிர் இன்னொன்றைச் சுமந்தது; அங்கே பிரிவினைகள் கிடையாது. உயிருக்கு ஆண் என்றோ பெண் என்றோ பேதம் கிடையாது. உடலை விட்டு உயிர் நீங்கின் அது எங்கு வேண்டுமானாலும் மீள் குடியேறும். அது புழு, பூச்சியாகக் கூட இருக்கலாம்.

பிறப்பில் உயர்வு தாழ்வு என்பது குணத்தால், அவன் வாழும் முறையால் வருவது. மனக்கோயிலில் சாத்தானைக் குடியேற்றினால் அதற்குக் கொத்தடிமையாகி நாமும் கூத்தாட வேண்டியதுதான்.

சங்கரனின் உயிரை மீட்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தான்ஆதி. சாதி பார்த்துக் கொண்டு தொலைவில் நின்றிருந்தால் ..?

பிழைத்து எழுந்த சங்கரன் எதிரே வந்து நின்ற ஆதியைப் பார்க்கின்றான், மரணத்திலிருந்து மீட்ட சிவனைப்போல் ஆதி தோன்றினான்.தூரத்தில் அக்கரையில் தெரிகின்ற அக்ரகாரத்தையும், சிவன்கோயில் கோபுரத்தையும் சங்கரனின் கண்கள் வெறித்தன.

ஆதி, உன் கையால் அந்தத் துணிகளை ஜலத்திலே போட்டுடேன். நான் பிழிஞ்சு எடுத்துண்டுறேன்,“என்றான் சங்கரன்.

சில நேரங்களில் சில சம்பிரதாயங்களை விட்டு விட முடிவதில்லை. ஒதுக்குவது, ஒதுங்குவது என்பதெல்லாம் மனம் செய்யும் கூத்து.

சங்கரனும் ஆதியும் அன்பிலே கட்டுண்டவர்கள். தங்கள் எல்லைகளைப் புரிந்து கொண்டே அவர்களால் அன்பு செலுத்த முடிந்தது. எனவே யார் மனமும் காயப்படவில்லை.

அன்றிரவு அம்மாவிடம் நடந்த அனைத்தும் கூறுகின்றான் சங்கரன்.

அதைக் கேட்டுவிட்டு சங்கரனுக்கு ஆதி சங்கரரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார் அவன் தாயார். பரமேஸ்வரனே ஓர் புலையனாக வந்த சம்பவத்தைக் கேட்கவும் நம் சங்கரனுக்கு அவன் உயிரைக் காப்பாற்றிய ஆதியும் அந்த ஈஸ்வரனாகத் தோன்றுகின்றான்.

ஒரு தீண்டத்தகாத சிறுவனை தெய்வமாக வணங்கத் தோன்றியது என்று கதாசிரியர் எழுதுவது சம்பிரதாயங்களில் ஊறியவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். பரம்பொருள் இல்லாத இடம் ஏது? எல்லா உயிர்களிலும் அவன் உறைகின்றான். முழுப் பொருளை உணர்ந்தவர்கள் முணங்க மாட்டார்கள்.

நியதிகள் எப்பொழுதும் நிர்ப்பந்தமல்ல. எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்.

இந்துமதம் ஒரு கடல். அங்கே காணும் தத்துவங்கள் அர்த்தமுள்ளவை. ஆனால் தோலை மட்டும் காட்டித் திரிந்தால் சக்கையாகத்தான் பார்ப்பார்கள். கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்துமதம்“ பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் அது மட்டும் போதாது. வேதம் ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டும் சொந்தம் என்பதில்லை.வாழ்க்கையின் வழி நூல். இது கேள்வி யுகம். இக்காலத்து மக்களுக்கு புரிந்துகொள்ளும் வகையில் விரிவான விளக்கங்கள் நிறைய எழுதப் படவேண்டும்.

இறைவன் எல்லோருக்கும் சொந்தம். அவன் ஒரு ஏகன். யாரும் அவரவர் விருப்பப்படி பெயர் வைத்து அழைத்துக் கொள்ளட்டும். எல்லாப் பெயர்களும் அந்தப்பரம் பொருளைத்தான் குறிக்கின்றன. காழ்ப்புணர்ச்சி விடுத்து மனித நேயம் வளர்ப்போம அன்பில்லாத இதயத்தில் ஆண்டவன் இருக்க மாட்டார். "அன்பே சிவம்."

ஜெயகாந்தன் சொல்லுவதைப் பார்ப்போம்.

ஒரு தீண்டதகாத சிறுவனை வணங்குகின்றான் சங்கரன்.

ஈஸ்வரனே புலையனாக வருவான் என்கிறாள் அம்மா
.

அந்தப் புலையனை ஆலயத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்கிறார் சித்தப்பா.

அதை எதிர்த்து உயிரைக் கொடுத்தேனும் தடுப்பேன் என்று உறுதியாக நிற்கின்றார் அப்பா.


சங்கரன் ஆதியுடன் மனம் விட்டுப் பேசுகின்றான். தான் கோயிலுக்குள் போகப் போவதில்லை என்று கூறுகின்றான் ஆதி. அவன் கொடுக்கும் விளக்கம்தான் புதுமையானது. சிந்திக்க வைப்பது

என்னைத் தொடறதுக்கு உனக்கு எவ்வளவு கூச்சம் இருக்கோ அதேமாதிரி உன்னைத் தொடறதுக்கும் எனக்குக் கூசுது சாமி

உரையாடலில் ஜெயகாந்தன் சிறந்தவர் என்பதற்கு ஒரு சான்று.

ஊரில் குழப்பம் நீடிக்கின்றது. மகாலிங்க அய்யர் சங்கரனைக் கூட்டிக் கொண்டு ஸ்ரீமடத்திற்குப் புறப்பட்டு விட்டார்.

ஸ்ரீமடத்தில் ஆச்சார்ய ஸ்வாமிகள் முன் நிற்கும் பொழுது குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார் மகாலிங்க அய்யர்.

என்ன நடந்துவிட்டது?என்னதான் நடந்துவிடப்போகின்றது?எதைத் தடுத்துவிட முடியும்? எது தடுக்கத் தக்கது? என்றெல்லாம் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டாயா?ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கால எல்லை உண்டு. சநாதன தர்மத்துக்கு இவற்றாலெல்லாம் ஏதும் பங்கம் நேர்ந்து விடாது.ஓர் அத்வைதி சடங்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்பதை அறிவாய் , அல்லவா?அப்படி என்றால் உனது சமஸ்காரங்களும் சடங்குகளும் கூட ஒரு கால எல்லைக்கு உட்பட்டவையே .எங்கும் நிறைந்திருக்கும் ஈசன் எவருடைய எந்தச் செய்கையால் எங்கிருந்து எங்கு போய்விடுவான்? எல்லாவற்றையும் ஈஸ்வரார்ப்பணம் என்று கருதிக் கொண்டு உனது கடமைகளை மகிழ்ச்சியோடு செய்

ஜெயகாந்தனின் இந்த வாசகங்கள் என்னைக் கடந்த காலத்துக்கு அழைத்துச் சென்று சங்கர மடத்தில் கொண்டு போய் நிறுத்தியது.

அன்று நான் மணியனுடன் மடத்திற்குச் சென்றிருந்தேன். யாரிடமும் தயங்காமல் பேசும் நான் மணியனிடம் முணங்கினேன். அவர்தான் எனக்காக ஸ்வாமிகளிடம் பேசினார்.

மற்றவர்கள் பல கேள்விகள் எழுப்புவதும் கேலி செய்வதும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது.

என் பயத்தை மணியன் கூறவும் மகாப்பெரியவர் என்னைப் பார்த்தார்.

"மனுஷாள் தானே பேசறா. ஈஸ்வரன் தன்னைப் பாத்துப்பான். நீ கவலைப்படாதே."

எப்பேர்ப்பட்ட உண்மை! அன்று அதன் முழு அர்த்தம் தெரியவில்லை. ஆனால் இன்று அமெரிக்காவில் வாழும் பொழுது புரிகின்றது. உலகெங்கும் யோகா என்றும் தியானம் என்றும் பரவி சகல மதங்களும் அவரவர் இஷ்ட தெய்வங்களை நினைத்து நிஷ்டையில் உட்காருவதைப் பார்க்கின்றேன். பல இடங்களில் "ஓம்" என்றும் ஒலிக்கின்றது.

யோகாவும் தியானப் பயிற்சியும் மனிதனின் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகின்றது என்று மருத்துவர்கள் கூற ஆரம்பித்துள்ளனர். உறக்கத்திற்கு வேறு எதையும் நாட வேண்டியதில்லை. உடல் ஆரோக்கித்திற்கு இந்த இரண்டும் பெரிய உதவியாக இருக்கின்றன என்று மருத்துவ உலகத்தின் ஒப்புதல் ஒலிக்கின்றது.

இந்த யோகாவும் தியானமும் எப்பொழுது தோன்றின? நாட்டுக்கு நாடு வெவ்வேறு பெயரில் இயங்கினாலும் இதன் மூலக்கரு உதித்த இடம் எது? பெயர் எதுவானால் என்ன, இறைவன் தன் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றான்.

ஆம், அவனுக்கு அவனைப் பார்த்துக் கொள்ளத் தெரியும்.

மேடையில் கடவுள் இல்லை என்று கர்ஜித்தவனும், பத்தி பத்தியாய் எழுதுகின்றவனும் மரண பயம் எட்டவும் மனத்திற்குள் இறைவனை நினைக்காமல் இருக்க முடியாது. அவன் வீட்டுப் பெண்கள் அவனுக்காகக் கோயிலுக்குப் போகும் பொழுது “இது வீட்டு விஷயம்” என்று சொல்லிவிடுகின்றார்கள். அப்படியென்றல் இவர்கள் யாருக்காகச் சொல்லித் திரிகின்றார்கள்.?

தியானத்தில் முதல்படி அவர்கள் பிரபஞ்ச சக்தியை நினைக்க வேண்டும். ஆங்கிலத்தில் energy என்று சொல்லித் தரப்பட்டுள்ளது. அந்த பிரபஞ்ச சக்தி பெயரில் தியான மையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த பிரபஞ்சசக்தி எது?

மஹாப்பெரியவரின் வார்த்தைக்கு அர்த்தம் இப்பொழுது புரிந்தது.

வளைந்தால் என்ன? நிமிர்ந்தால் என்ன?இந்த மதம், இந்த மார்க்கம் , இந்த நெறி , இந்த கலாச்சாரம் , இந்த நம்பிக்கை - காலமாற்றத்துக்கும் அவரவர் பாண்டியத்துவத்திற்கும் ஏற்ப என்ன பெயரில் அழைத்தாலும் - இது சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருகின்றது! வாழும்

இது ஜெயகாந்தன் தன் தொடரில் அன்றே எழுதியது.

வேத வித்து சக்தி வாய்ந்தது. பெயர் எதுவானால் என்ன? தத்துவம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

ஸ்ரீமடத்தில் ஆச்சார்ய ஸ்வாமிகளின் உரை மகாலிங்க அய்யரை நோக்கிக் கூறப்பட்டாலும் அந்த வாசகங்களைக் கேட்டுக் கொண்டு நின்ற சங்கரன் பரவசம் கொண்டு நின்றான்.

சில மனிதர்களின் வாழ்க்கையில் திடீரென திருப்புமுனை வந்துவிடும்.

மகாலிங்க அய்யர் தன் மனைவியுடன் காசிக்குப் போய் வாழ ஆசி கிடைக்கின்றது. சங்கரனின் மேல் ஸ்வாமிகளின் பார்வை விழுகின்றது. இனி சங்கரனை அவன் இவன் என்று பேச முடியாத உயரத்திற்குக் கொண்டு போய்விடுகின்றது . இனி சங்கரனின் வாழ்க்கை ஸ்ரீமடத்தில் தான்; பீடத்திற்குரியவராகிவிடுகின்றார்

துறவியாவது எளிதல்ல. அதற்கும் ஆண்டவனின் அருள் வேண்டும்.

இந்த எளியவளின் அனுபவத்தை இங்கிடுவதைப் பொறுத்தருள வேண்டுகின்றேன். நான் சாமான்யமானவள். என்னைப்போன்ற சாமான்யமானவர்களுக்காக எழுதிக் கொண்டிருக்கின்றேன். எனவே என் முயற்சி பிழையல்ல.

நான் படித்த கல்லூரி தூய மேரி அன்னை கல்லூரி. விடுதியில் தங்கிப் படித்தேன். சுற்றிலும் கிறிஸ்தவ சன்னியாசினிகள். அதிலே எங்களுக்குத் தமிழ் ஆசிரியையாக இருந்தவர் சிஸ்டர். எமெரென்சியாமேரி அவர்கள். அவர்களுக்கு ஒரு ஆசை. நானும் அவர்களைப் போல் துறவறம் பூண்டு கன்னிமாடத்திற்கு வர வேண்டுமென்று எப்பொழுதும் ஏசுபிதாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் அவர்களிடம் கேலியாக, “என் முருகனுக்கும் ஏசுபிரானுக்கும் இடையில் போட்டியை உருவாக்கியிருக்கின்றீர்கள் யார் வெல்லுகின்றார்கள் பார்க்கலாம்” என்று கூறிவந்தேன். ஆனாலும் உள்ளத்தில் துறவியாகும் ஆசை மெதுவாக வளர ஆரம்பித்தது.

ஏற்கனவே ஓர் சூழலில் சுவாமி சிவானந்த மகரிஷிக்கும் எனக்கும் இடையில் கடிதத்தொடர்பு இருந்து வந்தது. அடிக்கடி கடிதங்கள் அனுப்புவதுடன் நிறைய புத்தகங்களும் அனுப்பிவந்தார். அவைகளைப் படிக்கப் படிக்க என் ஆர்வம் மேலும் வளர்ந்தது. ஆரம்ப காலத்தில் எனக்கு வரும் புத்தகங்களைச் சரியாகக் கொடுக்காமல் நிர்வாகத்தினர் வைத்துக் கொண்டனர்.

கல்லூரியில் நுழைந்த பொழுது தூத்துக்குடியில் இருந்த பிஷப் மேதகு உயர்திரு ரோச் அவர்கள் ஆனால் ஒருவருடத்திற்குப் பின் மேதகு உயர்திரு தாமஸ் பெர்னாண்டோ அவர்கள் வந்துவிட்டார். என்னை இருவருக்குமே பிடித்திருந்தது. என் புத்தகங்கள் பிரச்சனையைக் அவரிடம் கூறவும் எனக்கு வரும் புத்தகங்கள் தடை செய்யப்படவில்லை.

என் துறவற ஆசையை சுவாமிஜிக்குத் தெரிவித்தேன். ரிஷிகேசம் வருவேன் என்று அடம்பிடித்தேன். ஒரு அப்பாவிடம் உரிமையுடன் சண்டை போடுவதைப் போல் அவருடனும் சண்டை போட்டேன். ஆனால் சுவாமிஜி என்னைப் படிக்கச் சொன்னார். படித்து முடித்து வேலைக்குப் போக வேண்டுமென்று கூறிக்கொண்டே வந்தார்

எங்கள் பிஷப்பிடம் என் துறவற ஆசையைச் சொன்ன பொழுதெல்லாம் அவரும் என்னைப் படித்து வேலைக்குப் போகச் சொன்னார். இரு துறவிகளும் என்னை வழி நடத்தி பட்டதாரியாக ஆகும் வரை பக்கத் துணையாக இருந்து வந்தனர். பின் இரு வருடங்கள் என்னைப் படிக்க வைத்ததே நான் படித்த கிறிஸ்தவ நிர்வாகம் தான். என்னை யாரும் மதம் மாறச் சொல்லிக் கட்டாயப் படுத்தவில்லை. என் முருக வழிபாடு எல்லோருக்கும் தெரியும்.

எப்படியோ என் படிப்பு முடிந்து நான் படித்த பள்ளியிலேயே ஆசிரியையாகச் சேர்ந்தேன். அதே பள்ளியில் தான் சுவாமிஜி படித்திருந்தார். பாரதியும் அந்த பள்ளி மாணவர்தான். பணியில் சேரவும் சுவாமிஜிக்குத் தெரிவித்தேன். அவரிடமிருந்து பதிலும் வந்தது. ஏனோ அந்தக் கடிதத்தில் ஓர் மறை முகச் செய்தி இருப்பதாக உணர்ந்தேன். அந்தக் கடிதத்தில் இருந்த வரிகள் இதுதான்


31st july 1956


Blessed divinity, salutations. Om namo narayanaya.

Thy kind letter. I am very glad to know you have passed the B.A. and you have joined as a teacher, it is very good. Kindly be brave and fight the battle of daily life. Be strong in mind. Be joyful and calm at all times . Have faith in the Lord at any cost. He gives you some experiances to give you more strength and will to face the life more bravely. Be sure of His Divine Living presence at all times with you. Then you will be filled with joy and strength. Be sure of His grace and do your best. He will guide you and inspire your path


Sd sivananda

ஆம். நான் வேறு திசையில் பயணம் போகப் போகின்றேன் என்று அப்பொழுது தெரியாது

என் தந்தை என்னை அழைத்துக் கொண்டு பெருந்தலைவர் காமராஜரைப் பார்க்க புறப்பட்டுவிட்டார். அப்பா ஒரு சுதந்திரப் போராட்ட தொண்டர். தன் தலைவரிடம் மகள் பட்டம் பெற்ற பெருமையைக் காட்ட அழைத்துச் சென்றார். அக்காலத்தில் ஒரு பெண் பட்டதாரியாவது பெரிய சாதனை. கர்ம வீரருக்கோ எல்லோரும் கல்வி கற்க வேண்டுமென்ற லட்சியம்.

அந்தப் பெருமகனார் ஆசிகள் கூறுவதற்குப் பதிலாகக் கோபத்துடன் பேசினார். அவரின் வார்த்தைகளைப் பாருங்களேன்.

“படிச்சவங்க எல்லாம் இப்படி சுகமான வேலைக்குப் போனா கிராமம் என்னாகறது. அங்கே இருக்கற ஜனங்களுக்கு ஒரு வசதியும் இல்லே. லைட் இல்லே. அவுக ஊருக்குப் போக சரியான ரோடு இல்லே. பள்ளிக்கூடம் இருந்தாலும் புள்ளங்களை அனுப்பறதில்லே. ஆஸ்பத்திரிக்குக் கூடப் போகத் தெரியல்லே. முதல்லே அவங்களுக்கு உலகம் போற போக்கு தெரியணும். அவங்களுக்கு வசதி செய்து தரணும். அவங்க புள்ளங்க பள்ளிக்கூடம் போகணும்.கிராமத்துலே போய் வேலையைப் பாரு. கட்டின துணி அழுக்குபடும்னு சொகுசு வேலை தேடாதே. மணிமகள் பார்க்க வேண்டிய வேலை அதுதான்

நானும் சரி என்று கூறிவிட்டு வந்தேன். என்ன வேலை, எப்படி கண்டு பிடிப்பது என்றெல்லாம் சொல்ல வில்லை. ஆனால் ஒரு மாதத்தில் பத்திரிகை விளம்பரம் எனக்கு இறைவன் பணித்த பணியைக் காட்டியது. சுவாமிஜியின் கடிததத்தின் ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தமும் அப்பொழுது புரிந்தது.

நான் விரும்பிய துறவற வாழ்க்கை எனக்கு அமையவில்லை.தெய்வத்தின் கட்டளை வேறு. மகான்களால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கேற்ப எனக்கு வழிகாட்டினர்கள்.

சமுதாயப்பணிக்குச் சென்றேன். பல வருடங்கள் கழித்து இன்னொரு அனுபவம் கிடைத்தது.

நான் உதகை மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஊட்டிக்கு ஒரு மகான் வந்தார். அவர் தியானப்பயிற்சி கொடுக்க வந்தார். நானும் அப்பயிற்சியில் சேர்ந்தேன். எனக்கு முதன் முதலில் குண்டலினி எழுப்பியவர் அந்த மகான் தான். பயிற்சி வகுப்பு முடியவிட்டும் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு வார காலத்தில் அவரின் நன்மதிப்பைப் பெற்றென். அவர் பல ஊர்களுக்குச் செல்கின்றவர். அவர் பணியில் என்னைச் சேரச் சொன்னார். என் இயலாமையைக் கூறி மறுத்துவிட்டேன். அந்த மகான் பெயர் உயர்திரு பரஞ்சோதி அடிகளார். சமீபத்தில்தான் ஒரு உண்மை அறிந்தேன். அவர்தான் வேதாத்ரி மகரிஷியின் குருநாதர் என்று!

மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தது. சுவாமி சச்சிதானந்த அடிகள் சென்னைக்கு வந்திருந்தார். அப்பொழுது அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஹிப்பிகளை நேர்வழிக்கு மாற்றி சிறப்பு பெயர் பெற்றிருந்தார். அவர் சென்னைக்கு வரவும் பத்திரிகையாளர்கள் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. என் நண்பர் பகீரதன் அவர்கள் தான் ஏற்பாடு செய்திருந்தார். என்னையும் வரச் சொன்னார். அன்றைய கூட்டத்தில் அவர் செயல்பாடுகளைக் கண்டு பிரமித்தேன். கூட்டம் முடிந்தும் அவருடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தேன். அவருடன் அமெரிக்கா வந்து சேவை செய்யச் சொன்னார். என் இயலாமை கூறி மறுத்தேன்

துறவற வாக்கையை நான் தேடினேன். எனக்குக் கிடைக்கவில்லை. ஆன்மீகப் பனிகளுக்கு அழைப்பு வந்தன நான் மறுத்துவிட்டேன்.

இறைவன் எனக்கென்று ஒதுக்கிய பணி, வாழ்க்கையில் நலிந்தவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பது. வரும் பிரச்சனைகளை எதிர் நோக்கி, நல்ல முறையில் செயல்பட என் குருந்தார் சிவானந்த சுவாமிஜியின் கடித வரிகள் எனக்கு வலிமை கொடுத்துவந்தது. இப்பொழுதும் அக்கடித்தத்தை என் குருநாதராக மதித்துப் பாதுகாத்து வருகின்றேன்.

எல்லாம் இறைவன் சித்தப்படிதான் நடக்கும். என் தாயார் கூறுவார்கள்: "திருப்பதி கோயிலுக்குப் போக வேண்டுமென்று வேண்டினாலும் அவர் கூப்பீட்டால்தான் போக முடியும்," என்று.

என் வாழ்க்கையில் அவர் திருவிளையாடலால், பல முறை கோபித்து அவரை நிந்தித்திருக்கின்றேன். ஆனாலும் அவர் இல்லை என்று எப்பொழுதும் நான் நினைத்ததில்லை. சொல்லப் போனால் அவர்தான் நிச்சயம், உண்மை என்பதையும் என் மனம் அறியும்..

தெய்வத்தின் அருளால் நம் சங்கரன் ஸ்ரீமடத்தின் ஆச்சாரியரானார். ஜெய ஜெய சங்கர கதையினைப் பார்ப்போம்.

(தொடரும்)

நன்றி: "திண்ணை"

Monday, August 16, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 17

ஜய ஜய சங்கர" கதையைத் தொடங்கும் முன் ஜெயகாந்தனின் முன்னுரை!

"நமது பத்திரிகையாளர்களுக்கு மேற்சொன்ன அந்த பாக்கியம் லபித்ததோ என்னவோ,ஆசார்ய ஸ்வாமிகளின் ஆக்ஞைக்கு ஏற்ப, இயல்பாகவே எழுதுகிறவன் என்கிற முறையில் இந்த மேலான பாக்யத்தை முழுமையாக அடைந்துள்ளவன் நான். இதன்பொருட்டு நானும், என் சமகாலத் தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவது இயல்பு.

இந்த “ஜய ஜய சங்கர “ ஒரு கதை; கற்பனை;கனவு;ஆனால் பொய் அல்ல: சத்தியம். உங்கள் நடைமுறை வாழ்க்கையைவிடவும், நமது நிதர்சனங்களைவிடவும், எனது கனவுகளும் கற்பனைகளும்,கதையும், மேலான அர்த்தமும் ஆக்கசக்தியும் உடையவை. நான் எழுதுவதுதான் முக்கியமே தவிர எந்தப் பத்திரிகையில் அல்லது பனை ஓலையில் எழுதினேன் என்பதால் எழுத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படுவதில்லை. எழுத்தின் தலைவிதி எழுதப்படுவதாலேயே தீர்மானமாகிறது. விளைவுகள் நம் அனைவரையும் மேன்மையுறச் செய்யட்டும்."

ஜய ஜய சங்கர” ஒரு கதை என்று ஆசிரியரே சொல்லிவிட்டார். அது கற்பனையென்றாலும் அவரது கனவு என்றும் ஒப்புதல் தருகின்றார். அவரது காலத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களுக்கு சாட்சியாக எழுத்துடன் செல்கின்றார்.

அவர் மட்டுமா? நானும் தான். நானும் ஒரு நேரடி சாட்சி. எங்கள் குடும்பம் நேரடியாகப் பாதிக்கப்பட்டது. இப்படி எத்தனை பேர்கள் வாழ்க்கையோ? இந்தக் கதை வந்த பொழுது எழுந்த விமர்சனங்களும் மிக அதிகம். அர்த்தமுள்ள ஆசை; மறுப்பதிற்கில்லை

கதையைப் பார்ப்போம்.

கதையின் கரு உணர்ச்சிபூர்வமானது. கம்பி மேல் நடப்பது போன்று கழைக்கூத்தாடியாக இருந்து கதையை நகர்த்தியிருக்கின்றார்

இறந்த காலத்தின் எலும்புக்கூடாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமம் சங்கரபுரம். அவருடைய எரிச்சலை ஆரம்பத்திலேயே பதிந்திருக்கின்றார்.

நாஸ்திகம் என்னும் நிர்மூடவாதம் ஓர் நாகரீகமாய்க் கவிந்திருக்கின்றது.கோயிலுக்கு முன்னாலுள்ள மைதானத்தில் கால மழையில் கரைந்து போகிற ஒரு சிலையை எழுப்பி அதன்கீழ் “கடவுளை நம்புகிறவன் முட்டாள்” என்றும் அதுமாதிரியான இன்னும் ஏதேதோ மொழிகளையும் செதுக்கிவைத்திருக்கிறது.

ஊர் எத்தனை வகைப்பட்டுப் பகைகொண்டு பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றது என்பதற்கடையாளமாய்ப் பல கம்பங்களில் பல கொடிகள் அங்கு பறந்து கொண்டிருக்கின்றன. (இதை எழுதும் பொழுதே நெஞ்சம் பதைக்கின்றது.
எத்தனை எத்தனை பிரிவினைகள்! எவ்வளவு காழ்ப்புணர்ச்சி! இதற்கா சுதந்திரம் வேண்டிப் போராடினோம்? நெஞ்சு பொறுக்குதில்லையே என்று மனம் அலறுகின்றது)

அந்த ஊரில் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயர் “சங்கராபரணம்

கதையின் நாயகனின் பெயரும் சங்கரன்.

ஆசிரியரை அந்த “சங்கரன்” பலமாகப் பிடித்துக் கொண்டிருப்பது தெரிகின்றது !

அகண்ட காவிரிபோல் இருக்கும் ஆற்றின் இரு கரைகளுக்கிடையில் பாலம் அமைத்து கதையை நகர்த்துகின்றார். என்னே கற்பனை!

அங்கே இரு சிறுவர்கள்!

ஒருவன் பெயர் சங்கரன்; அக்கிரஹாரத்துப் பிள்ளை

இன்னொருவன் பெயர் ஆதி;சேரிப் பையன்

சங்கரன் ஒரு கரையில் இருந்து கொண்டு தூரத்தே தெரியும் பறைச்சேரியையும் சுடுகாட்டையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இந்தப் பிரபஞ்சம் சார்ந்த எல்லாவற்றிலும் அவன் பிரம்மத்தையே தரிசனம் செய்து கொண்டிருந்தான்.

ஆதி என்ற பெயர், குறளில் வரும் ஆதி பகவனைக் குறிப்பது என்று ஆசிரியர் சொன்னாலும் என் மனம் நினைப்பது வேறு. ஆதி சங்கரரை இரண்டு பாகமாக்கி ஆதியாகவும் சங்கரனாகவும் படைக்கும் உணர்வு அவரையும் அறியாமல் தோன்றியிருக்குமோ?

பிள்ளைப்பருவ நட்பிலே அப்படி ஒரு லயிப்பு, இணைப்பைக் காண்கின்றோம்!

மகாலிங்க அய்யர் ஓர் அந்தணர். சிவன் கோயில் குருக்கள். சாஸ்திரங்களை நன்கு பயின்றவர். அவருடைய தம்பி சதாசிவ அய்யர். அவரும் சாஸ்திரங்களைப் படித்திருந்தாலும் பக்கத்து ஊருக்குச் சென்று ஆங்கிலம் , இன்னும் சில மொழிகளையும் கற்றவர். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. காந்தி பக்தரானார்.

மகாலிங்க அய்யரின் புதல்வன் சங்கரன்.சதாசிவம் அய்யரின் புதல்வி சுதந்திர தேவி.

இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைபட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் ராலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைதனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே.

சதாசிவ அய்யரின் மனத்தில் மந்திரமாய் உச்சரித்துக் கொண்டிருந்த மந்திரம் இது. எனவே அவருக்குப் பெண்குழந்தை பிறக்கவும் சுதந்திர தேவி என்ற பெயரையே சூட்டினார்.

ஜெயகாந்தன் போற்றித் துதிக்கும் கவிஞன் பாரதி! அவனை இங்கே எட்டிப் பார்க்க வைத்துவிட்டான்!

இந்தியா அடிமையாக இருந்த காலத்தில் இந்த சுதந்திர தாகம் எங்கும் இருந்தது. நானும் அக்காலத்து மனுஷி. சுதந்திரம் கிடைக்கும் முன்னரேயே “ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் “ என்று கூத்தாடினான் பாரதி. நாங்களும் அதைப் பாடி ஆடினோம். பாரதி பிறந்த வீட்டில் அவரின் தாய்மாமன் சாம்பசிவ அய்யர் பாட நிஜமாகவே நான் ஆடியிருக்கின்றேன்.

சதாசிவ அய்யர் தேச சேவையில் தண்ணை ஐக்கியப்படுத்திக் கொண்டார். காந்திஜியின் சிந்தனைகளைப் பற்றி பிரசங்கம் செய்யத் தொடங்கினார். “வந்தேமாதரம் ‘ . “ஹரிஜன்” என்ற சொற்கள் அடிக்கடி புழங்கலாயின. அவர் அத்துடன் நிற்காது சேரிக்கும் போய்ப் பழக ஆரம்பித்தார். அங்கே பள்ளி தொடங்கி எல்லோருக்கும் கற்றுத்தர விரும்பினார். அந்த மூங்கில் குடியிலேயே ஆஸ்ரமம் அமைத்துத் தங்கவும்ஆசைப்பட்டார். சிவன் கோயிலில் ஹரிஜன ஆலயப்பிரவேசம் செய்யப் போவதாகக் கூறவும் மகாலிங்க அய்யர் துடித்துப் போனார்

சில நம்பிக்கைகள், வழக்கங்களுக்குப் பழக்கமாகிப் போன பின்னர் ஏதாவது மாற்றங்கள் வருவதானால் அவைகளைக் கண்டு மனிதன் நடுங்குகின்றான். அதனை ஏற்க அவன் மனம் மறுக்கின்றது; மகாலிங்க அய்யரும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆலயப் பிரவேசத்திற்கு ஹரிஜனங்களைக் கூட்டி வந்தால் கோயிலில் குறுக்கே படுத்து உயிரை விட்டுவிடுவதாகக் கூறினார்.

இந்த இடத்தில் என் கடந்த கால நினைவுகள் வருகின்றது. என் தாய்க்கு பதினெட்டு வயது, எனக்கு ஒரு வயதாகி இருக்கும் பொழுது என் தந்தை எங்களை விடுத்து சத்தியாகிரஹப் போராட்டத்தில் கலந்து கொள்வதாய்க் கூறிவிட்டுச் சென்றவர்தான்;வீட்டிற்கு வரவில்லை. பல ஆண்டுகள் எங்கள் குடும்பம் எதிர் கொண்ட சோதனைகள் கொஞ்சநஞ்சமல்ல!

மதுரையில் நடந்த ஓர் வரலாற்று நிகழ்வின் பொழுது நானும் ஒரு சாட்சியாக இருந்தேன். ஆனால்,குழுந்தை சாட்சி!

என் தாயார் வீட்டைவிட்டு வெளியில் செல்வது கோயிலுக்கு மட்டும் தான்.கணவன் இல்லாத வீடு. சின்னப் பெண். எனவே என் பாட்டி அதற்குமட்டும் தான் அனுமதி கொடுத்திருந்தார். மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போவதாகச் சொல்லித்தான் என் தாயார் என்னை கூட்டிச் சென்றார்கள். நாங்கள் குடியிருந்தது தளவாய் அக்கிரஹாரம் என்ற தெருவில் கோயில் பக்கத்தில்தான் இருந்தது. ஆனால் அன்று அம்மா என்னைக் கூட்டிச் சென்ற இடம் எனக்குக் கோயிலாகப்படவில்லை.ஒரு ஓலைக் கொட்டகை. அங்கே மேடை அமைத்து அதில் ஒரு அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. வந்தவர்கள் அந்த அம்மனைத்தான் கும்பிட்டார்கள். நான் ஏதோ கேட்க வாய் திறந்த பொழுது அம்மா என்னைப் பேசவிடவில்லை. வெளியில் வந்த பிறகுதான் பேச அனுமதித்தார்கள்.

"உம்மாச்சி கோயிலுக்குக் கூட்டிண்டு போறேன்னு சொன்னியே, இங்கே ஏன் வந்தோம்?"

"இப்போ இதுதான் உம்மாசி இருக்கும் இடம்."

"ஏன்?"

"அந்தக் கோயில்லே ஹரிஜனங்கள் நுழஞ்சுட்டாளாம்.அதனால் உம்மாச்சி கோபிச்சுண்டு இங்கே வந்துட்டாளாம்."

"ஹரிஜனன்னா யாரு? அவாளும் மனுஷாள் தானே. உம்மாச்சி எப்படி கோவிச்சுப்பா?"

"நேக்கு அதெல்லாம் தெரியாது;பெரியவா சொன்னா. அதைத்தான் நானும் சொன்னேன்."

புரியாத வயது. ஏதோ தப்புன்னு மட்டும் தெரிந்தது. என் குழந்தைப் பருவக் கதைகளை என் தாயார் என்னிடம் அடிக்கடி கூறுவார்கள். என் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பவம் இது.

அதாவது தியாகி வைத்தியநாதய்யர் தலைமையில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தது. அதை எதிர்த்தவர்கள் நடேசய்யர் தலைமையில் அவசரமாக ஒரு கோயிலை உண்டு பண்ணிவிட்டார்கள். ஆனால் அந்த அமைப்பு வந்த வேகத்திலேயே போயும்விட்டது.

ஹரிஜனங்களுக்குத் தலைமை வகித்தவனும் ஒரு பிராமணன்; எதிர்த்தவனும் ஒரு பிராமணன்.

வைத்தியநாத அய்யர் அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமே சுதந்திரப் போரரட்டத்தில் கலந்து கொண்டது. கையிலிருந்த காலணாவையும் போராட்டத்தில் செலவழித்த மனிதர்;அரசியலை வியாபாரமாக்கி கோடிப் பணம் சேர்த்தவர் இல்லை.

அவருக்குச் சிலை எழுப்பினார்கள். ஆனால் அது காக்காய்க்கு கழிப்பிடமாக மாறியது. வருடத்திற்கு ஒரு நாள் கூட மாலை மரியாதை கிடையாது. தியாகத்திற்கு மனிதனிடம் கிடைக்கும் மதிப்பு இவ்வளவுதான்.

சதாசிவம் அய்யர் ஒரு நாள் இரவு மூங்கில் குடியில் தங்கி விட்டார். அவ்வளவுதான். அக்கிரஹாரத்தில் ஓர் புகைச்சலை உண்டுபண்ணிவிட்டது.

ஒரு பிராமணன் சேரியில் தங்கி அவர்களுடன் பழகுவதும் அவர்களுடன் உண்பதும் சாதிக்குப் பாதகமாகத் தெரிந்தது. சாதிபிரஷ்டம் செய்து விட்டால் என் செய்வது என்று கவலைப்பட்டார் மகாலிங்க அய்யர்.

எங்கள் குடும்பத்தில் அந்தக் கொடுமை எட்டிப் பார்த்தது.

ஐந்தாண்டுகள் கழித்து என் தந்தை எங்கள் வீட்டிற்கு வந்தார். என் தாயாருக்கு அப்பொழுது இருபத்தி மூன்று வயது. கணவனைப் பார்க்கவும் மகிழ்ச்சி. மற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த பாக்கியம் எனக்கு கிடையாது. அதாவது தந்தை மடியில் உட்கார்ந்து கொஞ்சி விளையாடுவதுதான்.அன்றுதான் உட்கார்ந்து அவரைத் தொட்டுப் பார்த்து, கட்டிப்பிடித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

என் தந்தை வந்து ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்காது. வீட்டுக்கார மாமி வந்தார்கள். என் தந்தையை முறைத்துப் பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கினார்கள்.

அங்கிச்சி, இதான் உன் ஆம்படையானா? ஜெயிலுக்குப் போனவர் தானே.அங்கே எல்லா ஜாதிக்காராளோடேயும் தங்கினவர். அவாளோடே அவா சமைச்ச சாப்பாட்டைச் சாப்பிட்டவர். அவர் இந்த ஆத்தில் இருக்கப்படாது. இது ஆச்சாரமான குடும்பம். அவரை உடனே அனுப்பிடு. அவர் ஆத்துக்குள்ளே வந்திருக்கக் கூடாது. சாந்தி செய்யணும்

நாங்கள் ஒண்டுக் குடித்தனக்காரர்கள். பல ஆண்டுகளாய்ப் பிரிந்திருந்த கணவனுடன் ஒரு நாள் கூடச் சேர்ந்திருக்க முடியாமல் துரத்திய சாதிக் கொடுமையை அனுபவித்தவர்கள் நாங்கள். எங்களுக்குச் சமாதானம் கூறிவிட்டு என் தந்தை புறப்பட்டு விட்டார். மீண்டும் மூன்று மாதங்கள் அவர் இருக்கும் இடம் தெரியாது. பின்னர் ஒரு நாள் எட்டயபுரத்திலிருந்து கடிதம் வந்தது. எங்கள் குடும்பம் எட்டயபுரம் சென்றது. இச்சம்பவத்தால் என் தாயும் சாதியை வெறுக்கத் தொடங்கினார்.

வீடு திரும்பின சதாசிவம் அய்யரிடம் அவர் நோயுற்ற மனைவிதான் கரிசனத்துடன் விசாரித்தாள். பழம் சாப்பிட்டதாகக் கூறினார். அவர் பேசியது மகாலிங்க அய்யருக்கும் காதில் விழுந்தது. அந்த நேரத்தில் கவலை ஒழிந்தாலும் பிரச்சனை முற்றிலும் நீங்கவில்லை.

சதாசிவ அய்யர் எதைப்பற்றியும் கவலைப் படவில்லை. அவருக்கு காந்திதான் எல்லாம். காந்தி சொல்தான் அவருக்கு வேதம். எனவே மூங்கில் குடிக்குப் போவதை அவர் நிறுத்தவில்லை. அங்கே இருந்தவர்களுகுக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

அண்ணன் தம்பி கதை இப்படியென்றால் அந்த நதிக் கரையோரங்களில் இன்னொரு நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. .

இடைவெளி அதிகமாயினும் இதயப்பறிமாற்றம் இயலுமா? எல்லைகளைத் தாண்டாமல் இருந்து ,தனித் தனியாய் நின்று, ஒன்றாகிப் போகும் விந்தை அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஆதி ஒரு அனாதை; ஹரிஜனப்பையன்.மாமன் தான் அவனுக்குப் பாதுகாப்பளித்தான் சும்மா அல்ல. மாமனின் ஆடுமாடுகளை அவன் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆதியும் மன மகிழ்வுடன் தன் கடமையாகக் கருதி செய்துவந்தான்.

ஆடுமாடுகளுடன் வருகின்றவனை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருப்பான் சங்கரன். அவன் வரவும் பேச ஆரம்பித்துவிடுவார்கள் ஆதியும் சங்கரனும். சங்கரனுக்காக ஆதி மரத்தில் ஏறி நாவற்பழம் உலுக்குவான். பனங்காய்ப் பறித்துக் கொண்டு வந்து சீவி நுங்கு எடுத்துத் தருவான். முந்திரித் தோப்பிலிருந்து முந்திரிக்கொட்டைகளைக் கொண்டுவந்து தீ மூட்டிச் சுட்டுத் தருவான்.

சங்கரன் நிறைய கதைகள் சொல்லுவான். ஆதியும் நிறைய கேள்விகள் கேட்பான். ஆதி சங்கரரின் கதையையும் சொன்னான் சங்கரன்.

ஒரு கிராமத்தின் நதிப்புறத்தில் அந்த இரண்டு குழந்தைகளும் தம் நடுவே ககல காலமாய்க் கிழிக்கப் பட்டிருக்கும் கோடுகளைத் தாண்டாமலேயெ ஒரு நதியின் இரண்டு கரைகளிலும் -விலகி உறவு கொண்டு நிற்கும் அக்கிரகாரத்தையும் சேரியையும் போல்-விலகி நின்றே விளையாடினர்

ஒரு நாள் ஆற்றங்கரையில் ஆதியைச் சந்தித்த பொழுது சங்கரன் வேட்டியை வரிந்துகட்டி நின்றான். சங்கரன் நீரில் பாயவும் ஆதியும் குதூகலத்துடன் நதியில் பாய்ந்தான் இருவரும் வேகமாக நீந்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஆதி கத்த ஆரம்பித்தான்.

சாமி,அந்தப் பக்கம் போகாதே,சுழல் .. உன் சோத்துக்கைப் பக்கத்துக்கு வா. சாமி அந்தப் பக்கம் போகாதே ... சாமி ..” என்று தீனமாய் அலறினான் ஆதி.

ஜலப்பிரவாகத்தின் நடுவே இடம் எது ?வலம் எது ?

திசை தெரியாமல் எந்தப்பக்கம் போகக் கூடாதோ அந்தப்பக்கம் போய்க் கொண்டிருந்தான் சங்கரன். ஒரு சுழல் அவனை இழுத்து முறுக்கிற்று. நீரின் அலைகள் மலைப்பாம்புக் குவியல் மாதிரி அவன் மீது கவிந்து மேலே தலை தூக்க முடியாமல் அழுத்தி எங்கோ இழுத்துக்கொண்டு போயின.

(தொடரும்)

நன்றி -"திண்ணை"

Thursday, August 5, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 16

குறிப்பேட்டைப் புரட்டிக் கொண்டிருந்தேன். எத்தனை எத்தனை சம்பவங்கள்! இத்தனையும் எழுத என் காலம் போதாது. சந்தித்த மனிதர்கள்தான் எத்தனை? அத்தனை பேர்களைப் பற்றியும் எழுத முடியுமா? இயலாத காரியம்!

ஜெயகாந்தனை முதலில் ஏன் தேர்ந்தெடுத்தேன்?

என்னைப் புரிந்துகொண்ட நண்பர். சமுதாயத்தில் அல்லல்படும் மக்களிடம் பரிவுகொண்டவர்.அவரைப்பற்றி எழுதும் பொழுது சமுதாயத்தின் பல கோணங்களை என்னால் உடன் காட்ட முடியும். அதனால்தான் அவர் பெயர் மட்டும் எழுதித் தொடங்காமல் என் குறிப்பேடு பெயரையும் இணத்துக் கொண்டேன். பல செய்திகளைத் தர முடிகின்றது.

பேராசிரியர் அரசு அவர்கள் ஜெயகாந்தனின் உரையாடலைப் பற்றி எழுதச் சொன்னார். சந்திப்புகளின் போது நடந்தவைகளுடன், அவர் கதைகளில் வருபவைகளையும் எடுத்துக் காட்டினேன். மக்களிடம் அவர் அணுகுமுறையைப் பயணத்தில் பார்க்க முடிந்தது.

"அக்ரஹாரத்தில் பூனை," எழுதிய பல ஆண்டுகளூக்குப் பிறகு ஆடு வெட்டப் படும் களம் சென்றாரே, ஏன்? எண்ணியதை ஒப்பிட்டுப் பார்க்கவா? அல்லது அக்காட்சியை முழுமையாக நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பா?

அவர் ஆய்வுகள் செய்வதில்லை என்று ஒரு சிலர் கூறுவர்; அவருக்கு அவைகள் தேவையில்லை. எங்கோ பார்த்து, உணர்ந்தவைகள் அவர் எழுத்தில் வந்து கலந்துவிடுகின்றது. ஏதாவது, கற்பனையில் எழுதிவிட்டாலும் அக்காட்சியைத் தேடிச் சென்று பார்க்கின்றாரே? இதற்கு மேல் என்ன ஆய்வுகள் செய்ய வேண்டும்?

பிராமணர்கள் எழுதும் பத்திரிகைகளில் எழுதவதால் அவர் அந்த பேச்சு வழக்கில் எழுதுகின்றார் என்று சொல்வதையும் கேட்டிருக்கின்றேன். ஒரு சம்பவம் கூற வேண்டும்.

ஜெயகாந்தன் நான் வேலை பார்க்கும் ஊர்களுக்கு வந்தால் என் வீட்டிற்கு வராமல் போகமாட்டார். வீட்டுக்கு வந்தால் என் அம்மாவுடன் தான் பேசிக் கொண்டிருப்பார். என்னுடன் எங்கு வேண்டுமானாலும் சந்திக்கும் பொழுது பேசலாமாம். என் அம்மாவுடன் பேசுவது அப்படி முடியுமா? அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டால் அதுவே ஒரு கதையாகிவிடும்.

ஒரு நாள் என் அம்மா என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்.

பாப்பா, இவர் அக்கிரஹாரத்துப் பிள்ளையா?

இல்லேம்மா, இவர் அக்கிரஹாரத்தில் வளர்ந்த பிள்ளை.”

அப்படியென்றால் குப்பத்து பாஷை பேசுகின்றாரே? குப்பத்தில் வளர்ந்தவரா?

புதுச்செருப்பு கடிக்கும்,’ கதையில் ஓர் கலப்பட பாஷை பேசுகின்றாரே, அங்கே எப்படிப் போனார்?

முஸ்லீம்களின் உரையாடல்கள் சரளமாக வருகின்றதே, அங்கும் வாழ்ந்திருப்பாரோ?

ஓர் எழுத்தாளன் ஒன்றை எழுதும் பொழுது அந்தப் பாத்திரத்துடன், அவன் வாழும் சூழலுடன் ஒன்றிப்போய் விடுவான். எழுதும் பொழுது என்றோ பதிந்தவைகள், அவன் உணர்வில் கலந்தவைகள் அவனையும் அறியாமல் குதித்தோடிவந்துவிடும்.

உதாரணத்திற்காகச் சிலவற்றைமட்டும் எடுத்துக் காட்டினேன். இன்னும் பல கதைகள்பற்றி எழுத முடியவில்லையே என்ற குறை எனக்குண்டு. அவரைப்பற்றி எழுதியவர்கள் அதிகம். அந்த விமர்சனங்களே கூட இலக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

“இந்தம்மா என்ன ஒரே அடியாகப் புகழ்ந்து கொண்டிருக்கின்றார்களே!” என்று தோன்றினால் அது தவறில்லை.

மீண்டும் சொல்லுகின்றேன். எங்களுக்குள்ளும் நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக அரசியலில் நாங்கள் ஒத்துப் போனதில்லை. ஆனாலும் சில தருணங்களில் ஒத்த உணர்வு வந்ததையும் மறுக்கவில்லை.

காங்கிரஸ் மேடைகளில் பேசிக் கொண்டிருந்தகாலம், அரசியலை வைத்து ஒருவரை விமர்சிப்பார். நானோ அந்த அரசியல் வாதியிடமும் ஏதாவது நல்லது தெரிந்தால் அதைக் குறித்துப் பேசுவேன். அரசியல் காரணமாக ஒட்டு மொத்தமாக ஒருவரைக் கண்டனம் செய்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அப்படித்தான் பேச வேண்டும். நான் அரசியல்வாதியல்ல. சுதந்திரமாக எண்ணலாம், எழுதலாம்.

ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டும் கூறவிரும்புகின்றேன்

எமெர்ஜென்சி காலம். மறைந்த திருமதி.இந்திராகாந்தியை அவர் போற்றிப் புகழ்ந்த காலம். அவருக்குள் பெருந்தலைவர் காமராஜர் மீதும் பாசம் உண்டு. சிறிது காலம் அவர் வெளியில் வராமல் இருந்த பொழுது இவர் தவித்த தவிப்பை நான் நேரில் கண்டிருக்கின்றேன். “வீட்டுச் சிறையாக இருக்குமோ?” என்று நான் கேட்டதற்குக்கூட அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு பக்கம் அம்மையார். இன்னொருபக்கம் பெருந்தலைவர். என்ன சொல்ல முடியும்!?

தர்ம சங்கடம் இதுதான்.

திராவிடக் கட்சியைப் பெரிதும் விமர்சித்தவர்.

கலைஞரைப் பற்றி அப்பொழுது பேசிய பேச்சுக்கள் எல்லாம் தெரிந்த கலைஞர் எப்படித்தான் கூப்பிட்டு பணமுடிப்பு கொடுத்தாரோ?

கலைஞர் அவர்களின் அரசியலில் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனாலும் அவரின் வேறு சில தன்மைகளைப் பார்த்து ரசித்தவள் நான். எனவே ஜெயகாந்தனுடன் அந்தக்காலத்திலேயே வாக்குவாதம் செய்திருக்கின்றேன்.

ஜெயகாந்தன் பணமுடிப்பைப் பெற்றதும், அவர் மகனுக்கு வேலை பெற்றதும், அவர் கலைஞரிடம் விலை போய்விட்டார் என்ற கடுமையான விமர்சனங்களுக்காளானார். உடல் நிலை மோசமாகவும் அவருடைய மருத்துவச் செலவு முழுவதும் கலைஞர் அவர்கள் மேற்கொண்டார். அப்பொழுது நான் அமெரிக்காவில் இருந்தேன். உடனே இதுபற்றிய என் கருத்தை அன்றே பதிவு செய்தேன்

கலைஞர் செய்த உதவிகளால் ஜெயகாந்தன் திராவிடக் கழகத்திற்குப் பிரச்சார பீரங்கியாகிவிடமாட்டார். இது எனக்குத் தெரியும். ஏன் கலைஞருக்கும் தெரியும்.

அவர் ஏன் உதவிகள் செய்தார்?

அவரும் ஜெயகாந்தனின் ரசிகன். இதை அன்றே எழுதினேன்.

சமீபத்தில் கலைஞர் ஒரு இடத்தில் சொன்னது:

விரைவில் ஓய்வு பெற்று அதன் பின் ஜெயகாந்தனுடன் பேசிப் பொழுதைக் கழிக்க விரும்புகின்றேன்” என்று கூறியது பத்திரிகைகளில் வந்தது. அதே போன்று கவிஞர் வைரமுத்துவுடனும் பேசிக் காலம் கழிக்க விரும்புவதையும் சொல்லி இருக்கின்றார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பன்முகங்கள் உண்டு.

கலைஞர் தமிழை ரசிப்பார்; கலைகளை ரசிப்பார்; சினிமாவை ரசிப்பார்; அரட்டையை ரசிப்பார்;

அவரும் ஓர் சாதாரண மனிதன்.

அதைப் புரிந்து கொண்டுதான் அன்றே அவரை ’ஜெயகாந்தனின் ரசிகன்,’என்றேன்.

இன்னொரு தகவல் கூற வேண்டும்

குமுதம் பத்திரிகையில் அரசியல் நிருபராகப் பணியாற்றியவர் பால்யூ அவர்கள். கழகத்திற்கு அந்த பத்திரிகை ஒத்துவராத ஒன்று. பால்யூ ஓய்வு பெற்றபின் நோய்வாய்ப்பட்டார். அப்பொழுது ஒரு நாள் அவரைக் காண திரு .வீரமணி அவர்கள் சென்றிருந்தார். எல்லா அரசியல் தலைவர்களிடமும் நல்ல பெயர் எடுத்தவர் பால்யூ. எனவேதான் திரு வீரமணி, வீட்டிற்கு வந்து அவரைப் பார்த்துச் சென்றார். அதுமட்டுமல்ல, பால்யூவின் உடல் நிலைபற்றி கலைஞரிடம் கூறியிருக்கின்றார். உடனே கலைஞர் அவர்கள் பால்யூவுடன் தொலைபேசியில் நலம் விசாரித்திருக்கின்றார்; அத்துடன் நிதி உதவியும் செய்திருக்கின்றார்.

இது பத்திரிகையில் வராத செய்தி. பால்யூவே என்னிடம் கூறிய செய்தி.

ஆதனால்தான் சொல்லுகின்றேன். ஒரு மனிதனை ஒட்டு மொத்தமாக என்னால் வெறுத்து ஒதுக்க முடியாது. தவறு காணும் பொழுது நிச்சயம் சொல்லத் தயங்கியதும் இல்லை.

சமீபத்தில் சங்கரநேத்திராலயா ஆய்வு நிறுவனம் நடத்திய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவில் ஜெயகாந்தன் பேசியிருக்கின்றார்.

“பெண்கள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டனர்.இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையில்லை. மாறாக இப்போது பெண்கள் பொருள் , போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை

ஜெயகாந்தனின் மேடைப் பேச்சென்றால் திடீர் வெடி வெடிக்கும். அது எப்பொழுதாவதுதான். இந்தப் பேச்சு காற்றோடு போயிருக்கும். ஆனால் பத்திரிகைகளுக்குச் சுடச் சுடச் செய்தி வேண்டுமே!. அவ்வளவுதான். பேட்டிகள், பேட்டிகள்!! பேட்டிகள்!!!

தலைப்பு “ஜெயகாந்தனுக்கு எதிர்வெடி போடும் பெண்கள், மகளிர் அமைப்பினர்

ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலாளர் திருமதி வாசுகி அம்மையார் புள்ளி விபரங்களுடன் ஜே.கே அவர்களை நோக்கிக் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.. இந்த அமைப்பு எப்பொழுதும் எங்கு ஆய்வுகள் நடத்தினாலும் புள்ளி விபரங்களைச் சேகரித்து வைப்பவர்கள். பெண்கள் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் ஓர் அமைப்பு..

அடுத்துச் சாடியிருப்பவர் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி திருமதி.ராமாத்தாள் அவர்கள்; அரசு சார்புடையது.

நான் இருப்பது அமெரிக்கா. தமிழகத்தில் வரும் செய்திகள் பல உடனே எனக்கு அனுப்ப இப்பொழுது சில குழந்தைகள் வந்துவிட்டனர். ஜே. கே அவர்களின் பெயரின் வசீகரம். அவரைப்பற்றி எழுத ஆரம்பிக்கவும் சிலர் எனக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர்.

பொதுப்படையாகக் குறித்துப் பேசியதுதான் குழப்பத்திற்குக் காரணம். நானும் பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியவள். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறலாம். ஆனால் சமுதாயப் பணிக்கு ஓய்வில்லை. ஏதோ ஒரு வடிவில் இப்பொழுதும் என்னால் முடிந்ததைச் செய்து வருகின்றேன். அந்த அக்கறையில் அவர்கள் நிலையைக் கவனித்து வருகின்றேன்

பணி செய்யும் காலத்திலேயே ஒரு பிரச்சனையை ஆய்வு செய்யும் முறைகளுக்குப் பயிற்சி பெற்றவள்.

பெண்கள் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள் என்று சொன்ன கருத்து சரியல்ல. அது ஒரு மாயத்தோற்றம். பெற்றவர்களே தங்கள் மகளை ஊர்ப் பொதுமையாக ஆக்கும் கொடுமை மாறவில்லையே! பதின்மூன்று வயதுச் சிறுமிக்கு ஊருக்குப் பொது மகளாகக் கோயிலில் வைத்து தாலி கட்டினார்கள். சம்பவம் நடக்கும் பொழுது எங்கும் பரபரப்பு. ஏதேதோ நடவடிக்கைகள். ஆனால் முடிவு என்ன என்று எத்தனை பேர்கள் தொடர்ந்து பார்த்தார்கள்? எங்கோ இருக்கும் எனக்குத் தெரிந்த உண்மை அதே மண்ணில் இருப்பவர்களில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்? இப்பொழுது அந்தச் சிறுமி பொது மகளாகிவிட்டாள்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் நடத்திய போராட்டம் , வாங்கிக் கொடுத்த சட்டம், அதன் பயனை இழந்து நடை முறையில் வேறுவடிவில் நடக்கின்றதே!. சாதியை ஒழிக்கின்றோம் என்று கூறுபவர்கள் இந்தப் புது சாதியை ஒழிக்க என்ன செய்தார்கள்?. மூடப்பழக்கத்தை ஒழிக்கின்றோம் என்று கூறி வலம் வருபவர்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஆரம்பத்தில் பத்திரிகை செய்திகளில் விளம்பரம் வந்தால் போதுமா? இதுதான் சமுதாயச் சீர்திருத்தமா?

எங்கள் பாதுகாப்பு இல்லங்களும் சேவை இல்லங்களும் நிறைந்து வழிகின்றதே, ஏன்? கணவன் மனைவிச் சண்டைகளைக் கவனிக்க ஒரு தனி பிரிவே இப்பொழுது எங்கள் துறையில் இயங்கி வருகின்றது. எத்தனை பிரச்சனைகள் எங்களைத் தேடிவருகின்றன. இன்னும் பெண்ணின் நிலைமை ஓர் சோதனைக் களமாக இருக்கின்றது. ஒரு சிலரின் முன்னேற்றத்தை வைத்து மொத்தக் கணக்காகக் காட்ட முடியாது.

தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் பெண்கள் கூட சுடிதார் போட்டுக் கொண்டு வலம் வரும் பொழுது அவர்கள் வசதியாக வாழ்வது போல் இருக்கும் தோற்றம் ஒரு மாயத் தோற்றம்.

அரசுப் பணியிலோ, தனியார் துறையிலோ பெண்களின் நிலை பல இடங்களில் ஊதிய வித்தியாசம், பதவி உயர்வு பெற பல தடுப்புச் சுவர்கள் இவைகள் இருப்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

சினிமா, தொலைக்காட்சி, மாடலிங் இவைகளில் பெண்கள் ஆடம்பரமாகத் தெரிகின்றார்கள். இவர்களில் எத்தனை பேர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இருக்கின்றது? நடிகைகளும் பெண்கள் இல்லையா? மனித உணர்வுகள் பொதுவானது.

பொருள் போகம் புகழ் இவைகளுக்கு ஆண்கள் அடிமையாக இருக்கின்றார்களே! இது மனிதனின் புத்தி. வீட்டுக்குள் இருக்கும் வரை அவளை இது அண்டவில்லை. அவளும் மனித ஜாதி. அந்த பலஹீனம் அவளிடமும் வருவது இயல்பு. ஆனாலும் எல்லோரையும் அந்த வளையத்துக்குள் கொண்டு வந்தது சரியல்ல.

சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இது சரியான களம் அல்ல. அதுமட்டுமல்ல. இதுபற்றிப் பேச நிறைய இருக்கின்றது. தனி மேடை அமைத்து செய்ய வேண்டிய கச்சேரி.

ஜெயகாந்தனின் முழுப்பேச்சும் தெரியாது. ஆனாலும் இந்தக் கருத்துக்களுக்கு மற்றவர்கள் கொடுத்திருக்கும் மறுப்புகளையும் படித்து என் கருத்தைத் தெரிவித்தேன். தமிழகம் செல்லும் பொழுது அவரிடம் நிச்சயம் இதுபற்றிப் பேசுவேன்.

சமீப காலமாக அவர் வெளியில் அதிகம் செல்ல முடியவில்லை. பார்வையாளர்களையும் தவிர்த்து வருகின்றார். முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதும், முக்கியமானவர்களிடம் பேசுவதும் மட்டும் தொடர்கின்றது. அவர் உடல்நிலைக்கு ஓய்வு தேவை. இந்த இடைவெளியால் மாற்றங்களின் தோற்றத்தை அவரால் சரியாக உணர முடியவில்லையா?

இப்பொழுது எங்களுக்குள் மோதல்!

அது சரி, ’சுதந்திர அடிமை’ என்று ஏன் கூறியிருக்கின்றார்? இந்த வார்த்தையால் அவரின் முழுக் கூற்றும் மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கின்றது.

சிந்தித்தேன். அதுமட்டுமல்ல, ஒருவனிடம் இதைக் கூறி அவன் அபிப்பிராயத்தைக் கேட்டேன். ஜெயகாந்தன் கூறியதில் தவறில்லை என்று கூறி, விளக்கமும் கொடுத்தான். அவன் வேறு யாருமல்ல. அமெரிக்க மண்ணில், சுதந்திரக் காற்றில் வளரும் என் பேரன் தான் விளக்கம் கூறியது. அதுமட்டுமல்ல. அந்த விளக்க உரை என்னைச் சிந்திக்க வைத்தது.

அடுத்து அதன் விபரங்களைப் பார்க்கலாம்.

(தொடரும்)

நன்றி-திண்ணை