Tuesday, September 21, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 21



தூக்கு மேடைக்குச் செல்ல இருக்கும் கைதியின் பெயர் நரசிம்மகாரு; ஆந்திராவைச் சேர்ந்தவர். அவருடைய ஆசை முழுமையாக நிறைவேற வில்லை. காந்திஜியின் உருவம் செதுக்கிய பொழுது தலை முடிக்கும்முன் அவன் வாழ்வு முடிந்துவிட்டது. அந்தத் தலையில்லா காந்திஜியின் சிலை சத்திய மூர்த்தியை உறுத்திக் கொண்டிருந்தது.

முழுமை பெறாதவைகள் சிந்தனைக்கு முள்வேலிகள்.

அந்தச் சிறையில் இன்னொரு மனிதரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.அந்தச் சிறையின் மேலதிகாரி மூர்த்தி, நம் சத்தியமூர்த்தியுடன் பள்ளியில் படித்தவன். இங்கே அந்த நட்பைப் பார்க்க முடியுமா? அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர், எனவே இருவரது சந்திப்புகளும் வினோதமாக இருக்கும். சில நேரங்களில் அனுசரணையுடன் இருக்கும். சில நேரங்களில் ஒதுக்கமும் இறுக்கமும் தென்படும். சத்தியமூர்த்தி சிரித்துக் கொள்வான்.

ஜெயகாந்தனைப் பற்றி எழுதத் தொடங்கும் பொழுதே அவரின் தன்மைகளில் அவரின் உரையாடல் சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, வலிமை வாய்ந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றேன். என் வாழ்க்கையில் சந்தித்தவர்களில் உரையாடலில் சிறந்தவர் அவர் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன். கதைகளாயினும் கட்டுரையாயினும், அங்கே உரையாடலில் புகுந்து தன் எண்ணங்களைப் பதித்துவிடுவார். "ஜெய ஜெய சங்கர," தொடரில் உரையாடல்கள் அதிகம் இடம் பெறும்.

அதனை ஓர் கதை என்று சொல்வதைவிட வரலாற்றுச் சித்திரம் எனக் கூறலாம்.

சத்தியமூர்த்தி அந்தச் சிறைக்கு வரவிட்டுச் சூழலின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது . தனி மதிப்பைப்பெற்று வலம் வந்து கொண்டிருந்தான். சிறையில் இருந்தாலும் மனிதர்கள், மனிதர்கள் தானே என்று நினைத்துக் கொள்வான்.

நாட்டில் நெருக்கடி நிலைமை; சுதந்திர நாட்டில் சுதந்திரக் காற்றில்லை. புழுக்கத்தால் மனிதர்கள் வெந்து கொண்டிருந்தனர். எங்கும் நிலவுகிற இருட்டுக்கும் இந்தச் சிறையில் நிலவுகிற இருட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு .நாட்டில் நடக்கிற காரியங்கள் இந்தச் சிறையில் விஸ்தாரத்தைப் பெரிதாக்கி ஓரளவு தேசத்தையே சிறையாக்கி இருக்கின்றன.

சமீபத்தில் அரசியல் கைதிகள் அழைத்து வரப்பட்டு கொட்டடியில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து கேட்கும் முணங்கல்கள் அங்கே நடக்கும் சித்திரவதைகளின் கொடுமையை உணர்த்துகின்றன.

உமாவைப்பற்றியோ அவன் தந்தையைப்பற்றியோ எந்த செய்தியும் தெரியாது தவிக்கின்றான் சத்திய மூர்த்தி. அதிகாரவர்க்கத்தைக் கூலிப்படையென்று கடுமையாகச் சாடுகின்றான். சிறை அதிகாரி மூர்த்தியைச் சந்தித்து உண்மை நிலையை அறியத் தோன்றுகின்றது. சந்திப்பும் நிகழ்கின்றது. அங்கே நடக்கும் உரையாடல்கள் மனக் கொதிப்பின் வெளிப்பாடுகள்.

சத்தியமூர்த்தி எழுதிய புத்தகத்தைப் படித்துவருவதாகக் கூறும் மூர்த்தியைப் பார்க்கின்றான். அது தடை செய்யப்பட்ட புத்தகம். படித்து என்ன பயன்? ஒவ்வொருவரும் அவரவர் மனச்சாட்சியைக் கேட்க வேண்டிய கேள்வி.

“இங்கே துன்புறுத்தப்படும் அந்தக் கைதிகள் எல்லாம் எப்பேர்ப்பட்ட போராட்ட வீரர்கள் என்பதை நான் அறிவேன். அவர்களாவது போராடுவதாவது? ராத்திரியெல்லாம் ஒலிக்கிற அவர்களுடைய ஓலத்தில் வீரமோ ஆண்மையோ இல்லை. ஆட்டுக்குட்டிகள் மாதிரி அவர்கள் அடிபட்டு அலறுகிறார்கள். கடவுளைக் கையெடுத்துக் கும்பிட மறுக்கின்றவர்கள் எல்லாம் கான்விக்ட் வார்டன்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சுகிறார்களாமே!இதெல்லாம் ஏன் நடக்கிறது? நாட்டில் நெருக்கடி என்றால் சிறையில் ஏன் இந்தக் கெடுபிடிகள் அதிகமாக வேண்டும் ?” தாழ்ந்த ஸ்தாயில் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டிருந்தான் சத்திய மூர்த்தி

இதைப் படிக்கும் பொழுது என் மனப்பறவை கூச்சலிட்டது. நெருக்கடி நிலைமை காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலரை நான் அறிவேன். அந்த வலியின் வேதனையைப் பாதிக்கப்பாடவர்களாலேயே சொல்லப்பட்டு நேரில் கேட்ட அனுபவமும் உண்டு.

மனம்விட்டுப் பேச ஆரம்பித்தான் மூர்த்தி. சிறை அதிகாரிப் பதவி ஒரு வெட்டியானைப் போன்றது. மரண தண்டனை விதிப்பது நீதி மன்றம். ஆனால் அந்தக் கொலையைச் செய்ய வேண்டியது சிறையதிகாரி. தண்டனை விதித்த நீதிபதியே வந்து இந்தக் கொலையையும் செய்ய வேண்டும் என்று சலித்துக் கொண்டான்.

கைதிகளை அடித்துத் துன்புறுத்துவதை நிறுத்தும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறுகின்றான் சத்திய மூர்த்தி.

ஒவ்வொரு அதிகாரியும் தனக்குச் சம்பந்த மில்லாத ஓர் எஜமானத்துவத்துக்கு அடிமை என்று கூறத் துடிக்கிறான் மூர்த்தி. ஆனாலும் அதனைச் சொல்லாது “இனிமேல் அந்தக் கொடுமை நடக்காது. அதிகாரிக்கு என்ற சில உரிமைகளும் , கைதிக்கு என்று சில கட்டுப்பாடுகளும் உண்டு. தன் குறைகளைத் தீர்க்குமாறு கேட்க ஒரு கைதிக்கு உரிமை உண்டு. ஆனால் பிற கைதிகளுக்காகப் பரிந்து பேசும் உரிமை அவனுக்குக் கிடையாது “என்று கூறினான்.

அரசுப்பணியும் ஒருவிதக் கொத்தடிமை போன்று கட்டிப்போடுகின்றது. இது அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகள் கூட சில நேரங்களில் அரசு நிர்ணயச் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டியிருக்கும். இத்தகைய கட்டுப்பாடுகளிலும் மனிதன் நேர்மையில் உறுதியாக இருக்கவும் வாய்புண்டு. மனித நேயமே குறிக்கோளாய் நேர்மையுடன் இருப்பவர்களிடம், நிர்ப்பந்தங்கள் வலிமையை இழந்துவிடுகின்றன.

ஒருவனை அவனது லட்சியங்களே சுதந்திர மனிதனாக்குகின்றன,“ என்ற சத்திய மூர்த்தியின் கூற்றை ஒப்புக் கொள்கின்றான் மூர்த்தி.

சில தினங்களில் மூர்த்தி மன வெளி இல்லம் போகின்றான்.அந்த வீட்டில் நெருக்கடி நிலமையை ஆதரிக்கும் ஒரு மனிதரையும் பார்க்கின்றான் . உமாவின் தந்தை பண்டிதர் அங்கு வந்திருந்தார். அவர்தான் நெருக்கடி நிலைமையில் நிர்வாகம் சீராக இருப்பதாகக் கூறிவருகின்றவர்.

கதாசிரியர் நிறைய கதா பாத்திரங்களைத் தோற்றுவித்து அவர்கள் வாயிலாகத் தன் எண்ணங்களைக் கொட்டியிருக்கின்றார். தாங்கள் பேசுவது நியாயமானது என்று ஒவ்வொருவரும் வலியுறுத்துகின்றனர். ஏனோ எல்லோரும் நல்லவர்களாக, மனிதர் நலனில் அக்கறை கொண்டவர்களாகக் காட்டிச் செல்லுகின்றார். எல்லோரும் தத்துவம் பேசுகின்றார்கள்.

"தேசம் என்னவானாலும், தனி மனுஷ்யர்களான நாம், நம்மை நெறியாக வைத்துக் கொள்வதுதான் முக்கியம் என்று நினைப்பவன் மகாலிங்கம்,” என்று அவன் தாயார் தேவி கூறுகின்றாள்.

உமாவுடன் அவன் தலைமறைவாகி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். உலகத்தாருக்கு அவர்கள் தம்பதிகள் ஆனால் நிஜ வாழ்க்கையில் அண்ணன், தங்கையாக வாழ்கின்றனர். ஏதோ ஒரு குறிக்கோளுக்காக வாழ்வதாகச் சொல்லுகின்றார்கள். ”மனிதன் சுயநல மகிழ்ச்சிக்காக வாழக் கூடாது “என்று அவர்கள் ஆசிரியர் சத்திய மூர்த்தி சொல்லிக் கொடுத்ததை ஏற்று, சமுதாய நன்மைக்காக திரைமறைவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆண்மகனுடன் ஓர் பெண் தனிமையாக வாழும் பொழுது மன உறுதியுடன் இருக்க முடியுமா? முடியும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.

லட்சியப் போராட்டத்தில் ஈடு படுகின்றவர்கள் தனிப்பட்ட உணர்ச்சிக்கு அப்பாற்பட்டவர்களாகக் காட்டுகின்றார். இதுதான் உண்மை.. ஓர் குறிக்கோளுடன் மனிதன் இயங்கும் பொழுது அவன் நினைவெல்லாம் நிறைந்திருப்பது அந்த லட்சியங்களே. அங்கே சலனங்களுக்கு இடமில்லை.

மகாலிங்கம் கொடுத்தனுப்பிய கடித்தத்தின் சில வரிகள் பெற்றவர்களைப் பெருமையில் ஆழ்த்துகிறது.

நமது மக்கள் எந்த யுகமாற்றத்தினாலும் அழிந்து போய்விட முடியாத மகா சத்திய நெருப்பை வளர்த்து, இந்த பூமினியில் உள்ள எல்லா உயிர்களின் மேன்மை கருதிப் பாதுகாத்து வருகின்றார்கள். அந்த மகா யக்ஞத்தில் தோன்றியவர்கள்தான் எனது பெற்றோரும், எனது பிதுர்க்களும், நானும், நமது சந்ததியினரும் ஆசாரிய ஸ்வாமிகளின் பாஷையில் சொன்னால் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையில் பிரிவோ தனிமையோ இல்லை

ஜெய ஜெய சங்கர தொடரில் ஒரே தத்துவ மழைதான்; கதை என்றால் அதற்கு ஏதோ ஒரு முடிவு காட்ட வேண்டுமே.

ஆற்றங்கரையில் அவர்களின் எல்லைகளைத் தாண்டாமல் இரண்டு சிறுவர்களிடம் நட்பு பிறக்கின்றது. அப்பொழுது இனம் காரணமாக ஆதியால் கிராமத்திற்குள் வருவது முடியாது. ஆனால் கதை முடிவில் அதே ஆதி சங்கர புரத்தில் நுழைய முடிகின்றது. கால வெள்ளத்தில் சில நியதிகள் மாறத் தொடங்கிவிட்டன.

ஓர் சிறுகதையாய் இதனை முடித்திருக்கலாம்; ஆனால் மூன்று பாகங்கள் தொடர்ந்தன. அதற்கு அவர் கூறும் பதிலை அவர் வார்த்தைகளில் காண்போம்.

“ஓர் சிறுகதை என்று அழைப்பதே எனக்கும் விருப்பமாய் இருந்தது. அவ்விதமே அமைந்திருந்தால் இதன் கலைத் தன்மை உயர்ந்து நின்றிருக்கும் என்று உரைப்பாருமுளர். அவர்கள் அவ்விதமே நிற்கக் கடவர். இன்பம் எங்கெங்குண்டோ அங்கங்கே இருந்துவிடுதல் சிலரது இயல்பு. துன்பம் எங்கே எங்கே என்று துரத்திப் பிடித்து அத்துடன் துவந்தம் செய்வதே தர்மத்தின் இயல்பு.அப்படிப்பட்ட கால நிர்பந்தத்தால் தர்மங்களையே சார்ந்து நிற்கும் ஓர் அடிமையான வாழ்க்கையில், எப்படி அதன் சந்ததியினராலேயே பிரச்சனைகள் மூளும் என்றெல்லாம் எண்ணங்கள் மேலும் எழுந்த பொழுது மூன்று பாகங்கள் விளைந்தன. கட்டுக்கோப்பு கச்சிதமாக விழுந்துவிடுகிற பொழுது மேலே குவித்துச் சிகரம் கட்ட ஆசைபடுவதுதான் எழுதுபவனுக்கு ஏற்படுகிற பேராசை”

இந்த நாவலை எழுத ஆரம்பித்த காலத்தில் தேசிய வாழ்க்கையில் என்ன சூழ்நிலை இருந்ததோ அந்தக் காலக் கட்டத்தை இறுதியாக வைத்துக் கொண்டு அதற்கு முன்னாலும் பின்னாலும் சிந்தனைகளைப் படரவிட்டு இத்தொடரைப் படைத்திருக்கின்றார். அரை நூற்றாண்டு நிகழ்ச்சியினைக் கருத்திற்கொண்டு எழுதப்பட்ட தொடர்.

இத்தொடரில் வரும் பாத்திரங்கள் நல்ல நோக்கம் படைத்தவர்களாக, லட்சியத்துடன் வாழ்கின்றவர்களாகக் காட்டப்பட்டுள்ளன. அதற்கும் அவர் கொடுக்கும் விளக்கத்தை அவர் எழுத்துக்களில் காண்போம்

“எனது புரட்சிக் காரன் எவ்வளவு உத்தமமானவனோ அந்த அளவு உத்தமமானவனே எனது போலீஸ்காரனும். நான் தீயவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேனேயொழிய அவர்களைக் கண்டதில்லை. அவர்களை இலக்கியக்கண் கொண்டு நான் கண்ட மாத்திரத்தில் அவர்கள்நல்லவராக மாறுவர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதுதான் என்னிடமுள்ள மத நம்பிக்கை, இறை நம்பிக்கை என்று நம்புகிறேன்.

“வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும
தீமை இலாத சொலல் “

என்பது நமது இலக்கிய தர்மம்.அந்த நோக்கு நான் எழுதிய பலவற்றுள் இதில் நன்கு சமைந்தது. “

மகாப்பெரியவரின் அறிவுரைப்படி ஆன்மீகமும் சமுதாயநலனும் கைகோத்துக் கொண்டு எழுதும் பாக்கியத்தைப் பெற்றவராகப் பெருமை கொள்கின்றார் ஜெயகாந்தன்.

புரட்சியென்றால் அது வன்முறை நோக்கிச் சென்றுவிடும் என்ற அச்சம் பலருக்கும் உண்டு. காந்திஜியின் சத்தியாகிரஹப் புரட்சியை நாம் பார்த்திருக்கின்றோம். அவர் தன்னை வருத்தி இயக்கத்தினை முன்னின்று நடத்தினார். இன்றைய இயக்கங்களில் தொண்டர்களே மரிக்கின்றனர். தலைவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்வதைக் காண்கின்றோம். எந்த ஒன்றையும் பொது நிலைப்படுத்த முடிவதில்லை

தொழிற்சங்கத்தில் 32 ஆண்டுகள் இருந்தேன். கீழே பணியாளராக நுழைந்து துறையின் மேலதிகாரியாக ஆனேன். இரட்டைக் குதிரை சவாரி செய்தேன். தொழில் சங்கத்தில் இருந்ததால் எத்தனை சாதிக்க முடிந்தது என்று அனுபவ பூர்வமாக அறிந்திருக்கின்றேன். இந்தத் தொடர் படிக்கும் பொழுது என் வாழ்க்கைப் பாதையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.ஆனால் படிக்கின்ற எல்லோருக்கும் அனுபவங்கள் ஏற்படிட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே விமர்சனங்கள் பல திக்குகளிலிருந்தும் வந்தன.

இதற்கு விமர்சனங்கள் வந்த பொழுது அவர் கூறியவை:

“ஆர்வத்தின் காரணமாகவும், அவசரத்தின் காரணமாகவும் விமர்சகர் எனப்படுவோர் புகழ் குவிக்கவும், புழுதி இறைக்கவும் செய்வர் என்பது நாம் எதிர்பார்த்ததே. அவர்களுக்கு நன்றியல்லாமல் வேறு ஏதும் நாம் உரைப்பதற்கில்லை. இந்நூலுக்கு விமர்சனக்காற்று சற்று மிகைதான்.அந்தக் காற்றின் கதையிலேதான் எத்தனை லயங்கள் .. எத்தனைவிதங்கள் ..ரசித்தோம்,ரசிப்போம் “

விமர்சனக்காற்றுக்கு ஓர் கவிதையில் சில வரிகள்

தென்னையின் கீற்றுச் சல சல வென்றிட
செய்து வரும் காற்றே !
உன்னைக் குதிரை கொண்டு ஏறித் திரியுமோர்
உள்ளம் படைத்து விட்டோம் ..

ஜெயகாந்தனுக்கு விமர்சனங்கள் புதிதல்ல. சொல்லப் போனால் அவர் வளர்ந்ததே அந்தக் காற்றின் வேகத்தால்தான்.

அவர் எழுதிய பல கதைகள் கடும் விமர்சனத்திற்குள்ளானவை. அவைகளில் அவர் எழுதிய "ரிஷிமூலம்: பலரின் கோபத்திற்கும் கூட காரணமாயிற்று. சமுதாயமென்பது நல்லதும் கெட்டதும் கலந்ததே. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மிருகம் உறங்கிக் கிடக்கின்றது. அதனைப் பண்படுத்த சில நெறி முறைகளை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வர முயல்கின்றான். சிலரால் மட்டும் மனத்தை வெல்ல முடிகின்றது. பலர் அதன் வேகத்தில் அடிபட்டுப் போய்விடுகின்றனர்.

ரிஷிமூலத்தின் கதா நாயகன் மனவக்கிரம் கொண்டவன். இதைப்போன்று அவர் எழுதிய குருபீட நாயகனிடமும் இக்குறையைக் காணலாம். அவன் பித்தனாய் வந்து பின் சித்தனாக்கபடுகின்றான். இங்கே ஒரு செய்தியைக் கூற விழைகின்றேன்.

திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி என்று ஒரு கிராமம் உண்டு. அந்த ஊரில் ஓர் பித்தன் தோன்றி அவனைச் சித்தனாக்கி வழிப்பட்ட சம்பவம் உண்மையில் நிகழ்ந்தது. அது செவிவழிச் செய்தியாகப் பரவி எழுத்துக்குக் கருவாகி இருக்கலாம். அல்லது தனித்தனியே இப்படி ஒத்துப் போகும் நிகழ்வுகளாகவும் இருக்கலாம். பலருக்கும் இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் ஆனால் உணர்ந்து கொள்ளாமல் இருப்போம்.

ஏதோ ஒரு காட்சியைப் பார்க்கும் பொழுதோ அல்லது கேள்விப்படும் பொழுதோ ஏற்கனவே எங்கோ நிகழ்ந்ததாக அல்லது கேள்விப்பட்டதாகத் தோன்றும்,. இது இயற்கையின் விளையாட்டு. சம்பவங்கள் எங்கேங்கேயோ எப்படியோ பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. அல்லது பதிவானவை நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் புரியாத புதிர்கள் பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன.

கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய “ரிஷிமூலம்“ கதையைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே!

(தொடரும்)

நன்றி-திண்ணை

Thursday, September 9, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 20

"ஜெய ஜெய சங்கர" - இந்தத் தலைப்பில் கதை எழுதத் தொடங்கிய ஜெயகாந்தன் அப்படியே பயணம் சென்று “மனவெளி மனிதர்கள்” காணச் செல்கின்றார். பின்னர் “எந்தையும் தாயும்” மகிழ்ந்து குலாவிட முயல்கிறார். அவர் ஆரம்பித்த பயணம் “மகாயக்ஞம்” நடத்தி நிறைவுறுகின்றது. ஆம்! இத்ததனையும் "ஜெய ஜெய சங்கர"வின் தொடர்ச்சிகள்!

“ஒரு கிராமம்,ஆ! எப்பேர்ப்பட்ட கிராமம்! ஒரு குடும்பம், எவ்வளவு உன்னத ஆரிய லட்சியக் குடும்பம்! அதன் உறவுகள் என்னும் சரட்டில் ஒரு அரை நூற்றாண்டு நிகழ்ச்சியினை அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கோர்த்து ஆரமாக்குகிற உத்தியில் அறுந்து போவதற்கோ, முடிந்து போவதற்கோ இடமில்லாமல் போயிற்று”

ஜெயகாந்தன் தன் முடிவுரையில் வெளிப்படுத்தும் கூற்று. கதையாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தொடர்ந்து கொண்டே வரலாற்றை வட்டமிட ஆரம்பித்துவிட்டது. அக்காலத்திற்கே சென்று விட்டார் ஆசிரியர்.

எத்தனை பாத்திரங்கள்! எத்தனை சம்பவங்கள்! ஆசிரியரின் கனவுலகம் படிப்பவரை மிரள வைக்கின்றது. ஆன்மீகம், காந்தீயம், அரசியல், வரலாறு, இன்னும் பல கோணங்களில் தன் எண்ணங்களைப் பதிந்திருக்கின்றார். நாமும் முடிந்த மட்டும் தொடர்வோம்.

ஆதி தன் மகனை வீட்டைவிட்டுப் போகச் சொன்னதைக் கேட்ட ஆசாரிய ஸ்வாமிகள் ஒரு நீண்ட பிரசங்கமே செய்கின்றார்:

“சமூகவிஷயம் என்பது எதுவுமே ஓர் நல்ல தனி மனுஷ்யனுக்கு அப்பாற்பட்டது அல்ல; உலகில் உள்ள ஒவ்வொரு சிறிய விஷயங்களிலும் பேரண்டம் அடங்கியிருக்கிறது. நமது சமூகங்கள் என்று நாம் நினைக்கிற அவை நம்மிலிருந்து விலகி நிற்கின்றன என்பதால் நாமும் அவையும் வேறாகிவிட முடியுமா? அதன் நடுவில்தான் நாமும் இருக்கிறோம். எவ்வளவு பற்றற்று, அல்லது தனிநெறி வகுத்துக் கொண்டு நாமிருந்த போதிலும் அதன் நடுவில்தான் அதன் ஒரு அங்கமாகவே நாமும் இருக்கிறோம். நாம் வேறு அதுவேறு என்று என்றாகிவிட முடியுமா? உன் தலையில் உனக்குகந்தது என்கிற ஒரு நெறியைச் சுமந்து திரிகிறாய். இப்படித்தான் ஒவ்வொருவரும்! பறவையின் சுதந்திரத்தை அங்கீகரித்து மகிழ்ச்சி அடைகிற மனத்தை வளர்த்த மனிதர்கள், தங்களுக்குச் சொந்தமான மக்கள் விஷயத்தில் இழந்துவிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. “

ஓர் ஆத்மாவின் சுதந்திரத்தைப் புரிய வைக்கிறார்;மீண்டும் தொடர்கிறார்:

“முரண்பாடுகளும்,மோதல்களும் தவிர்த்த வாழ்க்கை, கோபமற்று குளிர்ந்த மனத்தோடு அவரவர் கொள்கையில் பொருந்தி நின்று போரிட்டுக் கொள்வது...ஆமாம்; போரிடத்தான் வேண்டும். இல்லாவிட்டால் கொள்கையும் நெறியும் என்னாவது? போரிடலாம்; வாதிடலாம்; கோபமும் ஆத்திரமும் எந்தப் போராட்டத்திற்கும் உதவா .”

சத்தியமான வார்த்தைகள்! மாறுபட்ட கருத்துக்கள் வரலாம்;வாதிடலாம். தங்கள் கொள்கைகளுக்காகப் போரிடலாம். ஆனால் காழ்ப்புணர்ச்சியை வளர்த்துவிடக் கூடாது. அது சமுதாய அமைதியைக் கெடுத்துவிடும்.

ஆதி மனத்தில் இருந்த கோபம் மறைந்துவிடுகின்றது. மகனைப் பார்க்கும் ஆவல் துளிர்க்கின்றது.பாசத்திற்கும் குரோதத்திற்கும் இடையில் ஒரு சிறு கோடுதான் இருக்கிறது. அதை நீக்கிவிட்டால் எல்லாம் அன்பு மயம். அன்பு இருக்கும் இடத்தில் அமைதி இருக்கும். அமைதியை இழக்கும் வழிகளில் செல்லலாமா?

ஆதியின் அமைதிக்குடிலில் பிறந்து வளர்ந்தவன் மகாலிங்கம். அவன் ஓர் அச்சமற்ற ஆண்மகன். அவன் எண்ணங்கள் போன பாதை வித்தியாசமானது

“ஒரு குடும்பத்தின் அடிமையாக நடைவண்டி பிடித்து நடந்து கொண்டிருப்பதைவிட இந்த சமூகத்திற்கோர் அடிமையாகித் தன்னிச்சையாய்க் கைகளை வீசி நடக்கலாம் என்று தோன்றுகிறது.”

புதிய தலைமுறை தோன்றிவிட்டது. பிறரிடம் வேலைக்குப் போவது அடிமைத்தனம் என்று கூறும் தந்தைக்கு இந்தப் பேச்சு பிடிக்காமால் மகனை வீட்டைவிட்டு அனுப்பச் செய்துவிட்டது. ஸ்வாமிகளின் பேச்சு ஆதியின் மனக் கண்களைத் திறந்துவிட்டது. சுதந்திர வாழ்க்கையில் சுற்றித் திரியும் மகனைக் காண முடிவு செய்துவிட்டார்

மனவெளி இல்லம் நோக்கிப் புறப்படுகின்றார் ஆதி. அவர் மகன் மகாலிங்கம் சென்றிருக்கும் இடம்பற்றி அவர் மனைவி தேவியிடம் விசாரித்து அறிந்து கொண்டவுடன் தாமதிக்காது புறப்பட்டு விட்டார். ஸ்வாமிஜியின் அன்புக் கட்டளைக்காக மட்டுமல்ல, தன் மகனைக் காண வேண்டுமென்ற துடிப்பும் அவரைத் தூண்டிவிட்டது. மனவெளி மனிதர்களுடன் அவர் மகன் மகாலிங்கம் வசிக்கின்றான்.

தலைப்பைப் பாருங்கள்! மனவெளிமனிதர்கள்! அந்த வீட்டின் பெயர் மனவெளி இல்லம்.

அங்கே ஒளிவு மறைவு கிடையாது. போலித்தனமில்லா புனித இடம். அவரவர் கொள்கையுடன் சுதந்திரமாக வளைய வர முடிந்த இடம். கொள்கைகள் வேறாயினும் அன்பும் பண்பும் கலந்த ஓர் குடில். மாற்றுக் கொள்கையென்றால் மற்றவரைத் தாக்கித்தான் ஆக வேண்டுமென்ற தற்கால குணக்கேடு அங்கே இல்லை. புரட்சிக்காரனும் புன்னைகையுடன் தன் உறுதியில் எப்படி நிற்க முடியும் என்று காட்டும் ஓர் உன்னதமான இடம்.

நாமும் அந்த அன்புக் குடிலுக்குள் செல்வோம். குடிலுக்குச் சொந்தக்காரர் சிங்கராயர்.ஒரு காலத்தில் ஓர் இயக்கத்தின் தலைவராக இருந்தவர். அவரின் தோற்றம் தாடி இல்லாத தாகூர் போலவும், தலைப்பாகை இல்லாத பாரதி போலவும் பிறருக்குத் தோன்றும். சுதந்திரம் பெற்ற பின் திருமணம் என்றிருந்து கொஞ்சம் வயதாகவிட்டு செல்லம்மாளை மணக்கின்றார். அவருடைய ஒரே மகன் சத்தியமூர்த்தி ஓர் புரட்சிக்காரன். அவன் ஓர் ஆசிரியராக இருந்தான் என்றாலும் மகாலிங்கத்தைவிட வயது வித்தியாசம் அதிகமில்லை. மகாலிங்கம் புரட்சிக்ககரன் இல்லாவிட்டாலும் இருவரையும் நட்பு பிணைத்திருந்தது. சத்தியமூர்த்தி புரட்சிகரமாக புத்தகம் எழுதுகிறான் என்றும் சில காரியங்கள் புரட்சிகரமாய் செய்து வருகின்றான் என்று கைது செய்யப்பட்டு இப்பொழுது சிறையில் இருக்கின்றான்.

சிங்கராயரின் பேச்சுக்கள் மூலம் அக்காலச் சூழல், சிந்தனைகள், செயல்பாடுகளை படம்பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.

மகனைப்பற்றி பேசும் பொழுது மாணவர்களைப் பற்றி விளக்குகின்றார். மாணவர்கள் இந்தக் காலத்தின் அடையாளங்கள்.அவர்கள் நம்பிக்கைகளும், லட்சியங்களும் மிக உயர்ந்தவை.அதைப் புரிந்து கொள்ளளதவர்களை, அவர்கள் அலட்சியப் படுத்துகிறார்கள்.அது தப்பு என்று பெற்றோர்கள் புலம்புகின்றார்கள்.

புலம்புகிற மனிதர்களை ஒரு போதும் இளைஞர்கள் மதிப்பதில்லை. தனி நபர் சத்தியாகிரகம், காந்திஜியின் அஹிம்சை வழிப் போராட்டம் இவைகளில் ஈடுபட்டவர்களைப்பற்றியும் பேசுகின்றார்

“அந்தக் காலத்தில் தாயும் தகப்பனும் பெற்றோராகவே நமக்குத் தெரியவில்லை. .. காந்திஜியும் கஸ்தூரிபாயும் தான் நமக்கெல்லாம் சொந்தத் தாயாகவும் தந்தையாகவும் இருந்தார்கள் ?"

இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. அந்தக் குடும்பத்தில் என் தந்தையும் ஒருவராக இருந்தாரே ! எத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தோம். இந்தியாவில் எத்தனை குடும்பங்களுக்கு இந்த நிலை!

வீட்டை மறந்து, சொந்த உறவுகளின் நினைப்பின்றி போராடிப்பெற்றது சுதந்திரம். தங்களுக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாது இருப்பதையெல்லாம் நாட்டு சுதந்திரத்திற்கு அள்ளிக் கொடுத்த வள்ளல்கள். அவர்கள் அரசியல்வாதிகளல்ல. இந்த மண்ணின் மைநதர்கள். சுயநலமற்ற மனிதர்களைக் காண்போமா என்று மனம் ஏங்குகின்றது.

அந்தத் தியாகியின் மனைவி செல்லம்மளும் மற்றும் சோசப்பு என்ற ஓர் உதவியாளரும் அவ்வீட்டில் வசித்து வந்தனர். சிங்கராயர் காந்தீயவாதியென்றால் அவர் ஒரே மகன் சத்திய மூர்த்தி ஓர் புரட்சிக் காரன் . மார்க்ஸிய சித்தாந்தக் கொள்கையுடையவன்.சத்தியமூர்த்தி சிறைக்குச் செல்லவும் மகாலிங்கம் இவர்களுடன் தங்க ஆரம்பித்து விட்டான்.

ஜெயகாந்தன் அவர் இளமைக் காலத்தில் கம்யூனிசத்தில் இருந்தவர். எனவே காந்தீயமும் கம்யூனிசமும் அவர் எழுத்தில் கைகோர்த்துக் கொண்டு வருகின்றது. கதை என்பதைவிட உரையாடல்களே அதிகம்.

மகன் தீவிரவாதியாக இருப்பதைப் பற்றிப் பேசுகின்றார் சிங்கராயர்.

“இவர்கள் மட்டும் காந்திஜி சொன்னதைக் கேட்க மாட்டார்கள். இளைஞர்கள் மட்டும் கேட்க வேண்டும் என்றால் இது என்ன நியாயம் ? ..இளைஞர்கள் பலாத்காரத்தை நம்புகிறார்கள்.அதை எப்படி தடுக்க முடியும்? “

நிறைய பேசுகின்றார்கள். இனி பேச்சு பேச்சு பேச்சு தான்

பாரதியுடன் பழகிய காலத்து நடந்தவைகளையெல்லாம் விவரிக்கின்றார். பாரதிதான் சமதர்மம், பொதுடமை ஆகிய கருத்துக்களை பரிச்சயம் செய்துவைத்த முதல் புரட்சியாளர் என்கிறார்.

காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை எழுத்தில் படிக்கும் பொழுது இப்பொழுதும் மனம் கலங்குகின்றது. அந்தக் காலத்திற்கு மீண்டும் பறந்தேன். அந்த செய்தி வானொலியில் ஒலிபரப்பப்பட்ட பொழுது நானும் என் தந்தையும் ஒரே அறையில் தான் இருந்தோம். செய்தி கேட்டவுடன் என் தந்தை மயக்கம் போட்டு விழுந்தார். நானோ ஓவென்று கத்தி அழுதேன். அங்கே இருந்த மற்றவர்கள் என் தந்தையைக் கவனித்தார்கள். ஏனோ மரணச் செய்திகள் கேட்கும் பொழுதெல்லாம் நான் அதிர்ந்து போய்விடுவேன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மையம் ஒன்றைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுதுதான் திருமதி இந்திராகாந்தி சுடப்பட்ட செய்தி அறிந்து துடித்துப் போனேன். மாரடைப்பு வந்து கைகால்கல்கள் அசைவின்றி இருந்த என் தாயாரைக் கவனித்துக் கொண்டு பங்களூரில் வாழும் பொழுது முன்னால் பிரதமர் திரு ராஜீவ் காந்தி சுடப்பட்ட செய்தி அறிந்து அதிர்ந்தேன்.

இந்த மண் எத்தனை உயிர்களைக் காவு வாங்கி இருக்கின்றது.

ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கர் தொடர் என்னைப் பல வகையிலும் ஆட்டி வைத்தது.

மனவெளி இல்லத்திற்குச் செல்வோம். இவர்கள் குடும்பத்தில் சேர்ந்தவள் இன்னொருத்தியும் கூட. அவள்தான் உமா. அந்தப் பெண்ணும் ஓர் புரட்சியாளர். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த ஒருத்தி புரட்சி கொடி பிடித்து பெற்றோரையும் விட்டு வெளிவந்து இந்த இல்லத்தில் குடிபுகுந்துவிட்டாள். சத்தியமூர்த்தியின் கொள்கை ஈர்ப்பில் வந்து மனவெளி இல்லத்தில் ஒட்டிக் கொண்டவள்.

மனவெளி இல்லத்தில் வெவ்வேறு கொள்கைகள் உள்ளவர்கள் இருந்தனர். கொள்கைப் பிடிப்பிலும் இருந்து கொண்டு பிறர் மனத்தைக் காயப்படுத்தாமல் ஒன்றி வாழும் தன்மையுடன் சேர்ந்து வாழ முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

காந்திஜியும் பாரதியும் அதிகமாகப் பேசப்பட்டார்கள். அரசியல் அதிகமாகப் பேசினார்கள். இந்த உரையாடல்கள் பற்றி எழுதாமல் கதையைத் தொடர விரும்புகின்றேன்.

ஸ்வாமிகளைப் பார்க்கப் போவதாக மகாலிங்கம் ஒப்புக் கொள்ளவும் ஆதிக்கு மகிழ்ச்சி. மனவெளி மனிதர்களிலிருந்து “எந்தையும் தாயும்” போகின்றார் ஆசிரியர்.

மனவெளி இல்லத்திலிருந்து புறப்படும் பொழுது சிங்கராயர் ஒரு புத்தகம் ஆதிக்குக் கொடுக்கின்றார். ஆதியின் வீட்டில் படிப்பதற்கு எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு.ஆதிக்குப் புத்தகங்கள் படிப்பதில் அவ்வளவு ஆர்வம்.

“ஒரு மனிதனால் சாப்பிடாமலும் தூங்காமலும் கூட ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக முடியும் என்றால் உணவின் மூலமும் , ஓய்வின்மூலமும் அவனுக்குக் கிடைக்க வேண்டிய சக்தியும் போஷாக்கும் அந்தப் புத்தக்த்திலிருந்தே கிடைத்துவிடும். படிப்பதும் , தியானம் செய்வதும் வேறு வேறு அல்ல ..“

ஆதியின் வாயிலாக வரும் ஆசிரியரின் கருத்து.

புத்தகங்களைப் படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் மன நிறைவையும் நானும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். முதுமையில் முடங்கிக் கிடக்கும் எனக்கு நண்பர்கள் புத்தகங்கள்தான்.

மகாலிங்கமும் உமாவும் ஆதியின் வீட்டிற்கு வந்தார்கள். உமாவும் வேதமும் சீக்கிரம் தோழிகளாகிவிட்டனர். அங்கும் ஒரே உரையாடல்மயம். மகாலிங்கம், உமா, வேதம் மூவரும் ஆசாரிய ஸ்வாமிகளைப் பார்க்கப் புறப்பட்டுவிட்டார்கள்.

மகாலிங்கத்தின் வாழ்க்கை ஒருவிதமாக அமைந்துவிட்டது. தந்தையுடன் இருக்கும் பொழுது கட்டுப்பாடுகள் அதிகம். பின்னர் சத்தியமூர்த்தி தொடர்பினால் பல புத்தகங்கள் படித்து, தன்னை ஒரு நாஸ்திகன் என்று பிரகடனம் செய்து கொள்ளும் அளவுக்கு நவீன மனிதனாய் வளர்ந்திருந்தான். அந்தவிதத்தில் எள்ளளவும் குறைவில்லாதவள் உமா. அதே உமா இப்பொழுது கையில் பிரசாதத்தட்டுடன் நெற்றியில் குங்குமம் திகழ நடந்து கொண்டிருந்தாள். அவர்கள் வேஷதாரிகளல்ல. பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்புடையவர்கள்.

ஆசாரிய ஸ்வாமிகளை மூவரும் சந்தித்தனர். எல்லோரைப்பற்றியும் விசாரித்துவிட்டு அவர் கூறிய அறிவுரை ஒன்றுதான். ஆதி விரும்பும் ஆஸ்ரமப் பணிகளில் அவர்களும் பங்கு கொள்ள வேண்டும். தனித்தன்மையை இழக்காது ஒருங்கிணந்து சேவைகள் புரியலாம்

அந்தப் பரபிரம்மம் இல்லாத இடம் ஏது ? அவன் படைத்த உயிர்களுக்குத் தொண்டு செய்வது அவனுக்குச் செய்யும் ஆராதனை அங்கே எந்த விவாதங்களும் நிகழவில்லை.

மூவருக்குள்ளூம் ஏதோ ஓர் மன நிறைவு. அங்கே அர்த்தங்களை அனர்த்தமாக்கும் மனிதக் கூட்டம் இல்லை. சுதந்திரமாகச் சிந்திக்க முடிந்தது. இன்றைய இளைஞர்களுக்கும் வேண்டியதும் அதுதானே!

கடந்த காலத்திற்கு என் மனம் பயணம் சென்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரை அறிந்தவர்களுக்கு நான் சொல்வது தெரிந்த விஷயம். அவருக்குத் தன் ஊருக்கு அருகில் உள்ள கிராமங்களீல் தொழில் வளர்ச்சி வேண்டும் என்று விரும்பினார். கூட்டுறவுச் சங்கங்கள் நிறைய தொடங்க வழி காட்டினார். சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகள் அனைவரையும் கூட்டி விருந்தளித்து உட்காரவைத்து என்னென்ன நலத் திட்டங்கள் இருக்கின்றன என்று விசாரிப்பார். பள்ளிக்கூடங்கள் முதல் பல வசதிகளைப் பற்றிப் பேசுவார்.வெறும் பேச்சுடன் இருக்கவில்லை. அவரால் குன்றக்குடியைச் சுற்றி இருந்த பல கிராமங்களுகு நன்மைகள் கிடைத்தன. முக்கியமாக தொழில் மையங்களும் கூட்டுறவு மையங்களும் ஏற்பட வழி செய்து கொடுத்தார்.

காவியுடை உடுத்தியவராயினும் அவருக்குள்ளும் கம்யூனிச சித்தாந்தக் கொள்கைகள் இருந்தன. “மக்கள் சேவை மகேசன் சேவை” என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்ததை நான் அனுபவத்தில் பார்த்திருக்கின் றேன். இப்பொழுது பலரும் சமுதாய நலப் பணிகளில் ஆர்வம் காட்டி வழி நடத்துகின்றனர். எனவே நம் கதையில் ஆஸ்ரமம் ஆரம்பித்து சமூக நலப் பணிகள் செய்வதை ஆசாரிய ஸ்வாமிகள் ஊக்குவிப்பது ஆச்சரியமில்லை. காஞ்சி மடத்தின் கீழ் பல சேவை இல்லங்கள் இயங்கி வருகின்றன.

இதுவரை சந்தித்தவர்களை விடுத்து சத்திய மூர்த்தியிடம் கூட்டிச் செல்லுகின்றார். சத்தியமூர்த்தி தற்போது வாழும் இடம் ஓர் சிறை. அங்கும் பல மனிதர்கள், பல சிந்தனைகள் என்று கதையை நகர்த்துகின்றார். சிறை சீர்திருந்தவேண்டும், அதன் நிலை மேன்மைப்படவேண்டுமென்று நினைக்கின்றான். அங்கும் வாழ்பவர்கள் மனிதர்கள் தானே. அவர்கள் விஷயத்தில் கொடுமையாக இருப்பவர்கள் மனுஷ குலத்தின் வெறுப்புக்கும் ,நிந்தனைக்கும் ஆளாகத்தகுந்தவர்களே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அவன் எங்கிருந்தாலும் மனிதர்களின் நலனைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவன்.

அங்கே ஒரு சிறைக் கைதி, அதாவது தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் ஒருவரைக்காட்டி அங்கும் ஒரு காட்சியை வரைந்துவிடுகின்றார் கதாசிரியர். சுதை மண்ணிலிருந்து சிற்பம் செய்யத் தெரிந்தவன். அவனுக்கு ஒரு விருப்பம். தூக்கில் தொங்க இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. அதற்குள் சுதை மண் கிடைத்தால் காந்தி சிலையொன்று செய்துவிட முடியும் என நினைக்கின்றான். அவன் ஆசையை சத்திய மூர்த்தியிடம் கூறுகின்றான். சாகும் வரை மவுன விரதம் காத்து மகாத்மா காந்திக்கு ஓர் சிலை எடுக்க விரும்பும் சிறைக் கைதியைக் காட்டுகின்றார் ஆசிரியர்.

சாவு நெருங்கும் பொழுதும் நினைப்பில் காந்தி வருகின்றார் என்றால் அக்காலத்தை நினைக்கும் பொழுது இப்பொழுதும் சிலிர்க்கின்றது. காந்திஜி .. காந்திஜி ..காந்திஜி.

ஏனோ இத்தொடரில் வரும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக, சில கொள்கைகள் உள்ளவர்களாகக் காட்டிச் செல்லுகின்றார் ஜெயகாந்தன். அவர் கற்பனையுலகு அமைதியும் ஆனந்தமும் கலந்த ஓர் சுவர்க்க பூமி. ஆசைப்படுவதாவது அர்த்த முள்ளதாக இருக்கட்டுமே! பிறக்கும் பொழுது மனிதன் கெட்டவன் இல்லை.

அந்தக் கைதியின் கோரிக்கையைக் கேட்டவுடன் சத்தியமூர்த்திக்குப் பாடத் தோன்றுகின்றது

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே

இந்தப்பாடலைப் பாடிக் கொண்டே தன் இருப்பிடம் செல்லுகின்றான் சத்தியமூர்த்தி. இங்கிருந்து பயணம் “மகாயக்ஞம்” நோக்கிச் செல்லுகின்றது.

(தொடரும்)

நன்றி: "திண்ணை"

Friday, September 3, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 19

சங்கரபுரம்! காலச்சக்கரம் வேகமாக உருண்டோடினாலும், அந்த குக்கிராமம் தனக்குரிய வரலாற்றில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தது.

மகாலிங்க அய்யர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காசிக்குப் போனவுடன் அர்ச்சகர் தனியே நின்றார்; இப்போதும் நிற்கிறார். எல்லாம் கெட்டுப்போன இந்தச் சூழ்நிலையிலும், எல்லாவற்றையும் சமமாகப் பாவிக்கும் அத்வைத சிந்தாத்தத்தின் அடையாளமாக, இவர் வயோதிகத்தால் கூன் விழுந்து இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஞானமும் அறிவும் மனுஷனுக்கு எவ்வளவு சொந்தமோ, இயல்போ, அதே அளவு அஞ்ஞானமும் அவனுக்குத்தானே சொந்தம் !

கிராமம் சின்னதாயினும் ஏதேதோ நடந்து முடிந்துவிட்டது.என்றாவது நல்லது நடக்காதா என்ற நம்பிக்கையில் அய்யர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

அப்பைய குருக்களின் தவம் பலித்தது. ஆச்சார்ய ஸ்வாமிகள் திக்விஜயம் செய்யப் போகின்றார். இந்த சின்ன கிராமமும் புண்ணியம் செய்திருக்கின்றது. சுவாமிஜி இங்கு வந்து சிறிது காலம் தங்கப் போகும் செய்தி அறிந்தது முதல் குருக்களின் மனத்தில் ஓர் சமாதானம்.

இந்த இடம் ஸ்வாமிஜியின் பூர்வாஸ்ரம பூமி.

யானை மீது அம்பாரி கட்டி ஆரோஹணித்து ஊருக்குள் பட்டண பிரவேசம் செய்கின்றார் ஸ்வாமிகள். திரண்டு நிற்கும் பெருங்கூட்டத்தில், அவருடைய பார்வை பரவி வரும் பொழுது அந்தப் பெரும் திரளின் நடுவேயிருந்து உயர்ந்தெழுந்து நேருக்கு நேர் வந்து நிற்பன போல் இரண்டு விழிகளை அவர் ஒரு நொடியிலே அடையாளம் கண்டு கொண்டார்.

“பகவன் முதற்றே உலகு “ என்ற குறளின் பாதி அடிகளை அவரது திருவாயின் செவ்விதழ்கள் முணுமுணுத்தன.

ஆதியை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அவருடன் பேச விரும்பி , மடத்தில் வசித்துவரும் கிருஷ்ணனை ஆதியிடம் அனுப்புகின்றார்.

ஜெயகாந்தன் இதனைக் கதை என்றும் தன் கனவென்றும் சொன்னது மிகவும் பொருத்தமானது. அவர் கற்பனைச் சிறகுகள் வெகு உயரத்தில் பறக்கின்றன. எங்கெங்கோ வட்டமடிக்கின்றன. ஒருவரின் கனவை விமர்சிப்பதை என் மனம் ஏற்கவில்லை. ஆனாலும் அப்படியே விட்டு விலகவும் முடியவில்லை. சில இடங்களையாவது பார்த்தல் வேண்டும்.

மகாலிங்க அய்யர் காசிக்குப் போனதும், சதாசிவம் அய்யர் கோயிலில் ஹரிஜனங்களை ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தது. அதனால், அவர் சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு, தன் குடும்பத்துடன் அவர் மூங்கில் குடிக்கே போனது எல்லாம் கடந்த காலச் செய்திகள்.அவர் ஆரம்பித்த ஆஸ்ரமத்தில் ஆதியும் ஒரு மாணவன். முதல்தர மாணவன். அவரது கொள்கைகளை அப்படியே உள்வாங்கி காந்தீய வாதியாக, சத்தியப் பிரதிநிதியாக வாழ ஆரம்பித்தவன் ஆதி.

ஸ்ரீராமானுஜர் செய்தவைகள் ஆசிரியரின் கருக்குக் காரணமாக இருந்திருக்குமோ?

சதாசிவ அய்யர் பல முறை சிறைக்குச் சென்றார். அலிப்புரம் ஜெயிலைப் பற்றிய குறிப்பு வரவும் எங்கள் குடும்பத்தின் கடந்த கால நிகழ்வுகள் நினைவிற்கு வந்தன.

என் தந்தை மும்முறை ஜெயிலுக்குப் போயிருக்கின்றார். அலிப்புரம் ஜெயிலுக்கும் சென்றிருக்கின்றார். எட்டயபுரத்திற்குச் சென்ற பிறகும் என் தந்தை வெளியூர்களுக்கெல்லாம் செல்லும் பொழுது. சில சமயங்களில் என்னையும் கூட்டிச் சென்றதுண்டு.

தூத்துக்குடி சந்திப்பில். ஏ.பி. சி வீரபாகு அவர்கள் இருந்தது நினைவிற்கு வருகின்றது. அதே போல் நெல்லையில் திரு சோமயாஜலு அவர்களைப் பார்க்க முடிந்தது. கூடிக் கூடிப் பேசுவார்கள். அப்பொழுது அதன் அர்த்தம் எனக்குத் தெரியாது. கொஞ்ச நேரம் தான் இருப்பேன். பிறகு என்னை இன்னொரு அறைக்குத் தூங்க அனுப்பிவிடுவார்கள். எல்லோரிடமும் ஒரு வேகம் ஒரு துடிப்பு. நான் சிறுமியாக இருந்தாலும் அந்தத் துடிப்பின் தாக்கம் என்னிடமும் வந்தது. காங்கிரஸ் ஊர்வலத்தில் முதலில் கொடி ஏந்தி போயிருக்கின்றேன். ராட்டினம் நூற்று, அந்தச் சிட்டங்களைக் கதர்க்கடையில் போட்டுத் துணி வாங்கி உடுத்தியிருக்கின்றேன். அந்த வயதில் நான் கதராடைதான் அணிந்தேன்.

கதராடை பள்ளிச் சீருடையல்ல. அதை அணிகின்றவர்கள் காந்திஜியின் உணர்வுகளைச் சுமந்து வாழ்ந்தோம்.

பாபுஜி என்ற ஒரு மகா புருஷர் சூத்திரதாரியாக நின்று வெறும் பிண்டங்களாக இருந்த மனிதர்களை, உயிரும் ஆத்மாவும் கொடுத்து லட்சியப்பொம்மைகளாக மாற்றி ஆட்டினார். இதுவரை மாமூலாயிருந்த வாழ்க்கையிலிருந்து கிளப்பி ஒரு புதிய வாழ்க்கையோடு பொருத்தி வைத்தார். சரித்திரம் உருவாக்குகிற செயல்களும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து மிக விரைவாய் நடந்து கொண்டிருந்தன. மனத்தில் துன்பப்படுகின்ற பொழுதிலும் கூட தொடர்ந்து ஒரு நிறைவு ததும்பிக் கொண்டிருந்தது. மகத்தான செயலில் ஈடுபட்டிருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் சரித்திரத்தை உருவாக்குகின்ற அணியின் முன்வரிசையில் சிந்தனையும் செயலும் ஒன்றாய் இணைந்து சென்று கொண்டிருந்தோம். காந்திஜி எப்பொழுதும் முன்னே நடந்து கொண்டிருந்தார்.

ஜெயகாந்தனின் இந்த வரிகளின் அர்த்தத்தை பூரணமாக அனுபவத்தில் பார்த்திருக்கின்றேன்.

சின்னச் சின்ன விஷயங்களில் கூட தேசிய உணர்வின் ஆக்கிரமிப்பைக் காணலாம்.

உதாரணமாக ஒன்றைச் சுட்டிக் காட்ட முடியும். தியாகராஜ கீரத்தனைகளைச் சொல்லிக் கொடுக்க வந்த பாட்டு வாத்தியார் கூட, வைஷ்ணவ ஜனதோ என்றும் சாந்தி நிலவ வேண்டும் என்ற பாடல்களை முதலில் தான் அறிந்து கொண்டு எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றார். காந்தீய அலை பெரியவர்களை மட்டுமல்ல ; சிறுவர்களிடமும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியிருந்தது. கதையில் சில நிகழ்வுகள் வரும் பொழுது அக்கால நிகழ்வுகள், அனுபவங்கள் இவைகளின் நினைவுகள் வந்து அப்படியே மெய்மறக்கச் செய்வதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

கதைக்களன் போய்ப் பார்க்கலாம்

கிருஷ்ணனிடம் தான் ஒரு ஹரிஜன் என்று சொல்லுகின்றார் ஆதி. இதைக் கேட்கவும் முதலில் திகைப்பை அடைகின்றான் கிருஷ்ணன். சுற்றுப்புறத்தைப் பார்க்கின்றான்.காரல்மார்க்ஸ், காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்ஸர் , விவேகாநந்தர்,வள்ளலார், ஆச்சார்ய சுவாமிகள்,கவி பாரதி ஆகியோரின் நூல்கள் நிறைந்த ஷெல்ப்கள் இருந்தன அந்த வீட்டில் ஓர் அபூர்வ அமைதியை அவனால் உணர முடிந்தது. இருக்காதா பின்னே!

சதாசிவ அய்யரின் மனைவி மறைந்தார். பலமுறை ஜெயிலுக்குச் சென்று வந்த அய்யர் ஒரு முறை போனவர் திரும்பி வரவில்லை. அவர் அன்பு மகள் சுதந்திர தேவியின் திருமணம் நடந்தது. அவள் கை பிடித்த கணவர் நம் ஆதிதான்.தோழனாய் இருந்தவர் துணைவனாய் ஆனார். அக்கிரகாரத்துப் பெண்ணை சேரிப் பையன் ஒருவனுக்கு மணமுடித்து அவர்களை ரசிக்கின்றார் ஆசிரியர். அக்காலத்திலேயே கலப்புத்திருமணம் செய்து அழகு பார்க்கின்றார். அதுமட்டுமா, அவர்களின் இல்லறத்தைப்பற்றிப் பேசும் பொழுது நம்மை வியக்க வைக்கின்றார். லட்சியங்களுக்கேற்ப நம்மால் வாழ முடிகின்றதோ இல்லையோ ஆதி தம்பதிகள் எடுத்துக்காட்டாக வாழ்வதை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றார். அந்த இல்லறத்தின் பயனாக இரு மகன்களும் ஒரு மகளும் அவர்கள் பெறுகின்றனர்..

காலம் ஓடியது. அவர்கள் ஆஸ்ரமத்தை அரசு எடுத்துக் கொண்டு ஓர் அனாதை ஆஸ்ரமமாக்கிவிட்டது. அதே மூங்கில் குடியில் கொள்கைகளைச் சுமந்து கொண்டு வேறு இடத்தில் வாழ்ந்துவந்தார்.
.
கிருஷ்ணனின் வருகையின் அர்த்தம் புரியவும் தன்னைப்பற்றிய உண்மையை உடனே தெரிவித்துவிடுகின்றார். உண்மையின் வெளிச்சத்தால் தாக்கப்பட்ட கிருஷ்ணன் ஸ்வாமிகளிடம் திரும்புகின்றான். ஸ்வாமிகள் விபரம் அறியவும் ஆதியை மீண்டும் வரச்சொல்லி அதற்குரிய வழிகளையும் கூறுகின்றார்.

மீண்டும் கிருஷ்ணன் திரும்பி வருகின்றார் அப்பொழுது ஆதி மனம் திறந்து பேசுவதில் ஜெயகாந்தனைக் காணலாம்.

சாமி, ஒரு சேரிக்குள் நுழைவதற்கு உங்களுக்கு எப்படி கூசுமோ, அதைப்போலவே இம்மாதிரியான இடங்களுக்கும், சனாதினிகள் கூடியிருக்கும் சபைக்கும் போக என் உடம்பும் ஆத்மாவும் கூசுகிறதே. இது ஏதோ என் பிறவி குறித்து எனக்கிருக்கிற தாழ்வுணர்ச்சி என்று நினைத்துவிடாதீர்கள். -இப்போது என்முன் நிற்கும் உங்களுக்கு இல்லாவிட்டாலும் என்னைப்போல் உள்ள யாரையோபற்றி அப்படி ஓர் உணர்ச்சி யாருக்குமே இல்லை என்று நீங்கள் சொல்லிவிடமுடியுமா?"

ஆதிக்கு முன்னரே தேவியும் , அவர்களின் மகள் வேதவல்லியும், சின்ன மகன் சதாசிவமும் ஸ்வாமிகளைப் பார்க்கச் சென்றுவிட்டனர். ஸ்வாமிகளின் தரிசனம் அவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. அக்காவின் அறிவுரைக் கேற்ப குழந்தை சதாசிவம் இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு,

“கஜானனம் .. பூதகணாதி .. ஸேவிதம் ...
கபித்த .. ஜம்பூபல ..ஸார ..பக்ஷிதம் ..
உமா .. ஸுதம் ..சோக .. விநாச .. காரணம் ..
நமாமி .. விக்னேஸ்வர .. பாத ..பங்கஜம்

என்று மழலை மொழியில் திக்கித்திக்கி பக்தியுடன் சொல்லக் கேட்ட ஸ்வாமிகள், பரவசமுற்று கற்கண்டு கட்டிகளைக் குழந்தைக்குக் கொடுக்கின்றார்.

நற்குணங்களை குழந்தையிடம் விதைக்கப்பட வேண்டியது பெற்றோரின் கடமை. மனம் வளமாயிருந்தால் வாழ்க்கையும் செம்மையாக இருக்கும்.

குடும்பக்கதை அனைத்தும் அவர்கள் கூற எல்லாம் அறிந்து கொண்டார் ஸ்வாமிகள். தந்தை போன பிறகு தோழர் ஆதியை மணந்து கொண்டிருக்கின்றார். வேத பிராமண குடும்பத்துப் பெண்ணை சேரியில் பிறந்த ஓர் செம்மலுக்கு கலப்புத்திருமணம் நடத்தி உவகை கொள்கின்றார் கதாசிரியர்.

அரசாங்கத்தால் இவரது தியாகத்துக்கு, மானியம் கொடுக்க வந்த பொழுது மறுத்துவிட்டார்

மீண்டும் என் குடும்ப நினைவு

தியாகிகளுக்கு ஆரம்பகாலத்தில் அரசு நிலம் கொடுக்க முன் வந்தது. என் தந்தை அதனை வாங்க மறுத்துவிட்டார். அப்படி உதவி பெற்றால் தன் நாட்டுக்காகச் செய்த பணிக்குக் கூலி வாங்கியது போலாகும் என்றார். அதுமட்டுமல்ல, பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் அறிவுரையின் படி கிராம சேவைக்குச் சென்ற பொழுது என் தந்தை எனக்குக் கூறிய அறிவுரை:

“நம்மூர் ஜனங்களுக்கு வேலை செய்யப் போறே. இதுக்கு அரசாங்கத்திலிருந்து சம்பளம் வாங்கறதே சரியில்லே. ஆனாலும் நாம மனுஷா. ஜீவனம் நடத்த வேண்டியிருக்கே? சம்பளம் வாங்கறதனாலே உனக்கு பொறுப்பு இரட்டிப்பாறது. நேரம் காலம் பாக்காம அக்கறையுடன் வேலை செய்யணும்.

தீமைகளைக் காணும்பொழுது இந்த வயதிலும், இந்த உடல் நிலையிலும் கொதித்து எழுவேன். எப்படி இந்த உணர்வு வந்தது.? காந்தியின் சத்திய வாழ்க்கையின் வேகம் ஒரு இடத்துடன் முடங்கியதல்ல. நாடு முழுவதும் பரவியிருந்த காலத்தில் வளர்ந்தவள். பாட்டிக் கதை, வடைக் கதை என்று கேட்டு வளரவில்லை. சோறு ஊட்டும் பொழுதே என் தாயார் நாட்டுப்பற்றையும் ஊட்டி வளர்த்தார்கள்.

இன்று எங்கும் பிரிவினைகள், எங்கும் வன்முறைகள், காழ்ப்புணர்ச்சி, சுயநலமும் சுரண்டலும்! மாறிவரும் சூழலைப் பார்த்து மனம் பதறுகின்றது

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ? சர்வேசா !இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ ?"

பாரதியின் பாடலை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

எங்களைப் போன்றவர்களுக்குக் கிடைக்கும் பட்டம்: “பிழைக்கத் தெரியாத பைத்தியங்கள் “

ஜெயகாந்தனும் நானும் சம காலத்தவர்கள். சரித்திரத்தின் சாட்சிகளாக இருக்கின்றோம்.

தேவி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாள்.

“எங்களது லட்சியமும் அனுபவமும் எங்கள் பிள்ளைகள் கூட நம்ப முடியாத பழங்கதையாகிவிடுமோ என்கிற அச்சம் நாளும் எனக்குப் பெருகி வருகின்றது “

ஆசிரியர் அன்று தேவியின் வாயிலாக காட்டிய அச்சம் உண்மையாகிக் கொண்டிருக்கின்றது. அன்பை விதைக்க வேண்டியதற்குப் பதிலாக காழ்ப்புணர்ச்சியை வளர்த்து, பிரிவினை உண்டாக்கிவிட்டார்கள் என்று காட்டி பலநூறுகளாகப் பிரிவினைகளை வளர்த்து, பணத்திற்காக எதையும் செய்யலாம் என்பதை மறைமுகக் கொள்கையாக்கி வருபவர்களைக் காணும் பொழுது “நெஞ்சு பொறுக்குதிலையே “ என்று கத்தத் தோன்றுகின்றது.

உண்மைகளைப் புதைத்து புதிய வரலாறுகளை எழுதி இளைய சமுதாயத்தைத் திசை திருப்புவர்களைக் கண்டால் மனம் வேதனைப் படுகின்றது. நான் அரசியல் வாதியல்ல. எந்தக் கட்சியையும் சேர்ந்தவள் அல்ல. சாதி, மதங்கள் வலைக்குள் கூட என்னைப் பிணித்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த சமுதாயத்தின் மீது ஆழமான பாசம் கொண்டவள். பெரியவர்களின் மீது மரியாதை கொண்டவள். தியாகத்தைப் போற்றுகின்றவள். என் மனக் குரலைப் பதிய வேண்டியது என் கடமையாக உணர்கின்றேன்.

“இளைய சமுதாயமே, மனிதனின் சுயநலத்தால் உண்மைகள் புதைகுழிக்குள் புதைக்கப்பட்டு வருகின்றன. தேடுங்கள் உண்மைகளை! மனித நேயம்தான் வாழ்க்கையில் அமைதி கொடுக்கும்.”

நண்பரே, என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் முகத்தில் புன்னகை காண்கின்றேன். உங்கள் நோக்கமும் இதுதானே. உங்களுடைய இந்தக் கதையைப் படிக்கும் பொழுது ஒவ்வொருவரும் சத்தியப் பாதையைப் பார்க்க வேண்டும் என்பதுதானே. உங்கள் எழுத்தைப் படிக்கவும் எனக்குள் ஏற்பட்ட உணர்வுகளையும் பதிந்துவிட்டேன்.

ஜெயகாந்தனின் “ஜெய ஜெய சங்கர” நான்கு பகுதிகளிலும் அவர் இதயக் குரலைப் பதிந்திருக்கின்றார். அவர் எண்ணங்களுக்காகப் பரிசு கிடைத்தது.

ஆஸ்ரமத்திற்கு நாமும் செல்வோம். ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி மறுநாள் அவரைத் தரிசிக்க வந்தார் ஆதி .உடன் குழந்தை சதாசிவத்தையும் கூட்டி வந்திருந்தார். கண் மூடி அமர்ந்திருந்த ஸ்வாமிகளைப் பார்க்கவும் “ஜெய ஜெய்ய சங்கல..ஹலஹல சங்கல” என்று குழந்தை முணங்கிற்று. குரல் ஒலிகேட்டு கண்விழித்த ஸ்வாமியின் பார்வை ஆதியில் மேல் வீழ்ந்தது.

வேலிக்கு அப்பால் வாய்க்கால் கரை மேட்டில்சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுந்த ஆதியின் தோற்றம், கையில் தொறட்டிக் கொம்புடன் பதினைந்து வயது தோற்றத்தில் அவன் நிற்பதாய் ..

அரசமரத்தடிமேடையில் கதை சொல்லிக் கொண்டு,பிரபஞ்சம் சார்ந்த எல்லாப் பொருட்களிலும் பிரம்மத்தையே தரிசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் ஒரு பிராமணச் சிறுவனாய் ..

பரஸ்பரம் தோற்றங்கொள்ள ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்து இருவரும் மாறிமாறிப் புகுந்து இதயம் எய்த ..

இதைப்படிக்கும் பொழுது கம்பனின் நினைவு வருவதைத் தடுக்க முடியாது

இடையில் முள்வேலி நின்று கொண்டிருந்தது. பக்தி, பரவசம் என்கிற மிகச் சாதாரண உணர்ச்சிகளை எல்லாம் கடந்து வியவகார ஞானத்தோடு தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டார் ஆதி. முன் தினம் தேவி உரைத்த சம்சார சரித்திரத்தின் இன்னொருபகுதியை ஆதி கூறலுற்றார். முதல் மகன் மகாலிங்கம் தன் பிறப்பைக் காட்டி அரசின் சலுகை பெற்றதைக் காணவும் மகனையே வீட்டைவிட்டுத் துரத்தியதையும் விடவில்லை.

ஆதியின் கொள்கைப்பிடிப்பு நடை முறை சாத்தியமா இல்லையா என்று ஆராய வேண்டியதில்லை. இது கதாசிரியரின் ஆசை. அவருடைய கற்பனை. நல்லவைகளை நினைத்தாவது பார்ப்போமே!

ஸ்வாமிகள் பேசப் பேச தான் அப்படி செய்தது தவறென்பதை உணர ஆரம்பித்தார். மகாலிங்கத்தைப் பார்க்க விரும்புவதைக் கூறி அவனைத் தேடி அனுப்பும்படி அன்புக் கட்டளையும் பிறப்பித்தார் ஸ்வாமிஜி.

(தொடரும்)

நன்றி: "திண்ணை"