Tuesday, March 30, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன் 01


டாக்டர்.ஜெயகாந்தன்!பட்டம் வழங்கப் போவதாக செய்தி மட்டும்தான் வந்திருந்தது. ஆனால் ஏனோ உடனே அவர் பெயருடன் டாக்டர் பட்டத்தை ஒட்டிப் பார்க்க மனம் விழைந்தது. டாக்டர் பட்டம் சிலருக்கு அளிக்கும் பொழுது அந்தப்பட்டத்தின் நிறம் மங்குவதுண்டு. ஆனால் ஜெயகாந்தனால் அந்தப்பட்டத்தின் ஒளி கூடியிருக்கின்றது.
நம் காலத்தில் வாழும் ஓர் ஒப்பற்ற சிந்தனையாளன். விமர்சனங்கள் அந்த வணங்காமுடியை வளைக்க முடியாது. தன் எண்ணங்களை எழுத்தில் ஆழப் புதைக்கும் ஓர் அற்புத மனிதன்

பள்ளிப் படிப்பு கூட முடிக்காதாவர்

அச்சகத்தில் அச்சு கோர்க்கும் சாதாரண தொழிலாளி

இவருக்குள் எப்படி இத்தனை சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன!.

வெளியில் சிதறிக் கிடப்பவை, சிந்தியவை இவர் பார்வைக்கு மட்டும் உயிரோட்டமாகத் தெரிகின்றதே!

மனிதர்களின் இதயங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி எங்கிருந்து பெற்றார்!?

இவரைப்பற்றி எழுத என் மனம் கட்டளையிட்டுவிட்டது. என் அன்புக்குரிய நண்பர். 40 ஆண்டுகால நண்பர். குடும்ப நண்பர்.

எத்தனை சந்திப்புகள்! நாங்கள் கழித்த பொழுதுகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை. ஒருகாலத்தில் எனக்குள் ஒரு ஆசை இருந்தது.

ஜான்சனைப்பற்றி பாஸ்வெல் எழுதியது போல் ஜெயகாந்தனின் உரையாடல்களைத் தொகுத்து எழுத விரும்பினேன். கையிலே டேப்ரிகார்டர் சகிதமாகச் சுற்றியிருக்க வேண்டும். அப்படியிருந்தாலும் பதிவு செய்திருக்க முடியாது. சிறு அசைவும் கூட அவரிடமிருந்து திடீரென்று வெள்ளமென வரும் வார்த்தைகளின் ஓட்டத்தைப் பாதித்திருக்கும்

அப்பொழுதே எழுதியிருந்தால் இந்த சமூகத்திற்கு ஓர் அரிய நூல் கிடைத்திருக்கும். இப்பொழுது என் நினைவுப் பெட்டகத்தில் தேடிப் பார்க்கும் வலுக் கூடக் குறைந்து விட்டது. இருப்பினும் நினைவில் இருப்பதையாவது பதிவு செய்ய வேண்டியது என் கடமையெனக் கருதுகின்றேன்

என் நட்பு வட்டம் மிகப் பெரியது. நான் சந்தித்தவர்களில் உரையாடலில் மிகச் சிறந்தவர் ஜெயகாந்தன்.

HE IS ONE OF THE BEST CONVERSATIONALISTS

என்னைப் பற்றி நன்குணர்ந்த, எங்கள் குடும்ப நண்பர் பேராசிரியர் அரசு அவர்கள் கூறியது.

"ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளர்

ஜெயகாந்தன் ஒரு பேச்சாளர்.

இந்த இரண்டினைப் பற்றியும் நிறைய எழுதிவிட்டார்கள். அவருடன் பேசும் பொழுது அவரிடம் கண்டவைகளை, உணர்ந்தவைகளை அவருடன் பழகியவர்கள் எழுத வேண்டும். சீதாம்மா, அவர் உங்களுக்கு நீண்ட கால நண்பர். நினைவில் இருப்பவைகளைப் பதிவு செய்யுங்கள். ஏற்கனவே நீங்கள் மீண்டும் எழுதத் தாமதித்துவிட்டீர்கள்.

தொடர்ந்து உங்களுடன் பழகிய பல அறிஞர்களைப் பற்றி எழுத வேண்டும். உங்கள் அனுபவங்களையும் பதிவு செய்யுங்கள்."

அரசு வேறு யாருமல்ல. வரலாற்று ஆய்வாளர் டாக்டர். ராசமாணிக்கனாரின் மகன். அவர்கள் குடும்பத்துடன் எனக்கிருக்கும் நட்பின் காலம் 52 ஆண்டுகள். அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

மதுரையில் பிறந்து, எட்டயபுரத்தில் வளர்ந்து, சமுதாயப் பணியில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலும்,, வெளி நாடுகளிலும் பல இடங்களில் வலம் வந்தவள். இன்றும் சமுதாய அக்கறையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவள். என் அறிமுகத்திற்குக் காரணம் ஜெயகாந்தனைப் பற்றி எழுத எனக்குக் கொஞ்சமாவது தகுதி இருக்கின்றதா என்பதை உணர்த்தவே இந்த சிறு அறிமுகம். நாங்கள் இருவரும் சமுதாயத்தைக் கூர்ந்து நோக்குகின்றவர்கள். அவர்களின் உணர்வை இருவரும் உணர்வோம். யதார்த்தமாகப் பார்ப்போம்.

அபூர்வமான சூழலில் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் தான் அன்று நிறைய பேசினேன், எங்களிடையே நட்பு வளர்ந்ததற்குக் காரணங்கள் எங்கள் சமுதாயச் சிந்தனைகளும், பாரதியிடம் கொண்டிருந்த ஈடுபாடும் தான்.பல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.. நாங்கள் இருவரும் அச்சமில்லாதவர்கள். வெளிப்படையாகப் பேசுபவர்கள். ஆடம்பரமில்லாதவர்கள்.

அவரின் பார்வை குடிசைகளில் விழுந்தது. ஏழைகள் அவரின் உறவினர்கள். மற்றவர்கள் கண்களுக்குக் குறைவாகப் பட்டவைகள், ஏளனமாகக் கருதப் பட்டவைகளின் உள்ளுக்குள் போய்ப் பார்த்து உண்மைகளை சத்தம் போட்டுக் கூறியவர்.

அவர் எண்ணங்கள் எழுத்தில் வந்தன.

நான் செயலில் இறங்கினேன்.

இந்த விஷயத்தில் நாங்கள் ஒரே பார்வை கொண்டிருந்தோம்.

கண்ணுக்குத் தெரியும் சாதனை அவருடையது.அவர் எண்ணங்கள் எழுத்துக்களில் வெளிப்பட்டன

என்னுடைய பணி வாழ்க்கையில் துன்பப்படுபவர்களின் துயர் துடைப்பது

மனங்களில் வரைந்த சித்திரம். .

என்னுடைய பணியில் எனக்குக் கிடைத்த குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. இரத்த சம்பந்த உறவுகளைவிட இதய சம்பந்த உறவுகளிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம். என் சாதனைகள் என்று கூறவில்லை. இறைவன் கொடுத்த வரம் இது.

கடந்த கால நிகழ்வுகளைமனம் அசை போடும் பொழுது ஓர் மகிழ்ச்சி.

ஜெயகாந்தனின் எழுத்துக்கள் என்றும் புதுமை மாறாது அதே சக்தியுடன் நம்மை ஆட்கொள்ளும்.

மேடைப் பேச்சுக்கள் அவ்வப்பொழுது விமர்சனங்களில் மாட்டிக்கொள்ளும். அவருடன் உரையாடல் மிக மிகச் சிறந்தது. அவர் திடீரென்று பேச ஆரம்பிப்பார். காட்டாற்று வெள்ளமென வரும் பேச்சைக் கேட்பவர்கள் திக்கு முக்காடி பிரமித்துப் போய் உட்கார்ந்திருப்போம்.

அவருடன் செல்லும் பொழுது பாதையில் அவர் பார்வை போகும் திசையை நாமும் பார்க்கத்தான் செய்வோம். அனால் வீடு வரவும் அவர் பேசுவதைக் கேட்டால் மலைத்துப்போய் நிற்போம்.

எல்லோரிடமும் அரசியல் பேச மாட்டார். பொதுவாக அவர் அரசியல் பேசுவதே குறைவு. எப்பொழுதும் அவர் நோக்கு, அக்கறை, ஆதங்கம் எல்லாம் சமுதாயத்தைச் சுற்றியே இருக்கும்.

அவருக்கு நண்பர்கள் அதிகம். அதைவிட ரசிகர்கள் அதிகம். ரசிகைகளைவிட ரசிகர்கள் அதிகம். ரசிக்கும் பெண்களும் அவரைத் தேடி வந்து அதிகம் பேசுவதில்லை. அவர் தங்கும் இடத்தில் அவர் பேச்சைக் கேட்கக் காத்திருக்க வேண்டும். மழையைக் கூட விஞ்ஞானத்தால் வரவழைக்க முடியும். ஆனால் இந்த முரட்டுக் குதிரை தானாகத்தான் நாட்டியமாடும். காத்திருக்க முடிந்தவர்களே அதைக் கண்டு களிக்க முடியும். பெண்களின் தயக்கத்திற்கு அதுவும் ஒரு காரணம்.

ஜெயகாந்தனைப் பற்றி எனக்குத் தெரிந்தவைகள், நான் கண்டவைகள், உணர்ந்தவைகள் எல்லாம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

புகைப்படத்துக்கு நன்றி: http://kapilanpathippagamcom.blogspot.com

Sunday, March 28, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-01

"அம்மா, அப்பா எங்கே?"

இந்தக் கேள்விக்கு ஏதேதோ பதில் சொல்லி வந்தாள் சுப்புலட்சுமி.மகள் பாப்பாவிற்குச் சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். நான்கு வயதுக் குழந்தைக்கு எப்படி புரிய வைப்பது?அவள் கணவர் காந்தியைத் தேடிப் புறப்பட்டுவிட்டார். சுதந்திரப் போராட்டம். ஜெயில்வாசம். போய் இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அவர் எங்கிருக்கிறார் என்று அவளுக்கே தெரியாது. பக்கத்து வீட்டு சீமாச்சு தான் அவரை ஜெயிலுக்குப் பிடிச்சுண்டுபோய்ட்டதாகச் சொன்னான். நம்பிக்கையில் தாலியைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறாள்.

“அம்மா!“ மீண்டும் குரல் கொடுத்தாள் குழந்தை பாப்பா.

நினைவுகளிலிருந்து தொப்பென்று கீழே விழுந்தாள்.

“உன் அப்பா ஜெயிலுக்குப் போயிருக்கார்.“

“அப்பா திருடினாரா?“ அவள் நிறைய கதைகள் கேட்டிருக்கிறாள்-தப்பு பண்ணினா ஜெயிலுக்குப் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள்!

பாப்பா கையில் ஒரு பொம்மை இருந்தது. பதில் கூறாமல் சட்டென்று அந்தப் பொம்மையைப் பறித்தாள். பாப்பா ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

"ஏன் அழறே?"

"என் பொம்மை. நீ புடுங்கிட்டியே, அது என்னுடையது."

"உன்னோட சாமானை யாராவது எடுத்தா கோபம் வர்றதே. நாம தங்கியிருக்கிற வீடு, இதெல்லாம் சேர்ந்தா நம்ம நாடு. அதை வெள்ளைக்காரன் புடுங்கிண்டு உக்காந்திருக்கான். அவனைப் போகச் சொன்னா ஜெயில்லே போட்டுடறான். உன் அப்பாவும் அதுக்காகக் காந்திக்கட்சியிலே சேர்ந்துண்டிருக்கார்.

பாப்பாவுக்குச் சரியா ஒண்ணும் புரியலே. அப்பா ஏதோ நல்லதுக்காக ஜெயிலுக்குப் போயிருக்கார் என்ற வரை புரிந்து தலையை ஆட்டியது.

அன்று முதல் தினமும் காந்திக்கட்சிபற்றி கேட்க ஆரம்பித்தாள். அந்தக் கதை அவளுக்குப் பிடித்திருந்தது. தாயார் அவளுக்குச் சோறு மட்டும் ஊட்டவில்லை, சொந்த நாட்டைப் பற்றிய செய்திகளையும் அவளுக்குத் தெரிந்த அளவில் கூற ஆரம்பித்தாள்.

பாலபாடம் ஆரம்பமாகிவிட்டது.


ஒருநாள் சுப்புலட்சுமி தன் மகளைக் கூட்டிக் கொண்டு மீனாட்சி அம்மனைக் காணச் சென்றாள்.சிங்காரிக்கப்பட்ட பந்தலில் மீனாட்சி அம்மன். அது மீனாட்சி அம்மன் கோவில் அல்ல.

மதுரை வைத்தியநாதர் தலைமையில் ஹரிஜன மக்கள் திரண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்தனர். அவர்கள் நுழைந்ததால் கோவிலின் ஆசாரம் போய்விட்டது என்றும் மீனாட்சி வெளியேறிவிட்டாள் என்றும் கூறித் தனியாகப் பந்தல் அமைத்து மீனாட்சி அம்மன் விக்கிரகத்தை அங்கே வைத்துப் பூஜைகள் நடத்தினார் நடேச அய்யர். ஆசாரம் பேசும் மக்கள் அங்கே போக ஆரம்பித்தனர்.

ஆலயப் பிரவேசம் முன்னின்றி நடத்தியவனும் பிராமணன். ஆசாரம் பேசி ஹரிஜன் நுழைந்ததால் ஆண்டவன் அங்கிருந்து போய் விட்டான் என்று சொன்னவனும் பிராமணன்.

பந்தலுக்கு நுழையும் பொழுது பாப்பா கேட்டாள் “அம்மா, கோவிலுக்குப்
போகாம இங்கே ஏன் வந்திருக்கோம்?"

“மீனாட்சி கோவில்லே ஹரிஜனங்கள் நுழைஞ்சுட்டாளாம். அதனாலே மீனாட்சி கோபிச்சுண்டு இங்கே வந்துட்டாளாம்."

"ஹரிஜனம்னா யாரு?"

"அது ஒரு ஜாதி."

"ஜாதின்னா என்ன?அவாளும் மனுஷாள்தானே கடவுள் ஏன் கோவிச்சுக்கணும்?"

எவ்வளவு பெரிய கேள்வியைக் கேட்டு விட்டாள். தாயார் பூரித்துப் போய் மகளைக் கட்டி அணைத்துக் கொண்டு, “கோந்தே, எனக்கும் புரியல்லே. அம்மனத் தரிசுட்டுப் போகலாம்.“ என்றாள்.

பாப்பா அதற்குமேல் கேள்வி கேட்கவில்லை. “தப்பு” ன்னு மட்டும் அந்தக் குழந்தைக்கு அப்பொழுதே தெரிந்தது.

பாப்பாவிற்கு ஆறுவயது முடிந்து விட்டது.

என்னைப் பெற்றவள் அலுக்காது அடிக்கடி சொன்ன நிகழ்வுகள். மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டவை

( குறிப்பு. சில நாட்களுக்கு முன்னால் தினமணியில் ஓர் செய்தி.
ஆலயப்பிரவேசம் முன்னின்று நடத்திய வைத்தியநாதருக்கு ஓர் சிலை வைக்கப் பட்டிருந்தது. அவர்சுதந்திரப் போராட்ட தியாகி. அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமும் பல முறை சிறைக்குச் சென்றது. கையில் இருக்கும் காலணாக் காசைக் கூட நாட்டு விடுதலைப் போராட்டத்தில் செல்வழித்தவர். அரசியல் பேசி கோடிக் கணக்கில் சொத்து சேர்த்தவரல்ல.இன்று அவர் சிலை பறவைகளின் கழிப்பிடம். சிலைகளுக்கே இந்த கதிதானே என்று நினைப்பு தோன்றும். வருடத்திற்கு ஒரு நாளாவது மரியாதை கிடைக்கும். அந்த நினைவு நாளில் கூட கேட்பாரற்று கிடந்தது அந்தச் சிலை. ஒரு காங்கிரஸ்காரனும் கூட வந்து பார்க்கக் கூட இல்லை. தியாகத்திற்கு மதிப்புக் கொடுக்காதவர்களால் நாட்டிற்கு என்ன நல்லது செய்திட இயலும்?!. மனம் நொந்து போகின்றது. சரித்திர நிகழ்வின் பொழுது மதுரையில் இருந்தவள். எழுச்சியைப் பார்த்தவள். பிஞ்சு மனத்தில் நியாய விதையை ஊன்றிய நிகழ்ச்சி. சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமல்ல. )

(தொடரும்)

Wednesday, March 24, 2010

முன்னுரை

இது அவசியமா?

ஆம்! மிக மிக அவசியம்.

இதைப்படித்து முடிக்கும் பொழுது நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.இது பயன் தரும் ஓர் வலைப்பதிவு.

பல செய்திகளைப் பதிவு செய்ய இருக்கின்றேன். படிக்கப் படிக்க என்னைப் புரிந்து கொள்வீர்கள். என் அனுபவங்களை எழுதச் சொல்லி என்னை வற்புறுத்தியவர் பலர். சில காரணங்களால் அதனை நான் செய்யவில்லை. பின்னர் எழுதுவது கடினமாகவிட்டது. கணினியுகம் வந்து எனக்கு உதவிக்கரம் நீட்டியது. உங்கள் முன் நிற்கின்றேன்.

இதில் வரப்போகின்றவர்களில் பலரை உங்களுக்குத் தெரியும். நிகழ்வுகள் சொல்லப்பட வேண்டும். தனி நபர் சாடலைவிட, குறையுணர்ந்து களைய முயல வேண்டும். நடு நிலையுடன் பிரச்சனைகளை அணுகியுள்ளேன். என் எழுத்தில் என்னை, என் ஆதங்கத்தைப் பார்க்கலாம்.

இது சுய சரிதையில்லை. ஆனால் என்னை மையமாக வைத்து எழுதிக்கொண்டு செல்கின்றேன். நடந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாக வருகின்றேன். சுயநலமும் சுரண்டலும் பெருகி வரும் நாளில் இதன் ஓசை மெலிதாகவே கேட்கும். ஆனாலும் மவுனமாக இருந்தால் அது பெரும் குற்றம்.

இது எனக்கு ஒரு சத்திய சோதனை.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அனுபவங்கள் இருக்கின்றன. இப்பொழுது கணினி வந்துவிட்டதால் எண்ணங்களைப் பதிவு செய்ய முடிகின்றது. கடும் சூறாவளிக்கிடையில் ஓர் நம்பிக்கை வெளிச்சம் கொடுக்கின்றது.

என் பதிவுகளைப் பற்றிய சில செய்திகள்:

எண்ணங்கள் ஊர்வலம், நினைவலைகள்

இது ஒரு சமுதாய வரலாறு. எடுத்துக் கொண்ட ஆண்டுகள் எழுபத்தைந்தானாலும் உலகம் தோன்றிய நாளையும் தொடும், வரும் நாட்களையும் எட்டிப் பார்க்கும். எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் அளப்பெரியன. மற்றவர்கள் என்னைப் பார்த்து பிரமித்த நாட்களும் உண்டு. பொறாமைக் கண்களால் பொசுக்கப்பட்ட வினாடிகளும் உண்டு.

பிள்ளைப் பிராயத்தை எண்ணங்கள் ஊர்வலம் என்ற தலைப்பில் குழுமங்களில் எழுதினேன். பின்னர் பணிக்காலத்திலிருந்து அனுபவங்களை நினைவலைகளாக மாற்றி சென்னை ஆன்லைன்-ல் எழுத ஆரம்பித்துவிட்டேன். அங்கு எழுதி வெளிவந்தவைகளையே இங்கு பதிவு செய்கின்றேன். அவர்களுக்கு என் நன்றி

சீதாம்மாவின் குறிப்பேடு

தனி நபர் பற்றிய விமர்சனங்களை நினைவலைகளில் கொண்டு வரவில்லை.நான் சந்தித்துப் பழகியவர்களின் பட்டியலை எழுத முடியாது. காரணம் அதன் நீட்சி பயமுறுத்துகின்றது. இருப்பினும் தேர்ந்தெடுத்த பட்டியல் படி அவர்கள் உங்கள் முன் ஊர்வலமாக வருகை தருவார்கள். அந்த ஊர்வலத்தில் கலைஞரும் உண்டு, மக்கள் திலகமும் உண்டு.

முதலில் ஜெயகாந்தனை எடுத்து திண்னையில் எழுதி வருகின்றேன்.

அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது யாவரும் அறிந்ததே. எனக்கு அவர் நாற்பது ஆண்டுகள் நண்பர். அவருடைய நட்பும் எழுத்தும் எனக்குத் துணை நின்ற ஊன்றுகோலாகும். எனவே அவரை முதலில் காட்டுகின்றேன். மற்றவர்கள் “இவர்கள்"என்ற தலைப்பில் வருவார்கள்.

சுவாரஸ்யமான காட்சிகள் நிறைய இருக்கும். திண்ணையில் எழுதிவிட்டு இங்கே பதிவு செய்வேன்,. என் நன்றியைத் திண்ணைக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பல்சுவை

இதுதான் பலசரக்கு!

கதை, கவிதை, கட்டுரை, ஆய்வுகள், வரலாறு, தகவல்கள் என்று பல்முகம் காட்டப் போகும் பகுதி.

வாழ்வியல்

மனிதனுக்குத் தேவை அமைதி. விலைமதிக்க முடியாது. பிரச்சனைகள் சூழ்ந்த இந்த நாட்களில் அமைதி எப்படி பெறுவது? விலை கொடுத்து வாங்க முடியாது. அகம், புறம் என்ற இரண்டிலும் பிரச்சனைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவைகளைப் பேசி வழி காண முயலும் பகுதி இது.

ஆனால் இப்பகுதி கொஞ்ச நாட்கள் கழித்துத் தொடங்குகின்றேன்

"ஒரே நேரத்தில் இப்படி எழுதினால் எப்படி படிப்பது?"

இந்த கோபம் உங்களுக்கு நிச்சயம் வரப் போகின்றது. அதற்குத் தான் முதலிலேயே விளக்கங்கள் கொடுத்து மன்னிப்பு கேட்கின்றேன்

எனக்கு வயது 75 முடிந்துவிட்டது. விபத்துக்களால் இரு கைகளிலும் எலும்புமுறிவு. எஸ்கலெட்டரில் உருண்டதில் இடுப்புக்கும் கீழ் அடி. இத்தனை வலிகளுடன் எழுதுகின்றேன். ஓர் இலட்சியத்திற்காக எழுதுகின்றேன். என் கல்லறை தெரிகின்றது. ஏற்கனவே அதிகம் தாமதித்துவிட்டேன்.என் அனுபவங்கள், என் எண்ணங்கள் பதியப்பட்டே ஆக வேண்டும் என்று என் மனம் எனக்குக் கட்டளையிட்டு விட்டது.

எனக்கிருக்கும் காலம் குறைவாக இருப்பதால் எண்ணங்களைக் கொட்டுகின்றேன்.

வருங்கால சந்ததியினருக்கு, என் பேரப் பிள்ளைகளுக்கு நான் கொடுக்கும் ஓர் சிறு குறிப்பேடு. உண்மைகள் புரட்டப் படுகின்றன. சிலராவது விழிக்க மாட்டார்களா? அவர்களுக்கு இக்குறிப்பேடு சிறிது உதவும். நிகழும் மாற்றங்களைக் கண்டு மருண்டு போய் நிற்கும் பெரியவர்களுக்கும் மலரும் நினைவுகளைத் தட்டி எழுப்ப இது உதவும்.

உங்கள் அவசர யுகம் தெரியும். வலைப் பதிவுதானே. எங்கும் போய்விடாது. கொஞ்சம் கொஞ்சமாகப் படியுங்கள். ஆனால் அவசியம் ஒரு முறையவது எல்லோரும் படியுங்கள். இது இந்த முதியவளின் வேண்டுகோள். நிலவு மயக்கம் தரும். ஆனால் சூரிய ஒளி கூசும்.

உண்மை எப்பொழுதும் சுடும். நல்ல தண்ணீர் சுவைக்காது. ஆனால் உடம்புக்கு நல்லது. நாம் தொடர்ந்து பழகப் போகின்றோம். அப்பொழுது என் கதாகாலட்சேபம் வைத்துக் கொள்கின்றேன்.

மூட்டை சுமக்க வைப்பதற்கு மன்னிக்கவும்.

அறிமுகத்திற்கு வருகை தந்து எனக்கு ஊக்கம் அளித்த எல்லா அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

தொடர்களில் நாம் சந்திப்போம்.

Friday, March 19, 2010

அறிமுகம்

நான் யார்?

தேடலில் இன்னும் முற்றுபுள்ளி இட இயவில்லை. நீண்ட பயணத்தின் களைப்பு இப்பொழுது உணர்கின்றேன். உடலுக்குத் தான் களைப்பு தெரிகின்றதே தவிர உள்ளம் இன்னும் இளமைத் துள்ளலுடன் ஆரவாரிக்கின்றது!

சமீபத்தில் தான் கணினி கற்றுக் கொண்டேன்.

படித்த புத்தகங்கள் கணக்கிலடங்கா

பார்த்த இடங்கள் பல ஆயிரங்களைத் தாண்டும்.

குப்பத்திலிருந்து கோபுரம் வரைக்கும் போய் மனிதர்களைப் பார்த்தேன்.

என் நண்பர்களின் வட்டம் மிகப் பெரிது.

ஆடினேன்; பாடினேன்; நாட்கங்களில் நடித்தேன். மேடை என்னை அதற்குச் சொந்தக் காரியாக்கியது. என் மேடைப் பேச்சு மிகவும் சக்தி வாய்ந்தவை. பத்திரிகை உலகிலும் பங்கு கொண்டேன்.கோயிலைச் சுற்றுவது போல் சமுதயத்தைச் சுற்றி சுற்றி வந்தவள். அவர்களுக்குத் தீமை செய்ய எவர் முயன்றாலும் பொங்கி எழுந்தேன்.

ஆம்! நான் ஓர் போராளி!!

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவைகளைத் தூக்கி எறிந்தேன்

நிமிர்ந்த நன்நடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத ஞானச் செருக்கு-இத்தனையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தவன் பாரதி

குழந்தையாக இருக்கும் பொழுது காக்கா கதை ,நரிக்கதை சொல்லுவார்கள். எனக்கு நாட்டுக் கதை, காந்திக் கதை என்று சொன்னார்கள். ஐந்து வயதிலே சாதி என்றால் என்ன, படைத்த கடவுள் தப்பு பண்ணுவாரா என்று கேள்விகள் கேட்டேன். பதின்மூன்று வயதில் பெண் படிக்க வர வேண்டுமென்று உண்ணா விரதம் இருந்தேன். சுதந்திரப் போராட்டத்தில் நடந்த ஊர்வலங்களில் கவுன் போட்ட காலத்தில் கொடி பிடித்து ஊர்வலத்தின் முன் நடந்தேன்.

எழுத்துச் சிற்பிகளைச் சந்தித்திருக்கின்றேன். அரசியல் உச்சங்களையும் விட்டு வைக்கவில்லை. சமுதாய நலனுக்காகப் பாடுபட்ட பெண்மணிகளுடன் பழகியிருக்கின்றேன்.

என் பயணம் ஒரு த்ரில்லர் பயணம்

எனக்குள் ஓர் திமிர் உண்டு. பாரதி அவன் விரும்பிய புதுமைப் பென்ணாக என்னை ஆக்க முயன்றிருக்கின்றான். நானோ புரட்சிப் பெண்ணாக மாறினேன். பொல்லாதவள், அடக்க மில்லாதவள்,ராட்சசி, பொண்ணா இவள், ஒரு பேய் என்று பல பட்டங்கள் கிடைத்தன. டாக்டர் பட்டம்தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? நான் அஞ்சவில்லை!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

பாரதி எனக்காப் பாடினானோ?!

பெண்ணியம் பேச வந்துவிட்டாள் என்ற முகம் சுளிப்பா?

பெண்ணிடம் பரிவுண்டு. ஆனால் இலக்கு - ‘குடும்பம் “ என்ற கோட்பாடு சிதையக் கூடாது. தவறு எப்பக்கம் இருப்பினும் கண்டிக்கத் தயங்க மாட்டேன். ஆனால் இப்பக்குவம் பின்னால்தான் வந்தது. போலித்தனம் எங்கு காணினும் சுட்டுப் பொசுக்க எண்ணுவேன்.

மனித நேயம் என் மதம்.

சாதி, மதம், மொழி, நாடு எந்தத் தளைகளும் கிடையாது

யாதும் ஊரே யாவருங் கேளீர்.

இது எனக்கு வெறும் தமிழ்ப் பாட்டல்ல. என் வாழ்வே அது.

அரசியல் பிடிக்கும் ஆனால் அரசியல் கட்சிகளையல்ல.

கடவுளை நம்புவேன் ஆனால் புராணங்களையல்ல.

மூடப் பழக்கங்களைச் சாடுவேன்.

இலக்கியம் படித்தேன். இளங்கோவும் கம்பனும் என் ஆய்வுக்குரியவர்கள்

பல கதைகள் பத்திரிககளில் வந்தன. ஆனால் அதில் பயணம் தொடரவில்லை. ஆனால் படிப்பது இன்றும் தொடர்கின்றது.

எல்லாம் வரலாற்று வாயிலாக அறிய விரும்புவேன். மக்களை அணுகுவதில் உளவியல் எனக்குக் கை கொடுக்கும்.

பிறக்கும் பொழுது எவனும் கெட்டவனாகப் பிறப்பதில்லை. என்னால் எல்லோரையும் நேசிக்க முடியும். அவர்கள் செய்யும் தவறுகளைக் காணும் பொழுது வருந்துவேன், கண்டிக்கத் தயங்க மாட்டேன். ஆனால் என்னால் யாரையும் வெறுக்க முடியாது.

என்ன, இந்தப் பொண்புள்ளே லெக்சர் அடிக்கறா! சரியான bore ஆக இருக்குமோ?'

நிச்சயம் சலிக்காது. என்ன சொல்லப் போறேன்னு அடுத்து விளக்கமா எழுதறேன். ஒன்று மட்டும் உறுதி கூறுகின்றேன்

என் வலைப்பதிவு இன்றைய இளைஞர்களுக்கு சீதாம்மா வழங்கும் ஒரு குறிப்பேடு. அமைதி வேண்டாதவன் யார்? தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவன் யார்? ஆரோக்கிய சமுதாயத்தில் தான் அமைதி இல்லங்கள் இருக்க முடியும். இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும். இது நாம் வாழும் சமுதாயத்தின் சித்திரங்கள்.எனக்கு நிறைய இளைஞர்கள் நண்பர்கள். பதிவில் பவனி வருவதைப் பார்க்கலாம்.

பெரியவர்களும் மகிழலாம். அவர்களை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் ஊர்தி. நம்பிக்கை கொடுக்கும் ஆலயம்.

இந்த அறிமுகம் போதுமா?

இன்னும் கொஞ்சம் வேணுமா?