Tuesday, March 30, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன் 01


டாக்டர்.ஜெயகாந்தன்!



பட்டம் வழங்கப் போவதாக செய்தி மட்டும்தான் வந்திருந்தது. ஆனால் ஏனோ உடனே அவர் பெயருடன் டாக்டர் பட்டத்தை ஒட்டிப் பார்க்க மனம் விழைந்தது. டாக்டர் பட்டம் சிலருக்கு அளிக்கும் பொழுது அந்தப்பட்டத்தின் நிறம் மங்குவதுண்டு. ஆனால் ஜெயகாந்தனால் அந்தப்பட்டத்தின் ஒளி கூடியிருக்கின்றது.




நம் காலத்தில் வாழும் ஓர் ஒப்பற்ற சிந்தனையாளன். விமர்சனங்கள் அந்த வணங்காமுடியை வளைக்க முடியாது. தன் எண்ணங்களை எழுத்தில் ஆழப் புதைக்கும் ஓர் அற்புத மனிதன்

பள்ளிப் படிப்பு கூட முடிக்காதாவர்

அச்சகத்தில் அச்சு கோர்க்கும் சாதாரண தொழிலாளி

இவருக்குள் எப்படி இத்தனை சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன!.

வெளியில் சிதறிக் கிடப்பவை, சிந்தியவை இவர் பார்வைக்கு மட்டும் உயிரோட்டமாகத் தெரிகின்றதே!

மனிதர்களின் இதயங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி எங்கிருந்து பெற்றார்!?

இவரைப்பற்றி எழுத என் மனம் கட்டளையிட்டுவிட்டது. என் அன்புக்குரிய நண்பர். 40 ஆண்டுகால நண்பர். குடும்ப நண்பர்.

எத்தனை சந்திப்புகள்! நாங்கள் கழித்த பொழுதுகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை. ஒருகாலத்தில் எனக்குள் ஒரு ஆசை இருந்தது.

ஜான்சனைப்பற்றி பாஸ்வெல் எழுதியது போல் ஜெயகாந்தனின் உரையாடல்களைத் தொகுத்து எழுத விரும்பினேன். கையிலே டேப்ரிகார்டர் சகிதமாகச் சுற்றியிருக்க வேண்டும். அப்படியிருந்தாலும் பதிவு செய்திருக்க முடியாது. சிறு அசைவும் கூட அவரிடமிருந்து திடீரென்று வெள்ளமென வரும் வார்த்தைகளின் ஓட்டத்தைப் பாதித்திருக்கும்

அப்பொழுதே எழுதியிருந்தால் இந்த சமூகத்திற்கு ஓர் அரிய நூல் கிடைத்திருக்கும். இப்பொழுது என் நினைவுப் பெட்டகத்தில் தேடிப் பார்க்கும் வலுக் கூடக் குறைந்து விட்டது. இருப்பினும் நினைவில் இருப்பதையாவது பதிவு செய்ய வேண்டியது என் கடமையெனக் கருதுகின்றேன்

என் நட்பு வட்டம் மிகப் பெரியது. நான் சந்தித்தவர்களில் உரையாடலில் மிகச் சிறந்தவர் ஜெயகாந்தன்.

HE IS ONE OF THE BEST CONVERSATIONALISTS

என்னைப் பற்றி நன்குணர்ந்த, எங்கள் குடும்ப நண்பர் பேராசிரியர் அரசு அவர்கள் கூறியது.

"ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளர்

ஜெயகாந்தன் ஒரு பேச்சாளர்.

இந்த இரண்டினைப் பற்றியும் நிறைய எழுதிவிட்டார்கள். அவருடன் பேசும் பொழுது அவரிடம் கண்டவைகளை, உணர்ந்தவைகளை அவருடன் பழகியவர்கள் எழுத வேண்டும். சீதாம்மா, அவர் உங்களுக்கு நீண்ட கால நண்பர். நினைவில் இருப்பவைகளைப் பதிவு செய்யுங்கள். ஏற்கனவே நீங்கள் மீண்டும் எழுதத் தாமதித்துவிட்டீர்கள்.

தொடர்ந்து உங்களுடன் பழகிய பல அறிஞர்களைப் பற்றி எழுத வேண்டும். உங்கள் அனுபவங்களையும் பதிவு செய்யுங்கள்."

அரசு வேறு யாருமல்ல. வரலாற்று ஆய்வாளர் டாக்டர். ராசமாணிக்கனாரின் மகன். அவர்கள் குடும்பத்துடன் எனக்கிருக்கும் நட்பின் காலம் 52 ஆண்டுகள். அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

மதுரையில் பிறந்து, எட்டயபுரத்தில் வளர்ந்து, சமுதாயப் பணியில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலும்,, வெளி நாடுகளிலும் பல இடங்களில் வலம் வந்தவள். இன்றும் சமுதாய அக்கறையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவள். என் அறிமுகத்திற்குக் காரணம் ஜெயகாந்தனைப் பற்றி எழுத எனக்குக் கொஞ்சமாவது தகுதி இருக்கின்றதா என்பதை உணர்த்தவே இந்த சிறு அறிமுகம். நாங்கள் இருவரும் சமுதாயத்தைக் கூர்ந்து நோக்குகின்றவர்கள். அவர்களின் உணர்வை இருவரும் உணர்வோம். யதார்த்தமாகப் பார்ப்போம்.

அபூர்வமான சூழலில் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் தான் அன்று நிறைய பேசினேன், எங்களிடையே நட்பு வளர்ந்ததற்குக் காரணங்கள் எங்கள் சமுதாயச் சிந்தனைகளும், பாரதியிடம் கொண்டிருந்த ஈடுபாடும் தான்.பல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.. நாங்கள் இருவரும் அச்சமில்லாதவர்கள். வெளிப்படையாகப் பேசுபவர்கள். ஆடம்பரமில்லாதவர்கள்.

அவரின் பார்வை குடிசைகளில் விழுந்தது. ஏழைகள் அவரின் உறவினர்கள். மற்றவர்கள் கண்களுக்குக் குறைவாகப் பட்டவைகள், ஏளனமாகக் கருதப் பட்டவைகளின் உள்ளுக்குள் போய்ப் பார்த்து உண்மைகளை சத்தம் போட்டுக் கூறியவர்.

அவர் எண்ணங்கள் எழுத்தில் வந்தன.

நான் செயலில் இறங்கினேன்.

இந்த விஷயத்தில் நாங்கள் ஒரே பார்வை கொண்டிருந்தோம்.

கண்ணுக்குத் தெரியும் சாதனை அவருடையது.அவர் எண்ணங்கள் எழுத்துக்களில் வெளிப்பட்டன

என்னுடைய பணி வாழ்க்கையில் துன்பப்படுபவர்களின் துயர் துடைப்பது

மனங்களில் வரைந்த சித்திரம். .

என்னுடைய பணியில் எனக்குக் கிடைத்த குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. இரத்த சம்பந்த உறவுகளைவிட இதய சம்பந்த உறவுகளிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம். என் சாதனைகள் என்று கூறவில்லை. இறைவன் கொடுத்த வரம் இது.

கடந்த கால நிகழ்வுகளைமனம் அசை போடும் பொழுது ஓர் மகிழ்ச்சி.

ஜெயகாந்தனின் எழுத்துக்கள் என்றும் புதுமை மாறாது அதே சக்தியுடன் நம்மை ஆட்கொள்ளும்.

மேடைப் பேச்சுக்கள் அவ்வப்பொழுது விமர்சனங்களில் மாட்டிக்கொள்ளும். அவருடன் உரையாடல் மிக மிகச் சிறந்தது. அவர் திடீரென்று பேச ஆரம்பிப்பார். காட்டாற்று வெள்ளமென வரும் பேச்சைக் கேட்பவர்கள் திக்கு முக்காடி பிரமித்துப் போய் உட்கார்ந்திருப்போம்.

அவருடன் செல்லும் பொழுது பாதையில் அவர் பார்வை போகும் திசையை நாமும் பார்க்கத்தான் செய்வோம். அனால் வீடு வரவும் அவர் பேசுவதைக் கேட்டால் மலைத்துப்போய் நிற்போம்.

எல்லோரிடமும் அரசியல் பேச மாட்டார். பொதுவாக அவர் அரசியல் பேசுவதே குறைவு. எப்பொழுதும் அவர் நோக்கு, அக்கறை, ஆதங்கம் எல்லாம் சமுதாயத்தைச் சுற்றியே இருக்கும்.

அவருக்கு நண்பர்கள் அதிகம். அதைவிட ரசிகர்கள் அதிகம். ரசிகைகளைவிட ரசிகர்கள் அதிகம். ரசிக்கும் பெண்களும் அவரைத் தேடி வந்து அதிகம் பேசுவதில்லை. அவர் தங்கும் இடத்தில் அவர் பேச்சைக் கேட்கக் காத்திருக்க வேண்டும். மழையைக் கூட விஞ்ஞானத்தால் வரவழைக்க முடியும். ஆனால் இந்த முரட்டுக் குதிரை தானாகத்தான் நாட்டியமாடும். காத்திருக்க முடிந்தவர்களே அதைக் கண்டு களிக்க முடியும். பெண்களின் தயக்கத்திற்கு அதுவும் ஒரு காரணம்.

ஜெயகாந்தனைப் பற்றி எனக்குத் தெரிந்தவைகள், நான் கண்டவைகள், உணர்ந்தவைகள் எல்லாம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

புகைப்படத்துக்கு நன்றி: http://kapilanpathippagamcom.blogspot.com

6 comments:

Unknown said...

மேலுமதிக தகவல்களுக்காக காத்திருக்கிறேன்.
தொடருங்கள்.

Jerry Eshananda said...

அம்மா வணக்கம்,உங்கள் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சி அம்மா,தொடர்கிறோம்.எழுதுங்கள்.

மதுரை சரவணன் said...

நல்ல விமர்சனம். இன்னும் அதிகமாக அவரைப் பற்றி கருத்துக்கள் எதிர்பார்க்கிறோம். சுவரசியமாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Dr.Rudhran said...

well written.

பொன் மாலை பொழுது said...

தொடருங்கள்,
வருகிறோம்.!

மஞ்சூர் ராசா said...

நடக்கட்டும் நடக்கட்டும். வாழ்த்துகள்.