Friday, March 19, 2010

அறிமுகம்

நான் யார்?

தேடலில் இன்னும் முற்றுபுள்ளி இட இயவில்லை. நீண்ட பயணத்தின் களைப்பு இப்பொழுது உணர்கின்றேன். உடலுக்குத் தான் களைப்பு தெரிகின்றதே தவிர உள்ளம் இன்னும் இளமைத் துள்ளலுடன் ஆரவாரிக்கின்றது!

சமீபத்தில் தான் கணினி கற்றுக் கொண்டேன்.

படித்த புத்தகங்கள் கணக்கிலடங்கா

பார்த்த இடங்கள் பல ஆயிரங்களைத் தாண்டும்.

குப்பத்திலிருந்து கோபுரம் வரைக்கும் போய் மனிதர்களைப் பார்த்தேன்.

என் நண்பர்களின் வட்டம் மிகப் பெரிது.

ஆடினேன்; பாடினேன்; நாட்கங்களில் நடித்தேன். மேடை என்னை அதற்குச் சொந்தக் காரியாக்கியது. என் மேடைப் பேச்சு மிகவும் சக்தி வாய்ந்தவை. பத்திரிகை உலகிலும் பங்கு கொண்டேன்.கோயிலைச் சுற்றுவது போல் சமுதயத்தைச் சுற்றி சுற்றி வந்தவள். அவர்களுக்குத் தீமை செய்ய எவர் முயன்றாலும் பொங்கி எழுந்தேன்.

ஆம்! நான் ஓர் போராளி!!

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவைகளைத் தூக்கி எறிந்தேன்

நிமிர்ந்த நன்நடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத ஞானச் செருக்கு-இத்தனையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தவன் பாரதி

குழந்தையாக இருக்கும் பொழுது காக்கா கதை ,நரிக்கதை சொல்லுவார்கள். எனக்கு நாட்டுக் கதை, காந்திக் கதை என்று சொன்னார்கள். ஐந்து வயதிலே சாதி என்றால் என்ன, படைத்த கடவுள் தப்பு பண்ணுவாரா என்று கேள்விகள் கேட்டேன். பதின்மூன்று வயதில் பெண் படிக்க வர வேண்டுமென்று உண்ணா விரதம் இருந்தேன். சுதந்திரப் போராட்டத்தில் நடந்த ஊர்வலங்களில் கவுன் போட்ட காலத்தில் கொடி பிடித்து ஊர்வலத்தின் முன் நடந்தேன்.

எழுத்துச் சிற்பிகளைச் சந்தித்திருக்கின்றேன். அரசியல் உச்சங்களையும் விட்டு வைக்கவில்லை. சமுதாய நலனுக்காகப் பாடுபட்ட பெண்மணிகளுடன் பழகியிருக்கின்றேன்.

என் பயணம் ஒரு த்ரில்லர் பயணம்

எனக்குள் ஓர் திமிர் உண்டு. பாரதி அவன் விரும்பிய புதுமைப் பென்ணாக என்னை ஆக்க முயன்றிருக்கின்றான். நானோ புரட்சிப் பெண்ணாக மாறினேன். பொல்லாதவள், அடக்க மில்லாதவள்,ராட்சசி, பொண்ணா இவள், ஒரு பேய் என்று பல பட்டங்கள் கிடைத்தன. டாக்டர் பட்டம்தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? நான் அஞ்சவில்லை!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

பாரதி எனக்காப் பாடினானோ?!

பெண்ணியம் பேச வந்துவிட்டாள் என்ற முகம் சுளிப்பா?

பெண்ணிடம் பரிவுண்டு. ஆனால் இலக்கு - ‘குடும்பம் “ என்ற கோட்பாடு சிதையக் கூடாது. தவறு எப்பக்கம் இருப்பினும் கண்டிக்கத் தயங்க மாட்டேன். ஆனால் இப்பக்குவம் பின்னால்தான் வந்தது. போலித்தனம் எங்கு காணினும் சுட்டுப் பொசுக்க எண்ணுவேன்.

மனித நேயம் என் மதம்.

சாதி, மதம், மொழி, நாடு எந்தத் தளைகளும் கிடையாது

யாதும் ஊரே யாவருங் கேளீர்.

இது எனக்கு வெறும் தமிழ்ப் பாட்டல்ல. என் வாழ்வே அது.

அரசியல் பிடிக்கும் ஆனால் அரசியல் கட்சிகளையல்ல.

கடவுளை நம்புவேன் ஆனால் புராணங்களையல்ல.

மூடப் பழக்கங்களைச் சாடுவேன்.

இலக்கியம் படித்தேன். இளங்கோவும் கம்பனும் என் ஆய்வுக்குரியவர்கள்

பல கதைகள் பத்திரிககளில் வந்தன. ஆனால் அதில் பயணம் தொடரவில்லை. ஆனால் படிப்பது இன்றும் தொடர்கின்றது.

எல்லாம் வரலாற்று வாயிலாக அறிய விரும்புவேன். மக்களை அணுகுவதில் உளவியல் எனக்குக் கை கொடுக்கும்.

பிறக்கும் பொழுது எவனும் கெட்டவனாகப் பிறப்பதில்லை. என்னால் எல்லோரையும் நேசிக்க முடியும். அவர்கள் செய்யும் தவறுகளைக் காணும் பொழுது வருந்துவேன், கண்டிக்கத் தயங்க மாட்டேன். ஆனால் என்னால் யாரையும் வெறுக்க முடியாது.

என்ன, இந்தப் பொண்புள்ளே லெக்சர் அடிக்கறா! சரியான bore ஆக இருக்குமோ?'

நிச்சயம் சலிக்காது. என்ன சொல்லப் போறேன்னு அடுத்து விளக்கமா எழுதறேன். ஒன்று மட்டும் உறுதி கூறுகின்றேன்

என் வலைப்பதிவு இன்றைய இளைஞர்களுக்கு சீதாம்மா வழங்கும் ஒரு குறிப்பேடு. அமைதி வேண்டாதவன் யார்? தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவன் யார்? ஆரோக்கிய சமுதாயத்தில் தான் அமைதி இல்லங்கள் இருக்க முடியும். இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும். இது நாம் வாழும் சமுதாயத்தின் சித்திரங்கள்.எனக்கு நிறைய இளைஞர்கள் நண்பர்கள். பதிவில் பவனி வருவதைப் பார்க்கலாம்.

பெரியவர்களும் மகிழலாம். அவர்களை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் ஊர்தி. நம்பிக்கை கொடுக்கும் ஆலயம்.

இந்த அறிமுகம் போதுமா?

இன்னும் கொஞ்சம் வேணுமா?

12 comments:

பிரபாகர் said...

//இந்த அறிமுகம் போதுமா?

இன்னும் கொஞ்சம் வேணுமா?
//
இன்னும், இன்னும்.... நிறைய வேண்டும் அம்மா!

பிரபாகர்.

பிரபாகர் said...

வணக்கம். எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பது பெரும் மகிழ்ச்சியினைத் தருகிறது...நிறைய எழுதுங்கள் அம்மா!

பிரபாகர்...

March 19, 201

முனைவர் அண்ணாகண்ணன் said...

வாழ்த்துகள் அம்மா. தொடர்ந்து எழுதுங்கள்.

Albert Fernando said...

தமிழ் கூறும் நல் உலகில், மிகப்பரந்த அனுபவங்களைக் கொண்ட ஒரு அனுபவ பூர்வ எழுத்தாளர்
உலா துவங்கியுள்ளது,நல்ல முயற்சி. தொடருங்கள் உங்கள்
எழுத்துப்பணியை.
ஆல்பர்ட்,
விச்கான்சின்,அமெரிக்கா.

தமிழ். சரவணன் said...

அன்புள்ள அம்மாவிற்கு,

வ​லைபூ ​தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். எங்கள் ஆ​​சை​யை நி​றை​​​வேற்றியதற்கு நன்றி. தங்கள் அனுபவங்கள் அறிவு​ரைகள் எங்களுக்கு ​பொக்கிஷங்கள்! ​தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி

Unknown said...

My best wishes amma.Write more.I will read it.

settaikkaran said...

அம்மா என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைக் கேட்க ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

விழியன் said...

வாழ்த்துக்கள் அம்மா. நிறைய எழுதி வையுங்கள். யாருக்கு தெரியும் இது ஒரு பெரிய கல்வெட்டாக மாறலாம்.

K.R.அதியமான் said...

Anbulla Amma,

Welcome to the blogging community.
Best Wishes.

Anbudan
Athiyaman

SUDAR OLI said...

அம்மா,
வலைப்பூவிற்கு பிள்ளையார்சுழி போட்டு விட்டீர்கள். அருவி போல் கொட்டுமா அல்லது ஆற்று வெள்ளம் போல் பெருகி வருமா? எதுவானாலும் காத்திருக்கிறோம்

ஆர்.வேணுகோபாலன் said...

சீதாம்மா, உங்களது பரந்த அனுபவங்களும், விசாலமான சிந்தனைகளும் அனைவருக்கும் பயனளிக்கும் கருத்துப்பெட்டகமாய்த் திகழும் என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை. உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்! நன்றி!!

Pushparagam said...

ஆக்கபூர்வமான எழுத்தின் வலிமை பெரிது.
உங்களின் அனுபவம் (இனிமை, கசப்பு நிறைந்ததாகவும் இருக்ககூடும்)
மற்றவர்களை சிந்திக்க வைக்கும்.
ராகவன் தம்பதியர்.