Wednesday, March 24, 2010

முன்னுரை

இது அவசியமா?

ஆம்! மிக மிக அவசியம்.

இதைப்படித்து முடிக்கும் பொழுது நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.



இது பயன் தரும் ஓர் வலைப்பதிவு.

பல செய்திகளைப் பதிவு செய்ய இருக்கின்றேன். படிக்கப் படிக்க என்னைப் புரிந்து கொள்வீர்கள். என் அனுபவங்களை எழுதச் சொல்லி என்னை வற்புறுத்தியவர் பலர். சில காரணங்களால் அதனை நான் செய்யவில்லை. பின்னர் எழுதுவது கடினமாகவிட்டது. கணினியுகம் வந்து எனக்கு உதவிக்கரம் நீட்டியது. உங்கள் முன் நிற்கின்றேன்.

இதில் வரப்போகின்றவர்களில் பலரை உங்களுக்குத் தெரியும். நிகழ்வுகள் சொல்லப்பட வேண்டும். தனி நபர் சாடலைவிட, குறையுணர்ந்து களைய முயல வேண்டும். நடு நிலையுடன் பிரச்சனைகளை அணுகியுள்ளேன். என் எழுத்தில் என்னை, என் ஆதங்கத்தைப் பார்க்கலாம்.

இது சுய சரிதையில்லை. ஆனால் என்னை மையமாக வைத்து எழுதிக்கொண்டு செல்கின்றேன். நடந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாக வருகின்றேன். சுயநலமும் சுரண்டலும் பெருகி வரும் நாளில் இதன் ஓசை மெலிதாகவே கேட்கும். ஆனாலும் மவுனமாக இருந்தால் அது பெரும் குற்றம்.

இது எனக்கு ஒரு சத்திய சோதனை.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அனுபவங்கள் இருக்கின்றன. இப்பொழுது கணினி வந்துவிட்டதால் எண்ணங்களைப் பதிவு செய்ய முடிகின்றது. கடும் சூறாவளிக்கிடையில் ஓர் நம்பிக்கை வெளிச்சம் கொடுக்கின்றது.

என் பதிவுகளைப் பற்றிய சில செய்திகள்:

எண்ணங்கள் ஊர்வலம், நினைவலைகள்

இது ஒரு சமுதாய வரலாறு. எடுத்துக் கொண்ட ஆண்டுகள் எழுபத்தைந்தானாலும் உலகம் தோன்றிய நாளையும் தொடும், வரும் நாட்களையும் எட்டிப் பார்க்கும். எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் அளப்பெரியன. மற்றவர்கள் என்னைப் பார்த்து பிரமித்த நாட்களும் உண்டு. பொறாமைக் கண்களால் பொசுக்கப்பட்ட வினாடிகளும் உண்டு.

பிள்ளைப் பிராயத்தை எண்ணங்கள் ஊர்வலம் என்ற தலைப்பில் குழுமங்களில் எழுதினேன். பின்னர் பணிக்காலத்திலிருந்து அனுபவங்களை நினைவலைகளாக மாற்றி சென்னை ஆன்லைன்-ல் எழுத ஆரம்பித்துவிட்டேன். அங்கு எழுதி வெளிவந்தவைகளையே இங்கு பதிவு செய்கின்றேன். அவர்களுக்கு என் நன்றி

சீதாம்மாவின் குறிப்பேடு

தனி நபர் பற்றிய விமர்சனங்களை நினைவலைகளில் கொண்டு வரவில்லை.நான் சந்தித்துப் பழகியவர்களின் பட்டியலை எழுத முடியாது. காரணம் அதன் நீட்சி பயமுறுத்துகின்றது. இருப்பினும் தேர்ந்தெடுத்த பட்டியல் படி அவர்கள் உங்கள் முன் ஊர்வலமாக வருகை தருவார்கள். அந்த ஊர்வலத்தில் கலைஞரும் உண்டு, மக்கள் திலகமும் உண்டு.

முதலில் ஜெயகாந்தனை எடுத்து திண்னையில் எழுதி வருகின்றேன்.

அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது யாவரும் அறிந்ததே. எனக்கு அவர் நாற்பது ஆண்டுகள் நண்பர். அவருடைய நட்பும் எழுத்தும் எனக்குத் துணை நின்ற ஊன்றுகோலாகும். எனவே அவரை முதலில் காட்டுகின்றேன். மற்றவர்கள் “இவர்கள்"என்ற தலைப்பில் வருவார்கள்.

சுவாரஸ்யமான காட்சிகள் நிறைய இருக்கும். திண்ணையில் எழுதிவிட்டு இங்கே பதிவு செய்வேன்,. என் நன்றியைத் திண்ணைக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பல்சுவை

இதுதான் பலசரக்கு!

கதை, கவிதை, கட்டுரை, ஆய்வுகள், வரலாறு, தகவல்கள் என்று பல்முகம் காட்டப் போகும் பகுதி.

வாழ்வியல்

மனிதனுக்குத் தேவை அமைதி. விலைமதிக்க முடியாது. பிரச்சனைகள் சூழ்ந்த இந்த நாட்களில் அமைதி எப்படி பெறுவது? விலை கொடுத்து வாங்க முடியாது. அகம், புறம் என்ற இரண்டிலும் பிரச்சனைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவைகளைப் பேசி வழி காண முயலும் பகுதி இது.

ஆனால் இப்பகுதி கொஞ்ச நாட்கள் கழித்துத் தொடங்குகின்றேன்

"ஒரே நேரத்தில் இப்படி எழுதினால் எப்படி படிப்பது?"

இந்த கோபம் உங்களுக்கு நிச்சயம் வரப் போகின்றது. அதற்குத் தான் முதலிலேயே விளக்கங்கள் கொடுத்து மன்னிப்பு கேட்கின்றேன்

எனக்கு வயது 75 முடிந்துவிட்டது. விபத்துக்களால் இரு கைகளிலும் எலும்புமுறிவு. எஸ்கலெட்டரில் உருண்டதில் இடுப்புக்கும் கீழ் அடி. இத்தனை வலிகளுடன் எழுதுகின்றேன். ஓர் இலட்சியத்திற்காக எழுதுகின்றேன். என் கல்லறை தெரிகின்றது. ஏற்கனவே அதிகம் தாமதித்துவிட்டேன்.என் அனுபவங்கள், என் எண்ணங்கள் பதியப்பட்டே ஆக வேண்டும் என்று என் மனம் எனக்குக் கட்டளையிட்டு விட்டது.

எனக்கிருக்கும் காலம் குறைவாக இருப்பதால் எண்ணங்களைக் கொட்டுகின்றேன்.

வருங்கால சந்ததியினருக்கு, என் பேரப் பிள்ளைகளுக்கு நான் கொடுக்கும் ஓர் சிறு குறிப்பேடு. உண்மைகள் புரட்டப் படுகின்றன. சிலராவது விழிக்க மாட்டார்களா? அவர்களுக்கு இக்குறிப்பேடு சிறிது உதவும். நிகழும் மாற்றங்களைக் கண்டு மருண்டு போய் நிற்கும் பெரியவர்களுக்கும் மலரும் நினைவுகளைத் தட்டி எழுப்ப இது உதவும்.

உங்கள் அவசர யுகம் தெரியும். வலைப் பதிவுதானே. எங்கும் போய்விடாது. கொஞ்சம் கொஞ்சமாகப் படியுங்கள். ஆனால் அவசியம் ஒரு முறையவது எல்லோரும் படியுங்கள். இது இந்த முதியவளின் வேண்டுகோள். நிலவு மயக்கம் தரும். ஆனால் சூரிய ஒளி கூசும்.

உண்மை எப்பொழுதும் சுடும். நல்ல தண்ணீர் சுவைக்காது. ஆனால் உடம்புக்கு நல்லது. நாம் தொடர்ந்து பழகப் போகின்றோம். அப்பொழுது என் கதாகாலட்சேபம் வைத்துக் கொள்கின்றேன்.

மூட்டை சுமக்க வைப்பதற்கு மன்னிக்கவும்.

அறிமுகத்திற்கு வருகை தந்து எனக்கு ஊக்கம் அளித்த எல்லா அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

தொடர்களில் நாம் சந்திப்போம்.

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அனுபவக்குறிப்புகள் என்பது பதியப்படவேண்டியதே.. நன்றி தொடர்கிறோம்.

Radhakrishnan said...

//எனக்கு வயது 75 முடிந்துவிட்டது. விபத்துக்களால் இரு கைகளிலும் எலும்புமுறிவு. எஸ்கலெட்டரில் உருண்டதில் இடுப்புக்கும் கீழ் அடி. இத்தனை வலிகளுடன் எழுதுகின்றேன். ஓர் இலட்சியத்திற்காக எழுதுகின்றேன். என் கல்லறை தெரிகின்றது. ஏற்கனவே அதிகம் தாமதித்துவிட்டேன்.என் அனுபவங்கள், என் எண்ணங்கள் பதியப்பட்டே ஆக வேண்டும் என்று என் மனம் எனக்குக் கட்டளையிட்டு விட்டது.//

முயற்சிக்கு வாழ்த்துகள்.

தமிழ். சரவணன் said...

//மூட்டை சுமக்க வைப்பதற்கு மன்னிக்கவும்//

தங்கள் எழுத்து எங்களுக்கு ​பொக்கிஷங்கள். பணம் ஒன்​றே குறிக்​​கோளாய் அ​ழைந்து க​டைசியில் ஒன்றும் மிச்சாமல் ​​வேடிக்​கை மனித​ர்க​ளைப்​போல் ​செத்துமடிகன்​றோம்.. எங்களு​டைய பயம், அறியா​மை மற்றும் நமக்​கேதற்கு வம்பு இதுதான் தற்​பொழுது ​​பொட்டி ​பொட்டியாய் பணம் தின்று பி​ழைக்கும் குள்ளநரிகளுக்கு மூலதனம்..
இ​வைகள் க​​லைய ​தொடரட்டும தங்கள் அனுபவ எழுத்துக்கள்



வாழ்க வளமுடன்!

அன்புடன்,

தமிழ். சரவணன்

arvind said...

it is not a burden..
its a sharing..