Saturday, July 24, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 15

மணி பெயருக்கேற்றவன்;நேரத்தின் அருமை தெரிந்து என்னை மெதுவாக சுய நிலைக்குக்கொண்டு வந்தான். விண்ணிலே சஞ்சாரம் செய்த ஜெயகாந்தனும் மண்ணுக்கு வந்துவிட்டார். நேரம் கருதி விரைவாகச் சாப்பிட்டுவிட்டு கிராமத்தை நோக்கி புறப்பட்டுவிட்டோம். இப்பொழுது கிராமத்துப் பிரச்னைகளைப் பற்றி பேசினோம்.

நாங்கள் செல்ல வேண்டிய கிராமமும் வந்தது!

மாலை நேரம்; மஞ்சள் வெய்யில்; நல்ல இதமான காற்று. ஊரின் நுழை வாயிலில் ஒரு மண்மேடு இருந்தது. அங்கே இரண்டு பெரியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளிக் காரை நிறுத்தினோம். ஜெயகாந்தன் மெதுவாக நடந்து சென்று அந்தப் பெரியவர்கள் பக்கம் போனார். இவர் வருவதைப் பார்த்த பெரியவர்கள் எழுந்திருக்க முயன்றனர். உடனே ஜெயகாந்தன் “உட்காருங்கோ” என்று கூறிவிட்டு அவரும் அவர்களுடன் மண் மேட்டில் உட்கார்ந்துவிட்டார்.

“என்னய்யா எங்க ஊர்ப்பக்கம், ஏதாவது விஷேசுமுங்களா?”

“இல்லே இல்லே. அந்தம்மா பெண்கள் குழந்தைகள் நலத்தில் வேலை பாக்கறவங்க. தடுப்பூசியெல்லாம் குழந்தைகளுக்குப் போடறாங்களாண்ணு கேட்க வந்திருக்காங்க.”

ஜெயகாந்தன் சாமர்த்தியமாக என் பணியைக் காரணம் காட்டிவிட்டார்

“பொம்புள்ளங்க வர்ர நேரம் தான்”

ஆமாம் கூலி வேலை முடித்து கிராமத்து ஜனங்கள் திரும்ப ஆரம்பித் திருந்தனர் (அதற்காகத்தானே இந்த நேரமாகப் பார்த்து வந்தது) காலித் தூக்குச்சட்டியைத் தோளில் தொங்கவிட்டு, சுள்ளிகள் கட்டைத் தலையில் சுமந்து கொண்டு வரும் பெண்களைப் பார்த்தேன்.

நான் ஜெயகாந்தனை விடுத்து மெதுவாக அவர்கள் பின்னால் போக ஆரம்பித்தேன். 25 ஆண்டுகள் அனுபவம். என்னால் மிகவும் எளிதாகப் பழகிட முடியும். உழைப்பிலே அசதி இருந்தாலும் அவர்களுடன் கூட நடந்த என்னிடமும் சரளமாகப் பேசிக் கொண்டு சென்றனர்.

மணியன், சாவி, பகீரதன் இன்னும் பலருடன் கிராமங்களுக்குச் சென்றிருக்கின்றேன். காருக்கருகில் நிற்கும் தோரணையில் மற்றவர்கள் ஒதுங்கி நின்றே பேசுவர். ஆனால் ஜெயகாந்தனோ அவர்களில் ஒருவராக உடன் உட்கார்ந்துவிடுவார். அவர்கள் கொடுப்பதை முக மலர்ச்சியுடன் வாங்கிச் சாப்பிடுவார். அங்கே எந்த வேற்றுமையும் இருக்காது. அவருடன் சென்ற அனுபவங்களை நான் நேரில் பார்த்தவள்.

போகும் பாதையிலும் கண்ணில் படுவதை உடனே மனத்தில் படம் பிடித்துவைத்துக் கொள்வார். இது அவர் முயற்சியல்ல. அவர் இயல்பு . அந்த ஒன்றுதலினால்தான் உயிர்ப்புள்ள உரையாடல்களை, காட்சிகளைக் காட்ட முடிகின்றது.

இவர் எழுத்துக்கு ஆய்வுகள் தேவையில்லை. மனித மனத்துடன் இணைய வேண்டும். அனுபங்களில் உளவியல் தானே புரிந்துவிடும்.

ஜெயகாந்தனுடன் பழகியவர்கள் அவரைப்பற்றி எழுத வேண்டும். ஆனால் எழுதுபவர்கள் சரியான புரிதல்தன்மை கொண்டவராக இருத்தல் அவசியம்.

ஜெயகாந்தன் பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சில வீடுகளுக்குச் சென்று பேசிவிட்டு அவர்கள் சமையல் முடிக்கவும் பேசலாம் என்று கூறிவிட்டு மண் மேட்டுப்பக்கம் வந்தேன். அதே நேரம் பஸ்ஸிலிருந்து இறங்கிய இருவர் அங்கே வந்தனர். ஜெயகாந்தனைப் பார்க்கவும் ,”அய்யா, நீங்களா?” என்று ஜெயகாந்தனிடம் கேட்டுவிட்டு அவ்வூர்ப் பெரியவர்களிடம், “இந்த அய்யா கதை எழுதறவரு. அதுவும் நம்ம ஏழை ஜனங்களைப் பத்தி அதிகமாக எழுதறவரு “ என்றார்கள்.

(ஜெயகாந்தன் கதை படித்திருந்தவர் ஒருவர் வந்தது மிகவும் உபயோகமாக இருந்தது. வாலிபர்களையும் வசீகரம் செய்யும் ஓர் எழுத்தாளர் )

“ஓ, அப்படியா, சந்தோஷம் அய்யா. கொஞ்ச நாளா பத்திரிகைக்காரங்க தொல்லை அதிகமா போச்சு. அதான் ஊருக்குப் புதுசா வர்ரவங்ககிட்டே பேசக் கூட யோசிக்க வேண்டியிருக்கு.”

"பேசும்பொழுது உங்க தயக்கத்திலேருந்து புரிஞ்சுகிட்டேன்.அந்தம்மா பேசிட்டு வரவும் நாங்க கிளம்பிடறோம். உங்களுக்குக் கஷ்டம் வேண்டாம்."

"அய்யோ, அப்படி இல்லேங்க. அதுவும் எங்க மேலே இரக்கப் பட்டு, எங்க கஷ்டத்தை எழுதறவரை அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவோமா?"

எப்படியோ பேச்சு சரளமாக ஆரம்பித்துவிட்டது. மனம் விட்டுப் பேச ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நடந்த கதையையும் கூறிவிட்டனர். இளைஞர்களின் ஆத்திரம் புரிந்தது

கலந்துரையாடலின் சுருக்கம் இதுதான்.

அந்த ஊரில் தாழத்தப்பட்ட வகுப்பினர் மட்டும் வாழ்ந்து கொண்டி ருந்தனர். சில இளைஞர்கள் வெளியூர் சென்று படித்து இப்பொழுது வெளியூரில் வேலையும் பார்க்க ஆரம்பித்திருந்தனர். அவர்களில் ஒருவன் கொஞ்ச தூரத்தில் இருந்த ஊரில், உயர்குலப் பெண் ஒருத்தியைக் காதலித்துவிட்டான். மறைமுகச் சந்திப்புகள் தொடர்ந்தன. கொஞ்சம் எல்லை மீறிப் பழகியதில் அந்தப் பெண் கர்ப்பவதியாகிவிட்டாள். (இந்தச் செய்தி மட்டும் நான் பெண்களிடம் அறிந்தது.)

அந்த ஊர்க்காரர்களுக்கு இவர்கள் காதல் விஷயம் தெரிந்ததவுடன் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. பையனைப் பிடித்து கொன்றுவிடத் துடித்தனர். சூழலைப் புரிந்து கொண்ட இளைஞன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். ஆனால் அந்த ஊர்க்காரர்கள் கிராமத்தில் வைத்துக் கொண்டு மறைக்கின்றார்கள் என நினைத்து கூட்டமாக வந்து, “அவனை எங்களிடம் கொடுக்க வேண்டும். அல்லது ஊரையே கொளுத்தி விடுவோம்.“ என்று கூச்சலிட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர். இதனால் மிரட்டலும் அடிதடி கலாட்டாவும் தொடர ஆரம்பித்திருக்கின்றது.

செய்தி வெளியே கசியவும் பிரச்சனை பெரிதாகப் பேசப்பட ஆரம்பித்துவிட்டது.

சம்பந்தப்பட்டவன் கிராமத்தில் இல்லை. செய்தியும் வெளிவந்துவிட்டது. விஷயத்தை ஆறப்போட்டுச் செய்யலாம் என்று முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள் பிரச்சனை பெரிதாகும் என நினைத்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த வழிகளைச் செய்து ஊரை அடக்கி வைத்துவிட்டனர். இப்பொழுது இதுவரை எங்கும் பிரச்சனை இல்லை. ஒரு காதல், இரு ஊர்களின் சாதிச் சண்டையானது. நீறு பூத்த நெருப்பாக அவ்வப்பொழுது புகைந்து கொண்டிருக்கின்றது. யாரும் ஊதிவிடாமல் இருந்தால் புகை அடங்கிவிடும்

ஜெயகாந்தன் உட்கார்ந்திருந்த இடத்திற்குக் கொஞ்சம் தள்ளி நான் உட்கார்ந்திருந்தேன். அவருக்கு முதலில் ஓர் குவளையில் டீகொண்டு வந்து கொடுத்தார்கள். பின்னால் ஓர் கலயத்தில் சுடு கஞ்சியும் வந்தது. அவரும் மறுக்காமல் அவர்கள் கொடுப்பதை வாங்கி ருசித்துச் சாப்பிட்டார்.

ஜெயகாந்தன் ஏழைகளுடன் கலந்துறைபவர். அவர்களில் ஒருவராக ஆகிவிடுவதால் எந்த தயக்கமும் இல்லாமல் அவர்கள் அவருடன் மனம்விட்டுப் பேசுவதும் சிரிப்பதுவும் இயல்பாகின்றது. குடிசைகளுக்குள் போவதில் அவர் தயங்கியதே இல்லை.

விளம்பரத்திற்காக ஏழைகளைப் பார்க்கப் போகவில்லை.அதனால்தான் அவர் கதைகளில் பிச்சைக்காரன், இடுகாட்டுப் புலையன், கசாப்புக் கடைக்காரர் போன்றவர்களை அப்படியே காட்ட முடிகின்றது.

கற்பனைக் குதிரையில் போய்க் கொண்டிருந்த என்னை அருகில் நடந்த ஒரு பேச்சு இழுத்துவிட்டது.

இளைஞன் ஒருவன் ஆத்திரத்துடன் முணங்கிக் கொண்டிருந்தான். அருகில் இருந்த ஒரு பெரியவர் அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வந்தார்.

"மனுஷன் புறக்கும் போது சாதி கிடையாதுன்னு சொல்லுவாங்க. எப்படியோ வந்தாச்சு. அப்போக் கூட இப்படி சண்டை வல்லே. இப்போ நலலது செய்யறதா நினைச்சு தப்பு பண்ணிகிட்டு வராங்க. அதனாலே சாதிச் சண்டை இப்போ அதிகமாய்டுத்து."

"நாம சும்மா இருக்கறதா? சாகறது நல்லதாப்பா?அவங்க பண பலம், ஆள்பலம் எல்லாம் உள்ளவங்க. நாமதான் நிறைய சாவோம். நீங்க நல்லா படிங்க. படிப்பு ஒண்ணுதான் நம்ம கஷ்டத்தைப் போக்கும். பள்ளிக் கூடத்திலே ஒண்ணத்தானே உட்காருதீங்க. எல்லாம் காலப் போக்கில் சரியாகும். கட்சிக்காரங்க விளையாட்டுலே மனுஷன் சாகக் கூடாதுப்பா."

அவர் படித்தவராகத் தெரியவில்லை. படிப்பைவிட அனுபவங்கள் மனிதனுக்கு எப்படி தெளிவைக் கொடுக்கின்றது!. கிராமத்து மண்மேட்டில் உபதேசப் பொன் மொழிகள்!

மீண்டும் ஜெயகாந்தனின் கதையில் வரும் ஓர் காட்சி மனக் கண்முன் தோன்றியது.

பிளாட்பாரத்தில் உட்கார்ந்து மாந்திரிகத் தொழில் செய்யும் ஓர் பாபா, ஒரு கிராமத்தானிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கும் காட்சி.

மந்திரேம் மாயம் எல்லாம் ஒருபக்கம் தள்ளுய்யா. வாக் ஸுத்தம் ஓணும். சுத்தமான வாக்குதான் மந்திரம். மனஸ் சுத்தமா இருக்கணும். கெட்ட நெனப்பு, இவனே அயிச்சுடணும், அவனெ ஒழிச்சுடணூம்னு நெனக்கிற மனச் இருக்கே - அதான்யா ஷைத்தான்.ஷைத்தான் இங்கே கீறான்யா இங்கே.! வேறே எங்கே கீறான்?ஆண்டவனும் இங்கேதான் கீறான்.நல்ல நெனப்பூ ஆண்டவன். கெட்ட நெனப்பூ ஷைத்தான்", என்று மார்பில் தட்டி நெஞ்சை உணர்த்துகிறார்.

“துட்டுக்கோசரம் வவுத்துக்காக அக்குரமம் பண்றது நம்ம தொயில் இல்லே”

தன் தொழில்பற்றி விபரம் கூறிவிட்டு மேலும் தொடர்கிறார்

"இன்னொருத்தனுக்கு கெடுதி நெனக்காதே.நீ கெட்டுப்பூடுவே. நல்லதே நெனை.ஆண்டவனைத் தியானம் பண்ணு. எதுக்கோசரம் ஆண்டவனைத் தியானம் பண்ணூ சொல்றேன். ஆண்டவனுக்கு அதினாலே லாபம் வரூது இல்லேடா, இல்லே.உனுக்குத்தான் லாபம் வருது. கெட்ட விசயங்களை நெனக்கறதுக்கு நீ யோசனை பண்ணமாட்டே.ஆண்டவனை நெனச்சுக் கிடான்னா மேலேயும் கீயேய்யும் பாத்துக்கினு யோசனை பண்றே. எல்லாத்துக்கும் நல்ல மனஸ் ஓணும்."

ஞானங்களும் நல்லுபதேசங்களும் வாழ்க்கையின் எல்லா வழிகளிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மகான்களையும் வேத வித்துக்களையும் நீதி நூல்களையும் நாடிச்சென்று ஞானம் பெற எல்லா மனிதர்க்கும் முடிவதில்லை. எனவே இந்த மாதிரி மனிதர்களின் மூலம், அது மூர்மார்க்கட் நடைபாதையில் கூட வினியோகிக்கப்படுகிறது.

"இந்த பாபா ஒரு ஞானவான் தான் “

72ல் ஜெயகாந்தன் எழுதிய “நடைபாதையில் ஞானோபதேசம் “ கதையில் சில வரிகள் இப்போது நினைவில் வந்து மோதின. கிராமத்து மண்மேட்டிலும் உபதேசங்கள் வினியோகிக்கப்படும் வித்தை கண்டேன். இது காலத்திற்கேற்ற புது உபதேசம்

காரில் திரும்பும் பொழுது எங்களால் பேச முடியவில்லை. மனங்கள் கனத்துப் போயிருந்தன. இருவருக்கும் காரணங்கள் தெரிகின்றன. தெரிந்து என்ன பயன்?

மனிதன் தோன்றி இரண்டு லட்ச ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்பொழுது அவனுக்கு மொழி கிடையாது. ஆடையின்றித் திரிந்தான் உறவுகள் என்று ஒன்றில்லை புலம்பெயர்ந்து சென்று கொண்டே இருந்தான் கூட்டம் பெருகப் பெருக அதிகார ஆசைகள் முதல் பல ஆசைகள் வந்தன. உழைக்கும் கூட்டம் பிரிக்கப்பட்டது.

காலச் சக்கரம் பல பிரிவினைகளைத் தோற்றுவித்தது. இப்பொழுது சலுகைகள் என்ற பெயரில் நூறாக இருந்தது நானூறாக ஆகிவிட்டது

இது யார் குற்றம்?

படித்தவர்களும் சாதி வேண்டும் என்கின்றார்கள். நிர்வாகத்தில் இடங்களைக் குறுக்கினால் அதிகக் கவனம் செலுத்த முடியும் என்று நினைத்தனர். அதே அடிப்படையில் சாதிகளைப் பிரித்து நல்லது செய்ய முடியுமென நினைக்கின்றனர்.இரண்டும் ஒன்றா?

பள்ளியில் எல்லா சாதிக்குழந்தைகளும் தான் படிக்க வருவார்கள். குழந்தைகள் என்றால் விளையாடுவது போல் சண்டைகளும் போட்டுக் கொள்வார்கள். அவர்கள் பிஞ்சு மனங்களில் சாதி நினைத்து இவைகளைச் செய்ய வில்லை. மேல்வீட்டுக் காரன் பிள்ளை அடிபட்டுவிட்டால் அது பிரச்சனையாகிவிடும்.

ஒரு காலத்தில் குருகுலத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த மதிப்பு இன்று ஆசிரியர்களுக்கு இருக்கின்றதா? மேலை வீட்டுக்காரன் அதனைப் பெரிய சாதிச் சண்டையாக்கிவிடுவான். பிள்ளைச் சண்டை ஊர்ச் சண்டையாகிவிடும்.

  • ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனி பள்ளி வர வேண்டும்.
  • கோயில் மரியாதையிலும் சண்டை வரும். எனவே ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி கோயில் வேண்டும்
  • தனித்தனி சுடுகாடும் வேண்டும்.

இத்தனைக்கும் இடம் வேண்டும்.

ஏற்கனவே விளை நிலங்கள் வீடுகளாகிக் கொண்டிருக்கின்றன. விவசாயத்திற்கும் இடம் வேண்டும். என்னதான் பணம் இருந்தாலும் உணவுக்கு தானியம் வேண்டாமா?

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்?

இப்பொழுது ஒரு ஊர் என்று எடுத்துக் கொண்டால், பல கட்சிகள், பல ரசிகர் மன்றங்கள், பல சாதிகள் என்று இருக்கின்றன. யாரோ இருவருக்கிடையில் சண்டை வந்தால்கூட மேலே சொன்ன ஓர் குடைக்குள் வந்து அது பெரிதாகி, பக்கத்தில் பரவி, பல இடங்களிலும் கொந்தளிப்பு ஏற்படுகின்றதே?

இதுதான் சாதி ஒழிப்பா?

கடவுள் வேண்டாம். அவன் கல்லாகவே இருக்கட்டும். ஆனால் மனிதனுக்கு அமைதி வேண்டாமா?

ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோரும் சில தவறுகளைச் செய்து வருகின்றோம். நம்மை நாம் உணர வேண்டாமா?

மகாத்மா காந்திஜி எழுதிய சில வரிகள் நினைவிற்கு வருகின்றன. மகாத்மா காந்தியின் சரிதை .. அதில்

அவனோ பிடிவாதமாக இருந்ததோடு என்னையும் எதிர்த்து மிதமிஞ்சிப் போகப் பார்த்தான்.கடைசியாக இருந்த ரூல் தடியை எடுத்து அவன் கையில் ஓர் அடி கொடுத்தேன்.அவனை அடித்த போதே என் உடம்பெல்லாம் நடுங்கியது. பையன்கள் எல்லாருக்குமே இது புதிய அனுபவம். அப்பபையன் கதறி அழுதான். தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். அடிக்க வேண்டிய நிலமை எனக்கேற்பட்டதைக் குறித்து நான் அடைந்த மனவேதனையை அவன் அறிந்து கொண்டான். அன்று நான் ரூல் தடியை உபயோகித்தது சரியா தவறா என்பது குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியாதவனாகவே இருக்கிறேன். ஒருவேளை அது தவறாகவே இருக்கலாம். என்றாலும் பலாத்காரத்தை உபயோகித்ததற்காக நான் இன்னும் வருத்தப் படுகின்றேன். என்னுள் இருக்கும் ஆன்ம உணர்ச்சிக்குப் பதிலாக மிருக உணர்ச்சியையே காட்டிவிட்டதாக நான் அஞ்சுகிறேன்

தன் தவறை உணர்வது அரிய செயல். அதிலும் அதனை வெளிப்படையாக ஒத்துக் கொள்வது மிகவும் அரிய செயல்.

இதிலும் நாம் என்ன செய்கின்றோம்?

நாம் தவறே செய்வதில்லை என்று சாதிக்கின்றோம். அத்துடனும் நிற்கவில்லை. காந்திஜிக்கு “மகாத்மா” என்ற பெயர் சரியா என்று கேலி பேசுகின்றோம்.

அவரவர்க்கு அவரவர் தலைவர்கள், பிடித்தமானவர்கள் என்றிருக்கின்றார்கள். தாராளமாக வானளாவப் புகழ்ந்து கொள்ளட்டும்.

பிறரைத் தூற்றி இன்பம் காண்பது சரியா? எந்த அளவு காழ்ப்புணர்ச்சிகளை வளர்த்து வருகின்றோம் ?

இதே சமுதாயத்தில்தான் நம் குழந்தைகள் வளர வேண்டும். நாமும் நம் குடும்பமும் வாழ வேண்டிய சமுதாயம் இது. பணமும் அதிகாரமும் இருந்தால் போதும் என்று நினைப்பது சரியா?

புத்தியைத் தீட்ட வேண்டியவன் கத்தியைத் தீட்டப் பழகுவான். வன்முறையும், வக்கிர புத்தியும், செக்ஸ் வெறியும் பிள்ளைப் பருவத்திலேயே ஊட்டுவது கொடுமையில்லையா? ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

பிறர் மீது பழி சுமத்தித் திரிவதைவிட ஒவ்வொருவரும் தன்னைச் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அழிந்துவரும் மனித நேயத்தைக் காக்க வேண்டும்.

காட்டுத்தீ போல் காழ்ப்புணர்ச்சி பரவி வருவதைக் கண்டால் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவனும் கவலைப் படுவான்; கவலைப்படவேண்டும்.

கார் மதுரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. எங்கள் நெஞ்சங்களில் எண்ணங்கள் அழுத்தியதால் இருவராலும் பேச முடியவில்லை. வெகு நேரம் கழித்துப் பேசினோம். அப்பொழுதும் சமுதாயத்தைப் பற்றி பேசவில்லை.மதுரைப் பயணம் முடிந்து சென்னைக்குப் புறப்படும் வரை நாங்கள் சாதாரணமாகக் எங்கள் குடும்பங்களைப்பற்றித்தான் பேசினோம்.

பின்னால் என்றோ ஒரு நாள் இந்த அழுத்தம் வெடிக்கும்

(தொடரும்)

நன்றி-திண்ணை

No comments: