Sunday, November 14, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 25

ஜெயகாந்தன் எழுதிய "சுந்தரகாண்டம்"


ஓ சீதே!


ஒரு அலறலுடன் துவங்குகிறது இந்த நாவல். ஆரம்ப காலத்திலேயே ஒரு புரிதலுடன் எழுதிக் கொண்டிருந்த ஓர் மாபெரும் எழுத்தாளன் காலவெள்ளத்தில் நீந்திவந்து, மாறிவரும் சூழலில் எழுதிய ஓர் நவீனம் இந்த சுந்தர காண்டம்!


குங்குமத்தில்’ தொடராக வந்த காலத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்று, அது முடிவடைந்த பின்னர் அதே வீச்சுடன் கேள்வி-பதில் மூலமாகப் பல வாரங்கள் விவாதிக்கப்பட்டு, அத்தனை கேள்விகளுக்கும் ஜெயகாந்தன் பதிலிறுத்தார். பின்னர் இது புத்தகமாக வெளிவந்தபொழுது, வழக்கம்போல் அவர் எழுதிய முன்னுரையைப் பார்ப்போம்.


இந்தக்கதையின் மூலம் நான் நமது பெண்களுக்கு என்னென்னனவோ சொல்ல முயல்கிறேன். அவை புத்திமதிகளல்ல.அவற்றால் ஏதும் பயனிராது என்பதை நான் அறிவேன்.ஆயினும் நமது பெண்கள் அறிய வேண்டிய நம்மைப்பற்றிய உண்மைகள் நிறைய உள்ளன.


அதாவது பெண் என்பவள் அவளே சில சமயங்களில் எண்ணி மயங்குவது போல அவள் தனிப்பிறவி அல்லள்; அவள் ஆணின் பாதி. அவள் காதல் வயப்பட்டிருந்தாலும் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தாலும் , இந்தத் தளைகளில் தன்னைப் பிணைத்துக்கொள்ளாத சுதந்திரப் பறவையாக வாழ நேர்ந்தாலும், அவள் நமது சமூகப் பதுகாப்புக்கு உட்பட்டவள்தான். காதலும், கல்யாணமும், குடும்ப வாழ்க்கையும் ஏதோ தான் சம்பந்தப்பட்ட தனி விவகாரம் என்று எண்ணுகிற பெண்தான் பேதை. அது சமூகம் சம்பந்தப்பட்டது என்று அறிவிப்பதே இந்தக் கதையின் முதல் நோக்கம்.


பெண்களே !


நீங்கள் உங்கள் தந்தையென்றும், காதலன் என்றும், கணவன் என்றும் நம்பி உங்களை ஒப்புக் கொடுக்கிறீர்களே அவர்கள் யார் ? அவர்களே இந்த சமூகத்து மனிதர்கள். அவர்கள் கொடுமைக்காரர்கள். பெண்ணை மதிக்கத் தெரியாத மிருகங்கள். பெண்ணை மண்ணுக்கு இணையாக மதித்து உழுது மிதித்து அகழ்ந்து தூர்க்கிறவர்கள்.உங்களை அவர்கள் வேண்டாத சுமையாக எங்கேயேனும் தள்ளிப் போடவே விரும்புகிறார்கள். தலையில் வந்து விடிந்துவிட்டதாக இறக்கிப் போட்டு ஏற்றி எறிகிறவர்கள். மாட்டை வணங்குகிற மரபு போல் உங்களை லட்சுமீகரமாக்கி அவர்கள் தொழுவார்கள்.நேரம் வரும் பொழுது தெரியும், இந்த கசாப்புக் காரர்களின் காதல் லட்சணம்.


மதிப்புக்கும் அன்புக்கும் உரிய உங்கள் இனிய பாதியான ஆண்மகன் இந்த வசை எய்து வாழ்வது எதனால்?வசைக்குரிய ஒரு சமூகத்தின் அடிமையாக வாழ்கிறானே! அதுபற்றிய ப்ரக்ஞையற்று தான் ஒரு எசமானன் என்று உன்னிடம் வந்து ஒரு அடிமை அதிகாரியைப் போல், சுரண்டல் வியாபாரியைப் போல் நடந்து கொள்கிறானே! அதற்கெல்லாம் காரணம் அவனது சமூகத் தொடர்பேயாகும்.


சமூகம் என்பது ஏதோ தனித்துத் தெருவில் திரிவது மட்டுமல்ல, அது தந்தையாய், சகோதரனாய்,சக்தி வாய்ந்த பெரிய மனிதனாய், காதலனாய், கணவனாய் ஒவ்வொரு குடும்பத்திலும் வந்து ஆரோகணித்துச் செய்யும் அட்டகாசங்களைத் திமிர்ந்த ஞானச்செருக்குடைய பெண்களேயன்றி வேறு யார் அறிவார் ?"


இளம்பெண்களே ! காதல் என்ற பெயரிலும் கல்யாணம் என்ற பந்தத்திலும் இந்த சமூக மனிதனிடம் மோசம் போய்விடாதீர்கள் என்று எச்சரிக்கிறது இந்தக் கதை. அப்படிப்பட்ட பந்தங்கள், ஒரு சமூகவிரோதியோடு ஏற்படுத்திவிடுகிற பட்சத்தில் அது உங்களைக் கட்டுப்படுத்தலாகாது என்று உங்கள் சார்பில் அனைவரையும் போராடச் சொல்கிறது இந்தக் கதை. உங்களை அந்த சமூகவிரோதிகள் சிறையெடுப்பினும், சீர்கெடுப்பினும் உங்களின் நிறையை அழிக்க அவர்களால் ஒண்ணாது என்று இக்கதை எடுத்து ஓதுகிறது.”


ராவணன்,’ என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்-பலவித உத்திகளுடன் சொல்லப் புகுந்த ஒரு கதை. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னமே இந்த மாபெரும் எழுத்தாளனால் கையாளப்பட்டது என்பதே இதன் பெருமை. ஒருவேளை என்றோ இக்கதை படிக்கப்பட்டு விழுந்த விதை அப்படி ஓர் மரமாகியும் வந்திருக்கலாம். சில நேரங்களில் வெவ்வெறு மனிதர்களிடம் வெவ்வேறு காலங்களில் ஒத்த கருத்துள்ள படைப்புகளும் தோன்றலாம். ராஜ ராஜ சோழன் விருது இக்கதைக்குக் கிடைத்தது பெண்ணியத்துக்குப் பெருமை.

இனி கதையினைப் பார்ப்போம்!


நீ எங்கிருக்கிறாய்?”என்ற சோகமான அலறல் பூமியிலிருந்து கிளம்பி ஆகாசத்திலும் பூமியிலும் மோதி எதிரொலிக்க “மூர்ச்சையானான்“ என்று ஆரம்பமாயிற்று அந்தக் கதை.


அவள் கண்களில் கொப்பளித்துச் சுரந்த கண்ணீர்த் திராவகத்தில் அந்த எழுத்துக்கள் மறைகின்றன. காவிய சோகம் திரையிடுகிறது. மீண்டும் தொடர்ந்து படிக்கின்றாள்


அவன் மூர்ச்சை தெரியாமல் வெறித்த விழிகளுடன் திசைகளை அளந்த பார்வை நிலைக் குத்திப் போக, விழுந்து புலம்புகின்றான்.


’வைதேகி! உன் அணிகலன்களெல்லாம் இந்த மண்ணில் விழுந்து கிடக்கின்றன. இரத்தினங்களும் முத்தும் வேண்டாமென்று உதறி, பெண்மையின் அணிகலன்களை மட்டும் தரித்துக் கொண்டவளே, நீ எங்கிருக்கிறாய் ?’


துயரமும் அச்சமும் கண்ணீரும் அவமானமும் கண்களில் தேங்க வானத்தை நோக்கித் தீனமாய், அவலமாய்ப் பெருமூச்செறியும் கோடானு கோடிப் பாரதப் பெண்களில் நீ யாராக, எந்த காராகிருகத்தில், எவர் காவலில் எங்கு கட்டுண்டு கிடக்கிறாயோ?


ஏ, பூமியின் புதல்வியே, உனக்குத் தாயில்லை, தந்தையில்லை, உடன்பிறப்பில்லை, உற்றாருறவினர் இல்லை, உனக்கு சாதி இல்லை, மதம் இல்லை, குலம் இல்லை, கோத்திரம் இல்லை, நாடு இல்லை மொழி இல்லை, எல்லையற்ற துன்பமே! நீயே சீதை !இறுதி காணாச் சோகமே, நீயே சீதை!

புலம்பல் தொடர்கின்றது. தாயின் குரல் கேட்கவும் அவள் சுயநிலை அடைகின்றாள். காவியக் காட்சிகள் மறைந்து கண்ணீர் கொட்டுகின்றது. இவள் தான் கதையின் நாயகி சீதா.


ஒரு ஜன ரஞ்சகப் பத்திரிகையின் தலைமை ஆசிரியரின் பெண் சீதா. கல்லூரிப் படிப்பு படிக்கும் இவள் முற்போக்கான எண்ணம் கொண்டவள். பெண்கள் ஏதோ ஆண்களின் போகப் பொருள் அல்லள் என்பதில் உறுதியாக இருப்பவள்.


பகலில் ஆசாரம், மாலையில் மது, என இரட்டை வாழ்க்கை வாழும் தந்தையின் பணத்தாசைக்குப் பலியாகி மனைவியை இழந்த ஒரு தொழில் அதிபருக்கு மணமுடிக்கப்படுகிறாள் சீதா. முதலிரவன்றே “என் அனுமதியின்றி என்னைத் தீண்டினால் நான் தற்கொலை செய்து கொள்வேன்," எனச்சொல்லிய அவள் முடிவை நாட்பட நாட்படச் சரியாகும் எனச் சிரித்துக் கொண்டே அனுமதித்து விட்டு மது அருந்திவிட்டு, தன் வயதானத் தாய்க்கு நர்ஸாகப் பணிபுரியும் இளம் விதவையுடன் வழக்கம் போலப் படுக்கச் சென்று விடுகின்றான்.


சீதாவுக்கு ஒரு சில மாதங்கள் கழித்தே இது தெரிய வருகிறது. கணவனுடன் விவாதங்கள், அதன் பின்னர் அப்பா ஏற்று நடத்திய பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்த ஆரம்பித்துவிடுகின்றாள்.

கதைக்குள் கதையாக இன்னொரு கதை வேறு. ருஷ்ய நாட்டில் ஒரு கிராமத்துப் பெண் காதலனால் வஞ்சிக்கப் பட்டு ஓடி ஓடிக் களைத்து உயிரைவிடுவதும் வருகின்றது. சோகப் புலம்பல்.


கதையில் சில பகுதிகள்


“பொதுவாகவே நமது பெண்களை அசோக வனத்துச் சீதைகள் என்றுதான் நினைக்கிறான் கிரிதரன் . அதிலும் உங்களைக் குறிப்பாக இராமனில்லாத சீதை என்று இன்றைக்குக் கூடப் பேசும் பொழுது சொன்னான்” என்றான் ராமதாஸ்.


ராமன் யார் என்று கேட்ட சீதையே தொடர்ந்து ராமனைப்பற்றிப் பேசுகின்றாள்


“ஆயிரம் பிரதாபங்கள் இராமனுக்கு உண்டு ஆயினும் சீதைச் சிறை மீட்பவனே இராமன். அது ஏதோ ஒரு தனி மனித சாதனையல்ல. இக்காலச் சமூகப் பொருளில் “சீதை சிறை மீட்சி “ என்பது பெண்விடுதலையே ஆகும்.


ராமதாஸுடன் அடிக்கடி விவாதிக்கிறாள். ராமதாஸ் கிரிதரனைப் பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பான். இராமாயணத்தில் இராமனின் குணம் என்ன என்ற புதிர்க் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்த சீதை தனக்கான இராமன் யார் என்பதை உணரவும் அவனை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்குகிறாள். அது என்னவாயிற்று என்று சொல்லாமலேயே கதையை முடித்து விடுகின்றார். வாசகர்களின் முடிவிற்கு விட்டு விடுகின்றார்.


என்றோ எழுதப்பட்ட கதை. கொடிய கணவன் அமையுமானால், காலில் கற்பு என்ற கயிறு கட்டப்பட்டு வதைப்பட்டுக் கொண்டிருந்த பெண், விடுதலைப் பயணம் தொடங்கி விட்டாள் என்பதற்கு அடையாளம். இந்தக் கதை. தாலிக்ககயிற்றின் மதிப்பு, அதைக் கட்டியவன் வாழும் ஒழுக்கத்தைச் சார்ந்தது. அவன் சரியில்லையென்றால் தாலி வெறும் கயிறுதான். அந்த பந்தம் பலஹீனமாகி அறுந்து வீழும்.


தந்தை பெரியாரின் கடுமையான சாடல், ஜெயகாந்தன் எழுத்திலே காட்டும் தீவிரம், பல ஆண்களின் மனங்களை வருத்தும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.


குடும்பத்தில் அன்பு கொண்டு பண்புடன் வாழும் ஆண்களை நான் மரியாதையாக வணங்குகின்றேன். உங்களைச் சுற்றிப்பாருங்கள். எங்கள் வேதனைக்கொதிப்பைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வெளிப்படையாக சில தகவல்கள் மட்டும் சொல்ல விரும்புகின்றேன்.


ஆண்மையின் சக்தி ஆணின் மனத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் சார்ந்திருக்கின்றது. பலஹீனம் அடையும் பொழுது மனைவியைப் பக்குவமாகக் கையாளவேண்டியவர்கள் கொடூரமாக அடிப்பதுவும் கடிப்பதுவும் தாங்கிக் கொள்ளக் கூடியவைகளா? இதுவா செக்ஸ் இன்பம்?. எத்தனை பெண்கள் என்னிடம் அழுதிருக்கின்றார்கள் தெரியுமா?


“நன்றாக இருந்தாரே, ஏனம்மா இப்பொழுது இப்படி நடந்து கொள்கின்றார். அவர் அருகில் வந்தாலே பயமா இருக்கு“


சிகரெட், மெழுகுவர்த்தி இவைகளைக் கொளுத்தி அந்த மென்மையான உடம்பில் சூடு போடுவதில் என்ன இன்பம் கிடைக்கின்றது?.


பெண்ணை அடித்து அவள் துடிக்கும் பொழுது உடலுறவு கொள்வதில் என்ன மகிழ்ச்சி?


இவைகள் வக்கிரமாகத் தெரியவில்லையா?


வேலை செய்ய மாட்டான். ஆனால் குடிப்பான். தெருவோர தேவதைகள் வேண்டும். இதற்கு காசு வேண்டி தன் மனைவியை அடிக்கும் ஆணை எதில் சேர்க்கலாம்? படித்தவனும் வித்தியாசமாக பெண்ணைக் கையாள்கின்றான். சில சலுகைகளுக்கும், பதவி உயர்வுக்கும் கட்டியவளைக் கட்டாயப் படுத்தி பிற ஆண்களுக்குப் பலிகடாவாக அனுப்புவனை என்னவென்று சொல்வது? தன் ஆடம்பர வாழ்வுக்குத் தன் மகளையே பலியாக்கத் தயங்குவதில்லை சில அப்பன்கள்.


அப்பனுக்கு ஆசைக் கிழத்தி அக்காவென்றால், அவன் மகனுக்கு அவள் தங்கையுடன் உறவு. என்னைய்யா வக்கிர வாழ்க்கை?


கடவுள் பெயரைச் சொல்லி பெற்ற மகளையே, பதின்மூன்று வயதுச் சிறுமியை ஊருக்கு தாசியாய் அனுப்பும் அப்பனை என்ன சொல்வது?


ஆண்மட்டுமா பெண்ணுக்கு எதிரி?


பணியிடங்களிலும், பொது வாழ்விலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அப்பாவிப் பெண்களை பலிபீடம் அனுப்பும் பெண்களை என்ன சொல்வது? ஆக பாதிக்கப்படுவது பெண்


இத்தகைய மிருகச் செயல்களுக்கு நீண்ட பட்டியலே என்னால் கொடுக்க இயலும். இவைகள் பத்திரிகைகளில் படித்து எழுதவில்லை. நான் கவுன்ஸ்லிங் செய்த பல குடும்பங்களில் பெண்களின் வலியைக் கேட்டறிந்ததில் சிலமட்டும் எழுதியுள்ளேன்.


என் வாழ்நாளில் லட்சக்கணக்கான குடும்பங்களைப் பார்த்துவிட்டேன். இப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். சுமார் 17000 கிராமங்கள், மூவாயிரத்துக்கு மேலான நகரச்சேரிகளுக்குச் சென்றிருக்கின்றேன். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கிராமங்களைப் பார்த்திருக்கின்றென். நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகள் போயிருக்கின்றேன். உலகில் பல பகுதிப் பெண்களிடம் பேசிருக்கின்றேன். ஆய்வும் செய்திருக்கின்றேன்.

தமிழ் மண்ணில் மட்டுமல்ல, உலகில் பெண் எங்கிருந்தாலும் வதைப்படுகின்றாள்.


எங்காவது போர், அல்லது ஒரு சிறு கலாட்டா வந்தாலும் ஒரு பெண்ணைப் பலபேர் குதறி அழிக்கின்றார்களே, இந்த நிலை ஆணுக்கு உண்டா? நாங்கள் வெறும் சதைப்பிண்டங்களா? உணர்வும் உயிரும் உள்ள மனிதப் பிறவிகள்!


கஷ்டம், பாதிப்பு இரு பாலாருக்கும் வரும். ஆனால், பெண்ணுக்கு நடக்கும் இந்தக் கொடுமை ஆணுக்கு உண்டா?


வெளியில் காணும் சில வளமான காட்சிகளை மட்டும் வைத்து பெண் நிலை உயர்ந்துவிட்டது என்று மதிப்பிடுதல் கூடாது. அதனால்தான் உண்மைகளைப் புரிந்த சில ஆண்கள் குரல் கொடுக்கின்றார்கள்.


லட்சக்கணக்கான வருட வாழ்க்கையின் அனுபவத்தில் அவன் விதித்துக் கொண்ட விதிகள் தளர ஆரம்பித்துவிட்டன. ஊடகங்களிலும் சூழலிலும் வன்முறைகள் வலுத்துவிட்டன. பாலியல் கொடுமை விளையாட்டாய்க் கருத ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கை அதிவேகத்துடன் கூடி வருகின்றது.


இந்த சமுதாயத்தில்தான் நாம், நமது சந்ததியினர் வாழ வேண்டும். நம் குழந்தைகள் வாழும் சுற்றுப் புறத்தைப் பாருங்கள். சட்டம் தடுக்கவில்லையென்றால் நிர்வாணக் காட்சிகளை எங்கும் காணலாம். பெரியவர்களின் பேச்சு, அறிஞர்களின் எழுத்து இவைகளைக் கண்டு கோபப்படுவதைவிட நல்ல சிந்தையுடன் எண்ணிப் பார்ப்போம் சீர்திருத்த முயல்வோம்.


ஆணென்றும் பெண்ணென்றும் பிரித்திடல் வேண்டாம். இரு சக்திகளும் இணைந்து நடத்தும் இல்லறமே நல்லறமாக அமையும்.


குடும்பம் எனும் கோயில் அழிந்துவிடக் கூடாது. ஆணாதிக்கம், பெண்ணின் சம உரிமையென்று பேசித் திரிவதைவிட குடும்பத்தை எப்படி சேர்ந்து காப்பாற்றுவது என்ற சிந்திக்க வேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.
.
மனிதர்களுக்குத் துன்பம் வருமானால் “சுந்தரகாண்டம்” படியுங்கள் என்பார்கள். தொல்லைகள் நீங்குமாம். என் தொடரில் இறுதியில் ஜெயகாந்தனின் சுந்தர காண்டத்தை இணைத்தது தற்செயல் நிகழ்வு.


அதுசரி, இராமாயணத்தில் அந்தப் பகுதிக்கு ஏன் சுந்தரகாண்டம் என்ற பெயர் வந்தது? அசோகவனத்தில் அரக்கனாலும் அரக்கிகளாலும் அல்லல் படுத்தப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப் படுகின்றாள் சீதை. ஆபத்பாந்தவனாக அனுமன் வருகின்றான். அனுமனின் வருகையில் தனக்கு சிறை மீட்சி வரும் என்ற நம்பிக்கை சீதைக்கு உண்டாகின்றது.


ஏனோ, என் மனம் இன்னொருவரையும் இதுபற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று தூண்டியது, எனக்கு தேவ் என்று ஒரு நண்பர். அவரிடம் கேட்க முடிவெடுத்தேன். ரிஷிமூலமும், சுந்தரகாண்டமும் கொடுத்துதவிய டாக்டர் சங்கரைப் போன்று தேவ் அவர்களும் அதுபற்றிய ஓர் அரிய விளக்கமே எழுதி அனுப்பினார். என்னால் அவரைப் போன்று எழுத முடியாது. எனவே அவர் எழுதியதை அப்படியே வாசகர்களுக்குத் தருகின்றேன்.


“ஸுந்தரே ஸுந்தரம் சர்வம்" -சுந்தரகாண்டத்தில் எல்லாம் சுந்தரம்


அனுமன் தன் ஆற்றலை உரிய தருணத்தில் வெளிப்படுத்தும் அழகு. பதறாமல் சிந்தித்து முடிவெடுக்கும் அழகு. மெல்லிய குரலில் சிம்சுபா விருட்சத்தில் மறைந்து கொண்டு எளிய நடையில் இராமர் காதை கூறும் அழகு. நம்பிக்கை குலையும் நிலையில் இருந்த பிராட்டியை அடையாளம் கண்டு அடையாளமான கணையாழியை சமர்ப்பிக்கும் அழகு. பண்டிதர் பாணியில் சீதையோடு உரையாடாமல் பாமரர் மொழியில் பேசுவது. சுத்த சம்ஸ்கிருதத்தில் பேசினால் ராவணன்தான் மாறுவேஷத்தில் நய வஞ்சமாக அணுகுகிறான் என்று சீதை சந்தேகப்படுவாள். ஏனெனில் ராவணன் மஹாப்பண்டிதன்.


பின்னர் அரக்கர் படையை சவால் விட்டு அழைத்து அநாயாசகமாக அதை அழைக்கும் அழகு. ராவணனைச் சந்திக்க உபாயம் தேடும் அழகு. அரக்கனை எச்சரித்து சீதை அனாதையல்லள் என்று அச்சுறுத்தும் அழகு. சுருதிநாயகன் பெருமையை தாமஸர்களான அரக்கர் அவையில் நிறுவும் அழகு. உரிய தருணத்தில் இவர் கொடுக்கும் “jolt” ராவணன் கடைசிவரை தாயாருக்கு தொல்லை தராமல் இருக்கக் காரணமாகிறது.


அனுமனைத் தலைசிறந்த ஒற்றனாக, இராமபிரானின் நம்பிக்கைக்குரிய தோழனாக, சிறந்த தூதுவனாக, சொல்லின் செல்வனாக, மேலான தொண்டனாக, வேதாந்தக் கண்ணோட்டத்தில் தலை சிறந்த ஓர் ஆச்சாரியனாகக் காட்டும் பகுதியாதலால் “ஸுந்தரகாண்டம்” என்று பெயர்.

தேவ் ஒரு இராமபக்தர். அவரின் பக்தி அவர் எழுத்திலும் தெரிகின்றது.


பெண்கள் துயர் துடைக்க யார் வருவார்?


பேசத்தெரிந்த பெரியவர்கள் பேசுகின்றார்கள். எழுதமுடிந்தவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.


நல்லிதயம் படைத்த நல்லவர்களுக்குப் பெண்ணுலகம் நன்றி செலுத்துகின்றது.


கல்வியும் பொருளாதார நிலையில் உயர்வும் அவளுக்கு உதவும். ஆனால், எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்புகள் இல்லையே! அதுமட்டுமல்ல, இன்னும் பல இன்னல்கள் அடியில் ஓடும் நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருக்கின்றதே அதனை எப்படி அழிப்பது?


நானும் புலம்புகின்றேன். என்னைத் தேடிவந்து என் தோள்களில் சாய்ந்து அழுத பெண்கள் எத்தனை பேர்கள்? அவர்களைக் காப்பாற்ற முயன்ற எனக்குத்தான் எத்தனை சோதனைகள் ?


சீதாம்மாவின் குறிப்பேடு முழுமையாக வந்தால் இதிகாசத்தைவிடப் பெரிதாக இருக்கும். அத்தனை மனிதர்கள் ! அத்தனை சம்பவங்கள் !


ஜெயகாந்தனின் எழுத்து, அவர் சிந்தனை, அவர் நட்பு இவைகள் என் பணிக்கு ஊன்று கோலாய் உதவியதால் என் அனுபவங்களுக்கு அவர் கதைகளில் சில பகுதிகளையும், உரையாடல்களையும் எடுத்துக் காட்டுகளாக உபயோகித்தேன்.

என் குறிப்பேட்டில் இருப்பவர்களைப் பார்த்தால் ஓர் திருவிழாக் கூட்டம் போல் இருக்கும். எழுத நினைக்கவும் அவர்களில் முதலாக முன் வந்தவர் ஜெயகாந்தன். என் மனம் எப்பொழுதும் சமுதாயத்தின் நன்மையைத் தான் சுற்றி வரும். எனவே அதற்குதவும் ஜெயகாந்தனின் படைப்புகளை இத்தொடரில் கையாண்டேன். முடமாகி ஒதுங்கி யிருக்கும் முதுமையில் என்னால் முடிந்தது இந்த எழுத்து. இதையாவது செய்ய முடிகின்றதே !

நான் இலக்கியம் படைக்கவில்லை. நான் ஒரு சாமான்யமான பெண்மணி. என் எழுத்தும் சாமான்யமானவைகளாகவே இருக்கும். கிராமத்தாருடன், எளியவர்களுடன் பேசிப் பேசிப் பழகிவிட்டது. இலக்கியம் படித்தவளாயினும் எழுத்து எளிமையாகவே இருக்கும்.


வாழ்க்கையில் போராளியாக வாழ்ந்தேன். ஊதியம் பெற்றுத்தான் பணி செய்தேன். ஊதியம் வாங்கியதால் என் கடமைகள் இரட்டிப்பு உணர்ச்சியுடன் செய்தேன். வயதாகிவிட்டபடியால் பணியிலிருந்து ஓய்வு கொடுத்திருக்கலாம். ஆனால் சமூக சேவைக்கு ஓய்வு கிடையாது. இன்னும் முடிந்த அளவு ஏதோ செய்துவருகின்றேன்.


என் அனுபவங்களை, எண்ணங்களை எழுதி வருவதற்கும் ஓர் காரணம் உண்டு. இன்றைய இளைஞர்களுக்கு, வருங்கால சந்ததியினருக்கு நான் வழங்குவது இந்தக் குறிப்பேடு. ஜெயகாந்தன் பற்றிய தொடர் நிறைவுக்கு வரலாம். ஆனால் என் குறிப்பேட்டின் பல பக்கங்கள் அவ்வப்பொழுது பார்வைக்கு வரும். இப்பொழுது சில பக்கங்களையாவது பதிய முடிந்ததே என்பதில் மனத்தில் நிறைவு. அந்த மன நிறைவுடன் இத்தொடரை முடிக்கின்றேன்.


அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்,
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா !
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா !
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் ;
கலிய ழிப்பது பெண்க ளறமடா !
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம். .
பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறிகொரு தாழ்வில்லை ;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காதலின்பத்தைக் காத்திடு வோமடா !


இத்தொடரைப் பிரசுரித்த திண்ணை இதழுக்கும், என் எழுத்தினைப் பொறுமையுடன் வாசித்த வாச்கர்களுக்கும் நன்றி


சீதாம்மா

No comments: