Monday, July 16, 2012

நினைவலைகள் -16


                                                நினைவலைகள்  -16

பிரச்சனைகளையே பேசிக் கொண்டிருந்தால் பித்து பிடித்துவிடும். கொஞ்சம்
இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டு இளைஞர்கள் பற்றி அதுவும் தற்காலச்
சூழலில் அவர்களைக் காணலாம். சங்கிலிப் பிணைப்பைப்போல் சம்பவங்கள்
இணைந்துவிடும். சிறிது நேரம் நினைவுகள் இளமை ஊஞ்சலில் ஆடட்டுமே! வேடிக்கை பார்க்கலாம். அதிலும் செய்திகள் இல்லாமலா போய்விடும்!

பரபரப்பாக இருந்த வாழ்க்கை பணியில் ஓய்வு பெறவும் சில ஆண்டுகளில்
மூட்டுவலியால் வீட்டில் முடங்கி விட்டேன்.

2001
ஆண்டு ஜுலை மாதம் மகன் அமெரிக்காவிலிருந்து வரும் பொழுது
ஒரு கம்ப்யூட்டர் எடுத்து வந்தான்
அம்மா, உங்களுக்ககத்தான் கொண்டு வந்திருக்கேன். தென்காசி போய்ட்டு வர 10
நாட்களாகும். அதற்குள் கொஞ்சமாவது நீங்க படிச்சிருக்கணும். இல்லேனா
யாருக்காவது கொடுத்துடுவேன்என்று கூறிவிட்டு எங்கள் வீட்டு
காம்பவுண்டில் பின்னால் மாடியில் குடியிருக்கும் பையன்களைக் கூப்பிட்டு
ராஜா, என் அம்மாவுக்குக் கொஞ்சம் கம்ப்யூட்டர் பற்றி சொல்லிக் கொடுங்கள்
என்றான்.

மாடிவீட்டுப் பையன்கள் என் பேத்தியின் நண்பர்கள். உடனே கற்பனையில்
போய்விட வேண்டாம். பேத்திக்கு மூன்று வயது. வெளியில் போய்விடக் கூடாது
என்று காம்பவுண்டு கதவுகளை பூட்டி இருப்போம்.இவளோ மாடிக்குப் போய் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பாள். அதனால் இப்பொழுது அவர்களுக்கும் நான் பாட்டி. இதுவரை யாரும் என்னிடம் பேசியதில்லை. இனிமேல் பேசியே ஆக வேண்டும்

நால்வரும் பொறியியல்வல்லுனர்கள். கீழைக்கரை கல்லூரியில் படித்தவர்கள்.
ராஜாகான், ஈசா, நயினா, ஷேக், இவர்களுடன் வெளியில் தங்கி முதுகலைப்
படிப்பு படிக்கும் அப்பாஸும் அடிக்கடி வந்து தங்குவான். மாடியில் அரட்டை
சத்தம் கேட்கும். மற்றபடி இருப்பதே தெரியாமல் அடக்கமாக இருப்பவர்கள்

அன்று இரவு ஏழுமணிக்கு ஐவரும் வந்து விட்டார்கள். நான் கம்ப்யூட்டர்
முன்னால் உட்கார்ந்தேன். ராஜா என் பக்கத்தில் ஓர் நாற்காலியை இழுத்துப்
போட்டுக் கொண்டு உட்கார்ந்தான் மற்றவர்களும் நாற்காலி, ஸ்டூல் என்று
எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்கள் எனக்கு இத்தனை
வாத்தியார்களா?

67
வயது சின்னப் பெண்ணிற்கு 25 வயது கிழ வாத்தியார். சே! எப்பொழுதும்
இப்படித்தான். 17 வயதில் படித்த கல்லூரி புனித மேரிகல்லூரி.
சன்னியாசிகளுடன் தங்கினேன். 40 வயதில் ராணிமேரி கல்லூரி. சின்னச் சின்னப் பெண்களுடன் வயதானவள் நான். என் ராசி அப்படி.

ராஜா என் முகத்தைப்பார்த்து, “என்ன பாட்டி யோசனை?
பயமா? சீக்கிரம் நீங்க கத்துக்கலாம் என்றான். பாவிங்களா, பாட்டின்னு
கூப்பிட்டுகிட்டு பாடம் சொல்லிக் கொடுக்க வந்தீங்களா?

கணிணிபற்றி ஒவ்வொன்றாக ராஜா சொல்ல ஆரம்பிக்கவும் பயம் வர ஆரம்பித்தது.
தொல்காப்பியம் மனப்பாடம் செய்ய வேண்டி வந்த பொழுது படிப்பதையே
நிறுத்திவிடலாம் என்று நினைத்தவள். கணிணியும் வேண்டாம் என்று நினைக்க
ஆரம்பித்துவிட்டேன். என் எண்னங்களைப் புரிந்து கொண்டவன் போல்,
பயப்படாதீங்க, ஆரம்பத்திலே அப்படித்தான் தோணும். அப்புறம் பாருங்க,
நீங்க கம்ப்யூட்டரை விட்டு எழுந்திருக்க மாட்டிங்க என்றான் ராஜா. பாவி
எந்த நேரத்தில் சொன்னானோ , இப்பொழுது  அப்படித்தான் எப்பொழுதும
கணிணியுடன் உட்கார்ந்திருக்கின்றேன்.

அடுத்து ஒரு பெயர் வைக்க வேண்டுமாம். மெயில் ஐடியாம் . எனக்குப்
பிடித்தமானவர்களின் பெயர்களின் முதல் எழுத்தை வைத்து ஒரு பெயர் சொன்னேன்
(
மன்னிக்கவும் . பெயர் சொல்ல மாட்டேன் ). பாஸ்வொர்ட்
என் பிறந்த தேதியைக் கொடுத்தேன். Messenger  என்று ஒன்றாம் அதனையும்
ஏற்படுத்தினான்
பாட்டி , இதில் உங்களுக்குப் பிரியமானவர்கள் பெயரைப் பதிந்தால்
அரட்டையடிக்கலாம் என்று சொல்லவும் ஒரே குஷி. தனிமை பறந்துவிடும்.
அடுத்து சொன்னதுதான் என்னுடைய புது பந்தம்

பாட்டி, உங்களுக்கு, keyboard, mouse கணிணியில் கவனம், மூண்றும் ஒரே
சமயத்தில் வேகமாக இயங்க வேண்டும். அதற்கு நீங்கள் சாட்டிங்
போனால் சீக்கிரம் தெரிந்து கொள்ளலாம். அதனால் இப்போ உங்களை நான் சென்னை ஆன் லயன் சாட்டிங் அறைக்குக் கூட்டிப் போகப் போறேன். அங்கே
வர்ரவங்ககிட்டே நீங்க அரட்டை அடிக்கணும். நான் சொல்லச் சொல்ல நீங்க டைப்
செய்யுங்க

மனத்தில் ஒரே பரபரப்பு. ஆர்வத்தை உண்டுபண்னிவிட்டான் அடுத்து அவர்கள் பேசியதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனேன்.
பாட்டி, இங்கே உங்க சொந்தப் பெயரை சொல்லக் கூடாது, அதுக்கு தனியே பேர்
வைக்கணும்இது ராஜா
நமோசாஇது நயினா
அதென்ன நமோசா, சமோசா மாதிரி. பேரு நல்லா இல்லேஇது நான்
பாட்டி, பேரு புதுமையா இருக்கணும், உடனே பசங்க குதி போட்டுக் கிட்டு பேச
வருவாங்க. ஊர் கேட்டா ஜப்பான், இங்கே காலேஜ்லே படிக்க வந்திருப்பதா
சொல்லுங்கஎன்று அப்பாஸ் கூறிவரும் பொழுதே
 
நவாஸ் வயசு கேட்டா 19 ன்னு சொல்லணும்என்றான்
அடப்பாவிங்களா, 67 வயது பெண்மணியை 19 வயதுன்னு சொல்லணுமாம். என்ன
போலித்தனம். பொய் சொல்ல முடியாதுஎன்று கத்தினேன்.  எல்லோரும
சிரித்தார்கள்
பாட்டி, உங்க வயசை சொன்னா ஒரு பயலும் பேச வரமாட்டான். சும்மா
வேடிக்கைக்குத்தானே. அப்போத்தான் உங்களுக்கு ஸ்பீடு வரும் என்று
நிதானமாகச் சொன்னான் ஈசா
எல்லோரையும் பரிதாபமாகப் பார்த்தேன். என் நிலைமையைப் புரிந்து கொண்ட
ராஜா, “பாட்டி, நீங்க எத்தனை கதை எழுதியிருக்கீங்க. அது போல நீங்க
அனுப்பறது ஒரு பாத்திரம்னு நினங்க. பேசும் பொழுதுமட்டும் ஜாக்கிரதையாகப்
பேசுங்க. வாலுங்க, நீங்க சமாளிச்சுடுவீங்க. நான் தான் பக்கத்தில்
இருக்கேனே. நான் சொல்றதை நீங்க அடிச்சா போதும் என்று சொல்லி தைரிய
மூட்டினான்

அப்பொழுது சென்னை ஆன் லயன் சாட்டிங் பிரபலம். மெயில் ஐடி
கொடுக்க வேண்டாம். பெயர்கள் ஓடிக் கொண்டே இருக்கும். நம்மைக்
கூப்பிடறவங்ககிட்டே நாம் பேசலாம். என் கணிணி பயணம் ஆரம்பித்தது
முதன் முதலில் சென்னை ஆன் லயனில்தான்

முதலில் பேச ஆரம்பித்தவன் பெயர் வம்ஸி. பொறியியல்கல்லூரியில் கடைசி
வருடம். வயது 21. முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகத்
தயக்கம் விலகியது. உரையாடல் வேடிக்கையக இருந்ததே தவிர விரசமாக இல்லை.
விலாசம் கேட்டான் ராஜா சொல்லச் சொல்லத் நானே டைப் செய்து கொண்டிருந்தேன்.
விலாசம் இப்போ கொடுக்க மாட்டேன். கொஞ்ச நாளாகட்டும் என்று சொன்னேன்.
இன்னும் சிலர் கூப்பிட்டாலும் பதில் கூறமுடியவில்லை. என்னால் ஒருவனுக்கே
பதில் அடிக்க நேரம் ஆயிற்று. அன்று ஆரம்பித்த ஒற்றைவிரல் நாட்டியம்தான்
இன்று வரை தொடர்கின்றது. அவர்கள் சொன்னது சாட்டிங் உதவி செய்தது

அடுத்த நாளும் பயிற்சி தொடர்ந்தது. இரண்டாம் நாள் இன்னொரு புது நண்பன்
பெயர் ஜான். பள்ளிப் படிப்பை முடித்துப் பின் அலுவலகத்தில் ஒரு சாதாரண
வேலை பார்த்துக் கொண்டே. எம். சி. ஏ வரை அஞ்சல் வழிக்கல்வி மூலம் படித்து
ஒரு தொழிலையும் அமைத்துக் கொண்டு மென்பொருள் செய்து விற்பனை செய்து
கொண்டிருந்தான். உழைப்பால் உயர்ந்தவன் வயது 27. அவனை எனக்கு மிகவும்
பிடித்தது.

மூன்றாம் நாள் யாரும் வரும் முன்னர் நானே கணிணி முன் உட்கார்ந்து
அரட்டையடிக்க ஆரம்பித்தேன். மீண்டும் இரு புதிய நண்பர்கள். அன்றும்
வம்ஸியும் ஜானும் வந்திருந்தனர். எல்லோரும் தொலைபேசி எண் கேட்டார்கள்
நான் தயங்காமல் கொடுத்துவிட்டேன். நான் உட்கார்ந்தி ருக்கும் பொழுதே மாடி
வீட்டுப் பசங்க வந்து விட்டார்கள் நான் நடந்ததைக் கூறவும் பதறி
விட்டர்கள்
பாட்டி, தப்பு செய்துட்டீங்க. பசங்க வீட்டூக்கு வந்துடுவாங்க
வரட்டுமே, வந்தா, பேத்தி வெளியே போயிருக்கான்னு சொல்லிட்டுப் போறேன். எத்தனை நாள் வருவான். போரடித்து வருவதை அவனே நிறுத்திவிடுவான் என்று நான் கூறவும் பாட்டி விளஞ்ச பாட்டி என்று கூறி சிரித்தார்கள். ஆனால் நடந்தது வேறு.

வம்சிதான் முதலில் கூப்பிட்டான். பேச ஆரம்பித்து, அதிக நேரம் இருவரும்
பேசிக் கொண்டே இருந்தோம். கடைசியில் நான் யார் என்பதைக் கூறினேன்.அவன்
சொன்ன பதில் எனக்குத்தான் வியப்பை அளித்தது. என் குரலால், நான் சிறு பெண்
இல்லை என்பதை யூகித்து விட்டான். ஆனால் பேச்சு சுவாரஸ்யமக இருந்ததால்
தொடர்ந்து பேசியிருக்கின்றான்
அம்மா, நீங்கள் செய்தது சரி. வயதைச் சொல்லியிருந்தால் நிச்சயம் பேச
ஆரம்பித்திருக்க மாட்டேன். சாட்லே வர்ரவங்க கெட்டவங்க இல்லே.
பொழுது போகணும். சில சமயம் நல்ல பிரண்ட்ஸ் கிடைப்பாங்க. ஆனாலும் இப்போ
உங்க கிட்டே பேசினேனே அவ்வளவு நேரம் பேசி இருக்க மாட்டேன். எத்தனை விஷயம் பேசினோம். உங்க வீட்டுக்கு வருவேன். சொல்லிட்டு வர மாட்டேன். திடீர்னு வருவேன் என்றான்..

அடுத்துப் பேசியவன் ஜான். அவனும் உண்மை தெரிந்து அதிர்ந்து போகவில்லை.
அன்றே வீட்டிற்கு வந்தான்.
வம்சி சொன்னது போல் திடீரென்று ஒரு நாள் வந்து, “ அம்மா , ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க. பசிக்குது.
குழந்தையாய் கேட்கவும் உருகிப் போனேன். இன்றும் அவன் என் செல்லக்
குழந்தையாக இருக்கின்றான்
சாட்டிங் மூலம் ஒரு மாதத்தில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் 27. மாடி
வீட்டுப் பையன்களையும் சேர்த்தால் எண்ணிக்கை 32 ஆயிற்று. இவர்களை
ஒன்றுபடுத்த ஒரு புதிய திட்டம் தோன்றியது.
அலைகள் இன்னும் வரும்.
.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பதிவு...
உங்கள் தளத்திற்கு முதல் வருகை...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...