Thursday, July 26, 2012

நினைவலைகள் -18


நினைவலைகள்  -18

சென்னையில் கணிணி மூலமாக ஏற்பட்ட இளைஞர்களின் தொடர்பைக்
கூட ஆக பூர்வ சக்தியாக்கத் தோன்றி செயலாக்கினேன். இன்றும் அவர்கள் என்னுடன் தொடர்பு வைத்திருக்கின்றார்கள்.  என் முதுமைத் தோற்றம் அவர்கள் உற்சாகத்தைக் குறைக்கவில்லை. சிறியவர்களோ பெரியவர்களோ யாராயினும் சரி, நம் எண்ணத்தில் நமக்கே தெளிவு வேண்டும். உறுதியும் வேண்டும். என்னுடைய இந்த இயல்பிற்கு வித்திட்டது கருப்பட்டி கிராமம் தான்.

ஐம்பது ஆண்டுகளில் இளைய தலைமுறையில் மாற்றங்கள்

கருப்பட்டி கிராமத்தில் இருந்த இளைஞர்களும் கேலியும் கிண்டலும் பேசிக் கொண்டு நண்பர்களுடன் வலம் வந்தார்கள். ஆனால் பெரியவர்களைக் கண்டவுடன் ஓர் மரியாதை தோன்ற அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து வாழும் பெற்றோர்களுடன் வாழ்ந்தவர்கள். ஊரிலும் ஓர் கட்டுப்பாடு. எனவே அந்த அடக்கம் இயல்பாக அமைந்தது.

இப்பொழுது சின்னக் குழந்தைகள் உட்பட, ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகள் நிறைய கேட்கின்றார்கள். பதில் தெரிந்தாலும் நாம் பதில்கள் கூறுவதில்லை. குழந்தைகள் தானகப் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றோம். ,

என் தங்கையின் பேரன் ராகேஷுக்கு ஆறு வயது இருக்கும். பாட்டி ஆசையாய்ப் பேரனை அணைத்து முத்தமிட்டிருக்கின்றாள். உடனே அவன் “ பாட்டி, முத்தா கொடுக்காதே. புருஷன் பொண்டாட்டிதான் முத்தா கொடுத்துப்பா” என்று கூறவும் இவள் அதிர்ந்து போயிருக் கின்றாள். இதனை அவள் என்னிடம் சொல்லிச் சொல்லி குமுறினாள்.
 இது அந்தக் குழந்தைக்கு யார் சொல்லிக் கொடுத்தது?
குழந்தை தூங்கிவிட்டான் என்று நினைத்து மங்கிய ஒளியில் அப்பா,
அம்மா கொஞ்சலைப் பார்த்ததன் விளைவா? அல்லது, ஊடகத்தாக்கமா?

குழந்தைகளும் இளையவர்கள் மட்டுமா மாறியிருக்கின்றார்கள்!? பெரியவர்களும் தாங்கள் மாறியிருப்பதை உணராமல் இருக்கின்றோம்.
குழந்தைகள் முன்னால் புருஷன் , மனைவி சண்டை .  நாமே அவர்களுக்குப் பொய் சொல்லிக் கொடுக்கின்றோம். “அப்பா கிட்டே சொல்லாதே, அப்பா கேட்டா இப்படிச் சொல்லு “ இது அம்மா.
“டேய் அம்மா கிட்டே சொல்லதே “ இது அப்பா. நம் நாடகத்தைக் சிறுவர்கள் முன் நடத்துகின்றோம்.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் ஹிப்பிகளின் காலம் இருந்தது. கட்டுப்பாடற்ற , சுதந்திரமான வாழ்க்கை. வீட்டை விட்டு சிறு வயதிலேயே பையன்களும் பெண்களும் வெளியே போய் விடுவார்கள். உடை உடுத்துவ
திலிருந்து, எல்லாப் பழக்க வழக்கங்களும்  நடை முறையில் இருக்கும் பழக்க வழக்கங்களை உடைத்தெறிந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள். இவர்களையும் மாற்ற ஒரு துறவி அவர்களுடன் பழக ஆரம்பித்தார். சொக்குப் பொடி போடவில்லை.  கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் நெருங்கினர்.அவர் அணுகுமுறையே வித்தியாசமாக இருந்தது.

எதற்காகக் அழைத்தீர்கள்?
கொஞ்சம் பேசத்தான்.
எங்களுக்கு புத்திமதி பிடிக்காது.
அதற்காகக் கூப்பிடவில்லை. உங்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆசை
எதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும்?
எங்களில் நீங்கள் வித்தியாசமாக இருக்கின்றீர்கள்.காரணம் ஏதாவது உண்டா?
ஆமாம் நாங்கள் வித்தியாசமானவர்கள் தான் எங்களுக்கு மற்றவர்களைப் பிடிக்கவில்லை
ஏன்?
எல்லோரும் போலிகள். எழுதுவது, சொல்லுவது வேறு. நடப்பது வேறு. எதற்கு இந்தப் பொய்கள் ?

பெரியவர்கள் சொல்லுவதற்கு மாறாக நடப்பவைகளைப் பட்டியல் போட்டுச் சொல்ல ஆரம்பித்தனர்.

நாங்கள் எங்கள் இஷ்டம் போல் இருக்க விரும்புகின்றோம். பொய் சொல்லி அல்ல. இப்படித்தான் நாங்கள் என்று சொல்லி நடக்கின்றோம்

பாண்ட் போட்டால் ஒரு கால் நீளம். இன்னொரு கால் குட்டை.
உடையைக் கிழித்துவிட்டுக் கொள்வது.ஆணும் பெண்ணும் மிருகங்களைப் போல் வெளிப்படையாகப் பழகுவது. எதற்கும் கட்டுப் பாடு கூடாது. மற்றவர்கள் பார்க்கின்றார்களே என்று  பார்வைக்குக் கூட மதிப்பு கொடுக்க விரும்பவில்லை. வீடு வேண்டாம். வெட்ட வெளி பொதும். இதுதான் ஹிப்பிகளின் வாழ்க்கை

துறவி பொறுமையாக எல்லாம் கேட்டார். பின்னால் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்
உங்களுக்குத் தலைவலி, உடல்வலி வருமா
வரும்
உங்கள் இஷ்டம் போல் இருங்கள். வலி வராமல் இருக்க வழி சொல்லிக் கொடுத்தால் கேட்பீர்களா?  இந்த வலி போனால் இன்னும் ஜாலியாக இருக்கலாமே

ஹிப்பிகளின் மனத்தைத் தொட்ட வார்த்தைகள்.

குடிப்பது, போதை மருந்து சாப்பிடுவது, கட்டுப்பாடற்ற வாழ்க்கையினால் வரும் வலிகள் போனால் இன்னும் சுதந்திரமாக வாழ்க்கையை அனுபவிக்க லாமே!
ஏதாவது மருந்து இருக்கா?

மருந்து இல்லை ஒரு நாளைக்கு ஒரு முறை கொஞ்ச நாட்கள் வாங்க. நான் சொல்றதைச் செய்யுங்க. வலி போய்விடும்

தினமும் பள்ளிக்கூடம் வர்ரமாதிரி வர எங்களுக்குப் பிடிக்காது

உங்கள் இஷ்டம்போல் எந்த நேரத்தில் வந்தாலும் சரி. ஆனால் தினமும் வர வேண்டும். உங்கள் உடம்பைச் சரியாக்கத்தானே வரச் சொல்றேன்

கூப்பிட்டு லெக்சர் அடிக்க மாட்டிங்களே. பெரியவங்க லெக்சர் கேட்டு கேட்டு அலுத்துப் போச்சு

லெக்சர் கிடையாது. கொஞ்ச நேரம் மட்டும் வந்துட்டுப் போங்க. அப்புறம் உங்க இஷடம் போல் போய் வாழுங்க

துறவியின் பேச்சு வென்றது. முதலில் ஒழுங்கற்று வந்தார்கள் ஆனால் தினமும் வந்தார்கள். அவர்களுக்குத் தினமும் சில பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன. சிலநாட்களில் சிறிது குணம் தெரிந்தது

அப்பொழுது துறவி மீண்டும் பேசினார்.
“தினமும் வருவதில் கொஞ்சம் வலி போக ஆரம்பித்திருக்கின்றது. இனி கொஞ்சம் குறித்த நேரத்தில் வரப் பார்க்கவும். கட்டாயம் இல்லை. குறித்த நேரத்தில் பயிற்சி செய்தால் இன்னும் குணமாகலாம்”

குறித்த நேரத்தில் வர ஆரம்பித்தார்கள்

ஹிப்பிகளுக்கு அந்த துறவியைப் பிடித்திருந்தது. அவர் புத்திமதி எதுவும் கூறவில்லை. அவர்களுடன் அரட்டையடித்தார். கொடுக்கும் பயிற்சியும் அவர்கள் உடலுக்கு நல்லதே செய்தது. விட்டுப் போன கட்டுப்பாடு களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மீள ஆரம்பித்தனர். பின்னர் சில மாதங்களில் அவர் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தனர். அமெரிக்க அரசுக்கு துறவியின் செயல்பாடுகள் வியப்பையும் மகிழ்வையும் கொடுத்தது. துறவியைச் சிறப்பு செய்தது.

ஹிப்பி கலாச்சாரம் போய்விட்டது. ஆனால் பள்ளிப் படிப்பு முடியவும் வீட்டிலிருந்து வெளியில் சென்று வாழும் பழக்கம் இருக்கின்றது. 18 வயது இரண்டுங்கெட்டான் வயது. அனுபவங்கள் வேண்டும் என்று பெற்றவரும் சொல்கின்றனர் , பிள்ளையும் சொல்கின்றான். சட்டம் மட்டும் அல்ல, வாழும் முறையிலும் 18ல் சுந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

அந்தத் துறவி இந்தியாவிலிருந்து போனவர்

அவர்தான்  ஸ்ரீ சுவாமி சச்சிதானந்த சுவாமிகள்.

உயர்திரு பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் மதிப்பையும் ஆதாரவையும் பெற்றவர். துறவியின் ஆன்மீகக் காரியங்களுக்கு உதவி செய்தார்.

 நடிகர் ரஜணிகாந்தின் பெரு மதிப்பைப் பெற்ற குருநாதர் சுவாமிஜி.

ஹிப்பியின் கதை அவரே சொல்லக் கேட்டேன். சென்னையில்
பகீரதன் அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிருபர்கள் கூட்டத்தில் ஸ்வாமிஜியே எல்லாம் கூறினார்கள். அப்பொழுது ஹிப்பிகளின் பிரச்சனை
உலகமெங்கினும் செய்தியாக இருந்த காலம். ஸ்வாமிஜியுடன் சில அமெரிக்க ஆண்களும் பெண்களும் வந்திருந்தனர். அவர்கள் ஹிப்பிகளாக இருந்து இப்பொழுது ஸ்வாமிஜியின் சீடர்களாக மாறியிருந்தனர். அவர்களும் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறினார்கள்.

அமெரிக்காவில் சுவாமிஜி  நிறுவிய அமைப்பின்  பெயர்
Integral yoga institute. இன்று பல கிளைகளுடன் செயலாற்றி வருகின்றது

இன்று அமெரிக்காவில் யோகாவகுப்புகளுக்குச் செல்பவர்கள் அதிகம்.
பலர் வெவ்வேறு பெயர்களில் யோகா பயிற்சி அளித்து வருகின்றனர். மருத்துவ ரீதியிலும், யோகாவும் தியானமும் மன அழுத்தத்தைக் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறைகின்றதாகச் சொல்கின்றனர். மதுவோ , தூக்க மாத்திரையோ இல்லாமல் தூங்க முடிகின்றது என்கின்றார்கள். அந்த அளவு விழிப்புணர்வு காணப் படுகின்றது.

இந்தியக் கலாசரத்தின் வேர்கள் ஆழமாக வேரூன்றி இருப்பதால் இந்த
நிலை இன்னும் நம்மிடை வரவில்லை. ஆனாலும் அதன் நிழல் வர ஆரம்பித்துவிட்டது.

மாறிவரும் காலத்தைப் புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து தன் குறைகளைக் களைய முயல வேண்டும்.
பிரச்சனைகள் எல்லா வயதினருக்கும் இருக்கின்றது. விழிப்புடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். நம்மிடம் மெத்தனம் அதிகமாக இருக்கின்றது. இழப்பு வரவிட்டு அழுது பயனில்லை.
வரும் முன் காப்போம்

மீண்டும் சந்திப்போம்

1 comment:

Avargal Unmaigal said...

முதன் முதலாக உங்கள் தளம் வருகிறேன்...நினைவலைகள் அருமை