Friday, February 10, 2012

நினைவலைகள்-05

மூன்றாவது நாள் மேலதிகாரி வந்ததை அறியவும் அவரைப் பார்க்கச் சென்றேன். ஏனோ அவரால் என்னை முக மலர்ச்சியுடன் வரவேற்க முடியவில்லை. என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. முகத்தில் சாந்தம். கதர் ஆடையில் ஓர் எளிமை. என்னால் அவருக்குப் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது கடமை என்ற எண்ணம் மட்டுமே தோன்றியது.

அந்த வட்டாரத்தில் இரண்டரை மாதமே பணிக்காலம். பின்னர் பயிற்சிக்காக காந்தி கிராமம் செல்ல வேண்டும்.இந்த குறுகிய காலத்தில் முடிந்தவரை சமுதாயப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மனத்தில் உதித்தது. கிராமத்தில் வளர்ந்தவள்தான் நான். ஆனால் அப்பொழுது பிள்ளைப் பருவம். விளையாட்டுத்தனம் நிறைந்த பருவம். இப்பொழுது பொறுப்புணர்ச்சி தோன்றியுள்ளது. திடீரென்று பெரிய மனுஷியாகிவிட்ட உணர்வு. மனித மனம் வியப்புக்குரிய ஒன்று. இருபதாண்டுகள் வாழ்க்கையில் பெறாத பல படிப்பினைகள் இந்த இரண்டரை மாதங்களில் கிடைத்தன. லட்சுமி சொன்ன “ஜாக்கிரதையாகஇருக்கவேண்டும்,“ என்ற சொல் என் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. கற்பது ஓர் தொடர் நிகழ்வு, அதற்கு முற்றுப்புள்ளி கிடையாது.

என் வட்டாரத்தில் இன்னும் சில பெண்கள் வேலை பார்த்து வந்தனர். கிராமங்களுக்குப் போகும்பொழுது யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். 3 மைல்கள், 5 மைல்கள் என்று நடந்து செல்ல வேண்டியிருக்கும். சில நேரங்களில் பாதையில் போகும் கட்டை வண்டியில் ஏறிச் செல்வதும் உண்டு. நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்றாலும் அதன் மேல் உட்கார்ந்து போனதுண்டு. இதை சொல்லும் பொழுது ஓர் நிகழ்ச்சி நினைவிற்கு வருகின்றது

சிதம்பரம் போயிருந்தேன். அங்கிருந்து கங்கைகொண்டசோழபுரம் பார்க்கப் புறப்பட்டேன். என்னுடன் என் சுவீகார மகள் வல்லரசி உடன் வந்தாள். அந்த பஸ் எங்களை மெயின் ரோட்டிலேயே இறக்கிவிட்டது. ஊருக்குள் நடந்து போக வேண்டும். நெல்மூட்டை ஏற்றிக் கொண்டு ஓர் கட்டை வண்டி வந்து கொண்டிருந்தது. வல்லரசி என்னை அதில் ஏற்றிக் கூட்டிப் போகும்படி கேட்டுக்கொண்டாள். எனக்கும் கட்டைவண்டிச் சவாரி கிடைத்தது. என் எண்ணங்களோ விண்ணில் பறந்தன. இதே பாதையில் சோழ ராணிகள், இளவரசிகள் பல்லக்கிலும்,ரதத்திலும் போயிருப்பார்கள்.இப்பொழுது இந்த ராணி போய்க் கொண்டிருக்கின்றாள். கல்கியும் அகிலனும் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தனர். இது நடக்கும்பொழுது எனக்கு 45 வயது.

கற்பனைதான் நம்மை எப்படியெல்லாம் மகிழ வைக்கின்றது. ஆனால் அந்தக் கற்பனையும் ஆள் ஆளுக்கு மாறித்தான் வருகின்றது. கிராமங்களைப் பார்வையிடச் சென்றபொழுது அவர்களுடன் பழகுவது எனக்கு சிரமமாக இல்லை. முதலில் நான் கிராமத்தில் வளர்ந்தவள். அடுத்தது பேச்சுத் திறமையுள்ளவள். கொஞ்ச நேரத்திலேயே கிராமத்து மனிதர்கள் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்கள். முதலில் கல்வியைப் பற்றிப் பேசும் பொழுது அவர்கள் மனத்தில் ஏற்கனவே ஓர் எதிர்ப்பு சக்தி, மறுத்தல் பதிந்திருந்தது. படிப்பது என்பது வேலைக்குப் போக ஒரு சாதனம் என்ற கருத்து உருவானதற்குக் காரணம் அவர்கள் அறியாமை மட்டுமல்ல, கற்றவர்கள் கூட கல்வியின் அடிப்படை நோக்கங்களைச் சரிவர விளக்கவில்லை. அன்று மட்டுமல்ல, இன்றும் அதே நிலை நீடித்திருக்கின்றது.

“கூலி வேலை செய்கிறவங்களுக்கு எதுக்கு படிப்பு? அடுத்தவீட்டுக்குப் போற பொண்ணுக்கு எதுக்கு படிப்பு? சமைக்கணும்; புருஷன் சொல்றபடி நடக்கணும்; புள்ளைய வளக்கணும். இதுக்குப் படிப்பு வேண்டாம்.”

கொஞ்சம் வசதியானவர்களின் மறுப்பு வேறுகோணத்தில் இருந்தது.

“வயக்காட்டப் பாத்துக்க, தோட்டம் பாத்துக்க எதுக்கு பெரிய படிப்பு? எழுதப் படிக்கத் தெரிஞ்சாப்போதும். அது கூட வேண்டாம். பெரியவங்க மனத்துலேயே கணக்குப் போட்டுப் பாத்துப்பாங்க. அதைப்போல் சின்னவங்களும் காலத்துலே கத்துக்குவாங்க.”

சில கிராமங்களில்தான் பள்ளிகள் இருந்தன. அதற்கும் சரியாகப் பிள்ளைகள் வருவதில்லை. வருபவர்களும் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுவது வழக்கம். ஏன் இந்த நிலை? இப்பொழுது வரலாற்றை நினைத்துப்பார்க்க வேண்டும்.

விலங்கோடு விலங்காக மனிதர்கள் வாழ்ந்துவந்தார்கள். பின், புலம்பெயர்ந்து குழுமங்களாகச் செல்ல ஆரம்பித்தார்கள். அவனுக்கிருந்தது இரண்டு பசிகள். வயிற்றுப் பசி, மற்றொன்று உடல்பசி. இந்த இரண்டிற்கும் எந்தவரன்முறையும் அப்பொழுது அவனுக்குக் கிடையாது. உயிரைக்காப்பாற்றுவதே அவனுக்குப் போராட்டம். அச்சமும் அதிசயமும் ஆண்டவன் கொள்கையைப் பிறப்பித்தன. கூட்டம் அதிகமாக ஆக, பலமும் அறிவும் நிறைந்த தலைமை தோன்றியது. ஓர் இடத்தில் நிலைத்து வாழும்பொழுது தங்களுக்குச் சில கட்டுப்பாடுகளை உண்டாக்கினான். குடும்பம் தோன்றியது. தொழில்களுக்கேற்ப பிரிவினைகளை உருவாக்கினான். வசதிபடைத்தவர்களும் உழைக்கும் கூட்டமும் இருவேறு கிளைகளாக வளர ஆரம்பித்தன. மனிதனாகப் பிறந்தும் கொத்தடிமையாக வாழப் பழகிக்கொண்டான். அதன் தாக்கம்தான் நான் கிராமத்தில் பார்த்தது.

1956ம் வருடம் மே,ஜூன் மாதங்களில் நான் சொல்லும் நிலைமை இது. கொத்துவேலைக்கு ஒரு கூட்டம், தோட்ட வேலை, வயல்புற வேலை என்று ஒவ்வொரு கிராமங்களிலும் பல கூட்டங்கள் வாழ்ந்துவந்தன. ரோட்டு வேலை, வீடு கட்டும் வேலை என்றால், “கருப்பனிடம் சொல்லு, அவன் ஆட்களைக் கூட்டிட்டு வருவான்,” என்று பணம் படைத்தோன் சொல்லுவான்; கருப்பனும் அவன் கூட்டத்தைக் கூட்டிச்செல்லுவான். கிராமத்தில் உள்ளவர்களுக்கு வயிற்றுப்பசி தீர வேண்டும். ஒதுங்க இடம் வேண்டும். உடுத்தக்கூட அவன் அதிகம் நினைத்ததில்லை.’மானத்தை மறைக்க துணி போதும்,’என்று நினைத்தார்கள். அவர்கள் தேவை எளிமையானவை. அவைகள் கிடைத்தால் போதும். நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எனவே கல்வியைப் பற்றிய விழிப்புணர்வுத் திட்டங்கள் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இப்பொழுதும் பள்ளிக்கூடத்திலிருந்து இடையில் படிப்பில் நின்று போகின்றவர்கள் நிறைய. நம் நாட்டில் மட்டுமல்ல. அமெரிக்காவிலும் பள்ளிக்கல்வியை முழுதும் படிப்பவர்களின் எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கின்றது.

உலக நடப்புகளின் போக்குகள் தெரிந்து கொண்டால்தான் மனிதன் முன்னேற முடியும். ஓட்டின் மதிப்புகூடத் தெரியாத நிலையில் பாமரத்தனம் அதனால்தான் நீடித்து இருக்கின்றது. நீண்டகாலப் பயனைவிட தற்காலிகத் தீர்வை அவன் பெரிதாக நினைக்கின்றான். தொலைநோக்கு சிந்தனை அவனுக்குக் கிடையாது. அதிகாரவர்க்கம் அவன் அறியாமையை உபயோகித்துக் கொள்கின்றது. இது புதிதல்ல. வரலாற்றில் தொடர்ந்துவரும் பிணி இது. இந்த இரண்டும் இணைகோடுகளாகவே வந்து கொண்டிருக்கின்றன.

என்று இந்த இடைவெளி போகும்? காலம்தான் பதில் சொல்ல வேண்டும். முடிந்தவரை பணிகள் செய்வோம். பெரியவரின் ஆதங்கம் நன்றாக இப்பொழுது புரிந்தது.

அடுத்து வைத்திய வசதிகளைப் பார்க்கும் பொழுது அங்கும் பல குழப்பங்கள் இருந்தன.. வட்டாரத்திற்கு ஒரு ஆஸ்பத்திரி. குறிப்பிட்ட சில இடங்களுக்கு டாக்டர் வருவார்.ஊரார் அங்கு போய்ப் பார்க்க வேண்டும். கிராமத்தினருக்குப் போவதில் அலுப்பு. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளூர் மருத்துவச்சி இருப்பாள். அவள்தான் கை ராசிக்காரியாம். பரம்பரை பரம்பரையாக அவள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரசவம் பார்ப்பதை கிராமத்தினர் விரும்பினர். அவளிடமோ சுத்தமான கருவிகள் கிடையாது. பிரச்சனைகள் உள்ள பிரசவங்களில் பெண்கள் சாவார்கள். கேட்டால் ஏதோ தோஷம் என்று சொல்லுவார்கள். குழந்தைகளுக்கு உடலுக்கு வந்தால் வீட்டு வைத்தியம் பார்ப்பார்கள். வீட்டு வைத்தியம் சிறந்ததே. ஆனால் எல்லா வியாதிகளுக்கும் மருந்து கிடையாது. மந்திரித்துக் கொள்வதில் நம்பிக்கை. சாமிக்கு நேர்ந்து கொள்வார்கள்.

இக்காரணங்களால் பிரசவகாலத்தில் பெண்கள் மரணம், சின்னஞ்சிறு சிசு மரணம் விகிதாச்சரம் அதிகமாக இருந்தது. உள்ளூர் மருத்துவச்சியை வேலை செய்யாதே என்று சட்டம் போட்டு நிறுத்த முடியாது. ஒவ்வொரு கிராமத்திற்கும் தனிததனியாக மருத்துவர்கள் போட முடியாது. எனவே இந்த மருத்துவச்சிகளுக்குச் சிறப்புப் பயிற்சி கொடுக்கப் பட்டு, அவர்களுக்கு, பிரசவ காலத்தில் வேண்டிய முக்கிய சாதனங்களும் வழங்கப் பட்டு வந்தன. பேசும் பொழுது அரசியல் கட்சிகளைக் குறை கூறுகின்றோம். ஆனால் மனிதன் ஆண்டவனுக்கே லஞ்சம் பேசி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். “ நீ எனக்கு இது செய், உனக்கு உண்டியலில் இவ்வளவு பணம் போடுகின்றேன்.“ இதைச் சொல்லாதவர்களின் கணக்கு எடுத்துப் பாருங்கள்.

பேய் பிசாசு நம்பிக்கை அதிகமாக இருந்தன. “சமஞ்ச பொண்ணு சாயங்கால நேரத்துலே வெளியே போனா பேய் அடிச்சுடும்.“ என்று எல்லோரும் கூறுவார்கள். பட்டினத்து வேலைக்குவந்த எந்தப்பெண்னையும் பேய் அடிக்கவில்லை. மனுஷன் தான் பேயாய் அடித்தான். “சூன்யம் வச்சுட்டாங்க, மருந்து வச்சு மயக்கிட்டா,” இத்தகைய வதந்திகள் அதிகமாகப் பார்க்கலாம்.மூடநம்பிக்கை கொடிகட்டிப் பறந்தது.

இது இந்தியாவில் மட்டுமல்ல@ ஆஸ்திரேலியாவில் ஒரு வருடம் இருந்தேன். அப்பொழுது என் மகன் ஓர் இடத்தைப் பார்க்கக் கூட்டிச் சென்றிருந்தான். மூன்று சகோதரிகள் மலையில் கல்லாகி நின்று கொண்டிருந்தார்கள். 'அதென்ன அங்கேயும் அகலிகைப் படலமா?' என்று சிலர் நினைப்பார்கள். அது ஒரு கதை! ஆஸ்திரேலியா பழங்குடிமக்கள் அங்கே வாழ ஆரம்பித்தது சுமார் 30000 வருடங்களோ அல்லது 50000 வருடங்களோ இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளார்கள். அவர்களுக்குள் சில சட்டதிட்டங்கள், நம்பிக்கைகள். ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் இன்னொரு குழுவினருடன் மண ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள். ஒரு குழுமத்தில் இருந்த மூன்று பெண்கள் அடுத்த குழுமத்தில் மூன்று இளைஞர்களைக் காதலித்து இருக்கின்றார்கள். ஆனால் பெண் பக்கம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இளைஞர்கள் விடவில்லை. போர் தொடுத்துவிட்டனர். பெண்கள் பக்கம் மாந்த்ரீகம் தெரிந்தவர் பெண்களைக் கல்லாக்கிவிட்டார். போரில் அந்தக் கிழவன் இறந்ததால் பெண்கள் கல்லாகவே இருக்க வேண்டி வந்து விட்டது. காதல் சிலைகள். இது ஓர் சுற்றுலா மையம்.

இதன் மூலம் இரு உண்மைகளை நாம் உணரலாம். ஒன்று, திருமணம் ஊர்க்கட்டுப்பாட்டின் எழுதப்படாத சட்டத்தில் வரையறுக்கப் பட்டுள்ளது. இது எல்லா நாடுகளும் இருந்த நடைமுறைப் பழக்கம். மற்றொன்று. மாந்த்ரீகம், தாந்த்ரீகம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல. அதுவும் எல்லா நாடுகளிலும் ஏதோ ஓர் பெயரில் உலா வருகின்றது. மூடப்பழக்கத்தைச் சாடிய சாக்ரட்டீஸ், அவர் மாணவர் பிளாட்டோ போன்றோர் உயிர்கொடுத்துப் போராடியும் இப்பழக்கம் முற்றிலும் அழிக்கப்படவில்லை. அந்த அளவில் சமுதாயத்தில் வேரூன்றிவிட்டது.

மூடப்பழக்கத்தைச் சாடி, அதனை ஒழிக்க நம்மிடையேயும் ஒருவர் இருந்தார். அவர் வாழ்நாள் பூராவும் அதற்காக ஊர் ஊராய்ச் சென்றார். அவரை எல்லோரும் அறிவோம்.சமுதாய வரலாற்றில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் நம் அன்புக்குரிய தந்தை பெரியாரைத்தான் குறிப்பிடுகின்றேன். அவரைப்பற்றி நிறைய பேசலாம். இது சமுதாய வரலாறு. அவரில்லாமல் எழுதவே முடியாது.

(அலைகள் தொடரும்)

Saturday, February 4, 2012

நினைவலைகள்-04

இரண்டாம் நாள் அலுவலகம் சென்றபொழுது, மீனாட்சியும் லட்சுமியும் உட்கார்ந்திருந்தார்கள். பரமசிவம் மறுபக்கம் ஓரத்தில் நின்று கொண்டு லட்சுமியைப் பார்த்துக்கொண்டே ஏதோ கிண்டல்பேச்சு பேசிக்கொண்டிருந்தார். என்னைப் பார்க்கவும் அருகில்வந்து சில காகிதங்கள் கொடுத்தார். கூட்டுறவு பற்றி ஒரு பயிற்சி முகாம் அடுத்தவாரத்தில் நடக்க இருக்கின்றது. அதற்கு யார் யாரெல்லாம் என்ன வேலைகள் செய்ய வேண்டுமென்ற குறிப்புகள் இருந்தன.அதுசம்பந்தமாக சில விபரங்கள் கூறிவிட்டுப் போய்விட்டார். அதன்பின் நானும் மற்ற இருபெண்களும் உள்ளூர் மாதர் சங்கம் காணப் புறப்பட்டோம்.

ஓர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அக்காலத்தில் ஊராட்சியில் நான்கு மகளிர் மன்றம் தான். அப்பொழுது மாதர் சங்கம் என்று கூறுவோம். அதற்கு ஒரு ’கன்வீனர்’. அங்கே மூன்று பெண்கள்தான் இருந்தனர். எங்களை உட்காரவைத்துவிட்டு ’கன்வீனர்; வெளியில் சென்றாள். பின்னர் ஒவ்வொரு பெண்ணாக வர ஆரம்பித்தனர். அப்படியும் பன்னிரண்டு பேர்களே வந்தனர்.

மீனாட்சியோ லட்சுமியோ என்ன செய்யவேண்டும் என்று கூறவில்லை. அவர்கள் வந்தவுடன் நானே பேச ஆரம்பித்தேன். அவர்கள் குழந்தைகளைப் பற்றி விசாரிக்கவும் தயங்காமல் பேசினார்கள். அப்படியே கதைபேச ஆரம்பிக்கவும் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தனர்.அடுத்தவாரம் கூட்டுறவு முகாம் என்று சொல்லி இருந்ததால் ஒற்றுமையாக இருப்பதுபற்றி கொஞ்சம் கிண்டலாகப் பேசினேன். அவர்களும் சிரித்துக்கொண்டே,தெருவில் பெண்களுக்குள் வரும் சண்டைகள் பற்றிப்பேசி, அது தவறுதான் என்று அவர்களே சொன்னார்கள். எனக்குள் நான் ’சபாஷ்’ போட்டுக் கொண்டேன். ’ஓ, இப்படித்தான் கதை சொல்லிப் பேச வைக்க வேண்டும் போல் இருக்கின்றது,’ என்று நினைத்துக் கொண்டேன். நேரம் போனதே தெரியவில்லை. சங்கத்திற்கு வருவதால் லாபமில்லை என்றார்கள். பகல்நேரம் வேலைக்குப் போக வேண்டி இருப்பதால் கூலி நஷ்டம் என்றாள் ஒருத்தி. அவர்கள் பிரச்சனைகளைக் கேட்டுக் கொண்டேன்.

அங்கிருந்து என் வீட்டிற்குப் போனோம். கதவைத் திறந்தவுடன், அங்கு சாப்பாடு கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்தது. என் தந்தை சொன்னதை மறந்துவிட்டேன். சரவணன் வீட்டில் வேலைபார்க்கும் முத்தம்மாவை எங்கள் வீட்டிற்கும் வேலைக்கு அமர்த்தியிருந்தார். மூன்று மாதங்களுக்கும் குறைவாக இருக்கப் போவதால் சரவணன் வீட்டிலிருந்தே காலை காபி முதல் எல்லாம் வீட்டிற்கு வந்துவிடும். முத்து எல்லா வேலைகளையும் செய்வாள். அவளிடமும் ஒரு சாவி கொடுக்கப் பட்டிருந்தது. இங்கிருந்து காந்திகிராமத்திற்கு ஐந்து மாதங்கள் பயிற்சிக்குப் போக வேண்டும். பயிற்சிக்குமுன் சிலநாட்கள் களப்பணி செய்ய வேண்டும்.

சாப்பாடு முடியவும் பேச ஆரம்பித்தோம். மீனாட்சி தன்னைப்பற்றிக் கூறினாள். விசேஷமாக ஒன்றும் இல்லை. ஆனால் லட்சுமி பேசாமல் தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள். “என்ன லட்சுமி, பேசாமல் இருக்கின்றாய்? சொல்லத் தயக்கமாக இருந்தால் சொல்ல வேண்டாம்,” என்றேன். உடனே லட்சுமி அழ ஆரம்பித்தாள். இருந்த இரண்டு பெண்களும் என்னைவிட வயதில் மூத்தவர்கள். லட்சுமிக்குப் பதிலாக மீனாட்சி பேச ஆரம்பித்தாள். ஒரு பெண்ணின் சோகக்கதை.

லட்சுமிக்குப் பதினைந்து வயதில் திருமணம்; பதினாறு வயதில் விதவை. எட்டாவது வகுப்புவரைதான் படிப்பு. நெற்றியில் பொட்டு இருந்தது. அந்தக் காலத்தில் விதவைகள் நெற்றியில் திலகம் வைக்கக்கூடாது. ஏதோ பின்னால் கதை இருக்கின்றது என்பது புரிந்தது.


ஊரக வளர்ச்சித்துறையில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பொழுதே, விதவைகள், ஆதரவற்றவர்கள் ஆகிய பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வேலைக்கு எடுத்துவந்தனர். பெரும்பாலான பெண்கள் ஏதோ பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள். இப்பொழுது போல் அப்பொழுது படித்த பெண்கள் நிறைய கிடையாது. படித்தவர்களும் நகர்ப்புற வேலைகளுக்கே போனார்கள். மேலும், ஆதரவற்றவர்கள், ஊனமுற்றோர், இவர்களுக்குப் புனர்வாழ்வு கொடுக்க வேண்டி வேலைகள் கொடுக்கப்பட்டன. லட்சுமி பெயரில் மங்களகரமானவள்.ஆனால்,தாலிஇழந்துவிட்டாள்.பெயர் வைக்கப்பட்டதற்காவது கடவுள் கருணைகாட்டி இருக்கக்கூடாதா என்று படைத்தவன் மீது கோபம் வந்தது.

“லட்சுமி, இதற்காகவா வருத்தப் படறே?” என்று நான் கேட்கவும் மீண்டும் மீனாட்சியே பதில் கூறினாள். அப்பப்பா, பயங்கரமான கதை.


பெயருக்கேற்றாற்போல, லட்சுமி பார்க்க லட்சணமாக இருந்தாள். வீடுகளுக்குச் சென்று பெண்களுக்கு ராட்டை நூற்கக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவள் பணி. பக்கத்து ஊரில் வேலைபார்க்கும் பொழுது ஊர்ப் பெரியவர்களில் ஒருவர் வீட்டுடன் பழக ஆரம்பித்தாள். அந்த அம்மாள் நல்லவர்கள். ஓர் இராட்டை வாங்கிக்கொண்டார். இவளும் அடிக்கடி அங்குபோய் நூற்பு கற்றுக்கொடுத்து வந்தாள்.

ஒரு நாள் அங்கே போயிருந்தபொழுது அந்த அம்மாள் இல்லை. வீட்டு அய்யா மட்டும் இருந்தார். லட்சுமி திரும்ப முனைந்தபொழுது உட்காரச்சொன்னார்.ஒரு மாதிரியாக இருந்தாலும் உட்கார்ந்தாள். ஏதோ பேசிக்கொண்டிருந்தவர் பக்கத்தில் வந்திருக்கின்றார். லட்சுமி பயந்துபோய் உடனே எழுந்து விட்டாள். ஆனால் அவரோ அவளைக் கட்டிப்பிடிக்கவும் போராட ஆரம்பித்திருக்கின்றாள்.அவர் பலத்தின்முன் அவள் சக்தி ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டது. அந்த மனித மிருகம் அவளைத் தனக்கு இரையாக்கிக் கொண்டு விட்டது. குமுறிக் குமுறி அழுதாள். இழந்தது இனி பெற முடியுமா?


வெளியில் சென்றிருந்த அம்மா வந்தபொழுது லட்சுமி அழுது கொண்டிருப்பதைப் பார்த்தாள். நடந்ததைப் புரிந்து கொண்டாள். அவளும் கத்தினாள். தப்பு செய்த புருஷனோ மனைவியை அடித்திருக்கின்றான். என்ன கொடுமை! குற்றம் செய்தவன் ஒருவன்; தண்டனை இரு அப்பாவிப் பெண்களுக்கு! அந்த அம்மா கோபத்துடன் உள்ளே போய் ஒரு மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கட்டி எடுத்து வந்து, “பாவி, நீங்க செஞ்ச பாவத்துக்கு அவளுக்கு என் முன்னாலே தாலி கட்டுங்க,” என்றாள். லட்சுமி தன்னைச் சுற்றி நடப்பதை உணரும் சக்தியை இழந்து உட்கார்ந்திருந்தாள். குற்றவாளி தலை குனியவில்லை.

“அவ்வளவுதானே? இவளும் எனக்குப் பொண்டாட்டியா இருந்துட்டுப் போகட்டும்,” என்று லட்சுமிக்குத் தாலி கட்டிவிட்டார்.

லட்சுமி அழுது கொண்டே புறப்பட்டாள். கழுத்தில் கிடக்கும் மஞ்சள் கயிற்றை என்ன செய்வது என்று புரியவில்லை. அந்த அம்மாதான் தைரியம் சொன்னார்கள்.

“தாலியைப் பார்த்தால் ஊர் வாய் மூடிவிடும்.” என்று அந்த அம்மாள் கூறி அவர்கள் வீட்டு வேலைக்காரியுடன் அனுப்பி வைத்தாள். கொஞ்ச நாட்கள் எப்பொழுதாவது அவர் வருவார்.பின்னால் அதுவும் நின்றுபோனது. அவளுக்குக் கிடைத்தது அந்த மஞ்சள் கயிறும் ஒரு குழந்தையும் தான். முன்பு விதவை; இப்பொழுது அவள் வாழாவெட்டி! என்னதான் தாலி கட்டப்பட்டாலும் அவளை மற்றவர்கள் கேலியாகத்தான் பேசுவார்கள். தைரியமாகச் சத்தம் போட்டுப் பேச மாட்டார்கள். பெரிய இடத்துப் பகை எதற்கு என்ற அச்சமும் உண்டு. அதனால் வேறு ஆண்மகன் வாலாட்டுவதில்லை.

“ஏன் லட்சுமி, அவன் உங்கிட்டே வரவும் போராடி இருக்கலாமே? அப்படி வர்றவனை கைநகத்தால் காயப்படுத்துன்னு காந்தி சொல்லி இருக்காரே?” என்றவுடன் இதுவரை பேசாமல் இருந்தவள் கோபத்துடன் என்னைப் பார்த்து, “பேசறது சுலபம். வெறிவந்துட்டா ஆம்புளைக்கு ஆனைபலம் வருதே! அவன் பிடிச்சவுடன் நம்மகிட்டே இருக்கும் கொஞ்சபலமும் போய்டுதே, என்ன நடக்குத்துன்னு புரியறதுக்குள்ளே எல்லாம் போய்டுத்தே?” என்று கத்திக் கொண்டே அழுதாள்.

அவள் கத்தலின் உண்மை எனக்குள் இருந்த ஏதோ ஒன்றைக் குத்திவிட்டது. சிறிதுநேரம் என்னால் பேச முடியவில்லை. என் அதிர்ச்சியைப் பார்த்த லட்சுமிதான் நிதானமடைந்து பேசினாள்.

“மனுஷங்க எல்லாரும் கெட்டவங்க இல்லே. ஆனால் கெட்டது எப்போ வரும், எப்படி வரும்னு தெரியாது. இப்போத்தான் புதுசா வேலைக்கு வந்திருக்கீங்க. உங்களுக்கு முன்னாலே இருந்தவங்க ரொம்ப நல்லவங்க. எப்படி பேரைக் கெடுத்தாங்க? பெண்கள் ஜாக்கிரதையா இருக்கணும். யாரையும் நம்பக் கூடாது. யாரையும் விரோதிச்சிக்கவும் கூடாது. நீங்க என்னைவிடப் படிச்சவங்க. ஆனால் உங்களைவிட எனக்கு வயசு அதிகம். நான் அடிபட்டு அழிஞ்சு போனவ. புத்தி சொல்றதா தப்பா எடுக்காதீங்க.”

அவளையே வெறித்துப்பார்த்தேன். எனக்கு அது முதல் பாடம். பின்னர் பொதுவாக வேலைகள் பற்றிப் பேசினோம். இரண்டு நாட்களில் எத்தனை அனுபவங்கள்! விளையாட்டுப்பெண் மாற ஆரம்பித்துவிட்டாள்.

எப்பேர்ப்பட்ட உண்மை! வெறிவந்தவுடன் மனுஷன் மிருகமாகி விடுகின்றான். பயத்திலேயே பெண் இருக்கும் பலத்தை இழந்துவிடுகின்றாள். பெண்ணாகப் பிறந்தாலே எத்தனை மனித மிருகங்களிலிலிருந்து தன்னைப் பாதுக்காக்க வேண்டியிருக்கின்றது. பத்துவயதுச் சிறுமியைக் கூட குதறிவிட்டு கொன்று போட்டு குப்பையைத் தூர எறிவது போல் செய்யும் மிருகங்களை நடமாட விடலாமா?

சமீபத்தில் ஒருசெய்தி. பெற்ற அப்பனே மகளைக் கற்பழித்துப் பயமுறுத்தி வைத்திருந்த செய்தி பத்திரிகையில் வந்துள்ளது. முன்பே இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதில் வேதனை என்னவென்றால் கெடுத்தவன் சிரிப்புடன் பெரியமனிதனாக வாழ்ந்து கொண்டிருப்பான். வாழ்க்கையைப் பறிகொடுத்தவளை இந்த சமூகம் ஏசும். கொடுமையான உலகம்!

உள்ளம் குமுறியது.அனுபவம் என்னைக் குட்டி அடக்கியது. நாளை எப்படியோ?

(சந்திப்போம்)

Wednesday, February 1, 2012

நினைவலைகள்-03

நினைப்பதெல்லாம் நடப்பதுவும் தெய்வத்தின் அருள்.என் வேலைக்கு அரசு ஆணை கிடைக்கவும் எங்கள் குடும்பமே மகிழ்ந்தது. வெளியூரில் வேலை என்றாலும் வீட்டில் கலக்கம் இல்லை. அக்காலத்தில் ஓர் பெண்ணை வெளியூருக்கு அனுப்பி, தனியாக வசிக்க அனுமதி தருவது அபூர்வம்.

என் பயணம் தொடங்கும் முன்னர் சில விஷயங்களை முதலிலேயே கூறிவிட விரும்புகின்றேன். எழுதும் பொழுது, சிலரின் பெயர்கள், சில ஊர்களின் பெயர்கள் எழுதுவதைத் தவிர்த்திருக்கின்றேன். செய்திகள் முக்கியமே தவிர, அங்கே பெயர்கள் தேவையில்லை. நான் யாருடைய மனத்தையும் காயப்படுத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் தேவையான உண்மைகளும் தெரியப்படுத்த வேண்டும். என் அனுபவங்களைத் தெரிவிப்பது, சமுதாயத்திற்கு நான் செய்யும் கடமையாக நினைக்கின்றேன்.

அடுத்து இன்னொரு தகவல்! கூறப்படும் சம்பவங்கள், அவைகள் நிகழும் காலத்தைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ள வேண்டும். அக்காலத்தில் நடந்தவைகளை இக்கால நடப்புகளுடன் ஒப்புநோக்கி விமர்சனம் செய்வது பொருந்தாது. படிப்படியாக நேரும் மாறுதல்களையும் சொல்லிக்கொண்டு வருவேன்.

இப்பொழுது பயணத்தைத் தொடங்குகின்றேன்.

என் தந்தையுடன் ஊராட்சி அலுவலகம் சென்று வேலையில் சேர்ந்த கடிதம் அளித்தேன். அதன்பின் ஓர் ஊழியர் என்னை அழைத்துக் கொண்டு ஓர் அறைக்குச் சென்று, அங்கிருந்த ஓர் நாற்காலியையும் காட்டி,“இதுதான் உங்கள் இடம்,“ என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். அந்த இடத்தில் ஏற்கனவே உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து நின்று “ இதுதான் உங்களிடம். என் பெயர் பரமசிவம். சமூகக் கல்வியாளர் “ என்று கூறிவிட்டு, அந்த அறையில் இருந்த எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் அலுவலத்தின் பணியாளர்களின் அமைப்பையும் விளக்கினார்.ஊரக வளர்ச்சி அதிகாரியின் கீழ், ஒவ்வொரு துறைக்கும் ஒரு விரிவாக்க அலுவலர் உண்டு. சமூகக்கல்விக்கு மட்டும் ஆண், பெண் என்ற இரு அலுவலகர்கள் .நான் சேர்ந்த பணியின் பெயர் சமூகக்கல்வி விரிவாக்க அலுவலர் (பெண்).

பரமசிவம் என்னிடம் நான் செய்ய வேண்டிய பணிகளைப்பற்றிக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது என் தந்தை மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பரமசிவம் நகன்றவுடன் என் தந்தை அருகில் வந்து வெளியில் சென்று மாலையில் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார். அவருடன் கால்நடை அலுவலர் சரவணனும் சென்றார்.

சில நிமிடங்கள் கழிந்தன. பரமசிவமும், கூட்டுறவு அலுவலர் நடராஜனும் என் எதிரில் இரு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தனர். ஏனோ அவர்கள் முகங்களைப் பார்க்கவும் நல்ல அபிப்பிராயம் தோன்றவில்லை. மெதுவாகப் பேச ஆரம்பித்தனர்.

“உங்களிடம் ஒரு முக்கிய செய்தி கூற வேண்டும். உங்கள் அப்பா போகட்டும் என்று காத்திருந்தோம். உங்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். நம் வட்டார வளர்ச்சி அதிகாரி பெண்கள் விஷயத்தில் மகாமோசம்..," என்று இழுத்தார் நடராஜன்.

எனக்கு அச்சம் வரவில்லை. ஏனோ செய்தியை நம்பத்தோன்றவில்லை. என் மவுனத்தைக் கண்ட பரமசிவம் பேச்சைத் தொடர்ந்தார்

“உங்களுக்கு முன்னால் பத்மாவதி இருந்தார்கள். இந்த அதிகாரி எப்படியோ அவளைக் கெடுத்துவிட்டார். ஊர்க்காரங்க நோட்டீஸ் அடிச்சுக் கேவலப் படுத்திட்டாங்க. சுவத்திலும் அசிங்கமா எழுதிட்டாங்க. அது நம் பெரிய ஆபீஸ் வரை போய்த்தான் பத்மாவைத் தூக்கிவிட்டார்கள். அந்த இடத்தில்தான் நீங்கள் வந்திருக்கின்றீர்கள். நம் ஆபீஸரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க. “

பரமசிவம் பேசப்பேச எனக்குள் நெருப்பு புகைய ஆரம்பித்தது. பயம் வருவதற்குப் பதிலாக எதிரில் அமர்ந்திருந்த இருவரையும் கெட்ட நோய்க்காரர்கள் போல் உணர்ந்தேன். 'பெண்ணைப் பழிக்கின்றார்கள் பாவிகள்!' என்றுதான் நினைப்பு வந்தது.

என்னிடம் ஒரு குறையுண்டு. 'பெண் விஷயத்தில் ஆண்கள் கெட்டவர்கள்,' என்ற எண்ணம். அப்படி எண்ண வைத்தது பிள்ளைப்பருவத்து அனுபவங்கள், நான் கிராமத்தில் கண்ட காட்சிகளே. குடும்பச்சண்டை தெருவில் நடக்கும். பெண்டாட்டி தலைமயிரைப் பிடித்து இழுத்து உதைப்பான். அவளோ ஓங்கிக் குரல் எழுப்பிக் கத்துவாள். அவனோ அவளை மிதிப்பான். தெருவில் அவள் துடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் திட்டிக்கொண்டே சென்று விடுவான். இவள் தெருவில் புரண்டு அழுவாள். ஒன்றா, இரண்டா பலமுறை தெருக்காட்சிகள் கண்டிருக்கின்றேன். விசாரித்ததில், அவனுக்கு ஒரு 'வப்பாட்டி' (இப்பொழுது அது சின்ன வீடு) இருக்கிறாள்; குடும்பத்தைக் கவனிப்பதில்லை; குடித்துவிட்டு எப்பொழுதாவது வருவான்; இவளோ பொறுக்கமாட்டாமல் கத்துவாள்; அவனோ அடிப்பான். பெண்டாட்டி அடித்து நான் பார்த்ததில்லை. அதனால் என் மனதில் 'ஆண்கள் பொல்லாதவர்கள்,' என்ற எண்ணம் பதிந்துவிட்டது. நிறைய கதைகள் படித்த அனுபவத்தில் வம்புபற்றியும் தெரியும். என்முன் உட்கார்ந்திருந்தவர்கள் வம்பர்கள் என்று நினைத்தேன்.அத்துடன் பணியாற்றும் பொழுது பெண்ணின் மேல் எப்படிப்பட்ட சேற்றை வாரி வீசுவார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். என் மவுனத்தைப் பார்த்த பரமசிவம், “பயப்படாதீர்கள், நாங்கள் இருக்கின்றோம். உங்களுக்குக் கஷ்டம் வராமல் பார்த்துக் கொள்வோம்,“ என்றனர். அடிப்பதற்குக் கை பரபரவென ஊறியது. அடக்கிக்கொண்டு பேசாமல் இருந்தேன். அவர்கள் அறைக்கு வெளியில் போய்விட்டார்கள்.

அவர்கள் போனவுடன் விவசாய அலுவலகர் மாணிக்கம் வந்தார்.

“மேடம், இவர்கள் மோசமானவர்கள். பயப்படாதீர்கள்! நம் அதிகாரி நல்லவர். இவர்களால்தான் கதை கட்டிவிடப்பட்டது. ஊர்க்காரனை சுவத்திலே எழுத வைத்ததும், நோட்டீஸ் அடிக்க வைத்ததும் இவங்கதான்.மெட்ராஸ் ஆபீஸுக்கும் எழுதிப் போடவைத்தவங்க இவங்கதான். இவங்க கிட்டேதான் நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்,“என்று மெதுவாக மாணிக்கம் பேசினார்.ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. பெண்மேல் எந்தப் பழியும் சுமத்துவார்கள், கேவலப் படுத்தப்படுவார்கள் என்பதை உணர்ந்தேன்.

இக்காலத்திலும் அரசியலில் வரும் பெண்கள் மேல் பழிசுமத்தப்படுவதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் பழிப்பவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் பரிசுத்தமாக இல்லை. முதல் நாள் அனுபவம் ஓர் அவல முழக்கம்.. இச்சூழ்நிலை எனக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. என்னால் பொறுமையாக இருக்க முடியுமா? இல்லை விலகி ஓடக் கூடாது, ஒரு கை பார்க்கவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.

மதியம் மூன்று மணிக்கு இரு பெண்கள் வந்தார்கள். ஒருத்தி கிராமசேவிகா. பெயர். மினாட்சி. இன்னொருத்தி இராட்டை கற்றுக் கொடுப்பவர். பெயர் லட்சுமி.. இருவரும் வேலைகளைப் பற்றிப் பேசிவிட்டு மறுநாள் உள்ளூர் மாதர்சங்கம் போகலாம் என்றார்கள்.

திரும்பி வந்த என் தந்தை ஒரு செய்தியுடன் வந்திருந்தார். வெளியில் சென்றவர் வாடகைக்கு ஓர் வீடு பார்த்துவிட்டதாகவும், சில சாமான்களும் வாங்கி வைத்துவிட்டதாவும் கூறினார். எவ்வளவு சீக்கிரமாக தன் மகள் தனித்து வாழ, வேண்டிய வசதிகளைச் செய்துவிட்டார்!

மாலையில் என் தந்தை, சரவணன், மீனாட்சி, லட்சுமி, எல்லோருடனும் புது வீட்டிற்குப் போனோம். சரவணன் வீடு இருந்த அதே தெருவில் வீடு. நீளமாக அமந்திருந்தது. கழிவறை கொல்லைப்புறத்தில் கோடியில் இருந்தது. கிணற்றுத்தண்ணீர்தான். வீட்டில் மின்னிணைப்பு கிடையாது (மனக்குரல் பெரியவர் பேசியதை நினைவு படுத்தியது ). ஒரு ஹரிக்கேன் விளக்கு. சரவணன் மனைவி வந்து அடுப்பு மூட்டி பால் காய்ச்சினார்கள். விறகுடன், அல்லது விறகு இல்லாமல் இந்தச் சுள்ளிகள் வைத்து அடுப்பு மூட்டுவது கிராமத்து வழக்கம். சுள்ளிகள் பொறுக்கி கட்டாகக் கட்டி விற்பது ஓர் சிறு தொழில். அதுவும் வயலுக்கு அல்லது காட்டிற்கு வேலைக்குப் போய்விட்டு வரும் பொழுது பெண்கள் தலையில் சுள்ளிக் கட்டைச் சுமந்து கொண்டு வரிசையாய் வருவதைப் பார்க்கவே அழகு.

பால் காய்ச்சி முடியவும் மற்ற சின்னச் சடங்குகளையும் முடித்து வீட்டை விட்டுப் புறப்பட்டோம். என் தந்தை வீட்டுச் சாவியை என்னிடம் கொடுத்தார். குஞ்சுகள் இறக்கை வளர்ந்தவுடன் பறக்கச் சொல்லிக்கொடுத்து விண்ணிற்கு அனுப்பும் தாய்ப்பறவைபோல் என் தந்தை இருந்தார்.

இனி நான் உலகில் தனியாக வலம் வர வேண்டும்.பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கியது.

கட்டுப்பாடுகளுடன் சுதந்திர வாழ்க்கை. ஒரு பெண்ணுக்கு உரிய வீடு கணவர் வீடு. ஆனால் அங்கே அவளுக்குக் கிடைப்பது கட்டுப்பாடுடன் கூடிய உரிமை. இஷ்டம் போல் சுதந்திரத்தைக் கையாண்டால் சுதந்திரம் பாழ்பட்டுவிடும். எதற்கும் ஒரு ஒழுங்கு வேண்டும். விண்ணிலே இருக்கும் கோள்களும், நட்சத்திரங்களும் கட்டுப்பாட்டை இழந்தால், பரந்து விரிந்து கிடக்கும் கடல் கட்டுப்படற்ற சுதந்திரம் விரும்பினால் என்ன நடக்கும்? சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உரிமையைக் காக்கக் கடமையில் அக்கறை வேண்டும்.

முதல் நாள் கசப்பு அனுபவம் என் உணர்வுகளைக் கொஞ்சம் அசைத்தாலும் சமாளித்துவிட்டேன். என் துணிவிற்கு பாதிப்பில்லை

மீண்டும் சந்திப்போம்