Friday, February 10, 2012

நினைவலைகள்-05

மூன்றாவது நாள் மேலதிகாரி வந்ததை அறியவும் அவரைப் பார்க்கச் சென்றேன். ஏனோ அவரால் என்னை முக மலர்ச்சியுடன் வரவேற்க முடியவில்லை. என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. முகத்தில் சாந்தம். கதர் ஆடையில் ஓர் எளிமை. என்னால் அவருக்குப் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது கடமை என்ற எண்ணம் மட்டுமே தோன்றியது.

அந்த வட்டாரத்தில் இரண்டரை மாதமே பணிக்காலம். பின்னர் பயிற்சிக்காக காந்தி கிராமம் செல்ல வேண்டும்.இந்த குறுகிய காலத்தில் முடிந்தவரை சமுதாயப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மனத்தில் உதித்தது. கிராமத்தில் வளர்ந்தவள்தான் நான். ஆனால் அப்பொழுது பிள்ளைப் பருவம். விளையாட்டுத்தனம் நிறைந்த பருவம். இப்பொழுது பொறுப்புணர்ச்சி தோன்றியுள்ளது. திடீரென்று பெரிய மனுஷியாகிவிட்ட உணர்வு. மனித மனம் வியப்புக்குரிய ஒன்று. இருபதாண்டுகள் வாழ்க்கையில் பெறாத பல படிப்பினைகள் இந்த இரண்டரை மாதங்களில் கிடைத்தன. லட்சுமி சொன்ன ஜாக்கிரதையாகஇருக்கவேண்டும்,என்ற சொல் என் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. கற்பது ஓர் தொடர் நிகழ்வு, அதற்கு முற்றுப்புள்ளி கிடையாது.

என் வட்டாரத்தில் இன்னும் சில பெண்கள் வேலை பார்த்து வந்தனர். கிராமங்களுக்குப் போகும்பொழுது யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். 3 மைல்கள், 5 மைல்கள் என்று நடந்து செல்ல வேண்டியிருக்கும். சில நேரங்களில் பாதையில் போகும் கட்டை வண்டியில் ஏறிச் செல்வதும் உண்டு. நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்றாலும் அதன் மேல் உட்கார்ந்து போனதுண்டு. இதை சொல்லும் பொழுது ஓர் நிகழ்ச்சி நினைவிற்கு வருகின்றது

சிதம்பரம் போயிருந்தேன். அங்கிருந்து கங்கைகொண்டசோழபுரம் பார்க்கப் புறப்பட்டேன். என்னுடன் என் சுவீகார மகள் வல்லரசி உடன் வந்தாள். அந்த பஸ் எங்களை மெயின் ரோட்டிலேயே இறக்கிவிட்டது. ஊருக்குள் நடந்து போக வேண்டும். நெல்மூட்டை ஏற்றிக் கொண்டு ஓர் கட்டை வண்டி வந்து கொண்டிருந்தது. வல்லரசி என்னை அதில் ஏற்றிக் கூட்டிப் போகும்படி கேட்டுக்கொண்டாள். எனக்கும் கட்டைவண்டிச் சவாரி கிடைத்தது. என் எண்ங்களோ விண்ணில் பறந்தன. இதே பாதையில் சோழ ராணிகள், இளவரசிகள் பல்லக்கிலும்,ரதத்திலும் போயிருப்பார்கள்.இப்பொழுது இந்த ராணி போய்க் கொண்டிருக்கின்றாள். கல்கியும் அகிலனும் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தனர். இது நடக்கும்பொழுது எனக்கு 45 வயது.

கற்பனைதான் நம்மை எப்படியெல்லாம் மகிழ வைக்கின்றது. ஆனால் அந்தக் கற்பனையும் ஆள் ஆளுக்கு மாறித்தான் வருகின்றது. கிராமங்களைப் பார்வையிடச் சென்றபொழுது அவர்களுடன் பழகுவது எனக்கு சிரமமாக இல்லை. முதலில் நான் கிராமத்தில் வளர்ந்தவள். அடுத்தது பேச்சுத் திறமையுள்ளவள். கொஞ்ச நேரத்திலேயே கிராமத்து மனிதர்கள் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்கள். முதலில் கல்வியைப் பற்றிப் பேசும் பொழுது அவர்கள் மனத்தில் ஏற்கனவே ஓர் எதிர்ப்பு சக்தி, மறுத்தல் பதிந்திருந்தது. படிப்பது என்பது வேலைக்குப் போக ஒரு சாதனம் என்ற கருத்து உருவானதற்குக் காரணம் அவர்கள் அறியாமை மட்டுமல்ல, கற்றவர்கள் கூட கல்வியின் அடிப்படை நோக்கங்களைச் சரிவர விளக்கவில்லை. அன்று மட்டுமல்ல, இன்றும் அதே நிலை நீடித்திருக்கின்றது.

கூலி வேலை செய்கிறவங்களுக்கு எதுக்கு படிப்பு? அடுத்தவீட்டுக்குப் போற பொண்ணுக்கு எதுக்கு படிப்பு? சமைக்கணும்; புருஷன் சொல்றபடி நடக்கணும்; புள்ளைய வளக்கணும். இதுக்குப் படிப்பு வேண்டாம்.

கொஞ்சம் வசதியானவர்களின் மறுப்பு வேறுகோணத்தில் இருந்தது.

வயக்காட்டப் பாத்துக்க, தோட்டம் பாத்துக்க எதுக்கு பெரிய படிப்பு? எழுதப் படிக்கத் தெரிஞ்சாப்போதும். அது கூட வேண்டாம். பெரியவங்க மனத்துலேயே கணக்குப் போட்டுப் பாத்துப்பாங்க. அதைப்போல் சின்னவங்களும் காலத்துலே கத்துக்குவாங்க.

சில கிராமங்களில்தான் பள்ளிகள் இருந்தன. அதற்கும் சரியாகப் பிள்ளைகள் வருவதில்லை. வருபவர்களும் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுவது வழக்கம். ஏன் இந்த நிலை? இப்பொழுது வரலாற்றை நினைத்துப்பார்க்வேண்டும்.

விலங்கோடு விலங்காக மனிதர்கள் வாழ்ந்துவந்தார்கள். பின், புலம்பெயர்ந்து குழுமங்களாகச் செல்ல ஆரம்பித்தார்கள். அவனுக்கிருந்தது இரண்டு பசிகள். வயிற்றுப் பசி, மற்றொன்று உடல்பசி. இந்த இரண்டிற்கும் எந்தவரன்முறையும் அப்பொழுது அவனுக்குக் கிடையாது. உயிரைக்காப்பாற்றுவதே அவனுக்குப் போராட்டம். அச்சமும் அதிசயமும் ஆண்டவன் கொள்கையைப் பிறப்பித்தன. கூட்டம் அதிகமாக ஆக, பலமும் அறிவும் நிறைந்த தலைமை தோன்றியது. ஓர் இடத்தில் நிலைத்து வாழும்பொழுது தங்களுக்குச் சில கட்டுப்பாடுகளை உண்டாக்கினான். குடும்பம் தோன்றியது. தொழில்களுக்கேற்ப பிரிவினைகளை உருவாக்கினான். வசதிபடைத்தவர்களும் உழைக்கும் கூட்டமும் இருவேறு கிளைகளாக வளர ஆரம்பித்தன. மனிதனாகப் பிறந்தும் கொத்தடிமையாக வாழப் பழகிக்கொண்டான். அதன் தாக்கம்தான் நான் கிராமத்தில் பார்த்தது.

1956ம் வருடம் மே,ஜூன் மாதங்களில் நான் சொல்லும் நிலைமை இது. கொத்துவேலைக்கு ஒரு கூட்டம், தோட்ட வேலை, வயல்புற வேலை என்று ஒவ்வொரு கிராமங்களிலும் பல கூட்டங்கள் வாழ்ந்துவந்தன. ரோட்டு வேலை, வீடு கட்டும் வேலை என்றால், “கருப்பனிடம் சொல்லு, அவன் ஆட்களைக் கூட்டிட்டு வருவான்,என்று பணம் படைத்தோன் சொல்லுவான்; கருப்பனும் அவன் கூட்டத்தைக் கூட்டிச்செல்லுவான். கிராமத்தில் உள்ளவர்களுக்கு வயிற்றுப்பசி தீர வேண்டும். ஒதுங்க இடம் வேண்டும். உடுத்தக்கூட அவன் அதிகம் நினைத்ததில்லை.மானத்தை மறைக்க துணி போதும்,என்று நினைத்தார்கள். அவர்கள் தேவை எளிமையானவை. அவைகள் கிடைத்தால் போதும். நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எனவே கல்வியைப் பற்றிய விழிப்புணர்வுத் திட்டங்கள் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இப்பொழுதும் பள்ளிக்கூடத்திலிருந்து இடையில் படிப்பில் நின்று போகின்றவர்கள் நிறைய. நம் நாட்டில் மட்டுமல்ல. அமெரிக்காவிலும் பள்ளிக்கல்வியை முழுதும் படிப்பவர்களின் எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கின்றது.

உலக நடப்புகளின் போக்குகள் தெரிந்து கொண்டால்தான் மனிதன் முன்னேற முடியும். ஓட்டின் மதிப்புகூடத் தெரியாத நிலையில் பாமரத்தனம் அதனால்தான் நீடித்து இருக்கின்றது. நீண்டகாலப் பயனைவிட தற்காலிகத் தீர்வை அவன் பெரிதாக நினைக்கின்றான். தொலைநோக்கு சிந்தனை அவனுக்குக் கிடையாது. அதிகாரவர்க்கம் அவன் அறியாமையை உபயோகித்துக் கொள்கின்றது. இது புதிதல்ல. வரலாற்றில் தொடர்ந்துவரும் பிணி இது. இந்த இரண்டும் இணைகோடுகளாகவே வந்து கொண்டிருக்கின்றன.

என்று இந்த இடைவெளி போகும்? காலம்தான் பதில் சொல்ல வேண்டும். முடிந்தவரை பணிகள் செய்வோம். பெரியவரின் ஆதங்கம் நன்றாக இப்பொழுது புரிந்தது.

அடுத்து வைத்திய வசதிகளைப் பார்க்கும் பொழுது அங்கும் பல குழப்பங்கள் இருந்தன.. வட்டாரத்திற்கு ஒரு ஆஸ்பத்திரி. குறிப்பிட்ட சில இடங்களுக்கு டாக்டர் வருவார்.ஊரார் அங்கு போய்ப் பார்க்க வேண்டும். கிராமத்தினருக்குப் போவதில் அலுப்பு. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளூர் மருத்துவச்சி இருப்பாள். அவள்தான் கை ராசிக்காரியாம். பரம்பரை பரம்பரையாக அவள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரசவம் பார்ப்பதை கிராமத்தினர் விரும்பினர். அவளிடமோ சுத்தமான கருவிகள் கிடையாது. பிரச்சனைகள் உள்ள பிரசவங்களில் பெண்கள் சாவார்கள். கேட்டால் ஏதோ தோஷம் என்று சொல்லுவார்கள். குழந்தைகளுக்கு உடலுக்கு வந்தால் வீட்டு வைத்தியம் பார்ப்பார்கள். வீட்டு வைத்தியம் சிறந்ததே. ஆனால் எல்லா வியாதிகளுக்கும் மருந்து கிடையாது. மந்திரித்துக் கொள்வதில் நம்பிக்கை. சாமிக்கு நேர்ந்து கொள்வார்கள்.

இக்காரணங்களால் பிரசவகாலத்தில் பெண்கள் மரணம், சின்னஞ்சிறு சிசு மரணம் விகிதாச்சரம் அதிகமாக இருந்தது. உள்ளூர் மருத்துவச்சியை வேலை செய்யாதே என்று சட்டம் போட்டு நிறுத்த முடியாது. ஒவ்வொரு கிராமத்திற்கும் தனிததனியாக மருத்துவர்கள் போட முடியாது. எனவே இந்த மருத்துவச்சிகளுக்குச் சிறப்புப் பயிற்சி கொடுக்கப் பட்டு, அவர்களுக்கு, பிரசவ காலத்தில் வேண்டிய முக்கிய சாதனங்களும் வழங்கப் பட்டு வந்தன. பேசும் பொழுது அரசியல் கட்சிகளைக் குறை கூறுகின்றோம். ஆனால் மனிதன் ஆண்டவனுக்கே லஞ்சம் பேசி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். நீ எனக்கு இது செய், உனக்கு உண்டியலில் இவ்வளவு பணம் போடுகின்றேன். இதைச் சொல்லாதவர்களின் கணக்கு எடுத்துப் பாருங்கள்.

பேய் பிசாசு நம்பிக்கை அதிகமாக இருந்தன. சமஞ்ச பொண்ணு சாயங்கால நேரத்துலே வெளியே போனா பேய் அடிச்சுடும். என்று எல்லோரும் கூறுவார்கள். பட்டினத்து வேலைக்குவந்த எந்தப்பெண்னையும் பேய் அடிக்கவில்லை. மனுஷன் தான் பேயாய் அடித்தான். சூன்யம் வச்சுட்டாங்க, மருந்து வச்சு மயக்கிட்டா, இத்தகைய வதந்திகள் அதிகமாகப் பார்க்கலாம்.மூடநம்பிக்கை கொடிகட்டிப் பறந்தது.

இது இந்தியாவில் மட்டுமல்ல@ ஆஸ்திரேலியாவில் ஒரு வருடம் இருந்தேன். அப்பொழுது என் மகன் ஓர் இடத்தைப் பார்க்கக் கூட்டிச் சென்றிருந்தான். மூன்று சகோதரிகள் மலையில் கல்லாகி நின்று கொண்டிருந்தார்கள். 'அதென்ன அங்கேயும் அகலிகைப் படலமா?' என்று சிலர் நினைப்பார்கள். அது ஒரு கதை! ஆஸ்திரேலியா பழங்குடிமக்கள் அங்கே வாழ ஆரம்பித்தது சுமார் 30000 வருடங்களோ அல்லது 50000 வருடங்களோ இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளார்கள். அவர்களுக்குள் சில சட்டதிட்டங்கள், நம்பிக்கைகள். ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் இன்னொரு குழுவினருடன் மண ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள். ஒரு குழுமத்தில் இருந்த மூன்று பெண்கள் அடுத்த குழுமத்தில் மூன்று இளைஞர்களைக் காதலித்து இருக்கின்றார்கள். ஆனால் பெண் பக்கம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இளைஞர்கள் விடவில்லை. போர் தொடுத்துவிட்டனர். பெண்கள் பக்கம் மாந்த்ரீகம் தெரிந்தவர் பெண்களைக் கல்லாக்கிவிட்டார். போரில் அந்தக் கிழவன் இறந்ததால் பெண்கள் கல்லாகவே இருக்க வேண்டி வந்து விட்டது. காதல் சிலைகள். இது ஓர் சுற்றுலா மையம்.

இதன் மூலம் இரு உண்மைகளை நாம் உணரலாம். ஒன்று, திருமணம் ஊர்க்கட்டுப்பாட்டின் எழுதப்படாத சட்டத்தில் வரையறுக்கப் பட்டுள்ளது. இது எல்லா நாடுகளும் இருந்த நடைமுறைப் பழக்கம். மற்றொன்று. மாந்த்ரீகம், தாந்த்ரீகம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல. அதுவும் எல்லா நாடுகளிலும் ஏதோ ஓர் பெயரில் உலா வருகின்றது. மூடப்பழக்கத்தைச் சாடிய சாக்ரட்டீஸ், அவர் மாணவர் பிளாட்டோ போன்றோர் உயிர்கொடுத்துப் போராடியும் இப்பழக்கம் முற்றிலும் அழிக்கப்படவில்லை. அந்த அளவில் சமுதாயத்தில் வேரூன்றிவிட்டது.

மூடப்பழக்கத்தைச் சாடி, அதனை ஒழிக்க நம்மிடையேயும் ஒருவர் இருந்தார். அவர் வாழ்நாள் பூராவும் அதற்காக ஊர் ஊராய்ச் சென்றார். அவரை எல்லோரும் அறிவோம்.சமுதாய வரலாற்றில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் நம் அன்புக்குரிய தந்தை பெரியாரைத்தான் குறிப்பிடுகின்றேன். அவரைப்பற்றி நிறைய பேசலாம். இது சமுதாய வரலாறு. அவரில்லாமல் எழுதவே முடியாது.

(அலைகள் தொடரும்)

No comments: