Saturday, February 4, 2012

நினைவலைகள்-04

இரண்டாம் நாள் அலுவலகம் சென்றபொழுது, மீனாட்சியும் லட்சுமியும் உட்கார்ந்திருந்தார்கள். பரமசிவம் மறுபக்கம் ஓரத்தில் நின்று கொண்டு லட்சுமியைப் பார்த்துக்கொண்டே ஏதோ கிண்டல்பேச்சு பேசிக்கொண்டிருந்தார். என்னைப் பார்க்கவும் அருகில்வந்து சில காகிதங்கள் கொடுத்தார். கூட்டுறவு பற்றி ஒரு பயிற்சி முகாம் அடுத்தவாரத்தில் நடக்க இருக்கின்றது. அதற்கு யார் யாரெல்லாம் என்ன வேலைகள் செய்ய வேண்டுமென்ற குறிப்புகள் இருந்தன.அதுசம்பந்தமாக சில விபரங்கள் கூறிவிட்டுப் போய்விட்டார். அதன்பின் நானும் மற்ற இருபெண்களும் உள்ளூர் மாதர் சங்கம் காணப் புறப்பட்டோம்.

ஓர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அக்காலத்தில் ஊராட்சியில் நான்கு மகளிர் மன்றம் தான். அப்பொழுது மாதர் சங்கம் என்று கூறுவோம். அதற்கு ஒரு கன்வீனர். அங்கே மூன்று பெண்கள்தான் இருந்தனர். எங்களை உட்காரவைத்துவிட்டு கன்வீனர்; வெளியில் சென்றாள். பின்னர் ஒவ்வொரு பெண்ணாக வர ஆரம்பித்தனர். அப்படியும் பன்னிரண்டு பேர்களே வந்தனர்.

மீனாட்சியோ லட்சுமியோ என்ன செய்யவேண்டும் என்று கூறவில்லை. அவர்கள் வந்தவுடன் நானே பேச ஆரம்பித்தேன். அவர்கள் குழந்தைகளைப் பற்றி விசாரிக்கவும் தயங்காமல் பேசினார்கள். அப்படியே கதைபேச ஆரம்பிக்கவும் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தனர்.அடுத்தவாரம் கூட்டுறவு முகாம் என்று சொல்லி இருந்ததால் ஒற்றுமையாக இருப்பதுபற்றி கொஞ்சம் கிண்டலாகப் பேசினேன். அவர்களும் சிரித்துக்கொண்டே,தெருவில் பெண்களுக்குள் வரும் சண்டைகள் பற்றிப்பேசி, அது தவறுதான் என்று அவர்களே சொன்னார்கள். எனக்குள் நான் சபாஷ் போட்டுக் கொண்டேன். , இப்படித்தான் கதை சொல்லிப் பேச வைக்க வேண்டும் போல் இருக்கின்றது, என்று நினைத்துக் கொண்டேன். நேரம் போனதே தெரியவில்லை. சங்கத்திற்கு வருவதால் லாபமில்லை என்றார்கள். பகல்நேரம் வேலைக்குப் போக வேண்டி இருப்பதால் கூலி நஷ்டம் என்றாள் ஒருத்தி. அவர்கள் பிரச்சனைகளைக் கேட்டுக் கொண்டேன்.

அங்கிருந்து என் வீட்டிற்குப் போனோம். கதவைத் திறந்தவுடன், அங்கு சாப்பாடு கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்தது. என் தந்தை சொன்னதை மறந்துவிட்டேன். சரவணன் வீட்டில் வேலைபார்க்கும் முத்தம்மாவை எங்கள் வீட்டிற்கும் வேலைக்கு அமர்த்தியிருந்தார். மூன்று மாதங்களுக்கும் குறைவாக இருக்கப் போவதால் சரவணன் வீட்டிலிருந்தே காலை காபி முதல் எல்லாம் வீட்டிற்கு வந்துவிடும். முத்து எல்லா வேலைகளையும் செய்வாள். அவளிடமும் ஒரு சாவி கொடுக்கப் பட்டிருந்தது. இங்கிருந்து காந்திகிராமத்திற்கு ஐந்து மாதங்கள் பயிற்சிக்குப் போக வேண்டும். பயிற்சிக்குமுன் சிலநாட்கள் களப்பணி செய்ய வேண்டும்.

சாப்பாடு முடியவும் பேச ஆரம்பித்தோம். மீனாட்சி தன்னைப்பற்றிக் கூறினாள். விசேஷமாக ஒன்றும் இல்லை. ஆனால் லட்சுமி பேசாமல் தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள். என்ன லட்சுமி, பேசாமல் இருக்கின்றாய்? சொல்லத் தயக்கமாக இருந்தால் சொல்ல வேண்டாம், என்றேன். உடனே லட்சுமி அழ ஆரம்பித்தாள். இருந்த இரண்டு பெண்களும் என்னைவிட வயதில் மூத்தவர்கள். லட்சுமிக்குப் பதிலாக மீனாட்சி பேச ஆரம்பித்தாள். ஒரு பெண்ணின் சோகக்கதை.

லட்சுமிக்குப் பதினைந்து வயதில் திருமணம்; பதினாறு வயதில் விதவை. எட்டாவது வகுப்புவரைதான் படிப்பு. நெற்றியில் பொட்டு இருந்தது. அந்தக் காலத்தில் விதவைகள் நெற்றியில் திலகம் வைக்கக்கூடாது. ஏதோ பின்னால் கதை இருக்கின்றது என்பது புரிந்தது.


ஊரக வளர்ச்சித்துறையில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பொழுதே, விதவைகள், ஆதரவற்றவர்கள் ஆகிய பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வேலைக்கு எடுத்துவந்தனர். பெரும்பாலான பெண்கள் ஏதோ பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள். இப்பொழுது போல் அப்பொழுது படித்த பெண்கள் நிறைய கிடையாது. படித்தவர்களும் நகர்ப்புற வேலைகளுக்கே போனார்கள். மேலும், ஆதரவற்றவர்கள், ஊனமுற்றோர், இவர்களுக்குப் புனர்வாழ்வு கொடுக்க வேண்டி வேலைகள் கொடுக்கப்பட்டன. லட்சுமி பெயரில் மங்களகரமானவள்.ஆனால்,தாலிஇழந்துவிட்டாள்.பெயர் வைக்கப்பட்டதற்காவது கடவுள் கருணைகாட்டி இருக்கக்கூடாதா என்று படைத்தவன் மீது கோபம் வந்தது.

லட்சுமி, இதற்காகவா வருத்தப் படறே?” என்று நான் கேட்கவும் மீண்டும் மீனாட்சியே பதில் கூறினாள். அப்பப்பா, பயங்கரமான கதை.


பெயருக்கேற்றாற்போல, லட்சுமி பார்க்க லட்சணமாக இருந்தாள். வீடுகளுக்குச் சென்று பெண்களுக்கு ராட்டை நூற்கக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவள் பணி. பக்கத்து ஊரில் வேலைபார்க்கும் பொழுது ஊர்ப் பெரியவர்களில் ஒருவர் வீட்டுடன் பழக ஆரம்பித்தாள். அந்த அம்மாள் நல்லவர்கள். ஓர் இராட்டை வாங்கிக்கொண்டார். இவளும் அடிக்கடி அங்குபோய் நூற்பு கற்றுக்கொடுத்து வந்தாள்.

ஒரு நாள் அங்கே போயிருந்தபொழுது அந்த அம்மாள் இல்லை. வீட்டு அய்யா மட்டும் இருந்தார். லட்சுமி திரும்ப முனைந்தபொழுது உட்காரச்சொன்னார்.ஒரு மாதிரியாக இருந்தாலும் உட்கார்ந்தாள். ஏதோ பேசிக்கொண்டிருந்தவர் பக்கத்தில் வந்திருக்கின்றார். லட்சுமி பயந்துபோய் உடனே எழுந்து விட்டாள். ஆனால் அவரோ அவளைக் கட்டிப்பிடிக்கவும் போராட ஆரம்பித்திருக்கின்றாள்.அவர் பலத்தின்முன் அவள் சக்தி ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டது. அந்த மனித மிருகம் அவளைத் தனக்கு இரையாக்கிக் கொண்டு விட்டது. குமுறிக் குமுறி அழுதாள். இழந்தது இனி பெற முடியுமா?


வெளியில் சென்றிருந்த அம்மா வந்தபொழுது லட்சுமி அழுது கொண்டிருப்பதைப் பார்த்தாள். நடந்ததைப் புரிந்து கொண்டாள். அவளும் கத்தினாள். தப்பு செய்த புருஷனோ மனைவியை அடித்திருக்கின்றான். என்ன கொடுமை! குற்றம் செய்தவன் ஒருவன்; தண்டனை இரு அப்பாவிப் பெண்களுக்கு! அந்த அம்மா கோபத்துடன் உள்ளே போய் ஒரு மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கட்டி எடுத்து வந்து, பாவி, நீங்க செஞ்ச பாவத்துக்கு அவளுக்கு என் முன்னாலே தாலி கட்டுங்க, என்றாள். லட்சுமி தன்னைச் சுற்றி நடப்பதை உணரும் சக்தியை இழந்து உட்கார்ந்திருந்தாள். குற்றவாளி தலை குனியவில்லை.

அவ்வளவுதானே? இவளும் எனக்குப் பொண்டாட்டியா இருந்துட்டுப் போகட்டும், என்று லட்சுமிக்குத் தாலி கட்டிவிட்டார்.

லட்சுமி அழுது கொண்டே புறப்பட்டாள். கழுத்தில் கிடக்கும் மஞ்சள் கயிற்றை என்ன செய்வது என்று புரியவில்லை. அந்த அம்மாதான் தைரியம் சொன்னார்கள்.

தாலியைப் பார்த்தால் ஊர் வாய் மூடிவிடும். என்று அந்த அம்மாள் கூறி அவர்கள் வீட்டு வேலைக்காரியுடன் அனுப்பி வைத்தாள். கொஞ்ச நாட்கள் எப்பொழுதாவது அவர் வருவார்.பின்னால் அதுவும் நின்றுபோனது. அவளுக்குக் கிடைத்தது அந்த மஞ்சள் கயிறும் ஒரு குழந்தையும் தான். முன்பு விதவை; இப்பொழுது அவள் வாழாவெட்டி! என்னதான் தாலி கட்டப்பட்டாலும் அவளை மற்றவர்கள் கேலியாகத்தான் பேசுவார்கள். தைரியமாகச் சத்தம் போட்டுப் பேச மாட்டார்கள். பெரிய இடத்துப் பகை எதற்கு என்ற அச்சமும் உண்டு. அதனால் வேறு ஆண்மகன் வாலாட்டுவதில்லை.

ஏன் லட்சுமி, அவன் உங்கிட்டே வரவும் போராடி இருக்கலாமே? அப்படி வர்றவனை கைநகத்தால் காயப்படுத்துன்னு காந்தி சொல்லி இருக்காரே? என்றவுடன் இதுவரை பேசாமல் இருந்தவள் கோபத்துடன் என்னைப் பார்த்து, “பேசறது சுலபம். வெறிவந்துட்டா ஆம்புளைக்கு ஆனைபலம் வருதே! அவன் பிடிச்சவுடன் நம்மகிட்டே இருக்கும் கொஞ்சபலமும் போய்டுதே, என்ன நடக்குத்துன்னு புரியறதுக்குள்ளே எல்லாம் போய்டுத்தே? என்று கத்திக் கொண்டே அழுதாள்.

அவள் கத்தலின் உண்மை எனக்குள் இருந்த ஏதோ ஒன்றைக் குத்திவிட்டது. சிறிதுநேரம் என்னால் பேச முடியவில்லை. என் அதிர்ச்சியைப் பார்த்த லட்சுமிதான் நிதானமடைந்து பேசினாள்.

மனுஷங்க எல்லாரும் கெட்டவங்க இல்லே. ஆனால் கெட்டது எப்போ வரும், எப்படி வரும்னு தெரியாது. இப்போத்தான் புதுசா வேலைக்கு வந்திருக்கீங்க. உங்களுக்கு முன்னாலே இருந்தவங்க ரொம்ப நல்லவங்க. எப்படி பேரைக் கெடுத்தாங்க? பெண்கள் ஜாக்கிரதையா இருக்கணும். யாரையும் நம்பக் கூடாது. யாரையும் விரோதிச்சிக்கவும் கூடாது. நீங்க என்னைவிடப் படிச்சவங்க. ஆனால் உங்களைவிட எனக்கு வயசு அதிகம். நான் அடிபட்டு அழிஞ்சு போனவ. புத்தி சொல்றதா தப்பா எடுக்காதீங்க.

அவளையே வெறித்துப்பார்த்தேன். எனக்கு அது முதல் பாடம். பின்னர் பொதுவாக வேலைகள் பற்றிப் பேசினோம். இரண்டு நாட்களில் எத்தனை அனுபவங்கள்! விளையாட்டுப்பெண் மாற ஆரம்பித்துவிட்டாள்.

எப்பேர்ப்பட்ட உண்மை! வெறிவந்தவுடன் மனுஷன் மிருகமாகி விடுகின்றான். பயத்திலேயே பெண் இருக்கும் பலத்தை இழந்துவிடுகின்றாள். பெண்ணாகப் பிறந்தாலே எத்தனை மனித மிருகங்களிலிலிருந்து தன்னைப் பாதுக்காக்க வேண்டியிருக்கின்றது. பத்துவயதுச் சிறுமியைக் கூட குதறிவிட்டு கொன்று போட்டு குப்பையைத் தூர எறிவது போல் செய்யும் மிருகங்களை நடமாட விடலாமா?

சமீபத்தில் ஒருசெய்தி. பெற்ற அப்பனே மகளைக் கற்பழித்துப் பயமுறுத்தி வைத்திருந்த செய்தி பத்திரிகையில் வந்துள்ளது. முன்பே இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதில் வேதனை என்னவென்றால் கெடுத்தவன் சிரிப்புடன் பெரியமனிதனாக வாழ்ந்து கொண்டிருப்பான். வாழ்க்கையைப் பறிகொடுத்தவளை இந்த சமூகம் ஏசும். கொடுமையான உலகம்!

உள்ளம் குமுறியது.அனுபவம் என்னைக் குட்டி அடக்கியது. நாளை எப்படியோ?

(சந்திப்போம்)

1 comment:

சேட்டைக்காரன் said...

அம்மான்னா சும்மாவா?

சில வரிகளைப் படிக்கும்போது செருப்படி மாதிரியிருக்கும்மோ! இந்த மாதிரி சிந்தனையும், எழுத்தும்தான் உலகத்துக்குத் தேவை! நிறுத்தாம, இடைவெளி விடாம தொடர்ந்து எழுதுங்கம்மோய்! : - )