இயற்கையின் படைப்பில் மனிதன் ஓர் அபூர்வப்பிறவி. அவனிடம் சக்திகள் குவிந்து கிடக்கின்றன. பலஹீனங்களும் உண்டு. நம்மில் எத்தனை பேர்கள் தங்களை முற்றும் அறிந்திருக்கின்றோம் ?
என் பணிகளுக்காகப் பல சிறப்புப் பயிற்சிகள் பெற்றவள் நான். எப்பொழுதும் மனத்தில் சிந்தனைகள் தோன்றி என்னைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும். பிறர் எழுதும் கதைகளுடன் உரையாடிக் கொண்டிருப்பேன்.
புதுமைப்பித்தன்! நான் ரசித்தவர்களில் அவரும் ஒருவர்.
புதுமைப்பித்தன் எழுத்துக்களில் வேகமும் ஆத்திரமும் உணர்ந்திருக்கின்றேன். தான் எழுதும் பாத்திரத்துடன் ஒன்றிப்போய் சமுதாயத்தின் மீது அக்கினிக்குழம்பை வாரி வீசுவார். நானும் சீக்கிரம் உணர்ச்சி வயப்பட்டு விடுவேன். அதன் பலன்-வேகத்தில் விவேகம் வீழ்ந்துவிடும். பக்குவம் ஏற்பட பல ஆண்டுகளாயின. பிறர் எழுத்தைப் படிக்கும் பொழுதும், சிலர் பேச்சுக்களைக் கேட்கும் பொழுதும் நிஜத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன்.
“கதை அளக்கின்றார்கள்," என்று ஒரு சொல் வழக்கில் வரும். புதுமைப்பித்தனிடமோ, ஜெயகாந்தனிடமோ அந்த சமரசம் கிடையாது. அவர்கள் எண்ணியது எழுத்தில் வந்துவிடும்.
எழுத்துலகில் ஜெயகாந்தன் வந்த காலத்தில் புதுமைப்பித்தன் நினைவும் உடன்வந்ததை மறுக்க இயலாது. ஜெயகாந்தனிடம் சிறிது வித்தியாசத்தைக் கண்டேன்.” வாழைப்பழத்தில் ஊசி சொருகுவது போல்“ என்று சொல்வார்களே, அந்த தன்மையை சில கதைகளில் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் கடுமை எள்ளளவும் குறைந்திருக்காது. அவர் கதைகளை மேலெழுந்தவாறு படித்துவிட்டுப் போட்டு விடமுடியாது. மனத்தை ஆழ்ந்து செலுத்திப் படிக்க வேண்டும். அல்லது முத்துக்கள் இருப்பதைப் பார்க்க முடியாது. அழுத்தம் கொடுத்து எழுதிய உரையாடல்கள் வரும்.
புதுச்செருப்பு கதையினைப் பார்ப்போம்.
நந்தகோபாலுக்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகி விட்டன; ஆனாலும், கணவன் மனைவிக்கிடையில் சுமுகமான உறவில்லை. அவன் விருப்பத்திற்கு அவள் ஈடு கொடுக்கவில்லை. அவனுக்கு எரிச்சல். அவளுக்கோ அலட்சியம். இப்படி இருந்தால் குடும்பம் உருப்படுமா?
ஆத்திரத்தில் அவனுக்கு உறக்கம் வரவில்லை. நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியில் செல்கின்றான். மனைவியோ அலட்சியமாகக் கதவைச் சாத்திவிடுகின்றாள். அதுவும் அவன் ஆண்மைக்குக் கிடைக்கும் அடியாக உணர்கின்றான்.
பிள்ளைப்பருவ நினைவுகள் அவ்வப்பொழுது அவன் நினைவில் வந்து முள்ளாய் உறுத்தும். இரவு நேரத்தில் அம்மா சத்தம் போட்டுக் கத்துவதும், அப்பா அடிப்பதும் எல்லாம் ஒலிகளாய் இவன் இருக்குமிடம் வரும். பொழுது புலர்ந்துவிட்டால் அதே அப்பாவும் அம்மாவும் ஒன்றும் நடக்காதது போல் பேசும் காட்சிகள் உணர்ச்சியில் ஆழமாகப் பதிந்துவிடும். இன்றும் அவைகள் அவனை ஆட்டிப் படைக்கின்றன.
“பெற்றோர்கள் சண்டையை விடவும் அந்தப் பெற்றோரின் சமாதானங்கள் அவன் மனத்தை மிகவும் அசிங்கப்படுத்தின." இது ஜெயகாந்தனின் வார்த்தைகள். விமர்சிக்கலாம்; ஆனால், இது யதார்த்தம்.
என் பிள்ளைப் பருவத்திலும் எனக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது சரியா தப்பா என்பதில்லை. குழந்தைகள் மனங்களில் எப்படி ஆழமான புண்களாகப் பதிந்துவிடுகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும்.
அவன் வீட்டைவிட்டுப் போவதும் பிடிக்கவில்லை. ஆனாலும் கடந்த காலப் புண்களும் இக்கால அடிகளும் அவனைத் துரத்தின. அவன் இப்பொழுது போகும் இடம் எங்கே? அதுதான் அவன் கடந்த காலம்.
திருமணமாகும் முன் அவனுக்கு அறிமுகமாகின்றாள் கிரிஜா. ஏதோ சின்னச் சின்ன வேலை செய்கின்றாள். உடன் பிறந்த ஒருவனும் எங்கேயோ இருக்கின்றான். ஒற்றை மரமாக ஒருத்தி.எப்படியோ காலம் நகர்கின்றது. மரபு வாழ்க்கை அவளுக்கில்லை. பாதையில் வரும் அனுபவங்களை யதார்த்தமாக எடுத்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கின்றாள்.
“நம்பிக்கை அல்லது தேவை காரணமாகச் சில ஆண்களோடு அவளுக்கு உறவு நேர்ந்திருக்கின்றது," இது ஜெயகாந்தன்.
ஒருத்தியல்ல, ஆயிரக்கணக்கான பெண்களை இது போன்ற நிலையினில் பார்த்திருக்கின்றேன்.
நந்தகோபாலுக்கும் ஒரு நாள் உறவு ஏற்பட்டது. சிறுகதை தொடர் கதையாயிற்று. வெளியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் இவள் வீட்டில் சாப்பிட ஆரம்பித்தான். சொல்லப்போனால் குடும்பமே நடத்தினான். அவள்தான் இவனைத் திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப் படுத்தினாள். ஆனால் அவனுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு இப்பொழுது கிரிஜாவைத் தேடி வந்து விட்டான். அவளிடம் தன் உள்ளக் குமுறலைக் கொட்டுகின்றான். அப்பொழுது கிரிஜா பேசுவதில்தான் ஜெயகாந்தனின் தனித்துவம் தெரிகின்றது.
“பாருங்கோ, வொய்ஃபா வர்றதுக்கு டிரெய்ண்ட்-ஹாண்டா கேக்குறாங்க? நான் டிரைண்ட்-ஹாண்ட். அதுதான் என் டிஸ்குவாலிகேஷன்.“
இதைவிட ஓர் சாட்டையடி இருக்க முடியுமா? ஜெயகாந்தனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததால், அதைக் கொடுப்பவர்கள் உயர்ந்திருக்கின்றார்கள்.
அடுத்து கிரிஜா கூறுவது ஆண்மகனுக்கு ஓர் பாடம்.
“செருப்புகூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ! அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களா?"
இதைவிடப் படிப்பினையை எளிமையாகக் கூறமுடியுமா? “புதுச் செருப்பு கடிக்கும்" கதை தாம்பத்தியத்தின் நாடியைப் பிடித்துக் காட்டுகின்றது. அவளிடம் அவன் எதை எதிர்பார்த்தான்? அவளுக்கு மட்டும் அது முதல் இரவு. அவனுடைய அணுகல் அவளை மிரட்டி விட்டதா? அல்லது விருப்புடன் இணங்க வேண்டியவளிடம் எரிச்சலையும் கசப்பையும் உண்டு பண்ணிவிட்டானா? குற்றம் யார் பக்கம்?
இந்தக்காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? இந்தக் காலத்திலும் நடக்கின்றது. ஆரவாரமின்றி மவுனமாக வந்து அமைதியை அழித்து விடும் பிரச்சனை இது. ஒரு நாளில் முடிந்துவிடக் கூடியதுமில்லை. நம்மைச் சுற்றி நடப்பவைகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.
பொழுது போக்கிற்காக எழுதுபவர் அல்லர் ஜெயகாந்தன். புத்திமதிகள் கூறுவதும் அவருக்குப் பிடிக்காது. ஆனால் அவர் உரையாடல், கதையில் வரும் உரையாடல், காட்சிகளைக் காட்டும் பொழுது மவுனமாக நடத்தும் உரையாடல். எல்லாம் நம்மை கொஞ்சமாவது சுயதரிசனம் செய்ய அழைத்துச் செல்லும்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் கணினியில் ஒரு நட்பு. அவன் பெயர் ராஜு (பெயர் மாற்றியிருக்கின்றேன்). அவன் திருமணமாகி விவாகரத்தும் செய்து விட்டான். யாராவது ஒரு பெண்ணைப் பார்க்கச் சொன்னான். விவாகரத்திற்குக் காரணம் கேட்டதற்கு, மணம் முடிந்த பிறகே அவளுக்குப் பைத்தியம் என்று தெரிந்தது என்று கூறினான். உடனே அவனிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் பழகப் பழக அவனாக நடந்தவைகளைச் சொல்ல ஆரம்பித்தான்.
அவன் அணுகல்களுக்கு அவன் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்காததால் எரிச்சலில் அவளைப் பைத்தியம் கிறுக்கு என்று திட்டியிருக்கின்றான். ஒரு நாள் அடித்திருக்கின்றான். திட்டும் அடிகளும் தொடர்ந்தன. இன்பமாக இருக்க வேண்டிய மணித்துளிகள் அந்தப் பெண்ணிற்குத் துன்பமாக மாறவும் மன நோயாக மாறி இருத்தல் கூடும். இது என் அனுமானமே.
சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்ற சொல் வழக்கில் உண்டு. ஆனால் அதனால் பலரின் தாம்பத்தியத்தில் விரிசல் ஏற்படுகின்றதே!
காம சாஸ்திரம் தோன்றியது இந்த மண்ணில்தான். பொதுப்படையாக எதுவும் கூற முடியாத பிரச்சனை. திருமணத்திற்குப் பின் சிறிது காலமாவது இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்தல் அவசியம். அப்பொழுது ஏற்படும் இணக்கமும் இசைவும் தாம்பத்தியத்தின் அஸ்திவாரமாகும். இணை கோடுகளாக இருப்பதைவிட இணைந்த கோடுகளாக ஆக்கிக் கொண்டால் முதுமையிலும் சுகம் காணலாம்.
நான் ஊட்டியில் வேலை பார்க்கும் காலத்தில் பார்சி இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் அறிமுகமானது. திருமதி. மாஸ்டர் அவர்கள் மகளிர் நலப் பணிகளில் ஆர்வமுள்ளவர். ஒரு நாள் குன்னூரில் நடக்கும் ஓர் விழாவிற்குச் சென்றிருந்தோம். இரவு 8.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் கூப்பிடுவதாகத் தகவல் கிடைத்தது. தொலை பேசியில் அணுகிய பொழுது பிரச்சனை தெரிந்தது. மிஸ்டர். மாஸ்டர் அவர்கள் இரவு எட்டு மணிக்குள் மனைவி வீடு வந்து சேராததால் கலெக்டரை அணுகி என்னைப் பற்றி புகார் கூறியிருக்கின்றார். உடனே மனைவியை வீட்டில் கொண்டு சேர்க்க வேண்டுகோளும் விட்டிருக்கின்றார். சீக்கிரம் எங்கள் பணியை முடித்துக் கொண்டு ஊட்டிக்கு விரைந்தோம்.
அந்த அம்மாவின் வீட்டில் அவருடைய கணவர் மனைவியை எதிர் நோக்கி வாசல் புறத்தில் அமர்ந்திருந்தார். மனைவியைப் பார்க்கவும் எழுந்து வேகமாக வந்து மனைவியைக் கட்டிப் பிடித்து முத்த மழை பொழிய ஆரம்பித்தார். அந்த அம்மையாரும் தன்னை மறந்து கணவரின் ஆலிங்கனத்தில் ஒன்றி அவரும் முத்த மழை பொழிய ஆரம்பித்தார். நான் ஒருத்தி இருப்பதை உணரும் நிலையில் அவர்கள் இல்லை. அந்த இறுக்கம் ஓர் சம்பிரதாயமானதாகத் தெரியவில்லை.
இரு உள்ளங்களின் ஆத்ம பூர்வமான இணைப்பைக் கண்டேன். கணவருக்கு வயது எண்பத்தைந்து.. மனைவிக்கு எண்பது.
அங்கே இளமையின் துள்ளலில் முதுமை ஓடி விட்டிருந்தது. இதுதான் அன்பு. இதுதான் காதல். சிறிது நேரப் பிரிவைக் கூடத் தாங்க முடியவில்லை.அவர்களின் தாம்பத்தியத்தின் அஸ்திவாரம் உறுதியானது.
கணவன் - மனைவி அந்தரங்கத்தின் அந்தப்புரத்தில் வெட்கப்பட ஒன்றுமில்லை. அங்கே ஏற்படும் சங்கமம் இயற்கையின் நியதி.
பூஜை அறைக்குள் போக சில ஒழுங்கு முறைகள் என்றால் படுக்கை அறைக்கும் சில விதிமுறைகள் உண்டு. சிந்திக்கும் நேரம் அதுவல்ல என்றாலும் வாழ்க்கையின் முதல் படியில் கால் வைக்கின்றோம் என்ற அக்கறை உணர்வுடன் இருத்தல் அவசியம். முதுமையிலும் இளமை வேகம் காணலாம்.
பெரும் பாலானோர் வாழ்க்கை எப்படி இருக்கிற தென்றால் காலையில் எழுந்திருக்கவும் காலைக் கடன்களை முடித்துப் புற வாழ்க்கைக் கடமைகளை செய்ய புறப்பட்டுச் சென்று, மாலையில் திரும்பவும் வீட்டிலும் சில பணிகள் முடித்து இரவில் தாம்பத்ய இணைப்பையும் இரவுக்கடனாக முடிக்கின்றான். “ரொட்டீன்” வாழ்க்கை யாக்கி விடுகின்றான். சீக்கிரமே சலிப்பும் வந்துவிடுகின்றது. பின்னர் புதுமையைத் தேடிப் புறப்பட்டு விடுகின்றான். இல்லறத்தின் நல்லறம் போய் விடுகின்றது.
குடும்பப் பிரச்சனைகளில் கவுன்ஸ்லிங் என்னுடைய கடமைகளில் ஒன்று. ஆரம்பத்தில் காட்டும் ஆர்வத்தை ஆண் இழக்கவும் குடும்பத்தில் பூமிக்கடியில் ஓடும் நீரோட்டம்போல் பிரச்சனைகளும் தோன்றி வீடு நிம்மதியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து விடுகின்றது.
இங்கே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். உணர்வுகள் தடுமாற்றம் ஆணுக்கு மட்டுமா? முன்பு கலாச்சாரக் கோட்டைக்குள் இருந்த பொழுது கூட பெண்ணிடமும் தடுமாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இப்பொழுது ஓரளவு சுதந்திரம் அடைந்து வெளிவந்து விட்டாள். இப்பொழுது பெண்ணும் குறுக்குப் பாதையில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றாள். எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இது ஓர் அபாய அறிவிப்பு.
பிரபலமான இரு குடும்பங்கள். ஒருத்தி டிரைவருடன் ஓடிப்போய் மூன்றாண்டுகள் வாழ்ந்துவிட்டு திரும்பியிருக்கின்றாள். இன்னொருத்தி தெருவில் சாமன்கள் விற்கும் ஒருவனுடன் ஓடிவிட்டு இரண்டாண்டுகள் கழித்து வீடு திரும்பியிருக்கின்றாள். கணவன்மார்கள் புகழுக்காகவும், பொருளுக்காகவும் வீட்டை ஒதுக்கியதில் பெண்கள் திசைமாறி சென்று விட்டார்கள். தவறு செய்தவர்களாயினும் குழந்தைகளுக்காக அப்பெண்களை குடும்பம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. குழந்தைகளின் மன நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எனக்கு ஒரு இளைஞன் அறிமுகமானான். கெட்டிக்காரரப் பையன். அம்மா அம்மா என்று ஆசையுடன் சுற்றி வருவான். அவன் முகத்தில் ஓர் சோகம் எப்பொழுதும் இருக்கும். ஆராய்ந்ததில் அவனுடைய தாயாருக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அவனுடைய அப்பா வெளி நாட்டில் வேலை பார்த்துப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். பிள்ளையின் மனத்தில் காயம். பெற்றவளைப் பற்றி யாரிடம் குறை கூற முடியும்.?!
உயர்ந்த பதவியில் ஒருவர். அவர் எப்பொழுதும் வேலை வேலை என்று தன் குடும்பத்தைப் பற்றிகூட எண்ணாமல் கடுமையாக உழைத்து வந்தார். நாளடைவில் மனைவி ஒரு பெரிய இடத்துப் பிள்ளையுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு விட்டாள். அந்தப் பிள்ளையின் குடும்பத்தார் வீட்டை விட்டு விரட்டி விட்டனர். அவனோ இவர்கள் வீட்டிற்கே வந்துவிட்டான். அந்தப் பெரிய மனிதரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரே வீட்டில் ஒரு பெண்ணும் இரு ஆண்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இவைகள் அனைத்தும் நிஜம். ஆம், நம் தமிழ்மண்ணில்தான் இவைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
காரணம் என்ன?
என்னை ஒரு இடத்தில் பேசக் கூப்பிட்டிருந்தார்கள். நான் பேச்சில் கெட்டிக்காரி. அதுவும் உளவியல் தெரிந்து பேசியதால் என்னை பல தரப்பினரும் பேசக் கூப்பிடுவர். என்னைக் கூப்பிட்ட இடத்தில் பல தொழில்கள் செய்கின்றவர்கள், வியாபாரிகள், படித்த அறிஞர்கள் என்று ஓர் கலைவையாக இருந்தனர். அவர்கள் விரும்பும் தலைப்பில் முதலில் பேசுவேன். பின்னால் அவர்கள் கேள்விகள் கேட்பார்கள் நான் பதில் கூறுவேன். இங்கே என்னை ஒரு பெண் என்று நினைத்துத் தயங்கமாட்டார்கள். இவை வாழ்க்கைப் பிரச்சனைகள். என்னை ஓர் சமூக மருத்துவராகக் கருதி மனம் திறந்து பேசுவார்கள். நான் கொஞ்சம் கடுமையாகப் பதில் சொன்னாலும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்.
பிரச்சனை இதுதான். காலை முதல் இரவு வரை கடுமையாக வேலை பார்த்து வரும் கணவனை வீட்டிற்குத் திரும்பும் பொழுது புன்னகையுடன் வரவேற்பதில்லை. அலங்கார உடைகளுக்கோ, ஆபரணங்களோ அவர்கள் கேட்பதெல்லாம் வழங்கப் படுகின்றது. ஆனால் அன்பு, கனிவு பெண் காட்டுவதில்லை. இதுதான் குற்றச்சாட்டு
உங்கள் தினசரி வேலைகளை நேரம் குறிப்பிட்டு சொல்லி வாருங்கள்.
காலையில் எழுந்திருந்து எல்லாம் முடித்து 8 மணிக்குள் கடைக்குப் புறப்பட வேண்டும். இரவு கடை 9 மணிக்கு சாத்தி, கணக்கு முடிக்க இரவு 10 மணியாகின்றது. கொஞ்சம் சிரமபரிகாரம் செய்ய நண்பர்களுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்ப இரவு 12 மணியாகிவிடும்.
உங்கள் மனைவியும் சும்மா இருந்திருக்க மாட்டர்கள். உங்களையும் குழந்தைகளையும் அனுப்பும் வரை வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டும். வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் மேற்பார்வை செய்ய வேண்டும். பின்னர் மற்ற வேலைகளை முடிக்க மதியம் ஆகிவிடும். சிறிது படுக்கலாம். பின்னர் எல்லோரும் திரும்பி வருவார்கள் அப்பொழுது முதல் மீதி வேலைகள் முடிய இரவாகி விடும். களைப்பு அவர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்கள் நண்பர்களைத் தேடி போவதில்லை.
ஆண்கள் சொல்லும் சிரமபரிகாரம் குடிப்பது. வீட்டிற்கு வரும் பொழுதே குடித்துவிட்டுப் போவீர்கள். தூக்கத்தில் இருப்பவள் இடையில் எழுந்து வந்து கதைவைத் திறக்கின்றவளால் எப்படி சிரிக்க முடியும்? அவள் மனைவி. சின்ன வீடாக இருந்தால் சிரிப்பாள். பெண்ணுக்குத் துணியும் நகையும் கணவனின் அன்புக்குப் பிறகுதான். கடைக் கணக்கை பார்த்து விட்டு நேராக வீட்டிற்குப் போங்கள். சிரித்த முகத்துடன் வரவேற்கும் மனைவியைப் பார்க்கலாம்.
அவளும் ஒரு மனுஷி. கீ கொடுக்கவும் சிரிக்க அவள் பொம்மை இல்லை. தூங்குவதற்கு மட்டும் தான் வீடு என்று இருக்காதீர்கள். உங்கள் குடும்பம். வாழுங்கள். அங்கே நீங்கள் இருக்க வேண்டும். மனைவி குழந்தைகளுடன் தினமும் கொஞ்ச நேரம் சேர்ந்து இருக்க வேண்டும். எத்தனை ஆண்கள் இப்படி இருக்கின்றீர்கள் என்று உங்களையே கேட்டுப் பார்க்கவும். அப்புறம் மனைவியைக் குறை கூறுங்கள்.
தாம்பத்தியத்தில் இரு பக்கமும் குறைகள் உண்டு. ஆனால் அதிகமாகத் தவறுகள் செய்கின்றவன் ஆண். வரலாற்றில் அவன் எடுத்துக் கொண்ட சலுகைகள் இப்பொழுது மிரட்டுகின்றன. ஆண் , பெண் இருபாலாரும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அல்லது தாம்பத்தியத்தில் விரிசல் ஏற்படுவதைத் தவிர்த்தல் முடியாது.
மனிதா, உன் வாழ்க்கை உன் கையில்! உன் அமைதி உன் கையில்! காலம் மாறிவிட்டது. மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் கணவன். அசட்டையாக இருந்தால் பின்னால் மனம் உடைந்து போக நேரிடும்.
இக்கதையில் இல்லறத்தின் பல அர்த்தங்களைக் காணலாம். ஆண்மகன் இன்னொரு தவறையும் செய்து வருகின்றான். அதனை “பிணக்கு” என்ற கதையில் ஜெயகாந்தன் சுட்டிக் காட்டியிருக்கின்றார். தெரிந்து கொள்ள வேண்டியவற்றைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.
தெரிந்து கொள்வோம். புரிந்து கொள்வோம்.
(தொடரும்)
நன்றி -திண்ணை
2 comments:
//////கதை அளக்கின்றார்கள்," என்று ஒரு சொல் வழக்கில் வரும். புதுமைப்பித்தனிடமோ, ஜெயகாந்தனிடமோ அந்த சமரசம் கிடையாது. அவர்கள் எண்ணியது எழுத்தில் வந்துவிடும்./////
மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் . அதனால்தான் என்னவோ இன்னும் யாரும் அறியப்படாதா கிணற்று தவளைகளாகவே இருக்கிறோம் . பகிர்வுக்கு நன்றி !
still some people remembers - Puthumai Pithan and the great Jeyakanthan..
sex is not the main stream of life..
it always bring u to love..
tough to explain.. u handled the delicate subject well..
thank you..
Post a Comment