Friday, May 7, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-11

என் சித்தப்பா; அதாவது, என் அப்பாவின் சிற்றப்பாவின் மகன். அவர் எங்களுடன் சில ஆண்டுகள் தங்கி இருந்தார். என்னைவிட நான்கு வயது பெரியவர். கடவுள்மறுப்பு மனிதர். புராணங்களை அறுத்து அலங்கோலமாகக் காட்டுவார். திராவிடக்கொள்கைகள் பற்றிப் பேசுவார்.

போதாதற்கு பால்காரன் பேச்சியப்பன், புத்தகங்களை அள்ளிக்கொண்டு வருவான். தந்தை பெரியாரின் சிந்தனைகளும், அண்ணாவின் அழகுத்தமிழில் சீர்திருத்தக் கட்டுரைகளும் என்னைக் கவர்ந்து இழுத்தன. சுதந்திரம் பெற்றவுடன் இளைஞர்களையும் ஏழைகளையும் மாணவர்களையும் ஈர்த்த ஓர் இயக்கம். மனிதன் ஏதோ போராடிக் கொண்டே இருக்க வேண்டும். அடுக்குத்தொடர் தமிழுக்கு அடிமையானேன்.

மேடைப்பேச்சும் துடிப்பான சினிமா வசனங்களும் மக்களை ஈர்க்க ஆரம்பித்த காலம். எனக்கு 16 வயது. என்னைப் படையெடுத்துச் சூழ்ந்த சிந்தனைகள் கொஞ்சமல்ல.

நல்ல வேளையாக இலக்கியம் வீட்டிற்குள் நுழைந்தது; வாத்தியார் துரைராஜின் உருவத்தில்! என் அப்பா அன்புடன் வரவேற்றார். அவருக்குப் பிள்ளையில்லாக்குறை தீர்ந்தது. துரைராஜ் வாத்தியார் என்னைவிட ஐந்து வயதுதான் பெரியவர். உயர்நிலைப் பள்ளிப்படிப்பு முடிந்து ஆசிரியர் பயிற்சி முடித்து நான் படிக்கும் பள்ளிக்கு வந்து சேர்ந்தார். அதே ஊர்!

பூஜை அறையில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தோம்

கலித்தொகை என்னைக் கட்டிபிடித்தது. குறுந்தொகை சிரித்தது. சிலம்போ என்னுள் ஆட ஆரம்பித்தது. கம்பன் கண்சிமிட்டினான். இலக்கியச்சோலையில் நுழைவு. நான் பார்க்க வேண்டியது நிறைய இருக்கின்றது என்பதை உணரவைத்தார் என் ஆசிரியர். அதிகம் சிற்றிலக்கியங்கள் படித்தோம். தூது, உலா, மடல் எல்லாம் படித்தோம்.

ஆங்கிலத்திலும் வொர்ட்ஸ்வொர்த், மில்டன் படித்தோம். எனக்குக் கொஞ்சம் ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்ளுதல் கஷ்டம். ஆனால் வாத்தியாருடன் சேர்ந்து படித்ததால் புரிந்தது. இத்தனை படித்திருக்க முடியுமா என்று தோன்றும்? படித்தேனே! சிறுவயது முதல் படித்துவிட்டு இரவு தூங்கும் பொழுது பன்னிரண்டு மணியாகி விடும்.

இப்படி படிக்கும் ஆர்வத்துடன் படித்ததால்தான் பல அறிஞர்களுடன் பழக முடிந்தது. அர்த்தமற்று பேசினால் ஒதுக்கிவிடுவார்கள்.

என் முதல் கதையும் கவிதையும் உதயமானது. 40 பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதியிருக்கின்றேன். கதிரேசன் மலை என்று பெயர். பிள்ளைப்பருவத்தின் பிரசவம். இப்பொழுதும் அதைப் பத்திரமாக வைத்திருக்கின்றேன். ராஜா-ராணிக்கதை. மாறுவேடங்களும் வரும். கல்கியின் தாக்கம்! சின்னச்சின்ன கவிதைகளும் எழுத ஆரம்பித்தேன்.

இன்று என்னிடம் இருக்கும் இலக்கிய ஆர்வத்திற்கு வித்திட்டவர் எங்கள் ஊர் வாத்தியார். இன்னொரு வாத்தியார்! முத்து, எங்கள் வாத்தியாரின் சிநேகிதரானார். அவர் ஊர் திருநெல்வேலி. ஒரு நாள் ஆசிரியர்களுடன் நெல்லை சென்றேன்.

நான் நுழைந்த முதல் தமிழ்க்குடும்பம். அதாவது, இலக்கிய உலகில் பிரபலமான தமிழ்க் குடும்பம். ஆசிரியர் முத்துவின் அம்மா, எனக்கு அம்மாவானார்கள். நான் அந்தக் குடும்பத்தின் செல்லப் பெண்ணானேன்.

அவர்கள் யார்?

இலக்கிய உலகில் முத்திரை பதித்த இருவர். திரு. பாஸ்கரத்தொண்டைமான்; அவரது இளவல் கவிஞர் தொ.மு.ரகுநாதன்.

அவர்கள் இல்லத்திற்குத்தான் சென்றேன். இவர்களின் மூத்த சகோதரியின் மகன்தான் முத்து. முத்துவின் வீட்டில் ஒண்டி விட்டேன். அவர்களின் தாய்ப்பாசம் என்னை அக்குடும்பத்தில் ஒருவராக்கியது. அந்தக் குடும்பத்தில் கடைக்குட்டிப் பெண் சாவித்திரி. அவர்களை சித்தி என்று கூப்பிடுவேன். அவர்களே துரைrராஜ் வாத்தியாரின் மனைவியான பொழுது என் மகிழ்ச்சி எல்லை கடந்தது.

மாணவியாக இருந்த என்னை மெருகேற்றிய குடும்பம்

நல்ல தொடக்கம். இதுபோல் பல தமிழ் அறிஞர்கள் குடும்பங்கள் எனக்குக் கிடைத்தன.பயணத்தில் சந்திப்போம்.

துரைராஜ், பணியில் இருந்து கொண்டே படித்து உசிலம்பட்டி கல்லூரியில் முதல்வரும் ஆனார். புலமை மிக்கவர். தூத்துக்குடி இளம்பிறை மணிமாறன் இவருக்கு சுவீகாரத் தங்கை. இவரால் ராஜபாளையம் ஜகன்னாத ராஜா அவர்களும் கோதண்டம் அவர்களும் அறிமுகமானார்கள்.

இவரை எழுதச்சொல்லி எத்தனை கூறியும் அவர் எழுதாமல் விட்டது எங்களுக்கு வருத்தமே. இவர் பற்றி இன்னொரு தகவல் கொடுத்தால், பலர் புரிந்து கொள்வார்கள். தமிழகத்தின் தென்னகத்தில் அடிகளார் சாமி, சாலமன் பாப்பையா பட்டிமன்றக் குழுவில் தவறாது வந்துவிடுவார்.

இவரது தம்பி ராஜன் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. முன்னிலை வகிக்கும் எல்லா இதழ்களிலும் எழுதுபவர்; இப்பொழுதும் எழுதிக் கொண்டிருக்கின்றார். இவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்து சமீபத்தில் பணி ஓய்வு பெற்றவர். விலங்கினங்களைப்பற்றி ஆய்வு செய்து புத்தகங்கள் வெளியிட்டிருக்கின்றார். ராஜன் என் மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைபடுகின்றேன்

இளசை அருணா என்று இன்னொருவர்! கரிசல் மண் எழுத்தாளர்கள் பற்றி புத்தகம் வெளியிட்டிருக்கின்றார். எட்டயபுரம் பல எழுத்தாளர்களை உருவாக்கிய பூமி. அவர்களில் நானும் ஒருத்தி!

இளசை அருணா எனக்கு அனுப்பிய கடிதம்தான் பச்சைநிறத்தில் முன்பு இட்டிருக்கின்றேன். மீண்டும் பார்க்கவும். அதாவது, பாரதியே எனக்குக் கடிதம் எழுதியதைப் போன்று எழுதப்பட்ட கடிதம். கீழே இருக்கும் கையெழுத்து பாரதியினுடையது. எப்படி பெற்றார்கள் தெரியாது! அவர் கண்ட முதல் புதுமைப்பெண்ணாம் நான்! எனவே, வாழ்த்துக் கூறி எழுதப்பட்டிருக்கும். ஷேமம் விரும்பும் என்று இருக்கும். இது பாரதியின் எழுதும் முறை.

எட்டயபுரத்திலிருந்து உயர்நிலைப்பள்ளிப் படிப்பு முடித்த முதல் பெண் நான்!

பட்டப்படிப்பு முடித்து வந்த முதல் பெண்ணும் நான்.

பாரதி, சிவானந்தா படித்த பள்ளியில் படித்து அங்கேயே ஆசிரியைப் பணிக்கும் வந்த முதல் பெண் நான்.

அரசுப்பணியில் முதலில் நுழைந்த முதல் பெண்ணும் நான்.

பாரதியின் ஆசைப்படி துணிச்சலுடன் களத்தில் போராளியாக உருவெடுத்த முதல் பெண்ணும் நான்

ஆணுக்குச் சமமாக உழைக்க முடியும் , உயர் நிலை அடைய முடியும் என்பதற்கும் அந்த ஊராருக்கு முன்னோடியாக இருப்பவள் நாள்.

கிராமத்தில் வாழ்ந்து உலகில் பல நாடுகளை சுற்றிவந்தவள், இன்னும் சுற்றிக் கொண்டிருக்கும் பெண் நான்.

பாரதிக்குப் பெருமை இருக்காதா? அவன் நினைத்தான்; அவன் கண்ட முதல் புதுமைப் பெண் நான்!

பாரதி, எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் பாரதி!

உன்னை வணங்குகின்றேன். உன்மீது கோபம் வந்து பல முறை திட்டி இருக்கின்றேன்! என்னை மன்னித்துவிடு

எனக்கு சக்தி கொடுத்தவன் நீ!

நாணயத்திற்கு இரு பக்கங்கள்!

அவன் எழுத்துப்படி ஒரு பெண் வாழ்ந்தால் எப்படி அமையும் என்பதற்கும் எடுத்துக்காட்டு நான்; பொல்லாப் பெண்; அடங்காப்பிடாரி; சமூகத்தை மதிக்காத ஒரு கெட்டவள்; பெண்ணல்ல,ஒரு பேய்; பெண்மையின் நளினம் இல்லாத ஒரு பிச்சி!

பெற்றதும் நிறைய!

இழப்புகளும் நிறைய!

இளசை நாடு எட்டயபுரமானது. என் பிள்ளைப்பருவம் இங்கேதான் கழிந்தது. என்னை உருவாக்கிய கரிசல் மண்ணுக்கு வணக்கம்.

பள்ளிப்படிப்பு முடிந்து நான் கல்லூரியில் சேர்ந்தது தூத்துக்குடியில்! புனித மேரி கல்லூரி! அதைக் கொஞ்சம் பார்த்துவிட்டு என் “நினைவலைகள் “ காணச் செல்லப் போகின்றோம்.

படிப்பது எளிது; எழுதுவதும் கூட எளிது! ஆனால், செயல்படுவது எளிதல்ல!!

சமுதாய வரலாற்றைப் பார்க்கலாம்.

(ஊர்வலம் தொடரும்)

1 comment:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////இளசை அருணா என்று இன்னொருவர்! கரிசல் மண் எழுத்தாளர்கள் பற்றி புத்தகம் வெளியிட்டிருக்கின்றார். எட்டயபுரம் பல எழுத்தாளர்களை உருவாக்கிய பூமி. அவர்களில் நானும் ஒருத்தி! ///////


ஆஹா அப்படியா ! வாழ்த்துக்கள் .
மிகவும் நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள் அருமை . தொடருங்கள் உங்களின் அடுத்தப் பதிவில் சந்திக்கிறேன் .