Sunday, May 9, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-12


தூத்துக்குடி என்றால் வ.வூ.சி நினைவு வராமல் இருக்குமா? என் கல்லூரிப்படிப்பு தூத்துக்குடியில் தொடர்ந்தது. இங்கும் சுட்டிப்பெண் என்ற பட்டம் நிலைத்தது. கல்லூரி தங்கும் விடுதியில் தங்கிப் படித்தேன். இதயப் பேழையில் வாழும் சில நினைவுகள் இங்கும் உண்டு.

மாலை நேரத்தில் என்னுடன் படித்த விஜயாவிடமிருந்து நாட்டியம் கற்றுக்கொண்டேன். அவளும் நானும் மேடையில் சேர்ந்து ஆடிய தில்லானா பலராலும் பாராட்டப்பட்டது. நாட்டிய அரங்கேற்றமே இங்குதான்.

நாடக உலகில் முதலில் மேடை ஏறியதும் இங்குதான். நான் கண்ணகியாக நடித்தேன். ஓரங்க நாடகம். வழக்குரைக்காதை! வசனம் நான் தான் எழுதியிருந்தேன். அந்த நாடகத்தில் நடித்தபின் அப்பொழுது இருந்த மேதகு ஆண்டவர் ரோச் அவர்கள் என்னை ’கண்ணகி’ என்றே அழைத்து வந்தார். அவருக்கு அடுத்து வந்த மேதகு ஆண்டவர் தாமஸ் பெர்னான் டஸ் அவர்களுக்கும் என்னை மிகவும் பிடிக்கும். பிற்காலத்தில் நான் வேலை பார்த்த வாடிப்பட்டி, வேலூர் ஆகிய இடங்களில் என் வீடுகளுக்கு வந்திருக்கின்றார். அவர்கள் போகும் பாதையில், நான் வேலை பார்க்கும் இடம் இருந்தால் நிச்சயம் வந்து பார்த்துவிட்டுச் செல்வார். அவர்கள் ஓய்வு பெற்றபின், திருச்சியில் தங்கி இருக்கும் காலத்தில் நான் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். கண்ணகிக்கு அடுத்து நடித்த நாடகம் வீரத்தாய்.

என்னுடைய நெருங்கிய தோழியின் பெயர் அமிர்தவல்லி. அவளுக்கு அடுத்தபடி மேரியாகும். இரண்டு பெண்டாட்டிபடும் கஷ்டம் நான்பட்டேன். அன்புக்கு அப்படியொரு போட்டி. அமிர்தவல்லி நான் தங்கிய அறையில் உடன் இருந்தாள்.

அக்காலத்தில் எங்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். கடற்கரைக்குக் கூட்டிப்போகும் பொழுது வரிசையாகச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில், மத்தியில், பின் கடைசியில் கன்னியாஸ்த்ரீகள் உடன் வருவார்கள். ஏதோ ஆட்டுமந்தையை ஒட்டிச் செல்வது போல் எங்களை நடத்தினர்.

விடுதியில் ஜன்னல் வழியாகப் பிறரிடம் பேசக் கூடாது. ஒரு முறை எங்கள் வார்டன் ஜன்னல் வழியாக ஒரு மாணவியிடம் பேசும் பொழுது விசில் அடித்துக் கூச்சல் போட்டேன். வார்டனே விதியை மீறிவிட்டார்கள் என்று. அன்று முதல் எங்கள் வார்டனுக்கு என்னைப் பிடிக்காது.

கல்லூரியில் எங்களுக்குத் தமிழ் ஆசிரியையாக வந்த சிஸ்டர் எமெரன்சியா மேரி அவர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும். அவர்கள் வரத் தாமதமாகுமென்றால் என்னிடம் சொல்லுவார்கள். அதாவது அவர்கள் வரும் வரை நான் வகுப்பின் அமைதியைக் காக்க வேண்டும். பாலுக்கு பூனை காவல்.

ஆசிரியைப் போல் நின்று கொண்டேன்.பேச ஆரம்பித்தேன்.

“மாணவிகளே, நாம் தமிழை, தமிழ் மரபுகளை நேசிக்கின்றோம். நம் சங்க இலக்கியங்களில் அதிகப் பேசப்படுபவைகளில் உடன்போக்கும் ஒன்று. அதாவது ஒருவனைக் காதலித்து, பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் ஊரைவிட்டே ஓடுவது. நாம் தமிழ் மரபைக் காப்பாற்ற எல்லோரும் காதலிக்க வேண்டும். விரைவில் உங்கள் காதலனைக் கண்டு பிடித்துவிடுங்கள். அவன் உடன் ஓடிவர பயப்பட்டால் அவனை ’கிட்னாப்’ செய்யுங்கள். நாம் பாரதி காலப்பெண்கள். துணிச்சலுடன் இருக்க வேண்டும். “

ஒரே கைதட்டல்! அந்த நேரம் சிஸ்டர் வந்துவிட்டார்கள். நான் உடனே ஒரு சிரிப்பைச் சிந்தி மவுனமாகப் போய் உட்கார்ந்துவிட்டேன். ஆனால் எங்களில் ஒருத்தி பின்னால் அவர்களிடம் உண்மையைக் கூறி நான் திட்டு வாங்கியதும் ஒரு செய்தி.

அந்த சிஸ்டருக்கு ஒரு ஆசை. அதாவது, அவர்களுடன் நான் எப்பொழுதும் இருக்க வேண்டுமாம். அதாவது நான் மதம் மாறுவதுடன் அவர்களைப் போல் சிஸ்டராக வேண்டும் என்பதுதான். அதாவது நான் சன்னியாசினியாக வேண்டும் என்பதே.

கற்பனை செய்த பொழுது பயம் வரவில்லை, சிரிப்புதான் வந்தது. நான் அப்படி மாறினால் என்னுடன் தங்கும் பல சிஸ்டர்கள் துறவறத்தைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். அடங்கி இருக்கும் ஜன்மமா நான்?

ஆனால் அவர்கள் தன் விருப்பத்தைச் சொன்ன நாளிலிருந்து என் மனத்தில் ஓர் மாறுதல். சிந்திக்க ஆரம்பித்தேன்.

தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் தான். சாதி ஒழிப்பும் அடுக்குத் தொடர் தமிழும் பிடிக்கும் தான். ஆனால் எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. புராணங்களைத் தான் நம்ப மாட்டேன்.

நான் ஏன் துறவறம் மேற்கொள்ளக் கூடாது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.

மனித மனம் திடீரென்று நம்ப முடியாத முடிவுகளை எடுக்கும். அது முட்டாள்தனமானவையாகவும் இருக்கலாம்.

கல்லுரிக்கு வந்த பொழுது என் வாழ்க்கையில் ஒர் அபூர்வமான தொடர்பு ஏற்பட்டது. மதுரையில் இருக்கும் பொழுது என்னிடம் பாசம் வைத்துப் பழகிய சீதா மாமியவர்கள் ஒரு காரியம் செய்திருந்தார்கள். அவர்களின் ஊர் பத்தமடை. அவர்களின் உறவினர்தான் சுவாமி சிவானந்த மகரிஷி. என் மேல் உள்ள அன்பில் மாமியவர்கள் என்னைப்பற்றி எல்லா விபரங்களையும் எழுதிப் போட்டிருகின்றார்கள். உடனே அவரிடமிருந்து திடீரென்று எனக்கு கடிதமும் சில புத்தகங்களும் வந்தன. எல்லாம் ஆன்மீகம். எனக்குப் போய் இத்தகைய புத்தகங்களா என்று நினைத்தேன். இருந்தாலும் எனக்குள் இருக்கும் தேடல் குணம் இதிலும் என்ன எழுதி இருக்கின்றார்கள் என்று பார்ப்போம் என்றே தூண்டியது.

சுவாமியவர்கள் துறவறம் ஏற்கும் முன்னர் டாக்டராக இருந்தவர். துறவறம் பூண்ட பின்னரும் சமூக சேவைகளீல் கவனம் செலுத்திவந்தார். ஏழைகளுக்கு மருத்துவ நலன்கள் கிடைக்க அந்த மலைப்பிரதேசத்தில் வசதிகள் செய்தார். எனவே சுவாமிஜியின் துறவறம் எனக்குப் பிடிக்க ஆரம்பித்திருந்தது. அவரிடமிருந்து கடிதங்கள், புத்தகங்கள் தொடர்ந்து வர ஆரம்பித்தன.

சிஸ்டர் என்னைத் துறவறவாழ்க்கைக்கு வர வேண்டும் என்று விரும்பிய பொழுது, நானோ ரிஷிகேசம் போனால் என்ன என்று நினைக்க ஆரம்பித்தேன். சிஸ்டர் அவர்கள் விருப்பம் நிறைவேற ஏசுபிரானைப் பிரரர்த்திக்க ஆரம்பித்தார். ஒரு நாள் வேடிக்கையாக அவர்களிடம்,

“சிஸ்டர், ஏசுவுக்கும் முருகனுக்கும் இடையில் ஓர் போட்டி தோன்றி விட்டது. யார் வெல்லப் போகின்றார்கள் என்று பார்க்கலாம் “என்று சொன்ன பொழுது அவர்கள் முகம் வாடியது.

நான் ரிஷிகேசம் வர விரும்புவதையும் துறவறம் மேற் கொள்ள நினைப்பதையும் சுவாமிஜிக்கு எழுதினேன். அவரோ, “ஒழுங்காப் படி” என்று சொல்லிவிட்டார். திரும்பத் திரும்ப அவருக்கு எழுதினேன். அவரும் பொறுமையாக என்னைப் படிக்கச் சொல்லியே அறிவுரை பகர்ந்தார். என் மதுரைச் சித்தப்பாவிடம் என் ஜாதகம் பார்க்கச் சொன்னேன். சோதிடரோ, “இந்தப் பெண்ணுக்கு சன்னியாச யோகம் கிடையாது. ரிஷிகேஷம் புறப்பட்டு ரயில் ஏறினாலும் பாதியில் இறங்கி விடுவாள், இவளுக்கு உத்தியோக ராசி பலமாக இருக்கு” என்று சொல்லி இருக்கின்றார். துறவறமும் என்னை அண்டவில்லை.

ஏசுபிரானுக்கும் முருகனுக்கும் நடந்த போட்டி டிரா ஆகிவிட்டது.

படிப்பை முடித்தேன்.பட்டம்பெற்றேன். எட்டயபுரம் திரும்பி நான் படித்த பள்ளியிலேயே கணக்கு ஆசிரியையாகப் பணியேற்றேன். வேலையில் சேரவும் சுவாமிஜிக்குக் கடிதம் எழுதினேன். அப்பொழுது கூட அவர் எனக்கு எழுதிய கடித வாசகங்கள் எதையோ மறைமுகமாக எனக்கு உணர்த்தின. ஏதோ போராட்ட வாழ்க்கையும், அதனால் கிடைக்கும் அனுபவங்களும், அப்பொழுது நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுமாக இருந்தது. அதுவே அவரிடமிருந்து நான் பெற்ற கடைசிக் கடிதம். துறவறம் போகத் தயார் நிலையில் இருந்தேன். ஆனால் கிடைக்கவில்லை. ஆனால் பின்னர் என்னை அந்த வாழ்க்கைக்கு இழுத்தன பல பெரிய சக்திகள். ஆனால் நான் போகத் தயராக இல்லை.

எனக்குத் தேர்வின் முடிவு தெரியும் முன்னரே நான் படித்த பள்ளியில் வேலை உத்திரவு கொடுத்துவிட்டர்கள். ஆசிரியை வேலையும் உற்சாகமாக இருந்தது. இருந்தாலும் என் தேடல் குணத்திற்கும் என்னிடம் இருந்த திறமைகளுக்கும் அது முழுமையாகப் பொருந்தவில்லை.

என் தந்தை ஒரு முயற்சியில் இறங்கினார். முத்துசாமி தீட்சதருக்கு நினைவாலையம் கட்ட விரும்பினார். மகாராஜாவிடம் கூறி அனுமதி பெற்று அதற்கு அஸ்திவாரக் கல் நாட்டு விழா நடத்தினார். ஆனால், நான் வேறு வேலை கிடைத்து எட்டயபுரத்தைவிட்டுப் போன பின்னர் என் தந்தையும் அந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுவிட்டார். 1957ல் எங்கள் குடும்பம் எட்டயபுர வாழ்க்கையை முடித்துக் கொண்டது. தீட்சதருக்கு
மண்டபம் மற்றவர்கள் கட்டி முடித்தார்கள்.

எட்டயபுரம் என் தந்தையை மறந்தது. ஆனால் என் நினைவுகள் மட்டும் என் ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் தொடர்ந்தது. ஆனாலும், இன்றைய தலை முறைவாசிகளுக்கு இந்த சீதாவைத் தெரியாது

துரைராஜ் ஆசிரியர் குடும்பத்தைக்காண சில முறை போயிருக்கின்றேன். பாரதி நூற்றாண்டுவிழாவிற்குச் சென்றேன்.

இப்பொழுதும் எட்டயபுரம் என் மனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

எண்ணங்கள் ஊர்வலம் முடிந்தது.

ஊடகங்களின் தாக்கம், அரசியல் விளையாட்டில், கலாச்சார மாற்றங்களில் மனிதன் மாட்டிக் கொண்டு மயங்கிக் கிடக்கின்றான். பொய்மையை உண்மையாகக் காட்டப்பட்டு சமுதாயத்தின் ஒற்றுமையையும் அமைதியையும் கெடுத்துக் கொண்டிருக்கும் சூழல். விழித்துக் கொண்டால் வேதனைகளைக் குறைக்கலாம்.

நினைவலைகளில் சந்திப்போம்

(ஊர்வலத்திலிருந்து விடைபெறுகின்றேன்)

6 comments:

Anonymous said...

என்னை மிகவும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்திய பதிவுகளில் இதுவும் ஒன்று.

மேதகு ஆண்டவர் தாமஸ் பெர்ணாண்டோ, மேதகு ஆண்டவர் ரோச் இவர்களிடமெல்லாம் பாராட்டு பெருவதும், அவர்களைச் சந்திப்பதும் வாழ்க்கையின் கொடுப்பினை. அஃது உங்களுக்கு வாய்த்தது. இவர்கள் இருவரும் தூத்துக்குடி திருனெல்வேலி கன்யாகுமரி மாவட்ட மக்களிடையே பிரபலமானவர்கள்.

பெரிய கொடுப்பினை சுவாமி சிவானந்தாவின் கடிதத்தொடர்பு. இந்தியாவில் புகழொடு தோன்றி மறைந்த சுவாமிகளுள் சிவானந்தா தனியிடம் பெற்றவர். அன்னாரின் எழுத்துக்களும் வாழ்க்கையும் இந்திய பாரம்பரியத்தின் அழகான எடுத்துக்காட்டுகள்.

அவருடன் பேசும் - i mean through correspondence - வாய்ப்பு கிடைத்தது பெரும்பேறு. You are the luckiest person. I am jealous of you.

நீங்கள் பெரிய ஆள்.

வாழ்த்துகளும் நன்றிகளும், மரியாதையுடனும்

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ

மங்குனி அமைச்சர் said...

//ஒரு முறை எங்கள் வார்டன் ஜன்னல் வழியாக ஒரு மாணவியிடம் பேசும் பொழுது விசில் அடித்துக் கூச்சல் போட்டேன். ///


ஒன்ஸ் மோர் விசில் பிளீஸ் மேடம்

சீதாலட்சுமி said...

அன்பு ஜோ
உண்மையில் நான் கொடுத்துவைத்த்வள்.
மேதகு ஆண்டவர் ரோச் அவர்களுடன் எடுத்த புகைப்படம் இப்பொழுதும் என்னிடம் இருக்கின்றது. மேதகு ஆண்டவர் தாமஸ் பெர்னாண்டோ அவர்களுக்கு திருக்குறள் மிகவும் பிடிக்கும். மிகுந்த தமிழ்ப்பற்றுண்டு. அப்பொழுது எங்கள் கல்லூரிப் பொறுப்பில் இருந்தவர் பாதிரியார் சூசைநாதர் அவர்கள். இவர்களில் மேதகு ஆண்டவர் தாமஸ் பெர்னாண்டோ அவர்களுடன் தொடர்பு பல ஆண்டுகள் நீடித்தன. அவராலும் சுவாமி சிவானந்தா அவர்களாலும் தான் படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்தேன். எனக்கு பட்டமளித்தவர்கள். வழிகாட்டிகள்.
என் வாழ்க்கையில் உயர்நிலையில் இன்னும் பல பெரியவர்களுடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தன. என் நினைவலைகளில் பார்க்கலாம். எல்லாம் இறைவன் சித்தம். தங்களுக்கு நன்றி
சீதாம்மா

சீதாலட்சுமி said...

ஓய்வு பெற்றும் அமைச்சர் தொல்லை தாங்கல்லே
அய்யா அமைச்சரே விசில் அடிச்சேன் கேட்டுதா
அமைச்சரானாலும் புத்தி விசில் அடிப்பதில் இருக்கின்றதே
சினிமா ரசிகரோ
மங்குனியாரே வருகை தந்தது மட்டும் இல்லாமல் அமெரிக்காவிலிருந்து
விசில் அடிக்க வைத்தீரே நன்றி. உம் தேர்தல் பிரச்சரத்திற்கு விசில் நாயகி வருகின்றேன்.
சீதாம்மா

Mahi_Granny said...

நானும் அதே காலேஜ் தான்.எனவே ரசித்து வாசித்தேன் .நிறைய எழுதவும் . நன்றி

arvind said...

the sharpness in ur writings have been shown in ur young age - in your acts..

enjoyed the beautiful flow..

lastly me read the tamil novel - poniyin selvan - while spending my days with my mother - at the death of my father..

after that the tamil writings of u - just mesmorizing me..

wishes to have a good health - for write more (me always selfish)