Friday, March 16, 2012

எட்டையபுர வரலாறு -1

எட்டயபுரம் வரலாறு

1

நினைவலைகளின் பிடியில் அகப்பட்டு, அவைகள் என்னை உருட்டிச் சுருட்டி சென்னை ஆன் லயனில் கொண்டு தள்ளியது. அலையோசையின் சத்தத்தில் உருவான தொடர்தான் நினைவலைகள். அது ஓர் சமுதாய

வரலாறு. எழுதத்தொடங்கிய சில நாட்களிலேயே நான் வாழ்ந்த கரிசல் மண் என் கைகளைப் பிடித்து ,”என்னைப்பற்றி எழுது” என்றது. எழில் ஓவியமாய் அமைந்த எட்டயபுர வரலாற்றில் ஓர் கரும் புள்ளி. அது திருஷ்டிப் பொட்டு அல்ல. களங்கத்தைப் புகுத்தி இட்ட கரும்புள்ளி

எட்டப்பன் ஒரு காரணப்பெயர்

எட்டயபுரமும் காரணப் பெயர்.

ஆங்கு வாழும் சிவனின் நாமம் எட்டீஸ்வரனும் காரணப் பெயர்.

வரலாறு தெரியாமல் அந்தப் பெயருக்குப் புது அர்த்தம் கொடுத்து விட்டனர். என் ஊரார் என்னை எழுதச் சொன்னார்கள். மக்களை மகிழ்விக்க வந்த கூத்து, நன்றியுடன் நினைக்க வேண்டிய பெயரைச் சிதைத்துவிட்டது. முத்தமிழ்க் காவலரின் சரிதம் சொல்ல உங்கள் முன் வந்திருக்கின்றேன்.

மனிதன் தோன்றிய சிறிது காலத்திலேயே கூத்து ஆரம்பித்துவிட்டது.

இது எல்லோரும் அறிந்ததே. இயல் இசை நாடகம் இணைந்ததே நம் முத்தமிழ். அதிலும் நாடகத்தில் இயலும் இசையும் கலந்திருக்கின்றன. முத்தமிழின் மொத்த வடிவமாக நாடகம் இருக்கின்றது. இதிகாசமும் புராணங்களும் எல்லாப் பகுதிகளிலும் தெரியப்பட முடிந்தது இந்த கூத்தின் வலிமையால்தான். ஒரு கதை பத்து நாட்கள் நடக்கும். இரவில் தூங்காமல் உட்கார்ந்து பார்ப்பார்கள். ஹரிச்சந்திரா நாடகத்தில் வரும் ஒப்பாரிப் பாட்டு மட்டும் ஒரு இரவு எடுத்துக் கொள்ளும். வள்ளி திருமணம் நாடகத்தில் வேடனும் வள்ளியும் பாட்டிலே வாதிடுவார்கள். அதுவும் எப்படி? ஸ்வரங்களில் போட்டி. முன்னே உட்கார்ந்திருப்ப வர்களுக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது. இருப்பினும் ஏற்ற இறக்க சுவரங்கள் கொண்ட பாட்டுக்கள் பார்வையாளர்களைப் பரவசப் படுத்தும். நான் இந்த இரண்டு நாடகங்களையும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்திருக்கின்றேன். விஞ்ஞானம் வளர வளர திரையுலகத்தின் வருகை

நாடக உலகத்தைக் கொஞ்சம் பாதித்துவிட்டது. இருப்பினும் முழுதும்

அழித்துவிட முடியாது. நாடகத்திற்கு அத்தகைய சக்தி உண்டு,. அதன் வரலாற்றைக் கொஞ்சமாவது அறிந்து கொள்ளலாம்

நாடக வரலாறு என்றால் சங்கரதாஸ் சுவாமிகளையும் பம்மல் சம்பந்த முதலியாரையும் மறத்தல் இயலாது. அக்காலத்தில் பெண்களின்றி, சிறு வயதுப் பிள்ளைகளின்றி நாடகங்கள் நடந்தன. ஆணே பெண் வேடம் தரித்து வருவர். நன்றாகப் பாடத்தெரிந்தவர்கள், ஆடத்தெரிந்தவர்கள் இருப்பார்கள். ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனாலும்

அந்தக் குழுவில் இருப்பவர்களில் ஒருவர் அந்த பாத்திரத்தில் நடிக்க வந்துவிடுவர். வசனங்களும் நடிப்பும் அந்தக் குழுமத்தில் எல்லோருக்கும்

பொதுவாகத் தெரிந்திருக்கும் ஓர் குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

மதுரை செட், தஞ்சாவூர் செட் என்று ஊரார் கூறுவார்கள்.

பாய்ஸ் கம்பெனியையும் யாரும் மறக்க முடியாது. பல திரையுலக நடிகர்களை உருவாக்கிய கம்பெனி.

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் இராமாயணம், சுவாமி அய்யப்பன்

எல்லோராலும் பாராட்டப்பட்ட நாடகங்கள். விஞ்ஞான வசதிகள் இல்லாத காலத்தில் சில வித்தைகளைச் செய்து காட்டினார். கல்யாண ஜானவாசம்

காட்டி அதில் பேபி ஆஸ்டின் காரையும் ஊர்வலத்தில் கண்முன் காட்டியவர்.பிற்காலத்தில் மனோகர் மேடையில் தந்திரக் காட்சிகளைக் காட்டி நாடக உலகிற்குப் பெருமை தேடிக் கொடுத்தார். டி. கே. எஸ்

சகோதரர்களின் நாடகங்கள் சமுதாயக் கதைகளாக வந்தன. அவைகளில் அந்தமான்கைதி புகழை அதிகம் பெற்றது .எம்.என். நம்பியார், எஸ்.வி சுப்பையா நாடகத்தில் நடித்தவர்கள்தான்.நம்பியார் அவர்களின் முகச் சுளிப்பும் தீப்பார்வையும் கொடுமையான வில்லனாகக் காண்போம்.

நிஜ வாழ்க்கையில் நம்பியார் பரிசுத்தமானவர். மென்மையானவர்.

அய்யப்பபக்தர். தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் மலைக்குப்

போனவர். நடிக்கும் பொழுது அந்த பாத்திரமாகவே மாறுவது நடிகனின் இயல்பு. அவர்களின் நடிப்பால் பாத்திரத்தின் தன்மை அமைந்து விடும்.

நகைச் சுவை மன்னர் என்.எஸ். கிருஷ்ணனை மறக்க முடியுமா?அவரின்

நல்லதம்பி படமும் அதில் அவர் நிகழ்த்தும் கதாகாலசேபமும் சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்தன. கூத்துப்பட்டறையில் பயின்றவர்கள் திரையுலகத்தில் வருவதால் அதிக “டேக்” தேவையில்லை, பண விரையமும் குறைவு என்று நடிகர் பசுபதி கூறியது பத்திரிகையில் வந்ததைப் படித்திருக்கலாம். பசுபதி கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்றவர். சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் நாடகத்தில் ஆதித்தகரிகாலராக நடித்தார். நம் நாசரும் ஒரு நாள் அதே பாத்திரத்தில் நடித்தார். நாசருக்கு நாடகத்தில் நடிப்பது பிடிக்கும். நம் மனோரமா ஆச்சியும் மேடையில் நடித்தவர். மேடையில் நடிக்கும் பொழுது ஏற்படும் ஆத்ம திருப்தி சினிமாவில் கிடைக்காது. ஆனால் சினிமாவில் நிறைய பணம் கிடைக்கும். நடிப்புத் தொழிலில் பக்தி கொண்டவர்கள் அவ்வப் பொழுது ஆத்ம திருப்திக்கு மேடைக்கு வந்து போவார்கள்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களிடம் எழுச்சியை உண்டு பண்ணியதில் மேடைப் பாடல்களும் நாடங்களும் குறிப்பிடத்தக்கன. சென்னையில் பல நாடக சபாக்கள் இன்றும் இருக்கின்றன. மனோகர், சேஷாத்ரி, மவுலி, எஸ்.வி. சேகர் இன்னும் பலர் நாடக உலகை ஆக்கிரமிப்பு செய்திருந்ததை எல்லோரும் அறிவர். சிந்திக்கவைக்கவும் சிரிக்க வைத்தும் வந்த நையாண்டி நாடகங்களுக்குச் சொந்தக்காரர் சோ. இன்னும் பலர் உண்டு சொல்லிக் கொண்டே போகலாம். ஆக்கல், அழித்தல் இரண்டையும் செய்யும் வல்லமை பெற்றது நாடகத்துறையும் திரையுலகமும். எல்லோரும் அறிந்த வரலாற்றை அதிகம் வளர்க்காமல் சொல்ல வந்ததை நோக்கிச் செல்ல விரும்புகின்றேன்.

சிறு சிறு நாடக் குழுக்களும் சிறிய ஊர்களுக்கும் வந்து நாடகங்கள் போடுவர். திராவிட முன்னேற்றக் கட்சி உதயமாகவும் சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்ப பல நாடகக் குழுக்கள் தோன்றின..தூக்கு மேடை நாடகத்தில் தொடங்கிய நாடக மேடை வாழ்க்கை காகிதப்பூவில் முடித்துக் கொண்டார் கலைஞர்.

இந்த வரலாற்றில் ஒருவருக்கு முக்கியமான பங்குண்டு. அவர்தான்

எம். ஆர் ராதா. அவர் நாடகத்தை நேரில் பார்த்திருக்கின்றேன்.

அலங்காரமான அரங்குகள் அவருக்கு வேண்டாம். ஊருக்கு ஊர் வசனங்கள் மாறும். ஓர் ஊருக்கு வந்தவுடன் அந்த ஊர்ப் பிரச்சனைகளைக் கேட்பார். சமீபத்தில் வந்த பத்திரிகை செய்திகளைத் தெரிந்து கொள்வார்.. உடனே வசனங்கள் பிறந்துவிடும்.

ஒன்றிரண்டு காட்சிகளைப் பார்ப்போம் வசனங்கள் அப்படியே நினைவில் இல்லை. ஓர் முயற்சி. அவ்வளவுதான்.

“ஏன்யா, முனிசிபாலிடிக்காரங்க என்ன செய்யறாங்க. தண்ணிப் பைப்புலே

காத்துதான் வருது. ஆனால் பாவம் எப்பொவாவது மீனை விடறாங்க. ரோடு போட்றேன்னு சொல்லி குழி வெட்டறாங்க. மாசக் கணக்கா ரோடு போட மட்டேன்கிறாங்க. பாவம் நம்ம பசங்க குழியிலே விழுந்து சாகறாங்க. ஜனத்தொகையைக் குறைக்கறாங்களோ?. ஆமாம் ,இந்த போலீஸ் காரங்க இருக்காங்களே, எப்படா இந்த ராதாப் பயல் உளறுவான், பிடிச்சிக்கிட்டுப் போகலாம்னு வந்துட்றாங்க. ஆனா ஒரு பயல் கூடப் என்னைப் புடிக்காம நான் பேசறதை ஆ ன்னு வாயைத் திறந்துக்கிட்டு கேட்டுக்கிட்டே உட்கார்ந்திருக்காங்க”

இத்தனையும் கேட்டுக் கொண்டு போலீஸ்காரர்களும் முனிசிபாலிடியில் வேலை செய்கின்றவர்களும் அங்கே உட்கார்ந்து நாடகத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்கள். ராதா நாடகம்னா ஒரே குஷி. அவருக்கென்று தனி முறை. அவரைப் போன்று அதனைச் செய்யதவர் யாரும் இல்லை. அவர் நாடகங்கள் கிராமங்களிலும் சிறிய நகர்ப் புறங்களிலும் பெரிதும் வரவேற்கப்பட்டன.

ஊடகங்களிலேயே மனித மனத்தை அதிகமாக ஈர்க்கும் சக்தியைப் பெற்ற

துறைகள் நாடகமும் திரையுலகமும். இப்பொழுது சின்னத் திரை வந்துவிட்டது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த சாதனங்கள் இவை.

நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர அவர்களும் நாடக உலகம் நமக்களித்த பரிசுகள். திரைப்படத்துறை சம்பந்தபட்டவர்களை ஆட்சியில் அமர்த்தி மக்கள் ரசிப்பதைப் பார்க்கின்றோம். உங்களுக்கு ஒரு செய்தி. தங்க நிற மேனியான்

திரு எம்.ஜி. ஆர் அவர்கள் தன் வாழ்க்கையில் முதன் முதலில் போட்டுக் கொண்ட தங்க மோதிரம் யார் கொடுத்த பரிசு தெரியுமா?

அலைகள் மீண்டும் வரும்

No comments: