Wednesday, March 21, 2012

எட்டயபுரம் வரலாறு-03

எட்டயபுரம் வரலாறு-03

முத்தமிழில் இயலைப் பார்த்தோம்; இப்பொழுது இசையைக் காணலாம்.

பாலுசாமி தீட்சதர்! சங்கீத உலகில் சரித்திரம் படைத்தவர்.

இசைக் கச்சேரி என்றால் வயலின் நிச்சயம் இருக்கும். பாடகர் பாட்டையொட்டி இசைக்கும் கருவி வயலின். இதனை கர்நாடக சங்கீத உலகில் அறிமுகப் படுத்தியவர் பாலுசாமி தீட்சதர். இவர் மணலியில் முத்து கிருஷ்ண முதலியார் மற்றும் வெங்கட கிருஷ்ண முதலியாரின் ஆதரவில் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் ஓர் ஐரோப்பிய வயலின் வித்வான் அங்கே வந்து சேர்ந்தார். அவரிடம் தீட்சதர் வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டார். பின்னர் கர்நாடக சங்கீதத்திற்கேற்ப அவரே வாசிக்கப் பயின்றார். இவருடைய சகோதரர்தான் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சதர் ஆவார். இவரின் சங்கராபரணம் சாகித்யத்திற்கேற்ப பாலுசாமி தீட்சதர் வயலின் வாசிக்கப் பயின்றார். சங்கீத வரலாற்றில் சகோதரர்கள் இருவரும் ஒருவர் பாட்டிலும், இன்னொருவர் வாத்யம் இசைப்பதிலும் தலை சிறந்து விளங்கினர்.

பாலுசாமி தீட்சதர் எட்டயபுர சமஸ்தானத்தில் சமஸ்தான வித்வானானர். அதுமட்டுமல்ல; மன்னருக்கு சங்கீதமும் கற்றுக் கொடுத்த ஆசானுமாவார். மன்னர் பரம்பரையில் எல்லோருக்கும் சங்கீதம் தெரியும். இவர் எட்டயபுரம் வரவும் முத்துசாமி தீட்சதரும் எட்டயபுரம் வந்துவிட்டார். அமிர்தவர்ஷினி ராகம் பாடிய இடம் எட்டயபுரம். இவர்கள் மன்னர் மேல் பாடல்கள் பாடவில்லை. இசை இங்கே இறைவனுக்கு அர்ப்பணமானது.

இன்னும் பல சமஸ்தான வித்துவான்கள் உண்டு. ஜி.என்.பியும் ஒரு சமஸ்தான வித்துவான். அவரைப்போல் பலருண்டு. ஆனால் அவர்கள் மன்னரின் பிறந்த நாள், திருவிழாக்காலங்களில் வருவார்கள். நாட்டியமாடவும் பெண்கள் வருவார்கள்.

நாடகம்பற்றி ஏற்கனவே விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுவிட்டது. இயல், இசை நாடகம் மூன்றையும் காத்த புரவலர்கள் எட்டயபுர மன்னர்கள். எட்டயபுரத்தைச் சேர்ந்த சினிமா நடிகர்கள் ஈ.ஆர். சகாதேவன், சடாச்சரம், டி.வி. நாராயணசாமி மற்றும் பி.எஸ்.வெங்கடாச்சலம் ஆவர். காசிவிஸ்வநாத மகாராஜாவே ஒரு நாடகக் கலைஞர்தானே.

கலைத்துறையை அடுத்து மன்னர் வேறு என்ன நன்மைகள் மக்களுக்குச் செய்திருக்கின்றார் என்று பார்ப்போம். அதற்கு முன் சில வரலாற்றுச் செய்திகளைக் கூற வேண்டும்.

1934-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 25ந்தேதியன்று எட்டைய புரத்திற்கு மகாத்மாகாந்தி வருகை தந்தார். வ. உ. சிதம்பரனார் உருவாக்கிய சுதேசிக் கப்பல் ஆட்சிப்பொறுப்பாளாரக இருந்தவர் நாவலர் சோம சுந்தரபாரதியார். எட்டயபுரத்தில் ஒரு கலைநயமிகு வீட்டைக் கட்டி அதற்கு தமிழகம்என்ற பெயரிட்டு, .உ.சி அவர்களை எட்டயபுரத்திற்கு வரவழைத்து வீட்டினைத் திறக்க வைத்துச் சிறப்பித்தார். இங்கு இன்னொரு தகவலும் கூறவேண்டும்.சுதேசிக் கப்பல் கட்ட எட்டயபுர சமஸ்தானமும் நன்கொடையாக பெரியதொரு தொகை கொடுத்துள்ளது.

சுப்பிரமண்ய பாரதியும் சோம சுந்திர பாரதியும் நண்பர்கள். அடுத்த தெருக்காரர்கள். அதே போல் பாரதியும்,வ.உ.சி அவர்களும் நண்பர்களாவார்கள்.

எட்டயபுரத்திற்கு இளசை என்ற பெயருண்டு. பாரதியும் தன் பங்கில் தன் ஊருக்கு வேதபுரம்என்று பெயர் சூட்டியுள்ளார்.

அக்காலத்தில் ஜமீனுக்குச் சொந்தமான ஓர் அச்சுக்கூடம் உண்டு. பெயர் இளசை வித்தியாச விலாசினி. இங்கிருந்துதான் 1700 பக்கங்கள் கொண்ட சுப்பிராம தீட்சதரின் சங்கீத சம்பிரதாயப் பிரதர்கினிஎன்ற நூல் அச்சானது. இப்பொழுது அந்தத் தெருவின் பெயர் அச்சாபீஸ் தெரு.

கல்விக்கு ஜமீன் செய்த சிறப்பினைக் காணலாம்.

ராஜா உயர் நிலைப் பள்ளி என்ற ஓர் பள்ளிக்கூடமும் அரண்மனையின் நிர்வாகத்தின் கீழ் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. நம் பாரதியும், சுவாமி சிவானந்தரும், மதுரை அரவிந்த கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் வெங்கடசாமியும், இந்தப் பள்ளியில்தான் படித்தனர். அடியேனும் இந்தப்பள்ளி மாணவி மட்டுமல்ல, இதே பள்ளியில் ஆசிரியையாகவும் இருந்திருக்கின்றேன்.

இந்தப்பள்ளிக்கு இன்னொரு சிறப்புண்டு. மதிய உணவை முதன் முதலில் அறிமுகப்படுத்தியதே எட்டயபுரம் இராஜா இலவசத் துவக்கப்பள்ளியில்தான். அப்போதைய கல்வி இயக்குனர் நெ.து. சுந்தவடிவேலுவின் புதல்வன் வள்ளுவன் பெயரால் எட்டயபுரம் ஜமீந்தார் இப்பணியைத் தொடங்கி வைத்தார்.

இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் நிறைய பேர்கள் இருக்கின்றனர்.

எட்டயபுரம் பாரதி ஆய்வாளர்-பத்திரிகை ஆசிரியர் தி.முத்து கிருஷ்ணன் பாரதியார் வாழ்க்கைச் சரித்திரம்”, பாரதியின் இசைஞானம் குறித்து நல்லதோர் வீணைநூல்களும், தினமலர் பத்திரிகை நிறுவனர் டி.வி. இராமசுப்பையர் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் கடல் தாமரைஎன்ற நூலும் எழுதியுள்ளார். நல்ல மேடைப் பேச்சாளர். இவர் என்னுடைய சக மாணவர்.

கே.கே.ராஜன் ஓர் சிறுகதை எழுத்தாளர். வார இதழ், மாத இதழ்களில் எல்லாவற்றிலும் நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியுள்ளார். இவர் என் மாணவன். இவர் சகோதரர் கே. கருணகரப் பாண்டியன் History of Ettayapuram” என்ற தலைப்பில் ஆய்வு செய்து M.Phil பட்டம் பெற்றார்.

எட்டயபுரம் வரலாறு என்ற நூலை முதுபெரும் எழுத்தாளர் வே. சதாசிவன், மா. இராஜாமணி, இளசை மணியன் ஆகியோர், 400 ஆண்டுகாலப் பழமையைத் தொகுத்து மக்களுக்கு அளித்துள்ளனர்.

எட்டயபுரத்தில் பிறந்த பெண்பாற்புலவர் சுப்பம்மாள் குமாரகீதம் என்ற நூலை இயற்றியுள்ளார். இந்தியாபத்திரிகையின் மூலப்பிரதிகளை ஆய்வு செய்துபாரதி தரிசனம்என்ற நூலை எழுதியுள்ளார் இளசை மணியன். ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் மண்வெறிஎன்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றவர் வே. சதாசிவன்.

அதே விகடனில் ஆசைப்பந்தல்என்ற கதைக்கு முத்திரை பெற்றவர் சீதாலட்சுமி. இவரின் சுமார் 63 சிறுகதைகள் பல பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. மேலும் இவர் கலைஞர் பாமலர் நூறுஎன்ற ஓர் வரலாற்று நூலை மரபுக்கவிதைகளாக எழுதி மேழிச்செல்வி என்ற பெயரில் வெளியிட்டிருக்கின்றார். (இவர் வேறு யாருமல்ல, நானே தான்.)

எட்டயபுரத்தைச் சேர்ந்த குருகுகதாஸ்பிள்ளை திருநெல்வேலி சீமைச் சரித்திரம்என்ற வரலாற்று நூல் எழுதியுள்ளார். இவர் மகன் கு.பக்தவத்சலம் ஒரு கவிஞர்.

எட்டயபுரத்தில் தோன்றிய எச்.ஏ.அய்யர் இந்திய தேசீய இராணுவத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். இவர் நேதாஜிபற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

இராஜாமணி - வீரன் அழகுமுத்து யாதவ்என்ற நூலை எழுதி பெருமை சேர்த்துள்ளர். இளசை அருணா என்பவர் எழுதிய கரிசல் மண்என்ற புத்தகத்தில் மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை எழுதியுள்ளார். இன்னும் இளசை சுந்தரம், இளசைஜமால், இளசை கணேஷ், மரிய செல்வம், புலவர் பார்வதி மாரியப்பன், ஜீவா திலகம், சோலைச் சாமி. ஆகிய எழுத்தாளர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தம். எட்டயபுரம் என்ற நூலைக் கவிஞர் கலாப்பிரியா எழுதியுள்ளார்.எட்டயபுரம் கோபி கிருஷ்ணன் சோதிடத்தில் நிறைய புத்தககள் எழுதியவர். பல வார இதழ்களில் சோதிடக் குறிப்புகள் எழுதியவர்.

எழுத்தாளர்கள் மட்டுமல்ல ஓவியர்களும் இந்த கரிசல் மண்ணுக்குச் சொந்தமானவர்கள். மா.முத்து, சங்கரவாத்தியார், எஸ் ராமசுப்பு, மாறன்,கண்ணன் ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அந்தக்காலத்தில்.

வானொலியில் நிறையப் பாடியவர் எட்டயபுரம் நரசிம்மன்.

எட்டயபுரம் சின்ன ஊர். எப்படி இத்தனை படைப்பாளிகள் உருவானார்கள்? எங்களிடையே இன்னொரு பாரதி இருந்தார். அவர்தான் எங்கள் ஆசிரியர் கே.பி.எஸ்.நாராயணன். எங்கள் இரத்த அணுக்களில் பாரதியைப் புதைத்தவர் அவர்தான். வெறும் பேச்சும் எழுத்தும் மட்டுமல்ல, செயல்வீரர்களாக இருக்க பாடுபட்ட பெருந்தகை அவர். எங்கள் பெருமையெல்லாம் அவருக்கே நாங்கள் அன்புடனும் மரியதையுடனும் சமர்ப்பிக்கின்றோம். ஒர் ஆசிரியன் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு அவர் முன் மாதிரி என்று சொன்னால் மிகையாகாது.

அவருக்கு அடுத்தபடியாக இன்னொரு ஆசிரியர் இருந்தார். பெயர்.கு.துரைராஜ். சாதாரண இடை நிலை ஆசிரியராக இருந்தவர், கல்லூரியில் சேராமலேயே படித்துப் பல பட்டங்கள் பெற்று உசிலம்பட்டி கல்லூரியின் முதல்வரானார். இவர்தான் எட்டயபுரத்து படைப்பாளிகளை ஒருங்கிணைத்தவர். திரு.பாஸ்கரத் தொண்டைமானின் சகோதரி சாவித்திரி அவர்களை மணந்தவர்.சாவித்திரி அம்மாள் மட்டுமல்ல அவர்கள் மகள் கிருஷ்ணவேணியும் இதே பள்ளியின் ஆசிரியைகள். இவர் ஒரு.பட்டிமன்றப்பேச்சாளரும்கூட. தவத்திரு குன்றக்குடி அடிகளார், திரு. சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் நடக்கும் பட்டி மன்றங்களில் தவறாமல் இவர் இருப்பார்.என்னுடைய இலக்கிய ஆரவத்திற்குக் காரணகர்த்தா கு.துரை ராஜ் அவர்கள் தான். பள்ளியைவிட்டு மற்ற சிறப்புகளைப் பார்க்கலாம்.

எட்டயபுரத்தில் உள்ள அழகான கட்டிடக் கலைக்கு உதாரணமாக ஜமீனால் உருவாக்கப்பட்ட ஜெஜ்ஜை என்ற அரண்மனையும், கண்ணாடி மாளிகையையும், பாரதியின் நினைவாக இராஜாஜி , கல்கி அவர்களால் எழும்பிய பாரதி மணி மண்டபமும் வங்கதேசக் கட்டிடப் பொறியாளர் சித்தாலேஎன்பவரால் வடிவமைக்கப்பட்டவை.

பொது நலப் பணிகளில் அக்கறை கொண்டவர்கள் அரண்மனையார். மதுரை - திருநெல்வேலி சாலையில் கங்கை கொண்டானில் ஆற்றில் கட்டப்பட்ட பாலம் எட்டயபுரம் மன்னரால் கட்டப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணியின் குறுக்கே பாலம் கட்டுவதற்காக பிதாமகராஜ் அவர்கள் நிதி உதவி செய்துள்ளார்.

எட்டயபுரச் செய்திகள் இன்னும் இருக்கின்றன

அலைகள் மீண்டும் வரும்

1 comment:

Vinoth said...

எட்டைய புர தகவல்களை படிக்க தருவதற்கு நன்றிகள்.