Tuesday, March 6, 2012

நினைவலைகள் 10

நினைவலைகள் -10


அம்மாவின் அறிவுரைகளில் சில

பணி செய்யும் பொழுது எளிய உடைகளுடன் இருப்பது நல்லது. பிறரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தோற்றம் இருக்கக் கூடாது.

கிராமத்தினரின் மதிப்பையும் நம்பிக்கையும் பெறும் வண்ணம் அவர்களுடன் பழக வேண்டும்.. சாதி, மதம். அரசியல் பிரச்சனைகளைப்

பற்றி பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும். குடும்பங்களுடன் ஒன்றிப் பழகினால் ,நாம் சொல்லுவதைக் கேட்க ஆரம்பிப்பார்கள். சின்னச் சின்ன

பிரச்சனைளை முடிந்த மட்டும் தீர்க்க வேண்டும். பணிப்பட்டியலில் இல்லையே என்று எண்ணக் கூடாது. சமுதாயத்திற்கு நல்லது என்று நினைப்பதைச் செய்வது முக்கிய கடமையாக எண்ண வேண்டும். தன்னிடம் இருப்பதையும் கொடுத்து செய்யும் சேவையே சமுதாயப் பணி. அப்படியிருக்க சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்பவர்களின் கடமை இரட்டிப்பாகின்றது. முதலில் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். சமூக சேவை புனிதமான பணி.”

இதயத்தில் பதிவு செய்து கொண்டேன்.


சுதந்திரப்போராட்டத்தின் பொழுது மக்களிடையே ஓர் வேகம் இருந்தது.

பெண்களும் நிறைய பங்கு கொண்டனர். அந்த வேகத்துடன் மகளிர் நலப்

பணிகளும் ஆரம்பமாயின. துர்க்காபாய் தேஷ்முக்கின் சாதனைகள்

வரலாற்றில் ஆழப்பதிந்திருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் பொழுது

போர்வீரர்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து பொருட்கள் சேகரிக்கப் பட்டு அனுப்பப்பட்டன. அதனை வெற்றியுடன் செய்த திருமதி பாரிஜாதம் நாயுடு அவர்கள் ஆரம்பித்தது தான் மகளிர்நலத்துறை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி , அம்புஜம்மாள், மஞ்சுபாஷினி அவர்கள், கிளப்வாலாஜாதவ் அவர்கள்,, மூவலூர் இராமாமிர்த அம்மையார், திருமதி. சரோஜினி வரதப்பன், இன்னும் பல பெண்கள் சமுதாயத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு உழைத்தவர்கள்.


எத்தனை பேர்கள் இருந்தாலும் காந்திஜியின் வார்தாவைத் தமிழகத்தில்

அமைத்த திருமதி சவுந்திரராஜன் அவர்களின் சேவை ஒரு வகையில்

சிறப்பு பெற்றிருக்கின்றது. கிராமங்களில் மனம் ஒன்றிப் பணியாற்ற

ஊழியர்களை உருவாக்கிய இல்லம் காந்திகிராமம்.


அந்தக்காலத்தின் காந்தீய உணர்வை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக் கின்றேன். காந்திக் கட்சி என்றுதான் நினைப்பேன். கதர்த்துணி அணிந்தவர் யாராவது குடிப்பதைப் பார்த்தால் சண்டைக்குப் போய்விடுவேன். “கதர்த் துணியைக் கழற்று. அதைப் போட்டுக் கொண்டு அயோக்கியத்தனம் செய்யாதே “ என்று கத்துவேன். அது சீருடையல்ல.


பெரும் தலைவர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு அவர் வழி நடக்கின்றோம் என்று கூறிக்கொண்டு சுயநலத்துடனும், சுரண்டலும் செய்து கொண்டு இருப்பவரைப் பார்க்கும் பொழுது இந்த வயதிலும் அன்று கண்ணகிக்கு இருந்த சக்தி வரக்கூடாதா என்று துடிப்பேன்.


ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ

தரும மொன்றி யற்றிலாய் போ போ போ

நீதி நூறு சொல்லுவாய் காசொன்று

நீட்டினால் வணங்குவாய் போ போ போ

தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே

தீமை நிற்கிலோடுவாய் போ போ போ

சோதி மிக்க மணியிலே காலத்தால்

சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ


அன்றே முழக்கமிட்டான் பாரதி. இன்றையச் சூழலில் சுயநலத்துடன்

அலைகின்றவர்களைப் பார்க்கும் பொழுது “நெஞ்சு பொறுக்குதில்லையே”

என்று சேர்ந்து பொங்குவோமா? சாதியை ஒழிக்கின்றதாகக் கூறி நூற்றுக் கணக்கான சாதிகளும் அதனால் சண்டைகளும் தோன்றி சமுதாயம் அமைதியை இழக்க ஆரம்பித்துவிட்டதே! இதற்குப் பொறுப்பானவர்களை என்னவென்று அழைப்பது?


ஆங்கிலேயன் நம்மை அடிமைப் படுத்தி நாட்டைச் சுரண்டினான். ஆனாலும் சில நன்மைகளும் செய்திருக்கின்றான் என்பதை மறுப்பதிற்கில்லை. துண்டு துண்டாக இருந்து, நமக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததை மாற்றி ஒன்றுபடுத்தி ஓர் இந்தியாவை உருவாகிக் கொடுத்தானே! அன்னியன் செய்த நன்மையை இப்பொழுது அழிக்க ஆரம்பித்திருக்கின்றோம்.


கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்

கைகொட்டிச் சிரியாரோ?


இதுவும் பாரதி பாடியதே!

நம்மை நாம் நமக்காக ஆண்டு கொண்டிருக்கின்றோம்.

ஒரு வினாடியாவது மனச்சாட்சியுடன் இருந்து பார்ப்போமே!

நம்மால் முடியாது. அந்த ஒரு வினாடியிலும் குறுக்கு வழியில் ஆதாயம் தேடிப் போகும் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டது மனம். வரலாற்றை என்ன மாறி நாம் எழுதினாலும் உண்மை சாகாது. ஒரு நாள் விழித்தெழுந்து கைகொட்டிச் சிரிக்கும். “அப்பொழுது நான் இருக்க மாட்டேன்” என்கின்றாயா.? நம் சந்ததிகளுக்கு இந்த அவமானத்தையா சேர்த்து வைப்பது? காலம் தான் பதில் சொல்ல முடியும்.


நான் குறிப்பிட்டு யாரையும் குறை கூறவில்லை. தவறு செய்கின்றவன்

மறைத்துச் செய்யவில்லை. எல்லோருக்கும் தெரிந்தே செய்கின்றான்.

பாரதியின் எட்டயபுரம் என்னை வளர்த்தது. காந்திகிராமம் எனக்குப் பயிற்சி கொடுத்தது. அதுதான் இக்காலத்துக்குப் பொருந்தாமல் புலம்புகின்றேன். பணிக்களத்தில் வேகத்தைவிட விவேகம் வேண்டும்.


சம்பளம் வாங்கிக் கொண்டு பணி செய்கின்றவர்களும் ஆத்மார்த்தமாக

உழைக்கின்றோம் என்று கூற முடியாது. ஆட்சி பீடத்திலிலிருந்து அடியில் இருக்கும் மனிதன் வரை வேகமாக மாறிக் கொண்டு வருகின்றோம்.

அந்த மாற்றம், வாழும் முறைகளையே ஆட்டம் காண வைக்கின்றதே!

நம்மை நமக்கு உணர்த்த நம்மில் சிலராவது முயல்வேண்டும். நான் எழுதுவது சிறு தொண்டு.


கிடைத்த பயிற்சிகள், அறிவுரைகள் இவைகளுடன் களத்தில் இறங்கினேன். வாடிப்பட்டி வாழ்க்கை வசந்த காலம் என்றால் அது மிகையாகாது. அங்கு செல்லும் முன் திண்டுக்கல்லில் நான்கு மாதங்கள் பணியாற்ற வேண்டி வந்தது. அங்கு சென்றவுடன் எனக்குப் பிடித்தமான

வேலை கிடைத்தது.


திருச்சி வானொலி நிலையத்தார் திண்டுக்கல் வந்து நேரடியாக ஒரு நிகழ்ச்சியைப் பதிவு செய்ய இருந்தார்கள்.. அதன் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. கிராமீயக் கலைஞர்களை திண்டுக்கல் வர வழைத்து மேடையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும். பொது மக்கள் பார்வையாளர்கள். புதியவள் என்று தயங்காமல் எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்கு செய்தேன். கிராமம் கிராமமாகச் சென்று கலைஞர்களைச் சந்தித்து, அங்கேயே அவர்களை பாடச் சொல்லி ஆடச் சொல்லி, சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு திரையரங்கிலுள்ள மேடையில் நிகழ்ச்சிகளை நடத்தி னோம். எல்லோராலும் பாராட்டப் பட்டதுடன் எனக்கு வானொலி அறிமுகமும் கிடைத்தது. அத்துடன் நாட்டுப்புறப் பாடல்கள் நிறையக் கற்க முடிந்தது..பஞ்சம்பட்டி கிராமம் மறக்க முடியாது. அங்குதான் நிறைய பாடல்கள் கற்றுக் கொண்டேன். திண்டுக்கல்லிடம் விடை பெற்றேன்


வாடிப்பட்டி


ஐந்தாண்டுகளில் நான் முற்றிலும் மாறினேன். வாழ்க்கை அரங்கத்தில்

எனக்குப் பல வேடங்கள் கிடைத்தன. எனக்கு ஏணிப்படியைத் தந்தது அந்த கிராமம். போராட்டங்கள் கூட இனித்தன. சுவையான அனுபவங்கள். இலக்கியத்தரம் வாய்ந்த நட்புகள். என் திறமைகளை எனக்கே எடுத்துக் காட்டியது அந்த சின்ன கிராமம்


பணிக்கால அனுபவங்களை எழுதும் பொழுது என் நினைவலைகள்

முன்னும் பின்னும் போய்வரும். சில செய்திகளை உடனுக்குடன் சொல்லுவது அந்த செய்திகளின் வலுவைக் கூட்டும்.. அக்காலத்தில் அரசு இயந்திரம் சுழன்ற விதம் கூறும் பொழுது அது அறிக்கையாகத்தான் இருக்கும். சில செய்திகளைச் சுட்டிக் காட்டும் பொழுது அந்த வரிகளை மேலும் ஒரு முறை படித்து அதற்குள் புதைந்திருக்கும் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.


வாடிப்பட்டியில் பணியில் சேர்ந்தேன்.

.

என்னுடைய பணிப்பெயர் சமூகக் கல்வி அமைப்பாளர் பெண். கூப்பிடுகின்றவர்கள் எஸ். . ஓ அம்மா என்று அழைப்பார்கள். ஏற்கனவே கூறியிருந்தபடி சமூகக் கல்வி பொறுப்பில் முக்கியமாக விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

ஓர் ஆண் அமைப்பாளர் பதவி உண்டு. ஆனால் சில மாதங்கள் அது வெற்றிடமாக இருந்தது. அதன்பின் அந்த இடத்திற்கு வந்தவர் பெயர்

ருத்ரதுளசிதாஸ். இளம்பாரதி என்ற புனைப்பெயரும் உண்டு.பிற்காலத்தில் சாகித்ய அக்காடமி விருது முதல் பல விருதுகள் வாங்கியவர். 47 புத்தகங்களுக்குச் சொந்தமானவர். அவர் வேலைக்கு வந்த பொழுது சாந்தமான நல்ல பிள்ளை. நான்தான் சுட்டிப் பெண்

மீண்டும் அலைகள் வரும்.

.

1 comment:

சீதாம்மா said...

தொடருங்கள் அம்மா.நன்றி.