Tuesday, March 27, 2012

எட்டையபுரம் வரலாறு-05

நான் ஓர் வரலாற்று ஆய்வாளரல்ல,ஆர்வலரே.

வரலாற்றுச் செய்திகளை எழுதும்பொழுது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பார்த்து வைக்கவேண்டும். படித்த வரலாற்றுப் புத்தகங்கள், சில குழுமங்களின் விவாதங்கள், வரலாற்றுடன் இணைந்தவர்கள், வரலாற்று ஆய்வு செய்துள்ள ஓர் பல்கலைப் பேராசிரியர் கொடுத்த தகவல்கள், மன்னர் காலத்திலேயே வாழ்ந்து அங்கு நடப்பனவற்றைப் பார்த்தவள் என்ற முறையில் செய்திகளை எழுதிக்கொண்டிருக்கின்றேன். என் நெஞ்சில் ஒன்று முள்ளாகக் குத்திக்கொண்டு, அது அசைக்கப்படும் பொழுதெல்லாம் வலிக்கின்றது. மனச்சுமையை இறக்கவே எழுதிக் கொண்டிருக்கின்றேன். அவ்வளவுதான். குறிப்புகள் எங்கிருந்த எடுத்தன என்ற விபரங்களை இறுதியில் குறிப்பிடுவேன். இப்பொழுது கதைக்குச் செல்லலாம். சில நூற்றாண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்.

சுருக்கமாக சில தகவல்கள் மட்டும் கூற விரும்புகின்றேன். தெரிந்த விஷயங்களாக இருப்பினும் அவைகளைச் சுட்டிக் காட்டினால்தான் சொல்லப்போகும் செய்திகள் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ் மன்னர்கள் என்று கூறினால் உடனே நாம் மூவேந்தர்களை நினைப்போம். மூவேந்தர்களுக்குள் ஒற்றுமை கிடையாது என்பதும் தெரியும். பாரதத்தில் கூடக் குறிப்பிடும் அளவு பெருமை பெற்றிருந்த பாண்டிய அரசு பலஹீனமடைந்து பாமர மக்களுடன் கரைந்துவிட்டனர். அதன் பின் பாண்டிய நாடு பலர் கையில் பந்தாடப்பட்டது. நாயக்கர்கள் வந்தார்கள். ஆனால் மாலிக்காபூர் மதுரையை தரை மட்டமாக்கினான். மீனாட்சி அம்மன் கோயிலில் அடையாளத்திற்கு இரு தூண்கள் மட்டும் மிச்சம். அதன் பின் மீண்டும் வந்த நாயக்கர்கள் காலூன்றினர். அவர்கள் ஆட்சியில் பல சிறப்புகள் பாண்டிய நாட்டிற்கு ஏற்பட்டதை மறத்தல் இயலாது. உலக அதிசயங்களுடன் போட்டி போடும் அளவில் மீனாட்சி அம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டுவிட்டது.

விஜயபுர அரசின் பிரிதிநிதிகள் மதுரையில் அமர்ந்து ஆட்சி செய்தனர். நிர்வாகம் சரியாக நடக்க அவர்களுக்குட்பட்ட இடங்களை 72 பாளையங்களாக்கப்பட்டு பாளையக்காரர்கள் அமர்த்தப்பட்டனர். அவர்களின் முக்கிய பணி வரி வசூல் செய்து ஒரு பகுதியை அரசுக்குச் செலுத்த வேண்டும். அடுத்து அவர்கள் பகுதியில் சிலருக்குப் போர்ப்பயிற்சி கொடுத்து, அரசர் வேண்டும் பொழுது அந்தப் படைகள் உதவிக்கு வரவேண்டும். மற்றபடி பாளையக்காரர்களின் உரிமைகளில் அரசு தலையிடாது. காலம் செல்லச் செல்ல அதிகாரத்துடன் வாழ்ந்த பாளையக்காரர்கள் தங்களை மன்னர்களாகவே நினைக்க ஆரம்பித்தனர். அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களையும் மக்களையும் நேசிக்கத் தொடங்கி அவரவர் தன்மைக்கேற்ப ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்.

எட்டயபுரமும் அப்படி வந்த பாளையப்பட்டுகளில் ஒன்றே.அதன் வரலாற்றின் தொடக்கம்தான் நாம் இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.

சில கிராமங்களை உள்ளடக்கிய சந்திரகிரியில் வருடம் 856AD-ல் பெரிய நாயக்கர் என்று ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அவருடைய பரம்பரையினர் சில நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்து வந்தனர். அந்த பரம்பரையில் உதித்தவர் நல்லம நாயக்கர்.

ஒரு சமயம் நல்லம நாயக்கர் தன் தம்பி வடலிங்கம நாயக்கருடன் விஜயபுர அரசர் சம்புராஜாவைக்காணச் சென்றார். வழியில் ஒரு தடை ஏற்பட்டது. சோமன் என்ற மல்லன் பாதையின் குறுக்கே ஒரு சங்கிலியைக் கட்டி வைத்து அந்தப் பாதையைக் கடக்க வேண்டுமென்றால் சங்கிலியைத் தூக்கிக் குனிந்து செல்ல வேண்டும். அல்லது அவனுடன் போர் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்திக் கொண்டிருந்தான். நல்லம நாயக்கரும் அவர் தம்பியும் மல்லனுடன் போர் புரிந்து அவனைக் கொன்று விடுகின்றனர்.

அப்பொழுது மல்லனின் எட்டு சகோதரகள் ஓடி வந்து இனி எங்களைப் பாதுகாப்பவர் யார்? “ என்று புலம்பினர். உடனே நல்லம நாயக்கர், “ கவலை வேண்டாம் இனி நீங்கள் என் பிள்ளைகள் உங்களுக்கு நானே அப்பன் என்று கூறினார். மன்னர் மகிழ்ந்து நல்லம நாயக்கருக்கு எட்டுப் பிள்ளைகளுக்கு அப்பனாகியதால் இனி எட்டப்பர் என்ற பட்டத்தைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். அத்துடன் மல்லனை வென்றதற்கு, ஒரு தலை உருவம், அடுத்து கால் பிணைக்கும்

சங்கிலி இவைகளைத் தங்கத்தில் செய்து கொடுத்து, எட்டப்பன் என்ற பட்டத்தை இனி வரும் சந்ததிகள் பட்டப் பெயராக சேர்த்துக் கொள்ளும் உத்திரவையும் பிறப்பித்தார்.

எட்டப்பன்என்பது பட்டப் பெயர். குடும்பப் பெயர். அவர் அன்பு மனத்திற்கும், உடனே அரவணைத்து அடைக்கலம் கொடுத்தமைக்கும் விஜய நகர அரசரால் பெருமைக்குக் கொடுத்தப் பட்டபெயர்.

பின்னர் அவர்கள் சொந்த நாடு திரும்பினர். அவர்கள் வழித்தோன்றல் குமாரமுத்து எட்டப்ப நாயக்கர் காலத்தில் மதுரை நகர் வந்தனர். அங்கிருந்த விஜயநகர அரசு பிரதிநிதி அவர்களுக்கு இலம்புவனம் கொடுத்து அங்கே போய் ஆட்சி செய்யச் சொன்னார்.

இலம்புவனத்தில் இருந்து ஆண்டு கொண்டிருந்தவர்கள் எட்டயபுரம் ஊரை நிர்மாணித்துத் தங்கள் தலை நகரை மாற்றிக் கொண்டனர்.

எட்டப்பப் பரம்பரை ஊரானதால் எட்டயபுரம் என்ற பெயர் வந்ததாகச் செவிவழிச் செய்தி ஒன்றுண்டு. நான் சிறு பெண்ணாக இருக்கும் பொழுது அரண்மனையில் இதுபற்றி கேட்டேன். அப்பொழுது இன்னொன்றும் சொன்னார்கள். எட்டப்பன் என்ற பட்டம் அவரின் அன்பு மனத்திற்காகத் தரப்பட்டது. இந்த ஊரை ஆளும் பொழுது எல்லோரிடமும் அன்பாகவும் அக்கறையுடனும் இருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பதை உணர்த்தவே அதே பெயர் கொண்டு ஊர் பிறந்தது என்றார்கள்.

இதற்கு ஆதாரம் நான் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுடன் சரி.

ஒரு சமயம் மதுரை அரசர் கட்டளையின்படி எட்டயபுர மன்னர்களில் ஒருவர் திருவனந்தபுரம் சென்று ஒரு கோட்டையை அழித்துவிட்டுத் திரும்பும் பொழுது யாரோ ஒருவரால் வில்லெறிந்து கொல்லப் படுகின்றார். இதன் காரணமாக அவர்கள் குடும்பத்திற்கு கழுகுமலை, இரத்தமான்யமாக வழங்கப் பட்டது. அத்துடன்அய்யன்என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டது அதுமுதல் எட்டயபுரம் ஜமீன் ஆள்பவர்களின் பெயர்கள் கீழ்க்குறித்தவாறு இருக்கும்.

ராஜா ஜெகவீர ராமா (அப்பொழுது இருக்கும் ராஜாவின் பெயர்) எட்டப்ப நாயக்கர் அய்யன்.

உதாரணத்திற்கு முத்துக்குமார வெங்கடேஸ்வர என்பது அவரின் சொந்தப்பெயர். பட்டம் கட்டிய பின்னர் அவர் பெயர் ராஜா ஜெகவீர ராமா முத்துக்குமார வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர் அய்யன் என்று அழைக்கப்பட வேண்டும். வரலாறு எழுதும் பொழுதும் முழுப்பெயர் வரும் ஆனால் இடையில் அவர்களது சொந்தப் பெயர் வருவதால் குழப்பம் இருக்காது.முன்பு விளக்கம் தராமல் எழுதியதால் இப்பொழுது பிரித்துக் காட்டுகின்றேன்.எட்டயபுரம் தோற்றுவித்தவர் ஜகவீர ராமா என்பதால் அவர் பெயரையும் சேர்த்துக் கொண்டார்கள்.

பேச்சு வழக்கில் சில நேரங்களில் பட்டங்களை முன்பின்னாகக் கூறுவதும் உண்டு.அதே போல் அவர்கள் ஜமீன்தார்களாக இருந்த போதும் அங்கே வாழ்ந்தவர்கள் மஹாராஜா என்றுதான் அழைத்தனர். மனித நேயத்திற்காகக் கிடைத்த பட்டப் பெயர் எட்டப்பன் விபத்தால் சிதைக்கப் பட்டது. அதன் வரலாற்றைப் பார்ப்போம்.

சுதந்திரம் கிடைத்த பின்னர் மாநிலங்களின் எல்லைகளை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் வந்தது. வேங்கடம் முதல் குமரி வரை தமிழகத்தைச் சேர்ந்தவை என்று கூறினாலும் ஆந்திரா, தங்களுக்கு வேண்டும் என்றனர். அப்பொழுது ம. பொ. சி அய்யா தமிழரசுக் கட்சியின் தலைவர். எல்லைகளுக்காகப் போராடினார். திருப்பதி கிடைக்கவில்லை, ஆனால் திருத்தணி கிடைத்தது. அந்தப் பெருமை சிலம்புச் செல்வருக்கே உரித்தாகும். அவர் கட்டபொம்மன் வரலாற்றை எழுதினார். அதில் இருக்கும் சில வாசகங்களுக்கு எட்டயபுரம் அரண்மனை மறுப்பு கொடுத்தது. ஆனால் புத்தகம் வெளிவந்தபின் மறுப்பு வந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சலசலப்பு கொஞ்சம் அடங்கியது. ஆனால் சோதனை வேறு வடிவில் வந்தது.

வீரபாண்டியக் கட்டபொம்மன் திரைப்படம்.

நடித்தவர் நடிப்பு இமயம் சிவாஜி கணேசன் அவர்கள். நடிப்பின் பல்கலைகழகம் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். கலைஞரின் வசனமும் சிவாஜியின் குரலும் சங்கமம் ஆகவும் திரையுலகில் புது அத்தியாயம் தோன்றியது. முன்னதாக கே. ஆர். ராமசாமி அவர்கள் அருமையாக வசனம் பேசிவந்தார். ஆனால் சிவாஜி அவர்கள் வரவால் அவருடன் யாரும் போட்டியிட முடியவில்லை.

அவருக்காக சிறப்பாக வசனம் எழுதப் பட்டது. அவர் நடிப்பாலும் பேச்சாலும் கட்டபொம்மனுக்குப் பெருமை சேர்ந்தது. திரைக்கதை இலக்கணப்படி நாயகன் ஒருவன் இருந்தால் வில்லன் ஒருவன் இருக்க வேண்டும். வில்லன் என்றால் அவன் செயல்களைப் பார்த்தவர்கள் அவனை வெறுக்க வேண்டும். அதற்கேற்ப பேச்சும் முக பாவங்களும் இருக்க வேண்டும். வி.கே.ராமசாமி அவர்கள் வில்லனக வந்தார். சூழ்ச்சிகள் செய்கின்றார். வில்லன் சிரிப்பு. அற்புதமான நடிப்பு. அந்தப் பாத்திரத்தின் மேல் எல்லோருக்கும் வெறுப்பு வந்தது. அந்தப் பாத்திரத் திற்கு எட்டப்பன் என்று பெயர் கூறப்பட்டதால் துரோகிக்கும், காட்டிக்கொடுப்பவனுக்கும் எட்டப்பன் என்று புதுச்சொல் அகராதியில் சேர்ந்து விட்டது.மக்கள் மனத்திலும் ஆழமாகப் பதிந்து விட்டது .எட்டயபுரம் முழு வரலாறு தெரிந்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்காது.அத்தனைஆராய்ச்சிகள் செய்து கதை எழுதிய கல்கியின் பொன்னியின் செல்வனிலேயே பல வரலாற்றுப் பிழைகள் உள்ளன. இலக்கியவாதிகள் வரலாற்றை ஆர்வத்துடன் எழுதும் பொழுது இத்தகைய பிழைகள் நேர்ந்துவிடுகின்றன.

அதோ போறான் பாரு அவன் ஒரு எட்டப்பன்!

அவன் எட்டப்பன் வேலை செய்கின்றான். !

உன் ஊரில் எத்தனை எட்டப்பர்கள் இருக்கின்றார்கள்?

இப்படி எத்தனை எத்தனை வசைச் சொற்கள்.

துரோகிக்கு மாற்றுச்சொல் எட்டப்பன் என்றாகி விட்டது.

எட்டயபுர மன்னர்கள் அத்தனை பேர்களும் எட்டப்பர்களே.

அவர்களின் சாதனைகள் என்ன? மாற்றி எழுதவோ, கிழித்துப்போடவோ உண்டான சாதனைகள் இல்லை.

உமறுப்புலவர் பொய்யில்லை. சீறாப்புராணமும் அவர் சரிதமும் நிலையாக நின்று வாழ்ந்து கொண்டிருக்கின்றது. பாலுசாமி தீட்சதரும் முத்துசாமி தீட்சதரும் சங்கீத வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள். நாடக உலகில் மும்மூர்த்திகளில் ஒருவர் காசி விஸ்வநாதப் பாண்டியன். பாரதியாரும் கற்பனைப் பாத்திரமல்ல. முத்தமிழ் சாதனையாளர்களின் புரவலர்கள் எட்டயபுர ஜமீன்தார்கள். அவர்களின் பட்டப் பெயர் எட்டப்பர். ஊர்ப்பெயரிலும் எட்டப்பர் இருக்கின்றாரே. யாரும் தன்னை எட்டயபுரவாசி என்று சொல்லிக் கொள்ள முடியாத அவலம் நேர்ந்து விட்டது.

இது வேண்டுமென்று யாரும் செய்யவில்லை. ஓர் விபத்து. இந்த புதுச்சொல் அடங்கிவிடும் என்று பொது மக்களும் அமைதி காத்தனர். ஆனால் சமீபகாலமாக மீண்டும் இந்தச் சொல் அதிகமாகப் புழங்கப்பட ஆரம்பித்ததால் பேசி விளக்கம் தர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. தமிழ்வாணன் கட்டபொம்மனைக் கொள்ளைக்காரன் என்று எழுதினார். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. கட்டபொம்மன் சிறப்பிக்கபட வேண்டியவர் என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை.

ஓரளவாவது சில விளக்கங்கள் கொடுக்க விரும்புகின்றேன்.நான் தரும் விளக்கங்களுக்குச் சான்றுகள் இருக்கின்றன.

வரலாற்றைப்பற்றி ஆய்வாளர்கள் கவனித்துக் கொள்ளட்டும். ஆனால் இந்த சொல் எட்டப்பன் என்பதை துரோகிக்கு மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்துவது நிறுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவே எட்டயபுர வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.இது எட்டயபுர மக்களின் சார்பாக வேண்டுகோளைப் பதிவு செய்கின்றேன் அடுத்த பதிவில் விளக்கங்கள் தருவேன்.

அலைகள் மீண்டும் வரும்.

4 comments:

middleclassmadhavi said...

Ini ettappar enra vaarththaiyai thappakach cholla maatten!

விழித்துக்கொள் said...

nalla padhivu aduththapadhivai edhirnokkiyullen nandri
surendran

சீதாம்மா said...

நன்றி

Asin Thangaraj said...

கழுகுமலை பற்றிய குறிப்புகள் தேடினேன். உங்கள் கட்டுரையில் கிடைத்தது. மேலும், எட்டப்பன் பற்றிய உண்மையும் புரிந்தேன். நன்றி.