Saturday, May 22, 2010

இது பொறுப்பதில்லை!


துயரங்களும் அலைகளைப்போல் தொடர்ந்து வருமோ?

வலைப்பதிவு உலகத்தில் சமீபத்தில்தான் நுழைந்திருக்கின்றேன். இந்த உலகிலே வேடிக்கை மட்டுமல்ல; வேதனைகளும் கொட்டிக் கிடப்பதை உணர்கின்றேன்.

யாரையும் நான் வேதனைப்படுத்த விரும்பவில்லை. ஆனாலும், மவுனமாக இருக்கவும் முடியவில்லை. இது இடுகையல்ல; இணையத்தோருக்கு அன்புடன் விடுக்கும் கோரிக்கை!

என் அனுபவங்களை எழுத பலர் கூறியதால் மீண்டும் எழுதத் தொடங்கினேன். எழுதுவதும் பேசுவதும் மட்டுமல்ல என் தொழில். சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அமைத்துக்கொடுக்கிற களப்பணியில் பல்லாண்டு அனுபவத்தைப் பின்புலத்தில் வைத்திருப்பவள் நான்.

அதனால், இன்று உங்கள் எல்லோரிடமும் மனம்விட்டுப் பேச விரும்புகின்றேன்.

மனிதர்களில் ஆண், பெண் என்று இரண்டு இனம்தான்; ஆசை என்பது மனித இனத்திற்கே பொதுவான உணர்வு. எனவே, ஆசைகளைத் தூண்டிவிடும் சூழலில் வாழ்கின்றபோது, தாங்களும் பிரபலமாக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை இருபாலாருக்கும் எழுவது இயல்பே!

டாக்டர் மு.வ அவர்கள் எழுதிய ஒன்றை இப்பொழுது சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

"ஆண் தவறு செய்தால் அது பெரிதல்ல. ஏனென்றால் அவன் வெளியுலகில் நடமாடுபவன் வழுக்கும் சேற்றில் நடப்பது போல. பெண் தவறு செய்தால் தப்பு. அவள் வாழ்க்கை மணலில் நடப்பது போல!"

இது இந்தக் காலத்துக்குப் பொருந்துமா?

வீட்டில் பத்திரிகைகள் வாங்குகின்றோமே? தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்திருக்கின்றோமே? வீதியில் போனால் விளம்பரங்கள் வேறு கண்ணில் படுகின்றன. அடுத்தது சினிமா! ஆண் மட்டுமா பார்க்கின்றான்?

கூத்தும் கொண்டாட்டமும் வாழ்க்கையில் ஒரு பகுதிதான். ஆனால், வரவர நாம் வாழ்க்கையையே கூத்து மேடையாக்கிக் கொண்டிருக்கின்றோம். கூத்து என்பது உண்மையல்ல; புனைவு! ஆனால், நாமோ மயங்கி வாழ்க்கையையும் பொய்யாக ஆக்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஒன்றை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நம் வீட்டுக்குழந்தைகளிலும் ஒரு சிலரின் வாழ்க்கை, விளக்கில் வீழும் விட்டில் பூச்சியாகத்தான் போகும். ரோசப் பட்டுப் பயன் என்ன?

பெண் வீட்டை விட்டு வெளிவந்தாலே எந்தப் பணியிலும் எத்தனையோ சோதனைகளைத் தாண்டி வர வேண்டியிருக்கின்றது! வெளியே சொல்லவும் முடியாத குமுறல்களை மனதுக்குள் அடக்கி வைப்பதால், என்றேனும் ஒருநாள் எரிமலைக் குழம்பு வெடித்துப் பீறிடாமலா போய் விடும்?

ஒழுக்கம் என்பதன் வரைகோடுகள் காலத்துக்கு ஏற்ப அழிக்கப்பட்டு மீண்டும் திருத்தி எழுதப்படும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில பழைய கட்டுப்பாட்டுக்களின் இறுக்கம் அவரவர் சவுகரியத்திற்காக தளர்த்தப்படும். இதைப் பழையன கழிதலாகவும், புதியன புகுதலாகவும் ஏற்றுக்கொள்ளுகிற பக்குவத்தை அனைவரும் பெற வேண்டும்.

உடையலங்காரங்களையும், ஒப்பனைகளையும் வைத்துப் பெண்களின் ஒழுக்கத்தை எடை போட்டு மதிப்பெண் வழங்குகிற தார்மீக உரிமையை எவர், எவருக்கு எப்போது வழங்கினார்கள்?

அவரவர் செய்கிற பணிகளைப் பொறுத்தே வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு சூழலில், அவரவர் உடை,நடை,பாவனை ஆகியவை அமையும். இன்றைக்கு ஆண்கள் என்ன வேட்டி கட்டிக்கொண்டா வேலைக்குப் போகிறார்கள்? மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியான நாகரீக உடைகளை காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப அனைவரும் சுவீகரித்து விட்டிருக்கிறார்கள். இதன் அபரிமிதமான வெளிப்பாட்டையே திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் காண்கிறோம். அவற்றை ஏற்றுக்கொள்ளுவதும், மறுப்பதும் தனிமனிதர்களின் அடிப்படையுரிமை என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்?

மறுப்பவர்கள் தங்களுக்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களை ஒழுங்கீனம் என்று ஒட்டுமொத்தமாக முத்திரையிடுவது முதிர்ச்சியின்மையின் அறிகுறியன்றி வேறல்ல!

பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றின் பாடங்களை திரைப்படங்களிலிருந்தும், தொலைக்காட்சிகளிலிருந்தும் கற்றுக்கொள்ளுகிற அளவு நாம் அத்தனை பலவீனமாகவா போய் விட்டோம்? பிறகு ஏன், ஒரு திரைப்பட நடிகை, பெரும்பாலானோர்க்கு ஏற்புடையதல்லாத ஒரு கருத்தைச் சொன்னதும் நமக்குள்ளிருக்கும் வன்மங்களுக்கு வடிவம் கொடுத்து, கேள்விகளாலும் கேலிகளாலும் அந்தப் பெண்ணை, தகாத வார்த்தைகளால் இழிக்கிறோம்? பழிக்கிறோம்?

உளவியல்ரீதியாக அந்த நடிகை வெறும் கனவுக்கன்னியாக இருப்பதைத் தான் சராசரி ஆண் விரும்புகிறானா? அல்லது சமூக அவலங்களைச் சந்தித்துத் தீர்வு காண முடியாத இயலாமையை, ஆற்றாமையை, ஆத்திரத்தை இந்த நிழல்யுத்தத்தில் காட்டி மார்தட்டிக்கொள்ள வேண்டும் என்ற நப்பாசையா? ’எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு,’ என்ற குறளின் குரல்வளையை நெறித்துக் கொன்று விட்டோமா?

உலகில் பல தொழில்கள் போலத்தான் திரைப்படத்தொழிலும்! ஆயினும், இன்னும் உலகளாவிய அடிப்படையிலுமே கூட அத்துறையில் ஈடுபடுகிறவர்களின் வாழ்க்கை இயல்பாகவே வழுக்கல் நிறைந்தது; பாதுகாப்பற்றது. ஆயினும், அத்துறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் விருப்பம் காரணமாகவோ, கட்டாயம் காரணமாகவோ பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தான் அந்த மாய உலகில் வாழ்கிறார்கள். அவர்களது அந்தரங்கங்களை அறிந்து கொண்டு நாம் சாதிக்கப்போவது என்ன?

திரையுலகத் தொழிலில் நுழைய விரும்புகின்றவர்களில் ஆண் பட்டினி கிடந்து அலைவான்; கையில் இருக்கும் காசையெல்லாம் இழந்து வீடு வீடாய் ஏறுவான். உள்ளே நுழைவது அவனுக்குக் கஷ்டம். இதுவே ஒரு பெண் ஆசைப்பட்டு உள்ளே நுழையும்பொழுது அவளிடமிருந்து சில சமயங்களில் பறிக்கப்படுவது எதுவாயிருக்கும் என்பதை வாசிப்பவர்களின் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

யார் அவளை அங்கே போகச்சொன்னது என்று கேட்கத் தோன்றுகின்றதா? நாம் எல்லோரும் அதற்குப் பொறுப்பானவர்கள். நிழலை நிஜமென்று கருதி பலரை ஆராதித்து வானளாவ உயர்த்தி, பிறருக்கும் அது போலாக வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தி விடுகிறோம். இல்லையென்று சொல்ல முடியுமா?

ஆடிப்பாடி மகிழ்விக்கும் பதுமைகளாய் நடிகைகளைப் பார்ப்பது பழகி விட்டது. அதனால் தான், பதுமைகள் பேசுகையில் செரிமானம் செய்வது கடினமாய் இருக்கிறது அல்லவா?

உற்றார் உறவினரின் சுயநலம், சுற்றியிருப்போரின் சுரண்டல் போன்ற தீக்குழிகளைத் தினசரித் தாண்டிக்கொண்டு தான் திரையுலகத்தில் நடிகைகள் பெரும்பாலானோர் வெள்ளித்திரையில் சிரிக்கின்றனர். அவர்களின் நிஜமான நிலை என்ன? பாதுகாப்பின்மை! காரணம், சினிமா உலகில் பெண்களின் காலம் மிகவும் குறைவு.

பிரபலங்களுக்கே இந்த நிலை என்றால், துணை நடிகைகளின் வாழ்க்கை எப்படி என்று தெரியுமா? எனக்குத் தெரியும்.

என் அருமைத் தோழி புனிதவதி இளங்கோவன் வானொலியில் நாடகத்துறை இயக்குனராக இருந்தார். நான் சந்தித்தவர்கள் பலர். நமக்கிருக்கும் நிம்மதி கூட அவர்களுக்குக் கிடையாது. அனுதாபப்படுவதற்கு இதயமில்லாவிட்டாலும் வார்த்தைக்கணைகளால் அவர்களைச் சல்லடை போலத் துளைக்காதீர்கள்! கருத்துக்கள் ஏற்புடையதில்லை என்றால், அதை மாற்றுக்கருத்தால் எதிர்கொள்ளுவது தான் நாகரீகம்! அதை விடுத்து தனிமனிதரின் அந்தரங்கங்களையும், அவர் குறித்த அவதூறுகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்துவது இயலாமையின் உச்சகட்டம்!

நடத்தை குறித்து இழித்துப்பேசுவார்களே என்ற பெண்ணின் அச்சம் சுயநலமல்ல; அது ஒரு குடும்பத்தின் கண்ணியம் சம்பந்தப்பட்டது என்பதால் தான் அவள் யுகயுகமாய் குட்டக் குட்டக் குனிந்து வாழ்ந்திருக்கிறாள். ஒரு ஆணை இழித்துப் பேசுவதற்குக் கூட, அவன் வீட்டுப் பெண்களின் ஒழுக்கத்தைத் தான் குறிவைக்கிறார்கள்! இந்த அடாதவார்த்தைகளின் அழுத்தத்தை அனாவசியமாகச் சுமக்க விரும்பாத புதிய தலைமுறை, பெண்கள் மத்தியில் உருவாகிக்கொண்டிருப்பதை எவரும் மறந்து விடக்கூடாது. இது காலத்தின் கட்டாயம்; ஒப்புக்கொள்ள விரும்பாதவர்கள் ஒதுங்கி நில்லுங்கள்!

இந்த இடுகை பெண்ணியத்தின் பிரச்சாரமல்ல; ஆணாதிக்கத்துக்கு விடுக்கப்படும் அறைகூவல் அல்ல! இது மனிதாபிமானம் தேட முயலும் ஒரு மனு!

ஒருத்தியின் முதுகைப் பார்த்துக் கேலி செய்யும் பொழுது நம் முதுகிற்குப் பின்னால் இந்தத்தீமை நின்று கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

’சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில், மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினைக் காட்டுதடா,’ என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளை நினைவில் வையுங்கள்!

தமிழ் அமுதத்திற்குச் சொந்தம். அதில் நஞ்சைக் கலக்கலாமா? கருத்துப் பரிமாற்றங்களில் காழ்ப்புணர்ச்சி கலந்து கசப்பை வளர்த்து விட வேண்டாம். சமூக அவலங்கள் மிகுந்திருக்கிற சூழ்நிலையில், ஆணும் பெண்ணும் எதிரெதிர் கோணங்களில் சிந்தித்தால் தீர்வுகளுக்குப் பதிலாக அவலங்களின் எண்ணிக்கையே அதிகரிக்கும். ஒத்த கருத்தில் இணைந்து ஒன்றிச் செயலாற்ற வேண்டிய தருணம் இது.

மிருகமாகக் காடுகளில் அலைந்து திரிந்தனர் நமது மூதாதையர். லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு , ஆண்மகன் தான் குடும்பம் என்ற ஓர் அமைப்பை உண்டு பண்னினான். நாம் மீண்டும் மிருகவாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றோம். இது சரியா? ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் இரு கண்கள்! இரண்டும் நன்றாக இருக்க வேண்டும். சமுதாயத்தில் கேடுகளை விதைப்பதும் நாமே, வளர்ப்பதும் நாமே!

ஆயுதங்களின் உதவியோடு உலகெங்கும் வன்முறை வளர்ந்து கொண்டிருக்கின்றது. வார்த்தைகளில் விஷம் கலந்து அதைக் காட்டிலும் ஆபத்தான வன்முறையை வளர்க்கப் போகிறோமா?

முன்னெப்போதுமில்லாத அளவுக்கு குடும்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு இன்றைய சூழலில் ஆண்களுக்கு இருக்கிறது. அதைத் தட்டிக் கழித்து, பெண்களின் மீது பழிபோட்டு இனியும் தப்பித்துக் கொள்ள முடியாது. பெண்களின் களம் விசாலமாகிக்கொண்டிருக்கிறது. அவளது பார்வை விரிவாகிக் கொண்டிருக்கிறது. இது வரையிலும் அடங்கியிருந்த கேள்விகள் விழித்துக் கொண்டு விடை தேடுகிற முயற்சியில் ஈடுபடத்தொடங்கி விட்டன.

இந்த மாற்றத்தின் தாக்கம் இணையத்திலும் தென்படத் துவங்கியிருக்கிறது. பெருமழைக்கு முன் சிதறுகிற அந்த சின்னத்துளிகளை அலட்சியம் செய்து விடாதீர்கள்! வினாக்கள் எழுப்பப்படுகிறபோது விடையளியுங்கள்; விடை தெரியாதவர்கள் விலகி நில்லுங்கள்! கேள்விக்குறிகளைக் கேலி செய்து விடையளிக்க வேண்டிய பொறுப்பிலிருந்து விலகியோடுகிற விளையாட்டு இனி செல்லாது!

மாறும் உலகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்! ஏற்புடையவற்றைக் கடைபிடியுங்கள்; அல்லனவற்றைக் களையுங்கள்! கொச்சையாகப் பேசினால் அடக்கி விடலாம் என்ற பழைய தந்திரத்தைப் பரணில் போட வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.

உங்களுக்கு அண்டைநாட்டில் நடந்ததை, நடப்பதை அடுத்து எழுதுகின்றேன். நம்மைச்சுற்றி நடப்பதை தெளிவுடன் புரிந்து கொள்ளவும். உணர்ச்சிக்கு அடிமையானால் உண்மைகள் தெரியாது.

தம்பி மார்களே, பெண்களின் ஆதங்கங்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள்! கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆழ்மனத்தில் நீறு பூத்திருக்கும் நெருப்பைக் கொழுந்து விட்டு எரிய வைத்து விடாதீர்கள்!

9 comments:

Chitra said...

கூத்து என்பது உண்மையல்ல; புனைவு! ஆனால், நாமோ மயங்கி வாழ்க்கையையும் பொய்யாக ஆக்கிக் கொண்டிருக்கின்றோம்.


.....ஒவ்வொரு வரிகளிலும், பெண்ணின் உள் மனதின் அறை கூவல். அருமையாக கருத்துக்களை விளக்கி சொல்லி இருக்கிறீங்க. நன்றி, சீதாம்மா....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\கொச்சையாகப் பேசினால் அடக்கி விடலாம் என்ற பழைய தந்திரத்தைப் பரணில் போட வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.//

உண்மை..

\\யார் அவளை அங்கே போகச்சொன்னது என்று கேட்கத் தோன்றுகின்றதா? நாம் எல்லோரும் அதற்குப் பொறுப்பானவர்கள். நிழலை நிஜமென்று கருதி பலரை ஆராதித்து வானளாவ உயர்த்தி, பிறருக்கும் அது போலாக வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தி விடுகிறோம். இல்லையென்று சொல்ல முடியுமா// ம்.. தூக்கியும் வைப்போம் கீழ போட்டு மிதிக்கவும் செய்வோம் என்றரகம்.

கலகலப்ரியா said...

அருமை சீதாம்மா.. கை கொடுங்க... இப்டியே தொடர்ந்து எழுதுங்க.. எழுதிக்கிட்டே இருங்க...

நம்ம ஆளுங்கள்ல இந்தத் தலைமுறைப் பெண்களே ரொம்ப பின் தங்கித்தான் இருக்கிறார்கள்.. உடை விஷயத்தில் மாடர்னா இருப்பவர்கள் கூட...

ஸோ... சீதாம்மா க்ரேட்..

Mahi_Granny said...

ஆழமான கருத்து. அனாயசமான நடை . அருமை. தொடருங்கள்

ஸாதிகா said...

அருமையான,அவசியமான பதிவு.பிடியுங்கள் மேடம் மலர் கொத்தை.

அஷீதா said...

நிதர்சனமான உண்மை அம்மா.. பெண்களின் நிலை பற்றி அற்புதமாக எழுதியுள்ளீர்கள். திரைப்படத்துறையில் மட்டும் அல்ல சராசரி பெண்களின் பெரும்பாலோர் நிலையும் இப்படி தான் உள்ளது. .

பொதுவாக ஆண்கள் நீங்கள் சொன்னவாரு இருக்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் இன்றைய கால கட்டத்தில் நிறைய ஆண்கள் பெண்களின் அவலங்களையும் ஆதங்கங்களையும் புரிந்துக்கொண்டு நடக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. அதனால் பெண்கள் ஒட்டு மொத்தமாக ஆண் வர்க்கத்தை குறை கூறிக் கொண்டும் பழித்திக்கொண்டும் காலம் கழிப்பது நிறுத்திவிட்டு பல கோணங்களில் யோசித்து பார்த்து பக்குவத்திற்கு வந்தால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம்.
ஒட்டு மொத்த ஆண்களின் எண்ணங்கள்/ பார்வைகள் பெண்களை இழிவாகவே பார்கின்றன என்ற எண்ணத்தை நாம் நம் மனதில் இருந்து அகற்றி விட்டு அவர்களையும் நம்ப வேண்டும். இதை விட்டுவிட்டு ஆணும் பெண்ணும் எதிரெதிர் கோணங்களில் சிந்தித்தால் தீர்வுகளுக்குப் பதிலாக அவலங்களின் எண்ணிக்கையே அதிகரிக்கும் என்பது தான் உண்மை. நீங்கள் சொன்னவாரு இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டு ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களை பக்குவப்படுதிகொண்டு , ஒருவருக்கொருவர் மரியாதையோடு நடந்துக்கொண்டாலே நீங்கள் கூறி இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு :)

//தம்பி மார்களே, பெண்களின் ஆதங்கங்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள்! கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன்.//
என் சார்பாக நானும் வேண்டுகோள் விடுகிறேன்.

இவை யாவும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே, ஏதேனும் தவறு இருப்பின் என்னை மன்னியுங்கள்.

Mohamed G said...

ஆண்கள் பெண்மையை புரிந்து கொள்வதர்க்கு,இவ்வளவு விளக்கங்கள் தேவை இல்லை. ஆண்கள் எப்போதே புரிந்துவிட்டார்கள். சந்தேகம் வேண்டாம்....

ஸ்வாதி said...

அன்புள்ள அம்மா! எத்தனை நிதர்சனமான வார்த்தைகள்?? பெரும்பான்மையான ஆண் சமூகம் மட்டுமல்ல பெண்கள் கூட பெண்கள் தலையெடுப்பதை விரும்புவதில்லை. ஒரு கோடு கிழித்து அந்தக் கோட்டுக்குள் வளைய வரும் ஒரு செக்கு மாட்டுத் தனமான பெண்ணை மட்டுமே இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். கலாச்சாரத்தின் அஸ்திவாரம் பெண்களின் உள்ளாடைகளுக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள். இத்தகையோருக்கு உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் சவுக்கடியாக இருக்கும். எட்டயபுரத்துக்காரியின் உணர்வுகள் எத்தனை வயதானாலும் இன்னமும் அதே வீராவேசத்துடன் தான் இருக்கிறது என்பதை உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் எடுத்துக்காட்டுகிறது. சமூகநலத் துறையில் நீங்கள் வேலை பார்த்ததால் பெண்களின் வாழ்வியல் நிலைகளை நன்கு புரிந்து கொண்டவர் நீங்கள். பிரபலமான பெண் என்றாலும் சரி அடிமட்டத்திலிருக்கும் யாருக்கும் தெரியாத சாதாரணப் பெண்ணாயிருப்பினும் சரி வாழ்கயின் அடிப்படை உரிமை, சுதந்திரம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஆண் சமுதாயம் அளந்து கொடுப்பதைக் கண்டு கொள்ள வேண்டியது தான் என்ற எழுதப்படாத நியதியிலிருந்து முரணாக நிற்கும் எந்தப் பெண்ணும் இந்த வசைகளை தாண்டி வரப் போவதில்லை. என் புறங்காலில் ஒட்டியிருக்கும் தூசை துடைத்தெறிவதைப் போல் காலுதறி முன் சென்றால் மாத்திரமே பெண்களுக்கு உய்வுண்டு.

மீண்டும் வாழ்த்துகளும் நன்றியும் அம்மா!

அன்புடன்
சுவாதி

நஜீபா said...

எனது இடுகை குறித்து பெருந்தன்மையுடன் குறிப்பிட்டமைக்கு உளமாற நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.