Saturday, April 24, 2010

மரத்தடியில் முக்கனிகள்-02


தெய்வப் பழம் தனி ருசியைக் காட்டிட்டுது. பொண்டாட்டியப் பாத்து விபரம் கேட்டான்.

பாவம் அந்த அம்மா! இந்தக் காலமா இருந்தா அடுக்கடுக்கா பொய் வந்திருக்கும். சினிமா,டி.வி பாக்கறாங்களே!

அந்த அம்மா உண்மையைச் சொல்லிடுத்து. விடுவானா புருஷன்?

"அதென்ன சாமி கொடுத்ததுன்னு கதை சொல்றே? என் முன்னால் இன்னொண்ணு வரவழச்சு காட்டு,"ன்னு சொல்லிட்டான்.

"சரிதான் போய்யா." என்று சமஉரிமைக்குரலில் பேச இந்தக் காலம் இல்லியே! கடவுளைக் கூப்பிட்டாங்க அந்த அம்மா. அதான் சிவன் அய்யா காத்துக்கிட்டே இருந்தாரே!

உடனே அந்த அம்மா கைய்யில் இன்னொரு மாம்பழம் வந்துடுச்சு.

புருஷன் அரண்டுட்டான். ஆம்புளங்க அவ்வளவுதான். ஜம்பமா பேசத்தான் தெரியும். பொண்டாட்டி நிமிந்துட்டா அடங்கிப் போய்டுவான்.

அப்போ அவன் ஒண்ணும் பேசல்லே.வியாபாரத்துக்குப் போனவன் போனவன் தான்; வரவேயில்லே.

புனிதம்மா வருஷக் கணக்கா காத்திருந்தாங்க. மதுரைலே இருக்கான்னு தகவல் கிடைச்சது. புருஷனைப் பாக்கப் புறப்பட்டுட்டாங்க. தைரியசாலிதான்!

கண்ணகி காலமா இருந்தா சாகுற வரை வூட்டுக்குள் இருந்திருப்பாங்க.

வூட்லேயே இருந்திருக்கலாம். அந்த அம்மாவை எலும்புப் பேயாக்கிடணும்னு சிவக்கடவுள் முடிவு செய்துட்டாரே!

புனிதம்மா போனா, அவங்க புருஷன் இன்னொரு பொண்ஜாதி பிள்ளைகளோட வந்து அம்மா கால்லே விழுந்துட்டான்.

இதுதான் சரணாகதிபோல! ஆம்புளங்க கெட்டிக்காரங்க. ஊருக்கு ஒருத்தியை மத்தவங்களுக்குத் தெரியாம வச்சுக்க முடியுது. அந்தக் காலத்துலிருந்து ஒரே கதைதான். இது மனுஷங்க விவகாரம்.

அம்மா விஷயத்துக்குப் போகலாம். புருஷன் கால்லே விழவும் துடிச்சாங்க. வூட்டுக்கு வந்து காலத்தைக் கடத்தியிருக்கலாம். நல்ல வசதி இருந்தது. ஆனால் அந்த அம்மாவுக்கு உலகமே வெறுத்துப் போச்சு.

கடவுள் கிட்டே புலம்பி அழுதாங்க. அவர்தான் காத்துகிட்டே இருந்தாரே. அந்த
அம்மாவை எலும்புப் பேயாக்கிட்டாரு. இதுவும் அவர் இருக்குற மலைக்குப் போயி ,தலைகீழா படி ஏறி சிவன் சாமியைக் கும்பிட்டாங்க.

இந்த அம்மா இப்படி ஆனதுக்கும் மாம்பழம் காரணம்னு சொல்ல வச்சுட்டாரு. விளையாடறது இந்த சாமிகள்; குற்றம் சொல்றது மத்தவங்களை!

மாங்கனி கதை முடிக்கவும் வாழையின் மனமும் கனிந்தது.

“மாங்கனி, உன் மனசு கஷ்டம் புரியாம பேசிட்டேன். மனசுலே வச்சுக்காதே. நாம சாதாரணப் பழங்க. கடவுளோட போட்டி போட முடியுமா? கவலையை விடு," என்று வாழைக்கனி ஆறுதல் கூறியது.

“எல்லாம் அந்த நாரதர் ஆரம்பிச்சு வச்சது. நமக்கும் ஒரு காலம் வரும்,“ என்று பலாக்கனி கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே நாரதர் வந்து சேர்ந்தார்.

நாரதர் முகத்தில் உற்சாகம் இல்லை.

இப்பொழுது பலாக்கனிக்கு நேரம்

"என்ன நாரதர் சாமி, கலகத்துக்கு ஆள் கிடைக்கல்லியா?" என்று அக்கறை கொண்டது போல் நாசுக்கா கேட்டது பலா.

நாரதருக்குக் கோபம் வந்தது. இந்த சாதாரணப் பழங்கள் கேலி செய்வதா? சமயம் வரட்டும் என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டார்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை,“ என்றார் நாரதர்.

“சாமி, நமக்குள்ளே என்ன சாமி, நாங்க மனுஷப் பிறவியா? சீக்கிரம் உசுரை விடற பிறவிங்க.“ என்று மெதுவாகக் கூறிவிட்டு, மேலும் தொடர்ந்து பேசியது பலா.

“சாமி, நீங்க பூலோகத்துக்கு வந்துட்டீங்க. அதுவும் எங்க நாட்டுக்கு. ஊருக்குள் போய்ப் பாருங்க. நிறைய கதை கிடைக்கும். உங்களுக்கும் பொழுது போகும்.“

நாரதர் யோசித்தார் முகத்தில் புன்னகை பிறந்தது.

“நான் போய்ட்டு வரேன்,“ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டார் நாரதர்.

"எங்கே போறாரு?" என்று ஆவலுடன் கேட்டது வாழை.

பலாவோ,"வேடிக்கை பாருங்க!“ என்று மட்டும் கூறியது.

போன நாரதர் கொஞ்ச நேரத்தில் வந்தார்.

"ஊரு இப்படி கெட்டுப் போயிருக்கே, இனிமே கடவுள் கூட எட்டிப் பார்க்க முடியாது,“ என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.

"என்ன நடந்தது?" என்று அப்பாவியாகக் கேட்டது மாங்கனி.

“வேறென்ன, ஊருக்குள்ளே இப்போ எல்லாரும் நாரதர்தான். கலகம் செய்ய மேலேருந்து வரணுமா? உனக்குக் கெட்டபேரு வரவச்சாரில்லே? இனிமே பூலோகம்னா அலறுவாரு. சரியான பாடம்!"

பலா முரட்டுத்தனமாக பதில் கூறியது.

மற்ற இருகனிகளும் பலாவை வியப்புடன் பார்த்தன.

“பலா, படைப்புலே, உனக்கு வெளிப்புறம் முரட்டுத்தோல். உள்ளேதான் இனிப்புப் பழம். சுலபமா எடுத்துட முடியாது. உன் புத்தியும் சுலமாப் புரிங்சுக்க முடியல்லே. இருந்தாலும் இப்போ சந்தோஷமா இருக்கு. நாம ஒத்துமையா இருந்தா போதும்,“ என்று மாங்கனி கூறியது.

மாங்கனியின் பேச்சு இனித்தது.

கதை முடிந்தது.

2 comments:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////“பலா, படைப்புலே, உனக்கு வெளிப்புறம் முரட்டுத்தோல். உள்ளேதான் இனிப்புப் பழம். சுலபமா எடுத்துட முடியாது. உன் புத்தியும் சுலமாப் புரிங்சுக்க முடியல்லே. இருந்தாலும் இப்போ சந்தோஷமா இருக்கு. நாம ஒத்துமையா இருந்தா போதும்,“ என்று மாங்கனி கூறியது.///////////


ஆஹா பழங்களின் மொழி புதுமைதான் . பழங்களின் வாயிலாக மிகவும் அருமையான கருத்தை அறிந்து கொண்டேன் . பகிர்வுக்கு நன்றி .

தொடருங்கள் மீண்டும் வருவேன் கதை கேட்க

Chitra said...

நல்லதொரு கருத்து உள்ள கதை. நன்றி.