Friday, April 30, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-10

உலகச்சுழற்சியில் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சில மாறுதல்கள் மட்டும் மனத்தை அதிகம் ஈர்க்கின்றன.

கடவுளைப் பற்றிய நம்பிக்கைகளை உடைத்தெறிந்திருக்கின்றார் காரல்மார்க்ஸ். எனவே, பகுத்தறிவு வாதம் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சாகடிக்கப்பட்ட சாக்ரட்டீஸ், மூடப் பழக்க வாழக்கங்களை ஏற்கனெவே சாடியிருக்கின்றார். அவைகளில் முளைத்த காளான்கள் தான் சாதிகள்.

தந்தை பெரியார் சொன்ன பொழுது ஏன் துடித்து எழுந்தோம்?

அவர் பேச்சு மேடைப் பேச்சல்ல; அந்த இடத்தைவிட்டுப் போகவும் தேய்ந்து போக. வீட்டுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஒலி; தன்மானத்தைத் தட்டி எழுப்பிய குரல்;நாம் புரிந்து கொள்ள முடிந்த மொழி.

அவர் பேச்சுக்கு உயிரோட்டம் அதிகம். மனிதனை மனிதன் ஒடுக்கும் கொடுமை வலியைக் கொடுக்க ஆரம்பித்தது. சமுதாயம் விழித்துக் கொண்டுவிட்டது. இந்தியாவில் வல்லபாய் படேல் அவர்களை இரும்பு மனிதன் என்பார்கள். தூங்கிக் கொண்டிருந்த மனிதனைத் தட்டி எழுப்பியவர் அன்புக்கனி வெள்ளைத் தாத்தா. அவருக்குத் தலைமகனாய் அமைந்தார்அறிஞர் அண்ணா.

இந்திய மண்ணில், உள்ளம் கவர்ந்தவர்களுக்கு உறவு கொடுத்துவிடுவோம்.

காந்தி தாத்தா,நேரு மாமா, தந்தை பெரியார், மற்றும் “அண்ணா” என்ற பெயரிலே ஓர் அண்ணா.எனக்கு இந்த உறவுகள் பிடித்திருந்தன.

அடுக்குத் தொடர் தமிழ் பிடித்திருந்தது. ஏற்கனவே உள்ளத்தை ஆட்டிவைத்த சில பிரச்சனைகளுக்கு ஊக்கம் கிடைத்தது. பேசியப்பன் கொடுத்த எல்லாப் புத்தகங்களையும் படித்தேன். அண்ணா எழுதிய "கம்பரசம்", "ரங்கூன் ராதா", கலைஞர் எழுதிய "வாழமுடியாதவர்கள்" புத்தகங்கள் படித்தேன். ஆனால் இந்தப் புத்தகங்களைவிட அண்ணாவின் பேச்சுக்கள் தாங்கி வந்த அந்த சின்னஞ்சிறு புத்தகங்கள்தான் அதிகமாக என்னைக் கவர்ந்தன. அதன் தாக்கம் என் பேச்சுக்களில் காண ஆரம்பித்தது.

எனக்குள் எப்பொழுதும் துணை இருந்தவர்கள் பாரதியும் தந்தை பெரியாரும்.

எங்கு சென்றாலும் துணிச்சல்காரி என்ற பெயரும் தொடர்ந்து கிடைத்தது.

ஒரு நிகழ்ச்சி கூற விரும்புகின்றேன்.

சாதாரணமாக ஒரே ஒரு வீட்டுக்குதான் என் தந்தை அனுப்புவார்; என் பாட்டிவீடு. அம்மாவைப் பெற்றவர்கள். என் தகப்பனார் சத்தியாகிரகப் போராட்ட காலத்தில் எங்களை விட்டுப் போயிருந்த காலத்தில் ஹோட்டலில் மாவரைத்து, வீடுகளில் சமையல் செய்து என்னையும் என் தாயையும் காப்பாற்றியவர்கள்.

ஒரு கிராம முனிசீப் மனைவியாக வாழ்ந்து சீக்கிரமே கணவரைப் பறிகொடுத்து, இரண்டு பெண்களுக்கு ஐந்து நாட்கள் திருமணம் செய்து வைத்து ஓட்டாண்டியாகி, பின்னரும் தன் ஒரே மகனுடன் மகள், பேத்தி இருவரையும் காப்பாற்ற உழைத்த ஒரு மூதாட்டி என் பாட்டி. அவர்கள்.

மதுரையில் கீழ அனுமந்தராயன் கோயில் தெருவில் ஓர் வீட்டில் ஒண்டுக்குடித்தனம் இருந்தார்கள்.

செல்லமைய்யர் வீட்டில் ஐந்து குடித்தனங்கள். எல்லோரும் உறவினர்கள். என் பாட்டியை குப்புச் சித்தி என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்.

அந்த வீட்டிற்கு ஒரு விஷேசம் உண்டு. அந்த வீட்டைப் பஜனை அய்யர் வீடு என்று அழைப்பார்கள். வீட்டுக்கு நடுவில் பெரிய ஹால் ஒன்று உண்டு. அங்கேதான் வாரம் ஒரு நாள் பஜனை நடக்குமாம். பக்கத்து தெருக்களிலிருந்தும் ஆட்கள் வருவார்கள்.

அடுத்து இருந்த மேல அனுமந்தராயன் கோவில் தெருவில் குடியிருந்த வீணை சண்முகவடிவு கூட சிலசமயம் அங்கு வந்து பஜனையில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். வரும்பொழுது தன் மகள் குஞ்சமாளையும் அழைத்து வந்ததுண்டு என்று கூறுவார்கள். அந்த குஞ்சம்மாள் வேறு யாருமல்ல; இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமிதான்.

நான் அந்த வீட்டிற்குச் சென்ற பொழுது பஜனை நடத்துவது நின்று போயிருந்தது. அங்கே சீதாமாமி என்பவரை எனக்குப் பிடிக்கும்; அவருக்கும் என்னை பிடிக்கும். ஆனால், அவர்கள் கணவருக்கு என்னைப் பிடிக்காது. நான் அனாசாரமாகப் பேசுகிறேனாம். ஆமாம், வித்தியாசமாகப் பேசினேன்.

ஆமாம், மத்த ஜாதிக்காரா மேலே பட்ட காத்து நம்ம மேலே படரதே"

காத்துக்குத் தோஷம் இல்லே

அப்போ தண்ணி?"

தண்ணிக்கு தோஷம் இல்லே

தவிர்க்க முடியாதவைகளுக்குத் தனி சமாதானங்கள்!

பாட்டி,நீ சுத்தத்துக்காக எல்லாம் அலம்பறியா, அல்லது மத்தவா தொட்டுட்டான்னு அலம்பறியா? உப்பையும் சர்க்கரையும் அலம்பு பாட்டி!"

அந்த வீட்டில் நான் பொருந்தவில்லை.

சீதாமாமி என்னைத் தனியாகக் கூப்பிட்டு,“பாப்பா, காலம் மாறிண்டு வர்றது. இதுவரை பழக்கப்பட்டுட்டா. நீ சின்னப்பொண்; இப்படியெல்லாம் பேசி மத்தவா வாயிலே விழாதே!“

எனக்குத்தான் எத்தனை பெயர்கள்!

பிறந்த பத்து நாட்களில் ஹோமம் வளர்த்து எனக்கு என் தந்தை வைத்த பெயர் சீதாலட்சுமி. அவர் எங்களை விட்டு ஜெயிலுக்குப் போயிருந்த பொழுது என் தாயார்தான் முதல் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள் அப்பொழுது வைத்த பெயர் குஞ்சம்மாள். எல்லோரும் கூப்பிடும் பெயர் பாப்பா.

மாமியின் அன்பு வார்த்தைகளுக்குக் கட்டுப்பட முயன்றேன்.

நவராத்திரி நேரம் நான் சென்றிருந்தேன். மதுரையில் கோவில்கள் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் கூட பொதுமக்கள் பார்க்கச் சில இடங்களில் கொலு வைத்திருப்பார்கள்.

வெங்கலக் கடைத்தெருவில் தனியார் கொலுமண்டபம் ஒன்றிற்குச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்தது. பாட்டியுடன் சென்று கொண்டிருந்தேன்.

திடீரென்று யாரோ என்னைத் தொடும் உணர்ச்சி. கூட்டத்தில் தற்செயலாக நடக்கக் கூடியதுதான். நான் திரும்பிப் பார்த்தேன்; என் முதுகுப் பக்கமாய் கை வளைந்து என் தோளைத் பிடித்துக்கொண்டு ஒருவன் அசட்டுச்சிரிப்பு சிரித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான்.

அவ்வளவுதான்! நானும் அவனை இறுகப் பிடித்து முதுகில் குத்து குத்தென்று குத்தினேன். எனக்கு எப்படி ஆவேசம் வந்தது என்று தெரியாது. குத்துப்பட்டவன் கீழே விழுந்து எப்படியோ எழுந்து ஓடிவிட்டான். அதற்குள் கூட்டத்தினர் பார்த்து விட்டனர்.

எல்லோரையும் பார்த்தேன்; ஒருவரிடமும் பாராட்டும் முகமோ இரக்க உணர்வோ தெரியவில்லை.

மாறாக ,"சே, இப்படியும் ஒரு பொண்ணா? அடங்காப்பிடாரி! கூட்டம்னா மேலே படாம போக முடியுமா?வெக்கம்கெட்டவ! கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம, ஒரு ஆம்புள்ளையத் தொட்டு அடிச்சுட்டாளே! ஏய் கிழவி, உம் பொண்ண அடக்கிவை. இல்லே,ஒரு நாள் அறுத்துக்கிட்டுப் போய்டும்."

கூட்டமே கோரஸ் பாடியது.

என் மனக்குரலில் பாரதியின் இசை:

பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா

மோதி மிதித்துவிடு பாப்பா-அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"

அவன் முகத்தில் காறித்துப்பவில்லையே என்ற குறை எனக்கு. என் பாட்டி என் கையை இறுகப் பற்றிக்கொண்டு அழுது கொண்டே கூட்டிச் சென்றார்கள்.

நானா தப்பு செய்தேன்? என்னைக் கட்டிபிடிச்சவனை நான் அடித்தது தப்பா?

வெட்கத்தை நாய்க்குப் போடச் சொன்ன பாரதியை பெரிய மனுஷன்னு ஒத்துக் கொள்ளும் இந்த சமூகம், தீமையைக் கண்டு பொங்கி எழும் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கும் பட்டம் “வெட்கம் கெட்டவள்"

மனக்கொதிப்பை என் பாட்டிக்ககாக அடக்கிக் கொண்டு மவுனமாய் நடந்தேன்.

மறுநாளே என்னை எட்டையாபுரத்திற்குக் கூட்டி வந்து விட்டார்கள். என்மேல் மிகவும் பிரியம் வைத்தவர்கள் பாட்டி. அவர்கள் மனம் வருந்தும்படி நடந்துவிட்ட சம்பவத்திற்கு வருந்தினேன். அவன் மட்டும் மீண்டும் கிடைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அவனை அடித்திருப்பேன்.

நான் தூங்கிவிட்டேன் என்று என் பாட்டி அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“குழந்தைய நினச்சா கவலையா இருக்கு. ஏன் இப்படி மாறிட்டா? பேப்பர்லே வந்திருந்தா யாராவது கல்யாணம் செய்துப்பாளா? பொண்ணா வளரலியே! அவ அப்பன் வளர்ப்பு அப்படி; பத்திரமா பாத்துக்கோ!அந்த மீனாட்சிதான் இவளுக்கு நல்ல புத்தி கொடுக்கணும்.“

பாவம் பாட்டி! என் புத்தி கெட்டு விட்டது என்று முடிவிற்கு வந்து விட்டார்கள்.இது அக்கிரஹாரப்பாட்டி. இதுவே கிராமத்துப் பாட்டியாக இருந்திருந்தால், எனக்குப் பேய் பிடித்துவிட்டது என்று பேயோட்டுபவனை அழைத்துவந்து வேப்பிலை அடித்திருப்பார்கள்.

மீனாட்சி புத்திகொடுப்பாள்னா அவள் என் பக்கம் தான் பேசுவாள்! அவள் ராணியாச்சே!

நடந்ததை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். மேலே இடிமட்டும் பட்டிருந்தால் கூட்டத்தைக் காரணமாக நினைத்து ஒதுங்கியிருப்பேன். கட்டிபிடித்தது தற்செயல் நிகழ்வாக எப்படி நினைக்க முடியும்? சாமி கும்பிட வந்த இடத்தில் மனதில் வக்கிரம். அவனையல்லவா பெண்கள் கண்டித்திருக்க வேண்டும்?

பெண்ணே இப்படியிருந்தால் ஆண்களை மட்டும் குறை கூறிப் பயன் என்ன? புதைகுழியில் மூழ்கிவிட்ட பெண்ணின் திறன் மீண்டு வருமா?

பாட்டிக்கும் அம்மாவிற்கும் இன்னொரு கவலை. பெண்ணுக்கு 15 வயதாகிவிட்டது; யாராவது கல்யாணம் செய்து கொள்வார்களா என்று.

நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். புருஷன் என்ன தப்பு செய்தாலும் பெண்டாட்டி பொறுத்துக்கொள்ள வேண்டும். இது என்னால் முடியாதது. அதனால் அவர்கள் கவலையைப் பற்றி கவலைப்படவேண்டாம்.

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருக்கின்றது,"என்று என் பாரதி குமுறினானே!

இந்தக் கொடுமை நீங்க என்ன செய்யலாம்?

ஓடி விளையாடி உற்சாகமாக இருக்க வேண்டிய வயதில் ஊர்க்கவலை! அந்தக்காலத்தில் இப்படி ஒரு பெண். அதுவும் கிராமத்தில் வளர்ந்த பெண்!

அக்காலச்சூழல்,படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், பழகிய மனிதர்கள், வளர்ந்த குடும்பம் இவைகளால் உருவாகப்பட்ட ஒருத்தி. ஆனால், பிற்காலத்தில் அவள் மேற்கொண்ட பணிக்கு உறுதியான நெஞ்சுக்கு உரமிட்ட காலம்.

மனிதனின் வளர்ச்சியில் பிள்ளைப்பருவம் மிகவும் முக்கியம் வாய்ந்தது.

(ஊர்வலம் தொடரும்)

1 comment:

Chitra said...

/////மாறாக ,"சே, இப்படியும் ஒரு பொண்ணா? அடங்காப்பிடாரி! கூட்டம்னா மேலே படாம போக முடியுமா?வெக்கம்கெட்டவ! கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம, ஒரு ஆம்புள்ளையத் தொட்டு அடிச்சுட்டாளே! ஏய் கிழவி, உம் பொண்ண அடக்கிவை. இல்லே,ஒரு நாள் அறுத்துக்கிட்டுப் போய்டும்."/////



.....கூரான வார்த்தைகளில், சமூகத்தின் attitude. :-(
உங்கள் இடுகை வாசிக்கும் போது, ஒரு நல்ல புத்தகத்தையே வாசித்த திருப்தி. அத்தனை விஷயங்கள், கருத்துக்கள், உணர்வுகள்......... அருமை.