Wednesday, April 14, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன்-03


சென்னை மெரீனா கடற்கரை சென்றால் வித விதமான,சுவாரஸ்யமான காட்சிகள்.


அங்கே டொம்மிகுப்பம், நொச்சிகுப்பம் இருக்கின்றதே, போயிருக்கின்றீர்களா?

அங்கே ஏதாவது ஓர் விட்டுக்குள் நுழைந்து பார்த்திருக்கின்றீர்களா?

ஒர் வீட்டில் அரிய காட்சியொன்றை நான் கண்டேன்.

தாயென்றால் பாலூட்டி சீராட்டும் அம்மாவை நமக்குத் தெரியும்.நான் போன பொழுது வீட்டுக்கதவு பூட்டப்படாமல் சாத்தி இருந்தது. பெயர் சொல்லிக் கூப்பிட்டேன்.யாரும் வரவில்லை.மெதுவாகக் கதவைத் திறந்தேன். ஓர் குழந்தை தூளியில் தூங்கிக் கொண்டிருந்தது. இது ஒரு அதிசயமா என்று கேலியாகப் பார்க்கின்றீர்களா? கொஞ்சம் பொறுங்கள்!

பக்கத்து வீட்டுக்காரி வந்தாள்

எங்கே வள்ளி?

அவள் வீட்டு வேலை செய்யப் போய்ருக்கா! வர நேரமாகும்.

குழந்தை எழுந்தா யார் பாத்துப்பாங்க?

அது எழுந்திருக்காதும்மா. சாராயம் கொடுத்துத் தூங்க வச்சுட்டுப்போவா

பாலூட்டும் தாய் சாராயம் கொடுத்துத் தூங்க வைத்திருக்கின்றாள்.இந்தக் கொடுமையை நான் பார்த்த பொழுது துடித்தேன்.

என்னம்மா செய்றது? பச்சபுள்ளையை வேலை செய்ற வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியாது. புருசனும் குடிகாரன். இவதான் சம்பாதிக்கறா. ஏதோ அரை வயத்துக் கஞ்சியாவது கிடைக்குது.

அரசாங்கத்தை,அல்லது ஆளும் கட்சியைத் திட்டத்தோன்றுகின்றதா?

நம் நாட்டு வளர்ச்சியை வரை கோடு போட்டு பார்க்கக் கூடாது.முக்கோணம் போடுங்கள். அதான், குடும்பக்கட்டுப்பாட்டுக்கு போடுவோமே. இந்த முக்கோணம் மூன்று பக்கமும் ஒரே அளவா போடக் கூடாது. அடிப்பாகம் மிக மிகப்பெரிது. ஆம், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் அதிகம். மத்தியதரக் குடும்பம்;ரெண்டுங்கெட்டான். அரசாங்கத்திடம் கற்பக விருட்சம் கிடையாது. வரிப்பணம் அதிகரிக்க வேண்டும்.மேலும் சுமை.

அர்த்தம் கெட்டு நாம் நிறைய பேசுகின்றோம்.

என்னளவில் செய்ய முடிந்ததைச் செய்தேன்.முழுப்பிரச்சனையைத் தீர்க்கும் வலிமை எனக்குக் கிடையாது. கோபம் மட்டும் வந்தது.

இன்னொரு அம்மாவையும் காட்ட விரும்புகின்றேன். கிண்டியிலிருந்து 45B பஸ் பிடித்து நந்தனம் சென்று கொண்டிருந்தேன். அலுவலக நேரம்; கூட்டம் அதிகம். சைதாப்பேட்டையில் பஸ் சில நிமிடங்கள் நின்றது.ஒரு பெண் கையில் அழும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள். அவ்வப்பொழுது துணியை விலக்கிக் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிக் கொண்டு வந்தாள். என் பார்வைக்கு வந்த பொழுது நான் அதிர்ந்துவிட்டேன். குழந்தையின் ஆசனவாயிலில் சிகப்பாக பெரிய சதைக் கட்டி! என்னவென்று கேட்கும் முன் பஸ் புறப்பட்டு விட்டது.அன்று முழுவதும் அமைதி இல்லை.

இரண்டு நாட்களில் அவளை எலெக்ட்ரிக் டிரைனில் பார்த்தேன். என் பக்கம் வரவும் காசு கொடுத்து மெதுவாக விசாரித்தேன். அவள் குழந்தையை எக்மோர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றாளாம். அவர்கள் கவனிக்கவில்லையாம். காசு வசூலித்து வேறு நல்ல டாகடரிடம் காட்டப் போகின்றாளாம்

எனக்குப் புரிந்துவிட்டது. நானே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போகின்றேன் என்றேன்.திருதிருவென்று விழித்தாள்.மெதுவாக நகர ஆரம்பித்தாள்.எக்மோர் வந்தது. அவளை இறுகப் பற்றிக் கீழே இறக்கினேன். திமிறி ஓடப் பார்த்தாள். பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்குக் கூப்பிட்டேன்.முதலில் தயங்கினார்கள்.” இவள் பெரிய தப்பு செய்யறா. குழந்தையைக் காப்பாத்தணும் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இவளைக் கூட்டிப்போக வாங்க. உடனே நீங்க போய்டலாம். நான் ஒரு பெரிய ஆபீஸர்தான்,” என்றேன்.பின்னர் தயங்காமல் வந்தனர்.அவளைப் பிடித்துக் கொண்டு ரயில்வே போலீஸ் நிலையம் சென்றோம்.

உள்ளே போகவும் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.உடன் வந்தவர்களை அனுப்பிவிட்டேன். அங்கிருந்து எங்கள் டைரக்டருக்கு போன் செய்து விபரம் கூறவும் அவர்களே போலீஸ் நிலயத்திற்கு தொலை பேசியில் பேசி உதவி செய்யச் சொன்னார்கள். போலீஸ் ஜீப்பில் எக்மோர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். அப்பொழுது அங்கே டைரக்டராக இருந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

விசாரித்ததில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.அவள் துணைக்குத் தங்க வேண்டும் என்று சொன்னவுடன் தங்க மாட்டேன் என்று போய் விட்டாளாம். அவளிடம் உண்மையைக் கூறும்படி மிரட்டவும் உண்மைகள் வெளிவந்தன். அவள் கணவனும் குடிகாரன். குழந்தையைக் காட்டி பிச்சை எடுக்கச் சொன்னது அவனே தான்.புருஷன் அடிப்பான் என்று அழுதாள். இவள் அம்மா மட்டுமல்ல;ஒருவனின் மனைவியும் கூட! பெற்றவளேயானாலும் தான் பெற்ற பிள்ளை வலியால் துடித்தும், பெற்றமனம் இங்கே கல்லாகிவிட்டததைக் காண்கின்றோம்..

தாய்ப்ப்பாசத்தைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுகின்றோம். இந்த வகையினரை எதில் சேர்ப்பது?

இச்சையில் ஆடவன் மிருகமானால் இல்லற சோதனையில் பெண் இயந்திரமாக மாறுகின்றாளே!

பாசம்,பரிவு எல்லாம் பதுங்கி விடுகின்றன.

குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அவள் கணவனை போலீஸ் உதவியுடன் கூட்டி வந்து எங்கள் டைரக்டர் முன் நிறுத்தினேன். அவனுக்கு மனைவி, குழந்தை வேண்டுமென்றால் அவளை அவன் கொடுமைப் படுத்தக் கூடாது அல்லது பிடித்து கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் என்று கூறவும் பணிந்தான். குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு. ஆனால் பொண்டாட்டியை அடித்தால் போலீஸ் வந்துவிடும் என்று தெரிந்தததால் திட்டுவதுடன் நிறுத்திக் கொண்டான். குழந்தை பிழைத்தது. அடிவாங்குவதும் அப்பொழுது நின்றது. ஆனால் இது முழுமையான தீர்வாகுமா?

தீர்வு காணமுடியாத பிரச்சனைகள் எத்தனை எத்தனை?

தினமும் பல பிரச்சனைகள் சங்கிலலித் தொடராக என்னைத் தேடிவரும்.

நான் பார்த்த பணி சமூகநலம்.நான் ஓர் சமூக மருத்துவர். இலாக்கா அளவில் முடிந்ததைச் செய்வோம். ஆனாலும் மனத்தில் திருப்தி இருக்காது.

மணியனிடம் போய்ச் சொல்லுவேன்.”அசடு, ஊர்ன்னு சொன்னா எல்லாம்தான் இருக்கும்.“ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

சாவியிடம் சொன்னால் ’உச்’ கொட்டுவார்.ஆரம்பத்தில் கொஞ்சம் சொன்னேன். எதிரொலி இல்லை.

ஜெயகாந்தனிடம் ஓடிப் போய் புலம்புவேன்.

ஒரு நாள் அருகில் இருந்த ஒருவர் “அம்மா பாவம், உளர்றாங்க” என்றார்.

அன்று முதல் நானும் ஜெயகாந்தனிடம் “உங்களிடம் உளறணும் எப்போ வர?“ என்று கேட்க ஆரம்பித்தேன். அவரும் “எப்போ வேணும்னாலும் வாங்க; உளறுங்க! உளறலைக் கேட்க எனக்கு இரண்டு காதுகள் இருக்கின்றன,"என்பார்.

ஆமாம்! ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு விடலாம். மண்டைக்குள் செலுத்தினால்தானே கோலுக்கு வந்து அது எழுத்தாகும்.

சமத்துப்பிள்ளையாண்டான்!

சொல் விளையாடலில் சாம்பியன்.

குடிகார புருஷனைப்போல் பொறுப்பில்லா அப்பனாக இருந்துவிட்டால் அங்கும் கொடுமைகளும் நடக்கும்.

இன்னொருத்தியைப்பற்றி ஒரு புகார்; நிலையான வேலை பார்க்கின்ற ஒருத்தி விபச்சாரமும் செய்கின்றாள் என்று புகார். அவளிடம் பேசினேன். எனக்கு ஒரு ராசி உண்டு. என்னிடம் பேசுகின்றவர்கள் அவர்கள் துன்பத்தை அப்படியே கொட்டிவிடுவார்கள். அவளும் தான் செய்யும் இன்னொரு தொழிலை மறைக்கவில்லை.அவள் சொன்னதைச் சொல்லுகின்றேன்

என் அப்பா ஒரு சூதாடி! பணம் திருடினதால் வேலை போச்சு. அதனாலே கவலையாம்; கவலை மறக்க குடிக்கணுமாம். வீட்டில் இருக்கும் ஒவ்வொன்றாய் காணாமல் போச்சு. காப்பாத்த வக்கில்லாத ஆம்புள்ளைக்கு புள்ளங்க இருக்கலாமா? குடும்பக்கட்டுப்பாடு திட்டத்துலே ஆப்பரேஷன் செய்தால் அவன் ஆம்புள்ளைத்தனம் போய்டுமாம். புள்ளே பெத்து பெத்து அம்மா உடம்பும் கெட்டது. லூப் போட்டுக்கோன்னு அம்மாகிட்டே சொன்னேன். என் தலைவிதி, அம்மாகிட்டே மக சொல்ல வேண்டியிருக்கு. ஏற்கனவே ஆறு புள்ளங்க. எங்கே தப்போ, அப்புறமும் ரெண்டு குழந்தைங்க.பிறந்துச்சு. அம்மா ஆப்பரேஷன் செய்துட்டாங்க. என் சம்பாத்தியம் முழுசும் குடும்பத்துக்கு.ப் போய்டும். வெட்கம் கெட்ட அப்பன் எங்கே எனக்குக் கல்யாணம் செய்து வைக்கப் போறான்? கல்யாணம்னா அங்கேயும் நகை காசு இல்லாம நடக்குமா? அதுக்குத்தான் என் கல்யாணத்துக்குப் பணம் சேர்க்க இதை சைட் பிஸினஸாகச் செய்கின்றேன்."

என்னை யாரோ அடிப்பதுபோல் உணர்ந்தேன். அவள் உடல் பசிக்கு இரை தேடவில்லை. திருமணத்திற்குக் காசு வேண்டி விபசாரத் தொழில்.

இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கேட்டிருக்கிங்களா?

பேசும் சக்தி இழந்து விழித்துக் கொண்டிருந்தேன். அடுத்த அடி விழுந்தது!

என்னம்மா, அதிர்ச்சியா? உங்களுக்குத் தெரியுமா? இந்த தரகங்கிட்டே வர்ர ஆம்புள்ளங்க கேக்கறது அவங்களுக்குக் குடும்பப் பொண்ணு அல்லது காலேஜ் படிக்கிற பொண்ணு வேணுமாம். அவனுக்குக் குடும்பம் இல்லியா? இவன் மக காலேஜுக்குப் போக மாட்டாளா? இவனுக்கு மட்டும் பத்தினி பொண்டாட்டி.வேணும். அடுத்தவன் பொண்டாட்டி இவனுக்கு வேணும்! பாவிங்க, இவங்க திருந்தாம இருந்தா இனிமே பொண்டாட்டி second hand ஆகத்தான் கிடைப்பா."

இது கற்பனையல்ல. இப்படி விதவிதமான எரிமலைக் குமுறலைக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

(தொடரும்)

நன்றி -திண்ணை

6 comments:

LK said...

மனதை உருக்கும் நிகழ்வுகள். இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

துபாய் ராஜா said...

முகத்தில் அறையும் உண்மைகள். :((

அமிர்தவர்ஷினி அம்மா said...

இடுகையை படிக்க படிக்க இதயம் விட்டு விட்டு துடிக்கிறது. கடைசியாய் அந்த தரகரின் வார்த்தைகள் :(

தமிழ். சரவணன் said...

அம்மா,

படிக்க​வே சங்கடமாக இருக்கின்றது தங்கள் கண்ட சம்பவங்க​ளை! ஆனால் தற்​பொழுது நி​லை​மை ​வெராகி வருகின்றது... மனமுறிவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்​தைகள் தான்...

ஒரு சிறிய ​பெண் குழந்​தை தாயின் ​கொடு​மை தாங்க முடியாமல் நீதிபதி முன்பு கதறிய கதறழில் தந்​தையின் அரவ​னைபில் வளர குழந்​தை​யை அனுப்பினார்கள்... இது​போல் சட்டத்​தையும் தாண்டி அபூர்வமாக நீதிகி​டைப்பது அரிது நம் நாட்டில்....

எனது குழந்​தையும் இது​போல் ஒரு கூட்டத்தில் சிக்கிக்​கொண்டது... எனது குழந்​தை​யை பிறந்த​பொழுது பார்த்தது.
அதன்பிறகு என்ன ஆனார் எப்படி இருக்கன்றார் என்ற ஒரு தகவலும் இல்​லை,, , பார்க ​சென்றால் குழந்​தை​யை கடத்த வந்தான் , ​கொ​லை​செய்யவந்தான் என்று ​​மேலும் பல ​பொய்வழக்குக​ளை பதிவ​செய்து அ​லையவிடலாம் இ​தைவிட ​கொடு​மை ​பெண்உருவில் இருக்கும் "மிருகத்"​தொடு ​​சேர்ந்து வாழச்​சொல்லி கட்டாயப்படுத்துவது... இதற்கு பயந்து​கொண்​டே எனதுக்குழந்​தை​யை காண​செல்லாமல் பயந்து திறிந்து ​கொண்டிருக்கின்​றேன்

பிரபாகர் said...

என்ன சொல்ல அம்மா, இப்படிப்பட்ட சமூகத்தில் தானே வாழ்கிறோம்...? அனுபவங்களை தொடருங்கள்...

பிரபாகர்.

LK said...

//எனது குழந்​தையும் இது​போல் ஒரு கூட்டத்தில் சிக்கிக்​கொண்டது... எனது குழந்​தை​யை பிறந்த​பொழுது பார்த்தது.
அதன்பிறகு என்ன ஆனார் எப்படி இருக்கன்றார் என்ற ஒரு தகவலும் இல்​லை,, , பார்க ​சென்றால் குழந்​தை​யை கடத்த வந்தான் , ​கொ​லை​செய்யவந்தான் என்று ​​மேலும் பல ​பொய்வழக்குக​ளை பதிவ​செய்து அ​லையவிடலாம் இ​தைவிட ​கொடு​மை ​பெண்உருவில் இருக்கும் "மிருகத்"​தொடு ​​சேர்ந்து வாழச்​சொல்லி கட்டாயப்படுத்துவது... இதற்கு பயந்து​கொண்​டே எனதுக்குழந்​தை​யை காண​செல்லாமல் பயந்து திறிந்து ​கொண்டிருக்கின்​றேன் //

என்ன சொல்வது என்று புரியவில்லை நண்பரே. விரைவில் உங்கள் குழந்தை உங்களுக்கு கிடைக்க எங்கள் பிரார்தனைகள்