Friday, April 16, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-06


மனித வாழ்க்கையில் மாணவர் பருவம் கவர்ச்சிகரமானது.
உடல், மனம் இரண்டிலும் மாறுதலை உணரும் பருவம்; உல்லாசப் பறவைகள்.
வயதான காலத்திலும் “அக்காலம் வராதா ?” என்று ஏங்க வைக்கும் பருவம.

எட்டையாபுரம் அமைப்பினைப் பார்க்கலாம்.

அது ஒரு சின்ன ஊர். ஜமீன் அரண்மனை மத்தியில் அமைந்திருந்தது. பெரும்பாலானோர் அரண்மனைத் தொடர்புள்ளவர்கள். மற்றும் பள்ளி போன்ற இடங்களில் வேலை பார்க்கும் நடுத்தர மக்களும், உழைத்துக் களைத்துப் போன ஏழைகளும் உடன் வசித்தனர்.எட்டையாபுரத்தையொட்டி நடுவிற்பட்டி என்று அழைக்கப் பட்ட ஓர் இடமும் இணைந்திருந்தது. இங்கு வணிகர்கள், வசதியுள்ளவர்கள் இருந்தனர். இரண்டையும் இணைக்க ஒரு தெரு. அந்தத் தெருவில் தான்“ராஜா உயர் நிலை”ப் பள்ளியும் “பாரதமாதா”என்ற தியேட்டரும் அமைந்திருந்தன. அட்டக்குளம் என்று ஒரு குளமும் உண்டு. அது குடி தண்ணிர்க் குளமல்ல. தியேட்டரையொட்டி ஒரு சிங்காரத் தோப்பு. அரண்மனையைச் சேர்ந்தது. மஹாராஜாவின் தனியிடம். இங்கு தங்கிக் கொண்டு ஓவியம் வரைவதும், சங்கீதம் கற்பதும் போன்ற அவர் கலைப்பசிக்கு அது உபயோகப் பட்டது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.பொதுமக்கள் அரண்மனைகளைப் பார்வையிட முடியாது. பள்ளிக்கூடமும் சினிமா அரங்கும் அரண்மனை நிர்வாகத்தில் இயங்கி வந்தன.

ஊரிலிருந்து பள்ளிக்குள் நுழையும் பொழுது ஒரு பழைய மண்டபம் இருக்கும். வெளிப் புறத்திலும் வகுப்புகள் நடக்கும். கொழுந்துவேல் வாத்தியார், சங்கர வாத்தியார், அய்யாக்குட்டி வாத்தியாரின் நினைவுகள் வருகின்றன. கொழுந்துவேல் வாத்தியார் சிரித்துப் பார்த்ததில்லை. மிகவும் கண்டிப்பானவர். அவர் உட்கார்ந்திருந்தால் எந்த சேட்டையும் செய்யாமல் நல்ல பெண்ணாக நடந்து செல்வேன்.

என்னால் சும்மா இருக்க முடியாது. வருகிறவர்களை வம்புக்கிழுப்பேன். குச்சி கையில் வைத்துக் கொண்டு “இதோ பார் கத்தி “என்று சுழற்றுவேன். எம்.ஜி. ஆர் அவர்களைச் சின்னப் பிள்ளைகள் விரும்பியது போல் அப்பொழுது பி. யூ. சின்னப்பா குழந்தைகளுக்குப் பிடிக்கும். இருப்பினும் சினிமா மோகம் இக்காலத்தைப்போல் அப்பொழுது வேரூன்றவில்லை.

கொழுந்துவேல் வாத்தியாரின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் என் வாழ்வில் தொடர்புள்ளவர்களானார்கள்.என் இலக்கிய ஆரவத்திற்கு கு. துரைராஜ். இவர் பின்னால் உசிலம்பட்டிகல்லூரியின் முதல்வரானதுடன், சாலமன் பாப்பைய்யாவின் பட்டிமனறம், மற்றும் வழக்காடு மன்றங்களில் முக்கியமானவராகத் திகழந்தார். நாராயணன் என் வகுப்புத் தோழன். தமிழில் நானோ அவனோதான் முதல் மதிப்பெண் பெறுவோம். கடுமையான போட்டி. ஒரே மகள் பாப்பாவும் ,ராஜனும் என் மாணவர்கள். கே.கே ராஜன் இப்பொழுதும் சிறுகதைகள் எழுதி வருகின்றார். 200க்கும் மேற்பட்டு எழுதியுள்ளார். இவர் கதைகள், விகடன், கல்கி, குமுதம். அமுதசுரபி இன்னும் பல பத்திரிகைகளில் வருகின்றன.

சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு நான் படித்த அரங்கத்திற்குப்போகலாம்.

மண்டபத்துக்கடுத்து ஒரு புதிய கட்டடம் (அப்பொழுது ).அடுத்து பக்கத்தில் வரிசை வீடுகள் போல் வகுப்பறைகள் கட்டப் பட்டிருக்கும். சுற்றி ஒரு காம்பவுண்ட் சுவர். பின் பக்கம், சுவர் தாண்டினால் ஒரு வயல், அடுத்து ஒரு நீண்ட பாதை. கோவில்பட்டியிலிருந்து வரும் பேருந்துகள் வரும் பாதை. அதனையடுத்து நிமிர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாரதி மணிமண்டபம்.வெற்றுத்தரையாய்க் கிடந்த பூமியில் மண்டபம். பூரணமாக வளரும் வரை தினமும் பார்த்து வளர்ந்தவள் நான். பாரதியைத்தான் பார்க்க முடியவில்லை. அவன் நினைவில் எழும்பும் மாளிகையையாவது பார்க்கலாம் என்ற துடிப்பில் அதன் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்தவள்.என் பள்ளிக்குள்ளும் ஒரு பாரதி இருந்தார். அவர்தான் கே.பி. எஸ்.நாராயணன்.அவர் ஒரு ஆசிரியர். பரீட்சைக்காக மட்டும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் அல்ல. பல பேச்சாளர்களை, பல எழுத்தாளர்களை, பல கலைஞர்களை, பல சமுதாயச் சிற்பிகளை உருவாக்கியவர்.

அவர் பாடம் நடத்துவதே அழகு. புதிய அர்த்தங்கள் நிறைந்தவை. இலக்கிய மன்றம் அவர் பொறுப்பில். பள்ளி வகுப்புகள் முடிந்தாலும் அவரைச் சுற்றி வருவோம். பாரதியின் ஒவ்வொரு வரிகளையும் எங்கள் இதயங்களில் புதைத்தவர். அவர் கூறுவது இப்பொழுதும் நினைவிற்கு வருகின்றது.

“நிறைய படிக்கலாம். எழுதலாம், பேசலாம். இவைகள் மட்டும் போதாது. நல்ல எண்ணங்களைச் செயல்படுத்த வேண்டும். செயல்கள்தான் சமுதாயத்தைச் செம்மை படுத்தும். மாறுதல்களை உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நெஞ்சில் உரத்துடன் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாது உழைக்க வேண்டும். சோம்புதல் கூடாது. அவர்களைக் கண்டு சுருண்டு விடக் கூடாது. சுத்தமான மனம் முக்கியம். சாதி, மதம், என்ற பிரிவினைகளால் ஒற்றுமை சிதறாமல் பாதுகாக்க வேண்டும். ஒர் ஆணுக்கு உண்டான அனைத்துக்கும் உரிமை படைத்தவள் பெண். ஆணும் பெண்ணும் ஆரோக்கியமான உணர்வுடன் நட்பு கொள்ள வேண்டும்."

அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவைகள் கொஞ்சமல்ல. செயலிலும் பயிற்சி கொடுத்தார். எந்தத் தலைப்பில் பேசப் போகின்றோம் என்று. தெரியாது. மேடையேறியவுடன் தலைப்பை கூறுவார். நாங்கள் பேச வேண்டும். கவனத்தை ஈர்க்கும் பேச்சு நடை இருக்க வேண்டும். கருத்தாழம் கொண்டிருந்தால் மட்டும் போதாது, புதியனவும் இருக்க வேண்டும். அசைவுகளையும் (body language) சொல்லித்தர மறக்கவில்லை.

நாங்கள் உருவாக்கப் பட்டவர்கள். சிலர் மட்டும் செதுக்கப் பட்டார்கள்.அத்தனை பெருமைக்கும் சொந்தமான சிற்பிக்கு என் நன்றியை இப்பொழுதும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் கற்றுக் கொடுத்த பேச்சுத் திறமையால்தான் உயர்மட்ட அறிஞர்களின் நட்பு கிடைத்தது.

என் பள்ளிப்பருவத்தின் செயல்பாட்டைப் பார்க்கலாமா? நான் ஒரு சுட்டிப்பெண். பயம் அறியாதவள். அதுமட்டுமல்ல, பெண்ணுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எதுவும் இல்லாத ஒருத்தி. பெருமையாகச் சொல்லுவதாகத் தயவு செய்து நினைக்காதீர்கள். இக்குணங்களின் பலமும், பலஹீனங்களும் என்னைப் புரட்டி எடுத்திருக்கின்றன.

இந்த இயல்பு எப்படி வந்தது?என் தந்தைக்கு ஒரே மகள். வேறு மகனும் கிடையாது. என்னை ஆண்மகனைப் போல் வளர்த்தார். பள்ளித் தோழிகளுடனும் அதிகமாகப் பொழுதைப் போக்கியதில்லை. எங்கள் ஹோட்டலில் வேலை பார்த்த பையன்கள் விளையாட்டுத் தோழர்கள்.என் வீட்டில் வசித்த முத்துவும் முக்குலத்தோர் பெண். தைரியசாலி.

(ஊர்வலம் தொடரும்)

4 comments:

புன்னகை தேசம். said...

புரிந்துகொண்டோம் அம்மா. இவ்வளவு தூரம் உங்கள் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொள்வதே மிகப்பெரிய விஷயம்..

தொடருங்கள் .. நாங்கள் பின் தொடர்கிறோம்.

அருமையான, அழகான , சுவையான எழுத்து ரசிக்க வைக்கின்றது..

வாழ்த்துகள், பாராட்டுகள் அம்மா.

அன்புடன் சாந்தி

துபாய் ராஜா said...

அருமையான பகிர்வு.

சீதாம்மா said...

துபாயில் எனக்கு நிறைய பிள்ளைகள்
ராஜாவும் ஒருவன். இந்த அம்மாவுக்கு உக்காமளிக்க எத்தனை பேர்கள்?!

தமிழ். சரவணன் said...

அம்மா தங்கள் சிறுவயதுப்பு​கைப்படம் அரு​மை!

//என்னால் சும்மா இருக்க முடியாது. வருகிறவர்களை வம்புக்கிழுப்பேன். குச்சி கையில் வைத்துக் கொண்டு “இதோ பார் கத்தி “என்று சுழற்றுவேன்//

ஆமாம் உங்களால் சும்மா இருக்கமுடியாது... அப்​பொழுது குச்சி இப்​பொழுது ​​பேனா!

//அவர் பாடம் நடத்துவதே அழகு. புதிய அர்த்தங்கள் நிறைந்தவை.//

ஆனால் இப்​பொழுது நில​மை மாறிவிட்டது வகுப்பு வாத்தியாரிடம் டியுசன் படிக்காமல் ​வேறு வாத்தியாரிடம் படித்தால் பரிச்​சையில் ​பெயில். இப்​பொழுது கல்வி ஒரு வியாபரம். இது​போல் ஆசிரியர்கள் இப்​பொழுது அரிது