Monday, April 12, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-05

எட்டையாபுரக் கடைத்தெருவில் ஊர்வலம் நுழைந்து செல்ல ஆரம்பித்தது. அந்தத் தெருவின் மத்தியில் எங்கள் ஹோட்டல் “லலிதாமணி பவன்“ அமைந்திருந்தது. அதையொட்டிய வீட்டில் நாங்கள் குடி புகுந்தோம். கடையின் பின் புறமும் வீட்டுப் பின் புறமும் தடுப்பின்றி சேர்ந்து ஒரே முற்றமாக இருந்தது எங்களுக்கு வசதியாயிற்று.

அமைதிச் சூழலிலிருந்து பரபரப்பு வட்டத்திற்குள் நான் அடியெடுத்து வைத்தேன். மனம் மட்டும் ஊருக்குள் புகுந்து சுற்றிவிட்டு வரும்.

நவராத்திரியின் பொழுது, சேர்ந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் போய்ச் சுண்டல் வாங்கிச் சாப்பிடுவோம். நாங்களும் அலங்கரித்துக் கொண்டு பவனி வருவோம். பாடச் சொன்னால் ஏதோ ஒரு பாட்டு பாடுவோம்.

இதைப் போலவே இன்னொரு பண்டிகையும் உண்டு. மண்ணிலே பசு செய்து ஒரு வீட்டில் வைத்து பத்து நாட்கள் பூஜை செய்வோம். சின்னப்பெண்களுக்குக் கொண்டாட்ட விழா. குஞ்சம் வைத்த பின்னல் ஆட, கூந்தலில் மல்லிகை மணக்க, தழையக் கட்டிய பாவாடை தெருவைத் தழுவ, மைய்யிட்டச் சுடர்விழிகள் சுற்றிச் சுழல, தெருக்களில் ஆடிய கோலாட்டம் தெருவே மகிழ்ந்து சிரிக்கும். இது பத்து நாட்கள் கொண்டாட்டம்.

எல்லாத் திருவிழாக்களும் மூட நம்பிக்கை காரணம் காட்டி ஒதுக்குதல் சரியல்ல என்பது என் கருத்து.

நான் ஆஸ்திரேலியா நாட்டிற்குச் சென்ற பொழுது அங்கு ஒரு செய்தி படித்தேன். பழங்குடியினர் கூட்டம் கூட்டமாகப் பிரிந்து வாழ்வது பழக்கம். வருடத்தில் ஒன்றிரண்டு தினங்களில் ஒரே இடத்தில் கூடிக் கொண்டாடுவதை வழக்கமாக்கி அதனைத் திருவிழாவாக்கி மகிழ்கின்றனர் இப்பழங்குடியினர் அங்கு குடியேறி சுமார் 40000 ஆண்டுகளாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள்.ஆக திருவிழாக்கள் தொன்மையானது என்று தெரிய வருகின்றது.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதறி, சுதந்திரப் பறவைகளாய் வாழும் மேலைநாட்டார்,நன்றி தெரிவிக்கும் தினம்,தாயார் தினம்,தந்தை தினம், ஏன் காதலர்களுக்கும் ஒரு தினமென்று கூடி மகிழ்கின்றனர், உறவுகளும், நட்புகளும் ஒன்று கூடி மகிழ்வதைத் திருவிழாக்களாய்க் கொண்டாடி மகிழ்ந்தோம். காலம் மாறினாலும் பெயர்கள் மாறியிருக்கிறதேயொழிய அந்தப் பழக்கங்களில் நாம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கின்றோம். இரண்டையும் பார்த்த எம்போன்றோர்க்கு அதில் உணர்ந்த இனிமையும், உள்ளுணர்வின் சுகமும் இதில் இல்லை.பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே என்பது இலக்கணம்;ஒப்புக்கொள்கிறேன்.

பறந்து சென்ற மனப்பறவையைக் கூட்டுக்குள் வைத்து நிகழ்காலத்திற்கு வந்தேன். என் தந்தை கர்நாடக சங்கீதம் கற்றவர். என் தாயாரை என் தந்தைக்கு மணமுடித்து வைத்தவர் ஒரு பாட்டு வாத்தியார்தான். எனக்கு சங்கீதப் பயிற்சி ஆரம்பமானது.

அம்பி அய்யர் சாது. அவர்தான் பொறுமையாகக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். மோகன வர்ணம் தொடங்கவும் பிரச்சனையும் ஆரம்பித்தது. “நின்னுக்கோ “ என்று ஆரம்பிக்கவும், நான் நின்று கொண்டு “நின்னுக்கோ,உக்காந்துக்கோ,“ என்று ஆடுவேன். ஸ்வரங்களைக் கேலி செய்வேன். பாவம் அவர்;இப்பொழுது நினைத்து மனம் கஷ்டப்படுகின்றது.

என் தந்தை மூலமாக அடுத்து இடையூறு. “தமிழ்ப்பாட்டு சொல்லிக் கொடுய்யா.உடனே கண்ணன் வரக் காணேனே கழுதை வரக் காணேனே என்று பாட்டு சொல்லிக் கொடுக்கக் கூடாது. “சத்தியம் வெல்லும்“ பாட்டு,வந்தே மாதரம் பாட்டு சொல்லிக் கொடு. தேசிய கீதங்கள் அவள் பாட வேண்டும்.“

வாத்தியாருக்கு இது பெரிய சோதனை. தியாகராஜரின் தெலுங்குக்கீர்த்தனைகளும் தீட்சதர், சாமாசாஸ்திரிகள் பாடல்களும் தான் ல்லிக் கொடுத்துப் பழக்கம்.அவர் ருவதை நிறுத்தவில்லை. அவர் தமிழ்ப் பாடல்களைக் கற்றுக் கொண்டு எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது. சேட்டை செய்யாமல் நான் பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

என் தந்தை தேசியப் பாடல்கள் கற்றுக் கொள்ளச் சொன்னதில் அர்த்தமுண்டு. அப்பா ஒரு காங்கிரஸ்காரர். தேசியவிடுதலைப்போராட்டத்தில் மும்முறை சிறைக்குச் சென்றவர். இன்னும் போராட்டம் முடியவில்லை. ஒன்றிரண்டு ஊர்வலங்களில் முதலில் காங்கிரஸ் கொடி பிடித்து என்னை நடக்கச் சொல்லுவார். தேசியப் பாடல்கள் பாடச் சொல்லுவார்.

தூத்துக்குடிக்கு ஏ.பி.சி வீரபாகு, நெல்லையில் சோமையாஜுலு போன்றவர்களைப் பார்க்கப் போகும் பொழுது என்னையும் பல முறை கூட்டிச் சென்றிருக்கின்றார்.கூடிக் கூடிப் பேசுவார்கள். புரியாத பொம்மையாய் உட்கார்ந்திருப்பேன். போகப் போக அவர்கள் பேச்சுக்கள் புரியா விட்டாலும் அவர்களின் துடிப்பும் வேகமும் புரிந்தது. எங்கும், எந்த நேரத்திலும் பய உணர்ச்சி வரவில்லை.

இந்த அனுபவங்கள் நல்ல அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்தது.

அரசியல் தலைவர்களாயினும் அதிகாரத்தில் உயர் நிலையில் இருப்பவராயினும் என்னால் எளிதாக அணுக முடிந்ததற்குக் காரணம் என் பிள்ளைப் பருவத்தில் கிடைத்த அனுபவங்கள் காரணம்.

என் தந்தை உள்ளூரிலும் காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய உறிப்பினராக இருந்தார். எனவே வருவோரும் போவோரும் அதிகமாக இருந்தனர். அரசியலையும், அரசியல்வாதிகளையும் பார்க்கஆரம்பித்தேன். காங்கிரஸ்காரர்கள் கதர் உடுத்தி யிருப்பார்கள். நானும் சர்க்கா, அதாவது ராட்டை நூற்கக் கற்றுக்கொண்டு, சிட்டங்களைக் கதர்க் கடையில் போட்டுத் துணி வாங்கி, பாவாடைசட்டை தைத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றேன். சின்ன வயதில் கதராடை உடுத்தி வளர்ந்தவள்.

“அதிகமாக ஆடைகள் தேவைக்கு மேல் வைத்திருக்கக் கூடாது,வைத்தால் அவன் திருடன்” என்று என் தந்தை கூறுவார். ஏழையின் கஷ்டத்தை உணர்ந்து எளிய ஆடை உடுத்திய காந்தியோ, தேவைக்கு மேல் வைத்துக் கொள்வது தவறு என்று சொன்ன என் தந்தையோ பொது உடைமை வாதிகளல்ல. மனித நேயம் என்பது மனிதத்திற்கு முக்கியமானது. இது ஒரு ஒழுங்குமுறை.

இதுவரை தொடர்ந்து வரும் எளிய பழக்கங்கள்அப்படியே இருக்கின்றன. எப்பொழுதும் விலையுயர்ந்த ஆடைகள் என்னிடம் கிடையாது. துணிக்கடையைவிட எனக்குப் புத்தகக் கடைகள் பிடிக்கும். ஆசைகள் குறைவாக இருந்தால் குறுக்குவழி வாழ்க்கையைத் தேடமாட்டோம்.

(ஊர்வலம் தொடரும்)

3 comments:

அகல்விளக்கு said...

உங்கள் பயணம் மெய்சிலிர்க்க வைக்கிறது....

தொடருங்கள்...

எல் கே said...

//இதைப் போலவே இன்னொரு பண்டிகையும் உண்டு. மண்ணிலே பசு செய்து ஒரு வீட்டில் வைத்து பத்து நாட்கள் பூஜை செய்வோம். சின்னப்பெண்களுக்குக் கொண்டாட்ட விழா. குஞ்சம் வைத்த பின்னல் ஆட, கூந்தலில் மல்லிகை மணக்க, தழையக் கட்டிய பாவாடை தெருவைத் தழுவ, மைய்யிட்டச் சுடர்விழிகள் சுற்றிச் சுழல, தெருக்களில் ஆடிய கோலாட்டம் தெருவே மகிழ்ந்து சிரிக்கும். இது பத்து நாட்கள் கொண்டாட்டம்.//
முடிந்தால் என்ன பண்டிகை என்று கூறவும். பண்டிகையின் பெயர்

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பான பதிவு .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .