Monday, April 19, 2010

எண்ணங்கள் ஊர்வலம் -07

சிறு வயது முதல் முரட்டுப்பெண்ணாகவே வளர்ந்துவந்தேன்.மரம் ஏறுவது, சுவர் ஏறுவது எல்லாம் எனக்கு சுலபம்;பயமறியாமல் வளர்ந்தேன்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

என்னுடன் பாரதி இருக்க நான் ஏன், யாருக்கு அஞ்சவேண்டும்?

என்னைச் செல்லமாக வளர்த்த என் அப்பாவிடம் பல முறை பிரம்படியும் பட்டிருக்கின்றேன்.

ஒரு நாள் அப்பாவிடம் சொல்லாமல் சினிமாவிற்குச் சென்று விட்டேன்.திரும்பி வந்தால் வீடு உள்ளே பூட்டியிருந்தார்கள். அப்பா வந்து விட்டார் என்று புரிந்து கொண்டேன். வாசலில் ஓர் வேப்ப மரம். அதி ல் ஏறி, மொட்டை மாடியில் இறங்கி, வீட்டு நடுவில் இருந்த முற்றத்தில் குதித்தேன். சப்தம் கேட்கவும் பின்கதவு திறந்தது. என் அப்பா கையில் பிரம்புடன் நின்று கொண்டிருந்தார். அன்று நடந்த பிரம்படி உற்சவம் இன்னும் மறக்கவில்லை.

ஆகஸ்டு 15 சுதந்திரம் பிறந்தது.

ஊரெல்லாம் கொண்டாட்டம்; வீட்டிலே விருந்து.

அடுத்து உடனே வந்த நிகழ்ச்சி. பாரதி மணி மண்டபத் திறப்பு விழா. ஆசையுடன் எதிர்பார்த்த விழா. இராஜாஜி, டிகே.சி. கல்கி, சதாசிவம், எத்தனை பெரிய மனிதர்களைப் பார்க்கும் வாய்ப்பு அந்த சின்ன ஊர் மக்களுக்குக் கிடைத்தது. என்னால் மட்டும் முழுமையான மகிழ்ச்சியில் இருக்க முடியவில்லை. பெண்ணுக்கு இயற்கையாக வரும் சோதனை எனக்கும் அப்பொழுது வந்தது.

எட்டையாபுரத்தில் பூப்பெய்த பெண்களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. பாரதி பிறந்த மண்ணில் அவர் மறைந்த பின்னும் பெண்ணின் நிலை மாறவில்லை.

என்னை என் தந்தை பள்ளிக்கு அனுப்பினார். வயதுக்கு வந்த பெண் பள்ளிக்குச் சென்றவர்களில் வரிசையில் நிற்கும் முதல் பெண் நான் தான்.

அடக்கி வைக்காம, இப்படியா ஒரு பெண்ணைப் படிக்க அனுப்புவாங்க? பிழைக்க வந்தவங்க தானே. ஊர் கட்டுப்பாட்டை மதிப்பாங்களா ?

எழுதப் படாத கட்டுப்பாடுகள் ஒவ்வொரு ஊரிலும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம்.

அதை உடைத்துக் கொண்டு வெளியேறிய என்னைத் தூற்றியது. என்னால் சுதந்திரமாக ஆரம்பத்தில் வெளியில் நடமாட முடியவில்லை. என்னுடைய ஒவ்வொரு அசைவிலும் குற்றம் கண்டனர். சில நாட்களில் மனம் தெளிந்து விட்டது. இது போன்ற வம்புகளுக்கு அதிக ஆயுள் கிடையாது. வேறொன்று பேச கிடைத்து விட்டால் இதன் வலிவு குன்றி விடும்.

சமுதாயத்தைச் சமாளிக்க நான் கற்றுக் கொண்ட முதல் பாடம்.

என் ஆசிரியர் கே.பி.எஸ் அவர்களிடம் மட்டும் குறை பட்டுக் கொண்டேன். அவர் என்னை அடிக்கடி, “பாரதி கண்டபுதுமைப் பெண் நீ “என்பார். இத்தனை வசைச்சொற்களின் மாலைகளுடன் போய் அவர் முன் நின்று, “சார், நான் புதுமைப் பெண் அல்ல; புரட்சிப் பெண்.. ஊருக்கு நான் ஒர் அடங்காப்பிடாரி," என்று கூறினேன்.

என் குரலில் அவர் எதை உணர்ந்தாரோ தெரியாது, அவர் உடனே என்னிடம் கூறியது:

"பாரதியின் கண்ணுக்குப் புதுமைப் பெண். அவர் சொன்னபடி , நிமிர்ந்த நன்நடையும், நேர் கொண்ட பார்வையும், ஞானச்செருக்கும் கொண்டு, அச்சத்தையும் நாணத்தையும் நாய்களுக்கு எறிந்து விட்டு ஒருத்தி நடந்தால், அவளுக்கு இந்தப் பெயர்கள்தான் கிடைக்கும். பயபடாதே. இதுதான் சமுதாயம். உன் மனத்திற்கு சரி என்று பட்டதைச் செய். மூட நம்பிக்கைகளை, பழக்க வழக்கங்களை உடைத்துவா! முதலில் செல்பவர்கள் சொல்லடிபட்டுத்தான் ஆக வேண்டும் .தயங்காதே!”

என் இரத்தத்தோடு கலந்து விட்ட சொற்கள்.

முரட்டுப் பெண் உதயமாகி விட்டாள்.

இந்த சமுதாயம் அவளை உருட்டிப் புரட்டி அலைக்கழித்தபொழுதும் நம்பிக்கையுடனும், துணிவுடனும் இன்றுவரை வாழ்ந்து வருகின்றாள்.

என்னுடன் படித்த அரண்மனைப் பெண் படிப்பை நிறுத்தி விட்டார்கள்.பிரிவு மட்டும் என்னைப் பாதித்தது.

எனக்கு, சுப்புலட்சுமி, மீனாட்சி என்று இரு சிநேகிதிகள். அடுத்த வகுப்பில் படித்து வந்தனர். என்வகுப்பில் நான் மட்டுமே பெண். மற்றவர்கள் ஆண்கள். ஒருவருக்கொருவர் பாசத்துடன் பழகும் பண்பு அவர்களுக்கிடையில் இருந்தது. கேலிப்பேச்சால், மனம் புண்படும் வார்த்தைகளால், , ஆபாசச் சொற்களால் உடன்படித்த மாணவர்கள் என்னைக் காயப் படுத்தியதில்லை.

ஊரார் சொற்களால் என்னை வதைப் படுத்திய பொழுது எனக்கு ஆறுதலாய்த் துணை நின்றவர்கள் என் பள்ளித் தோழர்கள்.

அடுத்து என் போராட்ட வாழ்க்கைக்கு அரங்கேற்றம்.

சுப்புலட்சுமி பூப்பெய்து விட்டாள். அவளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்துக் கொண்டனர். என் மனம் பதறியது. சுப்புலட்சுமி ஒரு கவிஞர். அவளெழுதிய கவிதை ஒன்றில் மூன்று வரிகள் இப்பொழுதும் என் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

தமிழே, தமிழே, தழைத்தோங்கும் தமிழே
தமிழர் போற்றும் தத்துவத் தமிழே
இன்னமுதூட்டும் இன்பத் தமிழே

ஏழாவது வகுப்பில் படிக்கும் பொழுது அவள் எழுதிய வரிகள். அவள் பெற்றோர் மகளைப் பூட்டி வைத்துவிட்டதாக நினைத்தனர்- தமிழயல்லவோ பூட்டி வைத்து விட்டார்கள்

பொங்கி எழுந்தேன். அவளைப் பள்ளிக்கு அனுப்பும் வரை அவள் வீட்டு வாசல் படியில் உட்கார வேண்டும், உண்ணா விரதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து தமிழ்ப்பெண் வீட்டுப் படிகளில் உட்கார்ந்து விட்டேன்.

தந்தையிடமோ, ஆசிரியரிடமோ அனுமதி வாங்கிச் செல்லவில்லை.

என் மனம் வழி நடத்தியது.

என்னைப் போராளியாக்கிய முதல் போராட்டம்

அமர்ந்து விட்டேன்!

(ஊர்வலம் தொடரும்)

6 comments:

vasu balaji said...

வணக்கம். உங்கள் நனவோடைகள் பல சீதாம்மாக்களை உருவாக்க வேண்டும். தொடருங்கள் அம்மா:))

பனித்துளி சங்கர் said...

உண்மையில் நீங்கள் “பாரதி கண்டபுதுமைப் பெண்தான் .மிகவும் சிறப்பான பகிர்வு . தொடருங்கள் மீண்டும் வருவேன் .

எல் கே said...

unamilaye neengal oru puthumai penthan

கலகலப்ரியா said...

துணிச்சல் பிடிச்சிருக்கு... இதுவும் வரையறைக்கு உட்பட்டுத்தானான்னு பார்க்கலாம்... எழுதுங்க...

சீதாலட்சுமி said...

வானம்பாடி அவர்களுக்கு நன்றி. சிறந்தவர்கள் பலர் நம்மிடையே இருக்கின்றார்கள். அவர்கள் கொடுத்த பயிற்சி, வழிகாட்டலில் நடந்தேன். அவ்வளவுதான்

சங்கருக்கு நன்றி. ஒரு காலத்தில் அப்படித்தான் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பெண் தைரியமாக வெளிவருவது அபூர்வம். என் தந்தையும் என் ஆசிரியரும் என்னை உருவாக்கினார்கள்.

எல்.கே அவர்களுக்கு நன்றி. புரட்சிப் பெண் என்று சொன்னவரும் உண்டு பொல்லாத பெண் என்று சொன்னவரும் உண்டு. நிறைய பட்டங்கள்

பிரியாவின் ககலப்பான பின்னூட்டம் பிடிச்சிருக்கு. நீங்கள் பார்க்கும் சீதா
பிள்ளைப் பருவம். காலம் அவளைப் பக்குவப் படுத்தும். ஆனாலும் துணிச்சல்காரி என்ற பட்டம் இன்னும் என்னிடம் தங்கி இருக்கிறது. 75 ஆண்டுகள் கடந்துவிட்டேன். வீழ்ந்து விடவில்லை. துணிச்சலும் சில சம்யங்களில் வேண்டியிருக்கின்றது. விவேகமும் இருந்தால் தயக்கம் வேண்டியதில்லை

K.R.அதியமான் said...

வணக்கம் அம்மா.

அருமையான தொடர்.