Monday, April 26, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-09


பார்ப்பவையெல்லாம் இதயத்தில் பதிந்து விடுவதில்லை. மனம் எங்கோ லயித்து இருக்கும் பொழுது பார்வையில் படும் பல கவனத்தை ஈர்ப்பதில்லை. சில சாதரணமாகத் தாண்டிப் போய்விடும். சிலவற்றை நாம் பெரிது படுத்தாமல் தெரிந்தே ஒதுக்கி விடுகின்றோம். மிச்சமிருப்பவை எண்ணக்கிடங்கில் தங்கிவிடும். தூசிதட்டி எடுப்பதுவும் உண்டு, இல்லையெனில் தேவையில்லையெனத் தூக்கி எறிவதும் உண்டு.

எண்ணக்கிடங்கு குப்பைக் கிடங்காக மாறுவதும் உண்டு.

இத்தனையும் பெரும்பாலானோர் இயல்பு. சிலர் அவைகளை வெளிப்படுத்தும் பொழுது வியந்து போகின்றோம். அப்பொழுது கூட அவைகள் நாம் துக்கி எறிந்தவைகள் என்பதை உணர்வதில்லை.

என்னைப் பொறுத்தவரையில், குப்பைகளைக்கூடச் சுத்தப்படுத்திச் சேமித்து வைத்துக் கொள்வேன். மதுரையில் விதைத்த விதை, முளைத்துச் செடியாகியது எட்டையாபுரத்தில்தான். அதிலும் பெரும் பங்கு வகிப்பது இப்பொழுது புலம்பெயர்ந்து சென்ற இடமும், அங்கே உணர்ந்த நிகழ்வுகளும்.

எட்டயாபுரத்தையும் நடுவிற்பட்டியையும் இணைக்கும் பாதையில் அமைந்திருந்தன பள்ளியும், சினிமாத் தியேட்டரும். எங்கள் ஹோட்டல் தியேட்டரை ஒட்டியிருந்தன. அதற்கு இருவாயில்கள். முன்வாயிலும் பின்வாயிலும் தெருவை நோக்கி அமைக்கப் பட்டிருந்தன. பின் வாயிலை ஒட்டி ஒரு சின்ன ஓட்டு வீடும், குளியல் அறையும் கழிப்பறையும் கட்டப் பட்டிருந்தன. நடுவில் திறந்தவெளி முற்றமும் ஒரு சின்னத் திண்ணையும். இருந்தது.

சிலிர்ப்பைத் தரும் வயது “டீன் ஏஜ்“. கனவுகளில் மிதக்கும் காலம் பருவகாலம். மயக்கத்தில் துள்ளித் திரியும் பருவம். எனக்கோ அப்பொழுதே முதுமை காலம் தொடங்கி விட்டது.

பத்திரிகைகள் 9 வயதிலேயே படிக்க ஆரம்பித்துவிட்டேன். சிறுகதை, துணுக்குகளுடன் தொடர்கதைகளும் படித்தேன். எல்லா வார இதழ்களும் மாத இதழ்களும் கிடைத்தன. இத்துடன் தினசரிப் பத்திரிகைகள். கதைகளில் ஆரம்பித்த பழக்கம்,தலையங்கம் படித்தபின்னரே கதைகள் படிக்கும் நிலைக்கு மாறினேன். பத்திரிகையில் ஓவியங்கள், ஏன் விளம்பரங்களைக் கூட ரசிக்க ஆரம்பித்தேன். இந்த நிலையில் தான் வீடு மாற்றம் நிகழ்ந்தது.

புது இடத்தில் என் தந்தை எனக்கு இரு புத்தகங்கள் கொடுத்தார்.

ஒன்று காந்திஜியின் "சத்தியசோதனை";

இன்னொன்று வீரசவர்க்கார் எழுதிய நூலின் மொழி பெயர்ப்பு நூல்

எரிமலை

பாரதி ஏற்கனவே படித்து விட்டேன். படிக்கிறேன் என்று என் தந்தையை நான் ஏமாற்ற முடியாது. கேள்விகள் கேட்பார். சரியான பதில் சொல்லாவிட்டால் பிரம்படி. கசை அடிகளில் நடனமாடிய கதைகள் கேள்விப் பட்டிருக்கின்றோம். பள்ளிப் பாடங்கள் சரியாய்ப் படிக்காவிட்டலும் பெற்றோரிடம் அடி வாங்கிய கதைகளும் தெரியும்.

என் தந்தை வித்தியாசமானவர். மகளுக்கு சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். பிற்காலத்தில் நேருஜி தன் மகளுக்கு உலக வரலாற்றைக் கடிதங்கள் மூலமாக எழுதிய செய்தி தெரியவும் என் தந்தையின் மனத்தில் எங்கிருந்து தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால் இவர் கையாண்ட முறைகளால் எங்களுக்குள் இடைவெளி அதிகமாகிக்கொண்டே போயிற்று.

என் சந்தேகங்களைத் தீர்க்க இன்னொருவர் கிடைத்தார்.

எங்கள் ஹோட்டல் ஒரு சின்ன சமஸ்தானம் போல் இருந்தது. அங்கு சமஸ்தான வித்துவான்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒன்று நாதஸ்வர வித்துவான் நீராறு அண்ணாவி. அவர் நிகழ்ச்சிகளுக்குப் போன நேரம் போக மற்ற காலங்களில் எங்கள் ஹோட்டல்தான் வாசஸ்தலம்.

என் பாட்டுப் பயிற்சி நின்று போனது. என் தந்தை சொன்ன காரணம் “என் பெண்ணுக்குப் பெண்பார்க்கும் நிகழ்ச்சி கிடையாது. அவள் ஜாதகம் சரியில்லை. ஆண்பிள்ளைபோல் வளர்ப்பேன். B. A. வரைக்கும் படிப்பாள். விமானத்தில் பறப்பாள்.“

அக்காலத்தில் அக்கிராமத்தில் ஒரு பெண்ணின் உயர்ந்த படிப்பாக இருந்தது பெண் பட்டம் வாங்குவது, அடுத்து விமானத்தில் பறப்பது என்பதும் உச்சக்கட்ட ஆசை. பின்னால் ஒரு முறையல்ல பல முறை, பல நாடுகள் விமானத்தில் பறந்து விட்டேன்.இன்னும் பறந்து கொண்டிருக்கின்றேன்.

இந்த சோதிடம் தான் குழப்பம் ஏற்படுத்தியது. எங்கோ உருளும் உருண்டைகள் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்று புரியவில்லை. ஆனாலும் இதுபற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அப்பொழுது ஏற்படவில்லை.

அண்ணாவி அன்புடன் பழகுவார். அவரிடம் என் ஆதங்கங்களைக் கூறுவேன். அவ்வளவுதான்.

இன்னொருவரின் பெயர் சுப்பையா பிள்ளை. காங்கிரஸ்காரர். அவரும் எப்பொழுதும் கதர்தான் உடுத்துவார். நான் கதருடன் சீட்டித் துணியும் உடுத்த ஆரம்பித்தேன். சுப்பையாபிள்ளையிடம் என் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். அவரும் அயராமல் பதில் கொடுப்பார்.

திலகர்,கோகுலே இருவரின் கோட்பாடுகளைக் கூறினார். சுபாஷ் சந்திரபோஸ் பற்றி நிறையவே சொன்னார். சிப்பாய் கலகம் முதல் அமிர்தசரஸில் நடந்த ஜாலியன்வாலா படுகொலைபற்றி வரையும் கூறினார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைகள், இந்து-முஸ்லீம் கலவரம், மகாத்மாகாந்தியின் கொலை இவைகளைப் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்ததுடன் புத்தகங்களும் படிக்கக் கொடுத்தார்.

அவர் கொடுத்த இன்னொரு புத்தகம் புதிய ஆர்வத்தைக் கொடுத்தது. அது காரல் மார்க்ஸின் பொது உடைமைக் கொள்கைகள் பற்றிய புத்தகம். லெனின் பற்றிக் கூறியதுடன் ஸ்டாலின் மேல் பிரமிப்பு ஏற்படும் வண்ணம் ஒரு இரும்பு மனிதராகச் சித்தரித்தார். அந்த பிரமிப்பு ஏற்படுத்திய ஈர்ப்பில் முதலாளித்துவம், தொழிலாளித்துவம் பற்றியும் கூறினார்.

அவருக்குத் தெரிந்ததை அவர் கூறினார்.

என் புரிதல் சக்திக்கேற்ப ஏதோ புரிந்து கொண்டேன்.

அவர் ஒருகேள்வி கேட்டார்.

மாகாளி ருஷ்யாவில் ஏன் பார்வை வைத்தாள்?அவள் பார்வை பட்டவுடன் யுகப்புரட்சி எழுந்தது என்று பாரதி கூறுகின்றார். அவர் நாட்டு சுதந்திரம் வேண்டியவர். மனித உணர்வுகளைத் தூண்டிவிடும் பாடல்கள் பாடியவர். “தனி ஒரு மனிதனுக்குணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்“ என்று கூறுகின்றாரே. இவைகளைச் சிந்தித்துப் பார்த்தாயா?

அன்று முதல் இக்கேள்வி என் மனத்தில் தங்கி, கிடைக்கும் விடைகளை சரியா என்று சிந்திப்பேன். அவர் பதில் கூறவில்லை. என்தேடல்களுக்குக் கேள்விகளே மலையென வளர ஆரம்பித்தது.

தேடல்கள் முக்கியமானது.

சில மலர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை என்று அன்று பல மாதங்கள் ஒரு வீட்டில் காத்து நின்ற தமிழ்த் தாத்தாவின் தேடலில் குறிஞ்சிப்பாடல் முழுமையானது. தேடிச்சேர்த்துப் பின் தொகுக்கப்பட்டது பெரிய புராணம்.

இன்று தேடலின் திசை மாறியுள்ளது.இது காலத்தின் கட்டாயம்.

தேடலில் நான் அலுக்கவில்லை. பதிலாக அதில் ஒருவகை உற்சாகம் அடைய ஆரம்பித்தேன். இன்று வரை ஏதாவது ஒரு தேடலில் இருந்து கொண்டே இருக்கின்றேன். வெற்றிகளும் தோல்விகளும் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தேடலுக்கும் என்மேல் பிரியம். சில சமயம் தானாக அது என்னை வந்து சேரும்.

அப்படிஒரு தேடல் என்னிடம் வந்தது மட்டுமன்றி என்னை ஒரு புதிய பாதைக்கும் அழைத்துச் சென்றது. என் கடைக்கு பேச்சியப்பன் என்று ஒருவர் பால் கொண்டுவந்து கொடுப்பார். அவர் ஒரு மாட்டுக்காரர்;பால் வியாபாரி;எழுதப்படிக்கத் தெரியாதவர். ஆனால், நன்றாகச் சிந்திக்கத் தெரிந்தவர். படித்தவன்தான் அறிவாளி என்பது இல்லை என்பதற்கு எடுத்துக் காட்டும் மனிதனாக இருந்தார்.

சுப்பையா பிள்ளையுடன் எங்கள் நூலக அறையில் உட்கார்ந்து பேசமுடியும். ஆனால் பேச்சியப்பனுடன் என் வீட்டுக்குள் உட்கார்ந்து தான் பேசுவேன்.

அவர் நிறைய புத்தகங்கள் எடுத்து வருவார்.சின்னதாக இருக்கும். வானொலிப்பேச்சு அல்லது மேடைப் பேச்சுக்கள். அடுக்குத்தொடர் தமிழில், வாசிக்கும் பொழுதே குரலுக்கு ஓர் கம்பீரம் வரும் எழுத்துக்கள். இளைஞர்களின் மனத்தைச் சுண்டி இழுக்கும் வசீகரம் படைத்த எழுத்து. அவைகள் அத்தனையும் பகுத்தறிவு வாதங்கள்.

அந்த எழுத்துக்களுக்கும் ஒரு மூலவர் இருந்தார். அந்த வெண்தாடி மனிதர் என்னை நன்றாகவே உசுப்பி விட்டார்.எனக்குள் போராட்டம்.

என் பிஞ்சுப் பருவத்தில் என் மனத்தில் ஒட்டிவைத்த முருகன் சிரித்துக்
கொண்டிருந்தான். குடிவந்த பாரதியும் பாடிக் கொண்டிருந்தார். என்னைக் கவர்ந்த காந்திஜியும் அமைதியாக அமர்ந்திருந்தார்.இப்பொழுது நுழைந்தவர்கள் சமுதாயச்சிற்பி தந்தை பெரியாரும், அடுக்குத்தொடர்ப் பேச்சு மன்னர் அறிஞர் அண்ணாவும்.

இந்த வாழ்க்கை என் 14 வயது முதல் ஆரம்பமாகி இன்றுவரை தொடர்ந்து வருகின்றது.இப்பொழுது இன்னும் பலர் நுழைந்துவிட்டனர்.

நான் அரசியல்வாதியல்ல; ஆரோக்கியமான சமுதாயத்தை விரும்புகிறவள் நான். என் படிப்புணர்வும், அதன் மூலம் நான் அறிந்தவர்களும்,புரிந்துகொண்டவர்களும் என்னில் ஏற்படுத்திய தாக்கத்தினை என் அனுபவங்கள் காட்டும்.

இந்த சமுதாயம் பல சோதனைகளுக்குப் பிறகு ஓர் அருமையான அமைப்பை உருவாகிக்கித் தந்திருக்கின்றது. குறைகள் இருக்கலாம்;ஆனால்,நிறைகள் நிறைய உள்ளன. நாம் சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த நன்மைகளைச் செய்யவேண்டும்.

என்னுடைய எண்ணங்கள் சமுதாயநலப் பணிகளின் கோர்வைகள்

(ஊர்வலம் தொடரும்)

3 comments:

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பான பதிவு !

அனுபவத்தின் வாயிலாக இந்த சமுதாயத்தைப் பற்றிய உங்களின் எண்ணங்கள் சிறப்பாக உள்ளது .
பகிர்வுக்கு நன்றி .

மீண்டும் வருவேன் உங்களின் தொடரும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள

Chitra said...

சிந்திக்க வைக்கும் நல்ல இடுகை. பகிர்வுக்கு நன்றி.

vasu balaji said...

காலப் பயணம் சுவாரசியமாக இருக்கிறது. :)