Tuesday, April 20, 2010

மனம் திறந்து....



உங்களுடன் இந்த அம்மா மனம் திறந்து பேச விரும்புகின்றாள்.

பதிவுகளைப் படிக்கின்றீர்கள் என்று தெரியவும் மகிழ்ச்சியும், ஊக்கமும் ஏற்படுகின்றது. உங்கள் எல்லோருக்கும் நன்றி!

நாம் யாவரும் ஒரு குடும்பம்; நான் உங்கள் அம்மா; நீங்கள் எல்லோரும் என் பிள்ளைகள்-அந்த எண்ணத்தில் இதனை எழுதுகின்றேன். பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் அம்மா.

என் பதிவுகள் பல கோணங்களில் எழுத ஆரம்பித்திருக்கின்றேன்.

நீங்கள் படிக்கும் பொழுது சில வரிகளில் ஆழமாகப் புதைந்திருக்கும் சிந்தனைகளைப் புரிந்து கொண்டு படிக்க வேண்டிக் கொள்கின்றேன்.காரணம் உண்டு! சில விஷயங்களை ஓரளவுதான் வெளிப்படையாக எழுத முடியும்; செய்திகள் இருக்கும்.

உதாரணமாக ஜெயகாந்தன் தொடரில் தாம்பத்யம்பற்றி எழுதியிருக்கின்றேன் . குறை சொல்லுவதாக நினைத்தல் கூடாது. நான் ஒரு சமூக மருத்துவர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுடன் பழகியவள்; பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தவள். ’ஆமாம், இது போன்று இருக்கின்றது,’ என நினைப்பு வருவது யதார்த்தம். ஆனால் நான் உங்களை வேண்டுவது, அந்த பிரச்சனைகளை நான் எப்படி தீர்த்தேன் என்பதில் கவனம் செலுத்துங்கள். வெற்றி என்றால் எப்படி முடிந்தது, தோல்வி என்றால் ஏன் என்று பார்க்கவும்.

குறைகள் என்னிடம் இருந்தாலும் மறைக்காது கூறிவருவேன். அனுபவங்களில் ஒரு பெண் பக்குவப்படுவதும் சக்தி பெறுவதும் படிப்படியாகப் பார்க்கலாம். என்னிடமிருந்த திறமைகள், பத்திரிகை பலம் எந்த அளவு என் முயற்சிகளுக்கு உதவியாக இருந்தன என்பதையும் விளக்கமாகக் காட்டி வருகின்றேன்.

புகழ் வேண்டி எழுதவில்லை! என் அனுபவங்களைச் சொல்வதன் மூலம் நாம் வாழும் சமுதாயத்தின் வரலாற்றைக் கூற வேண்டியது என் கடமையாக நினைத்து எழுதுகின்றேன்.

வெறும் வலைப் பூவாக இருப்பதை விட ஒரு வழிகாட்டும் இல்லமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன்.
நான் 75 வயதைக்கடந்த ஓர் முதியவள். ஆனால் ஆசைகள் நிறைய இருக்கின்றன. கணினிபற்றி எனக்கு அதிகம் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுவருகின்றேன். அதனால்தான் பின்னூட்டங்களுக்குக் கூட உடனே பதில் போட முடியவில்லை. ஒவ்வொன்றும் கேட்டு கேட்டு செய்கின்றேன்.விரைவில் கற்றுக் கொள்வேன். பின்னூட்டம் இடுங்கள். நமக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும். எனக்கும் வலி மறந்து எழுத சக்தி கிடைக்கும்.

சில வியாதிகளுக்கு என்னைப் பிடித்துவிட்டது. என்னுடன் இருந்து அவ்வப்பொழுது ஆட்டி வைக்கின்றன. எனவே சில நேரங்களில் முடக்கம் ஏற்படுகின்றது. எனக்கு ஊக்கம் அளியுங்கள். அதுவே என் சக்தி.

முடிந்த மட்டும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற துடிப்பு. பார்க்கலாம்.

நம்மைச் சுற்றி பிரச்சனைகள் குவிந்து கிடக்கின்றன. அரசில் உதவி செய்ய பல அமைப்புகள் இருக்கின்றன. அவைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். உங்களிடம் தங்கள் துயரைக் கூறும் பொழுது முடிந்த அளவு உதவி செய்யுங்கள். வழிகாட்டவாவது செய்யுங்கள்.

அரசியலும் அரசு இயந்தரமும் அணுகிச் செல்லும் பொழுது பல இடர்பாடுகள் பார்க்கலாம். என்னால் முடிந்த அளவு உங்களுக்கு வழிகாட்டுவேன்.

நான் இருப்பது அமெரிக்கா. நம் மண்ணில் இருந்தால் உங்களுடன் இருந்து உரியதைச் செய்ய முடியும். நம்மால் முடிந்ததைச் செய்வோம். ஏற்கனவே நிறைய பணிகள் இருக்கும் பொழுது என்ன செய்ய முடியும் என்று மனம் தளர வேண்டாம்.

ஒருவருக்கு உதவி செய்தாலும் அது உயர்ந்தது. மனித நேயம் காப்போம்.

நான் இருந்த வரை உள்ள திட்டங்கள் தெரியும். இப்பொழுது இருப்பவைகளுக்குப் புள்ளிவிபரங்கள் கேட்டிருக்கின்றேன். கிடைக்கக் கிடைக்க தகவல் தருகின்றேன்.

எண்ணங்கள் ஊர்வலம் முடியவும் நினைவலைகள் ஆரம்பம். அது ஒரு சமுதாய வரலாறு. என்னை சாட்சியாக்கி அதனை எழுதுகின்றேன்.

அரசும் அரசியல்,சமுதாயம் இந்த மூன்றையும் சுற்றி வரப் போகின்றது. வரலாற்று அடிப்படையிலும் செய்திகள் வரும். மிருகமாய் வாழ்ந்த மனிதன், நல்ல கோட்பாட்டைக் கொண்டு வந்து நாகரீகமாக வாழ்ந்து இப்பொழுது மீண்டும் பழைய மிருக வாழ்க்கைக்குப் போய்க் கொண்டிருக்கின்றான். நம் சந்ததியை, நம் சமுதாயத்தைக் காப்பாற்ற ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கின்றது.

நடு நிலையுடன் எழுதிவரும் தொடர் நினைவலைகள்.

சாதி, மதம், அரசியல், மொழி, நாடு என்ற எந்த வலைக்குள்ளூம் நான் இல்லை. மனித நேயமே என் மதம். உலகம் நான் வாழும் மண். உலக சமுதாயத்தில் நானும் ஒருத்தி. மீண்டும் மீண்டும் இதனை எழுதக் காரணம் சார்பு நிலை வந்துவிட்டால் உண்மையான சரித்திரம் எழுத முடியாது.

இது ஒரு சத்திய சோதனை! ஊன்றிப்படிக்க வேண்டிக் கொள்கின்றேன்.

என்னையும் மீறி தவறுதலாக யாரையாவது புண்படுத்திவிட்டால் இப்பொழுதே மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.

என்னைப்பற்றி அடுத்து தனியாக எழுதுகின்றேன்.முதலில் என் நோக்கம்பற்றி எழுதுவதே சரியானது.

என் பயணத்தில் தொடர்ந்து வரப்போகும் சக பயணிகள் நீங்கள்.

உங்களை அன்புடன் அழைக்கின்றேன்

சீதாம்மா

13 comments:

தராசு said...

சீதாம்மா,

சாதிக்க வயது ஒரு தடை அல்ல.

வாழ்த்துகிறோம், சாதியுங்கள். பிரபஞ்சம் எல்லோருக்கும் பொதுவானதுதான்.

Anonymous said...

எழுதுங்கள் அம்மா, படிக்க காத்திருக்கிறாம் :)

பனித்துளி சங்கர் said...

///////சில வியாதிகளுக்கு என்னைப் பிடித்துவிட்டது. என்னுடன் இருந்து அவ்வப்பொழுது ஆட்டி வைக்கின்றன. எனவே சில நேரங்களில் முடக்கம் ஏற்படுகின்றது. எனக்கு ஊக்கம் அளியுங்கள். அதுவே என் சக்தி.///////

இது போன்ற நேரத்திலும் இவளவு சிறப்பாக பதிவு எழுதி இருக்கிறீர்கள் . மிகவும் பெருமையாக இருக்கிறது . வாழ்த்துக்கள் அம்மா !

INFORMIXCampus said...

Wush u all the best for your journey...

துபாய் ராஜா said...

தொடருங்கள்.தொடர்கிறோம்.

malar said...

துணிந்து எழுதுங்கள் ஒரு கை பார்து விடுவோம்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

மயில் said...
எழுதுங்கள் அம்மா, படிக்க காத்திருக்கிறாம் :)

வழிமொழிகிறேன்.

கபீஷ் said...

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Kumky said...

மயில் said...
எழுதுங்கள் அம்மா, படிக்க காத்திருக்கிறாம் :)


படிக்க காத்திருக்கிறோம்..

நானும்.

Maximum India said...

அன்புள்ள அம்மா!

நிறைய எழுதுங்கள்! படிக்க காத்திருக்கிறோம்!

ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்யத்தையும் வழங்க வேண்டிக் கொள்கிறேன்.

நன்றி!

ராஜ நடராஜன் said...

இடுகையை அறியத்தந்த கபீஷ்க்கு நன்றி!

துளசி கோபால் said...

வலை உலகத்துக்கு நல்வரவு.

கலக்குங்க. கலந்துக்கத் தயாரா இருக்கோம்.

Mahi_Granny said...

ஆவலாய் இருக்கிறோம். தங்களின் அனுபவங்களை எழுதுங்களேன்