அக்கினிபிரேவசத்தில் குளித்து எழுந்தவள்; சில நேரங்களில் சில மனிதர்களால் பாதிக்கப்பட்டவள்; பாதையில் வந்த கார் சவாரியால் வாழ்வைப் பறி கொடுத்தவள். அவளைக் கொஞ்சம் பார்க்கலாமே!
கதையை ஆய்வு செய்தவர்கள் நடந்த சம்பவத்தை கங்கா வெறுக்கவில்லை; அவன் கொடுத்த சுயிங்கத்தைக் கூடத் துப்பவில்லை என்று நுண்ணியமாக அலசி இருக்கின்றார்கள். அவள் ரெண்டுங்கெட்டான் நிலைக்கு எத்தனை விமர்சனங்கள்!
"அக்கினி பிரவேசம்," சிறுகதையின் நீட்சிதான் "சில நேரங்களில் சில மனிதர்கள்." எழுத்துலகில் இத்தகைய அமைப்பு புதிதல்ல. ஆங்கிலத்தில் நிறையவே உண்டு; தமிழில் கொஞ்சம் வித்தியாசமானது.
கல்கியின் "பார்த்திபன் கனவி"லிருந்து பூத்தவை "சிவகாமியின் சபதமும்" "பொன்னியின் செல்வனும்." பார்த்திபனின் கனவிலே பொன்னியின் புதல்வர் தன்னைப் புதைத்துவிட்டார். தன் மண்ணின் கதையை தமிழனின் பொற்காலமாகக் காட்டி மகிழ்ந்தார்.
இராஜ இராஜன் ஓர் சிறந்த மன்னன் என்பதில் கருத்து மாறுபாடு யாருக்கும் கிடையாது. ஆனால் அடுப்பங்கரை மாமி கூட வரலாற்றை நிமிரிந்து பார்க்க வைத்தவர் கல்கி.
சிற்பக் கூடத்தில் சிலைகளோடு சிலையாகி, அந்த மன்னனின் மனிதக் காதலுக்கு அப்பொழுதே வித்திட்டு சிவகாமியின் சபதம் பிறக்கச் செய்தார்.
அக்கினி பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்களாகி , பின்னர் கங்கை எங்கே போகின்றாள் என்று கங்காவுடன் பயணம் செய்தவர் ஜெயகாந்தன். அந்த அளவு கங்கா பாத்திரம் அவரை ஆட்கொண்டிருந்தது.
வீதியில் நடந்தது ஓர் விபத்து. உடன் பிறந்தவன் அவளைக் கீழ்த்தரமாகப் பேசி விரட்டுகின்றான். “சொல்” என்பது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஓர் ஊர்தி. மனிதன் அதனை எப்படியெல்லாம் கையாளுகின்றான்!
கார்லாவின் அப்பாவால் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் மனம் காயப் படுகின்றது. வழி நடத்த வேண்டிய கன்னிமார்களும் காயத்தைப் புண்ணாக்குகின்றார்கள். அந்தப் புண் புரையோடவும் புத்தியின் தெளிவு
பாதிக்கப்பட்டு விடுகின்றது.
துறவறம் போயும் அவள் உணர்வுகள் அவளைத் துரத்துகின்றன. அன்பு காட்டும் கணவன் கிடைத்தும் நல்ல வாழ்க்கையில் மனம் ஒட்டவில்லை. அந்த அளவு சொற்களாலும் காட்சிகளாலும் சுழற்றப்பட்டு, சமுதாயத்தால் வெறுக்கப் படும் ஓர் குழியில் விழுகின்றாள். மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த நான்கு நிலையிலும் அவள் அமைதி காண முடியாது அச்சத்தின் பிடியில் சிக்கியதில் அவள் வாழ்க்கை சிதைகின்றது.
கங்காவுக்கு ஆதரவு கரம் நீட்டுகின்றார் அவள் மாமன். அந்த மாமனோ சபலப் புத்திக்காரன். அவன் பார்வையால் அவளை நிர்வாணப்படுத்தி ரசிக்கும் ஓர் கிழவன். அவன் தொடலிலும் தடவலிலும் உடல் நெளிந்து மனம் குமைந்து வாழ்ந்து எப்படியோ படித்து முடிக்கின்றாள்.
உரம் வாய்ந்த பெண். அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடிந்ததே!
அவளுக்கு நல்லதொரு வேலையும் கிடைத்துப் பெரிய பதவியிலும் அமர்கின்றாள்.
ஓர் நிர்வாகிக்குத் தெளிவும், உறுத்திப்பாடும் தேவை. குழப்பமன நிலையில் உள்ளவர்களால் சீரிய முறையில் நிர்வாகம் செய்தல் இயலாது. நான் ஒரு நிர்வாகியாக இருந்தவள்.
கங்கா எப்போது, எப்படி முட்டாளானாள்?
பிரபு மணமாகி, தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றான். அவனுடன் பழக்கம் ஏற்பட்டால் பாசம் வளரும். ஆனால் வாழ்வு கிடைக்காது. இப்பொழுது வெறும் வடு மட்டும் இருக்கின்றது. ஆனால் பிரிவும் ஏமாற்றங்களும் ஏற்படும் பொழுது ஆழமான புண் ஏற்படுமே! இது தெரியாத முட்டாள் பெண்ணா கங்கா?துன்பத்தை விலை கொடுத்து வாங்குவார்களா? கங்கா அந்த எல்லைக்கு எப்படி தள்ளப்பட்டாள்?
சபல மாமாவின் அசிங்கப் பார்வையும், அடிக்கடி அவர் தொடல், தடவல்களும் தாங்கிய காலத்திலும் மனம் படிப்பில் ஒன்றி இருந்தது. பஸ் பயணத்தில் வக்கிரமனம் படைத்த ஆண்களின் சேட்டைகளில் அவள் படும் அருவருப்பும், உடன்பிறந்த அண்ணனையும் அந்த வரிசையில் சேர்த்து நினைக்கும் கங்கா, சபல மாமாவின் செய்கைகளால் உடலில் பூரான் ஊறும் உணர்வுகளோடு அவ்வீட்டில் வாழ்கின்றாள். மனம் தளராது படித்து முடிக்கின்றாள். அப்படிப்பட்டவள் ஏன் தோல்வியை நோக்கிப் போகின்றாள்?
மனித மனம்! கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்!
சபலமாமாவின் கொடிய நாக்கு அவளைச் சீண்டுகின்றது. சொற்கள் கத்தியைவிடக் கூர்மையானது.
“உன்னைக் கெடுத்தவனைத் தேடிக் கண்டுபிடி!” என்ற எகத்தாளமான சொற்கள் அவளை விரட்டி விடுகின்றது. அவள் தேடலில் கெடுத்தவனையும் கண்டு பிடித்து விடுகின்றாள். அப்புறம் என்ன செய்ய? அதற்கும் மாமனின் சீண்டலும் குத்தலும் சொற்களாக வந்து அவளைத் துரத்துகின்றது.
"நீ அவனுக்கு பொண்டாட்டியாக முடியுமா? கான்குபைனாகத்தான் இருக்க முடியும்!"
கெட்டிக்கார கங்காவை அவர் சொற்களால் கொன்று விடுகின்றார்.
பிரபுவுடன் பழகுகின்றாள். அலுவலகத்தில் “மை மேன்” என்று கூறி மகிழ்கின்றாள். அவன் பிரிய முடிவு செய்த பொழுது வலுவில் அவள் தன்னையே கொடுக்கத் தயாராகி விடுகின்றாள். தடுமாற்றம்!
பிரபுவோ அவளை நெருங்காமலேயே பிரிந்து சென்று விடுகின்றான். அவன் குடித்து வைத்துச் சென்ற கப் முன்னால் இருக்கின்றது.
“கல்ப் இட்!” என்ற சொற்களோடு மலைத்து நின்று விடுகின்றாள்.
மனித பலஹீனங்களை மறுக்கவில்லை. கெடுத்தவனைத் தேடிப் போவதும், தெரிந்தும் ஏமாறுவதும் , கங்காவின் பாத்திரப் படைப்பை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அந்தக்காலம் என்று மிகவும் பின் செல்லக் கூடாது. 56ல் நான் சமுதாயப் பணிக்கு வந்து விட்டேன். ஆனால் முற்றிலும் ஒதுக்கவும் முடியவில்லை
என் குடும்பத்திலேயே ஓர் அவலம் நடந்தது!
அவளுக்கு 17 வயது. தந்தை கிடையாது. தாயோ மாமன் வீட்டிற்குச் சென்று விட்டாள். இவள் தன் சித்தியின் வீட்டில் தங்கி இருந்தாள். அப்பொழுது ஒருவன் அவளுக்குக் காதல் கடிதம் எழுதிவிட்டான். கோபக்கார சித்தப்பா அவளை அடித்திருக்கின்றார். அந்தப் பெண் மனமுடைந்து கிணற்றில் விழுந்துவிட்டாள். உடனே அவளைத் தூக்கி காப்பாற்றி இருக்கின்றார்கள். ஊரார் முன் கேவலப் படுத்திவிட்டாள் என்று இனிமேல் வைத்துக் கொள்ள முடியாது என்று அவளை என் வீட்டிற்குக் கொண்டுவந்து விட்டுச் சென்று விட்டார்கள்!
அவளை அதற்கு முன் நான் பார்த்ததே கிடையாது. அவள் 18 வயது முடியாத நிலையில் வேறு ஒரு விதிப்படி ஒரு வேலையில் அமர்த்திவிட்டேன். இது நடந்தது 63ல். அவள் சோதனைக் காலம் முடிந்தது. திருமணமாகி இப்பொழுது பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றாள்.
காலம் மாறிக் கொண்டே இருக்கின்றது
கங்கா நன்றாகப் படித்து, உயர் பதவியிலும் அமரவிட்டு தன் மன உறுதியை இழப்பது என்பது என் மனத்திற்குப் பொருந்தவில்லை
இந்தக் காலத்துப் பெண்கள் வேறு வழியில் வாழ்க்கையைத் தேடிக் கொள்வார்கள். அவள் படிப்பிற்கும் பதவிக்கும் புதிய வாழ்க்கையைப் பெற்றிருக்க முடியும்!
கதையின் உரையாடல்கள் சக்தி வாய்ந்தவை.
இப்படியும் மனிதர்கள் என்று மனத்தைச் சமாதானம் செய்து கொள்ளலாம். சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படியும் இருக்கலாம்!
ஜெயகாந்தனுக்கு கங்காவின் மீது ஓர் ஈடுபாடு! அக்கினி பிரவேசம் விரிந்து, சில நேரங்களில் சில மனிதர்களைப் பார்த்து கங்கா எங்கே போகின்றாள் என்று தொடர்ந்தார். ஆனால் மூன்றவதில் அத்தனை சுவாரஸ்யம் இருக்கவில்லை
சொற்கள்! ஜெயகாந்தனின் சொற்கள் சுடுகின்றன. அவருடைய வேகத்தில் பாத்திரங்களை வைத்து பொம்மலாட்டம் ஆடுகின்றார்
அழிக்க முடியும் சக்தி வாய்ந்த சொற்களால் ஆக்கவும் முடியும்.
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு
மனிதன் நா காப்பதில்லை
இரு சம்பவங்களைக் கூற விரும்புகின்றேன்! அமெரிக்காவிற்கு முதன் முறை சென்ற பொழுது நடந்த ஒரு சம்பவம்! மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மார்ஷல் என்ற ஒரு சிறிய இடம். அங்கு என் மகன் வேலை பார்த்து வந்தான். அவர்கள் குடியிருந்த இடம் அடுக்கு கட்டத்தில் ஒரு பகுதி. அதே கட்டடத்தில் அலீசியா என்ற ஓர் அமெரிக்கப் பெண் என் மருமகளுக்கு சிநேகிதியானாள். அவள் கணவர் பிராட் ஒரு பத்திரிகை நிருபர். எங்கு சென்றாலும் நிருபர்களின் சிநேகம் எனக்குக் கிடைத்துவிடும். அவர்களுக்கு சேய்ரா என்று இரண்டு வயது பெண் குழந்தை. அலீசியா ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தாள். ப்ராட் மாலை நேரத்தில் தன் மகளுடன் வீட்டிற்கு முன் இருக்கும் புல்வெளிக்கு வருவான். குழந்தை அங்கே விளையாடிக் கொண்டிருக்கும். நாங்கள் இருவரும் அங்கே உடகார்ந்து உலகச் செய்திகளை அலசுவோம்!
திடீரென்று ஒரு நாள் என் மருமகள் கவலையுடன் அலீசியா தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாகக் கூறினாள். இருவரும் நல்லவர்கள். எங்கே இந்த பிரச்சனை முளைத்தது? காதலும் திடீரென்று வரும்;கல்யாண முறிவும் அப்படியே.
அன்று மாலை பிராடுடன் பேசும் பொழுது எங்கள் இலக்கியம் என்று ஆரம்பித்து சிலப்பதிகாரம் கதை சொன்னேன். கண்ணகியின் வாழ்க்கை அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. வேறொரு பெண்ணுடன் சென்று பல ஆண்டுகள் வாழ்ந்துவிட்டுத் திரும்பிய கணவரை ஏன் ஏற்றுக் கொண்டாள் என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.
தமிழர் வாழ்வில் காதல், கற்பு பற்றி விளக்கினேன். பார்வைகளின் சங்கமமோ, ஈர்ப்போ காதலாகி விடாது என்றேன். அது காதலின் தொடக்கம். ஆழமான காதல் கொண்டவர்கள் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்வார்கள் என்றேன்.
சின்னப் பிரச்சனைக்கும் பிரியும் தம்பதியர் பெரிதாக எந்த வாழ்க்கையைப் பெற்றுவிட முடியும்? அப்படி ஓடுகின்றவர்களும் ஓரிடத்தில் நின்று விடுகின்றார்கள். அப்பொழுது சமரசம் செய்து கொள்ள முடிகின்றவர்கள் ஆரம்ப வாழ்க்கையிலேயே ஒத்துப் போய் வாழ்ந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு சீராக இருக்கும். இந்திய மண்ணில் தம்பதிகளுக்குள் பிணக்கு இருப்பினும் ஓர் பாசப்பிணைப்பில் கட்டுண்டு வாழ்வார்கள். நான் சொல்லச் சொல்ல என்னைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான்
காதலுக்குப் புதுப் புது விளக்கங்கள் கூறினேன். சொற்களை வைத்து விளையாடினேன். காதல் அற்புதமானது. அதைப் பேணிக்காப்பத்தில்தான் அதன் வலிமை வளரும். உதறிக் கொண்டிருந்தால் காதல் நைந்துவிடும். பாதுகாக்கப்படும் காதலின் சுகமே தனி. அப்பப்பா, என்னவெல்லாமோ பேசினேன். என் இலக்கு அவர்கள் பிரியக் கூடாது;அவ்வளவுதான்.
இருட்டவும் இருவரும் எழுந்து சென்றோம்.
இரவு ஏழு மணிக்கு அலீசியாவும் பிராடும் வந்தார்கள். அவளிடம் ஏதோ ஒரு படப்படப்பு இருந்தது. என்னிடம் கண்ணகி கதை கேட்டாள். அத்தனை ஆண்டுகள் கணவன் வரவில்லையென்றால் டைவர்ஸ் செய்திருக்கலாமே என்றாள்.
கண்ணகி கோவலனை டைவர்ஸ் செய்வதா? கற்பனையில் மகிழ்ந்தேன்! பத்தினிக்குக் காப்பியம் எழுதிய அடிகளார் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
திலகவதி கதை சொன்னேன். திருமணம் மட்டும் நிச்சயிக்கப் பட்டிருந்தது. போருக்குச் சென்ற இடத்தில் மாண்டு போனார். மணமாகாவிட்டாலும் மணம் பேசி முடித்தவரை எண்ணி திலகவதி தனித்தே வாழ்ந்த கதை கூறவும் அவர்களுக்குப் பிரமிப்பு வந்தது. காதல் என்பது உதட்டளவில் ஏற்படுவதல்ல. ஒருவரையொருவர் உண்மையாகக் காதலித்திருந்தால் அவர்களால் பிரிய முடியாது என்றேன். ஏதேதோ சொன்னேன். எனக்கு இலட்சியம் எப்படியாவது அவர்கள் பிரிந்துவிடாமல் இருக்க ஓர் முயற்சி செய்ய வேண்டும்.
மவுனமாக எழுந்து சென்றனர். மறு நாள் மீண்டும் வந்தனர். முகத்தில் ஓர் தெளிவு. அவர்கள் விவாக ரத்து செய்து கொள்ளப் போவதில்லை என்ற தீர்மானத்தைக் கூறினார்கள்.
இந்தத் தீர்மானம் நிரந்தரமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. முடிவு ஒத்தி போடப்பட்டது. அவ்வளவுதான். இன்னும் கொஞ்ச நாட்கள் குழந்தைக்கு அப்பா, அம்மா சேர்ந்து இருப்பார்கள். இங்கே சொற்களின் விளையாட்டு ஆக்க பூர்வமான ஓர் காரியத்திற்கு உதவியது.
மூன்று வருடங்களுக்கு முன் இந்தியா வந்திருந்த பொழுது ஓர் சம்பவம் நடந்தது. கணினி அனுபவம் கிடைத்த பிறகு எனக்கு நிறைய பிள்ளைகள் கிடைத்துவிட்டார்கள். அவர்களில் ஒருவன் நான் சென்னைக்குச் செல்லவும் தொலை பேசியில் கூப்பிட்டான்.
“அம்மா, உங்களிடம் ஒரு அபிப்பிராயம் கேட்கவேண்டும். லிவ்விங் டுகெதெர் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? “
கேள்வி கேட்டவனுக்கு வயது இருபத்தி மூன்று. பதில் கூற வேண்டியவரின் வயது எழுபத்திரண்டு.
இது கிண்டல் கேள்வியா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட பிறகு கிழவி எப்படி பதில் சொல்லுவாள்?
"பாவி, நீ உருப்படுவியா? இந்த வயசுக்கு இப்படி ஒரு புத்தியா?"
நான் இதை எப்படி அணுகினேன் என்பதை அடுத்து கூறுகின்றேன்
சொற்களின் அருமை தெரிந்து நல்லபடியாகப் பேசலாமே!
(தொடரும்)
நன்றி -திண்ணை