Wednesday, February 27, 2013

நினைவலைகள் 24


நினைவலைகள்  -24

 நாடகம் மிகவும் சக்தி வாய்ந்தது.
இன்னொரு சம்பவமும் கூற வேண்டும்.

உலக வங்கி ஊட்டச் சத்துதிட்டம் மதுரை மாவட்டத்தில் தான் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தது. அந்தப் பணியைச் செய்யும் பொறுப்பில் உதவி இயக்குனர்களாக நானும் வசந்த குமாரியும் இருந்தோம். மதுரையில் நான், தலைமை அலுவலகத்தில் வசந்த குமாரியும் உதவி இயக்குனர்களாக இருந்தோம்.

அமெரிக்காவிலிருந்து தணிக்கைக் குழு வந்தது. அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் பெயர் ஜிம். மிகவும் கெட்டிக்காரர். அவரிடம் மாவட்ட வரை படத்தைக் கொடுத்துவிடவேண்டும். எங்கு போக வேண்டுமென்று ஜீப்பில் ஏறும் பொழுதுதான் கூறுவார். போய்க் கொண்டிருக்கும் பொழுதே பாதையை மாற்றுவார். ஊருக்குள் சென்றாலும் மையத்தை பார்வையிட்ட பின் ஆங்கிலம் தெரிந்த ஒருவரைக் கூப்பிட்டுக் கொண்டு ஊருக்குள் சென்று குடும்பங்களைப் பார்த்துப் பேசுவார்

அப்படிப்பட்டவருடன் போய்க் கொண்டிருக்கும் பொழுது வாடிப்பட்டி வட்டாரத்தில் ஒரு கிராமத்தில் மையத்தைப் பார்வையிட்டார்.
அங்கிருந்த பணியாளர் அவ்வளவு திருப்திகரமாக மையத்தை வைத்திருக்கவில்லை.

என்னிடம் ஒரு குணம் உண்டு. உண்மைகளை மறைக்க மாட்டேன். அதே நேரத்தில் பலஹீனங்களின் காரணங்களைத் தெரிந்து வைத்திருப்பேன். முயற்சி செய்யும் பொழுது சில திருந்தும் . சில திருந்தாது. இது உலகம் எங்கினும் பொதுவானதே.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கிராமத்துப் பெரியவர்களில் சிலர் வந்தனர். பணியாளரைப் பற்றியும் மையத்தைப் பற்றியும் குறைகள் கூறினர். பேசிக் கொண்டு வரும் பொழுதே அவர்கள் சொன்ன செய்தி ஒன்றுதான் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது

“மேலதிகாரிங்க கொஞ்சம் அக்கறையுடன் பாத்துக்கிட்டா இப்படி இருக்காது. முன்னாலே எங்க ஊரிலே ஒரு அம்மா இருந்தாங்க. அவங்க மாதிரி இதுவரை யாரும் வரல்லே. எல்லார்கிட்டேயும் நல்லாப் பழகு வாங்க. எங்க சுத்துபட்ட கிராமங்கள்ளேயும் எல்லாருக்கும் அந்த அம்மாவைத் தெரியும். நல்ல பாடுவாங்க, நடிப்பாங்க, ஆடுவாங்க. எங்களுக்கு அவங்க பாட்டு, நடிப்பு ரொம்பப் பிடிக்கும் “

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவர்கள் யாரைச் சொல்லுகின்றார்கள் என்று புரிந்தது. மெதுவாக நான் வசந்த குமாரியிடம் விபரம் சொன்னேன்.
உடனே அவர்களோ ஊர்க்காரகளைப் பார்த்து “அவங்க பேர் என்ன?’
என்று கேட்டுவிட்டார்கள்

சீதாலட்சுமி அம்மா. எங்க ஊர் எஸ் ஈ .ஓ அம்மா

இங்கே நிக்கறாங்களே அவங்கதான் நீங்க சொல்ற சீதாலட்சுமி அம்மா

இப்பொழுது அவன் விழித்தான்

அவங்க நல்லா இருப்பாங்களே!

கடவுளே, அவ்வளவு அசிங்கமாகவா ஆயிட்டேன் !
20 ஆண்டுகளில் நான் நிறைய மாறிவிட்டேன் என்பது புரிந்தது. அது சரி, வேலைகளைப் பற்றி புகழ்ந்தால் சரி, இவரோ நாட்டியத்தையும் நாடகத்தையும் புகழ்கின்றார்.

மனித மனத்தில் கூத்து எவ்வளவு ஆழமாகப் போய் உட்கார்ந்து கொள்கின்றது!

வசந்தகுமாரி ஊராருக்கு விளக்கிவிட்டு ஜிம்முக்கும் நடந்தவைகளைக் கூறினார்கள். பின்னர் ஜிம் அவரிடம் அந்தக்கால செய்திகளைப் பற்றியும் என்னைப் பற்றியும் விசாரித்தார். அந்தத் திட்டத்தில் “communication “
என்ற ஒரு பிரிவு உண்டு. என்னிடமும் விசாரித்தார். சுதந்திரம் கிடைத்தவுடன் விழிப்புணர்விற்காக இந்தியா மேற்கொண்ட திட்டங்களை விளக்கினேன். அதனைக் கேட்டபின்னர் இப்பொழுதும் அதே வேகத்துடன்
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் கூறினார். அவருக்கு நான் மிகவும் பிரியமானவளானேன்.

இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் ஒருவரின் நினைவைப் பசுமையாகத் தக்க வைக்கும் வல்லமை கூத்துக்கே உண்டு.

அப்பப்பா, கூத்து மனிதனை எப்படி தனக்குள் அடிமைப் படுத்திவிடுகின்றது! மக்கள் திலகம் மக்களுக்குத் திலகமானதே அவரின்
திரையுலகப் பாத்திரங்கள்தானே.

வாடிப்பட்டியில் என் மேடைப் பேச்சில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அடுக்குத் தொடர்ப் பேச்சு போய், பேச்சுத் தமிழில் பேச ஆரம்பித்து விட்டேன்.
என்னுடைய பேச்சில் கவரப்பட்டவர்கள் பலர். அதன் காரணமாக என்னை அரசியலுக்கு அழைத்தவர்கள் பலர். அப்பொழுது திருமதி .அனந்த நாயகி மேடைகளில் வேகமாகப் பேசுவார். என் பேச்சு அவரைவிட நன்றாக இருக்கின்றது என்று கூறுவர்.

நாடகம் ஒரு கூட்டு முயற்சி. சட்டென்று அரங்கேற்றிவிட முடியாது. ஓரங்க நாடகத்திற்கும் சில நியதிகள் உண்டு.

என் வாழ்க்கையில் என் பேச்சுத்திறன் தான் முக்கியப் பங்கு வகித்தது.
அதன் ஈர்ப்பிலேதான் பலருடைய மதிப்பையும் நட்பையும் பெற்றேன்.
பணிக்கால சோதனைகளில் எனக்கு உதவியாக இருந்தது பேச்சும் பத்திரிகையுலகமும்.

பத்திரிகை உலகம் என்றவுடன் எழுத்தாளர்களாக இருக்க வேண்டுமென்பதல்ல. மாவட்ட அளவில் அதிகாரியாகப் பணி யாற்றும் பொழுது ஊராட்சித் தலைவர் முதல் பாரளுமன்றத்தலைவர்கள் வரை எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எங்களிடம் வருவார்கள். நாங்களும் போவோம். பல பிரச்சனைகள் வரும். அவைகள் பத்திரிரிகைகளில் மோசமான விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால் பத்திரிகை நிருபர்கள் தொடர்பு மிக மிக முக்கியம்.

ஒரு மாவட்ட அதிகாரி நல்ல முறையில் பணியாற்ற, அமைதியுடன் செயல்பட மாவட்ட ஆட்சியாளரின் நன்மதிப்பையும் பத்திரிகை நிருபர்களின் நட்பையும் பாதுகாக்க வேண்டும். இதில் சுணக்கமாக இருப்பவர்கள் நல்ல பெயர் எடுக்க முடியாது. இது தொழில் தந்திரம்.

நம்மிடையே ஒருவர் சாட்சியாக இருக்கின்றார். அவர்தான் நம் தமிழ்த்தேனி அவர்கள். நான் சென்னைக்கு வரும் பொழுது என்னுடன் வந்து கொண்டிருந்த தமிழ்த் தேனியுடன் ஓர் இல்லாம் சென்றோம். அங்கே இருந்தவர் பெயர் சரோஜா.

என்னைப் பார்த்தவுடன் அழுது கொண்டே காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். உடனே தன் மருமகள் மூவரையும் அழைத்து நமஸ்காரம் செய்யச் சொன்னாள். “என்னை வாழ வைத்த அம்மா “ என்று அறிமுகம் செய்தாள். நான் இல்லாமல் போயிருந்தால் அவளோ அவள் பிள்ளைகளோ இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்றாள். ஒரு காலத்தில் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தாள். இன்று பங்களா, மூன்று கார்கள் என்று மாம்பலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். 

இத்தனையும் தம்பி தமிழ்த் தேனிக்கு முன்னால் தான் நடந்தது.

அழிந்து போக இருந்த ஓர் குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்தது. எப்படி? என் பத்திரிகை பலம் மற்றவரைப் பயமுறுத்தியது.
அடுத்து விளக்கமாகக் கூறுகின்றேன்.

பத்திரிகை கத்தியைவிட கூர்மையானது.

அதன் கூர்மை அதன் சுதந்திரத்தில் இருக்கின்றது.

அதிகாரத்தில் இருந்தவர்கள் என்னிடம் காட்டிய மரியாதை, அது எனக்கல்ல. என் பின் நின்ற பத்திரிகை உலகமே காரணம். .அடுத்து அதனையும் விளக்குகின்றேன்.

தெள்ளிய நீரோடையாகப் போய்க் கொண்டிருந்த நினவலைகள் இனி வெகம் எடுக்கும். சில நேரங்கலில் சுனாமி அலைகளையும் பார்க்கலாம்.
பால்யூவின் ஆசையை அவர் மறந்த பின் நிறைவேற்றுகின்றேன். .அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.

தொடரும்



Monday, February 18, 2013

நினைவலைகள் -23


நினைவலைகள் 23

நாடக வாழ்க்கை இன்னும் முடியவில்லை.
ஆனால் முடியப் போகின்றது.
நாடகம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
ஆனால் ஒரு நாடகம் முழுமையாக மேடை ஏறுவதற்குள் எத்தனை பாடுபடவேண்டும் என்ற அனுபவமும் எனக்கு கிட்டியது.

வாடிப்பட்டியிலிருந்து சென்று பல ஆண்டுகள் கழித்து காஞ்சியில் ஓரங்க நாடகத்தில் நடித்தேன். அதுவும் ஓர் திடீர் ஏற்பாடு. அதற்குப் பிறகுதான் பெரும் சோதனை ஏற்பட்டது

செங்கல்பட்டு மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றி கொண்டிருந்த காலம்.
எங்கள் அமைச்சர் திரு.சி.எம் அண்னாமலை. அவர் சொந்த ஊர் காஞ்சிபுரம்.நாங்கள் மாவட்ட அளவில் பெண்களுக்கு ஓர் பெரிய மாநாடு ஏற்பாடு செய்தோம். அமைச்சருக்கு அந்த மாநாட்டிற்கு முதல்வர் கலைஞரை அழைக்க விருப்பம். கலைஞர் வர ஒப்புக் கொண்டார். கலைவவணர் அரங்கில் விழா ஏற்பாடு. அமைச்சர் என்னை நாடகம் போடச் சொன்னார். நான் முடியாது என்று சொன்னேன்

காரணங்கள் பல. இப்பொழுது மாவட்ட அளவில் அதிகாரி. எனவே நடிக்க முடியாது என்று மறுத்தேன். மேலும் சென்னையில் கலைவாணர் அரங்கில் கலைஞர் தலைமையில் நாடகம் என்றால் அது சாதாரணமாக இருக்கக் கூடாது. என்னால் மற்றவர்களைச் சேர்த்து நாடக ஒத்திகை போட முடியாது. மேலும் விழா ஏற்பாடுகளில் நான் தான் முன் நிற்க வேண்டும். விழா முடியவும் உடனே மேக்கப் போட்டு நடிக்க முடியாது. நேரம் இருக்காது என்றேன். பிரச்சனைகளை முதல்வரிடமே கூறும்படி எங்கள் அமைச்சர் சொன்னார். வேறு யாருக்கும் இந்த தர்ம சங்கடம் வந்திருக்காது

முதல்வரை நான் சந்தித்தேன். அவரிடம் பிரச்சனைகளைக் கூறிய பொழுது சிரித்துக் கொண்டார். முதலில் நாடகம் போடச் சொன்னார். மேக்கப் கலைக்காமல் விழா மேடைக்கு வர வேண்டியிருக்கும் என்றேன். பரவாயில்லை என்று சொல்லிவிட்டார். சாவியையும் அழைக்கச் சொன்னார். சினிமாக்காரரும் பத்திரிகை ஆசிரியரும் சேர்ந்து போடும் நாடகம் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இப்பொழுது என் திறமைக்கு சவால். சென்னை மாநாகரில் சினிமா உலகில் திறமை பெற்ற ஒருவர், பல பத்திரிகையாளர்கள், இன்னும் பல பெரிய பிரமுகர்களுக்கு முன் நாடகம்போட வேண்டும். நான்நடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. நாற்பது வயதுக்கு மேல் என்னை எப்படி நாயகி ஆக்குவது? பல வேலைகளுக்கு மத்தியில் எப்படி ஒத்திகை நடத்துவது? நாடகப் பயிற்சி இல்லாதவர்களை ஒன்று படுத்தி செய்ய இயலுமா? முதலில் மலைத்தேன். ஆனால் பின் வாங்க விரும்பவில்லை

மனோகர் ட்ரூப், சேஷாத்ரி ட்ரூப் இரண்டிலிருந்தும் நடிப்பதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்தேன். நாடக ஸ்கிர்ப்டை அவர்களிடம் கொடுத்தேன். அவர்களில் ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்தேன். முடிந்த பொழுது மட்டும்தான் ஒத்திகையில் நான் கலந்தேன்.  நானே எழுதிய வசனங்கள் என்றாலும் அவைகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அது என் குறை.ஆனால் நடிக்க வந்தவர்கள் அனைவரும் தொழில் முறை நடிகர்கள். எனவே என்னைச் சமாளித்துக் கொள்வார்கள்.

நாடக அரங்கிற்கும் பங்களா செட், வீடு செட் சேஷாத்ரி க்ரூப்பீல் வாங்க முடிவு செய்தது. ம்யூசிக்கிற்கு அப்பொழுது மேடையில் கொஞ்சம் பிரபலமான சந்திரன் க்ரூப்பை ஏற்பாடு செய்தேன். அதே போன்று லைட்,
மேடை நிகழ்வுகளை ஒழுங்காகக் கவனிக்க அனுபவம் உள்ள ஒருவரையும் ஏற்பாடு செய்தேன். நாடகம் என்றால் எளிதல்ல. இத்தனை அனுபவங்களும் இப்பொழுதுதான் எனக்குக் கிடைத்தன. வென்று காட்ட வேண்டும் என்ற தீவிரம் ஏற்பட்டு விட்டது

புதுப் புது உத்திகளும் தோன்ற ஆரம்பித்தன.
நாடக நேரம் 90 நிமிடங்கள்
முதல்வர் வரும் பொழுது வரவேற்பு உரை போல் வசனங்கள் எழுதினேன். பராசக்தி வசனங்களையும் இடையில் சேர்த்தேன். முதல்வர் உல்ளே நுழையும் பொழுதே பேச்சு ஆரம்பமாகிவிடும். அவர் உட்கார்ந்த பின்னும் பேச்சு தொடரும். அதாவது நாடக முக்கிய பாத்திரமான அம்மா பற்றி வசனம். அம்மா என்றால் எப்படி நாம் உருவகித்திருக்கின்றோம் என்று. இந்த வசனத்தை நான் தான் திரை மறைவில் வாசித்தேன்.. அம்மா பற்றிய சில வரிகள் முடியவும் அரங்கத்தில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டேன். மற்ற வசனங்களை ஒரு நடிகை வாசித்தாள்

திரை தூக்கப்படும் பொழுது முழுதாக விளக்குகள் எரியாது. நாற்காலி மேல் ஒளி விழும் அளவு ஏற்பாடு.
அரங்கத்தை நோக்கி உட்கார்ந்திருக்க மாட்டாள். அவள் பின் புறம்தான் தெரியும். ஆனால் அவள் விடும் சிகரெட் புகை மட்டும் வெளியில் வரும். ஆம் அந்த அம்மா அப்பொழுது சிகரெட் குடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவள் திரும்பி எழுந்திருக்கவும் ஒரே கைதட்டல். இடுப்பில் கைலி. காலர் பனியன். பாப் முடியலங்காரம். கையில் சிகரெட். அவள் அலட்சிய பாவத்துடன் நடைபயில்வது  , இப்பொழுதும் அவள் மேல்மட்டும் ஒளிபாய்ச்சப் படும். வசனங்கள் மைக்கில் ஓடிக் கொண்டிருக்கும். அவள் கணவன் விஸ்கி பாட்டுடன் வருவான். இருவரும் உட்கார்ந்து குடிக்க ஆரம்பிப்பார்கள்

இனி உங்களுக்கிடையில் நான் இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு
வசனங்கள் பேசுகின்றவர் நிறுத்திவிடுவார். எல்லா விளக்குகளும் இப்பொழுது எரிய ஆரம்பித்துவிடும். மாடியுள்ள பங்களா செட். கதையில் இந்த அம்மாவின் குணத்தை வசனத்தில் முதலிலேயே கூறப்பட்டு விடும். இத்தனையும் சில வினாடிகளில் முடியும். விளக்குகள் எரிய ஆரம்பிக்கவும் ஓர் கைதட்டு. தொழில் முறை நாடகமாக செய்திருந்தேன்.ஆங்கிலத்தில் ஒரு பாட்டு எழுதியிருந்து அதையும் நான் பாடினேன் repeat the song of joy என்று ஆரம்பிக்கும். வந்தவர்கள் அனைவருக்கும் வியப்பு. ஓர் அரசு நிகழ்ச்சியில் இப்படி ஒரு நாடகமா என்று ஆச்சரியப் பட்டனர்.யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை. லைட் முதல் எல்லாம் நான் சிந்தித்து ஏற்பாடு செய்தது. கதை, வசனம், டைரக்க்ஷன், நடிப்பு, இசை என்று சர்வமும் நானே

முதல் சீன் எப்படியோ அதே போல் கடைசி சீனும் உணர்ச்சி மயமாக அமைத்திருந்தேன். அந்த அம்மாவின் மகள் கொலை செய்யப் படுவாள். பதறிப்போய்க் கத்துவாள். அவலுடைய நல்ல மகன் வந்து அவள் குறைகளைக் கூறுவான். நீ அம்மாவா, நீ அம்மாவா என்ற உனர்ச்சி மிகுந்த வசனங்கள். அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

முதலில் நான் நடிக்க நினைத்தது வேறூ. புடவைத் தலைப்பைக் கிழித்துக் கொண்டு ஓடவேண்டும். நானோ ஓடாமல் , புடவையைக் கிழித்துக் கொண்டு  பயங்கரமாயப் பைத்தியக்கார சிரிப்பை சிரித்துக் கொண்டே கீழே விழுந்து உருண்டேன். என்னை மறந்து இப்படி நடித்தேன். பாத்திரத்துடன் அப்படி ஒன்றிப்போனேன். அரங்கமே கை தட்டலில் அதிர்ந்தது.ஆம், நான் நடிப்பின் உச்சத்திற்குப் போய்விட்டேன்.

இடையில் ஒரு வேடிக்கையும் சேர்ந்தது. அரங்கத்தில் மறைவாக நின்று கொண்டு நாடகத்தைப் பார்த்து வந்த பத்து வயது சிறுவன் அம்மா என்று மேடைக்குள் ஓடி வந்து விட்டான். ஆம் அவன் என் மகன். போலீஸ் வந்து அவனைக் கூட்டிச் சென்றது

நாடகம் முடியவும் வேகமாக அங்கிருந்து விலகினோம். கூட்டத்திற்கு மேடையைச் சீராக்க வேண்டும். கலைஞர் மேடைக்கு வந்துவிட்டார். ஏதோ ஓர் குடும்ப நிகழ்வில் கலந்து கொள்வதைப் போல் சாதரனமாக ஏற்பாடுகளைக் கவனித்தார். அரிதாரம் கலைக்காமல் விழா நிகழ்ச்சிகளைக் கவனித்தேன். முதலில் ஓர் சிரிப்பு கலைஞர் முகத்திலும் சாவி முகத்திலும் கண்டேன். அன்று கலைஞரின் பேச்சு முழுவதும் நாடகம்பற்றித்தான் இருந்தது. வசனங்களை அவ்வளவு அழகாக விமர்சித்தார். சினிமாவிற்கு வசனம் எழுதியே வாழ்க்கையில் முன்னுக்குவந்தவரல்லவா. ஆம் அவர் ஒரு கலைஞர். அவரை நான் அப்படித்தான் இன்றுவரை பார்க்கின்றேன்

“ ஓர் சாவித்திரியை நாம் இழந்துவிட்டோம். நடிப்பு உலகத்திற்கு இவள் வந்திருக்க வேண்டும்” கலைஞர் சாவியிடம் கூறி சாவி என்னிடம் கூறியது. வசிஷ்ட்ர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம். கிடைத்தது போல் ஓர் மன நிறைவு. ஓர் முதல்வர் முன், அதிலும் ஓர் கலைஞர் முன், மேலும் சென்னையில் முக்கியமான கலைவாணர் அரங்கில் தலை நகர பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாநில அளவு அதிகாரிகள், பிரமுகர்கள், பெண்மணிகள் முன் நாடகம் போடுவது எளிதல்ல. மிகச் சிறந்த அனுபவம். இன்றும் மனம் அந்த கணங்களை எண்ணி மகிழ்கின்றது. இனிப்பான நினைவுகள்.

மேடை நாடகத்தில் என்ககேற்பட்ட பெரிய சவாலில் வென்றேன். அதுவே
நான் நடித்த கடைசி நாடகம். என் நாடக வாழ்க்கை அன்று முடித்துக் கொண்டேன். சிகரம் சிகரமாக இருக்கட்டும். மீண்டும் அந்த நாடகத்தைப் போடச் சொல்லி பல இடங்களிலிருந்து வேண்டுகோள் வந்தது. நான் மறுத்துவிட்டேன். ஒரு நாள் அனுபவம் போதும். அந்த ஒரு நாளுக்காக நான் உழைத்தது மூன்று மாதங்கள்.

என்னால் முடிந்ததா? ஆம் முடிந்தது. வென்றேன்

எனது பத்திரிகையுலகு தொடர்பினால்தான் அரசு, அரசியல் இரண்டிலும் உயர் நிலை மனிதர்களிடமும் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. பத்திரிகை பலம் வாய்ந்தது. அதைப் பகைத்துக் கொள்ள விரும்பமாட்டார்கள். முடிந்த மட்டும்பத்திரிகை ஆதரவு பெற்றிட முயல்வர்.

பட்டிக்காட்டுப் பெண்ணிற்கு எப்படி பத்திரிகையுலகத்தில் செல்வாக்கு கிடைத்தது? சில கதைகள் வெளிவந்தால் செல்வாக்கு என்று அர்த்தமா?
வாடிப்பட்டிக்கும் தலை நகருக்கும் தூரம் அதிகம். எப்படி ஒரு சாதாரண பெண்ணால் சாதிக்க முடிந்தது?
நாம் அந்தக் காட்சியைப் பார்க்காமல் இருக்கலாமா?
இனி சீதாவின் பத்திரிகை உலக சகாப்தம் பார்க்கப் போகின்றோம்.
தொடரும்


Monday, February 11, 2013

நினைவலைகள் 22


நினைவலைகள் -22

கதை பேச நினைத்தேன். ஆனால் நாடக உலகம் பிடித்து இழுக்கின்றது.
பிறிதொரு சமயம் கதை பேசலாம்.

பெண் பாத்திரத்திற்கு ஆள் இல்லாததால் ,மனமாற்றம் நாடகம் போய் வரப்புத்தகராறு நாடகம் அரங்கேற்றினர். பெண்பாத்திரம் கிடையாது. நாடகத்தில் நடித்தவர்கள் அனைவரும் அதே வட்டாரத்தில் வேலைபார்த்து வருகின்றவர்களாகும். வெளியிலிருந்து ஆட்களைக் கூப்பிடுவது கிடையாது.

எல்லா கிராமங்களிலும் வரப்புத் தகராறு இருந்தது. அண்ணன் தம்பி சண்டைகளில்  கோர்ட்டுக்குப் போய், ,இருக்கும் சிறிய நிலத்தையும் பறி கொடுப்பார்கள்

சோமமாகாதேவன் இதிலும் மூத்தவராக வருவார். கொன்னவாய்ப் பேச்சு.
அவரைப்போல் கொன்னவாயனாக யார் நடித்தும் நான் பார்த்ததில்லை.
இந்த நாடகத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால் சோழவந்தானில் நாடகம் நடக்க வேண்டிய நேரத்தில் பிரச்சனை கிளம்பிவிட்டது. நாடகத்தை நடத்தவிடவில்லை. வாடிப்பட்டி வட்டாரத்தில் சோழவந்தான் தான் பெரிய கிராமம். நாடகம் என்றவுடன் பக்கத்து கிராமங்களிலிருந்தும் ஆட்கள் வந்து விட்டனர். திறந்த வெளியரங்கு. எம். ஆர். ராதா மாதிரி எங்கள் நாடக மேடைக்குப் பெரிய அலங்காரம் இருக்காது. நாடகம் தொடங்க வேண்டிய நேரத்தில் எழுந்து நின்று ஒரே கூச்சல். அவர்கள் என்ன சொல்லி கத்தினார்கள் தெரியுமா?

 “எங்கள் எஸ் ஈ. ஓ டபிள்யூ அம்மாவை நடிக்கச் சொல்லுங்கள். அந்த அம்மா நடிக்கல்லேன்னா நாடகம் நடத்தவிட மாட்டோம் “

மைக்கில் நான் பேசி சமாதானம் செய்ய முயன்றேன். முடியவில்லை. ஆக நான் நடித்தாக வேண்டும். புதிதாக பெண் பாத்திரம் உருவாக்க வேண்டும். ரிஹர்சல் கிடையாது. என்னுடன் பேசுகின்றவர்கள் சமாளிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்

சட்டென்று ஓர் யோசனை தோன்றி உள்ளே போனேன். கொன்னவாய்ப்
புருஷன் சோம மகாதேவனுக்கு அடங்காப்பிடாரி பொண்டாட்டியாய் நடிப்பது. ஒரு சீன் போதும். மக்களைத் திருப்தி படுத்திவிடலாம்.
எங்கள் நம்பிக்கையைப் பாருங்கள்

இதுதான் சீன்

வீட்டைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றாள். வக்கீலுக்கு வீட்டிலிருக்கும் நெய்ச் சட்டியைக் கொண்டு கொடுக்க விரும்பி அதனை ரகசியமாக எடுத்து மெதுவாக நகர்கின்றான். ஏற்கனவே பொறுப்பில்லாத கணவனைத் திட்டிக் கொண்டு பெருக்கிக் கொண்டிருக்கின்றாள். அவன் போவதைப் பார்க்கவும் விளக்கு மாற்றை வீசி எறிந்துவிட்டு சண்டைபோட ஆரம்பித்துவிடுகின்றாள். அவன் கொன்ன வாய்ப் பேச்சும் இவளின் ஆங்காரமான் பேச்சும் ஜனங்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 கோபத்தை அடக்க முடியாமல் புருஷன் அடிக்க கை ஓங்கி விடுகின்றறன். அவன்தான் தொட முடியாதே!. அவன் அடித்துவிட்டாற் போல் ஒவென்று கத்தி ஒப்பாரிப் பாட்டு பாட ஆரம்பித்துவிடுவாள்

புளியங்கொம்பைத் தேடியல்லோ
புளியங்கொம்பைத் தேடியல்லோ
புவிமேல் தவம் கிடந்தேன்
புவிமேல் தவம் கிடந்தேன்
அடி என்னைப் பெத்த ஆத்தா
நான் பிடிச்ச கொம்பு முருங்கைக் கொம்பா
போனவிதம் கண்டேனே
போனவிதம் கண்டேனே
அடி என்னைப் பெத்த ஆத்தா

இது பெரிய பாட்டு. மேடையிலேயே இட்டுக் கட்டிப் பாடினேன்
இந்த வேஷத்திற்கு பெரிய மேக்கப் தேவையில்லை. ஏற்கனவே கைத்தறி சேலைதான் உடுத்துவேன். புடவைக்கட்டைமட்டும் மாற்றினேன். பின்னால் கொசுவம் வைத்துக் கட்டினேன். தலை முடியை அவிழ்த்து சொருகுக் கொண்டை போட்டுக் கொண்டேன்..

சண்டை ஆரம்பிக்கவும் இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை உதறி
சண்டையை ஆரம்பித்தேன். நாங்கள் இருவரும் எழுத்தாளர்கள். எங்களுக்குள் எங்கள் சாமர்த்தியத்தில் போட்டி. கடைசியில் முடி அவிழ்த்து ஒப்பாரி பாட்டு ஆரம்பிக்கவும் கூடியிருந்த கூட்டம் முழுவதும் ஒரே கைதட்டல். அந்த மணித்துளிகளின் அனுபவங்களை இப்பொழுதும் மனம் அசைபோடும் பொழுது புல்லரிக்கின்றது. நாடகத்தில் நடிப்பது தனி இன்பம்.. தனிப்பட்ட திறமைகளைக் காட்டும் களம்..பார்ப்பவரும் சரி, பங்கு கொள்பவரும் சரி, இருபக்கமும் இன்பத்தைக் கொடுப்பது கூத்து.

மேடையில் ஓர் பெண் ஏறிவிட்டால் பலரின் கவனத்திற்கு வந்து விடுவாள்.
எனக்கும் சிறு சிறு சோதனைகள்  ஏற்பட்டன. ஆனால் என்னுடன் பழகிய இளைஞர்களால் அவைகள் ஆரம்பத்திலேயே பொசுங்கிவிட்டன. ஆனாலும் சில இடங்களில் தீங்கு ஏற்படும் சூழல் வரினும் என்னை அரணாகப் பாதுகாக்க என் தம்பி பெரிய கருப்பன் இருந்தான்.
என் கலைத் திறமையால் எனகேற்பட்ட ரசிகர்கள் அன்று இருந்த நிலையிலிருந்து உயர் நிலைக்குப் போயினும், அவர்கள் என்னைச் சந்தித்தபொழுது மறக்காமல் பரிவைக் காட்டினர்.

மதுரையில் நாடகம் போட வேண்டி வந்தது. இதுவரை கிராப்புறங்களில் தான் எங்கள் நாடகங்கள் நடந்து வந்தன.. வரப்புத்தகராறு நாடகம் தான். அன்று நானும் நடிப்பதாக இருந்தது. எனவே மேடையில் பின் புறத்தில் இருந்தேன். அப்பொழுது என்னிடம் எங்கள் சப் கலெக்டர் வந்து ஒரு
உத்திரவு பிறப்பித்தார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது

Twincle twincle little star

அந்தப் பாடலை ஆனந்த பைரவி ராகத்தில் பாட வேண்டுமாம். உத்திரவுகள் எப்படியெல்லாம் வருகின்றன பாருங்கள்!சங்கீதம் கற்றவள் தான். ஆனால் ராகங்களில் எனக்கு அவ்வளவு பரிச்சயம் கிடையாது.
முடியாது என்று சொல்ல என்னாலும் முடியாது

“ஸார், ஆனந்த பைரவியில் பாடினால் ராகம் மாறினாலும் மாறும். புன்னகவராளியில் பாடட்டுமா? “

“சரி” என்று தலையாட்டிவிட்டு உடனே பாடிக் காட்டச் சொன்னார். நடிப்பு, பாட்டு எல்லாம் திடீர் சோதனைகளாகத்தான் வந்தன. நான் பாடிக் காட்டினேன். அவர் சமாதானம் ஆகவில்லை. மீண்டும் இன்னொரு முறை பாடச் சொன்னார். நான் மீண்டும் பாடிக்காட்டவும் அவர் முகம் மலர்ந்தது.அன்றைய மேடையில் அதிகம் கை தட்டல்களைப் பெற்றது அந்தப் பாட்டுதான். ஆங்கிலப் பாட்டை கர்நாடக ராகத்தில் என்னைப் பாடச் சொன்னவர் திரு. டி. என் சேஷன்.,ஐ.ஏ.எஸ் அவர்கள். அவர் அப்பொழுது எங்களுக்கு சப்கலெக்டராக இருந்தார். தேர்தல் ஆணையா ளராக இருக்கும் பொழுது அவரின் கண்டிப்பான குணத்தை எல்லோரும் அறிவார்கள். அவர் இதயத்திற்குள் கனிவான சங்கீதமும் உண்டு. அவர் பெயர் கேள்விப்படும் பொழுதெல்லாம் இந்த நினைவு வரும்.

அவரைப் போல் திரு எம்.எஸ். திரவியம் , ஐ.ஏ.எஸ் அவர்களும் சப் கலெக்டரக இருந்தார். அவர் காலத்தில் எங்கள் நாடகங்களுக்கு வந்து எல்லோருடனும் தரையில் முன்னால் உட்கார்ந்து நாடகம் பார்ப்பார். அவர் தலைமைச் செயலாளரான பின்னும் பார்த்திருக்கின்றேன். அக்கால நாடகங்களைப் பற்றிப் பேசுவார். நாடகம் மிகவும் சக்தி வாய்ந்தது.

பாட்டு, நடனம், நடிப்பு என்று மேடைகளில் அடிக்கடி தோன்றியதால்
கிராமத்து மக்களிடையே எனக்கும் ரசிகர்கள் அதிகமாயினர். நான் சாதாரணமானவள். மேலும் எங்கள் நாடகங்களும் தெருக்கூத்து போல் இருந்தன.எங்களுக்கே இந்த கவர்ச்சி அலையென்றால்  சினிமாவில் இருப்பவர்களைக் கண்டு மயங்குவதில் வியப்பு ஒன்றும் இல்லை. மக்களின் மயக்கம் சினிமா மனிதர்களை ஆட்சி பீடத்தில் வைத்தது.

தொடரும்



Tuesday, February 5, 2013

நினைவலைகள் 21


நினைவலைகள்  - 21

நாடக அனுபவங்களை நினைத்துப் பார்க்கின்றேன்
கல்லூரி நாட்களில் நான் பங்கு கொண்ட நாடகம் இரண்டு. ஓரங்க நாடகங்கள். ஒன்று கண்ணகி வழக்குரைத்த காட்சி. இன்னொன்று வீரத்தாய். இரண்டிற்கும் வசனம் எழுதியதுடன், கண்ணகியாகவும், வீரத்தாயாகவும் நடித்தேன். மேடை நாடகங்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படியே பாத்திரத்துடன் ஒன்றிப்போய்விடுவேன்

வாடிப்பட்டியில் நான் நடித்த நாடகத்தின் பெயர் மனமாற்றம். சாதாரணக்கதை ஆனால் அர்த்தமுள்ள வசனங்கள். விழிப்புணர்விற்காக
எழுதப் பட்டவை. பார்க்கும் பொழுது அது பிரச்சார நாடகமாகத் தோன்றாது. அந்த அளவில் சோம மகாதேவன் வசனங்களைக் கவனுத்துடன் எழுதுவார்.

கதைச் சுருக்கம்
ஒரு பண்ணையார். பணத்தாசை பிடித்தவர். இரக்கமற்றவர். அவரால் கிராமத்தில் பாதிக்கப் பட்டவர்கள் நிறைய. அவருக்கு ஒரு தம்பி உண்டு அவன் மனித நேய மிக்கவன். ஊருக்கு நல்லது செய்கின்றவன். நல்லதிற்கும் கெட்டதிற்கும் இடையில் நடக்கும் போராட்டங்கள். பண்னையாரின்  மனைவி இறந்து பல வருடங்கள் தனியாக வாழ்ந்து வந்தவர், பின்னர் வயதில் சின்னப் பெண் ஒருத்தியை மணந்து கொண்டார். அவள் நல்ல குணவதி. போராட்ட அலைகளில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள நேரிடுகின்றது. பண்னையார் திருந்துகின்றார்.அவர் இளைய மனைவியாய் நடித்தேன்

நாடகம் தொடங்கும் முன் ஓர் நடனம் ஆடுவேன். அது நாடகத்துடன் சம்பந்தமில்லாதது . உத்தமபுத்திரனில் பத்மினி ஆடிய “காத்திருப்பான் கமலக் கண்ணன் “ ஆட்டம் நான் ஆடுவேன். அக்காலத்தில் கிராமபோன்
கிராமங்களில் இருக்கும். எனவே ரிகார்டு வாங்கி, ஒலிக்கச் செய்து ஆடுவேன். உடனே ரிகார்டு டான்சரா என்ற நையாயாண்டிச் சிரிப்பா? ரிகார்டு டான்சர் என்றால்  அதற்கு நல்ல பெயர் கிடையாது. எனக்கு ரசிகர் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக ஆரம்பித்தது..

கருப்பட்டியில்தான் நடனமும் நாடகமும் முதலில் அரங்கேறின. ஐந்தாவதாக வடுகபட்டி கிராமத்தில் நாடகம் போடும் பொழுது என் தாயாரைக் கூட்டிச் சென்றிருந்தேன். நாடகம் முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது என் தாயார் ஒன்றும் பேசவில்லை. நானும் மவுனமாக இருந்தேன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் “ஓ” என்று கத்தி அழ ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை

என்னம்மா, உடம்பு சரியில்லையா?

உடம்புக்கு வந்து என்னைக் கொண்டு போனா நன்னா இருக்குமே! இப்படி ஒரு பொண்ணைப் பெத்ததுக்கு உயிரோட இருக்கணுமா?

எனக்கு தூக்கிவாரிப்போட்டது

நான் என்னம்மா தப்பு செய்தேன்

இன்னும் என்னடி பாக்கி. எவனோ உன்னைத் தொடறான். கற்பு
போச்சேடி. உனக்கு வெக்கம் மானம் கிடையாதா?

அது நாடகம்மா

என்ன அழவோ, எங்க காலத்துலே புடவைகூட நழுவறது தப்பு,பாவம்னனு சொல்லுவோம். படிச்சுட்டா இப்படி எல்லாத்தையும் உதுத்துடணுமா ? இந்தக் கண்ராவிகளைப் பாத்துண்டு உயிரோடே இருக்கறதவிட செத்துத் தொலைக்கலாம்

நான் திகைத்துப் போய்விட்டேன். நாடகத்தில் மனைவி செத்தவுடன் பண்ணையார், மனைவியின் தலையை மடியில் கிடத்தி குமுறிக் குமுறி அழுவார். அப்பொழுது ஒரு நேரம் தான் தொடல்/ அக்காட்சி அம்மாவை
உலுக்கி இருக்கின்றது.

 இப்போ அம்மாவை சமாதானப் படுத்த வேண்டிய நிலை. நடிக்கவே கூடாது என்றார்கள். எப்படியோ பேசிச் சமாளித்தேன். “இனிமேல் ஆண்களை என்னைத் தொடவிடாமல் நடிக்கின்றேன் “ என்று வாக்குறுதி கொடுத்தேன். பின்னார்தான் அவர்கள் சமாதானம் ஆனார்கள். முழுமனத்துடன் ஒப்புதல் கொடுக்கவில்லை என்று உணர்வேன்.

என் மனம் சமாதானமாகவில்லை. “கற்பு”சாடலின் எதிரொலி ஓர் கதையில் இசைத்தது. பூலோகயாத்திரை என்ற கதையில் கற்புக்கு ஓர் விளக்கம் கொடுத்து எழுதினேன். கதைக்கு ஓர் சிறு பொறி போதும்..

அம்மாவைப் புரிந்து கொள்ள முடிந்தது.  என் அப்பா சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறிச் சென்றுவிட்டார். ஐந்து வருடங்கள் வரவில்லை. அப்பா போகும் பொழுது அம்மாவிற்கு 18 வயது. எனக்கு வயது ஒன்று. என் மாமாவிற்குப் படிப்பு வரவில்லை. எனவே பாட்டியின் பராமரிப்பில் அம்மா, நான் என் மாமா இருந்தோம். .. புருஷனைப் பிரிந்து இருக்கும் சின்னப் பெண்ணைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்தார்கள். அம்மா எங்கும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப் படவில்லை. வீட்டிலே இருந்து அப்பளம் இடுவார்கள். அவர்கள் உலகம் ஓர் சின்ன அறை. கோயிலுக்குப் போக வேண்டுமென்றாலும் பாட்டி அல்லது மாமாவின் துணையுடன் செல்ல வேண்டும்.

எட்டயபுரத்தில் வாழும் பொழுது கூட அயல்வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள். நான் வேலைக்குப் போகவிட்டு என்னுடன் வந்து தங்க ஆரம்பிக்கவிட்டுத்தான் வெளி உலகம் பார்க்க ஆரம்பித்தார்கள்.

வாடிப்பட்டியில் வேலை பார்க்கும் பொழுது வீட்டு வாடகை 15 ரூபாய்.
மாதத்திற்கு அரிசி உட்பட 27 ரூபாய் ஆகும். சந்தைக்குச் செல்லும் பொழுது எட்டணாவிற்கு ஒரு வாரத்திற்குக் காய்கறி வாங்கலாம். அப்பொழுது நான் கைத்தறிப் புடவைதான் உடுத்துவேன். 7 ரூபாய் முதல் 10 ரூபாய்க்குப் புடவை வாங்குவேன். அந்தக் காலச் சூழலும் வாழ்க்கையும் எளிமையாக இருந்தன, ஆனாலும் சில விஷயங்கள் புதிராக இருந்தன.

எங்கெங்கோ திரிந்து , எப்படியோ வாழ்ந்த மனிதர்கள் ஓரிடத்தில் நிலைப்பட்டுத் தனக்குள் அமைத்துக் கொண்ட விதிகள் தளர ஆரம்பித்தகாலம். சில பழக்க வழக்கங்கள் புரியவில்லை என்பதுடன்
சில பிடிக்காமல் போக ஆரம்பித்தது . இன்னும் சில, பிஞ்சு மனத்தில்
முள்ளாக தங்க ஆரம்பித்தது.

என் அப்பாவிடம் பல சிறந்த குணங்கள் இருந்தாலும், சில குணங்கள்
மனத்திற்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல. நாட்டுப் பற்றையும் ,
எளிமையும் கற்றுக் கொடுத்த  அதே மனிதரால்தான் ஆண்வர்க்கத்தின் மீது கோபமும் வளர்ந்தது.. அவருடைய அர்த்தமற்ற முன் கோபங்கள் என்னை முரட்டுப் பெண்ணாக்கியது. அவருக்குக் கோபம் வந்தால் உடனே அடிப்பார். அதே பழக்கம் என்னையும் ஒட்டிக் கொண்டது. அக்குறைகளை விட நான் பட்ட பாடு சொல்லி மாளாது. மாநில அளவில் உயர் பதவியில் இருக்கும் பொழுது கூட கோபத்தில் ஒருவனை அடித்துவிட்டேன்.

அடுத்து அம்மாவின் அசட்டுத்தனம். கோபத்தில் அம்மாவை அப்பா அடிப்பார். ஆனால் அம்மா அவரைச் சுற்றி வந்து நமஸ்காரம் செய்து மன்னிப்பு கேட்பாள். தவறு செய்பவர் ஆண். பெண் ஏன் அர்த்தமில்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும்?. அம்மாவிற்கு அப்பா ஒரு தெய்வம். அக்காலத்தில் பெண்ணுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம். . இதை நான் எழுதும் பொழுது இப்படியெல்லாம் இருக்காது என்று  இக்கால தலை முறைகளில் சிலருக்குத் தோன்றுகின்றதா?

பெற்றோர்கள் செய்யும் சில அசட்டுக் காரியங்கள் பிள்ளைப் பருவத்தில் குழந்தைகளின் மன வளர்ச்சியை எவ்வளவு பாதிக்கின்றது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இன்றும் எத்தனையோ வீடுகளில் தெரியாமல் நடக்கும் இது போன்ற பிழைகள் தொடர்கின்றன.

சமுதாயம் மாறத் தொடங்கிய காலத்தில் பிறந்தவள் நான். பெண்ணை அடக்கி வைத்தவனும் ஆண். அவளிடம் சுதந்திர உணர்ச்சிக்கு வித்திட்டவன் ஆண். பாரதிக்கு முக்கிய பங்குண்டு. அவன் ஊர்க்காரி
,மாறியதில் என்ன வியப்பிருக்கும்?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு நாய்களுக்கு போடச் சொன்னான்.
வெட்கம் கெட்ட பெண்ணை நினைத்துப் பாருங்கள். உங்களால் ரசிக்க முடிகின்றதா? ஆண் ரசிக்க வேண்டும் என்பதற்காகப் பெண்ணுக்கு நாணம் வேண்டுமா? பெண் இப்படி கேட்பதைவிட ஆணே இப்படி கேட்கின்றான். மனிதன் பல சமயங்களில் முட்டாளாகி விடுகின்றான்.
தான் பேசுவது, செய்வது தனக்கே தீமையாகி விடும் என்று ஆரம்பத்தில் உணர்வதில்லை. நாம் போடும் பல வளர்ச்சித் திட்டங்களிலும் சில பாதகம் செய்திருக்கின்றன.

தவறு செய்வது நாம் மட்டும் தானா? கடவுளை நினைக்கின்றேன்.அவரும் தவறுகள் செய்திருக்கின்றார். நான் கடவுளை நம்புகின்றவள். ஆனலும் அவர் மீதும் கோபம் வரும். அடிக்கடி மனக் கூண்டில் அவரை நிறுத்திக் கேள்விகள் கேட்பேன். இக்குணமும் சிறு வயது முதல் ஆரம்பம். என் கதைகளில் அநேகமாக உளவியலை ஒட்டி வரும். முதல் கதையின் பெயரே “உயிர் மேல் ஆசை”. என் கதைகளில் விகடனில் முத்திரை பெற்ற கதையின் பெயர் “ ஆசைப்பந்தல் “
இப்படி மனத்தைக் காட்டி எழுதும் பொழுது கடவுளையும் வம்புக்கிழுக்க ஆரம்பித்தேன். பல கதைகளில் பரமன் நாயகராக வருவார். அவரைப் பாடாய்ப் படுத்த காட்சிகளை அமைப்பேன். அவரோ விளையாட்டாய் வந்து விட்டு என்னை நோக்கி ஒரு கேலிப் புன்னகை வீசி விட்டுச் சென்று விடுவார். அவர்தான் தீராத விளையாட்டுப் பிள்ளையாச்சே!

அம்மா வால் வீசப் பட்ட சொல்லம்பு “ கற்பு “, என் கதையில் கொண்டு வந்து எழுத்தால் சாடினேன். பரமனைச் சாட்சியாக உட்கார வைத்தேன்.
அந்தக் கதையின் பெயர் “ பூலோக யாத்திரை”. நாமும் கொஞ்ச நேரம் கதை பேசலாமே! அடுத்து பேசுவோம்
அலைகள் மீண்டும் வரும்.
.
.



Saturday, February 2, 2013

வணங்குகின்றேன்


                          வணங்குகின்றேன்
                          ------------------------
நினைப்பதெல்லாம் நடக்குமா?
ஏற்கனவே மனிதன் தன் கால் போன போக்கில் சென்று கொண்டிருக்கின்றான்.
மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக் கொண்டிருக்கின்றது
மீண்டு வருவோமா அல்லது மாண்டு போவோமா?
சிந்தனைச் சுழல் என்னைச் சூறாவளியாய் சுற்றிக் கொண்டிருக்கின்றது.
ஆர்வத்துடன் ஆரம்பித்த வலைப்பூ
முதுமையின் தள்ளாட்டம். உதவிக்கரம் நீட்டியவர்களும் இருப்பது திண்டாட்டம். நான்கு மாதங்களுக்கு மேலாக வரவில்லை. இனி தொடர்ந்து இதில் பயணம் செய்ய விரும்புகின்றேன். காலம் எனக்கு சக்தியைக் கொடுக்கட்டும்
நான் வலம் வந்த குழுமங்கள் எத்தனை எத்தனை?!
அதுவும் முடங்கியது
எழுதுவதிலும் தள்ளாட்டம். ஆனாலும் வீழாமல் ஒன்றில் மட்டும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
திண்ணையில் என் தொடர் கடந்த 43 வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றது
ஓர் வரலாற்றுத் தொடர்
ஆம் நம் வரலாறு
நம் வாழ்வியல் வரலாறு
இந்த வலைப்பூ எனது பெட்டகம்
என் எண்ணங்களை என் படைப்புகளைச் சேமித்து வைக்கும் மனச் சிமிழ்
இனி தொடர்ந்து வருவேன்.
நம்பிக்கை கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வாசகர்கள் வருவார்கள்
இனி அடிக்கடி சந்திப்போம்