நினைவலைகள்-12
வாடிப்பட்டி வட்டரத்தில் சோழவந்தான் பகுதி எழில் நிறைந்த பகுதி.பச்சை பசேலென்று வயல் வெளிகள். காற்றிலே சிலிர்க்கும் நெல் பயிர்கள் நம் மனத்தை வருடி அங்கே உட்காரச் சொல்லும். வரப்புகளில் உட்கார்ந்து அவைகளுடன் பேசுவேன். பாரதி பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பேன். அக்கரையில் தென்கரை. தென்னை மரங்கள் உயர்ந்து நின்று நம்மை வரவேற்கும். இந்த வேலை கிடைத்ததில் நான் அதிருஷ்டசாலி. என் ரசனைகளுக்கேற்ற பணி. என் திறமைகள் அனைத்தும் பயன்படுத்த முடிந்த அற்புதமான பணி. ஒவ்வொருவருக்கும் தன் வேலையில் திருப்தி இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் பணிகளும் சிறக்க முடியும். சிலருக்குத்தான் விரும்பியவை கிடைக்கும்.
வயலில் புதுமுறை நடவு; ஜப்பானீய முறை நடவு. முதல்நாளே சோழவந்தான் சென்று கிராம நல ஊழியர் முத்தையா வீட்டில் தங்கினேன். அதிகாலையில் நானும் அவரும் புறப்பட்டு வயலுக்குச் சென்றோம்.
நான் வயலில் இறங்க வேண்டும். இந்த சேலைக் கட்டில் இறங்கி வேலை செய்ய முடியாது. இதனை அறிந்து மாற்றுடை எடுத்து வந்திருந்தேன். ஒதுக்குப்புறமாக இருந்த ஓர் மரத்தின் பின் சென்று சேலைக் கட்டை மாற்றிக் கொண்டேன். கிராமத்துப் பெண்கள் என்னை வியப்புடன் பார்த்தனர். இப்பொழுது அவர்களில் நான் ஒருத்தி.
வயலில் இறங்கும் பொழுது கொஞ்சம் கஷ்டம். பிடித்து இறக்கி விட்டனர். ஏற்கனவே கிராம நல ஊழியர் இன்னொரு பக்கம் இருந்தார். நாங்கள் நாத்தை எடுத்து வரிசையாக நட ஆரம்பித்தோம். எங்களைப் பார்த்து மற்றவர்களும் செய்தார்கள். இரு வரிசை முடியவும் நான் மேலே வந்து விட்டேன். மற்றவர்களுக்கு இப்பொழுது சுலபமாக நட முடிந்தது.
அவர்களை நடவுப் பாட்டு பாடச்சொன்னேன். அவர்கள் பாடிக் கொண்டே அசைந்து அசைந்து நாத்து நடுவதும் எனக்கு நாட்டியமாகப் பட்டது. நாட்டுப்புறப்பாடல்கள் எத்தனை வகைகள்!. வேலையின் கடினம் தெரியாமல் இருக்க ஏற்றப்பாட்டு முதல் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு பாட்டு. மனிதன் இசையுடன் இசைந்து வாழ்ந்திருக்கின்றான். ஆனால் இப்பொழுது அந்த இசை எங்கே? பாட்டுப் பெட்டிக்குள் அடங்கி விட்டது. தாலாட்டு நாம் ரசிப்போம். தாலாட்டைவிட ஒப்பாரிப் பாட்டு மிகவும் அருமை. தாலாட்டில் வம்சத்தின் பெருமைகளும் பிள்ளை மேல் கொண்ட ஆசையும் வரும். ஒப்பாரியில் இவைகளும் வரும். அத்துடன் வயிற்றெரிச்சல் முதல் எண்ணுகின்ற எல்லாம் கொட்டலாம். நான் பார்த்த பணியில் ஒவ்வொரு வினாடியும் உயிரும் உணர்வும் கலந்து வாழ்ந்தேன்.
அங்கிருந்து நானும் முத்தையாவும் புறப்பட்டு புதிதாகக் கட்டி முடித்திருந்த ஹரிஜன காலனிக்குச் சென்றோம். ஹரிஜனங்களுக்குப் புதிய குடியிருப்பு வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வந்த திட்டம். பல திட்டங்கள் சிறந்த நோக்கத்துடன் தீட்டப்படும். எக்கட்சி ஆட்சிக்கு வரினும் அவர்கள் காலங்களில் சில புதிய திட்டங்கள் வரும். ஆனால் நடை முறைப்படுத்தும் பொழுது சில குறைகள் நேர்ந்துவிடுகின்றன. அவைகளில் சில பார்ப்போம். நம் குறைகளைப்பற்றிப் பேசுவதில் தவறில்லை. அவைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாமே.
அன்று ஹரிஜன காலனி கட்டும் பொழுது ஊருக்கு ஒதுப்புறமாக இருந்த புறம்போக்கு நிலங்களில் கட்டடங்கள் அமைந்தன. இருக்க இடம் கொடுக்கும் நோக்கமாக அப்பொழுது இருந்தது. ஆனாலும் அவர்களை சமுதாயத்தை விட்டு நாமும் தள்ளியே வைத்தோம். ஊருக்குள் அவ்வளவு பெரிய இடம் இருக்காது, அல்லது ஊரார் விரும்பார். இப்பொழுது சமத்துவபுரம் வீடுகள் வருகின்றன. எனக்கு முழுமையாகத் தெரியாது. ஆனாலும் தெரிந்த மட்டில் அற்புதமான திட்டம். இதில் அக்கறை குறைந்தால் நோக்கம் சிதறிவிடும். உயர் ஜாதியுடன் பல ஜாதி மக்களும் கலந்து வாழும் திட்டம். முதலில் குழந்தைகள், பின்னர் பெண்கள் சேர்ந்து வாழும் இடம். சாதி காழ்ப்புணர்ச்சி மாற வாய்ப்புள்ளதிட்டம். ஆனால் சில ஜாதிகளில் குடி வராமல் இருந்தாலோ, அல்லது இடம் மாறிச் சென்றாலோ , பின்னர் இஷ்டம் போல் குடிவைக்க ஆரம்பித்து விட்டால் நோக்கம் சிதறிவிடும்.
கட்சி எதுவாயினும் அவரவர் காலத்தில் நல்ல நோக்கத்துடன் சில திட்டங்கள் ஆரம்பிக்கின்றார்கள். அவைகளை அரசுப் பணியாளர்களும் அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும். அவ்வப்பொழுது ஆய்வு செய்து குறைகளை நீக்க வேண்டும். சத்திரத்து சமையல்காரர்கள் போல் ஆகிவிடக் கூடாது. நாட்டுப்பற்று எல்லாத் தரப்பினர்களிடமும் குறைந்து வருவதை மறுக்க முடியாது. அரசியல்வாதிகளையே குறை கூறிக் கொண்டிருக்கின்றோம். சுயநலமும் சுரண்டலும் எங்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. ஒரு நாள் எல்லோரும் சேர்ந்துதான் வீழ்ந்துமடிவோம்.
இன்னொரு உதாரணமும் காட்டுகின்றேன். சென்னையில் குடிசைகள் நீக்கி கட்டடங்கள் கட்டி குடியிருப்பு செய்கின்றோம். கொத்தவால்சாவடியிலும், கப்பல்களிலும் கூலி வேலை செய்கின்றவர்களை ஆதம்பாக்கம் போன்ற தூரத்தில் குடியிருப்பு வைத்தால் அவர்கள் தொழில்கள் செய்ய முடியாது. குற்றங்கள் மலியும். எனவே புதுக்குடியிருப்புகள ஏற்படுத்தும் பொழுதும் கவனம் தேவை.
பயணத்துடன் ஆங்காங்கே இது போன்று கொஞ்சம் மாறிச்செல்ல வேண்டியிருக்கின்றது. உடனுக்குடன் ஒத்த விஷயங்களைப் பேசினால்தான் அதற்குரிய நல்ல பலன் கிடைக்கும். நான் கதை சொல்ல வில்லை. ஒரு ஊரில் ராஜா இருந்தார் என்று ஆரம்பித்து கல்யாணம், பிள்ளைப் பேறு என்று வரிசையாகச் சொல்ல முடியாததற்குக் காரணம், இது சமுதாய வரலாறு. குறைகளைக் காட்டி, முடிந்தமட்டும் சில ஆலோசனைகளையும் அவ்வப்பொழுது சொன்னால் பலன் கிடைக்கும். குறை கூறுதல் எளிது. ஒருவர்மேல் ஒருவர் குற்றம் கூறுவதும் சுலபம். ஆனால் இது கூட்டுப்பொறுப்பு. அரசியல்வாதிகள் திட்டம் தீட்டுகின்றனர். அரசுப் பணியாளர்கள் செயல்படுத்த ஆவன செய்கின்றர்கள். ஆனால் பணிகள் களத்தில் செய்வது யார். மக்கள், காண்டிராக்டர்கள். தவறு காணும் பொழுது மக்கள் உடனுக்குடன் கேட்க வேண்டும். இதைப் படிக்கவும் உங்கள் முணுமுணுப்பு கேட்கின்றது. நாங்கள் சொன்னால் யார் கேட்பார்கள் என்றுதானே. நம் சக்தி நமக்குத் தெரியவில்லை.நமக்குள் ஒற்றுமையில்லை. சின்ன ஆதாயம் கிடைத்தால் நாம் பிரிந்து விடுகின்றோம். தப்பு இல்லையா? அதனால்தான் கூறுகின்றேன். நடக்கும் தவறுகளுக்கும் எல்லோரும் பொறுப்பு. வாய்பேசாமல் ஒதுங்கி இருப்பவர்களுக்கும் பொறுப்புண்டு. யாரும் தங்கள் கடமையைத் தட்டிக் கழிக்கக் கூடாது.
பயணம் தொடருவோமா?
அன்று மாலை மகளிர் மன்றம் சென்றேன். ஏதோ அதற்குத் தனிக்கட்டடம் என்றோ, பெரிதாகக் கூட்டம் என்றோ இல்லை. ஒரு விட்டீல் கூடிப் பேசுவோம். அந்த மகளிர் மன்றத்தில் எல்லோரும் ஏதோ கூலி வேலை செய்கின்றவர்கள். நான் சென்றால் அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சி. பல பிரச்சனைகளைக் கொண்டு வருவார்கள். கூலி வாங்கும் இடத்தில் பிரச்சனைகள். என்னிடம் சொன்னால் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று பிரச்சனைகளைத் தீர்ப்பேன். குடும்பச் சண்டை என்றால் புருஷன் ,பொண்டாட்டியை கூட்டி வைத்துப் பேசுவேன். ஒரு வீட்டுக் குப்பையைப் பக்கத்து வீட்டும் பக்கம் போடும் சண்டையும் வரும். நோய்கள்பற்றியும் வரும். வாரம் ஒரு முறை தவறாது அங்கு போவது என்று வைத்துக்கொண்டிருந்தேன். அர்த்தமற்று பக்கத்து வீட்டுக் காரியுடன் போடும் சண்டைகளுக்கு பஞ்சாயத்து வைப்பது ஒவ்வொரு வாரமும் நடக்கும்.
வாழ்க்கையில் எத்தனை கோணங்கள்? எல்லாம் படிப்பினைகள்!
மேலக்கால் கிராமம் போக வேண்டிய வேலை வந்தது. அங்கு சென்று வேலையை முடித்துவிட்டு முனியம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். அவ்வூர் போனால் மதியச்சாப்பாடு அங்கேதான். அன்று போன பொழுது அவள் வீட்டில் புதிய இளைஞன் ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான். அவன் யார் என்று விசாரித்தேன்.
“என் மவன் பெரிய கருப்பன்”
“இதுவரை பார்த்ததில்லையே!”
“ஆமாம் அவன் ஜெயிலுக்குப் போய்ட்டு இப்போத்தான் வந்தான். ஆறு மாசமா ஜெயில்லேதான் இருந்தான்.“
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஆனால் முனியம்மாள் சாதாரணமாகச் சொன்னாள். வாடிக்கையாகிப் போன ஒரு விஷயம்போல் பேசினாள். இதுவரை தன் மகனைப்பற்றி எதுவும் சொன்னதில்லை.
“ஏன் ஏதாவது திருடினானா?“
“இல்லேம்மா, எங்க எசமான் ஒருத்தரை வெட்டச்சொன்னாரு. இவனும் போய் வெட்டினான். சாட்சி சரியில்லைனு விட்டுட்டாங்க”
நான் பேசமுடியாமல் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். முதல் அனுபவம். அதைப்பார்த்து அவளே தொடர்ந்து பேசினாள்.
“எங்க ஊர்ப்பக்கம் இது சாதாரணம். எங்க முதலாளிங்க என்ன சொன்னாலும் செய்வோம். சாப்பாட்டுக்கு அய்யா ஒரு குறவும் வைக்கமாட்டாருங்க, எங்களுக்கு எல்லாம் எங்க எஜமான்தான்.”
இதுதான் கொத்தடிமை வந்த வழி; இவர்கள் ஹரிஜனங்களில் ஒரு பிரிவினர்.
முனியம்மா மகனை எழுப்பினாள். அவனும் தள்ளாடிக் கொண்டே எழுந்திருந்தான். குடித்துவிட்டுப் படுத்திருந்திருக்கின்றான். முணுமுணுத்துக்கொண்டே எழுந்தவன் ஒரு புதியவளைக் கண்டதும் விழித்தான். முனியம்மாதான் பேசினாள்.
“கருப்பா, கடைக்குப் போய் ரெண்டு வடை வாங்கிட்டுவாடா அவங்க சாப்பிடணும்”
“ஹூம்” கொட்டிவிட்டு வீட்டுக்குப்பின்னால் சென்றான். என்னைவிட நான்கு அல்லது ஐந்து வயது பெரியவனாக இருப்பான். குழந்தை முகம். இவன் அம்பு. எய்கின்றவன் எவனோ!?. கொலைகாரனாக்கப் பட்டவன். அவன் தொழில் அது. இந்தப் பெரியகருப்பன் என் வாழ்க்கையில் இன்றியமையாதவனாகப் போகின்றான் என்பது அப்பொழுது நான் உணரவில்லை.என் நினைவில்லத்தில் முக்கியமானர்களுடன் இவன் இருக்கின்றான். இன்றும் எனக்குள் வாழ்கின்றவனை உங்களுக்கு இப்படி அறிமுகப் படுத்த வேண்டி வந்துவிட்டதே என்று வருந்துகின்றேன்.
கருப்பன் வடை வாங்கி வந்ததும், சாப்பிடும் பொழுது அவனுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தேன்,. அவ்வளவுதான். “அக்கா,” என்று கூப்பிட்டான். ஏனோ அவன் மீது ஓர் பாச்ம் பிறந்தது. சில உணர்வுகளுக்கு நமக்கே அர்த்தம் தெரியாது. வயதில் மூத்தவன். ஆனால் எனக்கு அவன் தம்பி. இனி அவன் என்னைத் தொடர்ந்து சில காலம் வருபவன் அப்பொழுது நீங்களும் அவனைப் புரிந்து கொள்வீர்கள்.
வாடிப்பட்டியில் என் வீட்டில் உட்கார்ந்திருந்தேன். என் தோழி சரோஜா வந்தாள். அவள் முகத்தில் கலவரம். ஏதோ சொல்லத் துடிக்கின்றாள். ஆனால் தயக்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
“என்ன சரோ, சொல்ல நினைப்பதைச் சொல்லு. எதுவானாலும் சொல்லு”
சரோ மெதுவாகச் சொன்னாள். செய்திகளைக் கேட்டவுடன் சத்தம் போட்டுச் சிரித்துவிட்டேன். அவளுக்கோ அதிர்ச்சி. அவள் சொன்னது. என்னைபற்றியது. பெரிதாக இரு வதந்திகள். அசிங்கமாகப் பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். அதைச் சொல்லத்தான் அவள் தயங்கி இருந்திருக்கின்றாள். செய்தி கேட்டால் நான், பயப்படுவேன், அழுவேன் என்று நினைத்திருக்கின்றாள். நானோ சிரித்தேன்.
திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்
எனக்குள் பாரதி குரல் கொடுத்துக் கொண்டிருந்தான்
(அலைகள் மீண்டும் வரும்)