Wednesday, February 29, 2012

நினைவலைகள் 9

நினைவலைகள் -9

காந்தி கிராமம்

காந்தியின் பெயரில் இருந்ததால் என்னவோ எளிமையும் அழகும் ஒருங்கிணைந்த ஓர் அமைதிக்குடிலாக அமைந்திருந்தது. இப்பொழுது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன

அங்கே பல பயிற்சிகள் நடைபெற்று வந்தன.அனாதரவான பெண்களுக்குச் சேவை இல்லமும் இருந்தது. அந்த இடத்தையொட்டி சிறிது தள்ளி கிராமிய வளர்ச்சிப் பல்கலைக்கழகமும் இருந்தது. காந்தி கிராமத்தை அப்பொழுது நிர்வகித்து வந்தவர் டாக்டர். திருமதி சவுந்தரம் ராமச்சந்திரன் ஆவார்கள். மதுரையில் அக்காலத்தில் கோலோச்சி வந்த டி.வி.எஸ் குடும்பத்தின் மகள். மத்திய அரசிலும் அமைச்சராக இருந்தவர்கள்.காந்தீய வழியில் எல்லாம் நடந்து வந்தன

பயிற்சிக்கு வந்தவர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வேலைகள் தரப்பட்டன. அதிகாலையில் எழுந்து அந்த இடம் முழுவதையும் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகளைக் கொட்ட முதலிலேயெ உரக்குழிகள் வெட்டி அதில்தான் போட வேண்டும். இந்தக் குழிகளையும் நாங்கள் தான் ஏற்படுத்த வேண்டும். நீளம் அகலம், ஆழம் எல்லாவற் றிற்கும் ஒர் கணக்கு.

இந்தக் குழிகள் மட்டுமல்ல, கழிப்பறைக்கும் குழிகள் தோண்ட வேண்டும். வார்தா கக்கூஸ் என்று பெயர். குழி தோண்டவிட்டு, இரு நீண்ட அகலமான பலகைகள் குறுக்கே போடப் பட்டு. அது அறையாகித். தட்டிகள் வைத்து மறைக்கப் பட்டிருக்கும். மலம் கழித்த பின் பக்கத்தில் குவித்து வைத்திருக்கும் மண்ணை அள்ளி அதில் போட வேண்டும். இதுதான் எங்கள் கழிப்பறை. மூடப்பட்ட பின் ஆறு மாதங்களில் இது உரமாகிவிடும். குப்பைக் குழிகள், மலக் குழிகள் ஆகிய இடங்களை ஆறு மாதங்கள் கழித்துதோண்டி உரத்தை, அருகில் இருந்த வயல்களில் போட வேண்டியதும் எங்கள் பணி. அக்காலத்தில் நாங்கள் யாரும் முகம் சுளித்தது கிடையாது. சாதி, அந்தஸ்து என்ற பேச்சிற்கு இடமில்லை

காய்கறி வெட்டுவது முதல் பாத்திரம் கழுவும் வரை நாங்கள் தான் வேலை செய்ய வேண்டும். சமையலில் பாத்திரத்தை அடுப்பில் தூக்கி வைத்து இறக்கவும். மாவு ஆட்டவும் பணியாளர்கள் உண்டு. மற்றபடி எல்லாப் பணிகளும் நாங்கள் செய்வோம். இத்தனையும் முடித்துவிட்டு வகுப்பறைக்குச் செல்வோம்.

கிராம வளர்ச்சிக்கு அரசு என்னவெல்லாம் திட்டங்கள் கொண்டு வந்திருந்ததோ எல்லாவற்றையும்பற்றி எங்களுக்கு அடிப்படை

விஷயங்களைக் கற்றுக் கொடுத்தனர். மக்களிடை விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணி என்பதால் முதலில் நாங்கள் அவைகளைத் தெரிந்து கொள்ள பயிற்சி அளிக்கப் பட்டது.உதாரணமாக அப்பொழுது விவசாயத்தில் ஜப்பானிய நடவு முறை அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது. அதாவது வயலில் நாத்து, வரிசையாக நட வேண்டும். நாங்களும் வயல்களில் இறங்கி நாத்து நடக் கற்றுக்கொண்டோம்.. இதே போன்று பல துறைகளைப் பற்றி வகுப்புகள் நடத்தியதுடன் நடைமுறைப் பயிற்சிகளும் கற்றுத்தந்தனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்த எந்த வகைகளில் எல்லாம் மக்களிடம் செல்லவேண்டும் என்பதற்கும் முறைகள் கற்றுத் தரப் பட்டன

(communication skill). படங்கள் வரைவது முதல் பொம்மலாட்டத்திற்கு பொம்மைகள் செய்து அதை இயக்கும் முறைகள் வரை பல கற்றுத்தரப்பட்டன.

பக்கத்து கிராமங்களுக்கு அழைத்துப் போய் தங்க வைப்பார்கள். எந்த வசதியும் எதிர் பார்க்கக் கூடாது. மக்களோடு மக்களாக இருக்கவேண்டும்.

பயின்றதை அங்கே செய்ய வேண்டும். வீடுகளுக்குப் போய் எப்படி பேச வேண்டும், பழக வேண்டும் என்பதும் கற்றுத்தரப் பட்டது.

ஒன்றைக் குறிப்பிட விருன்புகின்றேன். அன்று இப்படி கழிப்பறை வசதிகள் கூட இல்லாத காலத்தில் வாழக் கற்றுக் கொடுத்தது சரி. அது இந்தக் காலத்திலும் அதன்படி இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

அதே நேரத்தில் இத்தகைய முறைகளில் பயின்றதால் கிராமங்களில் எங்களால் இயல்பாய்ப் பழக முடிந்தது. கிராமத்தினரும் அவர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். மனம் பண்பட கழிப்பறை, உரம் அள்ளுதல் தவிர சிலவற்றிலாவது பயிற்சி முறைகள் தொடர்ந்திருக்கலாம். கல்லுரிகளிலிருந்து நேரடியாக வருபவர்கள் கிராமத்துடன் ஒன்றத் திணறுகின்றனர். பழகினால் தானே நாம் அவர்களுடன் ஒன்றி நாம் நினைக்கும் வழிக்குக் கொண்டு வர முடியும்.

காந்திகிராமத்தில் யாராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு உண்டு. அதுதான் சர்வோதயப் பிரார்த்தனை. பெரிய ஓலைக் கொட்டகை. மாலையில் அங்கே குறித்த நேரத்தில் போய் . சதுரமாக உட்கார வேண்டும். முன்று பக்கங்களில் பயிற்சியாளர்கள். ஒரு பக்கம் பிரார்த்தனையை வழி நடத்துபவர்கள் இருப்பார்கள். தினமும் ஒரு சொற்பொழிவும் இருக்கும். பேசுகின்றவரும் அங்கே உடக்கர்ந்திருப்பார்.

எல்லாமதங்களிலிருந்ததும் எடுத்துக்காட்டுகள் கூறி, வாழ்க்கையின் நன்னெறிகளைப் பற்றிப் பேசுவார்கள்

இங்கே ஒரு செய்தி கூற விரும்புகின்றேன். பெரும்பாலும் எங்கள் பிரார்த்தனையை வழி நடத்தியவர் செல்வி சியாமளா .அவர்கள் வேறு யாருமல்ல. நாட்டியத் தாரகை செல்வி பத்மா சுப்பிரமணியத்தின் அண்ணியாவார். சியாமளாவிற்கு அப்பொழுது திருமணம் ஆகவில்லை. பின்னர் நாட்டுப் புற இசையில் ஆய்வு செய்தார். கிராமங்களுக்குச் செல்லும் பொழுது ஆய்வில் சிறிது காலம் உடன் சென்றவர் இசைஞானி இளையராஜா அவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கின்றேன். திருமதி சியாமளா பால கிருஷ்ணன் அவர்களின் குரலை எங்களால் மறக்க இயலாது. பாடல்களும் இன்னும் ஒலித்துக் கொண்டிருகின்றது.

வி. வி. சடகோபன் அவர்கள்அப்பொழுது சங்கீத வகுப்பிற்குப் பொறுப்பானவர். அவர் ஒரு சங்கீத மேதை. என்னை எப்பொழுதும் திட்டுவார். காரணம் என் குரலை நான் கெடுத்துக் கொள்கிறேனாம். நான் முறைப்படி சில ஆண்டுகள் கர்நாடக சங்கீதம் கற்றிருந்தேன். ஆனால் சினிமாப் பாட்டுகள் தான் அதிகம் பாடுவேன். அதுவும் பாடகியின் குரலைப் போல் என் குரலை மாற்றி மாற்றிப் பாடுவேன்.ராஜேஸ்வரி என்று ஒரு பாடகர். அவரைப் போல் குழந்தைக் குரலிலும் பாடுவேன். சாதாரணமா ஐந்தரைகட்டை சுதியில் பாடி வந்தவள். மீரா சினிமாப் பாடல்களை அற்புதமாகப் பாடியவள். ஆனால் இப்படி பாட ஆரம்பித்ததால் என் குரல்வளம் போயிற்று. அவர் சொன்னது சரி. அக்காலத்தில் கொஞ்சம் மாற்றிப் பாடினாலும் வித்துவான்களுக்குக் கோபம் வந்துவிடும்.

சங்கீத உலகில் ஜி. என். பி கொஞ்சம் மாறுதலைக் கொண்டு வந்தார். நிறைய விமர்சிக்கப்பட்டார். இசைக்குயில் எம்.எஸ் அவர்களையே இராகத்திற்காக வார்த்தைகளைச் சுத்தமாகப் பாடுவதில்லையென்று கூடப் பேசினர். டி. கே பட்டம்மாள் சுத்தமாகப் படுகின்றார் என்பார்கள். அப்படி பேசுங்காலத்தில் என்னை எப்படி சகித்துக் கொள்வார்கள்.!?

எங்கள் அம்மா ( அப்படித்தான் அழைப்போம் ) காங்கிரஸ் கட்சியில் பெரிய பதவியில் இருந்ததால் அக்காலத்து பல காங்கிரஸ் தலைவர்கள் காந்தி கிராமத்திற்கு வருவார்கள். நேருஜி அவர்கள் வந்த பொழுது பக்கத்தில் நின்று பார்க்க முடிந்தது எங்களுக்குப் பெருமையாக இருந்தது.

என் வாழ்நாளில் காந்திஜியை நேரில் பார்க்க முடியாத குறை இன்னும்

எனக்குள் இருக்கின்றது. அம்மாவின் கணவரின் பெயர் உயர்திரு ராமச்சந்திரன் . அவர் ஆங்கிலத்தில் பேசினால் நாங்கள் அப்படியே வியந்து அவரைப் பார்த்துக் கொண்டு நிற்போம்.. அங்கு இருந்த ஐந்து மாதங்களும் கடுமையான உழைப்பிலும் களிப்பாக வாழ்ந்து வந்தோம். இந்தப் பயிற்சி எங்களை கிராமப் பணியில் சிறப்பாக இருக்க உதவியது. பின்னால் எங்கள் துறைக்கு ஒரு பெரும் சோதனை வந்த பொழுது காந்திகிராமப் பயிற்சி முறைகளைக் கூறிப் போராடினேன்.

இதே போன்ற ஓர் பயிற்சி மையம் கல்லுப் பட்டியில் உயர்திரு குருசாமி அய்யா தலைமையில் இயங்கி வந்தது. ஆனால் காந்திகிராமம் மாதிரி நிறைய பயிற்சிகள் இல்லை. சில பயிற்சிகளே கற்றுக் கொடுக்கப் பட்டன. என் துறையில் அடிக்கடி பல பயிற்சிகள். பல workshopsதிட்டங்கள் வரும். பொதுவாக பயிற்சி என்றால் பெண்கள் போகத் தயங்குவர். நான் தயங்கியதே இல்லை. எனவே நான் பெற்ற பயிற்சிகள் கொஞ்சமல்ல.

எங்கள் பயிற்சி முடியுங்காலத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. பயிற்சிக்கு வரும் முன்னர் எல்லோருமே குறுகிய காலம் ஏதாவது ஒரு வட்டாரத்தில் வேலை பார்த்து விட்டே வந்திருந்தனர். பல கசப்பான செய்திகள், அனுபவங்கள் எங்களில் பலரை உள்ளுக்குள் குழப்பி இருந்தன. பயிற்சியாளர்கள் பொதுப்படையாக கற்றுத்தந்தனர். ஆனால் எங்கள் கேள்விகளுக்கு விடைகள் பாடங்களில் இல்லை. அம்மாவைச் சந்தித்துப் பேசலாம் என்று சிலரிடம் கூறினேன். பெரிய இடத்தில் பேசும் விஷயமா

என்று சிலர் எதிர்க் கருத்து கூறினர். ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். என்னுடன் சிலர் வந்தார்கள்.

எப்பேர்ப்பட்ட சந்திப்பு.

எங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பொறுமையாகப் பதில்கள் கூறினார்கள். சொல்லப் போனால் கேட்காத சில பிரச்சனைகளையும் விளக்கி ,சமுதாயப் பணி செய்யப் போகின்றவர்களின் அணுகுமுறைகள்,

செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டுமென்று சொன்னார்கள்.

அர்ச்சுனனனுக்குக் கிடைத்த துரோணாச்சரியர் போல் எனக்குக் கிடைத்த

வழிகாட்டி அம்மா அவர்கள். அவர்கள் சொன்ன அனைத்தும் கூற முடியாவிட்டாலும் சில குறிப்புகளவது கொடுக்க விரும்புகின்றேன்.

அடுத்த சந்திப்பில் அவைகள் வரும்

அலைகள் மீண்டும் வரும்

Friday, February 24, 2012

நினைவலைகள் 8

நினைவலைகள் -8

உங்களிடம் ஓர் செய்தி கூறுவதாகச் சொல்லி இருந்தேன். அச்செய்தியை நான் வேடிக்கையாக நினைக்கவில்லை. ஆய்வுக்குரிய செய்தியாக நினைத்தேன். கள் குடித்தல் என்பது காலம் காலமாக சமுதாயத்தில்

இருந்துவந்த பழக்கம். காபி, டீ வருவதற்கு முன்பே வந்துவிட்ட பழக்கம்.

காட்டிலே வாழும் பொழுது அவனுக்குச் சுலபமாகக் கிடைத்த ஓர்

பானம். மிருகங்களை அடித்துப் பச்சையாய்த் தான் நம் மூதாதையர்கள் சாப்பிட்டனர். இதற்காக யாரும் வெட்கித் தலை குனியவேண்டியதில்லை.

எனவே மாமிசம் சாப்பிடுவதும் கள் குடிப்பதும் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது. மனிதனின் நாகரீகமும் பண்பாடும் வளர வளர உணவு, உடை , இன்னும் பல விஷயங்களில்

மாற்றம் சிறிது சிறிதாகப் புகுந்தது.எதையும் பேசும் பொழுது , காலத்தையும் அப்பொழுது மனிதன் வாழ்ந்த முறைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது வாழ்க்கையின் பரிமாணம். அந்தக் கள் பற்றிப் பேசலாம்.

முதலில் இறக்கப்படூம் கள்ளின் பெயர் சுத்தக்கள்ளு. இதில் மிகவும் கொஞ்சமாகவே போதை இருக்கும். ஆனால் ஆண்களுக்கு இது வீரியத்தை அதிகமாக்கும். ( இன்றைய வயாகரா போல). அடுத்து சுண்ணாம்பு கலந்தவுடன் அது பதநீர். இது உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். மூன்றாவது கள்ளைப் பாடம் செய்து கொடுப்பது போதைக் கள்ளு இதுவே அதிகமான போதை தரும். இதைச் சொன்னவர் பெயர்

சுந்தரம்பிள்ளை. இவர் ஊர் நெல்லை மாவட்டம் கடம்பூரின் அருகிலுள்ள ஊர் இளவேலன்கால். இவருக்கு வயது 85க்கு மேல் இருக்கும். இவரை அமெரிக்காவில் என் வீட்டிற்கு வந்த பொழுது பார்த்தேன் பேசினேன். இந்தவயதிலும் மிக திடகாத்திரமாக இருந்தார். வேகமாக நடப்பார். இங்கு வந்தால் சும்மாவே இருக்க மாட்டார். மொழி தெரியாவிட்டாலும் இவர் சுறுசுறுப்பால் அமெரிக்கர்களும் இவருடன் பழகுவர். இவர் சுத்தக் கள்ளு நிறைய குடித்திருக்கின்றாராம். இதற்கு மேல் இதுபற்றி கேள்வி கேட்டால் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. அவரை நேரில் பார்த்துக் கேட்டுக் கொள்ளலாம். அல்லது புதுக்கள்ளுபற்றி ஆராய்ச்சி செய்யலாம். வயாகரா தேவை இருக்காது. இது ஓர் ஆய்வுக்குரிய விஷயம்.

அக்காலத்தில் விருந்தோம்புதலில் மாமிச உணவும் கள்ளும் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. கள்ளுண்ணாமைச் சிறப்பும் சொல்லப்பட்டிருக்கின்றது. .

இது போதும். கிராமத்தைப் பார்ப்போம்

கிராமங்களில் குடிதண்ணீருக்குக் கிணறுகள், குடிதண்ணீர்க் குளங்கள், கண்மாய்கள் உபயோகப்படுத்தப்பட்டன. சில வீடுகளில் கழிவறைகள் கட்டப் பட்டிருந்தன. இப்பொழுது இருப்பவை போல் இருக்காது

காலையில் சுத்தப் படுத்தப் பட வேண்டும். பெரும்பாலும் இருள் போகும் முன் ஊரின் எல்லைக்கு ஒதுக்குப் புறங்களே காலைக் கடன்களைக் கழிக்கும் இடங்களாக இருந்தன. இந்த இரண்டரை மாதங்களில் பெரிய அளவில் கட்டப் பட்ட வீடுகள் பார்த்ததில்லை.

வீட்டிலே சடங்குகள் சிறப்பாக நடத்துவர். பெண் பெரிய மனுஷி யானால் சடங்கு, நிச்சயதார்த்தம், திருமணம் போன்றவைகள் வீடுகளில் செய்தனர். குழந்தைக்குக் காது குத்தலுக்குக் கோயில்களுக்குப் போய்ச் போய்ச் செய்வதும் உண்டு. கிராமங்களில் ரசிக்கத் தக்க ஒன்று இருந்தது. மனிதன் இசையுடன் வாழ்வது. மொழி பிறக்காத காலத்தில் கூட ஓசை எழுப்பி , ஏதோ குரல் எழுப்பிக் கூத்தாடி மகிழ்வர். உலகம் முழுவதிற்கும் இது பொதுவானது. ஆனால் நம் தமிழன் இசையை பலவிதங்களில் பயன்படுத்தினான். தாலாட்டும் உண்டு. ஒப்பாரியும் உண்டு. ஏற்றப் பாட்டு, நாத்து நடும் பாட்டு, என்று தொழில் செய்யும் பொழுது கூடப் பாடிக்கொண்டே களைப்பின்றி பணி புரிவான்.பாடுபவர்கள் அனைவரும் கவிஞர்களே. எப்படித்தான் வார்த்தைகள் வருமோ, தடையின்றி இராகத்துடன் பாட்டு வெள்ளமெனப் பெருகி இசைப்பர். என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அவர்களிடமிருந்து நாட்டுப் புறப் பாடல்கள் கற்றுக் கொண்டேன்.

அடுத்து சினிமா. இதைபற்றிப் பேசாமல் இருக்க முடியுமா? சில ஊர்களில் டெண்ட் கொட்டகையில் சினிமா நடக்கும். பள்ளிகளுக்கு அனுப்பப் பிடிக்காது. ஆஸ்பத்திரிக்குப் போகக் கூடத் தயக்கம். ஆனால் சினிமா மட்டும் எங்கு நடந்தாலும் போய்ப் பார்க்க வேண்டும். சினிமா ஆர்வத்திற்குக் குறைவில்லை. இறைவனைப் போல் எங்கும் நிறைந்தி ருந்தது சினிமாப்பைத்தியம். இயல், இசை, நாட்டியம் முத்தமிழல்லவா?

தமிழன் கொஞ்சம் அதிகமாகவே சினிமா மோகம் கொண்டுள்ளதை மறுக்க இயலாது. இந்தப் போக்கால் அரசுப்பீடத்திலும் அவர்களை அமர்த்திப் பார்த்து ரசிக்கின்றனர்..

கிராமங்களில் சிறு தெய்வ வழிபாடு உண்டு. குல தெய்வங்கள் வெளியூரில் இருந்தால் குடும்பமாகப் போய் வருவர். பொங்கல் வீட்டில் வைப்பதுண்டு. கோயில்களில் சென்று பொங்கல் வைத்து வழிபடுதலும் உண்டு. கோழி, ஆடு பலி கொடுப்பதும் உண்டு.

என்னை மன்னிக்கவும். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவள். ஆனால் மூடப் பழக்கங்களை வெறுப்பவள். கடவுள் பெயரால் தீமைகள் புரிந்தால் தயங்காமல் அங்கேயே சுட்டிக் காட்டத் தயங்காதவள். சாதி, மதம், மொழி, மண் இவைகளின் ஆளுமை என்னிடம் கிடையாது. “யாதும் ஊரே யாவரும் கேளீர் “ என்ற தமிழ்ப் பாடல் வெறும் பெருமைக்காகச் சொல்லுபவள் இல்லை நான். என் மதம் மனித நேயம். இறைவன் படைத்த எல்லா உயிர்களும் ஒன்றே. . எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கின்றன. என் கருத்தை பிறரிடம் திணிக்க மாட்டேன். ஆனல் சொல்ல நினைப்பதைச் சொல்லுவேன். இறைவன் படைத்த எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும். கடவுள் மிக மிக உயர்ந்தவர். அவரை வியாபாரம் செய்கின்றவர்களைக் காணும் பொழுது மனம் வேதனைப் படுகின்றது.

கிராமங்களில் கூட இந்து முஸ்லீம் அப்பொழுது சண்டை போட்டுக் கொண்டதில்லை. மாமன், மச்சான் என்று சொல்லிப் பழகுவார்கள்.

சாதி உணர்வு இருந்த ஊர்களிலும் இரு மதங்களைச் சேர்ந்தவர்களும் பிரியமாகப் பழகுவதைப் பார்த்திருக்கின்றேன்.. மதம் இறைவனைப்பற்றி மட்டும் சொல்லும் வரையில் பிரச்சனையில்லை. அதிகார உணர்வு வந்துவிட்டால் அரசியலுக்குண்டான அத்தனை குணங்களும் இணைந்துவிடும். மதம்பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை .பின் தொடர் வேறு திசையில் பயணம் செய்ய வேண்டி வந்துவிடும். என் நோக்கம்

குடும்பம் என்ற கோட்பாடு சிதைந்து விடக்கூடாது. குடும்பங்கள் அடங்கிய சமுதாயம் அன்பும் அமைதியும் நிறைந்து இயங்க வேண்டும்.

மரணம் நடந்தால் ஊரே கூடிவிடும். கல்யாணத்திற்குப் போக முடியாவிட்டாலும் சாவுக்கு அவசியம் போயாக வேண்டும். பிறந்தவுடன் மனிதன் அழுகின்றான். வாழும் காலத்தில் என்னென்ன வதைகள் படவேண்டுமோ என்று நினைப்பிலே பிறந்ததுவோ அழுகை?1. இது கற்பனை...செத்தவுடன் மவுனம். அவன் வேதனைகள் முடிந்து விட்டன. மற்றவர்கள் அழுகின்றார்கள். அவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தின் துணை ஒன்று துண்டித்துப் போய்விட்டது. இதுதான் வாழ்க்கை!

இரண்டரை மாதங்களும் கடந்து போனதே உணர முடியவில்லை.

பிரச்சனை கேள்விப்பட்டேனே தவிர எனக்கு யாரும் பிரச்சனைகள் கொடுக்கவில்லை. கிராமங்களில் என்னிடம் மிகவும் பிரியமாக இருந்தனர். அவர்களும் என்னிடம் தங்கள் பிரச்சனைகளைக் கூறினார்கள். என்னுடைய அணுகுமுறைகளும், என்னுடைய சரளமாகப் பழகும் தன்மையும் , வம்பு பேசிய சக அதிகாரிகள் கூட என்னை மதிக்கத் தொடங்கினர், முதலில் முகம் மலந்து வரவேற்காத என் மேலதிகாரி கூட புறப்படும் பொழுது புகழுரை பேசி வாழ்த்தி அனுப்பினர். காந்தி கிராமத்தில் ஐந்து மாதக்காலம் பயிற்சி. என்னை சமுதாயப் பணிக்குப் பொருத்தமாக முழுமையாக்கியது காந்திகிராமம்.

காந்தி கிராமம்

காந்தியின் பெயரில் இருந்ததால் என்னவோ எளிமையும் அழகும் ஒருங்கிணைந்த ஓர் அமைதிக்குடிலாக அமைந்திருந்தது. இப்பொழுது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன

அங்கே பல பயிற்சிகள் நடைபெற்று வந்தன.அனாதரவான பெண்களுக்குச் சேவை இல்லமும் இருந்தது. அந்த இடத்தையொட்டி சிறிது தள்ளி கிராமிய வளர்ச்சிப் பல்கலைக்கழகமும் இருந்தது. காந்தி கிராமத்தை அப்பொழுது நிர்வகித்து வந்தவர் டாக்டர். திருமதி சவுந்தரம் ராமச்சந்திரன் ஆவார்கள். மதுரையில் அக்காலத்தில் கோலோச்சி வந்த டி.வி.எஸ் குடும்பத்தின் மகள். மத்திய அரசிலும் அமைச்சராக இருந்தவர்கள்.காந்தீய வழியில் எல்லாம் நடந்து வந்தன

மதுரை மாவட்டத்தில் கல்லுப்பட்டியில் உயர்திரு குருசாமி அய்யா அவர்கள் தலைமையில் ஓர் பயிற்சிப் பள்ளி உண்டு. ஆனால் இங்கே

சில பிரிவுகளுக்கே பயிற்சி கொடுத்து வந்தனர்.

இவ்விரண்டு பயிற்சி நிலையங்களிலும் பயிற்சி பெற்றவர்களிடம் காந்தீய உணர்வை இப்பொழுதும் காணலாம். .எளிமையும் உழைப்பிற்குத் தயங்காத இயல்பும் இருக்கும்.

காலம் மாறிவிட்டது. இப்பொழுது இருக்கும் காந்தி கிராமத்தில் வசதிகள் வந்துவிட்டன. ஒர் கல்வி நிறுவனமாகக் காட்சியளிக்கின்றது.

எங்கள் பயிற்சி காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றேன்.

நான் கொடுத்துவைத்தவள். சௌந்திரம் அம்மா, அம்புஜம்மா இன்னும் பல பெரியவர்களின் நேரடி வழி காட்டலில் பயிற்சி பெற்றவள். கல்லறைக்கருகில் இருக்கும் எனக்குச் சமுதாய அக்கறை இருப்பதற்குக் காரணமே இது போன்ற பெரியவர்கள் தான்.

“பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்”

நல்லவர்களின் தொடர்பு நம்மைச் செம்மைபடுத்தும். எங்களுக்கு யாரிடமும் காழ்ப்புணர்ச்சியை அவர்கள் விதைக்கவில்லை. ஆதாயம் தேடி அவர்கள் சேவை செய்யவில்லை.. சமுதாய அக்கறையுள்ளவர்கள் அன்பையும் ஒருமைப்பாட்டையும் மக்களிடையே நிலைநிறுத்த வேண்டும்.

தொடக்கம் இனிய ராகமாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் சிறிது சிறிதாக

வரலாற்றில் அபஸ்வரங்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டதை நாம் மறுத்தல் இயலாது. இயன்றமட்டும் ஆராய்வோம்.

அலைகள் வரும்

Tuesday, February 21, 2012

நினைவலைகள்-07

அடிக்கடி நம் மூதாதயரை நினைக்க வேண்டிவருகின்றது. காரணம், சில பழக்கங்கள் ஏதோ ஒரு வடிவில் ஒட்டிக் கொண்டே வருகின்றது.

.காட்டிலே திரியும் பொழுது இரைதேடி வெளிச் செல்வான். உடல் பசிவந்துவிட்டால் பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு பெண்ணிடம் இச்சையைத் தீர்த்துக் கொள்வான். தாய், தாரம். உடன் பிறந்தோர் என்ற உறவுகள் அப்பொழுது கிடையாது. வரலாறு படிக்க வேண்டும். மனிதன் தோன்றி லட்சக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டது. அந்த அளவு கால ஆராய்ச்சி வேண்டாம். வால்கா முதல் கங்கை வரை என்ற புத்தகம் இருக்கின்றது. அதையாவது படித்துப் பாருங்கள்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை வருமாம். ஆண்மகனுக்கு ஒருத்திமட்டும் போதவில்லை. இடையில் மனிதனைச் செம்மைப்படுத்த கதைகளும் காவியங்களும் வந்திருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் அவன் தன் பலஹீனத்தைவிட முடியாமல் திண்டாடுகின்றான். ஆண்களுக்குச் சலனங்கள் தோன்றுவது இயல்பு. ஆன்மபலத்திலும் பயிற்சியிலும் அடக்குகின்றான். காலப் போக்கில் சிலருக்கு இத்தகைய சலனங்கள் தோன்றாத நிலை வரலாம். சிலர் சலனத்தில் மட்டுமல்ல சபலத்தில் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.

இராமாயணம் இன்றும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்றால் ராமனே காரணம். தொலைக் காட்சியில் எத்தனை முறை வந்தாலும் அலுக்காமல் பார்ப்பவரின் கூட்டம் இருப்பதாலேயே மீண்டும் மீண்டும் இராமாயணம் வருகின்றது.

அக்காலத்தில் இராமகதையால் ஆண்களுக்கு ஏற்பட்டது வியப்பு.

சிந்தையாலும் பிற மாதரைத் தொடேன்!இது முடிகின்ற காரியாமா என்ற திகைப்புஆணுக்கு. அப்படி இருக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாவது சீரா இருக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுபவர் இராமன்.

பெண்ணுக்குத் தன் கணவன் தன்னைத் தவிர வேறு யாரிடமும்செல்லக்கூடாது என்ற ஆதங்கம் அதிகம். அவள் கண்களுக்கு இராமன் மிக உயர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார்.

இன்னொரு காரணமும் உண்டு. மனிதன் குடும்பம் என்ற கோட்பாட்டைக் கொண்டுவந்தபின் அதன் அருமையை உணர்ந்தான். பின்னர் முதுமை வரும் பொழுது அவன் மனத்தில் இன்னொரு ஏக்கம் வளர ஆரம்பித்தது. தான் தேடிய சொத்துக்களைப் பராமரிக்க மட்டுமின்றி தன்னை அன்புடன் பாதுக்கும் பிள்ளகளாக இருக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தான். தனக்குக் கட்டுப்பட்டவனாக இருக்க வேண்டுமென்று விரும்பினான்.. தந்தை சொல்லைத் தட்டாத இராமன் அவனுக்குத் தெய்வீக புருஷனாகத் தெரிந்தார்.

காட்டுக்குப் போ, என்ற செய்தி கேட்டாலும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை முகத்தினைக்கொண்ட இராமனைப் போன்ற பிள்ளை தனக்கு வேண்டும் என்று நினைக்காத தந்தைமனம் உண்டோ?

காக்காய்க் கதை, நரிக்கதை என்று குழந்தைகளிடம் கதைகள் சொல்லுகின்றோம். நீதிக் கதைகள். நல்லது கேட்டல், நல்லது பார்த்தால் நல்லதாக இருக்கத் தோன்றும். இது உளவியல். இத்தனை முயற்சிகளிலும் திருந்த முடியாத மனங்களும் உண்டு.

1956 - இந்த ஆண்டில், கிராமங்களில் சில காட்சிகள் காணலாம்.

பணக்காரன் வில்வண்டியில் ஒரு வைப்பாட்டி வீட்டிற்குப் போவது அவனுக்குப் பெருமை. அப்படி வெளிச்செல்லும் கணவனிடம் பெண் முகம் தூக்கி வைத்துக்கொள்வாள்; அழுவாள்; இரண்டு நாட்கள் பேசாமல் இருப்பாள். ஏதாவது கணவன் வாங்கிக் கொடுத்து விட்டால் சமாதானம் ஆகிவிடுவாள். கணவன் நிரந்தரமாகப் பெண்ணை வைத்துக்கொள்ளும் பொழுதுதான் போராட்டம் வரும்; பெரும் சண்டையும் நடக்கும். எளியவர் வீடுகளில் நடக்கும் சண்டைகள் வீதிக்கு வரும். கணவனின் அடியும் மிதியும் கிடைக்கும்.

கண்ணகியால் அன்று பேச முடிந்ததா? கடவுளிடம் கூடக் கணவனைப் பற்றிக் குறை கூறினால் கற்பு பாதிக்கப் படும் என்றல்லவா எழுதி வைத்துவிட்டார்கள். காதல் பரத்தைகூட, தலைவன் வர சில நாட்களானால் பொறாமையிலும் ஆத்திரத்திலும் பேசுவதைச் சங்கப் பாடல்களில் காணலாம். தாலி கட்டாத மனைவியும் பெண். அப்படி பொறாமைப்படுவது உரிமையில்லா விட்டாலும் அது பெண்ணின் இயல்பு. எனவே இரு நிலையிலும் பாதிக்கப் பட்டவர்கள் பெண்கள்.

பெண்ணுக்கு மட்டும் கற்பை வைத்தான். நிச்சயம் அது ஆண்டவனின் சட்டம் இல்லை. ஒரு பெண் கர்ப்பமாகி இத்தனை மாதங்கள் கருவை வயிற்றில் சுமக்க வேண்டுமென்பது பொது விதி. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்துப் பெண்ணுக்கும் அமெரிக்காவின் நியூயார்க்கில் வாழும் பெண்ணுக்கும் ஒரே விதி. இதுதான் இயல்பானது. உயர்குலப் பெண்டிற்கு மட்டும் கற்பு என்று கூறுவது ஆண் வகுத்த சட்டம். அவனுக்குச் சலுகைகள் உண்டு. பல பெண்களிடம் அவன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். அன்று அவன் அதற்குச் சில காரணங்களை நினைத்திருக்கலாம். அக்காலத்தில் வாணிபத்திற்காக ஆண் வெளிச் செல்ல வேண்டும். வெளியில் செல்லும் ஆணுக்கு வீட்டுக்குத் திரும்ப நாட்களாகும்.எனவே உடல் பசியை அவனால் ஒத்திப்போட முடியாது. அதுசரி, அவன் வர நாட்களாகும் பொழுது பெண்ணிற்குப் உடல்பசி ஏற்படாதா? அவள் மூளைச் சலவை செய்யப்பட்டாள். அவள் கணவனுக்குக் கட்டுப் பட்டவள். அவனுக்கு இன்பம் கொடுப்பது, பிள்ளைகளைத் தருவது, அவன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது அவள் கடமைகள். அவள் வீட்டுக்குள் இருந்தால்தான், பிறக்கும் குழந்தைகள் தன்னுடையது என்பதற்கு உத்திரவாதம் இருக்கும்.

இது ஆரம்பத்தில் ஆணாதிக்கம் என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப் பட்டாலும் ஆண் அந்த குடும்ப அமைப்பில் அமைதி கண்டான். பெண்ணின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. மற்ற பெண்களிடம் காணாத அமைதியை உரிமையுள்ள மனைவியிடம் கண்டான். அவள் தன்னை விட்டுப் போகக் கூடாது என்பதற்கு பெண்ணுக்கு இன்னும் கூடுதலாகக் கட்டுப்பாடுகளை விதித்தான். இதுதான் சமுதாய வரலாறு. அன்பிலும் அச்சத்திலும் விளைந்தது அடக்குமுறை.

பெண் விடுதலைக்கு நானும் போராடியவள். சொல்லப் போனால் நான் சமுதாயத்தில் ஓர் போராளியாகவே வாழ்ந்தேன். உலகம் தோன்றிய நாள் முதலாய் மனிதன் வாழ்ந்த விதத்தை, மனித இயலை ஆழ்ந்து படிக்கப் படிக்க ஓர் புதிய எண்ணம் தோன்றுகின்றது. அந்தக் காலத்தில் பெண் வீட்டை விட்டு சுதந்திரமாக வெளியில் சுற்ற முடியாது.அப்படி வரும் பெண்கள் சிதைக்கப்படலாம். பலரிடம் வதை பட்டு அழிவதை விட அக்காலத்தில் ஒருவனிடம் அடங்கி இருந்தது அவளுக்குப் பாதுகாப்பாகவும் இருந்திருக்கலாம். இந்த என் எண்ணத்தைத் தாக்கிப் பேசுவார்கள் என்று தெரிந்தே இதனை எழுதுகின்றேன்.

குடும்பத்தின் அருமையை ஆண் உணர்ந்து கொண்டான்.எனவே, பெண்ணைப் போற்றிப் பாட ஆரம்பித்தான்.இயற்கையில் கூட அவன் பெண்ணைக் கண்டான். சாந்தமான கடவுள் உருவங்களைப் பெண் வடிவில் செய்தான். ஒரு பிரச்சனையை ஆராயும்பொழுது அந்தக் காலம், அக்காலச் சூழல், அப்பொழுது மனிதன் தனக்கு வைத்துக் கொண்டிருந்த விதிகளையும் நோக்க வேண்டும். அவன் செய்த தவறு அந்த விதிகளை எக்காலத்திலும் நிலை நிறுத்த நினைத்ததுதான். சோடாபாட்டில் அடக்குமுறை என்று சொல்வார்கள். பெண்ணும் படித்து ஆணுக்குச் சரியாக வெளியில் சென்று வேலை பார்ப்பவர்களிடம், கட்டுப் பாடுகளை விதிக்கும் பொழுது சீறுகின்றார்கள். அக்காலச் சலுகைகளை இக்கால ஆண்கள் இன்னும் விரும்பி நடத்தினால் வீட்டுப் போராட்டம் தவிர்க்க இயலாது. பின்னால் மாறிய காலமும் சமுதாயமும் பற்றிப் பேசும் பொழுது உதாரணங்களுடன் நிறைய பேசலாம்.

இப்பொழுது கிராம வாழ்க்கையைப் பார்க்கலாம்.

கிராமத்தினரின் அன்றைய உணவுப் பழக்கம் சத்து நிறைந்தது. எண்ணையில் வதக்கி உண்பது மிகமிகக் குறைவு. பச்சைக்காய்களைப் போட்டு ஒரே குழம்பாய் வைப்பார்கள். கம்பு, சோளம், கேழ்வரகு, அதிகமாகச் சேர்க்கப்பட்டது. சக்கி அரிசி என்று கைகுத்தல் அரிசியை நாங்கள்அறிமுகப் படுத்தினோம். ஏதாவது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள். சத்தான சாப்பாடு, தூய்மை கெடாத காற்று, சுறுசுறுப்பான வாழ்க்கை அவர்களைப் பலம் மிகுந்தவர்களாக வைத்திருந்தது. இத்துடன் பெரும்பாலும் பேராசைகள், தீய எண்ணங்கள், சுயநலங்கள் அப்பொழுது அதிகம் கிடையாது. தலைவனுக்குப் பேராசை இருக்கும். அது உலகம் தோன்றிய நாள் முதலாய் இருந்து வருகின்றது.

பல ஆண்களிடம் ஒரு பழக்கம் இருந்து வந்தது. கள் குடிப்பது. கள்பற்றி ஒரு செய்தி கூற விரும்புகின்றேன். இந்தச் செய்தியை எங்காவது பதிய நினைத்து வந்தேன். தமிழர்களின் வரலாறு எழுத முடியவில்லை என்று மதிப்பிற்குரிய மதன் அவர்கள் கூறினார்கள் அதற்கு அவர் கூறிய காரணம் கள் கொடுத்துப் புலவர்களை மன்னர்கள் பாட வைத்தார்கள். கள் குடித்த மயக்கத்தில் பாடிய புகழ்ப்பாக்கள் வரலாற்று உண்மைகளைக் காட்டாது என்றார். தமிழ் வரலாற்று ஆய்வு செய்பவர்களும் , வரலாற்றின் மீது பற்று கொண்டவர்களும் மறுப்பு கொடுத்தார்கள். வரலாறு டாட் காம் மின்னிதழில் கமலக்கண்ணன் முதலில் மறுப்புக் கட்டுரை எழுதினார். டாக்டர் கலைக்கோவன் அவர்கள் நீண்டதொரு அழகான கட்டுரையே எழுதி விட்டார். அந்தக் கள் பற்றிய ஓர் செய்தி எனக்குக் கிடைத்தது. சுவையான தகவல்

அலைகள் தொடரும்

Thursday, February 16, 2012

நினைவலைகள்-06

தந்தை பெரியார்! என்னுடைய 14 வயதில் ஓர் பால்காரரால் அறிமுகப் படுத்தப்பட்டவர்.

பால்காரர் பேச்சியப்பனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவருக்கு நிறைய தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசை. புத்தகங்கள் எடுத்து வந்து என்னை வாசிக்கச் சொல்வார். அவர்கொண்டு வந்தைவை களில் பெரும்பாலும் அய்யாவின் சிந்தனைகளும், அண்ணாவின் சொற்பொழிவுகளும் தான். அந்தக் காலத்தில் அண்ணாவின் சொற் பொழிவுகள் சின்னச் சின்னப் புத்தகங்களாய் வரும். படித்துக் காட்டுவதுடன் நிற்காது. விபரங்கள் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

சிந்தனைத்தெளிவிற்குத் தேடலும் சரியாகப் புரிந்து கொள்ளுதலும் இன்றியமையாதவை. படிக்காதவனின் சிந்தனையைத்தட்டி எழுப்பியவர்களால் கூட, சமுதாயத்தின் மூடப்பழக்க வழக்கங்களை முற்றிலுமாய் ஒழிக்க முடியவில்லை? காரணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆணாதிக்கம் என்று பேசுகின்றோம். ஆனால் உண்மையில் வீட்டில் ஆண்மகன் பல பிரச்சனைகளில் தன்னைச் சமரசம் செய்துகொள்ள ஒதுங்கி நிற்கின்றான். இது கோழைத்தனமில்லை; குடும்பமானம் போகக் கூடாது என்று நினைக்கின்றான். எனவே அங்கே அவன் பலஹீனமாகி விடுகின்றான்.

எங்கோ பிறந்து, வளர்ந்து, பின்னர் புதுவீட்டிற்கு வரும் பெண் புதுப்பழக்கங்களைப் பார்த்துத் திணறுகின்றாள். புருஷனுக்கு இன்பம் கொடுப்பவள், அவன் குழந்தைகளுக்குத் தாய் என்ற உரிமையில் அவள் அந்த வீட்டின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்கின்றாள். மறுபக்கம் இன்னொரு பெண். வயிற்றில் சுமந்து, வலியெடுத்துப் பெற்று, பாலூட்டிச் சீராட்டி வளர்த்த பிள்ளைக்குத் தானே முதல் உரிமையாளர் என்று நினைக்கின்றாள். அன்பில் பங்கு போட மனமில்லை. இதுவரை இருந்த குடும்பத்தலைவிக்குரிய அதிகாரமும் மாறுவதைப் பொறுக்க முடியவில்லை.

இது உளரீதியான பிரச்சனை. அத்துடன் அதிகாரப் பகிர்வில் போராட்டங்கள். ஆண்மகன் ஒதுங்கி விடுகின்றான்; அல்லது ஒருவர் பக்கம் சாய்ந்து மற்றவரின் நிலையை மோசமாக்குகின்றான். இதுதான் குடும்ப நிலைமை. அந்தப் பெண் வணங்கும் கடவுள், அவளின் நம்பிக்கைகள், மூடப்பழக்கங்கள் அப்படியே பாதுகாப்பாக அவளிடம் இருக்கின்றன. ஆண்மகன் அங்கே ஒதுங்கிவிட்டான். பகுத்தறிவுகட்சி என்று சொல்லிக் கொள்கின்றவர்களின் வீடுகளிலும் கோயில்களுக்குப் போகின்றார்கள்;சோதிடம் பார்க்கின்றார்கள். எந்த மாறுதலும் வீட்டில் பெண் ஏற்க வேண்டும். அதுதான் பெரியவர்கள் கூறும்பொழுது ஓர் பெண் படித்தால் அந்தக் குடும்பமே கற்றவர்களாகி விடுவார்கள் என்று. மாறுதல் வீட்டுக்குள் வரும் வரை நம் சமுதாயம் இப்படித்தான் இருக்கும்.

பகுத்தறிவுஎன்ற சொல்லை நாம் உபயோகிப்பது கூடச் சரியாக இல்லை. அதன் விளக்கங்கள் பின்னால் வரும்.

இது ஓர் சமுதாய வரலாறு. தந்தை பெரியாரும் பாரதியும், இன்னும் பல சிந்தனையாளர்களும் செயல்வீரர்களும் தொடர்ந்து வருவார்கள். எனவே ஒரே இடத்தில் ஒருவரை முழுமையாகக் காட்ட விரும்பவில்லை.

நாம் கிராமத்திற்குள் நுழையலாம். ஓர் உண்மையை முதலிலேயே உங்கள் முன் வைத்து என் எழுத்தைத் தொடர நினைக்கின்றேன். கசப்பான பல உண்மைகள் காணலாம். வரலாறு என்பது உண்மைகளைச் சொல்வது. தனிப்பட்ட தாக்குதல் இல்லை. ஒரு குறையை எடுத்துச்சொல்லும் பொழுது அது ஒட்டு மொத்தமாக மதிப்பீடல் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அப்பொழுது நான் கண்ட, உணர்ந்த சில உண்மைகளின் வெளிப்பாடுதான். காரணங்களைச் சிந்திக்க முயன்றால் குறைகள், நீக்க முயற்சிக்கலாம், அல்லது குறைக்கவாவது முடியும். மனிதன் செம்மையாக நிம்மதியாக வாழ வேண்டும். ஒவ்வொரு மனிதனின் ஆசையும் இதுதான். நம்மிடம் இருக்கும் போலிக் கவுரவத்தை விடுத்து நம்மை நாமே உணர்ந்து கொள்வது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.

குடும்பம், சமுதாய அமைப்புகளைப் பார்க்கலாம். பல ஊர்களில் சொந்த அமைப்பில் கிராமப் பஞ்சாயத்துக்கள் இயங்கி வந்தன. அவர்கள் விதித்த கட்டுப்பாடுகளை கிராமத்தினர் மீற முடியாது. நீதிமன்றங்களில் கூடத் தப்பிக்க முடியும். ஆனால் இவர்கள் முடிவு சொன்னால் கடுமையாக இருக்கும். செல்வந்தர்களும் உயர்சாதிக்காரர்களும் கிராமசபை உறுப்பினர்கள். ஊரின் பெரிய பணக்காரன் அங்கு செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பான். வரலாற்றில் பொருளாதார அடிப்படையில்தான் அதிகாரம் இருந்து வந்திருக்கின்றது. ,அதற்குள் சமுதாயம் அடங்கி இயங்கி வந்ததன் அடையாளத்தை நான் பல கிராமங்களில் அன்று பார்த்தேன்.

திருமணம் முறைப்பெண், முறை மாப்பிள்ளை என்ற உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெண் கொடுக்க மறுத்தால் கடத்திப்போய் தாலி கட்டுவதும் உண்டு. தண்டனையாக சங்கத்திற்குப் பணம் கட்டிவிட்டு அவளுடன் அவன் வாழலாம். சொந்தத்தில் திருமணம் செய்வது அதிகம். சாதி விட்டுத் திருமணம் செய்வதை கிராமம் ஏற்கவில்லை. ஊரைவிட்டு சம்பந்தம் செய்வது கூட வரவேற்கப் படவில்லை.

இலக்கியத்தில் உடன்போக்குஅதிகமாக வரும். ஓடிப்போன மகளைத் தேடிச் செல்வது போன்ற பாடல்கள் வருகின்றன. அன்றைய சமுதாயம் அவர்களை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் என் காலத்தில் ஓடிப்போகும் பெண்ணுக்கு மரியாதை போய்விடும். காதல்என்று சிறப்பு செய்து ஏற்கவில்லை. இப்பொழுது பொருளாதார அடிப்படையில் அதற்கு மதிப்பு கிடைக்கின்றது. அவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தால், நிறைய பணம் ஈட்டும் நிலையில் இருந்தால் சேர்த்துக் கொள்கின்றார்கள்.

மரபு என்பதும் காலத்திற்கேற்ப மாறுதல்கள் அடைகின்றன. ஓர் பழக்கம் சமுதாயத்தால் அங்கீகரிக்கப் பட்டு, கொஞ்சம் அதிகமாக அந்தப் பழக்கம் தங்கி விட்டால் அது மரபாகிவிடுகின்றது. சிறிது சிறிதாக நாம் அடையும் மாறுதல்களை நினைவலைகளில் காணலாம்.

சாதிப்பிரிவினைகள் எங்கும் இருந்தன. ஒரு ஊரில் எந்த சாதி அதிகம் இருக்கின்றார்களோ அவர்கள் கை ஓங்கி நிற்கும். செல்வந்தர்களுக்கும், உயர்சாதியினருக்கும் ஊழியம் செய்யும் நிலையில் ஹரிஜனங்கள் இருந்தனர். இன்று தலித் என்கின்றோம். பல கிராமங்களில் டீக்கடையில் அவர்களுக்கென்று தனி காபி டம்ளர்கள் இருந்தன.

அதை ஏற்படுத்தியவர்கள் உயர்சாதிக்காரர்கள். அந்தணன் அங்கே போவதில்லை. அக்ரஹாரத்தில் அவர்கள் செருப்பு போட்டுக்கொண்டு நடப்பதில்லை. .பிராமணர்கள் மற்ற சாதிக்காரர்கள் எல்லோரையும் ஒதுக்கி வாழ்ந்தனர். ஆனாலும் செல்வ நிலையில் அவர்கள் உயர்ந்திருக்கவில்லை.

அதனால் செல்வந்தர்களுடன் ஒத்துப்போயினர். வீடு என்று வரும் பொழுது ஆச்சாரம் என்று கூறி ஒதுக்கினர்.

கேரளாவில் ஒரு பழக்கம் இருந்துவந்தது. உயர்சாதிக்கரர்கள் வரும் பொழுது உழைக்கும் கூட்டம் மேலே போட்டிருக்கும் துண்டுகளை எடுத்துவிட்டு குனிந்து வணங்க வேண்டும். பெண்ணும் மேலே போட்டிருக்கும் துணியை எடுத்தாக வேண்டும். அப்பொழுது ரவிக்கை போடும் பழக்கம் இல்லை. எனவே திறந்த மார்புடன் பெண்கள் குனிந்து வணங்குவதை நிறுத்தக் கடுமையாகப் போராடியடிவர் நாராயண குரு அவர்கள். போராடி வெற்றியும் கண்டார்.

நான் பார்வையிட்ட கிராமங்களை வைத்து சில செய்திகளைக் கூறுகின்றேன்.என் பணிக்காலத்தில் ஆயிரக் கணக்கான கிராமங்களைப் பார்க்க வேண்டி வந்தது. எனவே அந்தந்த இடங்கள் வரும் பொழுது அச்சூழலை வருணிப்பேன்.

.பழிவாங்குதல் என்பது ஓர் இயல்பாய் நினைத்தனர். கோபம் வந்து விட்டால் கத்தியால் வெட்டுவது, குத்துவது என்பது அங்கே சாதாரணம். ஒன்று அவர்களே செய்வார்கள். அல்லது ஏழைகளை உபயோகித்துக் கொள்வார்கள். குற்றம் புரிந்தவன் சிறையில் இருக்கும் காலத்தில் அவர்கள் குடும்பங்களைச் செல்வந்தர்கள் கவனித்துக் கொள்வார்கள்..

இவைகளைப் படிக்கும் பொழுது பயங்கரமானதாகத் தெரியும். ஆனால் இது எப்போழுதும் நடப்பவையல்ல. பழகும் பொழுது பாசத்துடன் பழகுவார்கள். போலித்தனம் கிடையாது. விருந்தோம்பல் அதிகம். நாம் சொல்கின்றபடி செய்வார்களோ இல்லையோ நாம் பேசுவதைப் பொறுமையுடன் கேட்பார்கள். அவர்களுக்கு நம்மைப் பிடித்துவிட்டால் நாம் சொல்வதைக் குழந்தைகள் போல் செய்வார்கள். ஓர் குடும்பத்தின் நம்பிக்கை பெற்றுவிட்டால் அவர்கள் நம்மைக் காப்பாற்ற எதுவும் செய்வார்கள்.

இது போன்ற சமுதாயக் கட்டுப்பாடுகள் உலகில் எங்கும் இருந்து வந்தன.தனி மனிதனாக வாழ முடியாது. சிறு குழுவானாலும் , பெருங்கூட்டமா னாலும் ஓர் ஒழுங்கு வேண்டும். மனிதன் அதற்காகச் சட்ட திட்டங்களை உருவாக்கிக் கொண்டான். கூர்ந்து பார்த்தால் சிலவற்றில் ஓர் ஒற்றுமை காணப்படும்.சமூக இயல், மனித இயல் இரண்டினையும் உலக அளவில் இருக்கும் செய்திகளை, எழுத்துக்களைப் படித்து ஆய்வு செய்து வருகின்றேன். வெளி நாடுகளுக்கும் செல்லும் பொழுது பல இயங்களுக்குச் சென்று வருவேன். புலம் பெயர்ந்து மக்கள் செல்லும் பொழுது பழக்க வழக்கங்களில் கலப்பு ஏற்பட்டுவிடும்.

75 ஆண்டுகால வரலாற்றின் பார்வையாளர், பங்குதாரர் என்ற முறையில் அனுபவங்களை, எண்ணங்களைப் பதிவு செய்கின்றேன். சாதி, மதம், மொழி, அரசியல், நாடு இவைகளைப் பற்றி உண்மைகள் பதியப் படும் பொழுது நாம் உணர்ச்சி வயப்பட வேண்டியதில்லை. நாம் மனிதர்கள். குறையும் நிறைவும் கலந்த ஓர் கலவை.

(தொடரும்.)