Friday, September 28, 2012

நினைவலைகள் -20


நினைவலைகள்  -20

அரசியல் உலகம் பார்க்கப் போகின்றோம்
அரசியல்வாதிகள்
அரசுப் பணியாளர்கள்
இருவரும் மக்களுக்காக, மக்கள் நலப் பணிக்காக இருப்பவர்கள்.
இந்த இரண்டும் சீராக இருந்தால் நிர்வாகமும் சீராக இருக்கும்.
நம் அமைப்பு இரட்டை மாட்டு வண்டி கூட இல்லை. மூன்று மாடுகள் இழுத்துப் போகும் வண்டி.
மக்கள் தங்கள் பொறுப்பை மறந்து புழுதிவாரி கொட்டக் கூடாது.
ஒரு அரசியல் பிரமுகருடன் நடந்த உரையாடல்
இது கற்பனையல்ல, நிஜம்

ஏன் லஞ்சம் வாங்குகின்றீர்கள்?

லஞ்சம் என்று ஏன் சொல்லுகின்றீர்கள். வக்கீலுக்கு கொடுக்கும் பீஸ்
மாதிரி இது. அவன் அவசரத்துக்கு, தேவைக்கு குறுக்குவழிலில் போகணும்னு நினைக்கறான். எங்க கிட்டே வரான் நாங்க செய்து கொடுக்கற வேலைக்கு பீஸ் வாங்கறோம்.

 அவசரம், முறையற்ற கோரிக்கைகள், இந்த புத்தி, எப்படியும் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் ஆரம்பித்து வைத்தது லஞ்சம். எத்தனை நாட்கள் வெறும் பார்வையாளனாக இருப்பது, அரசாங்கப் பணியாளனாக இருந்தாலும் அவனும் மனிதன்,, அவனும் குறுக்குவழிப் பணத்திற்கு ஆசைப் பட ஆரம்பித்துவிட்டான்
ஆண்டவனுக்கே லஞ்சம் கொடுக்கின்றோம். நம் பாவங்களுக்குக் கூட்டாளியாக்குகின்றோம்.
“எனக்கு செய்து கொடு. உன் கோயிலுக்கு வரேன். உன் உண்டியல்லே
பணம் போடறேன்”
கடவுள் எல்லாவற்றையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றான்

சுதந்திரம் கிடைத்த பின் பஞ்சாயத்து ராஜ் வந்தது. கிராம அளவு மக்கள் ஆட்சி. அப்பொழுது கட்சியைவிட மக்களுக்கு நம்பிக்கை யாரிடம் இருக்கின்றதோ அவர்களுக்கு ஓட்டு போட்டார்கள். பஞ்சாயத்து தலைவர்கள் பஞ்சாயத்து சேர்மனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் அரசும் அரசியலும் கைகோத்து மக்களுக்கு சேவை செய்தது.
ஓர் குடும்பமாக இயங்கியது..
வாடிப்பட்டியின் முதல் சேர்மனாக வந்தவர் திரு. பால குருவா ரெட்டியார். நல்லவர். அன்புள்ளம் கொண்டவர். எங்கள் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும் இவர் பின்னால் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் அவர்கள் முதல்வராக இருக்கும் பொழுது சுற்றுலா சேர்மனாக ஆனார். எம். ஜி. ஆர் அவர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும். எந்தப் பதவியில் இருந்தாலும் அதே அன்புள்ளத்துடன் எல்லோரிடமும் பழகினார்.

எங்கள் வட்டாரத்திற்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு முறை வந்தார். என்ன சுறுசுறுப்பு!. கம்பீரமான தோற்றம். !. அவர் மேடையில்
பேச எழுந்த பொழுது மைக் சரியாக இல்லாமல் விழ இருந்தது. உடனே அவருக்குக் கோபம். திட்டிக் கொண்டே, மைக்கைக் கவனிக்க வேண்டியவன் வருகைக்காக் காத்திராமல் அவரே சீர் செய்தார். அதனை நான் ரசித்தேன். ஓர் அப்பாவின் கோபம்.

எங்கள் மாவட்டத்திலும் ஓர் காந்திஜி இருந்தார். அவர்தான் திரு கக்கன்
அவர்கள். கக்கன் ஜி என்று மரியாதையாகக் கூறுவோம். மனிதர்களைக் கூறும் பொழுதும், திட்டங்களைக் கூறும் பொழுதும். டில்லி ஹிந்தி ஒட்டிக் கொண்டிருக்கும். எளிமையும் இனிமையும் ஒருங்கே நிறைந்தவர். விழாவிற்கு என்று வந்தாலும் கனிவுடன் “நல்லா இருக்கிங்களா ? “என்று விசாரிப்பார். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் ஏதாவது உண்டா என்று கேட்பார். பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறவர் மத்தியில் இப்படி ஒருவர்1 ஆட்டோவில் வந்தவன்  , இன்று கார், பங்களாவுடன் சொகுசாக வாழ்கின்றான். ஆனால் கக்கன்ஜி அவர்கள் கடைசி வரையில் ,தன் நிலை மாறாது வாழ்ந்தார்

நேர்மையுடன் வாழ்கின்றவர்களை மேடையில் புகழ்வோம். ஆனால் கீழே
இறங்கியவுடன் அவனை ஏளனமாகப் பார்த்து ,”பிழைக்கத் தெரியாதவன்”  என்று கேலி பேசுவோம்.

கக்கன்ஜி அவர்கள் அடுத்தவன் பணத்தில் தன்னை வளர்த்துக் கொள்ளாத குணக்குன்று

அரட்டைக் குழு இளைஞர்களில் ஒருவன் கூறியது
“படிப்பு முடியவும் நான் அரசியலில் சேர்ந்துவிடுவேன். சீக்கிரம் பணம் சேர்க்கலாம். மத்தவங்களை மிரட்டலாம். நம்மைக் கண்டா பயப்படுவாங்க. எதுக்காக ஒருத்தன் கிட்டே வேலை பார்க்கணும்.”
அவன் பொறியல் கல்விகற்கும் மாணவன்

வன்முறை வாழ்க்கையில் கவர்ச்சி. உழைக்காமல் மிரட்டியே இலகுவாகச் சம்பாதிக்கலாம். அடுத்தவர்க்கு அச்சம் தரும் வாழ்க்கையினை நோக்கி
இளம் உள்ளங்கள் நகர ஆரம்பித்திருக்கின்றன. படித்து முடிக்கவிட்டுத் தானே வேலைக்குப் போக முடியும். எதற்குக் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும்?மாற்றம் இளைஞர்களிடம் மட்டுமா ?

பெண்ணைஅடக்கமாய் வைத்துப் பாதுகாத்த நிலை மாறி திறந்தவெளி அரங்கில் உலாவவிட்டு, சொகுசு வாழ்க்கைக்கு நப்பாசைப் படும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் கூட ஆரம்பித்திருக்கின்றது.

தன் வீட்டுக் கதவைத் தட்டி, தீமைகள் உள்ளே நுழையும் வரை மனிதன் மெத்தனமாக இருகின்றானே! நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்?
“நெஞ்சு பொறுக்குதில்லையே “ என்று கத்தத் தோன்றுகின்றது

அப்பொழுது அரசியல் மிரட்டவில்லை. காந்திஜியின் உண்ணாவிரத சக்தி அப்பொழுது செத்துப் போகவில்லை.

களத்திற்குப் போவோம். அமைச்சர்கள் வரும் விழாவிற்கு ஏற்பாடு செய்யும்பொறுப்புகள் எங்களுடையது. விழா மேடைக் கருகில் இருந்து
கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மந்திரி வர நேரமானால் நான் மேடையேறி பாடத் தொடங்கி விடுவேன். கே.பி. சுந்தராம்பாள், டி. எம். சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்த ராஜன் இவர்கள் பாடியபாடல்களைப் பாடுவேன். இன்னும் நேரமாகும் என்று தெரிந்தால் கதா காலட்சேபம் செய்ய ஆரம்பித்துவிடுவேன். கிராமங்களில் என்னால் நெருக்கமாக இருக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் என் பாட்டும் பேச்சும் தான். இசையில் மயங்காதோர் உண்டோ?!

இன்னொரு புது அனுபவமும் கிடைத்தது. நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினாரக இருந்த ஏ.ஸ். பொன்னம்மாள் அவர்கள்தான். நான் வாடிப்பட்டியில் இருக்கும் பொழுதுதான் முதல் முறையாகத் தேர்தலில் நின்று ஜெயித்தார்கள் அன்று அவர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா?
அடக்கம், சாந்தம், பேசக் கூடத் தயக்கம், பெண்மையின் நளினம் எல்லாம் கொண்ட பெண். எனக்கு அக்காவானார்கள். இப்பொழுது அவர்கள் தோற்றமே வேறு. அனுபவத் தீயில் உருக்கியெடுத்த உரத்த பெண்மணி.

“சீதா, நான் ஊருக்குப் போறேன். உனக்கு லீவுதானே . என்னுடன் வா”
எனக்கு நேரம் இருக்கும் பொழுது போயிருக்கின்றேன்.


அக்கால அரசியல் மேடை.  நாங்கள் அங்கே போகவும் ஒரு காகிதம் கொடுத்தார்கள்.  முன் வாரத்தில் வந்து போயிருந்த எதிர்க் கட்சியின் மேடையில் விரித்த குற்றச் சாட்டு பட்டியல். அதற்கு இப்பொழுது இவர்கள் பதில்கள் கூறவேண்டும்.. நாங்கள் இருவரும் உட்கார்ந்து கேள்விகளுக்குப் பதில்கள் தயாரித்தோம். இப்பொழுது
நிலைமை மாறிவிட்டது. கேள்விகள்கூட சிந்தித்துப் பேச வேண்டாம் வசைமாரிக்கு எதற்கு மூளையைச் சிரமப்படுத்த வேண்டும்?

அரசியல் பேச்சுக்கு உண்மைகள் தேவையில்லை. உரத்த குரல் போதும்.  கொச்சைப் பேச்சுக்களில் மனத்தின் இச்சையைத் தீர்க்கும் களம். அதிலும் பெண் அரசியலில் இருந்தால் ஆண்களுக்குப் பேச காவியமே கிடைத்து விடும். இந்தியாவில் எந்த பெண் அரசியல்வாதியைப் பேசாமல் இருந்திருக்கின்றாகள்.?! மக்களுக்கு என்ன செய்யப் போகின்றோம்
என்று கூறுவதைவிட ,நிந்தாஸ்துதி கச்சேரிகள் தான் அதிகம்

சில இடங்கள் போய்ப் பார்த்ததிலேயெ அரசியல் களத்திற்கு நான் பொருந்தாதவள் என்பதைப் புரிந்து கொண்டேன். என்னைப்போன்று வெளிப்படையாகப் பேசுகின்றவர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை
அரசியல் பாடத்திற்கு வித்திட்டதும் வாடிப்பட்டி வாழ்க்கையே. பிற்காலத்தில் அரசியல் புதை குழி என்னை இழுத்த பொழுதும்
தப்பும் அளவு மனத்திடத்திற்கு உரமிட்டது வாடிப்பட்டி அனுபவங்கள்
தான். என் பயணத்துடன் வரப்போகின்றவர்கள் என் இந்தக் கூற்றைப் புரிந்து கொள்வார்கள்.

ஏ. எஸ் .பொன்னம்மாள் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். எனக்கு ஒரு ராசி
உண்டு. அதுவும் வாடிப்பாடியிலிருந்துதான் ஆரம்பம். தலித் வகுப்பிலி
ருந்து வந்த அரசியல்வாதிகள் பலர் எனக்கு நல்ல நண்பர்களாயிருந்தனர்.
பொன்னம்மாள் அக்கா என்னை மறக்கவே இல்லை.

என் நாடக உலகிற்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். விழிப்புணர்வு
ஏற்படுத்த நாடகக் கலை பெரிதும் உதவியது.மதுரை மாவட்டத்தில் எங்கள் செட் தான் புகழ் வாய்ந்தது. “வாடிப்பட்டி செட் “ என்ற முத்திரை குத்தப்பட்டது. நாடகத்தில் நான் நடித்ததால் பலர் மனத்தில் இடம் பெற்றேன். சில சோதனைகள் வரினும் , இதனால் எனக்குக் கிடைத்த பயன்கள் அதிகம் என்பதை ஒப்புக் கொள்கின்றேன். இன்றும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிக்க விரும்புவேன். கிழவிக்கு என்ன பாத்திரம் என்று சிரிப்பு வருகின்றதா? குமுதத்தில் வந்த சீதாப்பாட்டி சிரிக்க வைக்கவில்லையா? எவ்வளவு ஆசை பாருங்கள் ?1. இந்த ஆசை இருந்தததால்தான் கொஞ்சம் கூட அச்சமின்றி ,சென்னை கலைவாணர் அரங்கில் , கலைஞர் முன்னிலையில் நான் நடித்தேன். என் நண்பர் சாவியும் வந்திருந்தார். அப்பொழுதும் என் வயது 41.அந்த நாடகத்தின் நாயகியே நான் தான்

எங்கள் நாடகத்தின் சிறப்புக்குக் காரணமானவரின் பெயர் சோம மகாதேவன். பத்திரிகைளில் வேலை பார்த்தவர். ஏறத்தாழ 400 சிறு கதைகள் வெளிவந்திருக்கும். மண்வாசனை வீசக் கதை எழுதியவர் சோம மகாதேவன். நாடகக்கம்பெனிகளில் சேர்ந்து பல மேடைகளில் தோன்றி யவர். வயதான காலத்தில் அரசு அவருக்குக் கிராம நல ஊழியர் பணி கொடுத்தது. சிறப்புத் தகுதிகள் உள்ளவர்களுக்கு வயதிலும் கல்வியிலும் சலுகை உண்டு. அப்படி அவர் திறமையால் வேலைக்கு வந்தவர். அவர்தான் எங்கள் நாடக மாஸ்டர். சொல்ல நிறைய இருக்கின்றது

அலைகள் இன்னும் வரும்