Sunday, October 31, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 24


காஞ்சியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். ஒரு அறையில் நான் உட்கார்ந்திருந்த பொழுது, அங்கே திடீரென்று சிலர் வந்து அமர்ந்தனர். வந்தவர் ஒரு பிரமுகர் என்று அருகில் இருந்தவர் கூறீனார். என்னை அந்த பிரமுகருக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஒரு அதிகாரி.

”இந்த அம்மா பெயர் திருமதி சீதாலட்சுமி. நம்ம மாவட்டத்துக்குப் புதுசா வந்திருக்கற மகளிர் நல அதிகாரி.”


நான் அவருக்கு வணக்கம் செலுத்தினேன்.


பிரமுகர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

“உங்க டிபார்ட்மெண்டுலே பொம்புள்ளங்க ஒழுங்கா வேலை பாக்க மாட்டாங்களா?”

”ஏன் அப்படி சொல்றீங்க?”

”எங்க ஊர்லே ஒருத்தி இருக்கா; அவ செய்யற வேலை என்ன தெரியுமா? பிராத்தல் ஹவுஸ் நடத்தறா! எங்க ஊருக்கு வந்து பாருங்க.”

அங்கிருந்தவர்களில் சிலர் கொல்லென்று சிரித்தனர். எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவும். அப்பொழுது நான் என்ன பேசினேன், அதன் தொடர்ச்சி என்ன என்பது தனிக்கதை.

ஐந்து கணவர்களுக்கு முன்னிலையில், நடுச்சபையில் அன்று திரெளபதி அவமானப்படுத்தப்பட்டாள்.

அன்னிய மண்ணில் ஊர் கூடியிருக்க, தேவர்களும் பெரியவர்களும் கூடியிருக்கக் கட்டிய கணவரே தீச்சொற்களை வீசி அக்கினிக்கு விரட்டப்பட்டாள் சீதை

அய்யா, பெண்னை அவமானப்படுத்துவது இதிகாச காலத்தில் இருந்து வரும் தொடர் நிகழ்வு. பெண்ணாய்ப் பிறந்தது எங்கள் குற்றமா? இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றா இரண்டா? மனம் வலிக்கும் பொழுது நான் ஓடித் தஞ்சம் புகும் இடம் தேனம்பாக்கம் அல்லது கலவை.


தேனம்பாக்கம்


இறைசக்தியை, தவத்தின் அருமையை உணரவைக்கும் அற்புதமான இடம். அங்கே ஆடம்பரம் கிடையாது. சத்தங்கள் இல்லாத ஒரு சத்திய பீடம். அங்கே தரிசிப்பதும் அமைதி; உணர்வதும் அமைதி. காஞ்சியில் இருக்கும்வரை நான் அடிக்கடி அங்கு போய் அமைதியாக உட்கார்ந்து விட்டு வருவேன். யாருடனும் பேச வேண்டியதில்லை. அங்கே நடமாடிக் கொண்டிருக்கும் மகாப்பெரியவரை தரிசித்தால் போதும்; எங்கும் கிடைக்காத நிம்மதி கிடைக்கும். சிலசமயம் கலவைக்கும் தரிசனத்திற்குச் சென்றிருக்கின்றேன்.

என்னுடைய பணியில் சோதனைகள் அதிகம். ஆத்மார்த்தமாகப் பணியாற்றுபவர்களுக்கு போராட வேண்டிவரும். சாதாரணப் பிரச்சனையென்றால் ஜெயகாந்தன் குடில் போவேன். என் மனத்தையே ஆட்டி வைக்கும் நிலை வரும் பொழுது தவக்குடிலுக்குச் சென்று விடுவேன். உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு கடவுளிடம் கேள்விகள் கேட்பேன்

இறைவா ஏன் பெண்ணைப் படைத்தாய்? மனித உணர்வுகளுடன் படைத்ததற்குப் பதிலாக ஓர் இயந்திரமாகப் படைத்திருக்கக் கூடாதா? வலியில்லாமல் இருப்போமே!

மனம் புலம்பிக்கொண்டே இருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி அமைதி பிறக்கும். அத்துடன் எதிர்த்துப் போராட புதுசக்தியும் பிறக்கும். இதனை உணரத்தான் முடியுமே தவிர வார்த்தைகளில் வடிக்க முடியாது. இது எப்படி என்ற கேள்வி எழலாம்; தவறல்ல. என் அனுபவத்தைக் கூறுகின்றேன்- அவ்வளவுதான்.

மகாப்பெரியவர்!

சில நேரங்களில் உட்கார்ந்திருப்பார்; சில நேரங்களில் நடந்து கொண்டிருப்பார்; சாதாரணத்தரையில் துணிவிரித்துப் படுத்துமிருப்பார்; அங்கே போகின்றவர்கள் இந்தக் காட்சிகளைக் காணலாம். ஏதோ கூண்டுக்குள் அவர் இருப்பது போன்று தெரியும். சில விநாடிகள் பார்த்துக்கொண்டு நாம் நின்றால் நாம் தான் உலகச் சிறைக்குள் இருக்கின்றோம் என்பதை உணர்வோம். பாசவலையில் கட்டுண்டு ஏதோ ஒரு வாழ்க்கையை ”நிலை” என்று கருதி வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

சில நேரங்களில் பெரியவர் அங்கே வந்திருப்பவர்களைப் பார்த்துப் புன்னகைப்பார்; அருகில் வரச் சொல்லி கையசைப்பார்; நம்மைப்பற்றி விசாரிப்பார்; குழந்தையைப் போல் சிரிப்பார்; அந்த தரிசனம், அந்த சில நிமிடங்களில் மனம் லேசாகிவிடும். அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன்.

யாராவது ஒருவர் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருந்தால் நமக்கு குறுகுறுவென்று உணர்வு தோன்றும். கூட்டம் இருந்தால், அங்கே அமைதி இருக்காது. அங்கே வருகின்றவர்கள் யார், என்ன பேசுகின்றார்கள் என்ற சிந்தனையின்றி ஓர் மாமனிதர் அமர்ந்திருக்கின்றார். அவருடைய புலன்கள் அவரின் கட்டுப்பாட்டில்! மனம் அந்த முனிவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை நாம் நேரில் உணரலாம். நாமோ நம் மனத்திற்கு அடிமையாகி குரங்காட்டம் ஆடுகின்றோம். அதனால் எத்தனைத் தப்புத்தாளங்கள்!

விமர்சனத்திற்கு வீழ்ந்துவிட்டால் நாளை புகழுக்கும் அடிமையாக வேண்டிவரும். கடமைகளைச் செய்யும் பொழுது பற்றற்று செயலாற்ற வேண்டும். இதுதானே கீதையும் சொல்கின்றது! அந்த தவச்சாலையில் சிறிது நேரம் கண்மூடி தியானத்தில் அமர்ந்துவிட்டால் சுமந்து கொண்டிருக்கும் சுமைகள் மறைந்துவிடும். இதனை ஒருவர் அனுபவத்தால்தான் உணர முடியும்.

மறைந்த இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் மகாப்பெரியவரை தரிசனம் செய்ய வந்திருந்தார்கள். அங்கே பேச்சில்லை. கண்மூடி தியானம் செய்தார்கள். பல பெரியவர்கள் அவர் முன் உட்கார்ந்து எதுவும் பேசாமல் தியானம் செய்துவிட்டுப் போவதைப் பார்த்திருக்கின்றேன்.

திரு.மணியனுடன் மடத்திற்குப் போவோம். அங்கே உட்கார்ந்து பேச ஆரம்பித்தால் நிறைய பேசுவார்கள்.

இந்துக்களின் மனங்களில் உயர்ந்த பீடத்தில் இருப்பவர். அவர் விரும்பியிருந்தால் அவருக்கு அத்தனை வசதிகளையும் செய்து தந்துவிடுவார்கள். ஆனால் அவரோ துவராடைக்குள் பொதிந்து, எளிய உணவு உண்டு , படுப்பது கூட ஒற்றைத் துணிவிரித்துத் துயில் கொள்ளும் அவரைப் பார்க்கும் பொழுது சன்னியாசத்தின் அர்த்தம் தெரியும். சில நாட்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். என் வாழ்க்கையில் அந்த மணித்துளிகள் கிடைத்ததைப் பெரிய பாக்கியமாகக் கருதுகின்றேன்.

குரோம்பேட்டையருகில் ஒரு கோயிலில் இருந்த அன்னபூரணி விக்ரஹம் சிதிலமடைந்தது. பக்தர்கள் மகாப்பெரியவரை அணுகித் தெரிவித்த பொழுது அதனைக் கடலில் இட்டு விட்டுப் புதியதாக ஒரு சிலை செய்துவரச் சொல்லிப் பணித்தார். பக்தர்களும் அவ்வாறே செய்து புதிய சிலையுடன் காஞ்சிக்குச் சென்றனர். ஆனால் மகாப்பெரியவர் அங்கில்லை. இரவாகிவிட்டது. எப்படியும் அவரைத் தரிசிக்க விரும்பி அவர்கள் போன பாதையைக் கேட்டு பக்தர்கள் விரைந்தனர். நள்ளிரவாகிவிட்டது. ஆனாலும் கார் ஓடிக் கொண்டிருந்தது. ஆட்கள் அரவமில்லா இடமாக இருந்தது. தூரத்தில் வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன. அங்கே சென்ற பொழுது மகாப்பெரியவரின் சிஷ்யர்கள் இருப்பதைக் கண்டனர். சின்ன விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

அங்கே ஓரிடத்தில் இருந்த பல்லக்கில் பெரியவர் உறங்கிக் கொண்டிருந்தார். சூழ்நிலையைப் புரிந்து கொண்ட பக்தர்கள் அமைதியாக நகர ஆரம்பித்தனர். ஆனால் அதற்குள் பல்லக்கிலிருந்து மகாப்பெரியவர் வெளிவந்து அருகில் வந்துவிட்டார். யாரும் பேசக் கூட இல்லை. பக்தர்கள் மெய்மறந்து போய் பிரமித்து நின்றுவிட்டனர். ஸ்வாமிஜி அருகில் வந்து விபரம் கேட்டு புதிதாக செய்து கொண்டு வந்த அன்னபூரணி சிலையைப் பார்த்தார். பிறகு தொட்டுத் தொட்டுப் பார்த்தார். அவர் முகம் பூவாய் மலர்ந்தது. கோயிலில் கொண்டு போய் இனி பிரதிஷ்டை செய்யலாம் என்று அருள் கூர்ந்தார்.

இதனால் நாம் என்ன தெரிந்து கொள்ளமுடிகின்றது?

திருமாலின் அனந்தசயனமும் சிவனின் மோனத்தவமும் காட்சிகள் தான். எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும் சக்திகள். சிறிய அசைவு கூட அவனின்றி எதுவும் இல்லை. நமக்குத் தெரியாததால், உணர்ந்து கொள்ள முடியாததால் தவவலிமையைப் பொய் என்று கூறுதல் சரியாகாது.

ஜெயகாந்தனின் "ஜெய ஜெய சங்கர “ தொடர் சாதாரணமான கதையல்ல. ஆன்மீகம், காந்தீயம், கம்யூனிசம் என்று அவர் ஆன்மாவின் விருப்பங்களை அருவியாய் ஓடவிட்டிருக்கின்றார். அன்பே சிவம்; மனிதநேயமே அறம்; அங்கே ஆதியின் வாழ்க்கை, அவர்கோட்பாடு இவைகள் மூலம் வாழும் தத்துவத்தைக் காட்டி இருக்கின்றார்..


ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

காஞ்சியில் எனக்குக் கிடைத்த இன்னொரு அனுபவத்தையும் கூறவேண்டும். மனிதன் என்றால் எல்லோருக்கும் சின்னச்சின்ன ஆசைகள், பெரிய ஆசைகள், ஏன் பேராசைகள் கூட இருப்பது இயல்பு. எனக்கும் ஒரு பேராசை இருந்தது. அது ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு

திரு.கே.எம். ராஜகோபால் - காஞ்சிபுர ஊராட்சி ஒன்றியத்தலைவர்; சட்டமன்ற உறுப்பினர்; திராவிடக்கழகத்தின் தீவிர உறுப்பினர். இலக்கியம் தெரிந்தவர். கம்பராமாயணம், பெரியபுராணம் புத்தகங்கள் கையில் இல்லாத நிலையிலும் எந்த கேள்விகள் கேட்டாலும் இடத்தையும் மேற்கோள்களையும் காட்டிப் பேசும் புலமை மிக்கவர். என் அண்டை வீட்டுக்காரர் என்று சொல்லும் அளவு அருகில் வசித்தவர்.

முப்பத்தெட்டு வயதில் கல்லூரியில் சேர்ந்து தமிழ் படித்து வந்தவுடன் காஞ்சிக்குத் தான் மீண்டும் பணிக்கு வந்து சேர்ந்தேன். என் இலக்கியப் பசிக்கு உதவியவர். எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது அவர் இல்லத்திற்குச் செல்வேன். அவர் வீட்டிற்கு முன் இருக்கும் திண்ணையில் உட்கார்ந்து காரசாரமான விவாதம் நடத்துவோம். வெவ்வேறு கொள்கைகள் உடையவர்கள். ஆனால் எங்களுக்குள் மனக்கசப்பு வந்ததில்லை. ஒரு நாள் நடந்த உரையாடலைப் பதிய விரும்புகின்றேன்.

”உங்கம்மா ஏன் காலையிலே எழுந்திருந்து லொங்கு லொங்குன்னு கோயிலுக்கு நடக்கறாங்க? பாவம் கிழவி, வீட்டுக்குள் இருக்கக் கூடாதா?”


அவரைச் சில வினாடிகள் பார்த்துவிட்டு அவரை ஒரு கேள்வி கேட்டேன்.

”ஆமாம், நீங்க இப்படி தொடர்ந்து சிகரெட் குடிக்கிறீங்களே, ஏன்?”

”எனக்கு சிகரெட் புகைக்கப் பிடிக்கும்.”

”சிகரெட் புகை நுரையீரலைக் கெடுக்குமே; வியாதிவரும். இப்படி உடம்பைக் கெடுத்துக் கொள்ளலாமா?”

”எனக்குப் பிடிச்சிருக்கு; பழகிப் போச்சு. விட முடியாது. அதுசரி, நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலியே?”

”சொல்றேன். எங்கம்மா அதிகாலையிலே எழுந்திருப்பாங்க, குளிப்பாங்க. அப்புறம் கோயிலுக்கு நடப்பாங்க. இதெல்லாம் உடம்புக்கு நல்லது.”

நான் இதைச் சொல்லிவரும் பொழுது அவர் ஏதோ சொல்ல வந்தார் அதனைக் கையசைத்து நிறுத்திவிட்டு என் பேச்சைத் தொடர்ந்தேன்

”எங்கம்மா, கோயில்லே சாமி கும்பிடுவாங்க. கடவுளைக் கும்பிட்டால் கஷ்டம் குறையும்னு நினைச்சு செய்யறாங்க. கஷ்டம் குறையுதோ என்னமோ, நம்பிக்கை இருப்பதால் மனசு லேசாகும். மன அழுத்தம் குறையும். B.P வராது. உடம்புக்கு எல்லா வகையிலும் ஆரோக்கியம். உடம்பைக் கெடுக்கற இந்த புகையைவிட உடம்புக்கு நல்லது செய்யற அந்த கல்லைக் கும்பிடப் போறதில் என்ன தப்பு.”


”அது மூடப் பழக்கம்.”

”நீங்கப் புகைக்கறது கெட்ட பழக்கம். அவங்க பழக்கத்துலே அவங்களுக்கு நல்லது கிடைக்குது. உங்க பழக்கத்துலே உடம்புக்கே கெட்டது நடக்குது. உங்க குடும்பத்திலே யாரோ கோயிலுக்குப் பொங்கல் வைக்கப் போனாங்களே, அப்போ நீங்க என்ன செய்துகிட்டிருந்தீங்க?”

”இந்தப் பொம்புள்ளங்க எங்கே பேச்சைக் கேட்கறாங்க?”

”உங்க வீட்டைத் திருத்த முடியல்லே. ஊருக்கு உபதேசம். சாதியப்பத்திப் பேசினா ஒரு சாதியைத்தான் திட்டறீங்க. மூடப்பழக்கம்னு தாக்குதலும் ஒரு மதத்தில் மேல்தான். என்னய்யா சீர்திருத்தம் இது? முதல்லே உங்க வீடுகள்ளே சொந்த சாதியிலே கட்டாதீங்க. உங்க வீட்டு மனுஷங்களைக் கோயிலுக்குப் போக விடாதீங்க.”

”பேசத் தெரிஞ்சவங்க பேசறீங்க.”

”பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிச்சவங்க நீங்க. உங்களுக்குத் தெரியும் எனக்கு சாதிகள் பிடிக்காதுன்னு. நான் கடவுளை நம்பறவ. கோயிலுக்கும் போவேன். சர்ச்சுக்கும் போவேன். எந்த மதத்தையும் திட்ட மாட்டேன்.”

அவரால் பதில் கூற முடியவில்லை. கோபப்படவும் இல்லை. எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். நல்ல மனிதர். நாங்கள் இருவரும் வெளிப்படையாகப் பேசுகின்றவர்கள்.

அவரிடம் என் ஆசை ஒன்றைக் கூறியிருந்தேன். தந்தை பெரியார் அய்யாவைப் பார்க்க வேண்டும். பெரிய மனிதர்களைப் பார்ப்பது என் போன்ற அதிகாரிகளுக்குக் கஷ்டமில்லை.சாதாரண அறிமுகமும் ஓரிரண்டு வார்த்தைகளும் பேசிட முடியும். நான் விரும்பியது அதுவல்ல. என்னைப் பற்றி தெரிந்து, பின்னர் அய்யா அவர்களைப் பார்க்க வேண்டும்.அவர் என்னை என்ன கேள்வி கேட்பார், நான் என்ன பதில் சொல்வேன் என்று பார்க்க வேண்டும். எப்பேர்ப்பட்ட பேராசை பார்த்தீர்களா?

என் ஆசையை நிறைவேற்றி வைத்தார் திரு கே.எம்.ஆர் அவர்கள்.
காஞ்சிக்கருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஓர் திருமணம் அய்யாவின் தலைமையில் நடப்பதாக இருந்தது. எனக்கும் அழைப்பிதழ் வந்தது. அய்யாவைப் பார்க்கும் ஆவலில் அங்கு சென்றேன். திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்தில் சேர்மன் என்னிடம் வந்து அய்யாவைப் பார்க்க அழைத்துச் சென்றார்

அப்பப்பா, என்ன கம்பீரம்.! அந்த வெண்தாடிக் கிழவரை வணங்கினேன்.

என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே,“ஆமாம் நீ கோயிலுக்குப் போவியாமே, ஏன் போறே?“ என்று எடுத்த எடுப்பில் கேள்விக் கணையை வீசி விட்டார்.

ஏனோ பயமோ தயக்கமோ வரவில்லை.பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அய்யாவின் குரலை ரசித்துக் கொண்டிருந்தேன். பதில் சொல்ல வேண்டுமே, சொன்னேன்.

“எனக்குப் பிடிச்சிருக்கு; போறேன்.”

அவ்வளவுதான், என் பேச்சைக் கேட்கவும் பலமாகச் சிரித்தார்.

“பாருய்யா, இவளுக்குப் பிடிச்சிருக்காம்.” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூர்ந்து பார்த்தார்

“எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு, பொம்புள்ளைங்க இப்படித்தான் துணிச்சலாப் பேசணும். பயப்படக்கூடாது. பொண்ணுங்க படிக்கணும். துணிச்சலா இருக்கணும் “

அங்கே பாரதியின் நினைவு வந்தது. அய்யா அவர்கள் பாரதியைவிட பெண் விடுதலைக்கு உரத்த குரல் கொடுத்தவர் .பெண்ணியம் பேசும் எனக்கு எப்படி அய்யாவைப் பிடிக்காமல் இருக்கும்!

இந்தப்பதிவைப் படிக்கின்றவர்களுக்கு எழும் சந்தேகங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஒரே இடுகையில் காஞ்சி பரமாச்சாரியார் அவர்களைப் பற்றியும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் எழுதி இருவரையும் எனக்குப் பிடித்திருக்கின்றது என்று சொல்லி இருக்கின்றேன்.
எங்கெங்கு சமுதாயநலனுக்கு, பணிசெய்ய ஊக்கம் கிடைக்கின்றதோ அவைகளை ஏற்றுக் கொள்கின்றேன். மதிக்கின்றேன். எனக்கு முக்கியம் ஒவ்வொரு குடும்பமும் சண்டை சச்சரவின்றி அமைதியாக வாழ வெண்டும். இது பேராசையா? இந்த விஷயத்தில் நான் ஒரு செக்கு மாடு போன்றவள். படித்தாலும், பார்த்தாலும், பழகினாலும், எழுதினாலும் என் நோக்கம் ஒரே குறிக்கோளுடன் சுற்றிக் கொண்டிருக்கும். வயதாகி ஒடுங்கிப் போன காலத்திலும் என்னால் முடிந்ததைச் செய்துவருகின்றேன்.

அய்யா அவர்களை இன்னும் கொஞ்சம் அவசியம் பார்க்க வேண்டும். அவருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வோம். அவர் பேசியவைகள் அனைத்தும் எழுத முடியாவிட்டாலும் ஒன்ரிரண்டாவது பார்க்கலாம்.

"ராஜாரம்மோகன்ராய் பெண்களுக்கு ஒரு துரோகம் இழைத்துவிட்டார். செத்த புருஷனோடே பொண்டாட்டியயும் கொளுத்திட்டா அப்புறம் அவளை இந்த சமுதாயம் வதைக்க முடியாதே. தாலி அறுத்த பொண்ணுக்கு சுகம் ஏது?. எங்கேயோ சொர்க்கம் இருக்காமே அங்கேயே இருந்து தொலைக்கட்டும். ஐந்து நிமிட வலியுடம் கஷ்டம் முடியும்."

அப்பப்பா, என்ன ஆத்திரம் ?

”புள்ளை உண்டாயி கஷ்டப்படறதைக் காட்டிலும் கருப்பையை அறுத்து தூர எறியணும்”

“பெண்கள் மதிப்பற்று போவதற்கும் அவர்கள் வெறும் போகப் பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசமாகத் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும் “

(குடியரசு இதழ் 15-6-1943)

இப்படி கூறுவதால் பெண் சுதந்திரம் பாதிக்கப் படுகின்றதா? ஜெயகாந்தன் சொன்ன சுதந்திர அடிமைகள் இதுதான். பாலியல் சுதந்திரம் பெண்களுக்கு வேண்டுமென்று பெண்களைவிட ஆண்கள் வரிந்து கொட்டி எழுதுகின்றார்கள். இதனால் அதிகப்பயன் யாருக்கு?

சுதந்திரம் என்ற பெயரில் வாழ்க்கையில் சீக்கிரம் சக்கையாகிவிட வேண்டுமா?

அய்யா அவர்கள் சொல்வதைப் பாருங்கள்.

“புருஷன் கள்ளத்தனமா ஒருத்தியை வச்சுக்கிட்டா பெண்ணும் மூணு பேரை வச்சுக்கட்டும். அப்பொத்தான் இவனுக்கு புத்திவரும்.”

இதுவரை இப்படிச் சொன்னவர் யார்? அதற்காகப் பெண்களை அழிந்துவிடச் சொல்லவில்லை. அவருடைய் ஆத்திரம் எரிமலையாக வெடிக்கின்றது.
அய்யாவைப் பின்பற்றுகின்றவர்களின் பேச்சில், அவருக்கு மிகவும் பிடித்தமான “பெண்விடுதலை” அதிகம் தொனிக்கவில்லை. அதுமட்டுமல்ல; மேடையில் பெண்களைக் கேவலமாகப் பேசுவதைத் தடுப்பதும் இல்லை.

பண்பாடு பற்றி நாம் நிறைய பேசுகின்றோம். எனவே வாழ்க்கையில் ஒழுக்க விதிகளை முன் மாதிரியாக பின்பற்ற வேண்டும்.
எங்களுக்கு வெற்றுப்பேச்சும் வெறும் புகழ்ப்பாட்டும் வேண்டாம். எங்களை மரியாதையுடன், மனிதப்பிறவிகளாய் நடத்துங்கள். இதுவே என் வேண்டுகோள்.

சில நலத்திட்டங்களைத் தீட்டுவது மட்டும் போதாது. முதலில் அவரவர் குடும்பங்களில் பெண்கள் கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் யாரையும், எக்கட்சியினரையும் தனிப்பட நினைத்து இதனைக் கூறவில்லை. சமுதாயத்தில் ஒரு சக்தியாக இயங்கும் அரசியல் அமைப்புகளூக்கு இந்தக் கிழவியின் வேண்டுகோள்.

மதங்களிலும் நன்னடத்தை பேசப்படுகின்றது. நாங்கள் இறைபக்தியுள்ளவர்கள் என்று கூறுபவர்களும் தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் பார்க்கக் கூடாது என்று முடிவு எடுக்கட்டும்.

ஆன்மீகவாதிகளும் அரசியல்வாதிகளும் நன்னடத்தைக்கு வழிகாட்டிகளாக இருப்பதைக் கண்டிப்பாக்கினால், எங்களின் பல குறைகள் குறையும். முற்றிலும் போகாது என்று தெரியும். ஏனென்றால் நாம் மனிதர்கள். சஞ்சலப் புத்திக்காரர்கள்.

பெண்ணைக் கெடுக்கின்றவன் கெட்டிக்கரத்தனமாகத் தப்பிக்கின்றான். அறையில் பட்ட அவலத்திற்கு மேலாக நீதிமன்றத்தில் வக்கீலின் வாதங்களில் அவமானப்பட வேண்டும். அங்கம் அங்கமாக நடந்ததை விசாரிப்பார். என்ன கொடுமையடா ?

அனுராதா ரமணனின் “சிறை“ கதை நினைவிற்கு வருகின்றது. அற்புதமான கதை. நெஞ்சக்கொதிப்பை அப்படியே தத்ரூபமாகக் காட்டியிருப்பார்.

இன்று பெண்ணின் நிலையென்ன?


கருவிலேயே கொலை.

பிறந்த பின்பும் கொலை

பெண் குழந்தையென்றால் பெற்றவள் கூட சோற்றைக் குறைத்துவிடுகின்றாள்.

இது பத்திரிகை செய்தில்ல. நான் ஆய்வு செய்திருக்கின்றேன்.

பள்ளிக்குச் செல்லும் பெண் வீடு திரும்புமா என்ற நிலை.

பெண் என்றால் மனைவி படும் கஷ்டம், அவள் ஆடையலங்காரம் போன்றவைகள் தானா?

ஒரு சில பெண்கள் கல்வி, உயர்ந்த உத்தியோகம் என்றால் பெண் சமுதாயமே விடுதலை பெற்ற தாகுமா?

பெண்ணுக்கு ஆண் மட்டும் சோதனை கொடுக்கவில்லை. பெண்ணே பெண்ணுக்குத் தீங்கிழைக்கின்றாள்.
சுதந்திரக்காற்றின் மணத்திலே மயங்கி எத்தனை பேர்கள் தடம் மாறி அவலநிலைக்குப் போயிருக்கின்றார்கள்?

தனக்குத்தானே அறியாமல் தீங்கு செய்து கொள்கின்றாள்.

“பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப்
பீழை இருக்குதடி “
என்று பாடினானே பாரதி. அதுதான் உண்மை.
பெண்ணாகப் பிறந்தாலே ஏற்படும் சோதனைகள், வேதனைகள் உலகம் முழுவதும் பொதுவானது.

இந்தத் தொடர் அடுத்த பதிவுடன் முடிய இருக்கின்றது. துன்பம் நீங்க “சுந்தர காண்டம்” படிக்கச் சொல்லுவார்கள். நானும் இப்பொழுது படிக்கலாம் என நினைக்கின்றேன்

ஜெயகாந்தன் எழுதிய சுந்தர காண்டம் பார்ப்போம்.

(தொடரும்)

நன்றி: திண்ணை

Saturday, October 16, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 23"நகரேஷு காஞ்சி" - சொன்னவன் ஓர் வடமொழிப்புலவன். கல்விச்சாலையாக, கலைக்கோயிலாக,பல்சமயத்தலமாக, அத்துடன் அரசியலிலும் பெருமைபெற்று தொன்றுதொட்டு விளங்கும் நகர் காஞ்சி.

அந்தக் காஞ்சியில் நான்கு வருட வாழ்க்கை. என் சில தேடல்களுக்கு விடைகள் கிடைத்த இடம்; சில ஆசைகள் நிறைவேறிய இடம்; வாழ்க்கைப் பயணத்தில் ஏற்றம் கண்ட இடம்; இன்றும் என் நினைவில் வாழும் இடம்

காஞ்சியில் வாழ்ந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஓர் கலைஞன். எழுத்தாளன். அவன் எழுதிய நகைச் சுவை நாடகம் போற்றி புகழப்பட்டது. கல்லை கலைவண்ணங்களாக்கி, புதுமை படைத்தவன். எதிரியையும் மயக்கிப் பரிவை ஏற்படுத்தி , பரிசளிக்க வைத்த கைலாசநாதர் கோயிலை கட்டுவித்த இராசசிம்மன் வரலாற்றில் புகழ் படைத்தவன். தமிழுக்கு ஓர் தண்டி மட்டுமல்ல, கலம்பகம் கேட்கத் தன்னுயிரைத் தந்த நந்திவர்மன கதையும் வரலாற்றில் பேசப் படுகின்றன. காஞ்சியில் இன்றும் வரலாற்று நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்திய நாட்டு சுதந்திரத்திற்காகப் போராடி வெற்றி கண்ட காங்கிரஸ் ஆட்சியை மாற்றி, அரியணையில் முதலில் ஏறிய அறிஞர் அண்ணா தோன்றியதும் காஞ்சியில்தான்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கமும் காஞ்சி மண்ணில்தான். அறிஞர் அண்ணாவின் ஊரில்தான் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று விரும்பிய மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் காஞ்சியில் பஜார் தெருவில் தேர்முட்டிக்கருகில் அறிவிப்பு செய்தார்.

காஞ்சிப்பட்டின் அழகுபற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அப்பேர்ப்பட்ட காஞ்சியில் பல ஆண்டுகள் வாழ நேர்ந்தது எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு!

பிள்ளைப் பருவ முதல் இன்று வரை மாறாது இருக்கும் ஓர் குணம் - “தேடல்”. படிப்பது, அறிஞர்களைச் சந்தித்து கேள்விகள் கேட்பது, இடங்களைப் பார்ப்பது, விஷயம் தெரிந்தவர்களிடம் விவாதிப்பது, இவைகள் என் தேடலுக்காக நான் கடைப்பிடித்த முயற்சிகள்.

ஒரு கேள்வி! கடவுள் உண்டா இல்லையா?

ஷஷ்டி விரதம் இருந்து சங்குப்பால் குடித்து விரதமிருந்து என்னைப் பெற்றார்களாம் என்னைப் பெற்றவர்கள். எனவே குழந்தை மனத்தில் முருகனை விதைத்து ஆலயம் கட்டியது என் அம்மா. இன்று வரை அந்த ஆலயத்தில் முருகன் அழகாக வீற்றிருந்து புன்னகைக்கின்றார் .

பின் என்ன பிரச்சனை? எனக்குள் நிறைய சந்தேகங்கள்! புராணங்கள் உண்மையா?

பிள்ளைப் பருவத்தில் படிக்க ஆரம்பித்தவுடன் நான் படித்தவைகளில் தந்தை பெரியாரின் உரைகளும், சின்னப் புத்தக வடிவில் அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகளும் அடங்கும். எங்கள் காலத்தில் அண்ணாவின் அழகுத் தமிழில் ஓர் மயக்கம். கடவுளைப்பற்றியும், ,புராணங்களைப் பற்றியும் அவர் செய்த விமர்சனங்கள் இளம் உள்ளாங் களை ஈர்த்தன. முருகனை நெஞ்சிலே ஏந்திக் கொண்டு நானும் அந்த விமர்சனங்களைப் பேசிக் கொண்டிருந்தேன்

நான் படிக்கச் சென்ற கல்லூரி கன்னியாஸ்திரீகளால் நடத்தப்பட்ட ஒன்று.

அவர்களின் அன்புக்குரலிலும் மெய்மறந்தேன்.ஏற்கனவே சுவாமி சிவானந்த மகரிஷியுடன் கடிதத் தொடர்பு இருந்துவந்தது. அவர் அனுப்பி வைத்த புத்தகங்கள் அனைத்தும் படித்தேன். ரிஷிகேஷம் போய் துறவறம் பூண வேண்டுமென்ற ஆசையும் வளர்ந்தது.

கடந்த கால நினைவுகளில் புரளும் பொழுது ஒரு கதையின் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை. ஜெயகாந்தன் எழுதிய கதை “துறவு “.

இளவயது அதிலும் குறிப்பாக “டீன் ஏஜ் “ என்று சொல்ல கூடிய இரண்டுங்கெட்டான் காலத்து உணர்வுகளை அப்படியே படம் பிடித்துக்கட்டுகின்றது. நாமும் காட்சிகளுடன் நகரலாம். ஜெயகாந்தன் வரிகளில் காண்பதுதான் சரியாக இருக்கும்.

சோமுவுக்கு வயது பதினைந்துதான் .அதுதான் மனிதனுக்குப் பித்துப் பிடிக்கும் பருவம். சோமுக்குவுக்கு அங்க வளர்ச்சிகளும் , ஆண்மை முத்திரைகளும் ஏற்படும் பருவம் அது. உடலிலும் மனசிலும் சதா ஒரு துடிப்பும் வேகமும் பிறந்தது.மனம் சமபந்தமில்லாத ஸ்தாயிகளிலெல்லாம் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது.உலகையும் வாழ்வையும் அறிய உள்ளம் பரபரத்தது. ஏதோ ஒரு இடத்தைத் தொட்டவுடனே எல்லா இடத்தையும் தொட்டுவிட்டதாக எண்ணி இறுமாந்தது.

சோமுவும் எதை எதையோ நினைக்க ஆரம்பித்தான் உற்றார், உறவினர், வாழ்வு அனைத்திலும் வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது. தனிமையை நாடினான். வீடே வெறுத்தது. சோமுவுக்கு வந்தது வேதாந்தப் பித்து. சுவாமி அருளானந்தரின் சொற்பொழிவைத் தொடர்ந்து கேட்டதில் சோமுவுக்கு ஞானம் பொழிய ஆரம்பித்தது.

“ஆமாம்,தாய், தந்தை,உடன்பிறந்தார்,சுற்றம்,செல்வம்,உலகம் எல்லாம் பொய்தானே? சாவு வரும். அதுமட்டும் தான் உண்மை.அந்தப்பெரிய உண்மைக்கு நேரில் இவையெல்லாம் அற்பப் பொய். படிப்பு ஏன்? சம்பாதனை ஏன்? முடிவில் ஒரு நாள் செத்துப் போவேனே .. அப்பொழுது இவற்றில் ஏதாவது ஒன்று, யாரவது ஒருவர் என்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியுமா, என்ன எல்லாம் வெறும் பொய். மரணத்தை மனிதன் வெல்ல முடியாது. ஆனால், ஆசைகளைத் துறப்பதன் மூலம் மனிதன் கடவுளை அடையலாம். “

கடவுளைக் காண கைலாயம் புறப்பட்டுவிட்டான். வீட்டில் சொல்லவில்லை. அழகு சுருட்டை முடியைத் துறந்தான். நடந்தான் நடந்தான்.நடந்தான். கால்கள் வலித்தன. பசியை அடக்க முடியவில்லை. போகும் பாதையில் காணும் நாவல் கனியைக் கூட ஆசையுடன் பார்க்க ஆரம்பித்தான். உடம்பு தளர தளர அவன் வைராக்கியமும் தளர ஆரம்பித்தது. அவன் நிலையைக் கண்ட ஓர் முதியவர் அவனிடம் பரிவுடன் நெருங்கினார். கனிவுடன் பேசி அவன் நிலையைப் புரிந்து கொண்டார். சுமைகளை உதறிவிட்டு வந்த சோமுவுக்கு சோறில்லாமல் வெற்றுடல் சுமையாக் கனக்கிறது. அவரிடம் அழுது கொண்டே பேசினான்.பக்தி வெறியும் வேதாந்தப் பித்தும் பிடிதளர்ந்தன. வீடு திரும்பவேண்டும் என்று சொன்னான்.

பந்தங்கள் இருந்தால்தான், பாசம் கொழித்தால்தான் பக்தியும் நிலைக்கும்” என்ற உண்மையை உணர்ந்தான். வீடு நோக்கித் திரும்பினான்.

சாதாரண கதையாகத் தெரியலாம். ஆனால் எப்பேர்ப்பட்ட தத்துவத்தை ஓர் சின்னப் பிள்ளையின் மூலமாகக் காட்டுகின்றார் ஆசிரியர்.

ஒரு சின்னப் பெண்ணின் வாழ்க்கையில் இருபது வயதுக்குள் எத்தனை எத்தனை சிந்தனைக் குவியல்கள் , குழப்பங்கள். நான் அனுபவபூர்வமாக அனுபவித்தவை. நல்ல வேளையாக நான் படிப்பைவிட்டு ஓடவில்லை. நினைப்புடன் நின்றுவிட்டேன்.

இக்காலமாக இருந்திருந்தால் துறவறத்திற்குப் பதிலாக வெள்ளித் திரையில் அல்லது சின்னத் திரையில் நடிக்கும் ஆசையில் ஓடிப் போயிருக்கலாம். இன்று நடப்பதைத்தான் கூறுகின்றேன்.

காலம் என்னை சமுதாய வீதிக்குக் கொண்டு சென்றது. அதற்குப் பிறகு இது போன்ற சிந்தனைகள் எதுவும் இல்லை. எப்பொழுதும் முருகன் மட்டும் என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் காஞ்சிக்கு வந்த பின்னர் என்னுடைய தேடல் என்னைத் தேடி வந்து ஒட்டிக் கொண்டது.

அன்று பிரிக்கப்படாத செங்கை மாவட்டத்தின் தலை நகர் காஞ்சி. நான் மாவட்ட சமூக நல அலுவலராக இருந்தத்தால் மாவட்டம் முழுவதும் பயணம் செல்ல வேண்டும். பல இடங்கள் சென்னை சென்று அங்கிருந்து போவதும் உண்டு.

தமிழ்ப் பித்து காரணமாக இரண்டாண்டுகள் விடுப்பு எடுத்து ராணி மேரி கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றேன். அக்காலத்தில்தான் பல இலக்கிய மேதைகள், எழுத்தாளர்கள்,பத்திரிகை நிருபர்களின் நட்பு கிடைத்தது. அவர்களில் ஜெயகாந்தனும் ஒருவர்

மயிலாப்பூர் கற்பகாம்பிகா கோயிலில் உதவி ஆணையாளராக திரு. நாகராஜன் பணியாற்றி வந்தார். என் நண்பர்கள் வட்டத்தில் அவரும் ஒருவர். நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்களிலும் சொற்பொழிவுகள் உண்டு. என்னையும் ஒருநாள் பேச்சாளாராகக் குறித்து அழைப்பு விடுத்தார்.

தலைப்பு “காஞ்சி காமாட்சி - காசி விசாலாட்சி “

இப்பொழுது நான் புராணங்கள் பற்றிப் பேச வேண்டும். ஸ்தல புராணங்கள் படித்தேன். பல கேள்விகள் என்னை முட்டித் தள்ளின. சங்கர மடத்தை சேர்ந்த ஒருவரை அணுகி என் சந்தேகங்களைக் கேட்டேன். என்னை முறைத்துப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்.

கேள்விகளில் இருவகை உண்டு. ஒன்று அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் பிறக்கும் கேள்விகள். இன்னொன்று கேலியாக் கேட்பது.

என் தேடல் முயற்சியில் ஒர் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டேன். உபநிஷதமடம் என்று சொன்னார்கள். அது ஒரு அழகான நந்தவனம். அங்கே வயதான ஒரு பெரியவர் இருந்தார். அவரிடம் போய் என் சந்தேகங்களைக் கேட்கச் சொன்னது ராஜம்மாள் என்ற ஒரு பெண்மணி. அவர் ஆன்மீகப்பற்று கொண்டவர்.

அந்தப் பெரியவரிடம் என் தவிப்பைக் கூறீனேன். அவரோ முகம் சுளிக்காமல் பொறுமையாகக் கேட்டு என் எல்லாக் கேள்விகளும் பதில் கொடுத்தார். பல ஆண்டுகளாக எனக்குள் இருந்த பல குழப்பங்கள் நீங்கின. பின்னர் நம்பிக்கையுடன் கோயிலுக்குப் பேசச் சென்றேன். எல்லோரும் பேச்சு நன்றாக இருந்தது என்றார்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு என் அணுகுமுறை பிடித்திருந்தது. கூட்டம் முடிந்தவுடன் என்னிடம் வந்து பேசினார்கள். அடுத்த வருடமும் பேசப் போனேன். மூன்றாவது முறை கூப்பிட்ட பொழுது நயமாக மறுத்துவிட்டேன். காரணம் என் குறை எனக்குப் புரிந்து இருந்ததால் ஒதுங்கிக் கொண்டேன்.

என் சொற்பொழிவு அர்த்தமுள்ளதாக இருக்கலாம். ஆனால் உருக்கமில்லை. ஆன்மீகச் சொற்பொழிவுகளில் உருக்கமும் இருக்க வேண்டும். எல்லோர் மதிப்பையும் பெற்ற உயர்திரு வாரியார் அவர்களின் பேச்சைக் கேட்டு மெய்மறப்பவள். அவர் ஒரு கடல். ஆன்மீக மேடைக்கு நான் பொருந்தாதவள் என்று என்னை உணரவைத்தவை வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுகள்தான்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுயதரிசனம் செய்து கொள்ள வேண்டும். இயலாமை என்பது பெரிய குற்றமல்ல. நமக்குத் தெரியாததைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் போலிதனம் தான் குற்றமானது.

சுயதரிசனம்” என்று ஓர் கதை எழுதியுள்ளார் நம் ஜெயகாந்தன். அதில் வரும் கணபதி சாஸ்திரிகளீன் பாத்திரப்படைப்பு தனித்தன்மை வாய்ந்தது.

எதையுமே சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும். என் அனுபவத்திலே செய்யறது கூட சுலபம். ஆனா சொல்றதுதான் கஷ்டமா இருக்கு

கண்பதி சாஸ்திரிகளின் கடித்ததின் வாசகங்கள் இது. அவர் யார்? எதைச் சொல்ல கஷ்டப்பட்டார்? அவருக்கு மகன், மருமகள், பேரக்குழந்தைகள் எல்லோரும் உண்டு. ஆனால் அவரோ யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் ஊரைவிட்டுப் ஓடிப்போய்விட்டார். ஏன்? வேதம் கற்றவர். பெரிய சாஸ்திரிகளின் மகன். அவரின் ஓட்டம் உணர்ச்சியால் உந்தப்பட்டாலும் நடந்த அவமானத்தை விவேகத்துடன் எடுத்துக்கொண்டுவிட்டார். அப்படியென்ன நடந்துவிட்டது.?

கனபாடிகள் அன்று அவரை மிகவும் கேலிசெய்து திட்டிவிட்டார்.

“மந்திரத்திற்கு அர்த்தம் சொல்லத் தெரியாத நீ பிராமணனா?” என்று பலர் முன்னிலையில் கேட்டுவிட்டு மேலும் கடும் சொற்களை வீசிக் காயப்படுத்திவிட்டார்.

கணபதி சாஸ்திரிகளை அந்தக் கேள்விகள் அப்படியே ஆட்டிப் படைத்தன. அவருக்கு அர்த்தம் சொல்லத் தெரியவில்லை. பூணூலை எறிந்துவிட்டு “நான் பிராமணன் இல்லை.“ என்று சொல்லிக் கொண்டு அந்த ஊரையேவிட்டு ஓடிப்போய் விட்டார்.

முதல் சில நாட்கள் அவருடைய மகன் அவர் இல்லாததைப் பொருட்படுத்தவில்லை. மருமகளும் அசட்டையாக இருந்தாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர் இல்லாதது உறுத்த ஆரம்பித்தது. அந்த தருணத்தில்தான் அவரிடமிருந்து கடிதம் வந்தது. சாஸ்திரி என்ற சொல்லை விடுத்து வெறும் கணபதியாக எழுதியிருந்தார்.

அவரின் சுய தர்சனம்.

“மந்திரங்கள் தெய்வீகமான, புனிதமான,பவித்திரமான விஷயங்களைப் பத்திப் பேசறதுங்கற நம்பிக்கையிலே அதை நான் மனனம் பண்ணிட்டேன். “தாய்ப்பால்லே என்னென்ன வைட்டமின் இருக்குன்னு தெரிஞ்சுண்டா குடிக்கிறது ! அது அவசியம் இல்லையா? நோயாளிக்கு மருந்துதான் முக்கியமே ஒழிய ஒவ்வொரு மாத்திரையிலேயும் என்னென்ன ரசாயனம் கலந்து இருக்குங்கற ஞானம் அவசியமா என்ன? அது போல்தான் மந்திரம். உனக்கு அது தேவை .அதை ஜபிப்பதன் மூலம் அதற்குரிய பலன்கள் உன்னை வந்தடையும் “னு ஒரு பெரிய மேதை எழுதியிருந்தார். அதைப்படிச்சப்பறம்தான் எனக்கு ஆறுதல் பிறந்தது. ஆனால் அந்த ஞானியின் இந்த வாதமும் எனக்குத் தக்க சமயத்துலே கைகொடுக்கல்லே. அறுபது வருஷமா அர்த்தமில்லாம பேத்திண்டே வாழ்ந்திருக்கேன் ..நான் இப்ப சாஸ்திரி இல்லே.எனக்கு, என் மனச்சாட்சிக்குத் துரோகம் செஞ்சுக்காத ஒரு நேர்மையான மனுஷன் நான் .”

தன் பெயருடன் இணைந்த சாஸ்திரி பட்டத்தைத் துறந்து சாதாரண மனிதராக வாழத் தொடங்கிவிட்டார். தன் மாற்றங்களை, உலகப் போக்குகளை விரிவாக எழுதியிருந்தார். அவர் மகனும் மருமகளும் உருகிப்போய் நின்றனர்.

அவருக்குக் கற்றுக் கொடுத்தவர் கோபக்காரர்.பயந்து கொண்டே அவரிடம் எந்தக் கேள்விகளும் கேட்க மாட்டார். அவர் சொன்னதைக் கேட்டு கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டுவந்து விட்டார். இருந்தாலும் தன் குறை உணர்ந்த பொழுது பொருந்தாத சாஸ்திரிகள் பட்டத்தைத் துறந்தார்.. இப்பொழுது அவரிடம் எந்தக் குற்ற உணர்வும் இல்லை.

ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் ஏதாவது சின்னச் சின்ன சலனங்கள், சம்பவங்கள் இல்லாமல் இருக்காது. பெரிய பிரச்சனைகளில் உழலும் பொழுது இவைகளின் நிறம் மங்கிவிடும். அவ்வளவுதான்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இன்னொரு செயலை நான் கேலி பேசியிருக்கின்றேன். கிறிஸ்தவர்கள் பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்பதுபற்றித்தான்.

“பாவங்கள் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் போய்விடுமா? “ என்று கேட்பேன்.

ஆனால் காலம் செல்லச் செல்ல அனுபவங்களில் நான் பக்குவப்பட்ட பொழுது பாவமன்னிப்பின் பலனை உணர முடிந்தது. மனிதன் தன் குறைகளை, குற்றங்களை எண்ணிப்பார்க்க மாட்டான். அவைகளை அவன் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் கூட அவன் தவறுகள் செய்யும் பொழுது தயக்கம் ஏற்படும். வாய்விட்டு இன்னொருவரிடம் தன் தவறுகளைச் சொல்ல முடிந்தால் அவன் செய்யும் தவறுகளும் குறைய ஆரம்பிக்கும்.

மனிதனைச் செம்மைப்படுத்த, நல்வழிப்படுத்தத்தான் மதங்கள் தோன்றின. சரியான அர்த்தம் கூறப்படவில்லையென்றால் அது மூடப் பழக்கமாகக் கருத வழி வகுக்கும். அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன் விவேகத்துடன் நம்பிக்கைகளை விளக்கியிருக்கின்றார். அவர் ஓர் நாஸ்திகராக இருந்தவர். ஆத்திகராக மாறவும் தான் கிளப்பிய கேள்விகளுக்குத் தானே விடைகளை அருமையாக விளக்கிச் சொல்லுகின்றார்.

காலம் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றது. சின்னக் குழந்தைகள் கூட ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். இன்றைய இளைஞர்கள் கற்பூர புத்தியுடையவர்கள். அவர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கத் தயங்கக் கூடாது.

பண்பாடுபற்றி பேசுகின்றவர்கள் வாழ்க்கையில் ஒழுக்க நெறியுடன் வாழ்ந்து காட்ட வேண்டும். இரட்டை வாழ்க்கை வாழ்பவரின் வார்த்தைகளை இக்காலப் பரம்பரை மதிக்காது. போலித்தனமும் பகட்டும் வெகுநாட்கள் நிலைக்க முடியாது. வெறும் எழுத்தில், பேச்சில் மட்டும் ஒழுக்கம் இருந்தால் போதாது. வழி காட்டுகின்றவர்கள் நெறியுடன் வாழ்ந்தால்தான் வழிகாட்டும் பொழுது இன்றைய தலைமுறை அவர்களை ஏற்றுக் கொள்ளும்

காஞ்சியில் எனக்கு இன்னொரு அனுபவம் கிடைத்தது. மகாப்பெரியவர் சன்னிதானத்தில் நான் உணர்ந்தவைகளை அடுத்துக் கூறுகின்றேன்

(தொடரும்)

நன்றி -திண்ணை

Monday, October 4, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் 22

ரிஷி மூலம்

தினமணிக் கதிரில் வெளிவந்த நேரத்தில் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் சந்தித்த குறுநாவல் ரிஷிமூலம். கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும் வாசகர்களிடையே இன்றளவும் மதிப்புள்ளதாக இருக்கின்றது.

ஆசாரமான ஒரு வசதியான குடும்பத்தில் வளர்ந்த ஒரு பையன் மனநிலை மாறுதல்களால் பிறரிடம் சொல்ல முடியாத, தன்னையே குறுகுறுக்கின்ற உணர்வலைகளில் சிக்கித் திண்டாடி, தான் யார் என்பதை தான்மட்டும் உணர, அதனை மற்றவரெல்லாம் கேலியாகப் பார்ப்பதை லட்சியம் செய்யாமல் எங்கெங்கோ திரிந்து அலைந்து, தாடி மீசை வளர்த்துக் கொண்டு, கஞ்சா திணித்த பீடியை மட்டுமே புகைத்துக் கொண்டு, இக்கரையில் அமர்ந்துகொண்டு அக்கரையில் எரிகின்ற பிணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு, ஒவ்வொரு பிரேதமுமே தானாக உணர்ந்து தன்னைத்தானே எரித்துக் கொள்வதாக உருவகப்படுத்திக் கொண்டு பீடியால் தன்னையே புகையாக்கி மகிழ்கின்ற ஒரு மனோதத்துவக் கதை

பலராலும் விமர்சிக்கப்பட்டதன் காரணம் அதில் அவன் கண்ட ,செய்த இரு காட்சிகளும் நிகழ்வுகளுமே.

குளித்துக் கொண்டிருந்த தாயை ஒளிந்திருந்து பார்த்துவிட்டு தாயால் கண்டு பிடிக்கப்பட்ட பின் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். தினமும் அவனுக்கு தன் தாய் தன்னைக் கட்டி அணைத்துக் கொள்வதாக கனவுகள்! படிப்பதற்காகத் தன் அப்பாவின் நண்பர் வீட்டிற்குச் சென்றவன் அந்த வீட்டு மாமியே இப்போது அம்மாவின் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறாள். நடக்கக் கூடாததும் நடந்துவிடுகிறது.

அன்று மாலை அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனவன் தான் இப்பொழுது ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டிருக்கின்றான்.

ஜெயகாந்தனின் எழுதுகோல் அழுத்தமாக எழுத்துக்களைப் பதிக்க ஆரம்பிக்கின்றது. சில வரிகளையாவது அங்கும் இங்கும் கூர்ந்து பார்க்கலாம்.

“எல்லாருமே..நானறிஞ்ச எல்லாருமே..ஒருமாதிரியான மிருகங்கள் தான். இந்த மிருகங்கள் ஆடை கட்டிக்கறதுனாலே இதுகளுக்கு மனுஷாள்னு பேரு..மனுஷனைத் தவிர மத்த மிருகங்களுக்கெல்லாம், நெறிகள், முறைகள் எல்லாம் கிடையாது அதனாலே அதுகளுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. மனுஷ மிருகங்களுக்கு நெறிகள் உண்டு. முறைகள் உண்டாம். .."

ஆத்திரம் காட்டாறாய் ஓடுகின்றது.

"மற்ற மிருகங்களைப் பாக்கறச்சே எனக்குப் பொறாமையா இருக்கு. பறவைகளைப் பாக்கறச்சே ஏக்கமா இருக்கு . அதுகளெல்லாம் இயற்கையோடு சல்லாபமா இருக்கு. மனுஷன் மட்டுந்தான் இயற்கையோடே சண்டை போட்டுண்டே இருக்கான். இதிலே இவனுக்குப் பெருமை வேறே! அசட்டுப் பெருமை, வக்கிரப் பெருமை , இதையெல்லாம் நினைச்சுப் பாக்கறச்சே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.”

“நான் “பற்றிப் பேச ஆரம்பித்துவிடுகின்றார் ஆசிரியர்.

“நான் விலகி நின்னு ராஜாராமனைகத் தனியா பார்க்கிற போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வருது.நான் இவனை இப்படி பார்ப்பேன். இவன் போட்ட வேஷத்தையெல்லாம் ஒண்ணொண்ணா இவன் கலைச்சுப் போடறப்போ எல்லாம் “இது ஒரு ராஜாராமன், இது ஒரு ராஜாராமன்”னு நான் கணக்கு வச்சுண்டே வந்திருக்கேன்.என்னை மறைக்கத்தான் எத்தனை எத்தனை திரை போட்டான்! .. என்னை மறைக்க யாரோ கொடுத்ததை இவன் வாங்கிப் போட்ட திரைகள்! இதையெல்லாம் விலக்கி அவனுக்கே தெரியாமல் ஒளிஞ்சுண்டிருந்த என்னை “நான் “ பார்த்து பார்த்துச் சிரித்திருக்கேன் .”

தொடர்கின்றது

“நான் என்பது ஈகோ என்பாரும் , மாயை என்பாரும், பொய் என்பாரும், அநித்தியம் என்பாரும் .. என்னைப்பொறுத்தவரை நான் என்பது ஈகோ எனின், இந்த ஈகோதான் மாயை எனின் , இந்த மாயைதான் பொய் எனின் ,இந்த பொய்தான் அநித்யம் எனின் இந்த அநித்யம் தான் -சாசுவதமான, மெய்யான, உன்னதமான வாழ்க்கையின் அர்த்தமாகும் !

அஹம் பிரம்மாஸ்மி - நான்தான் பிரம்மம்

நான் என்று பேசும் பொழுது நான் உன்னையோ , நம்மையோ மறுக்கவில்லை.உன்னையும் நம்மையும் மறக்காமல் இருப்பதற்கே நான் என்னை நம்புகின்றேன். உன்னையும் நம்மையும் மதிக்கிறவன் என்பதனாலேயே உன்னோடு பேசுகிறேன். “

மனிதனின் தடுமாற்றத்தையும் காட்டி, தத்துவ மழை பொழிகின்றார் ஜெயகாந்தன்.

ஆடை கட்டிய மனுஷ மிருகங்கள் ! சுய பரிசோதனை செய்வோமா?

எங்கும் கொலைகள், வன்முறைகள் ! அப்பாவி ஜனங்கள் உயிர்ப்பலிகள் !

மிருகம் கூட பசித்தால் அல்லது தற்காப்புக்காகக் கொல்லும். ஆனால் கொலைசெய்யப்படும் மனிதர்கள் என்ன தவறு செய்தார்கள்? யாருக்காக, எதற்காக இக்கொலைகள் செய்யப்படுகின்றன?

மிருகங்களைவிடக் கொடியவர்களாக ஏன் இருக்கின்றோம்?

கலாச்சாரம், பண்பாடு என்று வாய் கிழியப் பேசுகின்றோம்! ஒரு ஆண் முகச்சவரம் செய்ய உதவும் பொருளின் விளம்பரத்திற்கு ஏன் பெண் உருவம்? சட்டம் மட்டூம் இல்லையென்றால் இப்பொழுது இருக்கும் ஒட்டுத் துணியையையும் உருவி நிர்வாணக் காட்சிகளைக் காட்டத் தயங்குவோமா? பிஞ்சு உள்ளத்தில் நச்சுத் தன்மை வெறிக்கு வித்திடுபவர்களை மிருகங்களைவிட மோசமாகக் கூறுவது தவறா? இதற்குப் பெயர் ரசனையா? அப்படியென்றால் நம் அகராதியில் கலாச்சாரம், பண்பாடு என்று சொல்லுகின்றோமே அதற்குப் பொருள் என்ன? வரலாற்று உண்மைகளைப் புதைத்து, பல புனைந்துரைகள் புத்திசாலித்தனமாகாச் சேர்க்கத் தெரிந்த மனுஷ ஜன்மங்கள் இனிமேல் புதிதாக இவைகளுக்கும் பொருள் எழுதலாமே!

ஓடி விளையாடு பாப்பா என்று சின்னஞ்சிறு சிட்டுக்களாய்த் திரிந்து வரும் பெண் குழந்தைகளை பருந்துகளாய்க் கொத்திச் சிதைத்து தூர எறிகின்றார்களே அந்த மனிதர்கள் மனிதனா மிருகமா?

மகளையே சீரழிக்கும் தகப்பன் என்ற ஆண் மிருகம் ஏன் ஒரு நாள் தாயையும் ஒரு பெண் உடலாக நினைத்துக் கெடுக்க மாட்டான்?

விலங்கு உணர்வுகளை வளர்க்கும் காட்சிகளை, பேச்சுக்களை ஊக்குவித்து வந்தால் இக்கொடுமையும் நடக்கும்,

ஜெயகாந்தன் மீது ஆத்திரப்பட்டு என்ன பயன்? நாம் போகும் பாதை காணும் பொழுது அறிவுள்ள எந்த மனிதனுக்கும் இந்த அச்சம் வருவதில் என்ன தவறு இருக்கின்றது?

“சிரிப்பு , சிரிப்பாய் வருகின்றது “

ஆம், வேதனைச் சிரிப்பு.

ஆம், ஆத்திரச் சிரிப்பு!

ஆம், ஆதங்கச் சிரிப்பு!

சிரிக்கத்தான் முடிகின்றது. இப்படியே காலம் சென்றால் அந்தச் சிரிப்பும் செத்துவிடும்.

கடவுள் இருக்கின்றானோ இல்லையோ அந்த நம்பிக்கையில் ஒரு பலன் உண்டு. தவறுகள் செய்வது பாவம் என்று கருதி குற்றம் புரியத் தயங்குவான். கடவுளைக் கல்லாக்கிவிட்டோம். அது மூட நம்பிக்கை என்று குப்பையில் போட்டு விட்டோம்.

நம் சிறந்த அறிவில் புதுக் கண்டுபிடிப்புகள் நிறைய. மனிதர்களுக்குச் சிலைகள் வைத்து ஆலயம் அமைக்கின்றோம். நம்மை குளிரவைக்கும் பெண் உருவங்களுக்கும் கோயில் கட்டுகின்றோம். நம் ரசனைகளை மாயத் தோற்றங்களில் செலுத்தி மயங்கி இருக்கின்றோம்.

கணவன் மனைவி உறவின் போது கூட அவரவர் ரசிக்கின்ற வேற்று மனிதர்களை, பொய்த் தோற்றங்களை மனத்தில் சுமந்து வாழ்க்கை நடத்த ஆரம்பித்திருக்கின்றோம். அந்த கலாச்சாரம் வேகமாக பரவி வருகின்றது!

இது தான் இன்றைய நாகரீகப் பண்பாடு. மனிதனைப் போதையில் வைத்தால்தான் அவனைச் சுரண்ட முடியும். ஒருவருக்கொருவர் இப்படி முயன்றால் எங்கே மனிதன் வாழ முடியும்? யாரை நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம் ?

நான் யார் என்பதை ஒவ்வொருவனும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது ஆன்மீகம். இன்றைய மக்கள் இதனைத் தவறாது கடைப் பிடிக்கின்றனர். அவன் தன்னைப் பற்றி யோசிக்கின்றான்.

“ஆஹா, நாம் இப்படி இருக்கலாமா? எப்படி கோடீஸ்வரனாவது? எப்படி வித விதமாகப் பெண்களை அனுபவிப்பது?”

சுதந்திரம் ஆணுக்கு மட்டுமா, பெண்ணுரிமை என்னாவது? பெண்களும் ஆண்களுடன் சம நிலைக்கு வர வேண்டாமா? பாலியல் சுதந்திரம் வேண்டும் என்பார் சிலர். திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறில்லை என்பாரும் உண்டு. தொலை தூர நோக்கில் பார்த்தால் அதனால் பாதிக்கப்படப் போகின்றவர்கள் பெண்களும் குழந்தைகளும் தான். என் மீதும் ஆத்திரம் வரலாம். பெண்கள் முன்னேற்றத்தை விரும்புகின்றவள் நான். இது போன்ற வாழ்க்கை வாழ்பவர்களைப் பற்றிய ஆய்வு செய்தல் வேண்டும். அவர்களின் உண்மை நிலை கண்டறிய வேண்டும். பெண்களின் நிலை பாதுக்காக்கப் படவேண்டும். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவைகளை, முறியடிக்க வேண்டும்.முக்கியமாக பெண்கள் சுயதரிசனம் செய்து கொள்ள வேண்டும். பத்திரிகைகளில் வரும் செய்திகள் பயமுறுத்துகின்றன.

எந்த அளவு சுதந்திரம் பேசப்படுகின்றதோ , அதைவிட பிரச்சனைகளில் தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. அரசு, தொண்டு நிறுவனங்கள் நிரம்பி வழிகின்றன. இந்தத் தாயுள்ளத்தின் தவிப்பின் குரல் இது.

எத்தனை வகை ஏமாற்றுதல் உண்டோ அத்தனையும் கற்கத் தொடங்கி, சுயநலமும் சுரண்டலும் பெருக்கி, உச்ச நிலை அடைய போட்டிகள் வந்துவிடும். சரியான போட்டி ! இதுவா முன்னேற்றம்?

நான் யார் என்ற ஆராய்ச்சியில் நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்?

யாராவது ஓரிருவர் கண்களை இக்காட்சிகள் உறுத்துகின்றன. அவன் எழுது கோல் எடுத்தால் அவனையும் மீறி அது நெருப்பைக் கக்குகின்றது. ஒட்டு மொத்த சமுதாயமும் இன்னும் கெடவில்லை. ஆனால் மன வக்கிரம் வளர ஆரம்பித்திருப்பதை மறுக்க முடியுமா? நல்லவர்கள் நடுங்கிப் போய்ப் பதுங்குகின்றார்கள் .கோபத்தை விடுத்து நம்மைச் சுற்றி நடக்கும் காட்சிகளைப் பார்த்து , ஏதாவது செய்து நம்மை இந்த மிருகக்குணத்தினின்றும் காப்பாற முடியுமா என்று சிந்திக்க வேண்டும். செயல்படவேண்டும். ஒதுங்கக் கூடாது.

மனிதனின் தோற்றம் சில லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன். ஆனால் அவன் வகுத்துக் கொண்ட“உறவுகள் “ தோன்றியது சில ஆயிர வருடங் களுக்கு முன்னர்தான். குடும்ப அமைதிக்கு அவன் போட்ட விதிகளை அவனே உடைத்தெறிய ஆரம்பித்திருக்கின்றான்.

ஒவ்வொரு மனிதனிடமும் மிருகம் உறங்கிக் கொண்டிருக்கின்றது. சில விதிகளை , சில நியதிகளை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றான் மனிதன். அதில் அடிபடும் பொழுது வலி தாங்காமல் புலம்புகின்றான். புலம்புவதை விடுத்து சிந்திக்க வேண்டும்.

இது ஒரு குடும்பத்தில், ஒரு இனத்தில் மட்டும் நிகழும் பிரச்சனையல்ல. இது ஓர் சமுதாயத்தில் நிகழும் அசிங்கம். சம்பிரதாயங்கள் உள்ள சூழ்நிலையில் வளர்ந்த பிள்ளைகளுக்கே இந்த மனச் சலனம் ஏற்படுவதென்றால் மற்றவர்களைப்பற்றிக் கேட்பானேண் ?! இது ஏதோ கதையென்று எழுதப் பட்டதல்ல. புனைந்துரையல்ல. ஓர் அடையாளம். சமுதாய நோயை அடையாளம் காட்டும் ஓர் அபாய விளைக்கு. ஒவ்வொரு மனிதனும் சமுதாய அக்கறை கொண்டு விழித்தெழ வேண்டும். அவன் சந்ததிக்கு மட்டுமல்ல அவனுக்கே விரைவில் வீழ்ச்சி வரும் ஆசிரியர் என்னைப் புலம்ப வைத்துவிட்டார்.

சமுதாயத்தில் எங்கெல்லாம் ஊனம் காணப்படுகின்றதோ அங்கே ஜெயகாந்தனின் பார்வை ஊடுருவ ஆரம்பிக்கும். படுக்கையறைக்காட்சிகளைக் கூட கொச்சையில்லாமல் காட்டும் திறன் படைத்தவர். அவர் காட்டும் விலை மகளிடம் கூட வெறித்தனம் காட்ட மாட்டார். ஒவ்வொருவரையும் தனிப் பரிவுடன் நடத்துவார்.

ரிஷிமூலம் எழுதியவரேதான் “ஜெய ஜெய சங்கர “தொடரையும் படைத்தார்.

அவர் எழுதிய கதைகள் அனைத்தும் நடைமுறை வாழ்க்கையின் பிம்பம். ஜெய ஜெய சங்கர அவரின் கனவுலகம். அது சத்திய பூமி. அங்குள்ளவர்கள் குணக்குன்றுகள். மனவெளி இல்லம் என்ற பெயரிலேயே அங்குள்ளவர்களின் வாழ்க்கையைப் புலப்படுத்துகின்றார். அங்கு வாழ்ந்திருந்த உமா ஓர் லட்சியப் பெண். ஒரு இளைஞனுடன் தனித்து வாழ்ந்தாலும் எவ்வித சலனமும் இன்றி வாழ்கின்ற மன உறுதி படைத்த ஓர் பெண்ணாகத் திகழ்கின்றாள்.

இந்த சமுதாயத்தில் ராஜாராமனும் உண்டு, உமாவைப் போன்றவர்களும் உண்டு.. இரு எதிர்த் துருவங்களில் நிற்பவர்கள்.

சமுதாயத்தில் எங்கே நோய் என்று தெரிந்தால்தான் சிகிச்சையளித்து மேன்மையுறச் செய்ய முடியும். வெறும் ஜன ரஞ்சகமாக எழுதி உல்லாசப்படுத்துவது மட்டும் போதாது. பயனுள்ள பாதையில் மனிதனைச் செல்ல வழி காட்ட வேண்டும். மகாப்பெரியவர் சொன்ன அறிவுரையும் இதுதான். எழுத்தாளருக்கும் மட்டுமல்ல எல்லோருக்கும் கடமையுண்டு.

இந்த இடத்தில் ஒருவரைப்பற்றிக் கூற விரும்புகின்றேன். டாக்டர் சங்கர் அமெரிக்காவில் மருத்துவத்தொழில் செய்பவர்.அவர் மனைவியும் ஓர் மருத்துவர். மனிதனின் உடல் நோய்கள் தீர்க்கும் மருத்துவர் மட்டுமல்ல, சமுதாய மருத்துவரும் கூட. சமுதாய நலனுக்கு நிறைய குழுமங்களில் எழுதி வருகின்றார். என்னிடம் ரிஷிமூலம் புத்தகம் இல்லையென்றவுடன் அவரிடமிருந்த புத்தகத்தைப் படித்து, அவர் கருத்துக்களுடன் எனக்கு ஒரு நீண்ட மடலே அனுப்பிவிட்டார். அதுமட்டுமல்ல. தொலை பேசியில் அழைத்து நீண்ட பிரசங்கமே செய்துவிட்டார். நானும் சமுதாயத்தில் உருண்டு புரண்டு முதுமையின் காரணமாக மகனிடம் அண்டிவாழும் ஓர் மூதாட்டி .எங்கிருந்தாலும் மனித நலனில் எங்களுக்கு அக்கறையுண்டு. தாய்மண்ணை நினைக்காத நாளுமுண்டோ!?.

அந்த மண்ணில் வாழும் மைந்தர்களுக்கு நாங்கள் செய்யும் சிறு தொண்டு. இருக்கும் சில நல்லவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி. எங்கள் பணி பத்திரிகைகளில் எழுதுவதல்ல. ஆனாலும் பலரையும் சேர்க்கும் பாலமாகக் கணினி இருக்கின்றது. எனவே எங்கள் குரலை அங்கே ஒலிக்கச் செய்கின்றோம். கோயில்களுக்குச் சென்று செய்யும் பூஜையைவிட இந்தப் பணியே நான் இறைவனுக்குச் செய்யும் ஆராதனை

ஜெயகாந்தனை இனி பார்க்கலாம். அவர் படைக்கும் பாத்திரங்களைப் பெற்ற குழந்தையைப் போல் நேசிப்பவர் ஜெயகாந்தன்..

“எனது நாவல்களில் வருகிற பாத்திரங்களெல்லாம் என் மூலமாய்ப் பிறக்கிறார்கள் என்பதனால் அவர்களை நான் சாமான்யர்களாகக் கருதவில்லை. அவர்கள் நான் வழிபடும் தெய்வங்களாகக் கூட உயர்ந்து விடுகிறார்கள். எனக்கு முன்னாலுள்ள அனுபவங்களை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். என்னோடு வாழ்கின்றவர்களாகவும் அவர்கள் இருக்கின்றார்கள். எனவே , அவர்கள் இறுதியில் என்ன ஆனார்கள் , என்ன ஆவார்கள் என்பதை என்னுடைய இறுதியைப் பற்றித் தீர்மானிப்பதில் எனக்கு எவ்வளவு இயலாமை உண்டோ அவ்வளவு இயலாமை ஏற்படுகிறது.ஆனால் அவர்கள் இறுதியை மற்றவர்களைப் போல் நானும் அனுமானிக்க முடிகிறது. அதுவும் இவ்விதமாக அவர்கள் ஓய மாட்டஎர்கள்; பணிய மாட்டார்கள் ; தோல்வி அடைய மாட்டார்கள் ! இலக்கிய வாழ்வு பெற்றுவிட்ட அவர்கள் இறப்பின்றி துலங்குவார்கள் “

“நம்மையும் உயர்த்திக் கொண்டு நம் வாசகர்களையும் உயர்த்தவேண்டும்’

மகாப்பெரியவரின் வாக்கை ஒவ்வொரு எழுத்தாளனும் பத்திரிகையாளரும் நினைத்துப் பார்க்க வேண்டிய பொன்னான வரிகள்.

வாழ்க்கையின் அவலங்களைக் காட்டும் பொழுது கண்களை மூடிக் கொள்வதைவிட அதற்கு காரணம் கண்டு மேலும் அந்தத் தீமை வளராமல் இருக்க முயல வேண்டும். இந்த சமுதாயத்தின் ஒவ்வொரு செயலிலும் எல்லோருக்கும் பங்குண்டு.

ஜெயகாந்தனின் எழுத்தில் ஆபாசம் கிடையாது. மன வக்கிரங்களைக் காட்டும் பொழுது கூட வேகம் இருந்தாலும் விவேகம் காணலாம். கதைகளிலும் உரையாடல்களை வலுவாக அமைப்பார். அவர் எழுதும் கதைகள், கட்டுரைகளைப்போல் அவர் எழுதும் முகவுரைகளும் முடிவுரைகளும் கூட தனித்தன்மை வாய்ந்தவை. அவைகளைக் கூடத் தொகுத்து புத்தகமாக்கி வாசகர்களுக்குக் கிடைக்க வசதி செய்திருக் கின்றனர் பதிப்பகத்தார்.

நம் காலத்தில் வாழும் அறிவு ஜீவிகள் சிலரில் நம் ஜெயகாந்தனும் ஒருவர்.

மகாப்பெரியவர் என்ற பெயர் கேட்டாலே காஞ்சியை நினைக்காமல் இருக்க முடியாது. மேலும் என் பயணத்தில் காஞ்சிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஐந்தாண்டு காலம் வாடிப்பட்டி வாழ்க்கை என் வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்ததென்றால் காஞ்சியின் நான்கு ஆண்டு வாழ்க்கை, ஏற்றங்களையும், என்னுடைய தேடல்களில் பல கேள்விகளுக்கு விடைகளும் கொடுத்த இடம் ,

அன்றும் இன்றும் என்றும் வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கி வருகின்ற காஞ்சிபற்றி சில செய்திகள் அடுத்துப் பார்க்கலாம்

(தொடரும்)

நன்றி -திண்ணை