Monday, July 26, 2010

அக்கினிப் பிரவேசம்

நெஞ்சிலே சுனாமியாய்ப் புரண்டு கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இவ்வரைவு.

என் கேள்விக்குரிய களம் இராமாயணம்!

என் கேள்வியின் நாயகன் காவியத்தலைவன் இராமன்!

பலம், பலஹீனம் இவைகளின் கலவையாக ஓர் நாயகன் வரின், கேள்விக்கணைகளின் தாக்குதல் ஏற்படுதல் இயல்பு. இப்படித்தான் வாழவேண்டுமென்பதற்கு இலக்கணமாய் விளங்கும் இராமன், விளையாட்டுப் பிள்ளையாய், குறும்புக்காரனாய்ச் செய்யும் செயல்களை நாம் பெரிது படுத்தாமல் சமாதானம் கூறிக்கொள்ளலாம்.

அமிலமாய் கடுஞ்சொற்களைக் கொட்டி, பெண்ணைக் காயப்படுத்துவதை, களங்கப்படுத்துவதைக் காணப் பொறுக்கவில்லை.

நாமும் மனிதர்கள். மனித நேயம் வதைக்கப்படும் பொழுது மெளனமாக இருக்க முடியவில்லை.

புதிதாக என்ன புலம்பல் என்று சிலர் முணங்குவது கேட்கின்றது. ஆராய்ச்சியாளர்கள் இக்காட்சிகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் முழுமையாக இல்லை. இராமாயணத்தில் அன்று முதல் இன்று வரை வாலிவதைக்கும், சீதையின் அக்கினிப்பிரவேசத்திற்கும் தொடர்ந்து வாதங்கள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது.

இராமாயணம் எல்லோராலும் மதிக்கப்படும் ஓர் இதிகாசம். சோதனைகள் வரினும் நேர்மையில் நிமிர்ந்து நிற்கும் ஓர் மனிதனின் காவியம் என்று கூறப்படுகின்றது. அந்த மனிதன் அசாதாரணமாகக் கீழிறங்குவது, பாத்திரப்படைப்புடன் பொருந்தவில்லை. அதற்குரிய காரண காரியங்களை அலசிப் பார்ப்பதில் தவறில்லை. இயல்பாக அக்காட்சி சேர்க்கப்பட்டதா அல்லது இடைச்செருகலா என்று ஆராய்வது அர்த்தமுள்ளது.

பெரிய ஆராய்ச்சியாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர். இதுவரை என் கேள்விக்கு விடை காணாத ஒன்றினையே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இராமாயணத்தை இலக்கியமாகக் கருதியே என் கருத்துக்களை தெரிவிக்கின்றேன். பரிவும், பக்தியும் ஒதுக்கி வைத்து, நடுநிலையின் நின்று பார்க்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

இராமன், இராவணன் போர் முடிந்துவிட்டது. சீதைக்குச் செய்தி சொல்லி அனுப்பவேண்டும். மாயச்சூழ்நிலைகளுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சீதா, செய்தியை நம்பவேண்டும். ஏற்கெனவே தூது சென்றவன் அனுமன். சொல்லின் செல்வன் அவன். அனுமனைக் கூப்பிட்டு நடந்தவைகளைச் சொல்லிவிட்டு வரும்படி கூறுகின்றான். செவ்வனே சிந்திக்கும் நிலையில் அப்பொழுது இராமன் இருந்தான்.

சீதையைச் சிறை எடுத்தவன் இலங்கை மன்னன். சிறை பிடிக்கப்பட்டவளை அந்நாட்டு மன்னனே மீண்டும் உரியவனிடம் சேர்ப்பதே சிறப்பு. தற்போது நாட்டுமன்னனாக இருப்பது விபீஷணன், இராமன் எப்படியெல்லாம் சிந்திக்கின்றான.

விபீஷணனை அழைத்து, “வீடணா, சென்றுதா, நம் தோகையை சீரோடும்” என்கின்றான். அப்பப்பா! மனைவிமேல் எவ்வளவு அக்கறை; அசோகவன வாழ்க்கையில் நைந்து போயிருக்கும் சீதையைக் காண அவன் மனம் துணியவில்லை. அதனால் தன் அன்புக்குரியவளைச் சீராகக் கூட்டிவரும்படி சொல்லுகின்றான். எப்பேர்ப்பட்ட கணவன். சீதையைத் தவிர வேறு யாரையும் சிந்தையால் தொடாதவன் இராமன்.

கம்பனாயிற்றே! நாயகனின் உயர்வைக் காட்டும்விதம் மிக மிகச்சிறப்பானது. இராவணன் எத்தனையோ உருமாறி சீதையைக் கவரமுயற்சிக்கின்றான். இராமன் வடிவில் சென்றபொழுது “இவள் மாற்றான் மனைவி அணுகுவது தவறு," என்று உணர்ந்ததாக இராவணனையே சொல்லவைத்தானே கவிஞன்! கோசலை மைந்தன் குணம் மாறிப் பேசப் போகின்றான். அதனால் குறை கூறுவார்களே என்ற தவிப்பிலே தாயைப் போல அந்த நீலவண்ணச் செம்மலை உயரத்தில் காட்டுகின்றானோ?

இராமனின் தெளிவு எப்பொழுது கலக்கமுற்றது...? ஏன்...?

அசோகவனத்திற்குச் சென்ற விபீஷணன் இராமனின் செய்தியைச் சீதையிடம் கூறியபொழுது தான் இருக்கும் நிலையிலேயே வருவது சாலச்சிறந்தது என்கின்றாள். உற்றவனைப் பற்றியும், உலகைப்பற்றியும் தெரிந்த பெண்ணாகப் பேசுகின்றான். அதனால்தான் முதலில் அனுமன் தூது வந்த பொழுதே, தன்னை இராவணன் நிலத்துடன் பெயர்த்து அவளை எடுத்து வந்ததாகக் கூறினாள். வால்மீகியினின்றும் கம்பன் மாற்றி அமைத்த காட்சி இது. கணவனின் குறிப்பு என்று விபீஷணன் கூறவும் சீதையால் மறுக்க முடியவில்லை. தன்னைச் சீராக்கிக் கொண்டு புறப்படுகின்றாள். இனி தொடரும் காட்சிகளைக் கவிஞனின் ஓவியத்தில் விளக்கமாகப் பார்க்கலாம்.

"பச்சிலை வண்ணமும் பவளவாயும் ஆயக்
கைச்சிலை நின்றானைக் கண்ணுற்றாள்."

உடனே அப்பெண்ணரசியின் ஏக்கம் நீங்குகின்றது. “இனி இறப்பினும் நன்று,” என நினைக்கின்றாள்.

அசோக வனத்தில் சீதை இருந்த நிலை உருக்கமானது.

“விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,

எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்

தொழுதல், சோருதல், துவங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்,

அழுதல், அன்றிமற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்”

எப்பேர்ப்பட்டத் தணலில் சுருண்டு கிடந்த பூங்கொடி, தன் கைபிடித்த காவலனைக் காணவும் “கண்டதே போதும்” என எண்ணுவது அந்தச் சோர்ந்து போன மனத்தின் இயல்பாகத்தானே இருக்க முடியும்? இது பெண்மனம்.

இராமனின் நிலை என்ன...?

''கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை

பொற்பினுக்கு அழகினை,” அத்தலைவனும் நோக்கினான்.

அன்று மிதிலையில் அவள் நோக்க, அண்ணலும் நோக்கப் பார்வைகளின் சங்கமத்தில் இதயங்களின் பரிமாற்றம் நிகழ்ந்தது. இன்று பார்வைகள் மோத தீப்பொறி பிறந்தது. துடிப்புடன், தூய்மையுடன் ஏற்பட்ட சந்திப்பில் குழப்பம் எப்பொழுது நிகழ்ந்தது?

அவனைக் கொதிக்க வைத்தது எது...?

நெருப்பு மொழிகள் உதிர்க்க ஆரம்பித்தானே, ஏன்...?

அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?” என்று குற்றம் சாடுகின்றான்.

அரக்கன் மாநகரில் அவள் சிறை வைக்கப்பட்டிருந்தாள். இதில் அவள் குற்றம் என்ன...? ஒழுக்கம் எங்கே பாழ்பட்டது...? இராவணன் மேல் பட்ட காற்று அவள் மேல் பட்டதால் அவள் கற்பு போய்விட்டதா..? இராவணன் பார்வை பட்டதால் அவள் புனிதத் தன்மை போய்விட்டதா...? அம்ம்மா, எப்பேர்ப்பட்ட பழி!

சீதை செத்திருக்கலாம். உலகம் என்ன கூறியிருக்கும், “என்ன நடந்ததோ, கற்பிழந்திருக்கலாம். அதனால் அவள் செத்திருக்கலாம்” என்று பழி சுமத்தாதா...? இறுதி மூச்சுவரை கற்பினைக் காட்டவல்லவோ உயிர் வைத்திருந்தாள்..? சீதையை மீட்க அவன் வரவில்லையாம். தன்னைப் பிறர் குறைகூறக் கூடாதென்பதற்காகவே அரக்கர் படை அழிக்க வந்ததாகக் கூறுகின்றான். தொடர்ந்து பேசுகின்றான்.

“மருந்தினும் இனிய மண்ணுயிரின் வான் தசை

அருந்தினையே, நறவு அமை உண்டியே;

இருந்தினையே, இனி எமக்கு ஏற்பன

விருந்து உளவோ? உரை”

அப்பப்பா, எப்பேர்ப்பட்ட கொடிய வார்த்தைகள். சீரோடு கூட்டிவரச் சொன்ன சிந்தை எங்கே போயிற்று...? அவள் உயிருடன் இருந்ததே தவறாகப் படுகின்றது. கணவனைப் பிரிந்து, கருத்திலே கணவனையும், கண்களில் கண்ணாளரையும் சுமந்து அரக்கியர் மத்தியில் வாழ்ந்த அந்தக் கற்புக்கனலை, இராவணனின் மாயச்சுழல்களில் சுருண்டு விடாமல் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த உத்தமியைப் பார்த்து, “இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ?” என்று நச்சுப்பாணத்தால் அம்மலர்க்கொடியை அடித்து வீழ்த்திவிட்டான்.

இவ்விடத்தில் இன்னொரு நிகழ்வினை நினைவு கொளல் அவசியமாகின்றது.

மிதிலைக்கு நுழையும் முன்னர் ’அகலிகைப்படலம்’ வருகின்றது. கெளதமனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள் மீது ஆசை பிறந்துவிட்டது. பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த்தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள்நுழைந்து அகலிகையைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் தன் கணவன் அல்லன் என்பதை விரைவில் உணர்ந்தபொழுதும் அவனை ஒதுக்கவில்லை.

புக்கவ ளோடும் காமப் புதுமணத் தேறல்

ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்

தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்

அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான்.

“நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக”

“மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து”

அன்று நடந்தது என்ன, இன்று நடப்பது என்ன...?

மனத்தாலும் காயத்தாலும் பழுதுபட்டவள் அகலிகை. அவளைப் பிழை இலாதவள் என்று கூறும் இராமன் இன்று சீதையிடம் என்ன பிழை கண்டு சேற்றை அந்த மாசிலா மாணிக்கத்தின் மீது வீசுகின்றான்?

இராமன் கோபத்தில் வாய்தவறிப் பேசிவிட்டதாக ஒரு சிலர் கூறுவர். ஒரு வார்த்தையல்ல, காட்டாற்று வெள்ளமென வார்த்தைகளல்லவா பேசினான்...?

கவிச்சக்கரவர்த்தி கம்பன் சொல்லில் மட்டுமல்ல எழுத்திலும் விளையாடும் வித்தகன், வல்லினத்தில் தாடகை வருகை, மெல்லினத்தில் ஆற்றின் ஓட்டம் காட்டுபவன். பின்னால் இராமன் செய்யப் போகும் தவறை பெரிது படுத்தாமல் இருக்க அவன் பெண்ணிடத்தில் கருணை உள்ளவன் என்பதைக் காட்ட இக்காட்சி ஒட்டிக்கொண்டதோ...? அதிலும் சரியாக மிதிலைக்காட்சிக்கு முன் இதை அமைத்திருப்பது கவிஞனின் சாமர்த்தியம்.

“கை வண்ணம் அங்கு கண்டேன்

கால் வண்ணம் இங்கு கண்டேன்”

இராமனுக்குப் புகழாரம் சூட்டப்படுகின்றது. அந்த மைவண்ணன் மனநிலை பாதிக்கப்பட்டு இன்று அவன் கொட்டும் நெருப்பு மழையைப் பார்ப்போம்.

“கலத்தினின் பிறந்த மா மணியின் காந்தறு

நலத்தின் நிற் பிறந்தன நடந்த; நன்மைசால்

குலத்தினில் பிறந்திலை; கோள்கில் நீடம்போல்

நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ.”

சீதை எல்லோரும்போல் கர்ப்பத்தில் உதித்துப் பிறக்காதவள். மண்ணில் கிடைக்கப் பெற்றவள். அவள் ஒரு புழு. அவன் உயர்க்குலமாம். அவள் தாழ்ந்த பிறப்பாம். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். அப்பொழுது தெரியாத வேற்றுமை இப்பொழுது தெரிகின்றது.

"பெண்மையும், பெருமையும், பிறப்பும், கற்பு எனும்

திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்

உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்,

பெண்மை இல் மன்னவன் புகழின், மாய்த்தலால்."

மகாபாரதத்தில் வரும் நாகாஸ்திரம் இதைவிடக்கொடியதாக இருந்திருக்க முடியாது, தவமாய் வாழ்ந்த பெண்ணரசியைத் தன் சொல்லம்புகளால் துளைத்துவிட்டான். மீண்டும் தொடர்ந்து பேசிகின்றான்.

"அடைப்பர் ஐம்புலன்களை; இடை ஒரு பழிவரின் அது
துடைப்பர், தம் உயிரோடும் குலத்தின் தோகைமார்”

உயர்குடியில் பிறந்தோர் பழிவரின் உயிர் துறப்பராம். உயர்குடியில் பிறந்த பெண்கள்தான் ஒழுக்கமுடையவர்களா...? ஐம்புலன்கள் அடக்கி வாழ்வது அவர்கள் மட்டுமா...? பழிவரின் உயிர்மாய்ப்பது அவர்கள் மட்டுந்தானா...? ஒரு மன்னாகப் போகின்றவன் வாயில் இத்தகைய வார்த்தைகள் வரலாமா..? இராமன் திருமாலின் அவதாரம். மனித அவதாரம் என்று கூறுவதால் மனிதனுக்குரிய ஆசாபாசங்களைப் பல சந்தர்ப்பங்களில் பார்க்கலாம். மனித பலஹீனத்தின் உச்சக்கட்டத்திற்கு வந்துவிட்டான்.

ஆசையின் பல குழந்தைகளில் கோபமும் பொறாமையும் அடங்கும். இங்கும் ஒரு காட்சியை ஒப்பிட்டுக் காட்டவிரும்புகின்றேன். நாயகர்களை ஒப்பிடவில்லை என்று முதலிலேயே கூறிவிடுகின்றேன். உணர்வுகளின் போக்கைத்தான் விளக்குகின்றேன்.

சிலப்பதிகாரத்தில் இந்திரவிழாக் காட்சி.

மாதவி மேடைக்கு வரவும் வந்தவர்களின் பார்வைகள் அவள் மேனியழகில் படர்கின்றது. கோவலன் கொதித்துப் போகின்றான். அவள் ஒரு ஆடல் கணிகை. மன்னனின் சட்டப்படி அவள் பொது மக்களின்முன் ஆடியாக வேண்டும். ஆட ஆரம்பித்தவுடன் அந்தக் கலையுடன் ஒன்றிப்போகின்றாள். அதுவும் கலைஞனின் இயல்பு. அவள் தனக்கு மட்டும் சொந்தமானவள், அவள் அழகு, ஆடல், பாடல் எல்லாம் அவன் மட்டும் ரசிக்க வேண்டும். ஆடி முடித்து வருகின்றாள், கோவலனும் அவள் மனம் மகிழவே அவளிடமிருந்து யாழ் வாங்கிக் கானல்வரி பாடுகின்றான். குழம்பிய மனம். பொறாமையில் கொதித்துப் போயிருக்கும் இதயம். அங்கிருந்து இனிய நாதமாக ஆரம்பித்து, குழப்பங்களைக் கொட்டி, இறுதியில் அன்னத்தை நோக்கி,

"ஊர்திரை நீர்வேலி உழக்கித்திரிவாள்பின் சேரல் நடை ஒவ்வாய்” என்று மாதவியின் பிறப்பைச் சுட்டிக்காட்டி முடிக்கின்றான். கற்புக்கரசி மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் பன்னிரண்டு ஆண்டுகள் உடன் வாழ்ந்திருக்கின்றான். மணிமேகலை என்ற பெண் மகவைப் பெற்று பெருவிழாவும் நடத்தியுள்ளான். அப்பொழுது காணாத குலக்குணத்தை இப்பொழுது என்ன புதிதாகக் கண்டுவிட்டான்?

மனிதன் கோபவயப்படும்பொழுது தன் சுய அறிவை இழந்து விடுகின்றான்.

இன்றும் நம்மிடையே காணும் காட்சி... கணவனுக்குக் கோபம் வந்தவுடன் “உன் குடும்ப லட்சணம் தெரியாதா...? உன் ஊர் புத்தி தெரியாதா...?” என்று மனைவியைக் கடிந்து கொள்வது தொடர்ந்து வரும் கதை.

அன்பு மனிதனைச் செம்மைப்படுத்தும். ஆனால் ஆசை மிஞ்சும்பொழுது மனிதனை விலங்காக்கிவிடும். ஆசையின் பிள்ளைகள்தான் கோபமும், பொறாமை, வெறுப்பு எல்லாம்.

சீதையைக் காணும் முன் அன்பின் பிடியில் இராமன் இருந்தான். அக்கறையுடன் அவளைச் சீரோடு கூட்டி வரச் சொல்கின்றான். அழகு மயிலாய் வந்தபொழுதோ ஆத்திரப்பேய் பிடித்துக்கொண்டது.

“இந்த அழகை இராவணனும் ரசித்துவிட்டான். எத்தனை மாதங்கள் சிறை வைத்திருந்தான்... ஓடி ஓடிப் பார்த்திருக்கின்றான். நெஞ்சிலே அவளைச் சுமந்திருந்தானே... மேனியழகில மயங்கி எவ்வாறெல்லாம் கற்பனை செய்திருப்பான்....”

இராமனின் மனம் குரங்காய்க் குதிக்க ஆரம்பித்துவிட்டது. குரங்கினமே அவனைத் தொழுது நிற்க, அவன் தன மனத்தை அடக்கத் தவறிவிட்டான்.

இராமனின் மனநிலையை மண்டோதரி வாயிலாகக் கம்பன் வெளிப்படுத்துகின்றான்.

மாண்டுவிட்ட மணாளனைக் காண இராவணன் மனைவி மண்டோதரி போர்க்களம் வருகின்றாள். விழுந்து கிடக்கும் கணவனைக் கண்டு கதறுகின்றாள். இராவணன் உடம்பில் எப்பகுதியிலும் சீதையின் நினைவு இருக்கக்கூடாதென்று உடலையே சல்லடையாக்கி இருந்தான் இராமன்.

”கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்

உள்ளிருக்குமோ எனக்கருதி, உடல் புகுந்து, தடவினவோ ஒருவன் வாளி”

மண்டோதரியின் வார்த்தைகளில் இராமனின் மனத்தைப் படம் பிடித்துக்காட்டிவிட்டான் கவிஞன். சாதாரண மனித நிலையிலும் தாழ்ந்துவிட்டான் இராமன். சீதை சிறை பிடிக்கப்பட மூல காரணம் யார்...?

சூர்ப்பனகை வருகின்றாள். சீதை இருப்பதால் இன்னொரு பெண்ணைச் சேர்க்கமுடியாதது போன்ற ஓர் உரையாடல் நிகழ்த்தியது யார்...? சீதை இல்லாவிட்டால் இராமன் கிடைப்பான் என்று வந்தவள் நினைக்க சீதை காரணமில்லை. கோபக்கார லட்சுமணனிடம் அனுப்பியது யார்...? மூக்கரிபட்டு, முலையிழந்து ஓர் சகோதரி முன் வந்தால் அண்ணனின் மனநிலை எப்படி இருந்திருக்கும்...? அவனுக்குப் பழி வாங்கும் உணர்ச்சி ஏற்பட முதல் காரணம் யார்...?

எதையும் சிந்திக்கும் நிலையில் இராமன் இல்லை. விசாரணை இல்லை. பார்த்தும் பழி சுமத்திவிட்டான். கட்டிய கணவனே மனைவியை மானபங்கப்படுத்தும் கொடுமை நிகழ்ந்துவிட்டது. நெருப்புக் குழியில் இறங்குகின்றாள். கொதித்துப் போயிருந்த அவள் இதயச்சூட்டீனில் அக்கினிக்கடவுள் தாங்க முடியாமல் அந்தக் கற்புக் கனலைத் தாங்கிவந்து இராமன் முன் சேர்க்கின்றான். அப்பொழுதும் இராமன் வாத்தைகளைக் கொட்டுகின்றான். சுற்றி நிற்கும் தேவர்கள், முனிவர்கள் சீதைக்காகப் பரிந்து பேசும் சூழ்நிலை பாராட்டத்தக்கதல்ல.

இந்த அரங்க நிகழ்வுகளுக்குச் சிலர் கூறும் சமாதானங்களைப் பார்க்கலாம்.

இராமனின் பதட்டத்திற்குக் காரணம் ஊர்ப் பழி. வனவாசம் முடியவும் மன்னாகப் போகின்றவன். தன் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாத பதவி. ஊர் கூடியிருக்கின்றது. பலர் முன்னிலையில் பிரச்சினை பேசவேண்டி வந்துவிட்டது. வந்திருப்பவள் ஓர் பெண். அதிலும் சிறை பிடிக்கப்பட்டு பல மாதங்கள் துன்பத்தில் உழன்றவள். மென்மையான அணுகுமுறை வேண்டும். இராமன் மன்னன் மட்டுமல்ல. அவள் கணவன். இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்கக் கடமைப்பட்டவன். இத்தனை பொறுப்புகள் அவன் மீது இருக்க அவன் இதனை எப்படிக் கையாண்டிருக்க வேண்டும்...? கணவன் மனைவி உறவில் நம்பிக்கைதான் அச்சாணி.

சீதை வந்தவுடன், “பெண்ணே, நான் உன் கணவன். உன் கற்பில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் சிறிது காலம் மாற்றான் வீட்டில் சிறை இருந்துவிட்டாய். உன்னை என் மனைவி என்று ஏற்றால், நீ அரசு பீடத்தில் அமரவேண்டியவளும் ஆகின்றாய். அதற்கு உன்னைத் தகுதியானவள் என்று நீ நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றாய். நீ குற்றமற்றவள் என்று நிரூபித்தால் மட்டுமே உன்னை நான் ஏற்க இயலும்,” என்று இராமன் பேசியிருக்க வேண்டும்.

மனம், காயம் இரண்டிலும் மாசடைந்த அகலிகையை அவள் கணவன் ஏற்றுக்கொள்ள, “நெஞ்சினால் பிழைபில்லாளை நீ அழைத்திடுக,” என்று வேண்டிக்கொள்கின்றான். அகலிகையை ’மாசு அறு கற்பின் மிக்க அணங்கினாள்,’ என்கின்றான்.

ஒரு சமயம் இராமன், சீதையை இழந்தாலும். இலக்குவனை இழந்தாலும், ஏன் தன் உயிரை இழந்தாலும் சத்தியம் தவற மாட்டேன் என்று கூறியவன். அன்று அகலிகையைக் கற்பு மிக்கவள் என்று சொன்னதும், இன்று கற்புக்கனலை எல்லாம் இழந்தவள் என்று கூறுவதும் இராமனைப் பொய்யனாக்காதா...? உலகப் பழிக்குப் பயந்தவன், தன் மனைவிமேல் அவனே சேற்றை அள்ளி வீசலாமா..? சிறை பிடிக்கப்பட்ட்து ஊர்ப்பழிக்கு வித்தானால் அவன் பேச்சும், அதற்குத் தண்ணீரும் உரமும் போல் ஆகாதா...? “நெருப்பில்லாமல் புகையுமா?” என்று முணுமுணுக்கும் மனத்திற்குத் துணை போனதால்தான் மீண்டும் புரளி ஏற்பட்டு, கர்ப்பிணிப் பெண் காட்டிற்குப் போக நேர்ந்தது.

மகாபாரதத்தில் திரெளபதியைத் துச்சாதனன் சபைக்கு இழுத்து வருகின்றான்! இங்கே சிங்காரித்து மரியாதையுடன் அழைத்து வரப்ப்படுகின்றாள்! பலி மேடைக்குச் செல்லும்முன்னர் ஆட்டினைச் சிங்காரித்து அழைத்து வருவதைப் போல் அழைத்து வந்து ஓர் அபலைப்பெண் அவமானப்படுத்தப்பட்டாள்.

மானமிழந்தவள் என்ற குற்றச்சாட்டிற்காக திரெளபதி சபைக்கு வரவில்லை. அவள்மேல் கணவன் குற்றம் சுமத்தவில்லை. அங்கு குற்றவாளி தர்மர். அதாவது அவள் கணவன், இங்கு நிலையே வேறு. தேவரும் முனிவரும் மற்ற பெரியவர்களும் ஊர்ப்பொது மக்களும் கூடியிருக்கும் சபையில் திருமணம் நிகழலாம். ஆனால் கணவனே, “நீ எல்லாம் இழந்துவிட்டாய். எனக்களிக்க மிச்சம் ஒன்றும் இல்லை. நீ செத்திருக்கவேண்டும். நீ மண்ணில் நெளியும் புழு. நாங்கள் உயர் குலம். பெண்ணின் பெருமை, கற்பின் திண்மை, ஒழுக்கம், சீர்மை எல்லாம் உன் ஒருத்தியால் பாதிக்கப்பட்டுவிட்டது.” என்று ஊர்ச் சபையில் கூறும் கொடுமை வேறு எங்கு நிகழ்ந்திருக்க முடியும்...?

மகாபாரதத்தில் கண்ணன் துயில் கொடுத்து மானம் காத்தான். மனைவி மீது அங்கு களங்கம் சுமத்தப்படவில்லை. இங்கு கணவனே மானபங்கப்படுத்திவிட்டான்.

இன்னொருசாரார் கூறும் சமாதானம்! கானகத்தில் சீதை இலக்குவனைச் சொல்லால் சுட்டாள். சொல்லின் வலிமையை சீதை உணரவேண்டுமென்றுதான் இராமன் அவ்வளவு கடுமையாகப் பேசினான் என்பது. சீதை-இலக்குவன் உரையாடல் இருவர் மத்தியில் நடந்தது. இதற்குப் படிப்பினையாக இதனைக் கூறுவது சரியல்ல. இது நடுத்தெரு நிகழ்ச்சி. பல மனங்களில் விஷவித்து விதைக்கப்பட்ட களமாகிவிட்டது.

தீர ஆராயாமல் தீர்ப்பு வழங்கியதற்குத் தன் உயிரை நீக்கிக்கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் ஓர் அவதாரப்புருஷன் அல்ல. மிகச் சாதாரணமான மன்னன். இங்கு உதாரண புருஷன் முறையாக விசாரிக்காமல் தீர்ப்பு கூறிவிட்டான்.

ஆக, இராமன் தன் மன்னன் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்பதுடன், பல ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவியைப் புரிந்து கொள்ளாமல் காப்பாற்ற வேண்டியவனே பெண்மைக்குப் பாதகம் செய்த கணவனும் ஆகிவிட்டான்.

இன்னொருவர் என்னிடம் நேரில் கூறியது, “தசரதன் உயிர்விடும்பொழுது கைகேயி, பரதன் உறவுகளை உதறிவிட்டதாகக் கூறி மறைந்தார். இராமன் ஆளும் இராச்சியத்தில் யாரும் மனக்குறையுடன் இருக்கக்கூடாது என்று இராமன் நினைத்தான். தயரதன் மீண்டும் மண்ணுலகம் வந்து நடந்துவிட்ட தவறுகளை மன்னிப்பதுடன், வெறுப்பு மாறி மீண்டும் அவர்களைக் குடும்பத்தில் சேர்க்கவேண்டும் என்ற விருப்பத்தாலும் தொடர்ந்து சீதையைக் காயப்படுத்தினான்” என்று கூறுவதும் பொருந்தவில்லை.

மனப்புண்ணுடன் சீதை வாழ்ந்த்தால்தான் பூமி வரண்டது. ஆனால் அப்பழியும் சீதைமேல் விழுந்து கானகத்திற்குக் கர்ப்பிணிப் பெண்ணாக நுழைய நேரிட்டது. எல்லோருக்கும் முன்னும் வசைச்சொற்களை ஒரு கணவன் உதிர்த்தது, அவளைச் சிதற அடித்துவிட்டது. மனிதத்தன்மையற்ற செயலை மறக்க முடியாது.

அக்கினிப்பிரவேச அரங்கினுள் நுழைந்து வந்திருக்கின்றோம்.

’இராமன் இப்படி பேசியிருக்க முடியுமா?’ என்ற கேள்வியுடன் நம் சிந்தனையைத் தொடர்வோம்.

சில குறும்புத்தனம் செய்திருக்கின்றான். சின்னத் தவறுகளும் செய்திருக்கின்றான். துன்பம் நேர்ந்தபொழுது துவண்டு போயிருக்கின்றான். அவன் பதினான்கு ஆண்டுகள் கானகத்திற்குப் போகவேண்டும் என்று அறிந்தபொழுதும் அவன் முகம் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரைபோல் மலர்ந்தே இருந்தது.

வாலியை வதைக்கு முன்னர் அவன் தயங்கினான். விழுந்து கிடந்த வாலி சொல்லம்புகளால் இராமனைத் தாக்கியபொழுது பொறுமையாகப் பதிலிறுத்தான். உயிர்போகும் முன்னரே தந்தைக்கு நிம்மதி தர அங்கதனை கெளரவமாக ஏற்றுக்கொண்ட கருணை மனம் படைத்தவன் இராமன். சரணம் என்று வந்தவர்களை அணைத்துக் கொள்ளும் பண்பாளன். ஓடக்காரன் குகனோ, வானர சுக்கிரீவனோ, எதிரி முகாமிலிருந்து வந்த விபீடணனோ, எல்லோரையும் தன் சகோதரர்களாக ஏற்றுக்கொண்ட பாசமனம் படைத்தவன்.

தந்தை சொல் மிக்க மந்திரம் வேறு கிடையாது. தாடகை ஓர் அரக்கியென்றாலும் ஓர் பெண் என்பதால் கொல்லத்தயங்கிய மென்மை இதயம் கொண்டவன். பக்தனை அணைத்து ஆசியளிப்பதாக இறைவனைக் காட்டுவதைப் பார்த்திருக்கின்றோம். இராமனோ அனுமனின் பிடிகளுக்குள் இன்பம் கண்டவன். அனுமனிடம் எப்பொழுதும் கடனாளியாக இருக்க விருப்பம் தெரிவித்தவன்-நன்றியுணர்விற்கு அவன் கொடுத்த மரியாதை.

அவன் செய்த சிறுபிழை சூர்ப்பனகையை இலக்குவனிடம் அனுப்பியது. அரக்கியின் தொடர்ந்த பயமுறுத்தலில் அஞ்சிப்போன சீதையைப் பார்க்கவும் அவசரப்பட்டுவிட்டான். ஆசையில் ஏற்பட்ட சறுக்கல்.

போர்க்களத்தில் கூட எல்லாம் இழந்து நின்ற இராவணனைப் பார்த்து “இன்று போய் நாளை வா” என்று கூறிய பெருந்தகையாளன். கதையின் ஆரம்பத்திலிருந்து எங்கும் அவன் கொதித்து எழுந்து நாம் பார்க்கவில்லை. கடுஞ்சொல் பேச்சும் கேட்கவில்லை. அமைதியான பாத்திரப்படைப்பாய்க் கதை முழுவதும் இயங்கிவந்த இராமன், இந்த அக்கினிப்பிரவேசக் காட்சியில் பொருந்தவில்லை. குறைகளை மொத்தக் குத்தகை எடுத்த ஓர் ஆத்திரக்காரனை, அன்பே வடிவான சீதாராமனுடன் ஒன்று சேர்த்துப் பார்க்க இயலாது. இலக்கியம் படைப்பவர்களுக்கு இந்த முரண்பாடு நன்கு புரியும்.

தவறு நிகழ்ந்திருக்கின்றது. அதனையும் முடிந்தமட்டில் பார்க்கலாம்.

இராமன் கதை, நிகழ்ந்த ஒன்றா அல்லது கற்பனையா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். ஆனால் இராமன் வாழ்ந்த காலமும் வால்மீகி வாழ்ந்த காலமும் வேறாக இருக்கலாம். மூலக்கதை முன் வைத்தவர் வால்மீகி.

மகாபாரதப்போர் நடந்த காலத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு எழுதியதைப் பார்க்கின்றபொழுது ஏறத்தாழ கி.மு.3139 என்று குறித்துள்ளார்கள். இதற்கும் முன் வேதம் தோன்றிய காலம், அதற்கும் முன் இராமாயணம் நிகழ்ந்திருக்க வேண்டும். 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சமுதாய அமைப்பு, அவர்களிடையே இருந்த கலாச்சாரங்களை இராமாயண நிகழ்வுகளுடன் முடிந்த அளவு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

மனிதன் விலங்கினைப்போல் வாழ்ந்து பின்னர் படிப்படியாய் நாகரீகம் அடைந்து, கூட்டு வாழ்க்கை சமுதாயமாக மாறி, தனக்கென ஓர் நிறுவனம் அமைத்துக் கொண்டான். அதுவே குடும்பம் என்று ஆயிற்று. தன் உழைப்பின் பலனைத் தன்னுடைய வாரிசுகளுக்குச் சேரவேண்டுமென்ற கருத்தில், பொது நிலையிலிருந்த பெண்ணை உற்பத்திக்காரணியாய் மாற்றி, குடும்பத்தில் தலைவனுக்குத் தலைவியாகும் தனிநிலை பெற்றாள். குடும்பத்தலைவிக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தன் கணவனின் குறைகளைக் கடவுளிடம் கூறினால்கூட அவள் கற்புக்குக் குறைவு.

சங்க இலக்கியத்தில் ஓர் பெண் எந்த அளவு பேசலாம் என்று பல பாடல்களில் குறிப்பு வருகின்றது. அதே போன்று உயர்குலப் பெண்டிற்குக் கற்பு இன்றியமையாதது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குடிப்பிறப்பில் பிரிவினைகளும் காணப்படுகின்றன.

இராமனின் கதை நிகழ்வுக்குப் பின்னர் மகாபாரதக் கதை தொடர்கின்றது. அப்பொழுது இருந்த சமுதாய அமைப்பை அக்கதை கொண்டே பார்க்கலாம். மன்னர் திருதராட்டிரரும், பாண்டுவும் வியாசருக்குப் பிறந்தவர்கள். பாண்டவர்களும் பாண்டுவிற்குப் பிறந்தவர்களல்ல. திரெளபதிக்குக் கணவர்கள் ஐவர். அக்காலத்தில் இவைகள் உயர்குடியில் நடந்தவைகள். அப்பொழுது ஊர் அவர்களைப் பழிக்கவில்லை.

அன்றைய சமுதாய அமைப்பினை வைத்துக் கருத்துக் கூறவேண்டும். இராமாயணம் இதற்கு முன் நிகழ்ந்திருக்கின்றது. மாற்றான் சிறையில் இருந்ததால் மாசுபட்டவளாக ஊர் பழி சுமத்தி இருக்காது. துச்சாதனன் திரெளபதியைத் தொட்டு, பிடித்து இழுத்து வந்தான். அதனால் அவள் கற்பு போய்விட்டதாகக் குறை கூறவில்லை. அதனால்தான் வால்மீகியும் சீதையைத் தொட்டுத்தூக்கிச் சென்றதாக எழுதியுள்ளார்.

கற்பு” எனும் கட்டுப்பாடு மகாபாரதக் காலத்திற்குப்பின் வந்திருக்கவேண்டும். எனவே அக்கினிப் பிரவேச அரங்கத்தில் பிற்காலச் சேர்க்கைகள் இருப்பது புலனாகின்றது.

வால்மீகி இராமாயணத்தில்

இனி உன்னைச் சேர்த்துக்கொள்ளமுடியாது. உன் விருப்பம்போல் யாருடனும் இருக்கலாம்” என்று இராமன் இறுதியாக சீதையிடம் கூறுகின்றான். காலத்தை ஒட்டிய பேச்சு.

சீதை இராமனைப்போல் அமைதியான பெண்ணல்ல. நினைத்ததைப் பேசிவிடுவாள், இராமன் காட்டிற்குப் புறப்படும் தருணத்தில் தானும் உடன் வருவதாகப் பிடிவாதம் பிடிக்கின்றாள். இராமன் தயங்கியபொழுது “நீங்கள் ஆண்வேடம் தரித்த பெண்ணென்று அறியாமல் என் தந்தை உங்களுக்கு என்னை மணமுடித்து வைத்துவிட்டார்,” என்று கூறுகின்றாள்.

இலக்குமனிடம் வரம்பு மீறிக் கடுமையாகப் பேசுகின்றாள். அக்கினி பிரவேசக் காட்சியில் இராமனுக்கு விடைகள் அளித்தபின் முடிவில் “பெண்மனத்தை இவ்வுலகில் எந்த ஆண்மகனுக்கும் புரிந்து கொள்ளத் தெரியாது,” என்று பலருக்கு முன்னிலையில் தன் அபிப்பிராயத்தைச் சொல்லுகின்றாள்.

பெண்ணுக்குப் பேச்சு சுதந்திரம் இல்லாக்காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் இத்தகைய உரையாடல்கள் இருந்திருக்க முடியாது.

வானத்திலிருந்து மழைத்துளிகள் மண்ணை நோக்கி வரும்பொழுதே காற்றில் உள்ள தூசுகளுடன் கலந்து, மண்ணிலே ஆறாய் ஓடும்பொழுது பாதையில் இருப்பவைகளையும் அள்ளி அணைத்துக் கொண்டு ஓடுகின்றது. கதை நிகழ்ந்த காலத்திலிருந்து செவிவழிப் பயணமாகப் புறப்பட்டு கவிஞனிடம் வந்து சேரவும், கதையில் மனம் பறிகொடுத்தவன், அதனை அலங்கரித்துக் காவியமாக உருவாக்கிவிடுகின்றான். கதை என்றால் உச்சக்கட்டம் வேண்டாமா...? அக்கினிப்பிரவேசம் மேடை நாடகமாக பரபரப்புடன் உருவாக்கப்படிருக்கலாம்.

சீதாயணம் என்ற பெயர் வைக்க வால்மீகி விரும்பியதாக ஒரு செவிவழிச் செய்தியுண்டு. சீதையின் மேலுள்ள பரிவிலே காட்சியை மிகைப்படுத்தியிருக்கலாம். எழுத்தாளன் எழுதிக்கொண்டிருக்கும்பொழுது முற்றிலும் தன்னை அவன் இழந்துவிடக்கூடாது. இராவணன் பாத்திரத்தன்மையை மறக்கும் அளவு அவர் போயிருப்பாரா...? எனவே பல இடங்கள் பின்னால் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி. வால்மீகி தன் காலச் சூழலுக்குள் பழங்காலக் கதையை அமைத்துவிட்டாரா..? தன்னையும் ஒரு பாத்திரமாகக் கதையில் அமைத்துக் கொள்வது படைப்பாளிக்குள்ள சலுகை. உத்திரகாண்டம் கூட ஒட்டப்பட்ட பகுதியாக இருக்கலாம்.

தந்தை-பிள்ளை உறவிற்கு இராமாயணம் என்றாலும், இல்வாழ்க்கையில் ஏகபத்தினிவிரதன் என்பதற்கு இராமன் ஒருவன் தான் இன்றும் எடுத்துக்காட்டாகப் பேசப்பட்டுவருகின்றது. அன்றும் இன்றும் ஆணாதிக்க உலகில் அவர்களுக்கு நிறைய சலுகைகள் வைத்துக்கொண்டு உலா வரும்பொழுது, எடுத்துக்காட்டாய் விளங்கும் இராமனை இந்த அக்கினிப் பிரவேசக் காட்சியில் அமிழ்த்திவிடக்கூடாது.

ஆழ்ந்து சிந்திக்கும் தலைமுறை உருவாகிவிட்டது. இதுபோன்ற இதிகாசத்தில் கேள்விக்குரிய காட்சிகளுக்குச் சரியான விளக்கங்களை ஆராய்ந்து தரவேண்டியது சான்றோர்களின் கடமையாகும். இன்றும் நம்மிடையே சிறந்த ஆராய்ச்சியாளர்கள் இருக்கின்றனர். இதிகாச இராமன் தன் மனைவியை இப்படி பொது இடத்தில் கேவலப்படுத்தியிருக்கமாட்டான். இது என் உணர்வு சொல்லுகின்றது. உண்மையை உணர்த்த சான்றுகள் வேண்டும்.

கண்ணில் துரும்பு இருந்தால் உறுத்திக்கொண்டிருக்கும். கண்ணில் துரும்புடன் இருப்பது பொறுக்க முடியவில்லை. அறிஞர்கள் முயன்றால் துரும்பை எடுத்துவிடமுடியும். என் பணிவான வேண்டுகோளைச் சான்றோர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

நன்றி: திண்ணை

Saturday, July 24, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 15

மணி பெயருக்கேற்றவன்;நேரத்தின் அருமை தெரிந்து என்னை மெதுவாக சுய நிலைக்குக்கொண்டு வந்தான். விண்ணிலே சஞ்சாரம் செய்த ஜெயகாந்தனும் மண்ணுக்கு வந்துவிட்டார். நேரம் கருதி விரைவாகச் சாப்பிட்டுவிட்டு கிராமத்தை நோக்கி புறப்பட்டுவிட்டோம். இப்பொழுது கிராமத்துப் பிரச்னைகளைப் பற்றி பேசினோம்.

நாங்கள் செல்ல வேண்டிய கிராமமும் வந்தது!

மாலை நேரம்; மஞ்சள் வெய்யில்; நல்ல இதமான காற்று. ஊரின் நுழை வாயிலில் ஒரு மண்மேடு இருந்தது. அங்கே இரண்டு பெரியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளிக் காரை நிறுத்தினோம். ஜெயகாந்தன் மெதுவாக நடந்து சென்று அந்தப் பெரியவர்கள் பக்கம் போனார். இவர் வருவதைப் பார்த்த பெரியவர்கள் எழுந்திருக்க முயன்றனர். உடனே ஜெயகாந்தன் “உட்காருங்கோ” என்று கூறிவிட்டு அவரும் அவர்களுடன் மண் மேட்டில் உட்கார்ந்துவிட்டார்.

“என்னய்யா எங்க ஊர்ப்பக்கம், ஏதாவது விஷேசுமுங்களா?”

“இல்லே இல்லே. அந்தம்மா பெண்கள் குழந்தைகள் நலத்தில் வேலை பாக்கறவங்க. தடுப்பூசியெல்லாம் குழந்தைகளுக்குப் போடறாங்களாண்ணு கேட்க வந்திருக்காங்க.”

ஜெயகாந்தன் சாமர்த்தியமாக என் பணியைக் காரணம் காட்டிவிட்டார்

“பொம்புள்ளங்க வர்ர நேரம் தான்”

ஆமாம் கூலி வேலை முடித்து கிராமத்து ஜனங்கள் திரும்ப ஆரம்பித் திருந்தனர் (அதற்காகத்தானே இந்த நேரமாகப் பார்த்து வந்தது) காலித் தூக்குச்சட்டியைத் தோளில் தொங்கவிட்டு, சுள்ளிகள் கட்டைத் தலையில் சுமந்து கொண்டு வரும் பெண்களைப் பார்த்தேன்.

நான் ஜெயகாந்தனை விடுத்து மெதுவாக அவர்கள் பின்னால் போக ஆரம்பித்தேன். 25 ஆண்டுகள் அனுபவம். என்னால் மிகவும் எளிதாகப் பழகிட முடியும். உழைப்பிலே அசதி இருந்தாலும் அவர்களுடன் கூட நடந்த என்னிடமும் சரளமாகப் பேசிக் கொண்டு சென்றனர்.

மணியன், சாவி, பகீரதன் இன்னும் பலருடன் கிராமங்களுக்குச் சென்றிருக்கின்றேன். காருக்கருகில் நிற்கும் தோரணையில் மற்றவர்கள் ஒதுங்கி நின்றே பேசுவர். ஆனால் ஜெயகாந்தனோ அவர்களில் ஒருவராக உடன் உட்கார்ந்துவிடுவார். அவர்கள் கொடுப்பதை முக மலர்ச்சியுடன் வாங்கிச் சாப்பிடுவார். அங்கே எந்த வேற்றுமையும் இருக்காது. அவருடன் சென்ற அனுபவங்களை நான் நேரில் பார்த்தவள்.

போகும் பாதையிலும் கண்ணில் படுவதை உடனே மனத்தில் படம் பிடித்துவைத்துக் கொள்வார். இது அவர் முயற்சியல்ல. அவர் இயல்பு . அந்த ஒன்றுதலினால்தான் உயிர்ப்புள்ள உரையாடல்களை, காட்சிகளைக் காட்ட முடிகின்றது.

இவர் எழுத்துக்கு ஆய்வுகள் தேவையில்லை. மனித மனத்துடன் இணைய வேண்டும். அனுபங்களில் உளவியல் தானே புரிந்துவிடும்.

ஜெயகாந்தனுடன் பழகியவர்கள் அவரைப்பற்றி எழுத வேண்டும். ஆனால் எழுதுபவர்கள் சரியான புரிதல்தன்மை கொண்டவராக இருத்தல் அவசியம்.

ஜெயகாந்தன் பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சில வீடுகளுக்குச் சென்று பேசிவிட்டு அவர்கள் சமையல் முடிக்கவும் பேசலாம் என்று கூறிவிட்டு மண் மேட்டுப்பக்கம் வந்தேன். அதே நேரம் பஸ்ஸிலிருந்து இறங்கிய இருவர் அங்கே வந்தனர். ஜெயகாந்தனைப் பார்க்கவும் ,”அய்யா, நீங்களா?” என்று ஜெயகாந்தனிடம் கேட்டுவிட்டு அவ்வூர்ப் பெரியவர்களிடம், “இந்த அய்யா கதை எழுதறவரு. அதுவும் நம்ம ஏழை ஜனங்களைப் பத்தி அதிகமாக எழுதறவரு “ என்றார்கள்.

(ஜெயகாந்தன் கதை படித்திருந்தவர் ஒருவர் வந்தது மிகவும் உபயோகமாக இருந்தது. வாலிபர்களையும் வசீகரம் செய்யும் ஓர் எழுத்தாளர் )

“ஓ, அப்படியா, சந்தோஷம் அய்யா. கொஞ்ச நாளா பத்திரிகைக்காரங்க தொல்லை அதிகமா போச்சு. அதான் ஊருக்குப் புதுசா வர்ரவங்ககிட்டே பேசக் கூட யோசிக்க வேண்டியிருக்கு.”

"பேசும்பொழுது உங்க தயக்கத்திலேருந்து புரிஞ்சுகிட்டேன்.அந்தம்மா பேசிட்டு வரவும் நாங்க கிளம்பிடறோம். உங்களுக்குக் கஷ்டம் வேண்டாம்."

"அய்யோ, அப்படி இல்லேங்க. அதுவும் எங்க மேலே இரக்கப் பட்டு, எங்க கஷ்டத்தை எழுதறவரை அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவோமா?"

எப்படியோ பேச்சு சரளமாக ஆரம்பித்துவிட்டது. மனம் விட்டுப் பேச ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நடந்த கதையையும் கூறிவிட்டனர். இளைஞர்களின் ஆத்திரம் புரிந்தது

கலந்துரையாடலின் சுருக்கம் இதுதான்.

அந்த ஊரில் தாழத்தப்பட்ட வகுப்பினர் மட்டும் வாழ்ந்து கொண்டி ருந்தனர். சில இளைஞர்கள் வெளியூர் சென்று படித்து இப்பொழுது வெளியூரில் வேலையும் பார்க்க ஆரம்பித்திருந்தனர். அவர்களில் ஒருவன் கொஞ்ச தூரத்தில் இருந்த ஊரில், உயர்குலப் பெண் ஒருத்தியைக் காதலித்துவிட்டான். மறைமுகச் சந்திப்புகள் தொடர்ந்தன. கொஞ்சம் எல்லை மீறிப் பழகியதில் அந்தப் பெண் கர்ப்பவதியாகிவிட்டாள். (இந்தச் செய்தி மட்டும் நான் பெண்களிடம் அறிந்தது.)

அந்த ஊர்க்காரர்களுக்கு இவர்கள் காதல் விஷயம் தெரிந்ததவுடன் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. பையனைப் பிடித்து கொன்றுவிடத் துடித்தனர். சூழலைப் புரிந்து கொண்ட இளைஞன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். ஆனால் அந்த ஊர்க்காரர்கள் கிராமத்தில் வைத்துக் கொண்டு மறைக்கின்றார்கள் என நினைத்து கூட்டமாக வந்து, “அவனை எங்களிடம் கொடுக்க வேண்டும். அல்லது ஊரையே கொளுத்தி விடுவோம்.“ என்று கூச்சலிட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர். இதனால் மிரட்டலும் அடிதடி கலாட்டாவும் தொடர ஆரம்பித்திருக்கின்றது.

செய்தி வெளியே கசியவும் பிரச்சனை பெரிதாகப் பேசப்பட ஆரம்பித்துவிட்டது.

சம்பந்தப்பட்டவன் கிராமத்தில் இல்லை. செய்தியும் வெளிவந்துவிட்டது. விஷயத்தை ஆறப்போட்டுச் செய்யலாம் என்று முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள் பிரச்சனை பெரிதாகும் என நினைத்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த வழிகளைச் செய்து ஊரை அடக்கி வைத்துவிட்டனர். இப்பொழுது இதுவரை எங்கும் பிரச்சனை இல்லை. ஒரு காதல், இரு ஊர்களின் சாதிச் சண்டையானது. நீறு பூத்த நெருப்பாக அவ்வப்பொழுது புகைந்து கொண்டிருக்கின்றது. யாரும் ஊதிவிடாமல் இருந்தால் புகை அடங்கிவிடும்

ஜெயகாந்தன் உட்கார்ந்திருந்த இடத்திற்குக் கொஞ்சம் தள்ளி நான் உட்கார்ந்திருந்தேன். அவருக்கு முதலில் ஓர் குவளையில் டீகொண்டு வந்து கொடுத்தார்கள். பின்னால் ஓர் கலயத்தில் சுடு கஞ்சியும் வந்தது. அவரும் மறுக்காமல் அவர்கள் கொடுப்பதை வாங்கி ருசித்துச் சாப்பிட்டார்.

ஜெயகாந்தன் ஏழைகளுடன் கலந்துறைபவர். அவர்களில் ஒருவராக ஆகிவிடுவதால் எந்த தயக்கமும் இல்லாமல் அவர்கள் அவருடன் மனம்விட்டுப் பேசுவதும் சிரிப்பதுவும் இயல்பாகின்றது. குடிசைகளுக்குள் போவதில் அவர் தயங்கியதே இல்லை.

விளம்பரத்திற்காக ஏழைகளைப் பார்க்கப் போகவில்லை.அதனால்தான் அவர் கதைகளில் பிச்சைக்காரன், இடுகாட்டுப் புலையன், கசாப்புக் கடைக்காரர் போன்றவர்களை அப்படியே காட்ட முடிகின்றது.

கற்பனைக் குதிரையில் போய்க் கொண்டிருந்த என்னை அருகில் நடந்த ஒரு பேச்சு இழுத்துவிட்டது.

இளைஞன் ஒருவன் ஆத்திரத்துடன் முணங்கிக் கொண்டிருந்தான். அருகில் இருந்த ஒரு பெரியவர் அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வந்தார்.

"மனுஷன் புறக்கும் போது சாதி கிடையாதுன்னு சொல்லுவாங்க. எப்படியோ வந்தாச்சு. அப்போக் கூட இப்படி சண்டை வல்லே. இப்போ நலலது செய்யறதா நினைச்சு தப்பு பண்ணிகிட்டு வராங்க. அதனாலே சாதிச் சண்டை இப்போ அதிகமாய்டுத்து."

"நாம சும்மா இருக்கறதா? சாகறது நல்லதாப்பா?அவங்க பண பலம், ஆள்பலம் எல்லாம் உள்ளவங்க. நாமதான் நிறைய சாவோம். நீங்க நல்லா படிங்க. படிப்பு ஒண்ணுதான் நம்ம கஷ்டத்தைப் போக்கும். பள்ளிக் கூடத்திலே ஒண்ணத்தானே உட்காருதீங்க. எல்லாம் காலப் போக்கில் சரியாகும். கட்சிக்காரங்க விளையாட்டுலே மனுஷன் சாகக் கூடாதுப்பா."

அவர் படித்தவராகத் தெரியவில்லை. படிப்பைவிட அனுபவங்கள் மனிதனுக்கு எப்படி தெளிவைக் கொடுக்கின்றது!. கிராமத்து மண்மேட்டில் உபதேசப் பொன் மொழிகள்!

மீண்டும் ஜெயகாந்தனின் கதையில் வரும் ஓர் காட்சி மனக் கண்முன் தோன்றியது.

பிளாட்பாரத்தில் உட்கார்ந்து மாந்திரிகத் தொழில் செய்யும் ஓர் பாபா, ஒரு கிராமத்தானிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கும் காட்சி.

மந்திரேம் மாயம் எல்லாம் ஒருபக்கம் தள்ளுய்யா. வாக் ஸுத்தம் ஓணும். சுத்தமான வாக்குதான் மந்திரம். மனஸ் சுத்தமா இருக்கணும். கெட்ட நெனப்பு, இவனே அயிச்சுடணும், அவனெ ஒழிச்சுடணூம்னு நெனக்கிற மனச் இருக்கே - அதான்யா ஷைத்தான்.ஷைத்தான் இங்கே கீறான்யா இங்கே.! வேறே எங்கே கீறான்?ஆண்டவனும் இங்கேதான் கீறான்.நல்ல நெனப்பூ ஆண்டவன். கெட்ட நெனப்பூ ஷைத்தான்", என்று மார்பில் தட்டி நெஞ்சை உணர்த்துகிறார்.

“துட்டுக்கோசரம் வவுத்துக்காக அக்குரமம் பண்றது நம்ம தொயில் இல்லே”

தன் தொழில்பற்றி விபரம் கூறிவிட்டு மேலும் தொடர்கிறார்

"இன்னொருத்தனுக்கு கெடுதி நெனக்காதே.நீ கெட்டுப்பூடுவே. நல்லதே நெனை.ஆண்டவனைத் தியானம் பண்ணு. எதுக்கோசரம் ஆண்டவனைத் தியானம் பண்ணூ சொல்றேன். ஆண்டவனுக்கு அதினாலே லாபம் வரூது இல்லேடா, இல்லே.உனுக்குத்தான் லாபம் வருது. கெட்ட விசயங்களை நெனக்கறதுக்கு நீ யோசனை பண்ணமாட்டே.ஆண்டவனை நெனச்சுக் கிடான்னா மேலேயும் கீயேய்யும் பாத்துக்கினு யோசனை பண்றே. எல்லாத்துக்கும் நல்ல மனஸ் ஓணும்."

ஞானங்களும் நல்லுபதேசங்களும் வாழ்க்கையின் எல்லா வழிகளிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மகான்களையும் வேத வித்துக்களையும் நீதி நூல்களையும் நாடிச்சென்று ஞானம் பெற எல்லா மனிதர்க்கும் முடிவதில்லை. எனவே இந்த மாதிரி மனிதர்களின் மூலம், அது மூர்மார்க்கட் நடைபாதையில் கூட வினியோகிக்கப்படுகிறது.

"இந்த பாபா ஒரு ஞானவான் தான் “

72ல் ஜெயகாந்தன் எழுதிய “நடைபாதையில் ஞானோபதேசம் “ கதையில் சில வரிகள் இப்போது நினைவில் வந்து மோதின. கிராமத்து மண்மேட்டிலும் உபதேசங்கள் வினியோகிக்கப்படும் வித்தை கண்டேன். இது காலத்திற்கேற்ற புது உபதேசம்

காரில் திரும்பும் பொழுது எங்களால் பேச முடியவில்லை. மனங்கள் கனத்துப் போயிருந்தன. இருவருக்கும் காரணங்கள் தெரிகின்றன. தெரிந்து என்ன பயன்?

மனிதன் தோன்றி இரண்டு லட்ச ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்பொழுது அவனுக்கு மொழி கிடையாது. ஆடையின்றித் திரிந்தான் உறவுகள் என்று ஒன்றில்லை புலம்பெயர்ந்து சென்று கொண்டே இருந்தான் கூட்டம் பெருகப் பெருக அதிகார ஆசைகள் முதல் பல ஆசைகள் வந்தன. உழைக்கும் கூட்டம் பிரிக்கப்பட்டது.

காலச் சக்கரம் பல பிரிவினைகளைத் தோற்றுவித்தது. இப்பொழுது சலுகைகள் என்ற பெயரில் நூறாக இருந்தது நானூறாக ஆகிவிட்டது

இது யார் குற்றம்?

படித்தவர்களும் சாதி வேண்டும் என்கின்றார்கள். நிர்வாகத்தில் இடங்களைக் குறுக்கினால் அதிகக் கவனம் செலுத்த முடியும் என்று நினைத்தனர். அதே அடிப்படையில் சாதிகளைப் பிரித்து நல்லது செய்ய முடியுமென நினைக்கின்றனர்.இரண்டும் ஒன்றா?

பள்ளியில் எல்லா சாதிக்குழந்தைகளும் தான் படிக்க வருவார்கள். குழந்தைகள் என்றால் விளையாடுவது போல் சண்டைகளும் போட்டுக் கொள்வார்கள். அவர்கள் பிஞ்சு மனங்களில் சாதி நினைத்து இவைகளைச் செய்ய வில்லை. மேல்வீட்டுக் காரன் பிள்ளை அடிபட்டுவிட்டால் அது பிரச்சனையாகிவிடும்.

ஒரு காலத்தில் குருகுலத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த மதிப்பு இன்று ஆசிரியர்களுக்கு இருக்கின்றதா? மேலை வீட்டுக்காரன் அதனைப் பெரிய சாதிச் சண்டையாக்கிவிடுவான். பிள்ளைச் சண்டை ஊர்ச் சண்டையாகிவிடும்.

  • ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனி பள்ளி வர வேண்டும்.
  • கோயில் மரியாதையிலும் சண்டை வரும். எனவே ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி கோயில் வேண்டும்
  • தனித்தனி சுடுகாடும் வேண்டும்.

இத்தனைக்கும் இடம் வேண்டும்.

ஏற்கனவே விளை நிலங்கள் வீடுகளாகிக் கொண்டிருக்கின்றன. விவசாயத்திற்கும் இடம் வேண்டும். என்னதான் பணம் இருந்தாலும் உணவுக்கு தானியம் வேண்டாமா?

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்?

இப்பொழுது ஒரு ஊர் என்று எடுத்துக் கொண்டால், பல கட்சிகள், பல ரசிகர் மன்றங்கள், பல சாதிகள் என்று இருக்கின்றன. யாரோ இருவருக்கிடையில் சண்டை வந்தால்கூட மேலே சொன்ன ஓர் குடைக்குள் வந்து அது பெரிதாகி, பக்கத்தில் பரவி, பல இடங்களிலும் கொந்தளிப்பு ஏற்படுகின்றதே?

இதுதான் சாதி ஒழிப்பா?

கடவுள் வேண்டாம். அவன் கல்லாகவே இருக்கட்டும். ஆனால் மனிதனுக்கு அமைதி வேண்டாமா?

ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோரும் சில தவறுகளைச் செய்து வருகின்றோம். நம்மை நாம் உணர வேண்டாமா?

மகாத்மா காந்திஜி எழுதிய சில வரிகள் நினைவிற்கு வருகின்றன. மகாத்மா காந்தியின் சரிதை .. அதில்

அவனோ பிடிவாதமாக இருந்ததோடு என்னையும் எதிர்த்து மிதமிஞ்சிப் போகப் பார்த்தான்.கடைசியாக இருந்த ரூல் தடியை எடுத்து அவன் கையில் ஓர் அடி கொடுத்தேன்.அவனை அடித்த போதே என் உடம்பெல்லாம் நடுங்கியது. பையன்கள் எல்லாருக்குமே இது புதிய அனுபவம். அப்பபையன் கதறி அழுதான். தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். அடிக்க வேண்டிய நிலமை எனக்கேற்பட்டதைக் குறித்து நான் அடைந்த மனவேதனையை அவன் அறிந்து கொண்டான். அன்று நான் ரூல் தடியை உபயோகித்தது சரியா தவறா என்பது குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியாதவனாகவே இருக்கிறேன். ஒருவேளை அது தவறாகவே இருக்கலாம். என்றாலும் பலாத்காரத்தை உபயோகித்ததற்காக நான் இன்னும் வருத்தப் படுகின்றேன். என்னுள் இருக்கும் ஆன்ம உணர்ச்சிக்குப் பதிலாக மிருக உணர்ச்சியையே காட்டிவிட்டதாக நான் அஞ்சுகிறேன்

தன் தவறை உணர்வது அரிய செயல். அதிலும் அதனை வெளிப்படையாக ஒத்துக் கொள்வது மிகவும் அரிய செயல்.

இதிலும் நாம் என்ன செய்கின்றோம்?

நாம் தவறே செய்வதில்லை என்று சாதிக்கின்றோம். அத்துடனும் நிற்கவில்லை. காந்திஜிக்கு “மகாத்மா” என்ற பெயர் சரியா என்று கேலி பேசுகின்றோம்.

அவரவர்க்கு அவரவர் தலைவர்கள், பிடித்தமானவர்கள் என்றிருக்கின்றார்கள். தாராளமாக வானளாவப் புகழ்ந்து கொள்ளட்டும்.

பிறரைத் தூற்றி இன்பம் காண்பது சரியா? எந்த அளவு காழ்ப்புணர்ச்சிகளை வளர்த்து வருகின்றோம் ?

இதே சமுதாயத்தில்தான் நம் குழந்தைகள் வளர வேண்டும். நாமும் நம் குடும்பமும் வாழ வேண்டிய சமுதாயம் இது. பணமும் அதிகாரமும் இருந்தால் போதும் என்று நினைப்பது சரியா?

புத்தியைத் தீட்ட வேண்டியவன் கத்தியைத் தீட்டப் பழகுவான். வன்முறையும், வக்கிர புத்தியும், செக்ஸ் வெறியும் பிள்ளைப் பருவத்திலேயே ஊட்டுவது கொடுமையில்லையா? ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

பிறர் மீது பழி சுமத்தித் திரிவதைவிட ஒவ்வொருவரும் தன்னைச் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அழிந்துவரும் மனித நேயத்தைக் காக்க வேண்டும்.

காட்டுத்தீ போல் காழ்ப்புணர்ச்சி பரவி வருவதைக் கண்டால் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவனும் கவலைப் படுவான்; கவலைப்படவேண்டும்.

கார் மதுரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. எங்கள் நெஞ்சங்களில் எண்ணங்கள் அழுத்தியதால் இருவராலும் பேச முடியவில்லை. வெகு நேரம் கழித்துப் பேசினோம். அப்பொழுதும் சமுதாயத்தைப் பற்றி பேசவில்லை.மதுரைப் பயணம் முடிந்து சென்னைக்குப் புறப்படும் வரை நாங்கள் சாதாரணமாகக் எங்கள் குடும்பங்களைப்பற்றித்தான் பேசினோம்.

பின்னால் என்றோ ஒரு நாள் இந்த அழுத்தம் வெடிக்கும்

(தொடரும்)

நன்றி-திண்ணை

Friday, July 16, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 14

இதயம் பேசுகிறதுமணியன்- என் அரிய நண்பர்! அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளையிட்டுவிட்டார். என்னால் அதைத் தவிர்க்க முடியாது.

கரும்பு தின்னக் கூலியா?’ என்ற பழமொழிக்கேற்ப இருந்தது அந்த கட்டளை. ஆம், எங்கள் நண்பர் ஜெயகாந்தன் மதுரைக்கு வருகின்றார்; அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும்; அவர் போகும் இடங்களுக்கெல்லாம் நானும் உடன் செல்ல வேண்டும்; அவர் சென்னைக்கு ரயில் ஏறும் வரை அவர் வசதிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்;

மணியன் எப்பொழுது மதுரைக்கு வந்தாலும் டி.வி.எஸ் விருந்தினர் இல்லத்தில்தான் தங்குவார். அப்பொழுது டி.வி. எஸ் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தவர் திரு.தேசிகர்; சாமர்த்தியசாலி! நான் அப்பொழுது மதுரையில் உலக வங்கித் திட்டத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தேன். தேசிகர் எனக்கும் நன்றாகத் தெரிந்தவர்.

இது நடந்த வருடம் 1981!

ஜெயகாந்தனுக்கு அதே விருந்தினர் இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்திருந்தோம். அந்த நிறுவத்தினரே காரும் கொடுத்திருந்தார்கள்.

ஜெயகாந்தனுடன் சில நாட்கள்.

இந்த சிங்கத்தை எப்படி சமாளிக்கப் போகின்றேன் என்று மணியனிடம் கேட்ட பொழுது, "ரொம்ப அலட்டிக்காதே. அந்த சிங்கத்தைச் சமாளிக்கும் சாமர்த்தியம் உனக்குண்டுன்னு தெரியும்” என்று கூறி என்னை அடக்கிவிட்டார்.

ஜெயகாந்தனை வரவேற்க ரயிலடிக்குச் சென்றிருந்தேன். அவருடன் இன்னொருவரும் வந்தார். பெயர் மறந்துவிட்டேன்; மணி என்று வைத்துக் கொள்வோம்-அடையாளத்திற்கு ஒரு பெயர். ஜெயகாந்தனின் தேவைகளைக் கவனிக்க ஒருவர் உடன் கூட்டிவந்தது கண்டு நான் புன்னகைத்தேன். அவரும் என் பார்வை போன திக்கையும் பார்த்து என் எண்ணங்களின் ஓட்டத்தையும் புரிந்து கொண்டு ஒரு சிரிப்பைக் காட்டினார். இருவரும் சிரிப்புகளால் எண்ணங்களைப் பறிமாறிக் கொண்டோம்.

விருந்தினர் இல்லத்தில் அவரை விட்டு விட்டு மதிய உணவு நேரம் வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். எனக்குக் காலையில் கொஞ்சம் வேலைகள் இருந்ததால் உடன் இருக்க முடியவில்லை.

என் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பிய பொழுது அதற்குள் சிலர் அங்கு கூடி அவருடன் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டேன். ஜெயகாந்தன் வருகையைச் சிலருக்கு தேசிகன் கூறியதன் விளைவு. பெயரில் காந்தம்; அவருடன் கலந்துரையாட எத்தனை ஆர்வம்! இக்காட்சியை அவர் எங்கு சென்றாலும் கண்டிருக்கின்றேன்.

நாங்கள் கிளம்பியாக வேண்டும்.

ஒரு கிராமத்துப் பிரச்சனை

அந்தப்பிரச்சனை காட்டுத்தீயைப்போல் பரவிவிடும் போல் இருந்தது. பத்திரிக்கைகாரர்கள் பிரச்சனைக்குப் பல வர்ணங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர். மணியனுக்கும் ஆர்வம். அதன் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினார். அதற்கு ஜெயகாந்தனே பொருத்தமானவர் என்று நினைத்து அனுப்பியிருந்தார். அவர்கள் இருவரும் நண்பர்கள். எனவே அவரும் மறுப்பு கூறாமல் புறப்பட்டுவிட்டார்.

மதிய உணவு சாப்பிட்டுப் புறப்பட பிற்பகல் மூன்று மணியாகிவிட்டது.

கார் ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் அவரவர் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரமல்ல. சில மணி நேரம் அப்படி அமர்ந்திருந்தோம். இருவரும் சுயநிலைக்கு வந்த பின்னரும் அவர் என்னுடைய புதிய பணிகளைப்பற்றித்தான் விசாரித்தார்.

சில குறிப்பிட்ட பிரச்சனைகளைப்பற்றி பேசினோம்.

நாங்கள் போக வேண்டிய முதல் இடம் வந்தது. அங்கே சந்திக்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு நேராகக் குற்றாலம் சென்றோம். அங்கே தான் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன்.

இரவு 8.30 மணி.

இறங்கியவுடன் ஜெயகாந்தன் ஒரு கோரிக்கை வைத்தார். முன்னதாக இது பயணத்தில் சேர்க்கப்படவில்லை. திடீரென்று கேட்கவும் அப்படியே அதிர்ந்து போனேன்.

சீதாலட்சுமி, காலையில் நான் ஒரு கசாப்பு கடைக்குப் போக வேண்டும். ஆடு வெட்டும் முன் போக வேண்டும். சாயபுவிடம் முன்னதாகப் பேச வேண்டும். ஆடு வெட்டும் பொழுதும் இருக்க வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள்."

அவர் இதனைக் கேட்ட நேரத்தைப் பாருங்கள். இதற்கு மேல் நான் தேடிப்போய் ஏற்பாடு செய்ய வேண்டும்,. மதுரையிலேயே சொல்லித் தொலைத்திருக்கக் கூடாதா? அவரை எப்படி திட்டுவது? மணியனைத் திட்ட நினைத்தாலும் அவரும் சென்னையில் இருக்கின்றார். மறுக்கவும் மனமில்லை. பெண்ணால் முடியவில்லை என்று நினைத்துவிட்டால் என் தகுதி என்னவாகிறது? வீராப்பு பேசும் பொம்புள்ளையாச்சே!

அவரை மணியுடன் அவர் அறைக்கு அனுப்பிவிட்டு நான் கசாப்புகடை பற்றி விசாரிக்கச் சென்றேன். கண்டு பிடிக்காமல் இருப்பேனா? தமிழ் நாடே என்னுடையது போல் ஒரு திமிர். எப்படியோ எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தங்கும் இடம் வந்தேன்.

அவர் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கதவைத் தட்டவும் மணி திறந்தான். நான் உட்காரவில்லை.செய்த ஏற்பாடுகளைக் கூறிவிட்டு, “கார் டிரைவருக்கும் சொல்லிவிட்டேன். மணியைக் கூட்டிக் கொண்டு போய்விட்டு வாருங்கள் “ என்றேன்

நீங்கள் வரவில்லையா?

அவரை முறைத்துப் பார்த்தேன். அவர் சிரித்துக் கொண்டே,” சரி சரி, நான் போய்விட்டு வருகின்றேன் “ என்று சொன்னார்.

நான் என் அறைக்குச் சென்றேன். வெளியில் அன்று நல்ல மழை. அருவி சத்தம் வேறு. ஏனோ இயற்கையே பேயாட்டம் போடுவது போன்று ஓர் உணர்வு. என் உணர்விற்கேற்ற பின்னணி இசை!

மேஏஏஏஏ!

அய்யோ, ஆடு அழுவது போன்று ஓர் எண்ணம். யாருக்காவது காயம் பட்டால் கூட அந்த இரத்தத்தைப் பார்க்க மாட்டேன். இப்பொழுது ஓர் ஆட்டை யாரோ வெட்ட வருவது போலவும் , அந்த ஆடு அழுவது போலவும் காட்சிகள் வந்து என் நிம்மதியைக் கெடுத்துவிட்டது. இப்படி ஒரு கோரிக்கை வைப்பார் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஏதோ கிராமத்திற்குச் செல்லப்போகின்றோம் என்று நினைத்து வந்தவளுக்கு இப்படி ஒரு இம்சையா?

இரவு நகர்ந்து பொழுதும் விடிந்தது. நான் தூங்கவே இல்லை சீக்கிரம் குளித்துவிட்டு மழையையும் மலையையும் பார்த்துக் கொண்டிருந்தேன். கற்பனை வரவில்லை

ஜெயகாந்தனின் கதைகளை நினைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. அவர் கதையொன்றின் காட்சி மனத்திரையில் ஓட ஆரம்பித்தது.

ஆண் குருவி பேனில் அடிபட்டு செத்து விழ, அதைப் பார்த்த பெண் குருவி பதைபதைத்ததை எழுதியிருந்தது நினைவிற்கு வந்தது. ஜெயகாந்தன் காட்டும் காட்சி

அந்தப் பெண் குருவி தவிச்ச தவிப்பு இருக்கே ..

கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். கடைகெட்ட அரக்கனுக்குமில்லாத சித்திரவதையை ரசிக்கிற குரூர மனசு படச்சவன்னு இல்லேன்னா, சாவுன்னு ஒண்ணு இருக்கும் பொழுது பாசம்னும் ஒண்ணை உண்டாக்குவானா?"

இப்படி எழுதின ஜெயகாந்தன் ஏன் கொலைக்களத்துக்குப் போயிருக்கின்றார்? நானும் பல முறை கடவுளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி கேள்விகள் கேட்பேன்.

ஜெயகாந்தன் ஏற்கனவே எழுதிய ’அக்கிரஹாரத்துப் பூனை,’ கதையும் நினைவிற்கு வந்தது.

அக்கிரஹாரத்தில் ஒரு பூனை நிறைய சேட்டைகள் செய்து வந்தது. ஒருவனுக்கு அதன் கொட்டத்தை அடக்க வேண்டுமென்ற ஆத்திரம்;கொன்றுவிடவும் நினைத்தான். ஆனால் கொல்ல முடியவில்லை. எனவே ஓர் கோணிக்குள் அடைத்துக் கொண்டு செல்லும் பொழுது ஓர் சாயபுவைப் பார்க்கின்றான்.

பூனை ரொம்பவும் லூட்டி அடிக்கறது.அதுக்காக அதைக் கொன்னுடறதுக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன். நீங்கதான் ஆடெல்லாம் வெட்டுவேளே.அதனாலே நீங்களே இதை வெட்டணும்

பூனையை இதுவரை நான் வெட்டினதில்லே.ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே.நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா ?

உவ்வே ! வெட்டிக் குழியிலே புதச்சுடலாம்

"நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன் ? எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடல்லேன்னா நான் வெட்டவும் மாட்டேன்.நான் ஆடு வெட்டறப்ப நீ பார்த்திரூக்கிறீயா?

"ஓ, பார்த்திருக்கேனே ! ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க..அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே

"மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம்பிக்கறப்போ ஆண்டவனைத் தொளுவறது இல்லையா? அதுதான். வெட்றது விளையாட்டில்லே. தம்பி. அதுதான் என் குடும்பத்துக்குக் கஞ்சி ஊத்தற தொளில்.அதுக்காவ உங்கிட்டே காசு ,கீசு கேக்கல்லே.நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி.எதையும் வீணாக்கக் கூடாது.வீணாக்கினா அது கொலை. அது பாவம். என்னா சொல்றே?

"இன்னிக்குமட்டும் விளையாட்டுக்காக இந்த பூனையை வெட்டுங்களேன்

வெளையாட்டுக்குக் கொலை செய்யச் சொல்றியா? த்சு...த்சு ! வெளையாட்டுக்குக் கொலை செய்ய ஆரம்பிச்சா, கத்தி பூனையோடு நிக்காது.தம்பி, நான் உன்னைக் கேட்கறேன், வெளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன ?

எப்பேர்ப்பட்ட தத்துவம்!

எவ்வளவு எளிதாகக் காட்டிவிட்டார்!

புதிதாக இனி என்ன பார்க்கப் போகின்றார்?

இந்தக் கதை எழுதிய வருடம் 1968!

மணி வந்து கூப்பிட்டான். ஜெயகாந்தன் ஏதோ யோக நிஷ்டையில் இருப்பது போன்று கண்மூடி அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்கவும் என் கோபம் பறந்துவிட்டது. அதுமட்டுமல்ல; அவர் முன்னால் பவ்யமாக உட்கார்ந்துவிட்டேன். அவராகப் பேசும்வரை காத்திருக்க வேண்டும் என்று என் மனக்குரல் அறிவித்தது.

அவர் கண்விழித்தாலும் அவர் மனம் எங்கோ சஞ்சரிப்பதை உணர முடிந்தது. குற்றாலத்தில் இன்னொரு பேரருவியைப் பார்க்கப் போகின்றேன் என்று என் உள்ளுணர்வு உணர்த்தியது.

அருவி கொட்ட ஆரம்பித்தது!

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் எனக்குக் கிடைத்த விருந்து. அன்று பதிவு செய்ய என்னிடம் சாதனங்கள் இல்லை. நினைவிலே இருப்பதின் சுருக்கம் மட்டுமே தர முடிகின்றது.

சாயபுவுடன் மனம் விட்டுப் பேசி இருக்கின்றார். முதலிலேயே சொல்லி வைத்திருந்ததால் உரையாடல் திருப்திகரமாக நடந்திருக்கின்றது.

அவர் கண்ட காட்சியும் அவர் உணர்வுகளும்!

"சீதாலட்சுமி, ஆடு வரும் பொழுது கண்களைப் பார்த்தேன். அதன் அசைவுகளைப் பார்த்தேன். அதற்கு தான் சாகப் போகின்றோம் என்று தெரிந்திருக்கின்றது. ஆனால் பயமில்லாமல் மெதுவாக வந்து நின்றது. “உனக்கு என் உயிர் தானே வேண்டும் எடுத்துக் கொள்” என்று சொல்வதைப் போல் நின்றது. அதற்கு ஐந்தறிவு என்கின்றார்கள். ஆனால் அதன் உள்ளுணர்வு மனிதனைப்போல் இருக்கின்றது. மனிதன் கூட மரணம் வரும் பொழுது பயப்படுவான். ஆனால் மிருகம் தயாராகிவிட்டது."

"பற்றற்ற துறவியாய், ஞானியாய் கண்டேன். உயிர் எடுக்கப்போகும் மனிதனிடம் கொலை வெறி இல்லை. சாத்வீக நிலை. கடமைவீரனாகத் தெரிந்தான். தன் தொழிலைத் தொடங்கும் முன் இறைவனை வேண்டிய பொழுது அவனும் ஞானியாகவே தோன்றினான்."

அது கொலை பூமியல்ல. ஞான பூமி.

உயிர் கொடுப்பவன் யார் ?

உயிர் எடுப்பவன் யார் ?

உயிர் எங்கே போகின்றது?

விலகும் உயிரைப் பிடித்து நிறுத்த முடியுமா?

உயிர் என்று வந்து விட்டால் அது மிருக உயிர், மனிதர் உயிர் என்று பேதம் உண்டா?

தெளிவு பிறந்துவிட்டால் உயிர் உடலில் இருந்தாலும் அது வெளியில் பறந்தாலும் ஒன்றே என்ற நிலை வந்துவிடுகின்றது.

அது ஆடானாலும் புரிந்து கொண்டு அமைதி காத்தது .

ஆட்டின் கண்கள் பேசின சீதாலட்சுமி. புல்லரித்துப் போனேன். வெட்டுண்ட தலை கீழே விழுந்த பொழுதும் அதன் விரிந்த கண்கள் வாழ்வின் அர்த்தத்தைக் கூறின”.

தன் கடமையை முடித்தவன் முகத்திலும் சாந்தம்.

அந்த சூழல், அந்த நிகழ்வு அதிசயத்தைக் காட்டியதேயொழிய அச்சத்தைக் கொடுக்கவில்லை

ஜெயகாந்தன் பேசிக் கொண்டே இருந்தார். ஏதோ ஞானோபதேசம் கேட்பதைப் போன்று அடக்கமாக இருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அன்றைய பேச்சு போல் என்றும் அவரிடம் நான் கேட்டதில்லை. சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கிவிடுவார். திடீரென்று பேசுவார். பிறப்பு, இறப்பு, இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை என்று நிறைய பேசினார். அலைபாயும் மனித உணர்வுகள்பற்றிக் கூறினார்.

வாயாடிப் பெண் நான். ஆனால் வாய்மூடி உட்கார்ந்திருந்தேன். அன்று அரங்கம் எடுத்துக் கொண்டது ஐந்து மணி நேரம். அவர் மட்டுமே பேசினார்

அது ஒரு சுகானுபவம் . அதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்கத் திறனில்லாப் பெண்மணி. அற்புதங்கள் எப்பொழுதாவதுதான் நடக்கும்.

இன்றும் என் மதிப்பில் உயர்ந்தவர் ஜெயகாந்தன்

அவருடைய பன்முகங்களைக் கண்டிருக்கின்றேன்.

(தொடரும்)

நன்றி-திண்ணை

Friday, July 9, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு–ஜெயகாந்தன் 13



என்னை ஈர்த்த இன்னொரு கதை - "நந்தவனத்தில் ஓர் ஆண்டி"

சத்திரத்தில் ஓர் பிச்சைக்காரனைக் காட்டி வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிய வைத்தார், இப்பொழுது இடுகாட்டிற்கே அழைத்துச் சென்று விடுகின்றார். மனிதன் இறுதியில் மண்ணிலே தானே கலந்து மறைகின்றான்.

ஜெயகாந்தனின் உலா, பட்டினங்களில் பங்களாக்களைச் சுற்றுவதைவிட குப்பத்துக்கும், இது போன்ற இடங்களுக்கும் போவதில் ஓர் தனி ஆர்வம் தெரிகின்றது.

பொதுவாக ஒதுக்கப்பட்டவர்களிடத்திலும் ஒடுக்கப்பட்டவர்களிடத்திலும் தனி அக்கறையைக் காண்கின்றோம்.

இந்தக்கதை படித்தவுடன் ஏதோ ஓர் தாக்கம்; அப்படியே அமர்ந்து விட்டேன்! மனத்தை யாரோ பிசைவது போன்ற ஓர் அவஸ்தை.

என் முதுமை காரணமா? வெறுப்பும் சலிப்பும் என்னை ஆட்டிப் படைத்தது. பேசாமல் படுத்துவிட்டேன். அப்பொழுதும் மனம் சிந்தனையிலிருந்து வழுவவில்லை. கதையின் ஒவ்வொரு வரிகளும் என் நினைவில் வந்து மோதின.

கதைக்களன் ஓர் இடுகாடு.

ஏன் இப்படி எழுதுகின்றார்?

எப்படி இதனை இப்படியாகக் காணமுடிகின்றது?

ஜெயகாந்தனின் அக்கறை சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களையே சுற்றிவரும். சிக்கலான உணர்வுகளையும் கூட யதார்த்தமாகக் காண்பார். அவர் படைக்கும் பாத்திரங்களுடன் உறவு கொண்டு ஒன்றிவிடுவார். அவரைக் குறை சொன்னால் கூடப் பொறுத்துக் கொள்வார். அவர் படைத்த பாத்திரங்களைக் குறை கூறப் பொறுக்க மாட்டார்.

சம்பவங்களைவிட தனி மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். உரையாடல்கள் அவரின் இதயக்குரல். பிச்சைக்காரனின் திண்ணையும் தொழுதற்குரிய கோயிலும் இரண்டிலும் அவரால் தத்துவங்கள் காண முடியும்.

இடுகாட்டில் மனிதமனத்தைச் சித்திரமாக வரைந்த ஓவியமே "நந்தவனத்தில் ஓர் ஆண்டி."

தூரத்துப்பரர்வைக்கு அது ஓர் நந்தவனம் போல் தோன்றும். ஆனால், அது ஒரு இடுகாடு. ஆண்டியின் உழைப்பில் அது ஓர் நந்தவனம்.

அவன் பெயர்தான் ஆண்டி.அவனுக்கும் மனைவி உண்டு. மேற்கு மூலையில் பனை ஓலைகளால் வேய்ந்த ஓர் சிறு குடில் அவன் இல்லம்.

ஆண்டி ஒரு வெட்டியான்.அந்த மயான பூமிக்கு வரும் பிணங்களுக்குக் குழிவெட்டுவது அவன் தொழில். அதற்காக அவன் முனிசிபாலிட்டியிலிருந்து பெறும் கூலிப் பணம் ஏழு ரூபாய். அந்த வீடும் கொடுத்திருக்கின்றார்கள். அவனுக்கு சோகம் தெரியாது. குழிகள் வெட்டும் பொழுதும் கூடப் பாடிக்கொண்டே வேலை செய்வான். அவனைபற்றி கதாசிரியரின் எழுத்திலே பார்ப்போம்.

ஆண்டி ஒரு வித்தியாசமானவன். மகிழ்ச்சி என்னவென்றே தெரியாத மனிதர்கள் எப்பொழுதும் குஷியாகப் பாடிக் கொண்டே இருக்கும் அவனை”ஒரு மாதிரி” என்று நினைத்தார்கள்

மனிதர்களின் நினைப்புகளைக் குருபீடத்திலும் , இடுகாட்டிலும் அவர் சுட்டிக் காட்டுவது , யதார்த்தம் ஆயினும் சிலருக்கு ஆத்திரம் கொடுத்துவிடுகின்றது. ஜெயகாந்தனின் உரையாடல்களும் ,அவர் தீட்டும் காட்சிகளும் காட்டும் உள்ளுறை தத்துவங்களை சிலர் விமர்சிப்பதுண்டு. இறைவனையே விமர்சிப்பவர் நாம். ஜெயகாந்தன் சாதாரண மனிதன். எதைப்பற்றியும் கவலைப்படாமல் உள்ளத்தில் உணர்வதை முலாம் பூசாமல் எழுதுபவர்.

கதைக்குச் செல்வோம்.

ஆண்டி கடுமையான உழைப்பாளி. பாடிக்கொண்டே வேலை செய்வான்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி-அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி -அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

இந்தப்பாட்டிற்கு அவனுக்குப் பொருள் தெரியாது. எப்பொழுது இந்தப்பாட்டை யார் கற்றுக் கொடுத்தது என்பதெல்லாம் அவனுக்கு இப்போது நினைவில்லை. ஆனாலும் எப்பொழுதும் அவன் இதனை உற்சாகத்துடன் பாடிக் கொண்டிருப்பான்.

நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக் கொண்டு முதன் முதலில் உச்சரித்தோம் என்று கூற முடியுமா?ஆனால், ஏதோ ஒரு விசேஷ வார்த்தையைக் குறிப்பாக எண்ணினோமானால் நம்மில் எவ்வளவோ பேர் சொல்லிவிடுவோம்.

அந்த இடுகாட்டிற்கு வருவது குழந்தைகளின் பிரேதங்கள். குழி வெட்டுவது அவனுக்கு சிரமமில்லை. மற்ற நேரத்தில் அவன் உழைத்ததில் உருவானது அந்த நந்தவனம்.

பிள்ளைகளைப் பறிகிகொடுத்தவர்கள் துக்கத்துடன் வரும் பொழுது இவன் மட்டும் அதன் தாக்கம் எதுவுமின்றி மலர்ச்சியுடன் இருப்பான். எனவே மற்றவர்களுக்கு அவன் ஒரு மாதிரியானவன்தான்.

ஊராரின் புத்திர சோகம் அவனுக்குப் புரிந்ததே இல்லை.ரோஜாச்செடிக்குப் பதியன் போடுவது போல பாட்டு பாடிக் கொண்டே குழி பறிப்பான். அருகிலிருக்கும் அந்தப் பச்சிளங் குழந்தையின் பிரேதத்தைப் பார்த்தும், குழந்தையைப் பறிகொடுத்தவன் குமுறிக்கொண்டிருப்பதைப் பார்த்தும் இவன் பதறாமல் பாடிக் கொண்டிருப்பான்.’சீ! இவனும் மனிதனா?’ என்று நினத்து “இவன் ஒரு மாதிரி” என்று சொல்லுவார்கள்.

ஒரு நாள் அவன் மனைவி முருகாயி சொன்ன செய்தி அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவள் சொன்ன கனவை அவன் புரிந்து கொண்டுவிட்டான். அவர்களிடையே புது ஜனனம் ஒன்று தோன்றப் போகின்றது. அவன் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் பொழுது தெருவில் போன ஓர் பண்டாரம் பாடிய பாட்டுதான் இது. அப்படியே அவன் மனத்தில் பதிந்துவிட்டது. அவனுக்கு அதன் பொருள் தெரியாது.

இருளன் மகனாய்ப் பிறந்தான். மகிழ்ச்சியில் திளைத்தான். தனது மதலையை மார்புறத்த தழுவிய ஆண்டியின் கரங்கள் ஊராரின் பிள்ளைகளின் சவங்களுக்குக் குழி பறித்தன.குழி பறித்து முடிந்த பின் நேரே தன் குடிசைக்கு ஓடுவான்; தூளியில் தூங்கும் இருளனைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவான்; கூத்தாடுவான்.

எத்தனையோ பெற்றோரின் ஆனந்தத்துக்கு கனவுகளுக்கெல்லாம் புதை குழியாயிருந்த அந்த இடுகாட்டில் மரணம் என்ற மாயை மறந்து ஜனனம் என்ற புதரில் மட்டும் லயித்துக் கொண்டிருந்த ஆண்டியின் வாழ்விலும் இழப்பு நேர்ந்தது.

காலம் போன ஒரு நாளில் எதிர்பாராமல், நினைவின் நப்பாசை கூட அறுந்து போன காலமற்ற காலத்தில் வாராமல் வந்து அவதரித்து, ஆசை காட்டி விளையாடி கனவுகளை வளர்த்த இருளன் எதிர்பாராமல் திடீரென்று இரண்டு நாள் கொள்ளையிலே வந்தது போல் போய்விட்டான்.

வேப்பமரத்தடியில் கட்டித் தொங்கும் வெறும் தூளியினருகே முழங்கால்களில் முகம் புதைத்து குந்தி இருக்கிறான் ஆண்டி. எங்கோ வெறித்த விழிகள்! என்னென்னமோ காட்சிகள்!! எல்லாம் கண்டவை!!! இனி காண முடியாதவை!!!!

வேலியோரத்தில் தவழ்ந்து சென்றதும்,தூளியிலிருந்து உறக்கம் கலைந்த பின் தூளிக்கு வெளியே தலையை நீட்டி தள்ளி தொங்க விட்டுக் கொண்டு கன்னங்குழியும் சிரிப்புடன் அப்பா என்ற அழைத்ததும், செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவனறியாமல் பின்னே வந்து திடீரென்று பாய்ந்து புறம்புல்லி உடலைச் சிலிர்க்க வைத்து மகிழ்வித்ததும், எதிரிலிருக்கும் தட்டத்து சோற்றில் வேகமாய்த் தவழ்ந்து வந்து தனது பிஞ்சுக் கைகளை இட்டுக் குழப்பி விரல்களுக்கிடையே சிக்கிய இரண்டொரு பருக்கைகளை வாயில் வைத்துச் சுவைத்துச் சப்புக்கொட்டி கைதட்டி சிரித்ததுக் களித்ததும், நெஞ்சோடு நெஞ்சாய்க் கிடந்து இரவு பகல் பாராமல் நாளெல்லாம் கிடந்து உறங்கியதும்.............

பொய்யா? கனவா? மருளா? பித்தா? பேதைமையா?

ஆண்டியின் சித்தம் மட்டுமல்ல; படிப்பவரையும் சிலையாக்கும் இரத்த வரிகள்! குழந்தை செத்த வீட்டில் மனம் ஒலிக்கும் ஒப்பாரிப் பாட்டு இது.

இருளன் தவழ்ந்து திரிந்த மண்ணெல்லாம், அவன் தொட்டு விளையாடிய பொருளெல்லாம் , அவன் சொல்லிக் கொஞ்சிய சொல்லெல்லாம், ஆண்டியின் புலன்களில் மோதி மோதிச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன. தாய்மையின் துடிப்பு. இடுகாட்டு வாழ்க்கையில் அவன் கண்ட ஒரே சொர்க்கம் வீழ்ந்துவிட்டது. இழப்பின் மதிப்பு மிக அதிகம்.

அவன் இருப்பது இடுகாடு. அவன் வீட்டிலேயும் ஒரு சாவு. அபூர்வமாகக் கிடைத்த பரிசைக் காலம் அவனிடமிருந்து பறித்து விட்டது. மனம் பேதலிக்காமல் என்ன செய்யும். இனி அவன் உணர்வில் காணும் காட்சிகளை அவர் வருணிக்கின்றார்.

மார்பை அழுத்திக் கொண்டு மண்வெட்டியை எடுத்தான்.கால்களை அகட்டி நின்று,கண்களை மூடிக் கொண்டு மண்வெட்டியை ஓங்கி பூமியில் புதைத்தான்

நந்த வனத்தில் ஓர் ஆண்டி! - அந்தப் பாட்டு... அவன் பாடவில்லை

ஊரார் பிணத்துக்குக் குழி பறிக்கும் போது மனசில் அரிப்போ கனமோ இல்லாமல் குதித்துவருமே அந்தப் பாட்டு. பாடியது யார்?

மீண்டும் ஒருமுறை மண்வெட்டியை உயர்த்தி பூமியைக் கொத்தினான்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி!

மீண்டும் அந்தக் குரல்

யாரது?

புலன்களையெல்லாம் அடக்கிக் கொண்டு மீண்டும் மண்வெட்டியால் பூமியை வெட்டினான்.மீண்டும் ஒரு குரல்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி -அவன்
நாலாறுமாதமாய் குயவனை வேண்டி

அய்யோ, அர்த்தம் புரிகிறதே !

மண்வெட்டியைத் வீசி எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

தூணைப் பிளந்து கிளம்பிய நரசிம்ம அவதாரம் போன்று பூமியை, புதைகுழி மேடுகளைப் பிளந்து கொண்டு ஒரு அழகிய சின்னன்சிறு பாலகன் வெளிவந்தான்.

கைகளைத் தட்டி தாளமிட்டவாறே ஆண்டியைப் பார்த்துக் கொண்டே பாடியது சிசு!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

குரல்கள் ஒன்றாகி, பலவாகி, ஏகமாகிச் சங்கமித்து முழங்கின. அந்த மயான பூமியில்எத்தனையோ காலத்திற்கு முன்பு புதையுண்ட முதல் குழந்தை முதல் நேற்று மாண்டு புதியுண்ட கடைசி குழந்தைவரை எல்லாம் உயிர் பெற்று உருப்பெற்று ஒன்றாகச் சங்கமித்து விம்மிப் புடைத்து விகஸித்த குரலில், மழலை மாறாத மதலைக் குரலில் பாடிக் கொண்டு கைத்தாளமிட்டு அவனைச் சுற்றிச் சூழ நின்று ஆடின. வான வெளியெல்லாம் திசை கெட்டு தறி கெட்டுத் திரிந்து ஓடின.

ஆண்டி தன்னை மறந்து சிரிக்கின்றான்.

அவன் ஆசை மகனும் அந்தக் குழாமில் இருக்கின்றான். தாவி பிடிக்க ஓடுகின்றான். ஆனால் அவனோ கைக்கெட்டவில்லை

அவன் இல்லை. அவன் மட்டுமல்ல அங்கிருந்த அத்தனை குழந்தைகளும் ஒரே மாதிரி இருந்தனர்.

ஜீவ ஆத்மாக்களின் சங்கமம்.அங்கே பேதமில்லை!

என்னுடையது என்றும் , இன்னுஒருவனுடையது என்றும், அவன் என்றும், அதுவென்றும்,இதுவென்றும் பேதம் காண முடியாத அந்த சமுத்திரத்தில் இருளனைமட்டும் எப்படி இனம் கண்டுவிட முடியும்? ஆண்டி தவித்தான்.

அவன் சாதாரணமான மனிதன்

புனரபி ஜனனம் புனரபி மரணம்

மயான பூமியா? இல்லை! அது ஞான பூமி

தினம் தினம் மரணங்களைப் பார்த்தும் மனிதன், ஆசைகளுக்கும் பாசத்திற்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டு அல்லாடுகின்றானே! ஆம். மனிதன் அப்படித்தான்.

ஆண்டியோ தினம் தினம் குழந்தைப் பிணங்களைப் பார்த்திருந்தாலும் ஆசைக்கு மகன் கிடைத்து, பாசத்தையும் காட்டி அவனை மோசம் செய்து இருந்த ஒன்றையும் பறித்துக் கொண்டது காலம். அவனால் என்ன செய்ய முடியும் அழத்தான் முடியும்.

இப்பொழுதெல்லாம் குழந்தைப் பிணம் வரும் பொழுது அழுகின்றான். மற்றவர்களுக்கு இப்பொழுதும் அவன் “ஒரு மாதிரி “தான்.

நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.

அன்று அவனை நினைத்ததிலாவது ஓர் அர்த்தம் கூற இயலும்.! இப்பொழுதும் இதென்ன கேலிச் சொல்?

நாம் எல்லோருமே ஒரு மாதிரிதான்

ஆண்டவனையே நம் வியாபாரத்தில் கூட்டாளியாக்குகின்றோம். சொல்லாலும் செயலாலும் படைத்தவனையே கல்லாக்கிவிட்டோம். இவனை ஏன் படைத்தோம் என்று திகைத்து நிற்கின்றான்.

நாம் ஒரு மாதிரிதான்.

நினைத்தால் ஒருவனைக் கோபுரத்தில் ஏற்றுகின்றோம். பிடிக்கவில்லையென்றால் அவனையே குப்புறத் தள்ளுகின்றோம். இயக்கம் என்றும் இலட்சியம் என்றும் தத்துவம் பேசுவோம். கோடி கோடியாய் நாம் சம்பாதிப்போம். உணர்ச்சி சொற்களை வீசி எளியவனைத் தீக்குளிக்கச் செய்வோம். உடனே அந்தப் பிணத்திற்கு மாலை சூட்டி அதிலும் வரவு பார்ப்போம்.

நாமும் ஒரு மாதிரிதான்

சுயநலமும் சுரண்டலும் கொடிகட்டிப் பறக்கின்றது. பித்தனைச் சித்தனாக்குவோம். அப்பாவியைப் பித்தனாக்குவோம். ஏமாற்றுகின்றான் என்று தெரிந்தும் ஏமாறுகின்றோம்.

ஏமாற்றுபவனும் ஒரு மாதிரி.

ஏமாறுகின்றவனும் ஒரு மாதிரி.

ஒவ்வொருவரும் தம்மை சுயதரிசனம் செய்து கொள்வோம்.

இக்கதை என்னை அழவைத்தது கொதிப்படைய வைத்தது. நானும் அழமட்டும்தானே செய்கின்றேன்

நானும் ஒரு மாதிரி.

தொடரைமட்டும் நிறுத்த முடியவில்லை.அவருடன் பயணம் செல்லப் போகின்றோம்.

(தொடரும்)

நன்றி: திண்ணை

Friday, July 2, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 12



“லிவ்விங் டுகெதெர் “ பற்றி என்ன நினைக்கிறீங்க?"

இந்தக் கேள்விக்கு நான் சரியான பதில் கொடுக்க வேண்டும்.

"மேல் நாடுகளில் இது வேகமாப் பரவி வரும் கலாச்சாரம். அங்கே கல்யாணம் செய்துக்காம செக்ஸ் வச்சுக்கறது, பிள்ளை பெறுவது சகஜமா போச்சு. அப்படி பிறக்கிற குழந்தைங்கள ஓர் அவமானச் சின்னமா பாக்குறதில்லே. அவளை யாரோ ஒருவன் கல்யாணம் செய்துக்கற போதும் அந்தப் பிள்ளையையும் ஏத்துக்கறான். இங்கே என்ன நடக்கும்? அப்படி சேர்ந்து வாழ்ந்தா எப்படி சொல்லுவாங்க. “ஒரு பெண்ணை வச்சுக்கிட்டிருக்கான்.“ அடுத்து அவளை “வப்பாட்டி”ன்னும் சொல்லுவாங்க. கவுரவமா சொல்ல மாட்டங்க. குழந்தை பிறந்துச்சோ அவ்வளவுதான், கேலி பேசியே சாக அடிப்பாங்க. ஆரம்பத்திலே தைரியமா இருக்கறவனும் மானம் போச்சுன்னு அவளையும் குழந்தையையும் வெறுக்க ஆரம்பிச்சுடுவான். முதல்லே தெரியாது. வீராப்பு பேசும் வாய் அப்போ அடைச்சுடும். நம்ம நாட்டுக்கு இது அவ்வளவு சரியில்லே. ஏதோ அங்கும் இங்கும் நடக்கறதை வச்சு முடிவுக்கு வரக்கூடாது."

தொலைபேசி சிறிது நேரம் மவுனமாக இருந்தது.

"அம்மா, உங்களைப் பார்க்க எப்போ வரலாம்?"

அவன் என்னைப் பார்க்க வந்தான். கால்களில் விழுந்து நமஸ்காரமும் செய்தான். அவன் முகத்தில் வெட்கம் கலந்த ஓர் சிரிப்பு!

"அம்மா, வேறு யாராவது இருந்தா திட்டி இருப்பாங்க. நானும் கிழவின்னு பதிலுக்குச் சொல்லி இருப்பேன். பொறுமையாக நீங்க சொன்னது எனக்குப் பிடிச்சது. அது உண்மைதான்மா!"

நான் திட்டியிருந்தால் அவன் அது போன்ற வாழ்க்கையைத் தேடியிருப்பான். தயங்கும் இளம் உள்ளங்களுக்கு சொல்லும் விதத்தில் உணமைகளைக் கூறினால் அவர்கள் சிந்திக்க முயல்வார்கள்.

எப்படி எனக்கு இந்தப் பக்குவம் வந்தது? படித்ததாலோ, பயிற்சிகள் பெற்றதாலோ வந்துவிடவில்லை. அனுபவங்களால் மெருகேற்றப்ப்பட்ட மனம். சில சமயம் சிலரின் சந்திப்புகளும் நம்மிடையே மாற்றத்தை வரவழைத்துவிடும். திட்டம் ஏதுமின்றி நடக்கும் நிகழ்வுகளில் மனித மனம் புதைந்து உருமாறிவிடுவதுமுண்டு.

மனத்தில் புகைச்சல் ஏற்பட்டுவிட்டால் நான் ஓடி ஒதுங்கும் இடம் ஆழ்வார்ப்பேட்டை குடில். அங்கே நான் செலவழிக்கும் நிமிடங்கள் பதினைந்து முதல் முப்பது நிமிடங்களாகத்தான் இருக்கும். எனக்கு நேரம் கிடைப்பதுவும் அரிது. அதே நேரத்தில் மனத்தைச் சீர் செய்து கொள்ள நான் சந்திப்பவர் ஜெயகாந்தன். எதற்காக வருகின்றேன் என்று சொல்லுவதும் கிடையாது. அவரும் காரணம் கேட்கமாட்டர். எங்களிடையே ஓர் புரிதல் உண்டு அவ்வளவுதான். பேசி முடியவிட்டு அவர் உதிர்க்கும் சில சொற்களில் ஏதோ உண்மை கண்டு விட்டதைப் போல் திரும்பிவிடுவேன். இது எப்படி?

ஜெயகாந்தனின் "குருபீடம்" அருமையான அர்த்தமுள்ள சிறு கதை. ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே நம்மை ஆட்டிப் படைக்கின்றது.

ஓர் பிச்சைக் காரன்; சோம்பேறி; சுயமரியாதை இல்லாதவன்; நாற்றமடித்து வீதிகளில் அலைபவன்; ஒரு குழந்தை சாப்பிடுவதைக் கூட நாயைப் போன்று பார்ப்பவன்;குடித்து முடித்து வீசி எறியும் பீடிகளைப் பொறுக்கி புகைப்பவன்.; சந்தைக்கு வரும் தாய், தன் குழந்தைக்குப் பால் கொடுக்கும் பொழுது வெறித்தனமாகப் பார்த்து ரசிப்பவன்; ஆடையை விலக்கி அலங்கோலமாகப் படுத்துக் கொண்டு பார்ப்பவரைப் பயமுறுத்துபவன்; சத்திரத்தில் ஒதுங்கிய ஒருத்தியிடம் சுகம் கண்ட பின் அவள் குஷ்டரோகி என்று தெரிந்தும் அலட்சியமாக நினைத்து அவளை மீண்டும் தேடிப் போய் அவளைப் பயமுறுத்தி ஓடச் செய்பவன்.

இவன் தான் கதையின் நாயகன். இப்படிப்பட்ட ஒருவனை முன்னிறுத்தி படிப்பவரையும் மிரள வைக்கின்றார் ஜெயகாந்தன்!

இங்கே அழகை வருணிக்கவில்லை; அருவருப்பைக் கொடுக்கும் ஓர் மனிதனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகின்றார். படிப்பவர் மனத்திலும் ஓர் வெறுப்பை ஊட்டிய பின்னர் கதையின் கருவிற்கு வருகின்றார்.

பிச்சைக்காரன் எதிரில் யாரோ ஒருவன் வந்து “சுவாமி “ என்று அழைக்கின்றான். இந்தக் காட்சியை ஜெயகாந்தன் மூலமாகப் பார்ப்பதே சிறந்தது.

"புகையை விலக்கிக் கண்களைத் திறந்து பார்க்கின்றான். எதிரே ஒருவன் கைகளைக் கூப்பி உடல் முழுவதும் குறுகி, இவனை வணங்கி வழிபடுகிறமாதிரி நின்றிருந்தான்.இவனுக்குச் சந்தேகமாகித் தனக்குப் பின்னால் ஏதேனும் சாமி சிலையோ, சித்திரமோ இந்தச் சுவரில் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்து நகர்ந்து உட்கார்ந்தான். இவனது இந்தச் செய்கையில் ஏதோ ஒரு அரிய பொருளைச் சங்கேதமாகப் புரிந்து கொண்டு வந்தவன் மெய்சிலிர்த்து நெக்குருகி நின்றான். இவன் எதற்குத் தன்னை வந்து கும்பிட்டுக் கொண்டு நிற்கிறான் பைத்தியமோ? என்று நினைத்து உள்சிரிப்புடன் “என்னாய்யா இங்கே வந்து கும்பிடறே? இது கோயிலு இல்லே - சத்திரம்.என்னைச் சாமியார் கீமியார்னு நெனச்சுக்கிட்டியா ? நான் பிச்சைக்ககாரன் “என்றான் திண்ணையில் இருந்தவன்.

“ஓ! கோயிலென்று எதுவும் இல்லை. எல்லாம் சத்திரங்களே! சாமியார்கள் என்று யாருமில்லை, எல்லாரும் பிச்சைக்காரர்களே! “என்று அவன் சொன்னதை உபதேச மொழிகள் மாதிரி இலக்கண அலங்காரத்தோடு திரும்பத் திரும்பச் சொல்லிப் புதிய புதிய அர்த்தங்கள் கண்டான் தெருவில் நின்றவன்.

தெருவில் நின்றவனை திண்ணையில் இருந்தவன் பைத்தியக்காரன் என்று நினைத்தான். வந்தவனோ மேலும் இவனை , “சுவாமி, என்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் “ என்று வேறு கேட்டுக் கொண்டான்

இவனுக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. இருப்பினும் அடக்கிக் கொண்டு வந்தவனை டீ வாங்கி வரச் சொல்லுகின்றான்.அவனிடம் காசு இருப்பதைப் பார்க்கவும் பீடியும் வாங்கி வரச் சொல்லுகின்றான்

வந்தவன் முருகன் கோயிலில் மடப்பள்ளிக்குத் தண்ணிர் எறைச்சுக் கொண்டு வருபவன். அவனுக்கு மூணு வேளைச் சாப்பாடும் நாலணவும் கிடைத்து வந்தது. அவன் சொல்வதைக் கேட்போம்.

எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு.இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லேன்னு தெரிஞ்சும் உடம்பைச் சுமந்துகிட்டுத் திரியற சுமையைத் தாங்க முடியல்லே. துனபத்துக்கெல்லாம் பற்றுதான் காரணம்னு எல்லாரும் சொல்றாங்க . எனக்கு ஒருவிதப்பற்றும் இல்லே.ஆனாலும் நான் துன்பப்படறேன். என்ன வழியிலே மீட்சின்னு எனக்குத் தெரியலே.நேத்து என் கனவிலே நீங்க பிரசன்னமாகி “இந்த சத்திரந்தான் குருபீடம். அங்கே வா”ன்னு எனக்கு கட்டளை இட்டீங்க குருவே! நீங்க இதெல்லாம் கேட்கறதணாலே சொல்றேன். தாங்கள் அறியாததா? விடியற்காலையிலேருந்து சந்நிதானத்திலே காத்துக்கிட்டிருந்தேன். என் பாக்கியம் தங்கள் கடாட்சம் கிட்டியது

அப்போது குரு சொன்னான் “பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா - ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான். ஒரு கேள்விக்கு எம்மாம் பதில்” என்று ஏதோ தத்துவ விசாரம் செய்கிற மாதிரி பிதற்றினான். சீடன் அதைக் கேட்டு மகா ஞானவாசகம் மாதிரி வியந்தான். அன்று முதல் தினமும் நின்றவன் வர ஆரம்பித்தான்.இருந்தவனுக்கு சேவை செய்தான்.இப்பொழுதெல்லாம் அவன் வீதியில் திரியவில்லை. வந்தவன் குளிப்பாட்டி, உணவு படைத்து தனிமையில் விடாமல் உடன் இருந்தான். சூழ்நிலை மாறத் தொடங்கிவிட்டது.

அவன் பேசுகிற எல்லா வார்த்தைகளிலும் அவனே புதிதாகப் புரிந்து கொள்ளுகிற மாதிரி பலவிதமான அர்த்தங்கள் கண்டு இந்தச் சீடன் புளகாங்கிதம் அடைவதைச் சந்தைக்கு வருகிற சிலர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.சிலர் குருவை அடையாளம் கண்டு, இவன் யாரோ ஒரு சித்தன் என்று அப்பொழுதே நினைத்ததாகவும் அப்படிப்பட்டவர்கள் இப்படியெல்லாம் கந்தலுடுத்தி ,அழுக்கு சுமந்து எச்சில் பொறுக்கித் திரிவார்கள் என்றும் தன்னைப் பற்றி இவனுக்குத் தெரியாத ஒன்றைத் தெரிவித்தார்கள். அதைத் தெரிந்து கொள்வதற்கே ஒருவருக்குப் பக்குவம் வேண்டுமென்றும் அந்தப் பக்குவம் இந்தச் சீடனுக்கு இருப்பதாகவும் கூறிச் சீடனைப் புகழ்ந்தார்கள்.அதில் சிலர் இப்படியெல்லாம் தெரியாமல் இந்த சித்த புருஷனைப் பேசியதற்காக இப்போது பயமடைந்து இவனிடம் மானசீகமாகவும்,, கீழே விழுந்து பணிந்தும் மன்னிப்பு வேண்டினார்கள். இவனுக்குப் டீயும், பீடியும், பழங்களும் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தனர். பக்தர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தனர். இவனுடைய ஒவ்வொரு அசைவையும் ரசித்துப் பேசினர். இதுவரை பாராமலிருந்ததைப் பாவமாகக் கருத ஆரம்பித்தனர்.

என்னடா உலகம்! இதுதான் உலகம்! யாருக்காவது காரணம் தெரியுமா? இருந்தவனோ நின்றவனோ காரணங்களா? யாரை யார் குறை கூறுவது? அருள்வாக்கு நாயகர்கள் பெருக்கத்திற்கு யார் காரணம்?! அவர்களைப் பேராசைக் குழிகளில் தள்ளுவதும் யார்? யாரையும் மோசம் செய்ய இந்த நாடகம் நிகழவில்லை.இயல்பாக நடந்த ஒரு நிகழ்வு. அப்பொழுதும் இப்பொழுதும் வர்ணம் தீட்டுவது மனிதனே!

காட்சியிலிருந்து கதைக்குப் போவோம். கதாசிரியன் அல்லவா?கதை முடிக்க வேண்டுமே. தொடங்கியவன் முடிக்கட்டும்!

இவன் கனவிலே ஒரு குரல்

"உனக்கு சிஷ்யனாக வந்திருக்கின்றானே அவன்தான் உண்மையில் குரு. சிஷ்யனாக வந்து உனக்குக் கற்றுத் தந்திருக்கின்றான். அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து சிஷ்யனாய் வந்திருக்கின்றான். எந்த பீடத்தில் இருந்தால் என்ன? எவன் கற்றுத் தருகின்றானோ அவன் குரு. கற்றுக் கொள்கின்றவன் சீடன். பரமசிவனின் மடிமீது உட்கார்ந்து கொண்டு ,முருகன் அவனுக்குக் கற்றுத்தரவில்லையா? அங்கே சீடனின் மடியே குருபீடம். அவனை வணங்கு"

சிஷ்யன் போய் விட்டான். தேடியும் காணவில்லை.

இவன் சுற்றித் திரிகின்றான். இப்பொழுது எல்லோரும் இவனை வணங்குகின்றனர். மரியாதை செலுத்துகின்றனர்

பித்தன் இங்கே சித்தனாகிவிட்டான்!

எப்பேர்ப்பட்ட தத்துவத்தை கதையில் காட்டிவிட்டார். எத்தனைபேர்கள் புரிந்து கொள்வார்கள்?

ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்கள் வாழ்வில் இத்தகைய உபதேசங்கள் கிடைக்கின்றன. ஆனால் மனிதன் அசட்டை செய்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றான். கடவுளே நேரில் வந்தாலும் அவரைப் பகல்வேஷக்ககரன் என்று உள்ளே தள்ளிவிடுவோம். அல்லது எள்ளி நகையாடுவோம். நம் பாட்டுக்கு எவன் இசைந்து தாளம் போடுகின்றானோ அவனைத்தான் நாம் ஏற்றுக் கொள்வோம். நம்மை ஏமாற்றுபவரைக் கூடப் புரிந்து கொள்ள அக்கறையில்லை. ஏமாளியாய், பைத்தியக்காரனாய் நடமாடிக் கொண்டிருக்கின்றோம்.

குருபீடம் மதிப்பு வாய்ந்தது. அது உண்மைக்கும் சக்திக்கும் உரிய இடம். இப்பொழுது போலித்தனத்திற்குரிய இடமாக ஆன்மீகத்திலிருந்து அரசியல் வரை பல தோற்றங்களில் எங்கும் வியாபித்திருக்கின்றன. மனிதனின் முக்கிய வியாபார கேந்திரமாகிவிட்டது.. காலம் தான் மனிதனுக்குப் புத்தி புகட்ட வேண்டும். உணர்ந்து திருந்தினால் வாழ்வான். அல்லது வீழ்வான்.

என்னுடைய தேடல் என் பிள்ளைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. ஒன்றா இரண்டா, மனத்தில் தோன்றும் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடித் திரிந்தேன். பலரைச் சந்தித்தேன். சிலரிடம் விடை கண்டேன். என் வாழ்க்கையில் புற்றீசல் போல் கேள்விகள் பிறந்து கொண்டே இருந்தன.. எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் வியப்பைத் தரும் அளவில் அமைந்தன. தேடிப்போனதும் உண்டு. தானாக வந்ததும் உண்டு.

ஜெயகாந்தனுடன் முதல் சந்திப்பிலேயே ஓர் சிந்தனைச் செல்வரைச் சந்தித்த மன நிறைவு ஏற்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை, ஆமாம், அமெரிக்கா வந்த பிறகும் உள்ளம் குமுற ஆரம்பித்தால் அவருடன் பேசுவேன். சில நாட்களுக்கு முன் நடந்த உரையாடல்.

முதுமையும் நோயும் என்னை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. இத்தனை அனுபவங்கள் இருந்தும் மனக்குரங்கு அப்படி ஓர் ஆட்டம் போடுகின்றது. யாருக்கும் என் மீது பிரியம் இல்லை,அக்கறையில்லை என்ற நினைப்பு. எல்லோரும் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார்கள் என்ற குறை. என்னை என்னால் அடக்க முடியவில்லை. உடனே ஜெயகாந்தனுடன் தொடர்பு கொண்டு வழக்கம் போல் புலம்பினேன்.

"சீதாலட்சுமி, ஏன் மற்றவர் ஒதுக்கிவிட்டார்கள் என்று நினைக்கின்ரீர்கள்? நாம்தான் ஒதுங்கி இருக்கின்றோம். இப்படி நினையுங்கள். விருப்பம் நம் கையில் என்று நினைத்தால் இழப்பு என்று தோன்றாது!"

எப்பேர்ப்பட்ட உண்மை!

அடுத்த கேள்வி!

"யாரையும் பார்க்க முடியவில்லை!"

"குரலையாவது கேட்க முடிகின்றதல்லவா?"

பொங்கி எழுந்த மனம் அடங்கியது. புன்னகையும் வந்தது.

ஜெயகாந்தன் இப்பொழுது எழுதுவதில்லை. முன்பு போல் கலந்துரையாடல்கள் அதிகம் இல்லை. அவர் ஒதுங்கி வாழ்கின்றார். ஆனால் அவர் எழுத்து மற்றவர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும் அவரிடம் சொல்வளம் இருக்கின்றது. கூரான சிந்தனை இருக்கின்றது. ஒற்றைச் சொல், மந்திரச் சொல் இன்னும் இருக்கின்றது. தோற்றத்தில் முதுமை இருக்கின்றதேயொழிய சிந்தனையில் இன்னும் இளமையின் துள்ளல் இருக்கின்றது.

எனக்கு இத்தகைய நட்பு கிடைத்தது என் அதிருஷ்டம்.

சிறுகதை மன்னன் என்றால் அது ஜெயகாந்தனே. அவரைபற்றி பேச இன்னும் நிறைய இருக்கின்றது.

(தொடரும்)

நன்றி -திண்ணை