Saturday, May 29, 2010

உயிரே எங்கு சென்றாய்?

பொங்கியெழும் உணர்ச்சியலை உந்தித்தள்ள
பொறுமையினை இழந்துவிட்டேன் வாடுகின்றேன்
மங்காத காதல்தீ சூட்டின் வெப்பம்
மருட்டிஎன் உயிரினையே உருக்குதய்யா
தங்கிவிட்ட உன்நினைவு வாழச் செய்தும்
தனித்துவாழும் நிலையென்னைக் கொல்லுதய்யா
எங்கிருந்த போதும்நீ ஓடி வாராய்
என்னின்பப் பெட்டகமே கடிதில் வாராய்

உயிரென்றாய் உயிரெல்லாம் நானே என்றாய்
உலகத்தில் ஒருத்தியே வாழ்வு என்றாய்
மயிலென்றாய் சாயலிலே பாட்டமைத்தாய்
மறப்பதில்லை என்றுநீயும் உறுதி சொன்னாய்
பயிர்வாடும் வான்மழையும் மாறிவிட்டால்
பைங்கொடியும் நான்சாவேன் நீமறந்தால்
உயிரேநீ எங்குசென்றாய்?வருவாய் என்று
உன்வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்

Wednesday, May 26, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 08



இயற்கையின் படைப்பில் மனிதன் ஓர் அபூர்வப்பிறவி. அவனிடம் சக்திகள் குவிந்து கிடக்கின்றன. பலஹீனங்களும் உண்டு. நம்மில் எத்தனை பேர்கள் தங்களை முற்றும் அறிந்திருக்கின்றோம் ?

என் பணிகளுக்காகப் பல சிறப்புப் பயிற்சிகள் பெற்றவள் நான். எப்பொழுதும் மனத்தில் சிந்தனைகள் தோன்றி என்னைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும். பிறர் எழுதும் கதைகளுடன் உரையாடிக் கொண்டிருப்பேன்.

புதுமைப்பித்தன்! நான் ரசித்தவர்களில் அவரும் ஒருவர்.

புதுமைப்பித்தன் எழுத்துக்களில் வேகமும் ஆத்திரமும் உணர்ந்திருக்கின்றேன். தான் எழுதும் பாத்திரத்துடன் ஒன்றிப்போய் சமுதாயத்தின் மீது அக்கினிக்குழம்பை வாரி வீசுவார். நானும் சீக்கிரம் உணர்ச்சி வயப்பட்டு விடுவேன். அதன் பலன்-வேகத்தில் விவேகம் வீழ்ந்துவிடும். பக்குவம் ஏற்பட பல ஆண்டுகளாயின. பிறர் எழுத்தைப் படிக்கும் பொழுதும், சிலர் பேச்சுக்களைக் கேட்கும் பொழுதும் நிஜத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன்.

கதை அளக்கின்றார்கள்," என்று ஒரு சொல் வழக்கில் வரும். புதுமைப்பித்தனிடமோ, ஜெயகாந்தனிடமோ அந்த சமரசம் கிடையாது. அவர்கள் எண்ணியது எழுத்தில் வந்துவிடும்.

எழுத்துலகில் ஜெயகாந்தன் வந்த காலத்தில் புதுமைப்பித்தன் நினைவும் உடன்வந்ததை மறுக்க இயலாது. ஜெயகாந்தனிடம் சிறிது வித்தியாசத்தைக் கண்டேன்.” வாழைப்பழத்தில் ஊசி சொருகுவது போல்“ என்று சொல்வார்களே, அந்த தன்மையை சில கதைகளில் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் கடுமை எள்ளளவும் குறைந்திருக்காது. அவர் கதைகளை மேலெழுந்தவாறு படித்துவிட்டுப் போட்டு விடமுடியாது. மனத்தை ஆழ்ந்து செலுத்திப் படிக்க வேண்டும். அல்லது முத்துக்கள் இருப்பதைப் பார்க்க முடியாது. அழுத்தம் கொடுத்து எழுதிய உரையாடல்கள் வரும்.

புதுச்செருப்பு கதையினைப் பார்ப்போம்.

நந்தகோபாலுக்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகி விட்டன; ஆனாலும், கணவன் மனைவிக்கிடையில் சுமுகமான உறவில்லை. அவன் விருப்பத்திற்கு அவள் ஈடு கொடுக்கவில்லை. அவனுக்கு எரிச்சல். அவளுக்கோ அலட்சியம். இப்படி இருந்தால் குடும்பம் உருப்படுமா?

ஆத்திரத்தில் அவனுக்கு உறக்கம் வரவில்லை. நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியில் செல்கின்றான். மனைவியோ அலட்சியமாகக் கதவைச் சாத்திவிடுகின்றாள். அதுவும் அவன் ஆண்மைக்குக் கிடைக்கும் அடியாக உணர்கின்றான்.

பிள்ளைப்பருவ நினைவுகள் அவ்வப்பொழுது அவன் நினைவில் வந்து முள்ளாய் உறுத்தும். இரவு நேரத்தில் அம்மா சத்தம் போட்டுக் கத்துவதும், அப்பா அடிப்பதும் எல்லாம் ஒலிகளாய் இவன் இருக்குமிடம் வரும். பொழுது புலர்ந்துவிட்டால் அதே அப்பாவும் அம்மாவும் ஒன்றும் நடக்காதது போல் பேசும் காட்சிகள் உணர்ச்சியில் ஆழமாகப் பதிந்துவிடும். இன்றும் அவைகள் அவனை ஆட்டிப் படைக்கின்றன.

பெற்றோர்கள் சண்டையை விடவும் அந்தப் பெற்றோரின் சமாதானங்கள் அவன் மனத்தை மிகவும் அசிங்கப்படுத்தின." இது ஜெயகாந்தனின் வார்த்தைகள். விமர்சிக்கலாம்; ஆனால், இது யதார்த்தம்.

என் பிள்ளைப் பருவத்திலும் எனக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது சரியா தப்பா என்பதில்லை. குழந்தைகள் மனங்களில் எப்படி ஆழமான புண்களாகப் பதிந்துவிடுகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அவன் வீட்டைவிட்டுப் போவதும் பிடிக்கவில்லை. ஆனாலும் கடந்த காலப் புண்களும் இக்கால அடிகளும் அவனைத் துரத்தின. அவன் இப்பொழுது போகும் இடம் எங்கே? அதுதான் அவன் கடந்த காலம்.

திருமணமாகும் முன் அவனுக்கு அறிமுகமாகின்றாள் கிரிஜா. ஏதோ சின்னச் சின்ன வேலை செய்கின்றாள். உடன் பிறந்த ஒருவனும் எங்கேயோ இருக்கின்றான். ஒற்றை மரமாக ஒருத்தி.எப்படியோ காலம் நகர்கின்றது. மரபு வாழ்க்கை அவளுக்கில்லை. பாதையில் வரும் அனுபவங்களை யதார்த்தமாக எடுத்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கின்றாள்.

நம்பிக்கை அல்லது தேவை காரணமாகச் சில ஆண்களோடு அவளுக்கு உறவு நேர்ந்திருக்கின்றது," இது ஜெயகாந்தன்.

ஒருத்தியல்ல, ஆயிரக்கணக்கான பெண்களை இது போன்ற நிலையினில் பார்த்திருக்கின்றேன்.

நந்தகோபாலுக்கும் ஒரு நாள் உறவு ஏற்பட்டது. சிறுகதை தொடர் கதையாயிற்று. வெளியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் இவள் வீட்டில் சாப்பிட ஆரம்பித்தான். சொல்லப்போனால் குடும்பமே நடத்தினான். அவள்தான் இவனைத் திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப் படுத்தினாள். ஆனால் அவனுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு இப்பொழுது கிரிஜாவைத் தேடி வந்து விட்டான். அவளிடம் தன் உள்ளக் குமுறலைக் கொட்டுகின்றான். அப்பொழுது கிரிஜா பேசுவதில்தான் ஜெயகாந்தனின் தனித்துவம் தெரிகின்றது.

“பாருங்கோ, வொய்ஃபா வர்றதுக்கு டிரெய்ண்ட்-ஹாண்டா கேக்குறாங்க? நான் டிரைண்ட்-ஹாண்ட். அதுதான் என் டிஸ்குவாலிகேஷன்.“

இதைவிட ஓர் சாட்டையடி இருக்க முடியுமா? ஜெயகாந்தனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததால், அதைக் கொடுப்பவர்கள் உயர்ந்திருக்கின்றார்கள்.

அடுத்து கிரிஜா கூறுவது ஆண்மகனுக்கு ஓர் பாடம்.

“செருப்புகூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ! அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களா?"

இதைவிடப் படிப்பினையை எளிமையாகக் கூறமுடியுமா? “புதுச் செருப்பு கடிக்கும்" கதை தாம்பத்தியத்தின் நாடியைப் பிடித்துக் காட்டுகின்றது. அவளிடம் அவன் எதை எதிர்பார்த்தான்? அவளுக்கு மட்டும் அது முதல் இரவு. அவனுடைய அணுகல் அவளை மிரட்டி விட்டதா? அல்லது விருப்புடன் இணங்க வேண்டியவளிடம் எரிச்சலையும் கசப்பையும் உண்டு பண்ணிவிட்டானா? குற்றம் யார் பக்கம்?

இந்தக்காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? இந்தக் காலத்திலும் நடக்கின்றது. ஆரவாரமின்றி மவுனமாக வந்து அமைதியை அழித்து விடும் பிரச்சனை இது. ஒரு நாளில் முடிந்துவிடக் கூடியதுமில்லை. நம்மைச் சுற்றி நடப்பவைகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.

பொழுது போக்கிற்காக எழுதுபவர் அல்லர் ஜெயகாந்தன். புத்திமதிகள் கூறுவதும் அவருக்குப் பிடிக்காது. ஆனால் அவர் உரையாடல், கதையில் வரும் உரையாடல், காட்சிகளைக் காட்டும் பொழுது மவுனமாக நடத்தும் உரையாடல். எல்லாம் நம்மை கொஞ்சமாவது சுயதரிசனம் செய்ய அழைத்துச் செல்லும்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் கணினியில் ஒரு நட்பு. அவன் பெயர் ராஜு (பெயர் மாற்றியிருக்கின்றேன்). அவன் திருமணமாகி விவாகரத்தும் செய்து விட்டான். யாராவது ஒரு பெண்ணைப் பார்க்கச் சொன்னான். விவாகரத்திற்குக் காரணம் கேட்டதற்கு, மணம் முடிந்த பிறகே அவளுக்குப் பைத்தியம் என்று தெரிந்தது என்று கூறினான். உடனே அவனிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் பழகப் பழக அவனாக நடந்தவைகளைச் சொல்ல ஆரம்பித்தான்.

அவன் அணுகல்களுக்கு அவன் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்காததால் எரிச்சலில் அவளைப் பைத்தியம் கிறுக்கு என்று திட்டியிருக்கின்றான். ஒரு நாள் அடித்திருக்கின்றான். திட்டும் அடிகளும் தொடர்ந்தன. இன்பமாக இருக்க வேண்டிய மணித்துளிகள் அந்தப் பெண்ணிற்குத் துன்பமாக மாறவும் மன நோயாக மாறி இருத்தல் கூடும். இது என் அனுமானமே.

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்ற சொல் வழக்கில் உண்டு. ஆனால் அதனால் பலரின் தாம்பத்தியத்தில் விரிசல் ஏற்படுகின்றதே!

காம சாஸ்திரம் தோன்றியது இந்த மண்ணில்தான். பொதுப்படையாக எதுவும் கூற முடியாத பிரச்சனை. திருமணத்திற்குப் பின் சிறிது காலமாவது இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்தல் அவசியம். அப்பொழுது ஏற்படும் இணக்கமும் இசைவும் தாம்பத்தியத்தின் அஸ்திவாரமாகும். இணை கோடுகளாக இருப்பதைவிட இணைந்த கோடுகளாக ஆக்கிக் கொண்டால் முதுமையிலும் சுகம் காணலாம்.

நான் ஊட்டியில் வேலை பார்க்கும் காலத்தில் பார்சி இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் அறிமுகமானது. திருமதி. மாஸ்டர் அவர்கள் மகளிர் நலப் பணிகளில் ஆர்வமுள்ளவர். ஒரு நாள் குன்னூரில் நடக்கும் ஓர் விழாவிற்குச் சென்றிருந்தோம். இரவு 8.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் கூப்பிடுவதாகத் தகவல் கிடைத்தது. தொலை பேசியில் அணுகிய பொழுது பிரச்சனை தெரிந்தது. மிஸ்டர். மாஸ்டர் அவர்கள் இரவு எட்டு மணிக்குள் மனைவி வீடு வந்து சேராததால் கலெக்டரை அணுகி என்னைப் பற்றி புகார் கூறியிருக்கின்றார். உடனே மனைவியை வீட்டில் கொண்டு சேர்க்க வேண்டுகோளும் விட்டிருக்கின்றார். சீக்கிரம் எங்கள் பணியை முடித்துக் கொண்டு ஊட்டிக்கு விரைந்தோம்.

அந்த அம்மாவின் வீட்டில் அவருடைய கணவர் மனைவியை எதிர் நோக்கி வாசல் புறத்தில் அமர்ந்திருந்தார். மனைவியைப் பார்க்கவும் எழுந்து வேகமாக வந்து மனைவியைக் கட்டிப் பிடித்து முத்த மழை பொழிய ஆரம்பித்தார். அந்த அம்மையாரும் தன்னை மறந்து கணவரின் ஆலிங்கனத்தில் ஒன்றி அவரும் முத்த மழை பொழிய ஆரம்பித்தார். நான் ஒருத்தி இருப்பதை உணரும் நிலையில் அவர்கள் இல்லை. அந்த இறுக்கம் ஓர் சம்பிரதாயமானதாகத் தெரியவில்லை.

இரு உள்ளங்களின் ஆத்ம பூர்வமான இணைப்பைக் கண்டேன். கணவருக்கு வயது எண்பத்தைந்து.. மனைவிக்கு எண்பது.

அங்கே இளமையின் துள்ளலில் முதுமை ஓடி விட்டிருந்தது. இதுதான் அன்பு. இதுதான் காதல். சிறிது நேரப் பிரிவைக் கூடத் தாங்க முடியவில்லை.அவர்களின் தாம்பத்தியத்தின் அஸ்திவாரம் உறுதியானது.

கணவன் - மனைவி அந்தரங்கத்தின் அந்தப்புரத்தில் வெட்கப்பட ஒன்றுமில்லை. அங்கே ஏற்படும் சங்கமம் இயற்கையின் நியதி.

பூஜை அறைக்குள் போக சில ஒழுங்கு முறைகள் என்றால் படுக்கை அறைக்கும் சில விதிமுறைகள் உண்டு. சிந்திக்கும் நேரம் அதுவல்ல என்றாலும் வாழ்க்கையின் முதல் படியில் கால் வைக்கின்றோம் என்ற அக்கறை உணர்வுடன் இருத்தல் அவசியம். முதுமையிலும் இளமை வேகம் காணலாம்.

பெரும் பாலானோர் வாழ்க்கை எப்படி இருக்கிற தென்றால் காலையில் எழுந்திருக்கவும் காலைக் கடன்களை முடித்துப் புற வாழ்க்கைக் கடமைகளை செய்ய புறப்பட்டுச் சென்று, மாலையில் திரும்பவும் வீட்டிலும் சில பணிகள் முடித்து இரவில் தாம்பத்ய இணைப்பையும் இரவுக்கடனாக முடிக்கின்றான். “ரொட்டீன்” வாழ்க்கை யாக்கி விடுகின்றான். சீக்கிரமே சலிப்பும் வந்துவிடுகின்றது. பின்னர் புதுமையைத் தேடிப் புறப்பட்டு விடுகின்றான். இல்லறத்தின் நல்லறம் போய் விடுகின்றது.

குடும்பப் பிரச்சனைகளில் கவுன்ஸ்லிங் என்னுடைய கடமைகளில் ஒன்று. ஆரம்பத்தில் காட்டும் ஆர்வத்தை ஆண் இழக்கவும் குடும்பத்தில் பூமிக்கடியில் ஓடும் நீரோட்டம்போல் பிரச்சனைகளும் தோன்றி வீடு நிம்மதியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து விடுகின்றது.

இங்கே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். உணர்வுகள் தடுமாற்றம் ஆணுக்கு மட்டுமா? முன்பு கலாச்சாரக் கோட்டைக்குள் இருந்த பொழுது கூட பெண்ணிடமும் தடுமாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இப்பொழுது ஓரளவு சுதந்திரம் அடைந்து வெளிவந்து விட்டாள். இப்பொழுது பெண்ணும் குறுக்குப் பாதையில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றாள். எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இது ஓர் அபாய அறிவிப்பு.

பிரபலமான இரு குடும்பங்கள். ஒருத்தி டிரைவருடன் ஓடிப்போய் மூன்றாண்டுகள் வாழ்ந்துவிட்டு திரும்பியிருக்கின்றாள். இன்னொருத்தி தெருவில் சாமன்கள் விற்கும் ஒருவனுடன் ஓடிவிட்டு இரண்டாண்டுகள் கழித்து வீடு திரும்பியிருக்கின்றாள். கணவன்மார்கள் புகழுக்காகவும், பொருளுக்காகவும் வீட்டை ஒதுக்கியதில் பெண்கள் திசைமாறி சென்று விட்டார்கள். தவறு செய்தவர்களாயினும் குழந்தைகளுக்காக அப்பெண்களை குடும்பம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. குழந்தைகளின் மன நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எனக்கு ஒரு இளைஞன் அறிமுகமானான். கெட்டிக்காரரப் பையன். அம்மா அம்மா என்று ஆசையுடன் சுற்றி வருவான். அவன் முகத்தில் ஓர் சோகம் எப்பொழுதும் இருக்கும். ஆராய்ந்ததில் அவனுடைய தாயாருக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அவனுடைய அப்பா வெளி நாட்டில் வேலை பார்த்துப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். பிள்ளையின் மனத்தில் காயம். பெற்றவளைப் பற்றி யாரிடம் குறை கூற முடியும்.?!

உயர்ந்த பதவியில் ஒருவர். அவர் எப்பொழுதும் வேலை வேலை என்று தன் குடும்பத்தைப் பற்றிகூட எண்ணாமல் கடுமையாக உழைத்து வந்தார். நாளடைவில் மனைவி ஒரு பெரிய இடத்துப் பிள்ளையுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு விட்டாள். அந்தப் பிள்ளையின் குடும்பத்தார் வீட்டை விட்டு விரட்டி விட்டனர். அவனோ இவர்கள் வீட்டிற்கே வந்துவிட்டான். அந்தப் பெரிய மனிதரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரே வீட்டில் ஒரு பெண்ணும் இரு ஆண்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இவைகள் அனைத்தும் நிஜம். ஆம், நம் தமிழ்மண்ணில்தான் இவைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

காரணம் என்ன?

என்னை ஒரு இடத்தில் பேசக் கூப்பிட்டிருந்தார்கள். நான் பேச்சில் கெட்டிக்காரி. அதுவும் உளவியல் தெரிந்து பேசியதால் என்னை பல தரப்பினரும் பேசக் கூப்பிடுவர். என்னைக் கூப்பிட்ட இடத்தில் பல தொழில்கள் செய்கின்றவர்கள், வியாபாரிகள், படித்த அறிஞர்கள் என்று ஓர் கலைவையாக இருந்தனர். அவர்கள் விரும்பும் தலைப்பில் முதலில் பேசுவேன். பின்னால் அவர்கள் கேள்விகள் கேட்பார்கள் நான் பதில் கூறுவேன். இங்கே என்னை ஒரு பெண் என்று நினைத்துத் தயங்கமாட்டார்கள். இவை வாழ்க்கைப் பிரச்சனைகள். என்னை ஓர் சமூக மருத்துவராகக் கருதி மனம் திறந்து பேசுவார்கள். நான் கொஞ்சம் கடுமையாகப் பதில் சொன்னாலும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்.

பிரச்சனை இதுதான். காலை முதல் இரவு வரை கடுமையாக வேலை பார்த்து வரும் கணவனை வீட்டிற்குத் திரும்பும் பொழுது புன்னகையுடன் வரவேற்பதில்லை. அலங்கார உடைகளுக்கோ, ஆபரணங்களோ அவர்கள் கேட்பதெல்லாம் வழங்கப் படுகின்றது. ஆனால் அன்பு, கனிவு பெண் காட்டுவதில்லை. இதுதான் குற்றச்சாட்டு

உங்கள் தினசரி வேலைகளை நேரம் குறிப்பிட்டு சொல்லி வாருங்கள்.

காலையில் எழுந்திருந்து எல்லாம் முடித்து 8 மணிக்குள் கடைக்குப் புறப்பட வேண்டும். இரவு கடை 9 மணிக்கு சாத்தி, கணக்கு முடிக்க இரவு 10 மணியாகின்றது. கொஞ்சம் சிரமபரிகாரம் செய்ய நண்பர்களுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்ப இரவு 12 மணியாகிவிடும்.

உங்கள் மனைவியும் சும்மா இருந்திருக்க மாட்டர்கள். உங்களையும் குழந்தைகளையும் அனுப்பும் வரை வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டும். வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் மேற்பார்வை செய்ய வேண்டும். பின்னர் மற்ற வேலைகளை முடிக்க மதியம் ஆகிவிடும். சிறிது படுக்கலாம். பின்னர் எல்லோரும் திரும்பி வருவார்கள் அப்பொழுது முதல் மீதி வேலைகள் முடிய இரவாகி விடும். களைப்பு அவர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்கள் நண்பர்களைத் தேடி போவதில்லை.

ஆண்கள் சொல்லும் சிரமபரிகாரம் குடிப்பது. வீட்டிற்கு வரும் பொழுதே குடித்துவிட்டுப் போவீர்கள். தூக்கத்தில் இருப்பவள் இடையில் எழுந்து வந்து கதைவைத் திறக்கின்றவளால் எப்படி சிரிக்க முடியும்? அவள் மனைவி. சின்ன வீடாக இருந்தால் சிரிப்பாள். பெண்ணுக்குத் துணியும் நகையும் கணவனின் அன்புக்குப் பிறகுதான். கடைக் கணக்கை பார்த்து விட்டு நேராக வீட்டிற்குப் போங்கள். சிரித்த முகத்துடன் வரவேற்கும் மனைவியைப் பார்க்கலாம்.

அவளும் ஒரு மனுஷி. கீ கொடுக்கவும் சிரிக்க அவள் பொம்மை இல்லை. தூங்குவதற்கு மட்டும் தான் வீடு என்று இருக்காதீர்கள். உங்கள் குடும்பம். வாழுங்கள். அங்கே நீங்கள் இருக்க வேண்டும். மனைவி குழந்தைகளுடன் தினமும் கொஞ்ச நேரம் சேர்ந்து இருக்க வேண்டும். எத்தனை ஆண்கள் இப்படி இருக்கின்றீர்கள் என்று உங்களையே கேட்டுப் பார்க்கவும். அப்புறம் மனைவியைக் குறை கூறுங்கள்.

தாம்பத்தியத்தில் இரு பக்கமும் குறைகள் உண்டு. ஆனால் அதிகமாகத் தவறுகள் செய்கின்றவன் ஆண். வரலாற்றில் அவன் எடுத்துக் கொண்ட சலுகைகள் இப்பொழுது மிரட்டுகின்றன. ஆண் , பெண் இருபாலாரும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அல்லது தாம்பத்தியத்தில் விரிசல் ஏற்படுவதைத் தவிர்த்தல் முடியாது.

மனிதா, உன் வாழ்க்கை உன் கையில்! உன் அமைதி உன் கையில்! காலம் மாறிவிட்டது. மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் கணவன். அசட்டையாக இருந்தால் பின்னால் மனம் உடைந்து போக நேரிடும்.

இக்கதையில் இல்லறத்தின் பல அர்த்தங்களைக் காணலாம். ஆண்மகன் இன்னொரு தவறையும் செய்து வருகின்றான். அதனை “பிணக்கு” என்ற கதையில் ஜெயகாந்தன் சுட்டிக் காட்டியிருக்கின்றார். தெரிந்து கொள்ள வேண்டியவற்றைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

தெரிந்து கொள்வோம். புரிந்து கொள்வோம்.

(தொடரும்)

நன்றி -திண்ணை

Saturday, May 22, 2010

இது பொறுப்பதில்லை!


துயரங்களும் அலைகளைப்போல் தொடர்ந்து வருமோ?

வலைப்பதிவு உலகத்தில் சமீபத்தில்தான் நுழைந்திருக்கின்றேன். இந்த உலகிலே வேடிக்கை மட்டுமல்ல; வேதனைகளும் கொட்டிக் கிடப்பதை உணர்கின்றேன்.

யாரையும் நான் வேதனைப்படுத்த விரும்பவில்லை. ஆனாலும், மவுனமாக இருக்கவும் முடியவில்லை. இது இடுகையல்ல; இணையத்தோருக்கு அன்புடன் விடுக்கும் கோரிக்கை!

என் அனுபவங்களை எழுத பலர் கூறியதால் மீண்டும் எழுதத் தொடங்கினேன். எழுதுவதும் பேசுவதும் மட்டுமல்ல என் தொழில். சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அமைத்துக்கொடுக்கிற களப்பணியில் பல்லாண்டு அனுபவத்தைப் பின்புலத்தில் வைத்திருப்பவள் நான்.

அதனால், இன்று உங்கள் எல்லோரிடமும் மனம்விட்டுப் பேச விரும்புகின்றேன்.

மனிதர்களில் ஆண், பெண் என்று இரண்டு இனம்தான்; ஆசை என்பது மனித இனத்திற்கே பொதுவான உணர்வு. எனவே, ஆசைகளைத் தூண்டிவிடும் சூழலில் வாழ்கின்றபோது, தாங்களும் பிரபலமாக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை இருபாலாருக்கும் எழுவது இயல்பே!

டாக்டர் மு.வ அவர்கள் எழுதிய ஒன்றை இப்பொழுது சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

"ஆண் தவறு செய்தால் அது பெரிதல்ல. ஏனென்றால் அவன் வெளியுலகில் நடமாடுபவன் வழுக்கும் சேற்றில் நடப்பது போல. பெண் தவறு செய்தால் தப்பு. அவள் வாழ்க்கை மணலில் நடப்பது போல!"

இது இந்தக் காலத்துக்குப் பொருந்துமா?

வீட்டில் பத்திரிகைகள் வாங்குகின்றோமே? தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்திருக்கின்றோமே? வீதியில் போனால் விளம்பரங்கள் வேறு கண்ணில் படுகின்றன. அடுத்தது சினிமா! ஆண் மட்டுமா பார்க்கின்றான்?

கூத்தும் கொண்டாட்டமும் வாழ்க்கையில் ஒரு பகுதிதான். ஆனால், வரவர நாம் வாழ்க்கையையே கூத்து மேடையாக்கிக் கொண்டிருக்கின்றோம். கூத்து என்பது உண்மையல்ல; புனைவு! ஆனால், நாமோ மயங்கி வாழ்க்கையையும் பொய்யாக ஆக்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஒன்றை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நம் வீட்டுக்குழந்தைகளிலும் ஒரு சிலரின் வாழ்க்கை, விளக்கில் வீழும் விட்டில் பூச்சியாகத்தான் போகும். ரோசப் பட்டுப் பயன் என்ன?

பெண் வீட்டை விட்டு வெளிவந்தாலே எந்தப் பணியிலும் எத்தனையோ சோதனைகளைத் தாண்டி வர வேண்டியிருக்கின்றது! வெளியே சொல்லவும் முடியாத குமுறல்களை மனதுக்குள் அடக்கி வைப்பதால், என்றேனும் ஒருநாள் எரிமலைக் குழம்பு வெடித்துப் பீறிடாமலா போய் விடும்?

ஒழுக்கம் என்பதன் வரைகோடுகள் காலத்துக்கு ஏற்ப அழிக்கப்பட்டு மீண்டும் திருத்தி எழுதப்படும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில பழைய கட்டுப்பாட்டுக்களின் இறுக்கம் அவரவர் சவுகரியத்திற்காக தளர்த்தப்படும். இதைப் பழையன கழிதலாகவும், புதியன புகுதலாகவும் ஏற்றுக்கொள்ளுகிற பக்குவத்தை அனைவரும் பெற வேண்டும்.

உடையலங்காரங்களையும், ஒப்பனைகளையும் வைத்துப் பெண்களின் ஒழுக்கத்தை எடை போட்டு மதிப்பெண் வழங்குகிற தார்மீக உரிமையை எவர், எவருக்கு எப்போது வழங்கினார்கள்?

அவரவர் செய்கிற பணிகளைப் பொறுத்தே வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு சூழலில், அவரவர் உடை,நடை,பாவனை ஆகியவை அமையும். இன்றைக்கு ஆண்கள் என்ன வேட்டி கட்டிக்கொண்டா வேலைக்குப் போகிறார்கள்? மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியான நாகரீக உடைகளை காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப அனைவரும் சுவீகரித்து விட்டிருக்கிறார்கள். இதன் அபரிமிதமான வெளிப்பாட்டையே திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் காண்கிறோம். அவற்றை ஏற்றுக்கொள்ளுவதும், மறுப்பதும் தனிமனிதர்களின் அடிப்படையுரிமை என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்?

மறுப்பவர்கள் தங்களுக்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களை ஒழுங்கீனம் என்று ஒட்டுமொத்தமாக முத்திரையிடுவது முதிர்ச்சியின்மையின் அறிகுறியன்றி வேறல்ல!

பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றின் பாடங்களை திரைப்படங்களிலிருந்தும், தொலைக்காட்சிகளிலிருந்தும் கற்றுக்கொள்ளுகிற அளவு நாம் அத்தனை பலவீனமாகவா போய் விட்டோம்? பிறகு ஏன், ஒரு திரைப்பட நடிகை, பெரும்பாலானோர்க்கு ஏற்புடையதல்லாத ஒரு கருத்தைச் சொன்னதும் நமக்குள்ளிருக்கும் வன்மங்களுக்கு வடிவம் கொடுத்து, கேள்விகளாலும் கேலிகளாலும் அந்தப் பெண்ணை, தகாத வார்த்தைகளால் இழிக்கிறோம்? பழிக்கிறோம்?

உளவியல்ரீதியாக அந்த நடிகை வெறும் கனவுக்கன்னியாக இருப்பதைத் தான் சராசரி ஆண் விரும்புகிறானா? அல்லது சமூக அவலங்களைச் சந்தித்துத் தீர்வு காண முடியாத இயலாமையை, ஆற்றாமையை, ஆத்திரத்தை இந்த நிழல்யுத்தத்தில் காட்டி மார்தட்டிக்கொள்ள வேண்டும் என்ற நப்பாசையா? ’எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு,’ என்ற குறளின் குரல்வளையை நெறித்துக் கொன்று விட்டோமா?

உலகில் பல தொழில்கள் போலத்தான் திரைப்படத்தொழிலும்! ஆயினும், இன்னும் உலகளாவிய அடிப்படையிலுமே கூட அத்துறையில் ஈடுபடுகிறவர்களின் வாழ்க்கை இயல்பாகவே வழுக்கல் நிறைந்தது; பாதுகாப்பற்றது. ஆயினும், அத்துறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் விருப்பம் காரணமாகவோ, கட்டாயம் காரணமாகவோ பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தான் அந்த மாய உலகில் வாழ்கிறார்கள். அவர்களது அந்தரங்கங்களை அறிந்து கொண்டு நாம் சாதிக்கப்போவது என்ன?

திரையுலகத் தொழிலில் நுழைய விரும்புகின்றவர்களில் ஆண் பட்டினி கிடந்து அலைவான்; கையில் இருக்கும் காசையெல்லாம் இழந்து வீடு வீடாய் ஏறுவான். உள்ளே நுழைவது அவனுக்குக் கஷ்டம். இதுவே ஒரு பெண் ஆசைப்பட்டு உள்ளே நுழையும்பொழுது அவளிடமிருந்து சில சமயங்களில் பறிக்கப்படுவது எதுவாயிருக்கும் என்பதை வாசிப்பவர்களின் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

யார் அவளை அங்கே போகச்சொன்னது என்று கேட்கத் தோன்றுகின்றதா? நாம் எல்லோரும் அதற்குப் பொறுப்பானவர்கள். நிழலை நிஜமென்று கருதி பலரை ஆராதித்து வானளாவ உயர்த்தி, பிறருக்கும் அது போலாக வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தி விடுகிறோம். இல்லையென்று சொல்ல முடியுமா?

ஆடிப்பாடி மகிழ்விக்கும் பதுமைகளாய் நடிகைகளைப் பார்ப்பது பழகி விட்டது. அதனால் தான், பதுமைகள் பேசுகையில் செரிமானம் செய்வது கடினமாய் இருக்கிறது அல்லவா?

உற்றார் உறவினரின் சுயநலம், சுற்றியிருப்போரின் சுரண்டல் போன்ற தீக்குழிகளைத் தினசரித் தாண்டிக்கொண்டு தான் திரையுலகத்தில் நடிகைகள் பெரும்பாலானோர் வெள்ளித்திரையில் சிரிக்கின்றனர். அவர்களின் நிஜமான நிலை என்ன? பாதுகாப்பின்மை! காரணம், சினிமா உலகில் பெண்களின் காலம் மிகவும் குறைவு.

பிரபலங்களுக்கே இந்த நிலை என்றால், துணை நடிகைகளின் வாழ்க்கை எப்படி என்று தெரியுமா? எனக்குத் தெரியும்.

என் அருமைத் தோழி புனிதவதி இளங்கோவன் வானொலியில் நாடகத்துறை இயக்குனராக இருந்தார். நான் சந்தித்தவர்கள் பலர். நமக்கிருக்கும் நிம்மதி கூட அவர்களுக்குக் கிடையாது. அனுதாபப்படுவதற்கு இதயமில்லாவிட்டாலும் வார்த்தைக்கணைகளால் அவர்களைச் சல்லடை போலத் துளைக்காதீர்கள்! கருத்துக்கள் ஏற்புடையதில்லை என்றால், அதை மாற்றுக்கருத்தால் எதிர்கொள்ளுவது தான் நாகரீகம்! அதை விடுத்து தனிமனிதரின் அந்தரங்கங்களையும், அவர் குறித்த அவதூறுகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்துவது இயலாமையின் உச்சகட்டம்!

நடத்தை குறித்து இழித்துப்பேசுவார்களே என்ற பெண்ணின் அச்சம் சுயநலமல்ல; அது ஒரு குடும்பத்தின் கண்ணியம் சம்பந்தப்பட்டது என்பதால் தான் அவள் யுகயுகமாய் குட்டக் குட்டக் குனிந்து வாழ்ந்திருக்கிறாள். ஒரு ஆணை இழித்துப் பேசுவதற்குக் கூட, அவன் வீட்டுப் பெண்களின் ஒழுக்கத்தைத் தான் குறிவைக்கிறார்கள்! இந்த அடாதவார்த்தைகளின் அழுத்தத்தை அனாவசியமாகச் சுமக்க விரும்பாத புதிய தலைமுறை, பெண்கள் மத்தியில் உருவாகிக்கொண்டிருப்பதை எவரும் மறந்து விடக்கூடாது. இது காலத்தின் கட்டாயம்; ஒப்புக்கொள்ள விரும்பாதவர்கள் ஒதுங்கி நில்லுங்கள்!

இந்த இடுகை பெண்ணியத்தின் பிரச்சாரமல்ல; ஆணாதிக்கத்துக்கு விடுக்கப்படும் அறைகூவல் அல்ல! இது மனிதாபிமானம் தேட முயலும் ஒரு மனு!

ஒருத்தியின் முதுகைப் பார்த்துக் கேலி செய்யும் பொழுது நம் முதுகிற்குப் பின்னால் இந்தத்தீமை நின்று கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

’சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில், மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினைக் காட்டுதடா,’ என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளை நினைவில் வையுங்கள்!

தமிழ் அமுதத்திற்குச் சொந்தம். அதில் நஞ்சைக் கலக்கலாமா? கருத்துப் பரிமாற்றங்களில் காழ்ப்புணர்ச்சி கலந்து கசப்பை வளர்த்து விட வேண்டாம். சமூக அவலங்கள் மிகுந்திருக்கிற சூழ்நிலையில், ஆணும் பெண்ணும் எதிரெதிர் கோணங்களில் சிந்தித்தால் தீர்வுகளுக்குப் பதிலாக அவலங்களின் எண்ணிக்கையே அதிகரிக்கும். ஒத்த கருத்தில் இணைந்து ஒன்றிச் செயலாற்ற வேண்டிய தருணம் இது.

மிருகமாகக் காடுகளில் அலைந்து திரிந்தனர் நமது மூதாதையர். லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு , ஆண்மகன் தான் குடும்பம் என்ற ஓர் அமைப்பை உண்டு பண்னினான். நாம் மீண்டும் மிருகவாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றோம். இது சரியா? ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் இரு கண்கள்! இரண்டும் நன்றாக இருக்க வேண்டும். சமுதாயத்தில் கேடுகளை விதைப்பதும் நாமே, வளர்ப்பதும் நாமே!

ஆயுதங்களின் உதவியோடு உலகெங்கும் வன்முறை வளர்ந்து கொண்டிருக்கின்றது. வார்த்தைகளில் விஷம் கலந்து அதைக் காட்டிலும் ஆபத்தான வன்முறையை வளர்க்கப் போகிறோமா?

முன்னெப்போதுமில்லாத அளவுக்கு குடும்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு இன்றைய சூழலில் ஆண்களுக்கு இருக்கிறது. அதைத் தட்டிக் கழித்து, பெண்களின் மீது பழிபோட்டு இனியும் தப்பித்துக் கொள்ள முடியாது. பெண்களின் களம் விசாலமாகிக்கொண்டிருக்கிறது. அவளது பார்வை விரிவாகிக் கொண்டிருக்கிறது. இது வரையிலும் அடங்கியிருந்த கேள்விகள் விழித்துக் கொண்டு விடை தேடுகிற முயற்சியில் ஈடுபடத்தொடங்கி விட்டன.

இந்த மாற்றத்தின் தாக்கம் இணையத்திலும் தென்படத் துவங்கியிருக்கிறது. பெருமழைக்கு முன் சிதறுகிற அந்த சின்னத்துளிகளை அலட்சியம் செய்து விடாதீர்கள்! வினாக்கள் எழுப்பப்படுகிறபோது விடையளியுங்கள்; விடை தெரியாதவர்கள் விலகி நில்லுங்கள்! கேள்விக்குறிகளைக் கேலி செய்து விடையளிக்க வேண்டிய பொறுப்பிலிருந்து விலகியோடுகிற விளையாட்டு இனி செல்லாது!

மாறும் உலகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்! ஏற்புடையவற்றைக் கடைபிடியுங்கள்; அல்லனவற்றைக் களையுங்கள்! கொச்சையாகப் பேசினால் அடக்கி விடலாம் என்ற பழைய தந்திரத்தைப் பரணில் போட வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.

உங்களுக்கு அண்டைநாட்டில் நடந்ததை, நடப்பதை அடுத்து எழுதுகின்றேன். நம்மைச்சுற்றி நடப்பதை தெளிவுடன் புரிந்து கொள்ளவும். உணர்ச்சிக்கு அடிமையானால் உண்மைகள் தெரியாது.

தம்பி மார்களே, பெண்களின் ஆதங்கங்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள்! கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆழ்மனத்தில் நீறு பூத்திருக்கும் நெருப்பைக் கொழுந்து விட்டு எரிய வைத்து விடாதீர்கள்!

Monday, May 17, 2010

பெண்ணே அனும்மா, பறந்துவிட்டாயே!

அனும்மா, அனும்மா என்று கூப்பிட்டுப் பழகியவர்கள் எல்லோரையும் புலம்ப வைத்துவிட்டு விண்ணுலகம் பறந்து சென்றுவிட்டார் அனுராதாரமணன்.

"சீதா, என் அனு போய்விட்டாள்!"என்று என் பிரேமா எழுதிய கடிதமே அழுதது. என்னையும் அழவைத்தது. என்னால் உடனே அஞ்சலிக் கடிதம் எழுத முடியவில்லை. என் உள்ளமும் ஓலமிட்டுக் கொண்டிருந்தது.

எழுத்தாளர் என்பதற்கு மேலாக ஒரு பெண்ணாய் அவர்களை உணர்வேன்.

அந்தப்பெண்மணி இந்த சமுதாயத்தில் எத்தனை சோதனைகள் வந்த பொழுது ஒடிந்து விடாமல் வாழ்ந்து காட்டியவர்.

அவரைப்பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். அவரைப்பற்றி எழுத எனக்கு எப்படித்தெரியும்?

அதிக நாட்கள் நெருங்கிப் பழகாவிட்டலும் அவருடன் பழகிய சிறிது காலத்திலேயே என்னை மிகவும் கவர்ந்துவிட்டவர். என் தோழி பிரேமா; சிறுகதை உலகில் பிரமிளா கார்த்திக் என்று அழைக்கப்பட்டவரின் அருமைத் தோழி அனுராதா ரமணன். அடையாரில் பலராம் தெருவில் இருவரும் வசித்துவந்தனர். மனம் விட்டுப்பேசும் தோழிகள்.பிரேமா எனக்கு அறிமுகப்படுத்திவைத்தாள். என் மகன் திருமண வரவேற்பிற்கு வந்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்.

இளவயதில் விதவையானார். இரு பெண் குழந்தைகள் . அவர் வாழ்க்கையில் போராடிய வினாடிகள் அதிகம். ஆனால் என்றைக்கும் தன்னம்பிக்கை இழக்காது தலைநிமிர்ந்து நின்றார். பிறரை ஏமாற்றத் தெரியாதவர். ஆனால் சீக்கிரம் ஏமாந்து போகின்றவர். குழந்தையைப்போல் பழகுவார். மிகவும் எளிமையாய் வாழ்ந்தவர். உயர்வு தாழ்வு பார்க்கமாட்டார். எளிதில் நண்பராகிவிடுவார்.

நல்ல உயரம். களையான முகம் பேசும் விழிகள். ஒய்யார நடை. "நிமிர்ந்த நன்னடயும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத தோற்றம்," எல்லாவற்றிகும் சொந்தக்காரி அனும்மா.

லட்சுமிகரமான தோற்றம். ஓர் விதவைப்பெண் அப்படி இருக்கலாமா? சாதிக்கட்டுப்பாடுகளைப்பற்றி கவலைப்படவில்லை.

அவரின் எழுத்து உயிருள்ளவை. அவர் எழுத்தும் வாழ்வும் கம்பீரமானவை.

அவர் எழுத்துலகில் கலந்து கொண்ட ஓட்டப்பந்தயத்தில் அப்பொழுது பிரபலமாக இருந்த பெண்மணிகள் சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி ஆகியோர் இருந்தனர். டாக்டர் லட்சுமியின் கதைகள் பெண்னைப்போல் அடக்கமானவை. ராஜம் கிருஷ்ணன் அவர்கள் பெண்ணியம் கொள்கை உடையவராயினும் சமுதாய வாழ்க்கையை, மரபினை எழுதியவர். பின்னர் வந்த இந்தப் பெண்மணிகள் தான் வித்தியாசமாக எழுத ஆரம்பித்தனர்.

சிறை என்ற கதை மூலம் தனித்து அடையாளம் காணப்பாட்டார்

ஒரு பிராமண வைதீகக்குடும்பம். அமைதியாக இயங்கிவந்த அந்த குடும்பத்தில் ஓர் நச்சுப்பாம்பு நுழைந்தது. பாவம், அந்த அப்பாவிப் பெண்ணை அந்த நாகம் தீண்டிவிட்டது. இது அவள் குற்றமா? அக்கினி வலம் வந்து காலம் பூராவும் காப்பாற்றுகின்றேன் என்று மந்திரங்களை உச்சரித்தவன் ஆச்சாரம் போய்விட்டது என்று அவளைத் துரத்துகின்றான். விறகுகள் போட்டிருக்கும் இடத்திலாவது ஒதுங்கி வாழ்கின்றேன் என்று கெஞ்சியும் அவள் வீட்டை விட்டு விரட்டப்படுகின்றாள்.

கெடுத்தவன் வீட்டிற்கே போகின்றாள். அங்கே தான் இனி வாழப் போவதாக் கூறிவிட்டு ஒரு அறைக்குள் ஒதுங்கிவிட்டாள். லட்சுமணன் கோட்டைத்தாண்டினாள் அன்றைய சீதை. ஆனால், அவள் மானசீகமாகப் போட்ட கோட்டைத் தாண்டி அந்த முரடன் அவளிடம் நெருங்கவில்லை.

ஊர்வம்பு கேட்டு புருஷன் வந்து கூப்பிடுகின்றான். ஆனால், இவளோ தன்னைத் துரத்தியவனைக் கணவனாகப் பார்க்கவில்லை.

கணவன் என்றால் காதலன் மட்டுமல்ல,அவன் காவலனும்கூட!

ஆனால், தன் கடமையினின்றும் வழுவிவிட்டான் அவளுக்குத் தாலி கட்டியவன். கெடுத்தவனோ அவளைக் கவுரமாக நடத்தி, அவள் பக்கம் கூட வராமல் அவள் பெண்மையை வணங்குகின்றான்.

வாழ்க்கையில் திருந்தி அவள் நன்மதிப்பைப் பெற்றவன் மாண்ட பொழுது அவள் உடைந்து போகின்றாள். தாலியின் அர்த்தம் என்னவென்று இக்கதையில் எழுதப்பட்டதைப்போல் எந்த ஆணும், எந்தப்பெண்னும் எழுதவில்லை.

பாவம் அனும்மா! இந்தக்கதையை எழுதியவுடன் அவர்களுக்கு எத்தனை போன்கால்கள் வந்தன? எத்தனை மிரட்டல்கள்? எதற்கும் அஞ்சவில்லை.

பெண்கள் அனைவரும் அந்தப் பெண்ணிற்கு அஞ்சலி செலுத்தக்கடமைப்பட்டவர்கள்.

இதைவிட பெண்ணியம் பேச முடியுமா?

உயிரில்லா வார்த்தைகளை அவர்கள் எழுதவில்லை. அவர்கள் எழுத்தில் பிரச்சனைகளைக் கூறுவது மட்டுமல்ல, ஓர் தீர்வும் காட்டுவார். யாருக்கும் அஞ்சாது அவர் எண்ணங்களை வெளியிடுவார்.

பத்திரிகைகளில் மட்டும் எழுதி யாரும் இங்கு செல்வந்தராக முடியாது. கணவரின் பணத்தில் ஓர் வீட்டை பலராம் தெருவில் வாங்கினார். கடன் பளுவால் அந்த வீட்டையும் விற்று வாடகை வீட்டிற்குப் போனார். அவருக்கு ஆசை ஏற்பட்டு வளையோசை என்ற ஓர் இதழ் ஆரம்பித்தார். இரு மாதங்கள் நடந்தன; நிறுத்தினார். இடைவெளிவிட்டு மீண்டும் தொடங்கினார். மேலும் இரு மாதங்கள் நடத்தினார்ர்.பொருள்வசதி இல்லை;பத்திரிகையை நிறுத்திவிட்டார்.

எப்படியோ இரு பெண்களையும் படிக்க வைத்தார். பெரிய படிப்பு என்று கூறமுடியாது. ஆனால் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தார். ஒரு பெண் அமெரிக்காவிலும் இன்னொரு பெண் கானடாவிலும் இருக்கின்றனர். தாய்க்கு உதவி செய்த தங்கக் குழந்தைகள்.அவர் எழுத்தால் பொருள் சேர்த்து வாழவில்லை.

எழுத்தாளர்களின் நிலை இதுதான்.

எவ்வளவு பணம் கொடுத்து கள்ள டிக்கட்டாவது வாங்கி சினிமா பார்ப்போம் ஆனால் சில பத்துகளைச் செலவழித்துப் புத்தகங்கள் வாங்கிப் படிக்க மாட்டோம். இச்சைக்கு இசையும் எழுத்துக்களின் வசீகரத்தால் அர்த்தமுள்ள எழுத்துக்களுக்கு வரவேற்பில்லை.

எல்லாம் தெரிந்தும் இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பத்திரிகைகளும் கதைகளைப் போடுவதை குறைத்துவிட்டது. தொலைக்காட்சியுடன் போட்டி போட முடியவில்லை. எனவே பத்திரிகைகளும் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டன. படிக்கின்றவர்களை வைத்துத்தான் புத்தகங்களும் வெளியிடுவார்கள். இந்தப்பந்தயத்தில் பல சிறந்த எழுத்தாளர்கள் இருந்த அடையாளமே தெரியவில்லை!

அனுராதாவின் அந்தரங்கம் தினமலரில் தொடராக வந்து கொண்டிருந்தது. சிறுகதை எழுதி, நெடுங்கதை எழுதி, பல படமாக்கப்பட்டு புகழ்பெற்ற ஒருத்தி கடைசியில் எங்கோ எப்பொழுதோ எழுதும் நிலைக்கு ஆளானது வருத்தத்தைக் கொடுக்கின்றது.

இடையில் ஒரு முறை உடல் பாதிக்கப்பட்டு அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்ட்து. மீண்டும் அவர் பேசினார். எப்படி அவரால் பேச முடிந்தது என்று அவர் சொன்ன பொழுது நோயாளிகள், முதியோர் எல்லோருக்கும் ஓர் முன்மாதிரியாக, நம்பிக்கை விளக்காகத் தெரிந்தார்

மூளைசெல்களுக்கு உணர்ச்சியூட்ட வேண்டும். மீண்டும் சக்தி பெற வேண்டும்.எழுத்தாளர் மூளை இன்னும் சாகவில்லை.

நினைவுகளில் கதைகள் தோன்றின. அங்கு வந்த டாக்டர், நர்ஸ் இவர்களை ரசிக்க ஆரம்பித்தார். விரல்களை, கைகளை, முகம், பார்வை இவைகளை இப்படி ஒவ்வொன்றாய்ப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்.

ரசித்தவைகளை அவர்களிடம் சொல்லவும் தொடங்கினார். வார்த்தைகள் வரவில்லை. முதலில் சப்தம் மட்டும் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உளர ஆரம்பித்தார். அவர் முயற்சிகளைக் கண்ட மற்றவர்களும் அவரை ஊக்கப்படுத் தினார்கள். உளரலும் திருந்த ஆரம்பித்து பழையபடி நன்றாகவே பேச ஆரம்பித்தார்.

தனக்கேற்பட்டுவிட்ட ஊனத்தை, தன்னம்பிக்கையால், முயற்சியால் போக்கியவர் அனும்மா!

எனக்கு உடலில் வலி வரும் பொழுது அவரை நினைப்பேன். ஏதோ சிந்திக்க ஆரம்பித்தேன். 75 வயதில் ஏதோ எழுத ஆரம்பித்தேன்.இன்று ஏதோ சுமாராக எழுதுகின்றேன். இத்தனையும் என் நோயை மறக்க நான் செய்யும் முயற்சிகள்.

இந்தப்பாடம் எனக்குக் கற்றுக் கொடுத்தவர் அனுராதா ரமணன்.

அனுராதா ரமணன் அவர்களின் சிந்தனைகள் எனக்குப் பிடித்திருந்தன. அவர் கதைகள் எழுதிய முறைகள், அவைகளில் அவர் கொடுத்த தீர்வுகள், அவைகள் எனக்கு கொடுத்த சக்தி இவைகளால் என் மனத்தில் அவர் ஓர் தனி இடத்தில் அமர்ந்துவிட்டார்.

இன்று அவர் நம்மைவிட்டுப் பறந்து போய்விட்டார். சாவு கூட மறைந்திருந்து அவரைக் கூட்டிச் சென்றிருக்க வேண்டும். கொஞ்சம் தெரிந்திருந்தாலும் சாவை விரட்டியிருப்பார்.

எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்தவர் அனுராதா ரமணன்!

அவர் உடல் மறைந்தாலும் அவர் எழுத்துக்கள் துடிப்புடன் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

அன்பே உருவான அனும்மாவுக்கு இந்த மூதாட்டி அஞ்சலி செலுத்துகின்றேன்.

அவர் ஆத்மாவிற்கு சாந்தி கிடைக்கட்டும்.

Thursday, May 13, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 07


குறிப்பேடு எழுதும் பழக்கம் என் சிறு வயதிலேயே ஆரம்பமாகிவிட்டது. படிக்கும் பொழுது பிடித்த வரிகள், மற்றவர்கள் பேச்சில் என்னை ஈர்த்த வைகள்,சில அனுபவங்கள் ஆகியவைகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிவைத்துக் கொள்வேன். ஏதாவது வித்தியாசமாகக் கண்டாலும் குறித்து வைப்பேன். நிலைத்துவிட்ட நினைவலைகள் இப்பொழுது குதித்து வருகின்றன.

1958

வாடிப்பட்டியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சுதந்திரம் கிடைத்த பின் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில் முக்கியமாகக் கருதியது மக்களிடையே பல விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாங்களும் கதாகாலட்சேபம், நாடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்தோம். நாடகம் பார்க்கும் பொழுது அவைகள் பிரச்சார நாடகமாகத் தெரியாது. மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி ’செட்’டின் நாடகத்திற்குத் தனிப்புகழ் உண்டு. அந்தப் பெருமைக்கு உரியவர் சோம மகாதேவன் என்பவரே! நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியவர். நாடகக் கம்பெனியில் இருந்தவர். எனவே எங்கள் நாடகம், அதனைத் தொழிலாகக் கொண்டவர்களின் நிகழ்ச்சியைப் போன்று சிறப்பாக அமைந்திருந்தன.

"மனமாற்றம்”-எங்கள் நாடகத்தின் பெயர்!

இரு சகோதரர்கள். மூத்தவர், அந்த ஊரில் பெரிய பணக்காரர்; பேராசை பிடித்தவர். அவருடைய தம்பி ஊருக்கு உழைப்பவன். இரு துருவங்களான சகோதர்களுக்கிடையில் போராட்டங்கள். செல்வந்தருக்கு முதல் மனைவி இறக்கவும் இளையவளாக ஓர் குணவதி வந்து சேர்ந்தாள். கணவரின் போக்கு பிடிக்கவில்லை. அவளும் நியாத்தைச் சொல்லிப் போராடுவாள். சண்டைகள் வலுத்து ஓர் நாள் இளம்மனைவி தற்கொலை செய்து கொண்டு உயிர் நீக்கின்றாள் அப்பொழுதுதான் சுயநலக் காரனின் மனம் திருந்துகின்றது. கிழக் கணவனாக வந்தவர் சோம மகாதேவன். இளம் மனைவியாக நடித்தவள் நான். நான்கு இடங்களில் அந்த நாடகத்தை நடத்திவிட்டு ஐந்தாவதாக வாடிப்பட்டிக்கருகில் இருந்த வடுகபட்டியில் நடத்தினோம்.

அன்று என் அம்மாவையும் கூட்டிச் சென்றிருந்தேன். நாடகம் முடிந்து திரும்பி வரும் பொழுது அம்மா ஒன்றும் பேசவில்லை. வீட்டிற்குள் நுழையவும் ’ஓ’வென்று அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

"என்னம்மா ஆச்சு?"

"இனிமேல் என்ன ஆகணும்? எல்லாம் போய்டுத்து! உன்னைப் பெத்ததக்கு உசிரை வச்சுக்கலாமா?"

"நான் என்ன தப்பு பண்ணினேன்?"

"இன்னும் என்னடி பண்ணனும்? எவனோ ஒரு கட்டேலே போற தடியன் உன்னை மடியில் போட்டுண்டு தொடறான், அழறான்? இந்தக் கண்ராவிக் காட்சியைப் பாக்க என்னை ஏன் கடவுள் வச்சிருக்கார்?"

"அது நாடகம் அம்மா!"

"ஏண்டி, உனக்குச் சுரணை கிடையாதா? வேற்று மனுஷன் ஒரு பொம்மனாட்டியைத் தொடலாமா? கற்பு போய்டுத்தேடி! இதுக்கா உன்னை வளத்தேன்? பொண்ணு வேலைக்குப் போனா இப்படி வெக்கம் மானம் இல்லாமலா நடக்கறது? எங்க காலத்துலே முதுகுலே போடர துனி நழுவறது கூட பாவம்னு நினைப்போம். என் வயத்துலே பிறந்தவ இப்படி இருக்கியே?என்னாலே தாங்க முடியல்லேடி."

என் அம்மா ’கற்பு” என்று சொல்லவும், மனத்துக்குள் கோபம், ஆத்திரம்,சிரிப்பு எல்லாம் தோன்றியது. என் உணர்வைக் காட்டவில்லை. என் அப்பாவி அம்மாவைச் சாந்தப் படுத்த வேண்டும். பக்கத்தில் உட்கார்ந்து ஏதேதோ பேசினேன். கொஞ்சம் கொஞ்சமாக அழுகை அடங்கியது.

“இனிமேல் மற்ற ஆண்களைத் தொட்டு நடிக்க மாட்டேன்."என்று கூறினேன். என் வேலை பிரச்சாரம் செய்வது. எனவே நாடகத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியவில்லை. என் பேச்சில் முழுசமாதனம் அடையாவிட்டாலும் அழுகை நின்றது.

என்றோ கற்பிக்கபட்ட கற்பு அன்று என் வாழ்க்கையில் சோகத்தை வரவழைத்தது. ஆத்திரத்தையும் வரவழைத்தது.
ஓடும் ஆற்று நீரில் விண்ணில் பறந்த ஓர் கந்தர்வனின் அழகைச் சில வினாடிகள் ரசித்துவிட்டாள் ஓர் பெண்மணி. அதை உணர்ந்த அவள் கணவர், மகன் கையால் தாயின் தலையைக் கொய்யச் செய்தார். நிழலைப்பார்த்து ரசித்தவளுக்குத் தலை போயிற்று.

இக்காலத்துப் பெண்களை நினைத்துப் பார்த்தேன்.

சினிமா நாயகர்களை ரசிக்கும் பெண்களின் தலைகளைக் கொய்ய ஆரம்பித்தால், ஊரில் தலையில்லா முண்டங்கள் தான் நடமாடும்.
டவுண் பஸ்ஸில் எப்படி இடி படாமல் இருக்க முடியும்? கண்டவன் செய்யற சேட்டைகள் உணர்ந்தும், முகத்தை மட்டும் சுளித்து உடம்பை நெளிந்து கொள்ள முடிகிறதேயொழிய வேறு என்ன செய்ய முடியும்? சில நேரங்களில் சில மனிதர்கள் கதையில் கங்கா படும் பாட்டை ஜெயகாந்தன் எவ்வளவு தத்ரூபமாக எழுதியிருக்கின்றார்!

அரசு வண்டியில் நாங்கள் போகும் பொழுது ஜீப்பில் பின்னால் ஆறு பேர்கள் இடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். எங்களுக்கு ஒட்டாமல் உட்கார இடம் ஏது? எவனாவது அயோக்கியன் உட்கார்ந்தால் , பஸ்ஸில் படும் வேதனைகளும் சோதனைகளும் ஜீப்பிலும் இருக்கும். அவன் அசட்டுச் சிரிப்பையும் சகித்துக் கொள்ள வேண்டும்.

கற்பாம் கற்பு!

எனக்கேற்பட்ட வயிற்றெரிச்சலை ஒரு கதையில் எழுதி அனுப்பி அதுவும் வெளி வந்தது. ரசித்தவர்களும் யாரோ ஒருத்தன் பெண் பெயரில் எழுதியிருக்கின்றான் என்றார்கள்.

பெண்ணுக்குச் சுதந்திரமாக எழுதக் கூட உரிமையில்லை.

“பாரிஸுக்குப் போ” ஜெயகாந்தன் எழுதினால் ஓஹோ! இருவர் கதையை இரு பெண்கள் எழுதினால் “பெண்கள் எழுதற கதையா” என்று பரிகாசம்!
மணமான பெண்ணிடம் சலனம் ஏற்படுவதைக் கூட ஆண்தான் எழுதவேண்டும்.
இதே அம்மா, பல வருடங்கள் கழித்து ஓர் நிகழ்வில் எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்த்தோமானால். வியப்பு வரும்.

குருவம்மா ஓரு கிராமத்துப் பெண். அவள் பட்டப்படிப்பு முடித்து என் துறையில் பணியாற்ற சேர்ந்தாள். சில மாதங்களில் அவள் வாழ்வில் காதல் புகுந்தது. செய்தி அறிந்த அவள் தந்தை கொதிப்படைந்து அவளைச் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று சொந்தக்காரப் பையன் ஒருவனுடன் கட்டாயத் திருமணம் செய்து முடித்துவிட்டார்.

ஒருவர் வாழ்க்கை திருமணம் முடியவும் முடிவடைவதில்லை. அது ஆரம்பம். பொருந்தாத திருமணம். குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை.நாளுக்கு நாள் அது அதிகமாகவும், கணவனை உதறிவிட்டாள்.

“இணையாது கலந்து இரண்டு ஆத்மாக்கள் இரு வேறு உலகங்களில் பிரிந்து கிடந்தாலும் அந்த அனுபவமே தாம்பத்யம் தான். இரண்டு ஆத்மாக்கள் சங்கமமில்லாமல் உடல்கள் என்னதான் ஒட்டிக் கலந்து உறவாடிய போதிலும் அந்த வாழ்வே ஒரு தனி வாழ்க்கைதான் “

காலச் சக்கரத்தின் சுழற்சியின் வேகத்தில் தாம்பத்தியத்தின் இலக்கணமும் மிதிபட்டுக் கொண்டிருக்கின்றது.
பெற்றவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், அவள் ஒதுங்கிய இடம் ஓர் போலீஸ் அதிகாரியின் நிழல். குருவம்மாளுக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவர் திருமணமாகதவர். யாராவது அவளை முதலில் பார்க்கின்றவர்களாக இருந்தால்,“எவ்வளவு அடக்கமான பெண்; நல்ல பெண்!“ என்று போற்றுவார்கள்.;அவர்களைத் தூற்றுவாரும் இருந்தனர்!

என் மீது அவளுக்குப் பிரியம். என்னுடன் மனம்விட்டுப் பேசுவாள்;என் வீட்டிற்குத்தான் வருவாள். என் தாயாரைப் பார்க்க வரும்பொழுது பூ வாங்கி வந்து அம்மா கையில் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்வாள்.

குருவம்மாள் ஒருவனைக் காதலித்தாள்; இன்னொருவனை மணந்தாள்; கட்டியவனை உதறிவிட்டு இன்னொருவனின் கையைப் பிடித்துக் கொண்டுவிட்டாள். பழங்கால மாமியின் அபிப்பிராயம் தெரிய ஆவல்!

“எங்க காலத்துலே பொண்களுக்கு எந்த வாழ்க்கை அமையறதோ அதுலே ஐக்கியமாயிண்டு வாழ முடிஞ்சுது. இப்போ காலம் மாறிடுத்து.கன்னாபின்னான்னு கண்டவனோட சுத்தாம யாரோ ஒருவனுடன் எப்போ வாழ ஆரம்பிச்சுட்டாளோ அப்பறம் அவளைப் பத்தி பேச என்ன இருக்கு? இப்போ மனம் ஐக்கியமா இருக்கற இடத்துலே நன்னா வாழறா"
என் அம்மாவா இப்படி பேசறது?ஆமாம்! ஒரு ஆடவன் கைபட்டால் கற்பு போச்சுன்னு அழுத அம்மாதான். இதுதான் யதார்த்தம். இதுதான்நிஜம்.

ஒன்றில் பழகிட்ட மனசு இன்னொன்றை ஏற்றுக் கொள்வது எளிதல்ல. முப்பது வருடங்களில் இந்த மாற்றம்.

மாறிவிட்ட சூழல் மனிதனை எப்படி பேச வைக்கின்றது?! முன்பு யுகசந்திப்புகள். இப்பொழுது காலச் சக்கரத்தின் வேகம் அதிகம். எனவே யுகங்களுக்காகக் ககத்திருக்க வேண்டியதில்லை. வினாடிப் பொழுது கூடப் போதும்.

ஜே.கேயின் கதை கற்பனையல்ல. மாற்றங்களை ஜீரணித்து வருபவர்களில் பாட்டியும் ஒருத்தி. அன்று எழுதப்பட்டவைகள் இப்பொழுது சாதாரணமாகிவிட்டன.

என் களம் மணம் வீசும் மலர்கள் நிறைந்த நந்தவனம் இல்லை. என் மனத்தில் குழப்பம் ஏற்படும் பொழுது நான் தேடிச் செல்லும் இடம் ஜெயகாந்தன் குடில்.

அவர் எனக்கு சுமைதாங்கியல்ல;ஓர் ஊன்றுகோல்!என் தள்ளாட்டத்தை ஒடுக்கி நிமிர்த்தும் ஓர் உறுதியான ஊன்றுகோல்.
ஜெயகாந்தனைப் பார்க்க, அவருடன் பேச பலர் வந்து போவதுண்டு. இயல்பாக பேசுவதும் உண்டு. ஓரிருவர் வந்தால் பேசுவதைவிடக் கூட்டமாக சிலர் இருந்தால் திடீரென்று வேகம் வந்துவிடும். காட்டாறு போல் வார்த்தைகள் வரும். எதிரே உட்கார்ந்திருப்பவர் மயங்கி உட்கார்ந்திருப்பர். பலமுறை நான் கண்ட காட்சி. எங்கிருந்து இந்த திறனைப் பெற்றார்!? அவர் புத்தகங்கள் படிப்பதை நான் பார்த்ததில்லை.

எனக்கு அதுபற்றித் தெரியாது. பிள்ளைப்பருவக் கதைகள் இப்பொழுது எங்கும் காணலாம். அங்கும் அரசியல் வாடை அடிக்கின்றதே தவிர, இந்த தத்துவங்கள் பேச எங்கு கற்றார்? அவர் ஓர் சுயம்பு. ஒருவேளை பூர்வ ஜென்மம் என்று சொல்வார்களே அப்படி தொடர்ச் சங்கிலியாய் வந்ததுவோ!?

மேடைப் பேச்சில் எதையாவது சொல்லிவிடுவார். அவைகள் பிரச்சனையாகிவிடும். நான் சொல்வது மேடைப் பேச்சையல்ல. அவர் தங்குமிடத்தில் நாம் உட்கார்ந்து பேச வேண்டும். வான் மழைக்குக் காத்திருப்பது போல் காத்திருக்க வேண்டும். அந்த சொல்மாரியைத் தான் புகழ்ந்துரைக்கின்றேன்

ஜெயகாந்தனின் வீடு கே.கே. நகரில் இருக்கின்றது. முன்பு இவருக்கு இன்னொரு இடம் உண்டு. ஆழவார்பேட்டையில் பிள்ளையார் கோயிலுக்கு மேல் ஓர் மாடி இவருடைய இடம். காலையில் கடமைகளை முடித்துவிட்டு இங்கு வந்து விடுவார். இரவில்தான் போவார்.

ஒரு சின்ன அறை. முன்னதாக ஒரு சின்ன ஹால். அவ்வளவுதான். அந்த ஹாலில் ஒரு பக்கம் பாதியளவில் ஒரு சுவர். சின்ன அறையில் ஒரு கட்டில் அதில் ஒரு விரிப்பும் ஒரு தலையணையும் இருக்கும். ஒட்டி ஒரு நாற்காலியும் இருக்கும். இன்னொரு நாற்காலி அந்த குட்டைச் சுவர் அருகில் இருக்கும். அதிலேதான் இவர் உட்கார்ந்திருப்பார்.

சுவரை யொட்டிக் கிழே பார்த்தால் ஒரு சின்ன சந்து. இருபக்கமும் வீடுகள். ஏழைகள் வாழும் தெரு அது. எப்பொழுதும் சத்தம் இருக்கும். நம் நாயகனுக்கு அதைப் பார்க்கப் பிடிக்கும். இடுப்பில் ஒரு கைலி, மேலே சட்டை கிடையாது. ஒரு சின்னத் துண்டு. மீசையை முறுக்கிக் கொண்டு அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்

எத்தனை வருடங்களாக அந்தத் தெருவையே பார்த்துக் கொண்டு வாழ்ந்தார். அந்த சின்னஞ்சிறு உலகில் கண்ட, உணர்ந்த வாழ்வின் ஆதார ஸ்ருதி, அவர் எழுத்துக்களில் இசைத்தது.அவருக்கு அலுப்பே வரவில்லை. பார்வையிலோ ஒரு சின்ன தெருவும் , வீதியில் தெரியும் காட்சிகளும். ஆனால் மனம் சுற்றிவந்ததோ இப்பரந்த உலகை.

அவர் குடிலைப் பார்ப்போம் அவர் குட்டைச் சுவர் அருகில் உட்கார்ந்து கொண்டு தன் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார் ஹாலில் சிலர் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப் பார்கள். ஒரு சின்ன இடத்தில் இரு சின்ன உலகங்கள்.

ஒரு நாள் அவர்களிடம் கேட்டேன்

“ஏன் இப்படி இங்கு வந்து உட்கார்ந்திருக்கின்றீர்கள்?"

“அம்மா, அவர் திடீரென்று பேச ஆரம்பிப்பார். அவர் பேச்சைக் கேட்கத்தான் காத்திருக்கின்றோம்"

அவர்கள் பைத்தியக்காரர்களா? ஆமாம்! அறிவுப்பைத்தியம்.

ஜெயகாந்தனிடம் வெட்டி அரட்டையை எதிர்பார்க்க முடியுமா?

இப்பொழுது அப்படிப்பட்ட காட்சிகள் கிடையாது. அவர் வீட்டின் மாடியில் கூரை வேய்ந்த இடம் இருக்கின்றது. அங்கே சந்திப்புகள் நடக்கின்றன. கலந்துரையாடல்களும் இங்கேதான். ஆனால் அந்தக் காலத்து அதிரடி கச்சேரிகள் இப்பொழுது கிடையாது. அந்தக் காலத்தில் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அந்தக் குடிலுக்கு வருவார்கள்.

நான் இரு இடங்களுக்கும் சென்றிருக்கின்றேன். நாங்கள் மனம்விட்டுப் பேசுவோம். ஆன்மீகம் முதல் அரசியல் வரை பேசுவோம். சமுதாயத்துடன் உறவாடுபவள் நான் எனக்கு உளவியல் பிடிக்கும். அவர் பார்வையும் சமுதாயத்தில்தானே இருக்கின்றது. பல விஷயங்களில் இருவருக்கும் ஒத்த உணர்வுகள் இருந்ததால் நல்ல நண்பர்களாக இருக்க முடிந்தது. மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் புரிந்து கொண்டு அவர்களை அப்படியே எற்றுக் கொண்டால் நட்பில் விரிசல் வராது.

ஜெயகாந்தன் பார்க்கும் ஒவ்வொன்றும் அவர் கதையில் வந்துவிடும்.

ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கேயே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு பெண் தலையில் செங்கல்லைச் சுமந்து போய் கொடுத்துக் கொண்டிருந்தாள். போகின்ற பாதையில் ஒரு கையால் செங்கல் கூடையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் இடுப்பில் இருக்கும் வெற்றிலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு போகின்ற பாதையில் சுவற்றில் அவள் ஏற்கனவே ஒட்டியிருந்த சுண்ணாம்பை எடுத்து நாக்கில் தடவிக் கொண்டு சென்றாள். இந்தக் காட்சியை அவர் எத்தனைமுறை பார்த்திருப்பார்.! “சினிமாவுக்குப் போன சித்தாளு“ என்ற கதையில் இக்காட்சி வரும். இலக்கியவாதிக்கு மண்ணும் உயிருள்ளதே!

அவருடைய கதை “புதுச்செருப்பு கடிக்கும்“ எனக்கு மிகவும் பிடிக்கும்

அதில் வரும் உரையாடல்களில் அவருடைய வார்த்தைப் பிரயோகங்களைப் பார்க்க வேண்டும்!

சொல்லால் சவுக்கடி கொடுக்க முடியுமா? ஜெயகாந்தனால் முடியும்!

(தொடரும்)

நன்றி - திண்ணை

Sunday, May 9, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-12


தூத்துக்குடி என்றால் வ.வூ.சி நினைவு வராமல் இருக்குமா? என் கல்லூரிப்படிப்பு தூத்துக்குடியில் தொடர்ந்தது. இங்கும் சுட்டிப்பெண் என்ற பட்டம் நிலைத்தது. கல்லூரி தங்கும் விடுதியில் தங்கிப் படித்தேன். இதயப் பேழையில் வாழும் சில நினைவுகள் இங்கும் உண்டு.

மாலை நேரத்தில் என்னுடன் படித்த விஜயாவிடமிருந்து நாட்டியம் கற்றுக்கொண்டேன். அவளும் நானும் மேடையில் சேர்ந்து ஆடிய தில்லானா பலராலும் பாராட்டப்பட்டது. நாட்டிய அரங்கேற்றமே இங்குதான்.

நாடக உலகில் முதலில் மேடை ஏறியதும் இங்குதான். நான் கண்ணகியாக நடித்தேன். ஓரங்க நாடகம். வழக்குரைக்காதை! வசனம் நான் தான் எழுதியிருந்தேன். அந்த நாடகத்தில் நடித்தபின் அப்பொழுது இருந்த மேதகு ஆண்டவர் ரோச் அவர்கள் என்னை ’கண்ணகி’ என்றே அழைத்து வந்தார். அவருக்கு அடுத்து வந்த மேதகு ஆண்டவர் தாமஸ் பெர்னான் டஸ் அவர்களுக்கும் என்னை மிகவும் பிடிக்கும். பிற்காலத்தில் நான் வேலை பார்த்த வாடிப்பட்டி, வேலூர் ஆகிய இடங்களில் என் வீடுகளுக்கு வந்திருக்கின்றார். அவர்கள் போகும் பாதையில், நான் வேலை பார்க்கும் இடம் இருந்தால் நிச்சயம் வந்து பார்த்துவிட்டுச் செல்வார். அவர்கள் ஓய்வு பெற்றபின், திருச்சியில் தங்கி இருக்கும் காலத்தில் நான் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். கண்ணகிக்கு அடுத்து நடித்த நாடகம் வீரத்தாய்.

என்னுடைய நெருங்கிய தோழியின் பெயர் அமிர்தவல்லி. அவளுக்கு அடுத்தபடி மேரியாகும். இரண்டு பெண்டாட்டிபடும் கஷ்டம் நான்பட்டேன். அன்புக்கு அப்படியொரு போட்டி. அமிர்தவல்லி நான் தங்கிய அறையில் உடன் இருந்தாள்.

அக்காலத்தில் எங்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். கடற்கரைக்குக் கூட்டிப்போகும் பொழுது வரிசையாகச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில், மத்தியில், பின் கடைசியில் கன்னியாஸ்த்ரீகள் உடன் வருவார்கள். ஏதோ ஆட்டுமந்தையை ஒட்டிச் செல்வது போல் எங்களை நடத்தினர்.

விடுதியில் ஜன்னல் வழியாகப் பிறரிடம் பேசக் கூடாது. ஒரு முறை எங்கள் வார்டன் ஜன்னல் வழியாக ஒரு மாணவியிடம் பேசும் பொழுது விசில் அடித்துக் கூச்சல் போட்டேன். வார்டனே விதியை மீறிவிட்டார்கள் என்று. அன்று முதல் எங்கள் வார்டனுக்கு என்னைப் பிடிக்காது.

கல்லூரியில் எங்களுக்குத் தமிழ் ஆசிரியையாக வந்த சிஸ்டர் எமெரன்சியா மேரி அவர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும். அவர்கள் வரத் தாமதமாகுமென்றால் என்னிடம் சொல்லுவார்கள். அதாவது அவர்கள் வரும் வரை நான் வகுப்பின் அமைதியைக் காக்க வேண்டும். பாலுக்கு பூனை காவல்.

ஆசிரியைப் போல் நின்று கொண்டேன்.பேச ஆரம்பித்தேன்.

“மாணவிகளே, நாம் தமிழை, தமிழ் மரபுகளை நேசிக்கின்றோம். நம் சங்க இலக்கியங்களில் அதிகப் பேசப்படுபவைகளில் உடன்போக்கும் ஒன்று. அதாவது ஒருவனைக் காதலித்து, பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் ஊரைவிட்டே ஓடுவது. நாம் தமிழ் மரபைக் காப்பாற்ற எல்லோரும் காதலிக்க வேண்டும். விரைவில் உங்கள் காதலனைக் கண்டு பிடித்துவிடுங்கள். அவன் உடன் ஓடிவர பயப்பட்டால் அவனை ’கிட்னாப்’ செய்யுங்கள். நாம் பாரதி காலப்பெண்கள். துணிச்சலுடன் இருக்க வேண்டும். “

ஒரே கைதட்டல்! அந்த நேரம் சிஸ்டர் வந்துவிட்டார்கள். நான் உடனே ஒரு சிரிப்பைச் சிந்தி மவுனமாகப் போய் உட்கார்ந்துவிட்டேன். ஆனால் எங்களில் ஒருத்தி பின்னால் அவர்களிடம் உண்மையைக் கூறி நான் திட்டு வாங்கியதும் ஒரு செய்தி.

அந்த சிஸ்டருக்கு ஒரு ஆசை. அதாவது, அவர்களுடன் நான் எப்பொழுதும் இருக்க வேண்டுமாம். அதாவது நான் மதம் மாறுவதுடன் அவர்களைப் போல் சிஸ்டராக வேண்டும் என்பதுதான். அதாவது நான் சன்னியாசினியாக வேண்டும் என்பதே.

கற்பனை செய்த பொழுது பயம் வரவில்லை, சிரிப்புதான் வந்தது. நான் அப்படி மாறினால் என்னுடன் தங்கும் பல சிஸ்டர்கள் துறவறத்தைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். அடங்கி இருக்கும் ஜன்மமா நான்?

ஆனால் அவர்கள் தன் விருப்பத்தைச் சொன்ன நாளிலிருந்து என் மனத்தில் ஓர் மாறுதல். சிந்திக்க ஆரம்பித்தேன்.

தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் தான். சாதி ஒழிப்பும் அடுக்குத் தொடர் தமிழும் பிடிக்கும் தான். ஆனால் எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. புராணங்களைத் தான் நம்ப மாட்டேன்.

நான் ஏன் துறவறம் மேற்கொள்ளக் கூடாது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.

மனித மனம் திடீரென்று நம்ப முடியாத முடிவுகளை எடுக்கும். அது முட்டாள்தனமானவையாகவும் இருக்கலாம்.

கல்லுரிக்கு வந்த பொழுது என் வாழ்க்கையில் ஒர் அபூர்வமான தொடர்பு ஏற்பட்டது. மதுரையில் இருக்கும் பொழுது என்னிடம் பாசம் வைத்துப் பழகிய சீதா மாமியவர்கள் ஒரு காரியம் செய்திருந்தார்கள். அவர்களின் ஊர் பத்தமடை. அவர்களின் உறவினர்தான் சுவாமி சிவானந்த மகரிஷி. என் மேல் உள்ள அன்பில் மாமியவர்கள் என்னைப்பற்றி எல்லா விபரங்களையும் எழுதிப் போட்டிருகின்றார்கள். உடனே அவரிடமிருந்து திடீரென்று எனக்கு கடிதமும் சில புத்தகங்களும் வந்தன. எல்லாம் ஆன்மீகம். எனக்குப் போய் இத்தகைய புத்தகங்களா என்று நினைத்தேன். இருந்தாலும் எனக்குள் இருக்கும் தேடல் குணம் இதிலும் என்ன எழுதி இருக்கின்றார்கள் என்று பார்ப்போம் என்றே தூண்டியது.

சுவாமியவர்கள் துறவறம் ஏற்கும் முன்னர் டாக்டராக இருந்தவர். துறவறம் பூண்ட பின்னரும் சமூக சேவைகளீல் கவனம் செலுத்திவந்தார். ஏழைகளுக்கு மருத்துவ நலன்கள் கிடைக்க அந்த மலைப்பிரதேசத்தில் வசதிகள் செய்தார். எனவே சுவாமிஜியின் துறவறம் எனக்குப் பிடிக்க ஆரம்பித்திருந்தது. அவரிடமிருந்து கடிதங்கள், புத்தகங்கள் தொடர்ந்து வர ஆரம்பித்தன.

சிஸ்டர் என்னைத் துறவறவாழ்க்கைக்கு வர வேண்டும் என்று விரும்பிய பொழுது, நானோ ரிஷிகேசம் போனால் என்ன என்று நினைக்க ஆரம்பித்தேன். சிஸ்டர் அவர்கள் விருப்பம் நிறைவேற ஏசுபிரானைப் பிரரர்த்திக்க ஆரம்பித்தார். ஒரு நாள் வேடிக்கையாக அவர்களிடம்,

“சிஸ்டர், ஏசுவுக்கும் முருகனுக்கும் இடையில் ஓர் போட்டி தோன்றி விட்டது. யார் வெல்லப் போகின்றார்கள் என்று பார்க்கலாம் “என்று சொன்ன பொழுது அவர்கள் முகம் வாடியது.

நான் ரிஷிகேசம் வர விரும்புவதையும் துறவறம் மேற் கொள்ள நினைப்பதையும் சுவாமிஜிக்கு எழுதினேன். அவரோ, “ஒழுங்காப் படி” என்று சொல்லிவிட்டார். திரும்பத் திரும்ப அவருக்கு எழுதினேன். அவரும் பொறுமையாக என்னைப் படிக்கச் சொல்லியே அறிவுரை பகர்ந்தார். என் மதுரைச் சித்தப்பாவிடம் என் ஜாதகம் பார்க்கச் சொன்னேன். சோதிடரோ, “இந்தப் பெண்ணுக்கு சன்னியாச யோகம் கிடையாது. ரிஷிகேஷம் புறப்பட்டு ரயில் ஏறினாலும் பாதியில் இறங்கி விடுவாள், இவளுக்கு உத்தியோக ராசி பலமாக இருக்கு” என்று சொல்லி இருக்கின்றார். துறவறமும் என்னை அண்டவில்லை.

ஏசுபிரானுக்கும் முருகனுக்கும் நடந்த போட்டி டிரா ஆகிவிட்டது.

படிப்பை முடித்தேன்.பட்டம்பெற்றேன். எட்டயபுரம் திரும்பி நான் படித்த பள்ளியிலேயே கணக்கு ஆசிரியையாகப் பணியேற்றேன். வேலையில் சேரவும் சுவாமிஜிக்குக் கடிதம் எழுதினேன். அப்பொழுது கூட அவர் எனக்கு எழுதிய கடித வாசகங்கள் எதையோ மறைமுகமாக எனக்கு உணர்த்தின. ஏதோ போராட்ட வாழ்க்கையும், அதனால் கிடைக்கும் அனுபவங்களும், அப்பொழுது நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுமாக இருந்தது. அதுவே அவரிடமிருந்து நான் பெற்ற கடைசிக் கடிதம். துறவறம் போகத் தயார் நிலையில் இருந்தேன். ஆனால் கிடைக்கவில்லை. ஆனால் பின்னர் என்னை அந்த வாழ்க்கைக்கு இழுத்தன பல பெரிய சக்திகள். ஆனால் நான் போகத் தயராக இல்லை.

எனக்குத் தேர்வின் முடிவு தெரியும் முன்னரே நான் படித்த பள்ளியில் வேலை உத்திரவு கொடுத்துவிட்டர்கள். ஆசிரியை வேலையும் உற்சாகமாக இருந்தது. இருந்தாலும் என் தேடல் குணத்திற்கும் என்னிடம் இருந்த திறமைகளுக்கும் அது முழுமையாகப் பொருந்தவில்லை.

என் தந்தை ஒரு முயற்சியில் இறங்கினார். முத்துசாமி தீட்சதருக்கு நினைவாலையம் கட்ட விரும்பினார். மகாராஜாவிடம் கூறி அனுமதி பெற்று அதற்கு அஸ்திவாரக் கல் நாட்டு விழா நடத்தினார். ஆனால், நான் வேறு வேலை கிடைத்து எட்டயபுரத்தைவிட்டுப் போன பின்னர் என் தந்தையும் அந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுவிட்டார். 1957ல் எங்கள் குடும்பம் எட்டயபுர வாழ்க்கையை முடித்துக் கொண்டது. தீட்சதருக்கு
மண்டபம் மற்றவர்கள் கட்டி முடித்தார்கள்.

எட்டயபுரம் என் தந்தையை மறந்தது. ஆனால் என் நினைவுகள் மட்டும் என் ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் தொடர்ந்தது. ஆனாலும், இன்றைய தலை முறைவாசிகளுக்கு இந்த சீதாவைத் தெரியாது

துரைராஜ் ஆசிரியர் குடும்பத்தைக்காண சில முறை போயிருக்கின்றேன். பாரதி நூற்றாண்டுவிழாவிற்குச் சென்றேன்.

இப்பொழுதும் எட்டயபுரம் என் மனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

எண்ணங்கள் ஊர்வலம் முடிந்தது.

ஊடகங்களின் தாக்கம், அரசியல் விளையாட்டில், கலாச்சார மாற்றங்களில் மனிதன் மாட்டிக் கொண்டு மயங்கிக் கிடக்கின்றான். பொய்மையை உண்மையாகக் காட்டப்பட்டு சமுதாயத்தின் ஒற்றுமையையும் அமைதியையும் கெடுத்துக் கொண்டிருக்கும் சூழல். விழித்துக் கொண்டால் வேதனைகளைக் குறைக்கலாம்.

நினைவலைகளில் சந்திப்போம்

(ஊர்வலத்திலிருந்து விடைபெறுகின்றேன்)

Friday, May 7, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-11

என் சித்தப்பா; அதாவது, என் அப்பாவின் சிற்றப்பாவின் மகன். அவர் எங்களுடன் சில ஆண்டுகள் தங்கி இருந்தார். என்னைவிட நான்கு வயது பெரியவர். கடவுள்மறுப்பு மனிதர். புராணங்களை அறுத்து அலங்கோலமாகக் காட்டுவார். திராவிடக்கொள்கைகள் பற்றிப் பேசுவார்.

போதாதற்கு பால்காரன் பேச்சியப்பன், புத்தகங்களை அள்ளிக்கொண்டு வருவான். தந்தை பெரியாரின் சிந்தனைகளும், அண்ணாவின் அழகுத்தமிழில் சீர்திருத்தக் கட்டுரைகளும் என்னைக் கவர்ந்து இழுத்தன. சுதந்திரம் பெற்றவுடன் இளைஞர்களையும் ஏழைகளையும் மாணவர்களையும் ஈர்த்த ஓர் இயக்கம். மனிதன் ஏதோ போராடிக் கொண்டே இருக்க வேண்டும். அடுக்குத்தொடர் தமிழுக்கு அடிமையானேன்.

மேடைப்பேச்சும் துடிப்பான சினிமா வசனங்களும் மக்களை ஈர்க்க ஆரம்பித்த காலம். எனக்கு 16 வயது. என்னைப் படையெடுத்துச் சூழ்ந்த சிந்தனைகள் கொஞ்சமல்ல.

நல்ல வேளையாக இலக்கியம் வீட்டிற்குள் நுழைந்தது; வாத்தியார் துரைராஜின் உருவத்தில்! என் அப்பா அன்புடன் வரவேற்றார். அவருக்குப் பிள்ளையில்லாக்குறை தீர்ந்தது. துரைராஜ் வாத்தியார் என்னைவிட ஐந்து வயதுதான் பெரியவர். உயர்நிலைப் பள்ளிப்படிப்பு முடிந்து ஆசிரியர் பயிற்சி முடித்து நான் படிக்கும் பள்ளிக்கு வந்து சேர்ந்தார். அதே ஊர்!

பூஜை அறையில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தோம்

கலித்தொகை என்னைக் கட்டிபிடித்தது. குறுந்தொகை சிரித்தது. சிலம்போ என்னுள் ஆட ஆரம்பித்தது. கம்பன் கண்சிமிட்டினான். இலக்கியச்சோலையில் நுழைவு. நான் பார்க்க வேண்டியது நிறைய இருக்கின்றது என்பதை உணரவைத்தார் என் ஆசிரியர். அதிகம் சிற்றிலக்கியங்கள் படித்தோம். தூது, உலா, மடல் எல்லாம் படித்தோம்.

ஆங்கிலத்திலும் வொர்ட்ஸ்வொர்த், மில்டன் படித்தோம். எனக்குக் கொஞ்சம் ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்ளுதல் கஷ்டம். ஆனால் வாத்தியாருடன் சேர்ந்து படித்ததால் புரிந்தது. இத்தனை படித்திருக்க முடியுமா என்று தோன்றும்? படித்தேனே! சிறுவயது முதல் படித்துவிட்டு இரவு தூங்கும் பொழுது பன்னிரண்டு மணியாகி விடும்.

இப்படி படிக்கும் ஆர்வத்துடன் படித்ததால்தான் பல அறிஞர்களுடன் பழக முடிந்தது. அர்த்தமற்று பேசினால் ஒதுக்கிவிடுவார்கள்.

என் முதல் கதையும் கவிதையும் உதயமானது. 40 பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதியிருக்கின்றேன். கதிரேசன் மலை என்று பெயர். பிள்ளைப்பருவத்தின் பிரசவம். இப்பொழுதும் அதைப் பத்திரமாக வைத்திருக்கின்றேன். ராஜா-ராணிக்கதை. மாறுவேடங்களும் வரும். கல்கியின் தாக்கம்! சின்னச்சின்ன கவிதைகளும் எழுத ஆரம்பித்தேன்.

இன்று என்னிடம் இருக்கும் இலக்கிய ஆர்வத்திற்கு வித்திட்டவர் எங்கள் ஊர் வாத்தியார். இன்னொரு வாத்தியார்! முத்து, எங்கள் வாத்தியாரின் சிநேகிதரானார். அவர் ஊர் திருநெல்வேலி. ஒரு நாள் ஆசிரியர்களுடன் நெல்லை சென்றேன்.

நான் நுழைந்த முதல் தமிழ்க்குடும்பம். அதாவது, இலக்கிய உலகில் பிரபலமான தமிழ்க் குடும்பம். ஆசிரியர் முத்துவின் அம்மா, எனக்கு அம்மாவானார்கள். நான் அந்தக் குடும்பத்தின் செல்லப் பெண்ணானேன்.

அவர்கள் யார்?

இலக்கிய உலகில் முத்திரை பதித்த இருவர். திரு. பாஸ்கரத்தொண்டைமான்; அவரது இளவல் கவிஞர் தொ.மு.ரகுநாதன்.

அவர்கள் இல்லத்திற்குத்தான் சென்றேன். இவர்களின் மூத்த சகோதரியின் மகன்தான் முத்து. முத்துவின் வீட்டில் ஒண்டி விட்டேன். அவர்களின் தாய்ப்பாசம் என்னை அக்குடும்பத்தில் ஒருவராக்கியது. அந்தக் குடும்பத்தில் கடைக்குட்டிப் பெண் சாவித்திரி. அவர்களை சித்தி என்று கூப்பிடுவேன். அவர்களே துரைrராஜ் வாத்தியாரின் மனைவியான பொழுது என் மகிழ்ச்சி எல்லை கடந்தது.

மாணவியாக இருந்த என்னை மெருகேற்றிய குடும்பம்

நல்ல தொடக்கம். இதுபோல் பல தமிழ் அறிஞர்கள் குடும்பங்கள் எனக்குக் கிடைத்தன.பயணத்தில் சந்திப்போம்.

துரைராஜ், பணியில் இருந்து கொண்டே படித்து உசிலம்பட்டி கல்லூரியில் முதல்வரும் ஆனார். புலமை மிக்கவர். தூத்துக்குடி இளம்பிறை மணிமாறன் இவருக்கு சுவீகாரத் தங்கை. இவரால் ராஜபாளையம் ஜகன்னாத ராஜா அவர்களும் கோதண்டம் அவர்களும் அறிமுகமானார்கள்.

இவரை எழுதச்சொல்லி எத்தனை கூறியும் அவர் எழுதாமல் விட்டது எங்களுக்கு வருத்தமே. இவர் பற்றி இன்னொரு தகவல் கொடுத்தால், பலர் புரிந்து கொள்வார்கள். தமிழகத்தின் தென்னகத்தில் அடிகளார் சாமி, சாலமன் பாப்பையா பட்டிமன்றக் குழுவில் தவறாது வந்துவிடுவார்.

இவரது தம்பி ராஜன் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. முன்னிலை வகிக்கும் எல்லா இதழ்களிலும் எழுதுபவர்; இப்பொழுதும் எழுதிக் கொண்டிருக்கின்றார். இவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்து சமீபத்தில் பணி ஓய்வு பெற்றவர். விலங்கினங்களைப்பற்றி ஆய்வு செய்து புத்தகங்கள் வெளியிட்டிருக்கின்றார். ராஜன் என் மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைபடுகின்றேன்

இளசை அருணா என்று இன்னொருவர்! கரிசல் மண் எழுத்தாளர்கள் பற்றி புத்தகம் வெளியிட்டிருக்கின்றார். எட்டயபுரம் பல எழுத்தாளர்களை உருவாக்கிய பூமி. அவர்களில் நானும் ஒருத்தி!

இளசை அருணா எனக்கு அனுப்பிய கடிதம்தான் பச்சைநிறத்தில் முன்பு இட்டிருக்கின்றேன். மீண்டும் பார்க்கவும். அதாவது, பாரதியே எனக்குக் கடிதம் எழுதியதைப் போன்று எழுதப்பட்ட கடிதம். கீழே இருக்கும் கையெழுத்து பாரதியினுடையது. எப்படி பெற்றார்கள் தெரியாது! அவர் கண்ட முதல் புதுமைப்பெண்ணாம் நான்! எனவே, வாழ்த்துக் கூறி எழுதப்பட்டிருக்கும். ஷேமம் விரும்பும் என்று இருக்கும். இது பாரதியின் எழுதும் முறை.

எட்டயபுரத்திலிருந்து உயர்நிலைப்பள்ளிப் படிப்பு முடித்த முதல் பெண் நான்!

பட்டப்படிப்பு முடித்து வந்த முதல் பெண்ணும் நான்.

பாரதி, சிவானந்தா படித்த பள்ளியில் படித்து அங்கேயே ஆசிரியைப் பணிக்கும் வந்த முதல் பெண் நான்.

அரசுப்பணியில் முதலில் நுழைந்த முதல் பெண்ணும் நான்.

பாரதியின் ஆசைப்படி துணிச்சலுடன் களத்தில் போராளியாக உருவெடுத்த முதல் பெண்ணும் நான்

ஆணுக்குச் சமமாக உழைக்க முடியும் , உயர் நிலை அடைய முடியும் என்பதற்கும் அந்த ஊராருக்கு முன்னோடியாக இருப்பவள் நாள்.

கிராமத்தில் வாழ்ந்து உலகில் பல நாடுகளை சுற்றிவந்தவள், இன்னும் சுற்றிக் கொண்டிருக்கும் பெண் நான்.

பாரதிக்குப் பெருமை இருக்காதா? அவன் நினைத்தான்; அவன் கண்ட முதல் புதுமைப் பெண் நான்!

பாரதி, எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் பாரதி!

உன்னை வணங்குகின்றேன். உன்மீது கோபம் வந்து பல முறை திட்டி இருக்கின்றேன்! என்னை மன்னித்துவிடு

எனக்கு சக்தி கொடுத்தவன் நீ!

நாணயத்திற்கு இரு பக்கங்கள்!

அவன் எழுத்துப்படி ஒரு பெண் வாழ்ந்தால் எப்படி அமையும் என்பதற்கும் எடுத்துக்காட்டு நான்; பொல்லாப் பெண்; அடங்காப்பிடாரி; சமூகத்தை மதிக்காத ஒரு கெட்டவள்; பெண்ணல்ல,ஒரு பேய்; பெண்மையின் நளினம் இல்லாத ஒரு பிச்சி!

பெற்றதும் நிறைய!

இழப்புகளும் நிறைய!

இளசை நாடு எட்டயபுரமானது. என் பிள்ளைப்பருவம் இங்கேதான் கழிந்தது. என்னை உருவாக்கிய கரிசல் மண்ணுக்கு வணக்கம்.

பள்ளிப்படிப்பு முடிந்து நான் கல்லூரியில் சேர்ந்தது தூத்துக்குடியில்! புனித மேரி கல்லூரி! அதைக் கொஞ்சம் பார்த்துவிட்டு என் “நினைவலைகள் “ காணச் செல்லப் போகின்றோம்.

படிப்பது எளிது; எழுதுவதும் கூட எளிது! ஆனால், செயல்படுவது எளிதல்ல!!

சமுதாய வரலாற்றைப் பார்க்கலாம்.

(ஊர்வலம் தொடரும்)

Wednesday, May 5, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 06

இலக்கியம் கற்பனையை அறிதல் முறையாகப் பயன்படுத்தி வாழ்வை மதிப்பிட முயலும் ஒரு துறை." ஜெயமோகன்

வாழ்க்கையைக் கற்பனைச்சிறகென்ற கோலினால் மெருகுபடுத்தி வரையும் ஓவியமே இலக்கியம்.

வாழ்வின் ஆதார உணர்வுகள் உயிர்ப்புடன் எழுதப்படும் பொழுது அவைகள் அழியாத்தன்மை பெறுகின்றது. அது எல்லோராலும் முடிவதல்ல.

வாழ்க்கையை ஊடுருவிக் காட்டிய ஒரு சிலரில் நம் ஜெயகாந்தனும் ஒருவர். எழுத்துக்களால் நம்மிடம் நெருக்கமாகிவிடுவர் படைப்பாளிகள்.

அவர்களைப் பார்க்க வேண்டுமென்பதோ, பழக வேண்டுமென்பதோ தேவையில்லை. நாம் ரசிப்பது அவர்கள் படைப்புகளை! சிலருக்குப் படைத்தவனுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும்பொழுது, அவனுடைய பல முகங்களையும் காண முடிகின்றது. இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால், எல்லா முகங்களும் அழகாய் இருக்கும் என்று உத்திரவாதத்துடன் சொல்ல முடிவதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையை இங்கு நான் குறிக்கவில்லை. அவர்கள் அந்தரங்கம் நமக்கு வேண்டாம். எழுதத் தெரிந்தவர்கள் சிலருக்குப் பேசத்தெரிவதில்லை. சிலர் பேசினால் இவரா இப்படி அருமையாக எழுதுகின்றார் என்று தோன்றும். ஆனால், மற்றும் சிலருடன் உரையாடும் பொழுது அவர் இன்னும் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தை உண்டு பண்ணிவிடுவார்கள். ஜெயகாந்தனிடம் நான் உணர்ந்தது இது.

என் தோழி ஒருத்தி சமகால எழுத்தாளர்கள் பெயர்களைக் கூறி அவர்களைப் பற்றியும் நான் எழுதப்போகின்றேனா என்று கேட்கின்றாள்.

நான் இங்கு யாரைப்பற்றியும் திறனாய்வு செய்யவில்லை என்று மீண்டும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். என் சமுதாயப் பணியில் நான் கண்ட பிணிகளைப்பார்த்த பாதிப்பில், ஓடிச்சென்று இளைப்பாறிய இடம் ஜெயகாந்தன் குடில்! பயணத்தில் சிலர் எட்டிப்பார்க்கலாம். அவ்வளவு தான்! ஆனால், ஒன்றை ஒப்புக்கொள்கின்றேன். 90 வரைக்கும் அநேகமாக தமிழகப்பத்திரிகைளில் வந்தவைகளைப் படித்திருக்கின்றேன். அதன்பின், தமிழகத்தைவிட்டு வெளியிடங்களில் வாழ வேண்டிய சூழலால் படிப்பது குறைந்துவிட்டது. விருப்பு, வெறுப்பு என்று என் படித்தலில் கிடையாது;எல்லாம் படிப்பேன். எப்படியும் ஒரு செய்தியாவது இருக்கும்.

சமுதாய அக்கறை உள்ளவன், எதையும் என்னவென்று பார்க்காமல் ஒதுக்கமாட்டான்.

"சில நேரங்களில் சில மனிதர்கள்"

இது கதையின் தலைப்பு.

ஒவ்வொருவனின் வாழ்க்கையிலும் அவனே கூட ஒவ்வொரு நேரத்தில் ஒரு விதமாக இருப்பான். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. இந்தத் தலைப்பை என்று பார்த்தேனோ அன்று முதல் அதை நினைக்காத நாளில்லை. இது உளவியல் ரீதியாக எனக்கு உதவி செய்தது. குற்றவாளிகளைக்கூட அவர்கள் செய்த தவறுகளாக நினைத்து அவர்களுடன் இயல்பாகப் பழக முடிந்தது. பெரியகருப்பனைப் போன்றவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

நான் பணிக்கு வந்த மறுநாள் ஒருவனால் கெடுக்கப்பட்ட ஒருத்தி எனக்குக் கூறிய அறிவுரை:

எல்லாரும் கெட்டவங்க இல்லே. ஆனா எப்போ கெட்டது செய்வாங்கன்னு தெரியாது.பெண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்."

படிப்பிலும் பதவியிலும் என்னைவிடக் குறைந்தவள்; ஆனால், அவள் கூறியதுதான் எனக்குக் கிடைத்த அரிய படிப்பினை.

இதே கருத்தை,“சில நேரங்கள் சில மனிதர்கள்," என்ற ஒற்றை வரியில் அழகாகச் செதுக்கியவர் நம் ஜெயகாந்தன். பொதுவாக ஒரு சிலரின் கதைத்தலைப்புகள் மனதைவிட்டு நீங்காது நிலைத்துவிடுகின்றன.

இன்னொரு தலைப்பு தி.ஜ.ராவின் “மோகமுள்." ஆனால், இதனைச் சேர்த்து நினைக்கவில்லை. மோகம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது என்ற உண்மை நெஞ்சில் முள்ளாய்த் தங்கிவிட்டது. ஏற்கனவே ஆணினம் மேல் இருந்த கோப உணர்வு, சமுதாயத்தில் சில அவலங்களைப் பார்க்கப் பார்க்க, ஆண் சிறுதப்பு செய்தால் கூட சீறும் குணம் வளர்ந்துவிட்டது. வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவள், கணவனால் கைவிடப் பட்டவள், ஆதரவற்ற பெண்கள் இவர்களுக்குப் புனர்வாழ்வு அமைத்துக் கொடுக்கும் பணி என்னுடையது. தினமும் அத்தகைய புகார்களைக் கேட்க வேண்டி வந்ததால் குற்றவாளிக் கூண்டில் ஆண் இனத்தை நிறுத்திப் பார்த்துவந்தேன். மோகம் என்பது பெண்ணுக்கும் உண்டு என்பதை அனுபவங்கள் காட்டிக் கொடுக்கவும் என் சீற்றம் குறைந்தது.

சின்னஞ்சிறு பெண்ணைக் குதறிவிட்டு, பின் கொன்று குப்பைத்தொட்டியில் வீசும் ஆணை எப்படி வெறுக்கின்றேனோ அதை விட வயதான ஒருத்தி பள்ளிப்படிப்புகூட முடிக்காதவனை விளையாட்டு என்று சொல்லிக் கெடுக்கும் பெண்னை அதிகமாக வெறுக்கின்றேன். இருவரையும் என்னால் மன்னிக்க முடியவில்லை.

ஏனோ திடீரென்று ஜெயகாந்தன் கதை படிக்க வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. அமெரிக்கா வரும்பொழுது எத்தனை புத்தகங்கள் தான் எடுத்துவருவது? ஆனால் ஜெயகாந்தன் புத்தகங்கள் மூன்று இருந்தன.

ஆனால் அவைகளைப் பார்க்க விரும்பாமல் கணினியில் மதுரைத்திட்டம் போய் என் பார்வையை ஓட்டினேன்.

யுகசந்தி

என் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது. அதற்குக் காரணம் உண்டு. முதலில் அந்தக் கதையைக் கொஞ்சம் சேர்ந்து பார்ப்போம்

பத்துவயதில் திருமணம், பதினாறு வயதில் விதவையான கௌரிப்பாட்டிக்குக் குழந்தை இருந்து பேரன் பேத்திகளும் இருந்தனர். ஆசாரவாழ்க்கை, அதாவது கட்டுப்பாடான வாழ்கை! காலம் சுழல்வதை யாராலும் மாற்ற முடியுமா? அவள் பேத்தி கீதா திருமணமாகி பத்து மாதங்களில் விதவையாகி பிறந்தகம் வந்து பாட்டியின் மடியின் முகம் புதைத்துக் கதறி அழுதபொழுது பாட்டி அவளை அரவணைத்துக் கொண்டாள். அதற்கு பாசம் மட்டும் காரணமல்ல. இறந்தகாலத்தின் நிகழ்காலப் பிரதிநிதியாய் அவளில் தன்னைக் கண்டாள்.

கீதா வீட்டிற்குள் முடங்காமல் படித்து, ஆசிரியர் தொழில் பார்க்க அயல் ஊருக்குச் சென்ற பொழுது பாட்டியும் உடன் சென்றாள். தன் மகனைக் காண கிராமத்திற்கு வந்த பொழுதுதான் அந்த செய்தியை அறிகின்றாள்.

விதவைப்பெண் கீதா மறுமணம் செய்து கொள்ளப் போகின்றாளாம். பிறந்தவீடு தன்னை ஒதுக்கிவிடும் என்பதை உணர்வாள். தனக்கு வாழ்வு வேண்டிச் செல்வதை மறைக்காமல், தெரிவிக்க வேண்டியதைக் கடமையாக நினைத்துக் கடிதம் அனுப்பியிருக்கின்றாள். மேலும் கூறுவதை அப்படியே ஜே.கே அவர்களின் வார்த்தைகளைக் கூற விரும்புகின்றேன்:

உணர்வுபூர்வமான வைதவ்ய விரதத்திற்கு ஆட்பட முடியாமல் வேஷங்கட்டித்திரிந்து, பிறகு அவப்பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணந்திருக்கின்றேன். ஆமாம், ரொம்ப சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத்ததிவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து தியாகம் செய்துவிட்டார்கள்! "

கீதா இப்படியாகி வந்தபிறகுதான் பார்வதி அம்பியையும் ஜனாவையும் பெற்றெடுத்தாள். அதற்கென்ன , அதுதான் வாழ்கின்றவர்களின் இயல்பு.

வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து சிதைந்து, மக்கி மண்ணாகிப் பூச்சி அரித்து அரித்துப்புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை கனவுகளை அவர்கள் அறிவார்களா?

மொட்டையடிப்பதை விடுத்துப் பின்னல்போட அனுமதித்தவர், வெள்ளைத்துணியை கலர்த்துணியாக உடுத்தும் பொழுது ஒத்துக் கொண்டவர், வாழ்வுக்கு ஏங்கும் இயல்பில் மட்டும் கலாச்சாரம் போய்விட்டதாகக் கத்தும் போலித்தனத்தை கௌரிப்பாட்டியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வீட்டில் எதிர்ப்பு வரவும், “நான் பிறந்த யுகம் வேறடா” என்று கூறிவிட்டு புதுயுகம் போய்விட்ட பேத்தியைக் காணப் புறப்பட்டுவிட்டாள்.

இரு யுகங்களின் சந்திப்பு நிகழ்ந்தது.


புதிய வார்ப்பு

இந்தக் கதையிலும் அதே இதயஒலியைக் கேட்கலாம்

பதினேழு வயது நிரம்பாத இந்துவிற்கு வேணு மீது காதல். அவனுடன் புறப்பட்டுவிட்டாள். விஷயம் தெரியவும் பெற்றவன் இருவரையும் பிடித்து விட்டான். வேணுவின் மேல் திருட்டுப் பட்டமும், சின்னப் பெண்னை ஏமாற்ற நினைத்த குற்றமும் சொல்லி சிறைக்கு அனுப்பினான். மகளையே காதலனுக்கு எதிராக பொய்சாட்சி சொல்லச் செய்தான். வேணு அரசாங்கச் சிறையில்; இந்துவும் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டாள். தினமும் சொல்லம்புகளால் காயப்படுத்தி அவளை நடைப் பிணமாக்கினான் தகப்பன். வாழவேண்டிய பெண் ஏக்கத்தில் தவிக்க, பெற்றவர்கள் எல்லா சுகங்களையும் அனுபவிக்க, இங்கும் மனப்போராட்டம். சிறையிலுருந்து திரும்பிய வேணு வரவும், அவனுடன் இப்பொழுது பயமின்றிப் புறப்பட்டு விட்டாள்.

இந்து வேணுவிடம் சொன்னது:

நாம் செய்தது, அப்ப செய்தது தப்பாக இருக்கலாம். அந்தக் காரியம் தப்பாப் போனதற்கே காரணம் நாம அதை அப்போ செய்ததுதான். நான் அப்போ என் வாழ்க்கையைத் தீர்மானிக்கற வயசிலே இல்லே. அதே காரியத்தை நான் இப்போ செய்யல்லேன்னா வாழ்க்கை கெட்டே போய்டும். எனக்கு வயசு வந்தாச்சு."

இவள் ஒரு புதிய வார்ப்பு.

இரண்டு கதைகளிலும் ஒரு காட்சியில் ஒற்றுமையைக் காட்டுகின்றது.

வீட்டில் வாழ முடியாமல் இருக்கும் பெண் இருந்தால் பெற்றவர்கள் கூடத் தங்கள் நெருக்கத்தைக் காட்டுவது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

எனக்கு வயது எழுபத்தைந்தாகிவிட்டது. நானே மூன்று நிலைகளைக் கண்டிருக்கின்றேன். நான் கிராமத்துப் பெண். எங்கள் காலத்தில் அப்பாவும் அம்மாவும் சேர்ந்தால்தான் பிள்ளை உண்டாகும் என்று தெரியாது. அம்மா வயிற்றில் இருக்கும் பாப்பா வருவதைக் கூட, “சாமி வருவார். அம்மா வயத்தை தொடுவார். டபக்குன்னு பாப்பா வந்துடும்.“ என்று கூறுவார்கள். கல்யாணமாகத பெண் வீட்டில் இருந்தால் பையன்களுக்குக் கூடத் திருமணம் செய்வதை ஆதரிக்க மாட்ட்டர்கள். முதலில் பெண்ணின் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பார்கள்.

அடுத்து வந்த காலம் “ரெண்டுகெட்டான் காலம்" என்று அவர்கள் பாணியிலேயே கூறலாம். சுழலின் தாக்கம் மனத்தில் ஏக்கத்தை உண்டாக்கியது. இந்தக்காலத்தில்தான் புதுமைப்பித்தன், தி.ஜ.ரா, ஜெயகாந்தன் போன்றவர்கள் மனப் புழுக்கத்தைச் சுற்றி அதிகமாக எழுதினர்.

இப்பொழுது பெண்ணிற்குச் சமாளிக்கத் தெரியும்.

ஒர் நிஜத்தை ஏற்கனவே உங்கள் முன் காட்டினேன். இதே சூழலால்,மனக் குமுறல் மட்டுமல்ல, நிலையான வருவாய் இருந்தும் விபச்சாரத்தைத் தொழிலாய் எடுத்த அந்தப் பெண் மட்டும் அப்படிப்பட்ட முடிவை ஏன் எடுத்திருக்க வேண்டும்? கண்ணியமான காதலன் கிடைக்கவில்லையா? கதைகளில் நல்ல நாயகனைக் காட்டிப் புதுயுகம் காட்டலாம்; ஆனால், வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. ஏற்கனவே வருவாய் இருக்கும் பொழுது ஒரு பெண் விபச்சாரத்தைச் சட்டென்று தன் தொழிலாக எடுக்க மாட்டாள். ஏதோ நடந்திருக்க வேண்டும்.

எனக்கு மிகவும் தெரிந்தவர் ஒருவர் மூலம் அவள் கதையறிந்தேன். நான் கேள்வி கேட்ட விதத்திலிருந்து என்னுடைய அக்கறையைப் புரிந்து கொண்டதால் பதில் கூறினாள்.

நான் ஒன்றும் அவளைக் கேட்கவில்லை. அந்த நிலையில் அதிகம் கேட்கக்கூடாது என்று எங்களுக்குச் சொல்லப் பட்டிருந்தது. அந்த நாள் சமூகசேவகி திருமதி.அம்புஜமாள் அவர்கள் எங்களுக்குக் கொடுத்த பயிற்சி; ஒருத்தி மனக்குமுறலுடன் முன்னால் வந்து நிராதரவாய் நிற்கும்பொழுது, கேள்விகள் கேட்கக் கூடாது

அவளே நொந்து போய் வந்திருக்கா;நீயும் குதறாதே! முதல்லே உள்ளே கூட்டிண்டு போய் சாப்பிடச் சொல்லு. தூங்கட்டும் ரெண்டு நாள் ஆனா அவளே சொல்லுவா."

அந்தக்காலத்தில் எங்களுக்குக் கிடைத்த வழிகாட்டிகள் மிக உயர்ந்தவர்கள். பெயருக்காக “சமூகசேவை" என்று சொல்கின்றவர்களல்ல!

என் துறையைச் சேர்ந்த பிரச்சனைகளை மட்டும் தீர்ப்பதுதான் என் வேலை என்று நினைப்பவள் இல்லை. எங்கு துயர் கண்டாலும் முடிந்தமட்டில் தீர்க்க முயல்வேன்.

விசாரணை செய்த என்னால் அவளுக்கு மாப்பிள்ளை தேடி திருமணம் செய்து வைக்க முடியாது. ஆனால், ஏதாவது ஓர் தீர்வு காண வேண்டும்

இது கதையல்ல; விருப்பப்படி முடிவு செய்து விட முடியாது! ஆனாலும் ஏதாவது செய்யவேண்டும். எனக்குத் தோன்றிய வழி ஒன்று தான்

உனக்கு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கித் தருகின்றேன். அங்கே உனக்குப் புதுவாழ்வு கிடைக்கலாம். அப்பா, அம்மா பத்தி கவலை வேண்டாம். பட்டுத் திருந்தட்டும். உன்னால் முடிந்த அளவு பணம் மட்டும் அனுப்பு. பொறுப்பைத் தலையில் சுமக்க வேண்டாம். இந்த வாழ்க்கை வேண்டாம்மா.

நான் கூறியதை கேட்டவுடன் ஓவென்று அழுதாள். அது நிஜ அழுகை. அவள் விடும் கண்ணீர், ஏதோ ஓர் வெறுப்பில் இந்த அவலவாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருப்பாள் எனத் தெரிந்தது. அவளை அணைத்துக் கொண்டேன். மார்பில் முகம்புதைத்து அழுதாள். அவளுக்கு அப்பொழுது அந்தத் தாய்மைப் பரிவு தேவையாக இருந்தது. இடம் மாறினால் அவளுக்கும் புதிய வாழ்வு கிடைக்கலாம். எல்லாம் ஓர் நம்பிக்கைதான். வாழ்க்கையின் அச்சாணிதானே நம்பிக்கை.

என்னால் பிரச்சனைகளை விட்டு ஓடமுடியாது. எப்பொழுதும் வெற்றி கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. ஆனால், முயற்சி செய்யாமல் விடமாட்டேன்.

நான் கதாசிரியர் அல்ல; சமூகத்தில், அதன் நலம்விரும்பும் ஓர் போராளி! செயலில் இறங்க வேண்டும்.


ஆமாம், யுகசந்தி என்ற தலைப்பைப் பார்க்கவும் சிரித்தேனே! காரணம் தெரிய வேண்டாமா?

அது ஒரு வேடிக்கையான சம்பவம். அடுத்து கூறுவேன்.

(தொடரும்)

நன்றி: திண்ணை