Saturday, June 26, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 11

கங்கா!

அக்கினிபிரேவசத்தில் குளித்து எழுந்தவள்; சில நேரங்களில் சில மனிதர்களால் பாதிக்கப்பட்டவள்; பாதையில் வந்த கார் சவாரியால் வாழ்வைப் பறி கொடுத்தவள். அவளைக் கொஞ்சம் பார்க்கலாமே!

கதையை ஆய்வு செய்தவர்கள் நடந்த சம்பவத்தை கங்கா வெறுக்கவில்லை; அவன் கொடுத்த சுயிங்கத்தைக் கூடத் துப்பவில்லை என்று நுண்ணியமாக அலசி இருக்கின்றார்கள். அவள் ரெண்டுங்கெட்டான் நிலைக்கு எத்தனை விமர்சனங்கள்!

"அக்கினி பிரவேசம்," சிறுகதையின் நீட்சிதான் "சில நேரங்களில் சில மனிதர்கள்." எழுத்துலகில் இத்தகைய அமைப்பு புதிதல்ல. ஆங்கிலத்தில் நிறையவே உண்டு; தமிழில் கொஞ்சம் வித்தியாசமானது.

கல்கியின் "பார்த்திபன் கனவி"லிருந்து பூத்தவை "சிவகாமியின் சபதமும்" "பொன்னியின் செல்வனும்." பார்த்திபனின் கனவிலே பொன்னியின் புதல்வர் தன்னைப் புதைத்துவிட்டார். தன் மண்ணின் கதையை தமிழனின் பொற்காலமாகக் காட்டி மகிழ்ந்தார்.

இராஜ இராஜன் ஓர் சிறந்த மன்னன் என்பதில் கருத்து மாறுபாடு யாருக்கும் கிடையாது. ஆனால் அடுப்பங்கரை மாமி கூட வரலாற்றை நிமிரிந்து பார்க்க வைத்தவர் கல்கி.

சிற்பக் கூடத்தில் சிலைகளோடு சிலையாகி, அந்த மன்னனின் மனிதக் காதலுக்கு அப்பொழுதே வித்திட்டு சிவகாமியின் சபதம் பிறக்கச் செய்தார்.

அக்கினி பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்களாகி , பின்னர் கங்கை எங்கே போகின்றாள் என்று கங்காவுடன் பயணம் செய்தவர் ஜெயகாந்தன். அந்த அளவு கங்கா பாத்திரம் அவரை ஆட்கொண்டிருந்தது.

வீதியில் நடந்தது ஓர் விபத்து. உடன் பிறந்தவன் அவளைக் கீழ்த்தரமாகப் பேசி விரட்டுகின்றான். “சொல்” என்பது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஓர் ஊர்தி. மனிதன் அதனை எப்படியெல்லாம் கையாளுகின்றான்!

கார்லாவின் அப்பாவால் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் மனம் காயப் படுகின்றது. வழி நடத்த வேண்டிய கன்னிமார்களும் காயத்தைப் புண்ணாக்குகின்றார்கள். அந்தப் புண் புரையோடவும் புத்தியின் தெளிவு
பாதிக்கப்பட்டு விடுகின்றது.

துறவறம் போயும் அவள் உணர்வுகள் அவளைத் துரத்துகின்றன. அன்பு காட்டும் கணவன் கிடைத்தும் நல்ல வாழ்க்கையில் மனம் ஒட்டவில்லை. அந்த அளவு சொற்களாலும் காட்சிகளாலும் சுழற்றப்பட்டு, சமுதாயத்தால் வெறுக்கப் படும் ஓர் குழியில் விழுகின்றாள். மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த நான்கு நிலையிலும் அவள் அமைதி காண முடியாது அச்சத்தின் பிடியில் சிக்கியதில் அவள் வாழ்க்கை சிதைகின்றது.

கங்காவுக்கு ஆதரவு கரம் நீட்டுகின்றார் அவள் மாமன். அந்த மாமனோ சபலப் புத்திக்காரன். அவன் பார்வையால் அவளை நிர்வாணப்படுத்தி ரசிக்கும் ஓர் கிழவன். அவன் தொடலிலும் தடவலிலும் உடல் நெளிந்து மனம் குமைந்து வாழ்ந்து எப்படியோ படித்து முடிக்கின்றாள்.

உரம் வாய்ந்த பெண். அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடிந்ததே!

அவளுக்கு நல்லதொரு வேலையும் கிடைத்துப் பெரிய பதவியிலும் அமர்கின்றாள்.

ஓர் நிர்வாகிக்குத் தெளிவும், உறுத்திப்பாடும் தேவை. குழப்பமன நிலையில் உள்ளவர்களால் சீரிய முறையில் நிர்வாகம் செய்தல் இயலாது. நான் ஒரு நிர்வாகியாக இருந்தவள்.

கங்கா எப்போது, எப்படி முட்டாளானாள்?

பிரபு மணமாகி, தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றான். அவனுடன் பழக்கம் ஏற்பட்டால் பாசம் வளரும். ஆனால் வாழ்வு கிடைக்காது. இப்பொழுது வெறும் வடு மட்டும் இருக்கின்றது. ஆனால் பிரிவும் ஏமாற்றங்களும் ஏற்படும் பொழுது ஆழமான புண் ஏற்படுமே! இது தெரியாத முட்டாள் பெண்ணா கங்கா?துன்பத்தை விலை கொடுத்து வாங்குவார்களா? கங்கா அந்த எல்லைக்கு எப்படி தள்ளப்பட்டாள்?

சபல மாமாவின் அசிங்கப் பார்வையும், அடிக்கடி அவர் தொடல், தடவல்களும் தாங்கிய காலத்திலும் மனம் படிப்பில் ஒன்றி இருந்தது. பஸ் பயணத்தில் வக்கிரமனம் படைத்த ஆண்களின் சேட்டைகளில் அவள் படும் அருவருப்பும், உடன்பிறந்த அண்ணனையும் அந்த வரிசையில் சேர்த்து நினைக்கும் கங்கா, சபல மாமாவின் செய்கைகளால் உடலில் பூரான் ஊறும் உணர்வுகளோடு அவ்வீட்டில் வாழ்கின்றாள். மனம் தளராது படித்து முடிக்கின்றாள். அப்படிப்பட்டவள் ஏன் தோல்வியை நோக்கிப் போகின்றாள்?

மனித மனம்! கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்!

சபலமாமாவின் கொடிய நாக்கு அவளைச் சீண்டுகின்றது. சொற்கள் கத்தியைவிடக் கூர்மையானது.

உன்னைக் கெடுத்தவனைத் தேடிக் கண்டுபிடி!” என்ற எகத்தாளமான சொற்கள் அவளை விரட்டி விடுகின்றது. அவள் தேடலில் கெடுத்தவனையும் கண்டு பிடித்து விடுகின்றாள். அப்புறம் என்ன செய்ய? அதற்கும் மாமனின் சீண்டலும் குத்தலும் சொற்களாக வந்து அவளைத் துரத்துகின்றது.

"நீ அவனுக்கு பொண்டாட்டியாக முடியுமா? கான்குபைனாகத்தான் இருக்க முடியும்!"

கெட்டிக்கார கங்காவை அவர் சொற்களால் கொன்று விடுகின்றார்.

பிரபுவுடன் பழகுகின்றாள். அலுவலகத்தில் “மை மேன்” என்று கூறி மகிழ்கின்றாள். அவன் பிரிய முடிவு செய்த பொழுது வலுவில் அவள் தன்னையே கொடுக்கத் தயாராகி விடுகின்றாள். தடுமாற்றம்!

பிரபுவோ அவளை நெருங்காமலேயே பிரிந்து சென்று விடுகின்றான். அவன் குடித்து வைத்துச் சென்ற கப் முன்னால் இருக்கின்றது.

கல்ப் இட்!” என்ற சொற்களோடு மலைத்து நின்று விடுகின்றாள்.

மனித பலஹீனங்களை மறுக்கவில்லை. கெடுத்தவனைத் தேடிப் போவதும், தெரிந்தும் ஏமாறுவதும் , கங்காவின் பாத்திரப் படைப்பை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அந்தக்காலம் என்று மிகவும் பின் செல்லக் கூடாது. 56ல் நான் சமுதாயப் பணிக்கு வந்து விட்டேன். ஆனால் முற்றிலும் ஒதுக்கவும் முடியவில்லை

என் குடும்பத்திலேயே ஓர் அவலம் நடந்தது!

அவளுக்கு 17 வயது. தந்தை கிடையாது. தாயோ மாமன் வீட்டிற்குச் சென்று விட்டாள். இவள் தன் சித்தியின் வீட்டில் தங்கி இருந்தாள். அப்பொழுது ஒருவன் அவளுக்குக் காதல் கடிதம் எழுதிவிட்டான். கோபக்கார சித்தப்பா அவளை அடித்திருக்கின்றார். அந்தப் பெண் மனமுடைந்து கிணற்றில் விழுந்துவிட்டாள். உடனே அவளைத் தூக்கி காப்பாற்றி இருக்கின்றார்கள். ஊரார் முன் கேவலப் படுத்திவிட்டாள் என்று இனிமேல் வைத்துக் கொள்ள முடியாது என்று அவளை என் வீட்டிற்குக் கொண்டுவந்து விட்டுச் சென்று விட்டார்கள்!

அவளை அதற்கு முன் நான் பார்த்ததே கிடையாது. அவள் 18 வயது முடியாத நிலையில் வேறு ஒரு விதிப்படி ஒரு வேலையில் அமர்த்திவிட்டேன். இது நடந்தது 63ல். அவள் சோதனைக் காலம் முடிந்தது. திருமணமாகி இப்பொழுது பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றாள்.

காலம் மாறிக் கொண்டே இருக்கின்றது

கங்கா நன்றாகப் படித்து, உயர் பதவியிலும் அமரவிட்டு தன் மன உறுதியை இழப்பது என்பது என் மனத்திற்குப் பொருந்தவில்லை

இந்தக் காலத்துப் பெண்கள் வேறு வழியில் வாழ்க்கையைத் தேடிக் கொள்வார்கள். அவள் படிப்பிற்கும் பதவிக்கும் புதிய வாழ்க்கையைப் பெற்றிருக்க முடியும்!

கதையின் உரையாடல்கள் சக்தி வாய்ந்தவை.
இப்படியும் மனிதர்கள் என்று மனத்தைச் சமாதானம் செய்து கொள்ளலாம். சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படியும் இருக்கலாம்!

ஜெயகாந்தனுக்கு கங்காவின் மீது ஓர் ஈடுபாடு! அக்கினி பிரவேசம் விரிந்து, சில நேரங்களில் சில மனிதர்களைப் பார்த்து கங்கா எங்கே போகின்றாள் என்று தொடர்ந்தார். ஆனால் மூன்றவதில் அத்தனை சுவாரஸ்யம் இருக்கவில்லை

சொற்கள்! ஜெயகாந்தனின் சொற்கள் சுடுகின்றன. அவருடைய வேகத்தில் பாத்திரங்களை வைத்து பொம்மலாட்டம் ஆடுகின்றார்

அழிக்க முடியும் சக்தி வாய்ந்த சொற்களால் ஆக்கவும் முடியும்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு
மனிதன் நா காப்பதில்லை

இரு சம்பவங்களைக் கூற விரும்புகின்றேன்! அமெரிக்காவிற்கு முதன் முறை சென்ற பொழுது நடந்த ஒரு சம்பவம்! மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மார்ஷல் என்ற ஒரு சிறிய இடம். அங்கு என் மகன் வேலை பார்த்து வந்தான். அவர்கள் குடியிருந்த இடம் அடுக்கு கட்டத்தில் ஒரு பகுதி. அதே கட்டடத்தில் அலீசியா என்ற ஓர் அமெரிக்கப் பெண் என் மருமகளுக்கு சிநேகிதியானாள். அவள் கணவர் பிராட் ஒரு பத்திரிகை நிருபர். எங்கு சென்றாலும் நிருபர்களின் சிநேகம் எனக்குக் கிடைத்துவிடும். அவர்களுக்கு சேய்ரா என்று இரண்டு வயது பெண் குழந்தை. அலீசியா ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தாள். ப்ராட் மாலை நேரத்தில் தன் மகளுடன் வீட்டிற்கு முன் இருக்கும் புல்வெளிக்கு வருவான். குழந்தை அங்கே விளையாடிக் கொண்டிருக்கும். நாங்கள் இருவரும் அங்கே உடகார்ந்து உலகச் செய்திகளை அலசுவோம்!

திடீரென்று ஒரு நாள் என் மருமகள் கவலையுடன் அலீசியா தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாகக் கூறினாள். இருவரும் நல்லவர்கள். எங்கே இந்த பிரச்சனை முளைத்தது? காதலும் திடீரென்று வரும்;கல்யாண முறிவும் அப்படியே.

அன்று மாலை பிராடுடன் பேசும் பொழுது எங்கள் இலக்கியம் என்று ஆரம்பித்து சிலப்பதிகாரம் கதை சொன்னேன். கண்ணகியின் வாழ்க்கை அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. வேறொரு பெண்ணுடன் சென்று பல ஆண்டுகள் வாழ்ந்துவிட்டுத் திரும்பிய கணவரை ஏன் ஏற்றுக் கொண்டாள் என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.

தமிழர் வாழ்வில் காதல், கற்பு பற்றி விளக்கினேன். பார்வைகளின் சங்கமமோ, ஈர்ப்போ காதலாகி விடாது என்றேன். அது காதலின் தொடக்கம். ஆழமான காதல் கொண்டவர்கள் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்வார்கள் என்றேன்.

சின்னப் பிரச்சனைக்கும் பிரியும் தம்பதியர் பெரிதாக எந்த வாழ்க்கையைப் பெற்றுவிட முடியும்? அப்படி ஓடுகின்றவர்களும் ஓரிடத்தில் நின்று விடுகின்றார்கள். அப்பொழுது சமரசம் செய்து கொள்ள முடிகின்றவர்கள் ஆரம்ப வாழ்க்கையிலேயே ஒத்துப் போய் வாழ்ந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு சீராக இருக்கும். இந்திய மண்ணில் தம்பதிகளுக்குள் பிணக்கு இருப்பினும் ஓர் பாசப்பிணைப்பில் கட்டுண்டு வாழ்வார்கள். நான் சொல்லச் சொல்ல என்னைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான்

காதலுக்குப் புதுப் புது விளக்கங்கள் கூறினேன். சொற்களை வைத்து விளையாடினேன். காதல் அற்புதமானது. அதைப் பேணிக்காப்பத்தில்தான் அதன் வலிமை வளரும். உதறிக் கொண்டிருந்தால் காதல் நைந்துவிடும். பாதுகாக்கப்படும் காதலின் சுகமே தனி. அப்பப்பா, என்னவெல்லாமோ பேசினேன். என் இலக்கு அவர்கள் பிரியக் கூடாது;அவ்வளவுதான்.

இருட்டவும் இருவரும் எழுந்து சென்றோம்.

இரவு ஏழு மணிக்கு அலீசியாவும் பிராடும் வந்தார்கள். அவளிடம் ஏதோ ஒரு படப்படப்பு இருந்தது. என்னிடம் கண்ணகி கதை கேட்டாள். அத்தனை ஆண்டுகள் கணவன் வரவில்லையென்றால் டைவர்ஸ் செய்திருக்கலாமே என்றாள்.

கண்ணகி கோவலனை டைவர்ஸ் செய்வதா? கற்பனையில் மகிழ்ந்தேன்! பத்தினிக்குக் காப்பியம் எழுதிய அடிகளார் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

திலகவதி கதை சொன்னேன். திருமணம் மட்டும் நிச்சயிக்கப் பட்டிருந்தது. போருக்குச் சென்ற இடத்தில் மாண்டு போனார். மணமாகாவிட்டாலும் மணம் பேசி முடித்தவரை எண்ணி திலகவதி தனித்தே வாழ்ந்த கதை கூறவும் அவர்களுக்குப் பிரமிப்பு வந்தது. காதல் என்பது உதட்டளவில் ஏற்படுவதல்ல. ஒருவரையொருவர் உண்மையாகக் காதலித்திருந்தால் அவர்களால் பிரிய முடியாது என்றேன். ஏதேதோ சொன்னேன். எனக்கு இலட்சியம் எப்படியாவது அவர்கள் பிரிந்துவிடாமல் இருக்க ஓர் முயற்சி செய்ய வேண்டும்.

மவுனமாக எழுந்து சென்றனர். மறு நாள் மீண்டும் வந்தனர். முகத்தில் ஓர் தெளிவு. அவர்கள் விவாக ரத்து செய்து கொள்ளப் போவதில்லை என்ற தீர்மானத்தைக் கூறினார்கள்.

இந்தத் தீர்மானம் நிரந்தரமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. முடிவு ஒத்தி போடப்பட்டது. அவ்வளவுதான். இன்னும் கொஞ்ச நாட்கள் குழந்தைக்கு அப்பா, அம்மா சேர்ந்து இருப்பார்கள். இங்கே சொற்களின் விளையாட்டு ஆக்க பூர்வமான ஓர் காரியத்திற்கு உதவியது.

மூன்று வருடங்களுக்கு முன் இந்தியா வந்திருந்த பொழுது ஓர் சம்பவம் நடந்தது. கணினி அனுபவம் கிடைத்த பிறகு எனக்கு நிறைய பிள்ளைகள் கிடைத்துவிட்டார்கள். அவர்களில் ஒருவன் நான் சென்னைக்குச் செல்லவும் தொலை பேசியில் கூப்பிட்டான்.

அம்மா, உங்களிடம் ஒரு அபிப்பிராயம் கேட்கவேண்டும். லிவ்விங் டுகெதெர் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? “

கேள்வி கேட்டவனுக்கு வயது இருபத்தி மூன்று. பதில் கூற வேண்டியவரின் வயது எழுபத்திரண்டு.

இது கிண்டல் கேள்வியா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட பிறகு கிழவி எப்படி பதில் சொல்லுவாள்?

"பாவி, நீ உருப்படுவியா? இந்த வயசுக்கு இப்படி ஒரு புத்தியா?"

நான் இதை எப்படி அணுகினேன் என்பதை அடுத்து கூறுகின்றேன்

சொற்களின் அருமை தெரிந்து நல்லபடியாகப் பேசலாமே!

(தொடரும்)

நன்றி -திண்ணை

Thursday, June 17, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு- ஜெயகாந்தன் 10

சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று ஏறத்தாழ ஓராண்டு காலம் வசிக்க நேர்ந்தது. சிட்னியில் தங்கி இருந்தேன். சிட்னி-ஒரு காலத்தில் திறந்தவெளி சிறைச்சாலை!

பல்லாயிரக் கணக்கான பெண் கைதிகள் இறக்குமதி செய்யப்பட்டனர். அங்கே பணி செய்ய மட்டுமல்ல, வேலை செய்பவர்கள் முதல் கைதிகள் வரை அங்கே இருந்த ஆண்களின் இச்சையைத் தீர்க்கவும் பணிக்கப்பட்டு விபச்சாரிகள் என்ற ஒரு புதிய சமூகத்தையும் உண்டு பண்ணிய வரலாற்றுச் செய்தியை சிட்னி பெற்றிருக்கின்றது. இச்செய்தியை மறுப்பவரும் உண்டு. பெண்களை அதற்காகத் தருவிக்கவில்லை என்ற கூற்றும் உண்டு. எதுவானால் என்ன, வந்த பெண்களின் வாழ்க்கை மாறியதென்னவோ உண்மை. கலங்க வைக்கும் கதைகள் நிறைய உண்டு.

ஓர் நாட்டை அடைந்தவுடன் நான் போக விரும்பும் இடம் நூலகம். அந்த நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முயல்வேன். சமுதாயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வரலாற்றில் தெளிவு வேண்டும் என நினைப்பவள் நான்.

வழக்கம்போல் சிட்னியிலும் நூலகம் சென்றேன். புத்தகங்களைப் பார்த்து வரும் பொழுது என்னைக் கவர்ந்து இழுத்தது ஓர் புத்தகம். அதன் தலைப்பு என்னைத் திடுக்கிட வைத்தது. புத்தகத்தை கையில் எடுக்கவும் சட்டென்று நான் அக்கம் பக்கம் பார்த்தேன்.

சே, நானும் அவ்வளவுதானா?

இது ஒரு அனிச்சை செயல் என்றாலும் என் செயல் எனக்குப் பிடிக்கவில்லை. சில நேரங்களில் சிலரில் நானும் ஒருத்தியாய் உணர்ந்தேன்.

கையில் உள்ள புத்தகத்தைப் பார்த்து சிலர் மதிப்பீடு செய்வார்கள்.

அமெரிக்காவிற்கு முதன் முறையாகச் சென்ற பொழுது அங்கிருந்த நூலகம் சென்றேன். அங்கிருந்த பொறுப்பாளர் என்னை அழைத்துச் சென்ற இடம் இறைவன், தத்துவங்கள் பற்றிய புத்தகங்கள் இருக்கும் பகுதிக்கு. என் வயதைப் பார்த்து நான் படிக்க வேண்டியவைகளை அந்த அம்மா தீர்மானித்தது.

ஒரு பார்க்கிற்கு என் மருமகள், பேரக் குழந்தைகளுடன் சென்றிருந்தேன். அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது நான் எடுத்துச் சென்றிருந்த புத்தகத்தைப் பார்ப்பதும், கொஞ்சம் வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தேன். அப்பொழுது என்னருகில் ஒரு பெண்மனி வந்து உட்கார்ந்தார். என் கையில் இருந்த புத்தகம் டேனியல் ஸ்டீல் எழுதிய புத்தகம். அதைப் பார்க்கவும் அந்த அம்மாளின் முகத்தில் புன்னகை. தொடர்ந்து டேனியல் ஸ்டீல் பற்றி ஒரே புகழாரம்.

இன்னொரு இடத்தில் வேறு புத்தகம் எடுத்துச் சென்றிருந்தேன். யாரும் அந்த புத்தகம்பற்றி எதுவும் பேசவில்லை. நம்மூர் எழுத்தாளர் லட்சுமி போல் குடும்பக் கதைகளால் பெண்கள் மனத்தைக் கவர்ந்தவர் டேனியல் ஸ்டீல். ஆக உலகத்தில் எப்பகுதியாயினும் அவர் வாசிக்கும் புத்தகத்திலிருந்து ஒருவரை மதிப்பீடு செய்யும் புத்தி மட்டும் பொதுவாக இருப்பதைப் பார்த்தேன். அந்த நினைப்பில் தான் சிட்னியில் புத்தகத்தை கையில் எடுக்கவும் என்னையும் அறியாமல் அக்கம் பக்கம் பார்க்கத் தோன்றிவிட்டது.

அந்தப்புத்தகம் தான் GODS CALL GIRL

வீட்டிற்கு எடுத்துச் சென்றவுடன் படிக்க ஆரம்பித்தவள் அதனில் அப்படியே ஆழ்ந்து போனேன்.

கார்லா என்ற ஓர் விலைமாதின் சுய சரிதை. தங்கு தடையின்றி நடை சென்றது. சொல்லியிருந்த விதம் எவரையும் ஈர்க்கும். கொச்சையாக எதையும் எழுதவில்லை. சரியா தவறா என்று வாசகர்களைக் கூட நினைக்க விடாமல் சேர்ந்து பயணம் செய்ய வைத்து முடிவில் அவளுடன் உட்கார வைத்துவிடுகின்றாள்.

கதையின் சுருக்கம் பார்ப்போம்.

கான்வென்ட்டிலுருந்து பாலியல் தொழிலுக்குச் செல்லும் ஓர் பெண்ணின் பயணம். ஹாலண்டில் பிறந்து பன்னிரண்டு வயதில் மெல்பர்ன் வந்த ஒரு பெண்ணின் கதை.

உடன்பிறந்தவர்கள் பலர். தாய் ஒரு ஆசிரியை. கத்தோலிக்க மதம். அவளுடைய ஆறுவயதில் அவளைப் பெற்றவனால் அவள் கெடுக்கப்படுகின்றாள். கெடுத்தபின் அவளிடம் “யாரிடமும் சொல்லாதே! ஜீசஸுக்குப் பிடிக்காது. “என்று கூறி பயமுறுத்தினான். இது ஒரு நாள் கூத்து இல்லை. இது தொடர்ந்து நடந்தது.

பெற்றவள் வாழ்ந்த உலகம் வேறு. அவளுக்கு அவள் கணவனைத் திருப்திப் படுத்த வேண்டும். அதுதான் கடவுளுக்குப் பிடிக்கும் என்று அவளுக்குச் சொல்லப் பட்டிருந்தது. குழந்தைகள் கூட பாவத்தின் சின்னங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கணவனைத் திருப்தி படுத்துவது ஆண்டவனுக்குப் பிடித்தமான ஒன்று. அவள் அம்மா வாழ்ந்த வழி அது.

நாம் தமிழ் கலாச்சாரம், இந்திய கலாச்சாரம் என்று சொல்வது உலகத்தில் பெண்ணுக்குப் பொது விதி. காலம் மாற மாற பல இடங்களில். அவள் நிலையில் மாற்றங்கள் சிறுகச் சிறுகத் தோன்றி விட்டன.

இப்புத்தகத்தில் எழுதப் பட்டிருந்த இன்னொரு செய்தி கூட வியப்பை அளித்தது. ஆண், பெண்ணின் கூடல் பிள்ளை பெறுவதற்காக மட்டும் என்ற கொள்கைபற்றியும் எழுதியிருக்கின்றாள். அமெரிக்காவிற்குப் பின் தான் ஆஸ்திரேலியாவின் உதயம். புலம் பெயர்வது என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; அவன் வரும் பொழுது அவன் தங்களிடம் உண்டாக்கிய கலாச்சார மூட்டைகள், நம்பிக்கை எல்லாம் கொண்டு சென்றிருக்கின்றான்.

கார்லாவின் அம்மாவைப் பார்க்கலாம் அம்மாவின் அன்போ அரவணைப்போ இல்லை. தன் கணவன் தான் உலகம் என்ற வாழ்க்கை. இத்தனைக்கும் படித்தவள். பள்ளி ஆசிரியை.

சின்ன வயதில் சீரழிக்கப்பட்ட பெண் கார்லா. படிக்கப் போன இடம் கான்வென்ட். அங்கும் அவளுக்கு கிடைத்த அனுபவம் கசப்பானது.

கண்டிப்பு நிறைந்த ஆசிரியை. அவரும் ஓர் கன்னியாஸ்த்ரி. வகுப்பறையில் சில கண்கள் வரையப் பட்டிருந்தன. ஜீசசின் கண்களாம், பாவம் செய்கின்றார்களா என்று பார்க்கும் கண்களாம்..கடவுளின் பார்வை கூட அவளுக்கு அச்சமளித்தது. அன்பே உருவான கடவுளை அச்சப்படுத்துபவராக அவளுக்கு அடிக்கடி காட்டப்பட்டது.

முத்தமிட்டால் கர்ப்பம் தரித்துவிடும் என்றார் ஒரு சிஸ்டர்.

கார்லா தன்னைக் குற்றவாளியாக நினைத்தே ஒவ்வொரு வினாடியையும் கழித்தாள். அச்ச உணர்வில் அமைதி இழந்தாள்.எதற்காக ஈடன் தோட்டத்தையும் தோற்றுவைத்து, அங்கு சாப்பிடக் கூடாத கனியையும் ஏன் இறைவன் தோற்றுவித்தான்?. அத்தனை கேள்விகள் பிறந்தன. பதில் கிடைக்கவில்லை. கேள்விகள் மட்டும் கூடிக் கொண்டிருந்தன.

அன்பையும் அமைதியையும் தேடி அவள் கன்னி மாடத்தில் சேர்ந்தாள். அங்கும் அமைதி கிட்டவில்லை. அந்த வாழ்க்கையில் ஒட்டவில்லை.

அங்கிருந்து ஓடுகின்றாள். புகலிடம் தந்தவனை மணக்கின்றாள். ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகின்றாள். இந்த நிலையில் அவளுக்கு ஒருவனிடம் காதல் பிறக்கின்றது. கணவனைப் பிரிந்து காதலனுடன் வாழ்கின்றாள். அந்த வாழ்வும் நிலைக்கவில்லை. ஓர் விபத்தில் காதலன் மரிக்கின்றன். மனமுடைந்து போகின்றாள்.

விபச்சாரத் தொழிலில் இருக்கும் ஓர் ஏஜண்டிடம் வேலைக்குச் சேர்கின்றாள். நாளடைவில் அவளும் அத்தொழிலில் இறங்கி விடுகின்றாள். அதன் பின் அவள் வாழ்க்கையில் மாறுதல் இல்லை. வயதாகும் வரை அத்தொழிலில் இருந்து பின்னர் தன் மகள் குடும்பத்துடன் தங்கி இருக்கும் ஊருக்கே வந்து வாழத் தொடங்குகின்றாள்.

எச்சூழ்நிலையிலும் அவள் மனம் மட்டும் கேள்விகள் கேட்பதை நிறுத்தவில்லை.

அவள் உணர்வுகளை அவள் சொல்லுவதிலிருந்து பார்ப்போம். அவள் விரும்பிய அன்பு அவளுக்குக் கிடைக்கவில்லை

“நான் இயல்பானவளாக மாறுவேனா? என்ன முயன்றும் என் உணர்வுகளை மூளையிலிருந்து விடுவிக்க முடியவில்லை. அது எலாஸ்டிக் போன்று திரும்பத் திரும்ப வந்து ஆட்டிப் படைக்கின்றது.”

ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுக்க அறிவுரைகள் கிடைக்கின்றன.

அவளும் மனத்தைத் திருப்ப நினைக்கின்றாள். ஆனால் மனமோ அவள் கட்டுப்பாட்டில் இல்லை.

தன்னை ஏதோ ஒர் கெட்ட சக்தி இப்படி இழுத்து வந்ததாக நினைக்கின்றாள்.சிறுவயதில் ஏற்பட்ட கசப்பு அனுபவங்களின் தாக்கம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. அவள் பயணத்தில் இறைவனின் எண்ணத்தையும் உடன் சுமந்தாள்.

உள்ளுக்குள் இருக்கும் சின்னப் பெண் எழுந்து அவளுக்கு ஆறுதல் கூறுகின்றாள்.இந்த மனப் போராட்டத்தில் காலம் ஓடிவிடுகின்றது. ஆனால் எப்படியோ பக்குவம் வந்துவிடுகின்றது. எழுத ஆரம்பிக்கின்றாள்.

ஜெயகாந்தனின் ராசாத்திக்கு இத்தகைய ஆராய்ச்சிகள் கிடையாது. ஒரு பிடி சோறு வேண்டும். வேலை கிடைத்த நேரம் கல்லைச் சுமந்தாள். அது கிடைக்காத போது மனிதனை நாடினாள். அவள் ஒரு குடிசை வியாபாரி. தத்துவங்கள் அவள் நினைவில் தோன்றாது. அது ராசாத்திக்கு வியாபாரம்.

கிரிஜாவின் நிலை வேறு. கொஞ்சம் படித்தவள். செங்கல் வீட்டில் குடியிருக்கின்றாள். அவளுக்குத் தேவையான பொழுது மட்டும் போதும். அவள் மனம் அவளுக்குக் கட்டுப்பட்டது. சிந்திக்க முடிகின்றது. சிந்தனைச் சிதறல்கள் பார்க்க முடிகின்றது.

கார்லாவின் வாழ்க்கை வித்தியாசமனது. சின்ன வயதில் பெற்றவனே கெடுத்து அவள் மனத்தைக் குதறிவிட்டான். அரவணைக்க வேண்டிய அம்மாவோ அவள் கணவனே உலகம் என்று இருந்துவிடுகின்றாள்.
ஒதுங்கிய கன்னி மாடமும் உதவவில்லை. எனவே அவள் தன் உணர்வுகளுக்கு இடமளித்து ஓட ஆரம்பித்தாள்.

ஆசிரியையின் மகள். ஆஸ்ரமத்தில் படித்தவள். கொஞ்ச நாட்கள் துறவி வேஷங்கட்டியவள். அதனால் மனம் அலைபாய்கின்றது. அவள் எழுத்துக்களில் அவளைக் காண முயல்வோம்.

உள்ளமும் ஆத்மாவும் வேறானவை. அவற்றின் அதிர்ச்சி அலைகள் வெவ்வேறான‌வை. உள்ளத்தின் கட்டமைப்புகள் அவள் வாழ்க்கைப் போக்கில் நேரிய முறையில் பேணப்படவில்லை. இந்த உணர்ச்சிகளின் ஈடுபாட்டில் திருப்திப்படும் ஆசையை அவள் தவிர்த்தால், கடவுளோடு அவள் ஐக்கியமாக முடியும்.

ஷேக்ஸ்பியர் சொன்னது நினைவிற்கு வருகின்றது

வாழ்வில் தனிமை உணர்ச்சியின்றி எப்போதும் எதுவும் நல்லதும் அல்ல, தீயதும் அல்ல. சிந்தனைதான் அப்படி எண்ண வைக்கிறது” என்று சொல்கிறார்.

காலம் ஓடுகின்றது

"உண்மையை நீ அறிந்து கொள்ளும் போது உனக்கு விடுவிப்புக் கிடைக்கிறது." - ஏசு கிறிஸ்து.

முதுமையில் இந்த வலையினின்றும் விடுபட்டு மகள் தன் குழந்தைகளுடன் வசிக்கும் இடம் புறப்பட்டு விடுகின்றாள். அப்பொழுது அவளிடம் எந்த குற்ற உணர்ச்சியும் கிடையாது. மெய்யான பாடத்தைக் கற்றுக் கொண்டாள் அவள்.

சுயத்தன்மையை ஏற்றுக் கொள்வது (நேர்மைப் பண்பே தீயவற்றை முற்றிலும் நீக்க வல்லது). கடவுளின் (படைப்புப்) பெண்ணைக் காண‌‌ அவள் கடவுளின் அழைப்புப் பெண்ணை நோக்கினாள்.

அவள் வாழ்க்கை வண்டி, நிலைக்கு வந்து அமைதியாக நின்றுவிட்டது. இப்பொழுது எழுதுவதில் இன்பம் காண்கின்றாள்.

ஒரே செயல்; அதற்கு எத்தனை கோணங்கள்!

குடிசைவாழ் பாலியல் தொழில் பெண்களைச் சந்தித்திருக்கின்றேன். பம்பாய் சிவப்புவிளக்கு ஏரியாப் பெண்களைச் சந்தித்துப் பேசி இருக்கின்றேன். தொழில் செய்யும் பொழுது சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொண்டு தண்டனை அனுபவிக்க அவர்கள் வைக்கப் பட்டிருக்கும் சிறைகளுக்குப் போய் பேசி இருக்கின்றேன். உளவியல் ரீதியாக அவர்கள் உணர்வுகளை, அவர்கள் வாழ்க்கையினைக் கண்டேன்.அவர்களை எப்படி வழி நடத்துவது?

1990 ல் தமிழக அரசு பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கான பெண்களை விடுவித்து வந்து புனர்வாழ்வு கொடுக்க முயன்றது. எத்தனை பிரச்சனைகள்! எத்தனை சிக்கல்கள்!! விமர்சனம் எளிதாகச் செய்துவிடலாம். பாலியல் பிரச்சனை உலகியலில் நிரந்தரமாக இருக்கின்றது.

அப்பப்பா, இந்த மனம் மனிதனைப் படுத்தும் பாடு!

கார்லா கதை சொன்னதற்கு முக்கியக் காரணம் ஒன்றுண்டு. அதனைக் கூறியாக வேண்டும். ஓய்வுக்கு ஒதுங்கிய நிலையிலும் எழுபது வயதான காலத்திலும் அவளைச் சில வாடிக்கைக்காரர்கள் வந்து பார்ப்பதும் சில நாட்கள் தங்கிச் செல்வது பற்றியும் எழுதி யிருக்கின்றாள்.

அப்பொழுது அவள் ஆண்மனத்தைப் பற்றி கூறுகின்றாள். அவளைத்தேடி வருகின்றவர்கள் உடல் சுகத்தைத் நாடியல்ல; மனத்திற்கு இதம் தேடி வந்திருக்கின்றார்கள். அந்த நம்பிக்கை எப்பொழுது உதயமானது.? உடலுறவுக் காலங்களில் உள்ளம் எங்கே, எப்படி இயங்குகின்றது? சில பெண்களிடம் இருக்கும் அந்த அலைவரிசயை ஆண் புரிந்து கொண்டு விட்டால் அவளை எப்பொழுதும் ஆண்மனம் நாடுகின்றது. சரியா தப்பா, எப்படி என்ற வாக்குவாதத்தில் இப்பொழுது இறங்க விரும்பவில்லை.

கார்லாவின் கதையின் முடிவில் ஆண்மனத்தை ஓரளவு தொட்டுக் காண்பிக்கின்றாள்.

ஜெயகாந்தன் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. கூறவும் மாட்டார்.

கார்லா ஆண்மனத்தை, குணத்தை படம்பிடித்துக் காட்டுகின்றாள். அவளே கதையின் நாயகி. அவளே கதையின் ஆசிரியை. அவளால் முடியும்.

மனம் விட்டுப் பேச ஓர் தோழமை வேண்டும். ஏன் ஆணைத் தேடிப்போகக் கூடாதா? பெண்மையுடன் கூடிய தோழமை வேண்டியிருக்கின்றது. பெண் என்ன செய்வாள்? அவளுக்கு ஆறுதல் வேண்டாமா? தாய்மையின் சுகம் ருசித்தவள். அது அவளுக்குத் தெம்பு கொடுக்கின்றது. ஏற்கனவே மூளைச் சலவை செய்யப்பட்டவள். குடும்பத்துடன் கட்டிப் போடப் பட்டவள். அது அவளுக்குப் பழகிப் போய்விட்டது.

இது இந்தக் காலத்துக்குப் பொருந்துமா? சொல்ல முடியாது.

வீட்டுப் பறவைக்கு இப்பொழுது சுதந்திரம் கிடைத்துவிட்டது. அவளும் ஆறுதலைத் தேடி வெளியில் செல்லலாம்; அத்தகைய கதைகளும் வரும். வர ஆரம்பித்துவிட்டன.

நல்ல குடும்பத்தில் பிறந்தவள், வசதியானவள் ஏன் விலைமாதாக மாறினாள்? அவள் உள்ளுணர்வு மட்டும் காரணமா? அந்த உணர்வைத் தூண்டியது , அவளை அந்த முடிவிற்கு ஓட்டியது எது?

படித்த தாய். அதுவும் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியையின் மகள். பல சகோதர சகோதரிகள். கிறிஸ்தவ பள்ளி அதுவும் கன்னியாஸ்த்ரீகள் ஆசிரியைகள். கன்னி மாடத்தில் துறவியாகவும் ஒண்டுகின்றாள். ஏன் இந்தத் தொழிலில் தள்ளப் பட்டாள்? அவள் எழுத்தைப் பார்த்தால் முட்டாள் பெண்ணாகத் தெரியவில்லை. பெற்ற தகப்பன் ஆரம்பித்து அவள் போன இடங்களில் எல்லாம் சொல்லாலும் காட்சிகளாலும் அவள் அச்சப்படுத்தப் பட்டாள்.

சூழ்நிலைத் தாக்குதலில் தடம் புரண்டு போய்விட்டாள்

"சில நேரங்களில் சில மனிதர்களி"ல் கங்கா முதலில் அப்பாவிப் பெண் ஆனால் பின்னால் படித்து நல்ல உயர் நிலைக்கு வந்துவிடுகின்றாள். அந்தஸ்துள்ள உத்தியோகம். அப்படியிருந்தும் கெடுத்தவனை ஏன் தேடுகின்றாள்? அவனுடன் பழகுவதால் வாழ்வு கிடைக்காது என்று தெரிந்தும் பழகுகின்றாள் ஏன்?


அடுத்து நாம் கங்காவை அலசுவோம்.

(தொடரும்)

நன்றி -திண்ணை

Tuesday, June 8, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு- ஜெயகாந்தன் 09

வீணையிலிருந்து சுகமான சங்கீதம் கேட்க வேண்டுமென்றால் வீணை நரம்புகளை விரல்கள் முறையாக மீட்டத் தெரிந்திருக்க வேண்டும். அவசரப்பட்டோ அலட்சியத்திலோ இசைத்தால் அபஸ்வரம்தான் கேட்கும்.

தாம்பத்தியத்தின் இனிமையை பிணக்கில் அருமையாகக் காட்டியுள்ளார் நம்மவர்.

பிணக்கின் கணக்கைப் பார்க்கலாம்.

மருமகள் சரசா தன் கணவன் அறைக்குப் பால் எடுத்துச் செல்லும் பொழுது கைலாசம்பிள்ளையின் பார்வையும் தொடர்ந்தது. அவள் அறைக்குள் நுழைந்து கதவை மூடவும் அவர் பார்வையும் கதவில் முட்டி நின்றது.

வெட்கம், பயம்,துடிப்பு, காமம்,வெறி,சபலம்,பவ்யம்.பக்தி, அன்பு இத்தனையும் கொண்டு வடிவம் பெற்ற ஒர் அழகுப் பெண் அங்கிருந்து அருகில் வரவும் கைலாசம் தாவி அவளை அணைக்கப் பார்க்கின்றார். அவர் பத்தினி தர்மாம்பாளின் வாலைக் குமரியின் தோற்றம்!

கற்பனையில் மிதக்கும் கைலாசம் பிள்ளைக்கு அறுபதுக்கு மேல் வயதாகின்றது. ஆச்சி தர்மாம்பாள் தன் பேரக்குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்த பொழுது கைலாசம் தன் வாலிபப் பிராய நினைவுகளில் மனத்தை மேயவிட்டு மவுனமாக உட்கார்ந்திருந்தார்.

பால் தம்பளரை தர்மாம்பாள் நீட்டிய பொழுது சட்டென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டார்.

“பிள்ளை இல்லாத வீட்லே கெழவன் துள்ளியாடறானாம்..கையை விடுங்க.“

“யாருடி கெழவன்?.”என்று மனைவியின் கன்னத்தில் தட்டியபடி சிரித்தார்.

“இல்லே, இப்போத்தான் பதினேழு முடிஞ்சு பதினெட்டு நடக்கு. பொண்ணு பாக்கவா?"

“எதுக்கு நீதான் இருக்கியே?" அவள் முந்தியைப் பிடித்து இழுத்தார்.

“ஐயே, என்ன இது?“

மறுபடியும் சிரிப்புதான். கிழவர் பொல்லாதவர். கற்பனைக் குதிரை வேகமாகப் பறக்கின்றது. கைலாசம் தன் மனைவியைக் காணும் பொழுது தன்னையும் கண்டார். கிழவரின் கை மனைவியின் தோளை ஸ்பரித்தது. அந்த தம்பதிகளிடையே ஒரு சிறு மனத்தாங்கல் கூட நின்றதில்லை. ஒரு சச்சரவு என்பதில்லை. 'சீ! எட்டி நில்,' என்று அவர் சொன்னதில்லை. சொல்லி இருந்தால் அவள் தாங்குவாளா என்பது இருக்கட்டும், அவர் நாக்கு தாங்காது.

சிரிப்பும் விளையாட்டுமாகவே வாழ்க்கை கழித்துவிட்டார்கள். இதுவரை ஆரோக்கியமான தம்பத்யம் நடந்தது.

கைலாசம் நாவில் சனி உட்கார்ந்தது! ஆரம்பகாலத்தில் தர்மாம்பாள் ஏழு மாதக் கர்ப்பிணியாக இருக்கும் பொழுது தாசி கோமதியுடன் நீலகிரிக்குச் சென்றதைச் சொல்லுகின்றார். அதுவும் எப்படி?

“அந்தக் காலத்துலே அவளுக்குச் சரியா யாரு இருந்தா.. தாசின்னா தாசிதான். “ இது அவர்.

“நானும் எத்தனியோ பேரைப் பார்த்திருக்கேன். ஆம்புள்ளைனா நீங்க தான்“

கைலாசம் பிள்ளைப் பேசப் பேச தர்மாம்பாள் பொடிப்பொடியாக சிதைந்து கொண்டிருந்தாள். தர்மாம்பாள் கிழவிதான். கிழவி பெண்ணில்லையா?

அன்று முதல் அவள் அவருடன் பேசுவதில்லை. அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்றாலும் பிறர் மூலம் அவைகளைச் செய்தாள். உயிர் ஒடுங்க ஆரம்பித்தது. கடைசி நிமிடங்களில் கூட அவர் அவள் வாயில் விட்ட பாலை விழுங்காமல் பல்லை இறுக மூடி உயிரை விட்டாள்.

எத்தனை ஆண்டுகளாக வாழ்ந்த இன்ப வாழ்க்கை ஒரு நொடிப் பொழுதில் மாயமாய் மறைந்துவிட்டது.

ஏன்? இது ஒரு தற்செயல் நிகழ்வு. ஆனாலும் விஷ வார்த்தைகள் தாம்பத்தியத்தை அழித்துவிட்டது.

அறிவுரை கூறும் நீதிக் கதையல்ல. ஆனாலும் படிப்பவர்களின் சிந்தனையைத் தூண்டிவிடும் அவலக் காட்சி. பல குடும்பங்களில் வேண்டுமென்றே நடைபெறும் துன்பியல் நாடகம். .பெண்ணைச் சீண்டிப்பார்க்கும் இந்த ஆசை வரலாமா?

இளமைக் கால அனுபவங்களாக செய்திகள். வெளியூர் சென்று வந்தால் வித விதமான கற்பனை பொய் மூட்டைகள். அடுத்தவன் பொண்டாட்டியின் சிறப்பைக் கூறி “பொண்டாட்டின்னா அவளைப் போல் இருக்கணும் “ என்ற ஒப்பீட்டு வருணனைகள், ஒன்றா இரண்டா? பிணக்கு வராது. காயப் படும் பெண் மரத்துப் போவாள். அவள் ஜடத்தன்மை பார்த்து வெறுப்பு கொண்டு பரபரப்பைத் தேடி மனம் அலைந்து அவனும் தொலைந்து போவான்.

இப்படி நினைத்துப் பார்க்கலாமே!

"ஏங்க, உங்க சின்ன வயசுக் கதை நல்லா இருக்கு. எல்லாருக்கும் சின்ன வயசே ஜாலிதான். நான் படிக்கும் போது குமார்னு ஒரு பையன்.. என்னைச் சுத்தி சுத்தி வருவான்."

அவள் சொல்ல ஆரம்பிக்கவும் அவன் முகம் முதலில் சுருங்கும்.

"நாங்க ஊரைச் சுத்துவோம். கோயில்லே உட்கார்ந்து அரட்டை!"

"சரி, போதும்!" அவன் பொறுமையை இழக்க ஆரம்பித்துவிட்டான்.

"நாங்க சினிமாவுக்கும் போவோம். அவன் பொல்லாதவன். நிறைய சேட்டை செய்வான்!"

"போதும்டி நிறுத்து! இவ்வளவு கேவலமானவளா? முன்னாலே தெரிஞ்சிருந்தா உன்னைக் கல்யாணம் பண்ணிண்டிருக்க மாட்டேன்!"

அவன் பேசினால் அவள் கல்லாய் இருக்கணும். அவள் பேசினால் அவன் மட்டும் எரிமலையாகலாம். பெண்ணும் மனுஷ ஜன்மம்தானே.

பெண்ணச்சீண்டிவிடவேண்டும். அவளுக்குக் கோபம் வரவேண்டும். என்ன வக்கிரமான ஆசை!

அழகு மனைவியை மறந்து பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த மாதவியை விட்டுப் பிரிந்து கோவலன் சென்றதற்கும் இது போன்ற பாடிய வரிப் பாடல்கள்தானே காரணம்.

இல்லறம் நல்லறமாக நடக்க நாவையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தனக்கு உரிமையானவரை அடுத்தவர் பார்ப்பதைக்கூடத் தாங்காது மனம். இது இருபாலாருக்கும் பொருந்தும்.

என் பணிக்காலத்தில் பெரும்பாலான குடும்பச் சண்டைகளுக்கு உளரல்கள் காரணமாக இருந்ததைப் பார்த்திருக்கின்றேன். உடலும் உள்ளமும் உரமாக இருக்க, எழுபதிலும் இளமையாக இன்பம் அனுபவிக்க இது போன்ற அசட்டுப் பிணக்குகள் நேராது பார்த்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் விரிசல் வந்தால் துன்பம் அவர்களுடன் நிற்காது. கோபத்தில் அவள் குழந்தைகளை அடிப்பாள். அவர்கள் தேவைகளைக் கவனிப்பது கூடப் பாதிக்கப் படும். சிலவினாடி உளறல்கள் குடும்ப அமைதியைச் சாகடிக்கும் விஷப்பூச்சிகளாகி விடும். பிணக்கு கதை நமக்குணர்த்துவது பெரிய படிப்பினை.

இருபத்து நான்கு வயதில் அறுபது வயது வாழ்க்கையினை படம் பிடித்துக்காட்டியிருக்கின்றார் ஜெயகாந்தன்.

இளமையில் முதுமையின் துள்ளல்.

இன்னொன்றையும் சொல்ல விரும்புகின்றேன். என் தோழி ஒருத்தியின் கணவ்ர் அடிக்கடி வெளி நாடு செல்வார். வந்த பின் வகைவகையாக அவர் பல நாட்டுப் பெண்களை அனுபவித்ததாக நிறைய அளப்பார். அவளோ சண்டை போடாமல் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தாளாம். அவள் கணவருக்குக் கோபம் வந்து விட்டது. ஏன் தெரியுமா?

அவர் சொன்னதைக் கேட்டு அவள் சண்டை பிடிக்கவில்லையாம். அவளுக்கு அவர் மேல் ஆசை இல்லையாம். இப்படியும் புருஷ மனம் இருக்கின்றது!.

மனக்குரங்கின் மகிமையே மகிமை. அது எப்படியெல்லாம் தாவும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது

புதுச்செருப்பு கடிக்கும் கதையிலும் இன்னொரு குணத்தையும் சொல்லாமல் காட்சியாகக் காட்டுகின்றார்.

அவர் கதைகளில் அவர் உரையால்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. நேரடிச் சந்திப்புகளிலும் நடக்கும் உரையாடல்களும் அப்படியே. சில நேரங்களில் அவர் காட்சிகளைப் பேச வைத்துவிடுவார்.

ஆறு மாத காலம் ஒருத்தியுடன் இருந்து பார்த்தும் ஏமாற்றம், அதனால் ஏற்பட்ட புகைச்சலில் திணறி வீட்டை விட்டு இன்னொரு பெண்ணிடம் ஓடி வருகின்றான். கிரிஜா அவனுக்குப் புதியவள் அல்ல. வந்தவன் உடனே அவளுடன் உடலுறவு கொள்ளவில்லை. குமுறுகின்றான். புலம்புகின்றான். எதற்காக வந்தான்?ஒடிந்து போன நிலையில் அவன் சாய ஓர் இடம் வேண்டும். பரிவுடன் அவனைத் தேற்ற ஓர் தோழமை வேண்டும்.
காயப்பட்ட மனத்திற்கு ஒத்தடம் பெற வேண்டும். இப்படியும் மனிதன் ஆறுதல் தேடுகின்றான்

வெளிப்படையாக ஜெயகாந்தன் எதுவும் கூறவில்லை. ஆனால் வேறு ஒரு கதையில் இது கூறப்பட்டிருக்கின்றது. ஒரு பெண்ணின் கூற்று. அதுவும் ஓர் விலைமாதின் கூற்று. அந்தக் கதையின் பெயர்

GODS CALL GIRL

கார்லா என்ற ஓர் விலைமாது தன் சுயசரிதையில் எழுதியிருக்கின்றாள்.

கதையின் தொடக்க முதல் கடைசி வரை கடவுளையும் சுமந்து செல்கின்றாள். கடவுளின் விலைமகளாக இருந்தவள் கடவுளின் பெண்ணாகின்றாள். தெள்ளிய நீரோட்டமாக தங்கு தடையின்றி கதை செல்லுகின்றது. சம்பவங்களைவிட உள்ளத்தின் உலாவைக் காணலாம்.

அடுத்து அந்தக் கதையைப் பார்க்கலாம். நம் ஜெயகாந்தன் கோபித்துக் கொள்ளமாட்டார்.

(தொடரும்)

நன்றி -திண்ணை

Thursday, June 3, 2010

Peace


Peace peace peace

Where is peace?

Peace within

Or peace without

All our endeavour

Is a vain search

Like the mesmorizing

Mirage of the desert.


If you are fond of peace

Burn yourself

In the crucible

Of self-control

And dissolve yourself

In the pulsating embers

Of delightful detachment


If you can’t love

Don’t hate

If you can’t forgive

Simply ignore

If you can’t be satisfied

Don’t be wicked.

If you can’t control your passion

Don’t be a slave to that.

Life after death is not certain

Therefore, be happy

And make others happy


(published in POET ,international monthly english magazine )