Thursday, December 1, 2011

நினைவலைகள்-01

தண்ணீர்விட் டோவளர்த்தோம்?

சர்வேசா! இப்பயிரைக்

கண்ணீராற் காத்தோம்;

கருகத் திருவுளமோ?

ஓராயிர வருடம்

ஓய்ந்து கிடந்தபின்னர்

வாராது போலவந்த

மாமணியைத் தோற்போமோ?

சுதந்திரப்பயிர் நினைத்து பாரதி பாடியவை,

இக்காலச் சுழலுக்கும் பொருந்துமன்றோ?

வரலாற்றுச் சுவடுகளைப் பார்த்தால் மனிதன் ஓடி ஓடி அலைந்து, புலம் பெயர்ந்து, விலங்கு வாழ்க்கையை வெறுத்து , அமைதி வாழ்க்கைக்கு ஓர் கோட்பாடு கண்டான். குடும்பமும், கூட்டமாக வாழும் சமுதாயமும் பிரச்சனைகளின்றி வாழ, தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு வாழத் தொடங்கினான். இலக்கிய வாழ்க்கை கிடைத்தது.

காலச் சக்கரத்தின் ஓட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது. சூழ்நிலையின் தாக்கங்கள் அவனை, அவன் வாழ்க்கையை அசைக்க ஆரம்பித்துவிட்டது.

காலத்திற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் மனிதன் இருக்கின்றான். வாழும் முறைகளின் இடைவெளி மிரட்டுகின்றது.

பாரதியின் ஊர்க்காரியான எனக்கும் ஓர் ஆதங்கம் உண்டு.

உருண்டோடும் காலத்திலே

உயிர்பிழைக்க ஓடியவன்

மருண்டோடும் வாழ்வொதுக்கி

மகிழ்வில்லம் கண்டுகொண்டான்

அருள்கண்டான்!அன்புகண்டான்!

அமைதிகாக்கும் குடில்கண்டான்!

கருகத்தான் விடலாமோ?

காத்திடுதல் கடமையன்றோ

என் நினைவலைகள் உங்களை வருடும் பொழுது உங்களுக்குப் புரியாதவளாக இருக்க விரும்பவில்லை. என் பிள்ளைப் பருவ நிகழ்வுகளை எங்கோ கொட்டிவிட்டேன். உங்களிடம் சின்ன அறிமுகம் செய்து கொள்ள நினைக்கின்றேன். நினைவலைகள் நீண்டதொரு பயணம். அதற்குரிய சக்தி எனக்கு எங்கிருந்து கிடைத்தது? கரிசல் மண் எட்டயபுரம் செதுக்கிய ஒரு பெண் நான்! என் தந்தை சுதந்திரப் போராட்டத்தில் மும்முறை சிறை சென்றவர். சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்த்தார். தேவைக்கு மேல் எது வைத்திருப்பினும் அவன் திருடன் என்பார். எளிய வாழ்க்கையில் பழக்கினார்.எங்கு சென்றாலும் அழைத்துச் செல்வார். முதன் முதலில் பார்த்த அரசியல்வாதி இராஜாஜி அவர்கள். நான் பார்த்த முதல் எழுத்தாளர் கல்கி அவர்கள். ஆரம்பமே எனக்கு உச்சம். பாரதி மண்டபம்

எழுப்ப ஆலோசனை செய்ய வந்தவர்கள். அவர்களைப் பார்க்க என் தந்தை கூட்டிச் சென்று வணங்கி ஆசி பெறச் சொன்னார். எழுதும் பொழுது பிள்ளையார் சுழி போட்டு தொடங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. எனக்கோ இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துதான் எழுத ஆரம்பிப்பேன்.

கல்கியின் தரிசனம் பத்திரிகைகள் படிக்கத் தூண்டியது. அதிலிருந்து படிக்கும் பழக்கம் என்னைவிடவில்லை. பாரதி தெருவில் வாழ்ந்து, பாரதியின் மாமாவிடம், பாரதி பாடும் முறையிலேயே பாடக் கற்றுக் கொண்டேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பாடுவோம். அன்று ஏற்பட்ட உணர்ச்சி, எழுச்சி இன்றும் மாறவில்லை. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இந்த நான்கு குணங்களும் என்னிடம் கிடையாது.

பாரதியை நினைத்து மனம் ஏங்கும்.

அவசரப் பட்டு செத்துவிட்டான். இருந்திருந்தால் குழந்தையாய் அவன் மடியில் தவழும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கும். எனக்காக ஒரு தாலாட்டு பாட்டு பாடியிருப்பான்.

என் பேராசை பார்த்தீர்களா? கற்பனையில் என்னை மிதக்க வைத்தவன் பாரதி. என் துணிச்சல் எங்கிருந்து வந்தது என்பதை இப்பொழுது புரிந்து கொள்ளலாம்.

நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் பிறந்தவள். ஒரு வயது கூட ஆகவில்லை. சுதந்திரப் போராட்டத்திற்குச் சென்ற தந்தை ஐந்து வருடங்களுக்குப் பின்னரே வீட்டிற்கு வந்தார். வந்தாலும் காந்திக் கட்சியில் தொடர்பு வைத்திருந்தார். குழந்தைப் பருவத்தில், காக்கா கதை, நரிக்கதை சொல்லிக் கேட்டிருப்போம். எனக்கு நாட்டுக் கதை; காந்தி கதை!

சொல்லி வளர்த்தார்கள். கவுன் போட்டுக் கொண்டு ,கையில் காங்கிரஸ் கொடி ஏந்தி அப்பாவுடன் ஊர்வலங்களுக்குச் சென்றிருக்கின்றேன். இராட்டை நூற்று, கதர்ச் சிட்டம் கடையில் போட்டு கதர்த் துணி வாங்கி உடுத்தியவள் நான். கதர்த்துணி பார்த்தால் எனக்கு காந்தி நினைப்புதான் வரும். அந்தச் சூழலில் ஏற்பட்ட உணர்வுகளே வேறு. பாட்டு வாத்தியார் கூட கீர்த்தனைகள் சொல்லிக் கொடுப்பதுடன், வைஷ்ணவ ஜனதோ, வந்தே மாதரம், சாந்தி நிலவ வேண்டும் பாட்டுக்களை சொல்லிக் கொடுப்பார்.. சுதந்திர தாகம் பட்டிகளிலும் இருந்தது. ஒவ்வொருவரின் துடிப்பிலும் நாட்டு நினைவு கலந்திருந்தது.

என்னுடைய சமுதாய அக்கறைக்கு அடித்தளம் அமைத்தது என் பிள்ளைப் பருவ வாழ்க்கைதான்.

அக்காலத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணுக்கு பட்டதாரிப் படிப்பு எட்டாக்கொம்புதான்.ஒரு பெண் பெரியவளாகிவிட்டால் வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது. பாரதி பிறந்த ஊருக்கும் அதே சட்டம். முதன் முதலில் அந்தக் கட்டுப்பாடை உடைத்தவள் நான் தான். ஊர் பேச்சிற்கு நான் அஞ்சவில்லை. தகப்பன் கொடுத்த ஆதரவு எனக்கு ஊக்கத்தையளித்தது. தீயது என்று கண்டுவிட்டால் அப்பொழுதே பொங்கி எழுவேன். இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். முன்னாள் முதல் அமைச்சர் மகள் திருமதி சரோஜினி வரதப்பன் அவர்கள் படிப்பும் இதே காரணத்தால் நின்றது. முதுமையில் படித்து பட்டம் பெற்று, அத்துடன் முனைவர் பட்டமும் பெற்றது அவர்களின் எண்பது வயதிலே.

மஹாத்மா காந்தி சென்னைக்கு வந்திருந்த பொழுது பதினைந்து நாட்கள் அவரைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்தவர்களில் அம்மாவும் ஒருவர். இது போன்ற நிகழ்வுகள் தான் எங்களுக்கு மன உரத்தை அளித்தது.

நான் படித்த பள்ளியிலேயே கணக்கு ஆசிரியை வேலை கிடைத்தது. எனக்குப் பெருமை தந்தது அதுமட்டுமல்ல, பாரதியும் , சிவானந்த மஹரிஷியும் படித்த பள்ளியில் படித்து, அதே பள்ளிக்கு வேலைக்கு வந்தால் பெருமை வராதா? என் வாழ்க்கையில் உச்சத்தில் உள்ளவர்களுடனும் பழக முடிந்தது என்றால், எனக்கு அத்தகைய வாய்ப்புகளைக் காலம்தான் அமைத்துக் கொடுத்தது.

நான் பிறந்தவுடன் எனக்கு வைத்த பெயர் சீதாலட்சுமி. அதுவும் காரணத்துடன் வைக்கப்பட்டதாம். என் தந்தையின் பாட்டியின் பெயர்.

துணிச்சல்காரியாக வாழ்ந்திருக்கின்றார்.. பண்ணையார் மனைவி. ஊரில் குடும்பப் பிரச்சனைகளுக்கு பாட்டியைத் தேடி வருவார்களாம். கெட்டிக்காரத் தனமாகப் பேசி சமாதானம் செய்துவிடுவார்களாம். அந்தக் காலத்தில் ஊர்ப்ப்பஞ்சாயத்துக்கள் உண்டு. என் பாட்டி தானே வக்கீல் வேலையும் நீதிபதி வேலையும் செய்யும் அளவில் செல்வாக்கைப் பெற்றிருந்திருக்கின்றார்கள். இன்னொரு விஷயம் தான் ஆச்சரியம் தரும் செய்தி. விட்டின் பின்புறைம் நிறைய மாமரங்கள் இருந்திருக்கின்றன. மாங்காய் திருடவருகின்றவர்களை விரட்ட பாட்டி செய்த காரியம்தான் அது. கருப்புப் போர்வையைப் போர்த்திக் கொண்டு மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு,. திருட ஆட்கள் வரும் பொழுது பேய் போல் கூச்சல் போடுவார்களாம். வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள் என்று சொன்னபொழுது ரசித்துச் சிரிப்பேன்.. நூற்றி இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு பெண்ணின் துணிவைப் பாருங்கள். அவர்கள் பேத்தி நான் .

ஆசிரியை வேலையை விட்டு சமுதாயப் பணிக்குச் சென்றதும் , என் வாழ்க்கையே மாறியது. இன்றுவரை அந்தப் பிணைப்பு விடவில்லை.

எனக்கு வரலாறு தெரிந்து கொள்ளப் பிடிக்கும். உலகம் தோன்றிய நாள் முதலாய் “பெண்,குடும்பம், மற்றும் சமுதாயம் “ இதன் வரலாற்றை ஆய்வு செய்வது , என் வேலைகளுடன் நான் சேர்த்துக் கொண்ட பணியுமாகும்.

என் பயணத்தில் நான் உணர்ந்த மாறுதல்கள் எனக்கு மகிழ்வைக் கொடுக்கவில்லை. அதுதான் ஆதங்கப் பாட்டை என் நினைவலைகளுக்குத் தொடக்கமாக்கினேன். மனச்சிமிழில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நினைவுகள் என்னைப் புரட்டிப் போட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடங்கி விட்டது. இது என் சுயசரிதையல்ல .நம் சமுதாயத்தின் வரலாறு .சுடச்சுடச் செய்திகளும் உண்டு. சுவையான காட்சிகளும் உண்டு. இப்பயணத்தில் நாம் காணப் போகின்றவர்கள் பலரும் அறிமுகமானவர்களே!சொல்லப் போகும்

நிகழ்வுகளும் பல கேள்விப் பட்டிருக்கலாம். ஏனிந்த திரும்பிப் பார்த்தல் என்ற முணுமுணுப்பு கேட்கின்றது. பல நினைவுகள் தேய ஆரம்பித்து விட்டன. சில நிறம் மாறி வேறு தோற்றத்தில் உலாவ ஆரம்பித்துவிட்டன.

காலச் சக்கரத்தின் சுழற்சியிலே மனிதன் பார்வையாளனாக, ஏன் பங்குதாரனாகவும் இருத்தல் கூடும். அத்தைகைய செய்திகளை, அப்பொழுது அவனுக்குத் தோன்றிய எண்ணங்களைப் பதிவு செய்தல் எதிர்கால சமுதாயத்திற்கு நல்லது.

உலகம் தோன்றிய நாள் முதலாய் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. பழையன போதலும் புதியன புகுதலும் இயல்பே என்ற இலக்கணமும் நம்மிடையே உண்டு. மாறுதல்களால் வெற்றியும் வீழ்ச்சியும் நிகழ்ந்ததையும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். வாழ்க்கையின் அனுபவங்களின் பதிவுகள், வழிகாட்டி. அறிவுரைகள் என்ற அர்த்தமல்ல.

தோல்வி ஏற்படும் பொழுது மனிதன் திரும்பிப்பார்க்கின்றான். வெற்றிக்கு வழி தென்படின், அப்பதிவை அவன் மனம் அங்கீகரிக்கின்றது. முன்னேற்றத்திற்குத் தடைக்கற்களாகத் தெரிவதை ஒதுக்கிவிடுவான். எக்காலத்திற்கும் பொருந்தும் சம்பவங்களும் உண்டு. அந்தந்த காலத்துச் சூழலைக் காட்டும் நிகழ்வுகளும் உண்டு. எல்லாம் தெரிந்திருப்பது விவேகத்திற்கு உதவும்.

இன்றைய தலைமுறை கற்பூரப் புத்தி கொண்டவர்கள். நெருப்பு ஆக்கலுக்கும் உதவும். அழிக்கவும் செய்யும். அவர்களுக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அவைகளைப் பார்த்து மேடு பள்ளங்களைப் புரிந்து கொள்வார்கள்.ஒவ்வொரு மனிதனிடமும் சின்னச் சின்ன செய்திகள் இருக்கின்றன. அவைகளை ஒதுக்கி விடாமல் எங்கோ பதிய வேண்டும்.

குடும்பத்தினர் மனங்களில் பதியப்பட்டு வந்தன. ஆனால் அந்த மனங்களிலும் சூழ்நிலையாலும் ஊடகப் படையெடுப்பாலும் நினைவுகளில் தூசிபடிய ஆரம்பித்துவிட்டன. எனவே முடிந்தவர்களாவது தங்கள் நினைவுகளை ஏதோ ஒரு வகையில் பதிவு செய்வது காலத்திற்குச் செய்யும் உதவியாகும்.

என் முகவரிக்கு இத்தகைய முன்னுரை தேவையென நினைத்தேன்.

எனக்கு வயது 75 ஆகிவிட்டது. என் பெற்றோர்களும் அவர்கள் காலத்து நிகழ்வுகளை என்னிடம் கூறியிருக்கின்றார்கள். எனவே என் நினைவலைகளில் 100 ஆண்டுகளின் சமுதாய அசைவுகளைக் காணலாம்

என்னுடைய பணியும் சமுதாயநலப் பணியே. என் பயணத்தில் எனக்கு வந்த சோதனைகள், வேதனைகள், அவைகளுடன் நான் நடத்திய போராட்டங்கள், எனக்குக் கிடைத்த வாய்ப்புகளின் உதவிகள் எல்லாம் பகிர்ந்து கொள்வேன். சுதந்திரம் பெற்ற பின், அரசும் மக்களும் ஒன்றிணைந்து உற்சாகமாக உழைத்தது, நாளடைவில் மனிதன் சுயநலத்திற்கும் சுரண்டலுக்கும் மாறியவைகளையும் காணலாம்.

வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணியான குடும்பமும் படிப்படியாக எப்படி மாறுதல் அடைந்து வருகின்றது என்பதையும் பார்க்கலாம்.

என் நினைவலைகளில் சில உங்கள் கால்களைத் தொட்டுச் செல்லும். சில

உங்களைத் தள்ளி வேடிக்கை பார்க்கும். சில சுனாமியாய் வந்து உங்களை உருட்டி மிரளச் செய்யும். ஆம், இது ஓர் த்ரில்லர் பயணம்.

எனக்கோ ஓர் சத்தியசோதனை.

இனி நாம் அடிக்கடி சந்திக்கப் போகின்றோம்

(அடுத்து சந்திப்போம்)

நன்றி - சென்னைஆன்லயன்