Friday, March 30, 2012

எட்டயபுரம் வரலாறு-06

டபிள்யூ.இ.கணபதியாபிள்ளை என்பவர் எட்டயபுரம் வரலாறு-(Ettayapuram - Past and Present) என்ற நூலை எழுதியுள்ளார். 1889-ஆம் ஆண்டே இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருப்பவர் பிஷப் கால்டுவெல். இவரைத் தமிழுலகம் நன்கு அறியும். சந்திரகிரியின் ஆட்சியிலிருந்து எட்டயபுரஆட்சியாளர்கள் வரை, அவர்கள் ஆட்சி காலத்தில் நடந்தவைகள் பற்றிய விபரங்கள் சான்றுகளுடன் இப்புத்தகத்தில் பார்க்கலாம். இந்த ஆசிரியர் காலத்திற்குப் பின் நடந்தவைகளை மற்றவர்கள் எழுதியுள்ளார்கள்.அந்த வரலாற்றுப் புத்தகங்களைப் பற்றியும் ஏற்கனவே ஊரின் சாதனையாளர்கள் பற்றிக் கூறும் பொழுது சொல்லி இருக்கின்றேன். இப்பொழுது வரலாற்றைப் பார்க்கலாம்

நாயக்கர் அரசில் கடைசியாக ஆண்ட மீனாட்சி காலத்தில் ஆட்சிக்குழப்பம் ஏற்பட்டது. சுவீகாரப்பிள்ளைக்கும் மீனாட்சிக்கும் உரிமைப் போட்டி வந்து விட்டது. ஆளுக்கொரு பக்கமாக அடுத்தவர் உதவி நாடிச் சென்றனர். சாந்தாசாகிப்பின் உதவியை நாடினார் மீனாட்சி. ஆனால் பிரச்சனை பெரிதாகி மீனாட்சி இறக்க நேரிட்டது. நாயக்கர் வயம் இருந்த இடங்கள் ஆற்காட்டு நவாப்பிடம் கை மாறியது. அதுவும் நிலைக்க வில்லை. அவருக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் கடன் இருந்தது. கோடிக் கணக்கான பணத்திற்கு ஈடாக தன் கீழ் வந்த பகுதிகளை ஆங்கிலேயருக்கு அளித்து விட்டார். பண்டமாற்றுப் பிரிவினையாக நாடு பந்தாடப் பட்டது. விஜய நகர அரசுக்கு வரி செலுத்திக் கொண்டிருந்தவர்கள், பின்னர் நவாப்பிற்கும், அதன் பின்னர் ஆங்கிலேயர்களுக்கும் கட்ட வேண்டிய சூழல் வந்து விட்டது. இப்படி அடிக்கடி நேர்ந்த மாறுதல்களால் மக்களும், ஆட்சியாளரும் கலங்கினர்.

அப்பொழுது இந்தியா இப்பொழுது இருப்பது போல் ஒருமித்த நாடல்ல. பல பேரரசுகள், பல சிற்றரசுகள் என்று இருந்தன. ஒருவருக்கொருவர் ஒற்றுமையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். ஹைதராபாத் நிஜாம் போன்ற பெரிய அரசுகளுக்கு அதிகமாக சோதனைகள் இல்லை. பிரிட்டன், மற்றும் பிரான்ஸ், போர்த்துக்கிஸ், டச்சு என்று பல நாடுகளிலிருந்தும் வியாபாரம் செய்ய என்று இங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்குள்ளும் போட்டி, சண்டைகள் நடந்து வந்தன. ராபர்ட் கிளைவ் வருகையால் ஆங்கிலலேயர்களுக்கு சாதகமாக பல இடங்கள் கிடைத்தன. நாடு பிடிக்க என்று கூறிவரவில்லை. ஆனால் உள்நோக்கத்தில் அதனை வைத்துக் கொண்டு வியாபாரம் என்ற பெயரில் வந்தனர்.

இன்றைய இந்தியாவில் அன்று பல நாடுகள் இருந்தன. பல சாதிகள், பல மதங்கள், பல மொழிகள் என்று பல பிரிவினைகள். மேலும் ஒற்றுமையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தனர். பலஹீனமானவன் மற்றவர்களைக் கூட்டு சேர்த்து பலம் பொருந்திவனுடன் சண்டை போடுவதும் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்கள் இந்தக் குழப்பத்தைத் தங்களுக்குச் சாதக மாக்கிக் கொண்டனர். பணத்தால் சிலரையும் பலத்தால் சிலரையும் பணிய வைத்தனர்.இவர்களைப் போலவே வந்திருந்த மற்ற நாட்டினருடனும் இவர்கள் போரிட்டு வெல்ல வேண்டியிருந்தது. மதராஸ் பட்டணத்தின் அருகில் இருந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிடித்தும் பிரான்ஸ் நாட்டினரிடம் போரிட்டுத் தோற்றார்கள். பின்னர் மீண்டும் சண்டையிட்டுப் பிடித்தார்கள்.

நவாப்பிடமிருந்து அவர் கொடுக்க வேண்டிய கடனுக்காகக் கொடுக்கப் பட்டிருந்த பாளையபாட்டுகளிடமிருந்து வரி வசூல் செய்ய ஆரம்பித்தனர். கட்டபொம்மன் உட்பட எல்லோரும் வரி கொடுத்து வந்தனர். கட்டபொம்மன் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்றிருக்கின்றார். பின்னால் கட்டபொம்மன் மட்டும் வரி கொடுப்பதை நிறுத்தினார். ஆங்கிலேயர்கள் கேட்டதற்கு பணம் கொள்ளை போய் விட்டது என்று காரணம் கூறினார். பின்னர் உடல் நிலை சரியில்லை என்று சொன்னார். நிலையாகக் கால் ஊன்ற நினைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரிகள் இருப்பதை விரும்பவில்லை. ஒன்று அடக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும். இது அவர்கள் குணம்.

ஆஸ்திரேலியாவில் காலூன்றும் பொழுது அங்கு வசித்திருந்த பழங்குடி மக்களை விரட்ட அவர்கள் கையாண்ட முறை மிகவும் கொடுமையானது. முதலில் அவர்கள் வாழும் இடங்கள் அவர்களுடையாதா என்பதற்குப் பத்திரங்களைக் காட்டச் சொன்னார்கள். காகிதத்தைக் கண்டவர் இல்லை.அந்தக் காலத்தில் எழுதப்படாத சட்டங்களும் ஒப்பந்தங்களும் மக்களிடையே இருந்தன. அவர்கள் பயந்து ஓடவில்லை. உடனே ஆங்கிலேயர்கள் அவர்களிடமிருந்து அவர்கள் பிள்ளைகளைப் பிரிக்க ஆரம்பித்தனர். பல்லாயிரக்கணக்கன பிள்ளைகள் பிரிக்கப் பட்டனர். அவர்கள் போன இடம் எங்கே என்பது அப்படியே கேள்வியுடன் நின்று விட்டது. குழந்தைகளை இழக்க மனமின்றி ஓட ஆரம்பித்தனர். ஆங்கிலே யர்களும் காலுன்றினர். இப்படித்தான் உலகம் எங்கிலும் நாடுகளைப் பிடித்துக் கொண்டு எங்கள் ராச்சியத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லைஎன்றும் கூறி வந்தனர். அவர்கள் நரித்தந்திரத்தில் ஜமீன்தார்கள் அடக்கப் பட்டார்கள்.நாடு முழுவதும், இசைந்தோ, இணைந்தோ அல்லது அடங்கியோ அரசுகள் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கினர்.

எட்டயபுரம் நிலைமையைப் பார்க்கலாம். அந்த சமஸ்தானம் இயல், இசை, நாடகம், ஆன்மீகம் என்று இயங்கிக் கொண்டிருந்தது. ஒருவர் இருவரல்ல, எல்லா ராஜாக்களும் இந்த வாழ்க்கை முறையினில் வாழ்ந்து வந்தனர். கட்டபொம்மன் போர்க்குணம் படைத்தவர். அவருக்கு மற்றவைகளில் நாட்டம் இல்லை. குண்டு துளைக்காத கோட்டையைக் கட்டியதிலிருந்தே அவர் அக்கறை எதன்பால் இருந்தது என்று உணரலாம்.

பாஞ்சாலங்குறிச்சி அடுத்து இருந்தது எட்டயபுரம் சமஸ்தானம். அந்த சமஸ்தானத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குச் சென்று கட்டாய வசூல் செய்வது, நகைகளைக் கொடுக்கச் சொல்வது, ஒத்துழைக்காதவர்களை அடிப்பது, அல்லது கொல்லுவது என்று கட்டபொம்மன் மாறிய பொழுது எட்டயபுர ராஜா அதிர்ந்தார். இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் நடந்தன. சுப்பலாபுரம் என்ற கிராமத்தைத் தனதாக்கிக் கொண்ட பொழுது கட்ட பொம்மன் மீது கோபம் கொண்டார் எட்டயபுர மன்னர். ஆனால் அவரால் கட்ட பொம்மனை அடக்க முடியவில்லை.

இந்த சம்பவங்களை வைத்துதான் கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்று தமிழ்வாணன் எழுதினார். ஆட்சி பீடத்தில் இருந்தவர்களில் பலர்நாட்டை விஸ்தரிக்கும் எண்ணத்தில் பிற நாடுகளுடன் போர் செய்வதும், அந்த நாடுகளைக் கைப்படுத்துவதும், பிற நாடுகளைச் சூறையாடிக் கொண்டு வருவதும் உலகம் எங்கினும் நடந்த ஒன்றுதான். பறிகொடுத்தவர் கொள்ளையடிக்கப் பட்டதாகக் கூறுவதும் கொள்ளைஅடித்தவரோ தங்கள் நாட்டு வளத்திற்காகப் பொருள் சேர்ப்பதாகவும்தான் கூறப்பட்டு வந்தது.

தோற்றவன் மற்றவனை திருடன் என்பதும் வென்றவன் அதனை வீரம் என்று சொல்வதும் சர்வ சாதரணமாக நடந்து கொண்டிருந்தது. இதுதான் வரலாறு. ஆக கட்டபொம்மன் பக்கத்தில் அவரை வீரர் என்றுதான் சொல்ல முடியும். பறிகொடுத்த எட்டயபுர சமஸ்தானம் கோபம் கொண்டதும் இயல்பானதே. இவைகள் வரலாற்று நூல்களிலும் இருக்கின்றன. இதுபற்றிய சர்ச்சை கணிணி உலகில் இரண்டு குழுமங்கள் கடுமையான விவாதங்கள் செய்திருக்கின்றன

யாஹூவில் பொன்னியின் செல்வன் குழுமம் இருக்கின்றது. கல்கியின் ரசிகர்களால் ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் இப்பொழுது வரலாற்றை ஆர்வத்துடன் அலசுவதில் கெட்டிக்காரர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டு வருகின்றனர். ஆராய்ச்சியாளர்களும் துணையாக இருக்கின் றனர். நடு நிலைமையுடன் தமிழக வரலாறு பற்றி விவாதம் செய்து வருகின்றனர். அவர்களும் கட்ட பொம்மன் பற்றி விவாதம் செய்துள்ளனர்.

அடுத்து forum hub என்று ஒரு குழுமம் இருக்கின்றது. அதில் வரலாற்றுப் பகுதியில் கட்ட பொம்மன் வரலாற்றை மிகவும் விரிவாக விவாதித்துள்ளனர். கட்டபொம்மன் ஊரை சேர்ந்த ஒருவர் விவாதத்தில் கலந்து பேசி இருக்கின்றார். நான் எழுதியிருக்கும் பல விஷயங்கள் அங்கே விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

கொஞ்சம் கொஞ்சமாக கட்டபொம்மன் எட்டயபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த கிராமங்களையும் கைப்பற்ற ஆரம்பித்த தருணத்தில் அந்தச் சூழலை ஆங்கிலேயர்கள் தங்களுக்குச் சாதகமாகிக் கொண்டு எட்டயபுர ராஜாவிடமிருந்து கட்டபொம்மனைப்பற்றிய பல தகவல்களைப் பெற்றுள்ளனர். மற்ற இடங்களிலும் கட்டபொம்மன் உள் நுழைந்து பணம் பறிப்பதும் மக்களைத் துன்புறுத்துவது, கொலை செய்வது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்ததால் ஆங்கிலேயர்களின் பொறுமையை இழக்க ஆரம்பித்தனர். வரி கொடுப்பதையும் நிறுத்தியதால் கோபம் கொண்டு விசாரணைக்கு அழைத்தனர். இராமநாதபுரம் சென்ற காலத்தில் கைது செய்ய கிளார்க் என்ற ஆங்கிலேயர் ஒருவரை அனுப்பினார்கள். கட்ட பொம்மன் அவரைக் கொன்று விட்டார்.அதுமட்டுமன்றி தப்பி ஓடி வரும் பொழுது பாதையில் உள்ள சில கிராமங்களில் அவருடன் வந்தவர்கள் மக்களுக்கு அதிகமாகத் தொல்லை கொடுத்துக் கொண்டே சென்றனர். இது வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது இது அதிகமான சீற்றத்தை ஆங்கிலேயர்களிடம் உண்டாக்கிவிட்டது. கட்டபொம்மனைப் பிடித்து அழித்தால்தான் மற்றவர்களுக்கு ஓர் பயம் ஏற்படும் அல்லது ஒவ்வொருவராக தைரியம் பெற்று ஆங்கிலேயர்களுக்கு எதிராகி விடுவார்கள் என்ற நினைக்க ஆரம்பித்து விட்டனர்.எனவே கட்டபொம்மனைஅழிக்கும் நோக்கத்தை செயலாக்க திட்டம் தீட்டினர்.

முதலில் கோட்டையை முற்றுகையிட்டு அதனை அழித்தனர். கோட்டையின் ரகசியங்கள், கட்ட பொம்மனின் போர்த் தந்திரங்கள் இவைகளைப் பற்றி சில பாளையக்காரர்களிடமிருந்து அறிந்து கொண்டனர். அவர்களில் எட்டயபுர ராஜாவும் ஒருவர். கோட்டை அழிந்தாலும் கட்டபொம்மன் தப்பி விட்டார். பின்னர் பிடிபட்டார்.

ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனைத் தூக்கிலிட்டது கொடூரமான செயல்.

வரி கொடுக்கவில்லை, பணியவில்லை என்பதற்காக ஒரு மனிதனுக்குத் தூக்கு தண்டனை தருவதா? அப்பொழுதும் ஆங்கிலேயர்கள் நாட்டில் வியாபாரரிகளாகத்தன் இருந்தனர்.காலனி ஆதிக்கம். கந்துவட்டிக்காரன் போல் ஓட ஓட விரட்டிக் கொன்றனர். அவர்களை எதிர்க்க யாருக்கும் துணிவு வராத நிலையில் ஒரே ஒரு மனிதன் துணிவுடன் நின்றாரே. அதற்காக அவர் பெருமைப்படுத்த வேண்டியது நியாமானது. சுதந்திரப் போராட்ட வீரர் என்ற கூற்று பலர் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சுதந்திரப் பிரியனாக வாழ்ந்து உயிரை விட்டவர் என்பதை யாரும் மறுக்க முடியாது

எட்டயபுர மன்னரைக் காட்டிக் கொடுத்தவர் என்பதைவிடத் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சேரக் கூடாத இடத்தில் சேர்ந்து விட்டவர்கள் என்று கூறுவதே அன்றையச் சூழலுக்குப் பொருத்தமானது. வரலாற்றில் இச்செய்திகள் இருக்கின்றன. ஆனால் திட்டமிட்டு, சூதுடனும் வஞ்சனையுடனும் இருப்பவராக எட்டயபுர மன்னரைக் காட்டியது திரையுலகம். இதனைப் பலரும் கூறியதுதான். குழுமங்களின் விவாதங்களைக் கவனித்தால் இதையே வலியுறுத்துகின்றன. வேண்டுமென்று அவர்கள் செய்ததாக நான் கருதவில்லை. அவர்களுக்குக்கிடைத்த செய்திகளை திரைப்பட இலக்கணத்திற்கேற்ப அமைத்துவிட்டனர் என்பது என் கருத்து. அந்த நிகழ்வுடன் சம்பந்தப்பட்ட மன்னரின் பெயரையாவது சொல்லியிருக்கலாம். ஆனால் குடும்பப்பெயரை, அதிலும் பெருமைக்குக் கொடுக்கப்பட்ட பெயரை உபயோகித்ததே இந்த நிலைக்குக் காரணம்.

எது எப்படியாயினும் எட்டப்பன்என்ற சொல்லை இனியாவது துரோகிக்கும் காட்டிக் கொடுப்பவனுக்கும் மாற்றுச் சொல்லாக உபயோகப்படுத்த வேண்டாம் என்று அன்புடன் எல்லோரையும் வேண்டிக் கொள்கின்றேன். ஒற்றுமையே இல்லாத நம் மூவேந்தர்கள் ஒரு நேரத்தில் ஒன்று பட்டார்கள். கடை எழு வள்ளல்களில் ஒருவரான பாரியைத் தந்திரமாகச் சூழ்ச்சி செய்து கொன்றனர். அவன் பெண்களைக் கொல்ல விரட்டினர். அன்று கபிலர்மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அந்தப் பெண்களையும் கொன்றிருப்பார்கள். நம் சரித்திரத்தில் எத்தனையோ செய்திகள் இருக்கின்றன. அவைகளை வரலாற்றுச் செய்திகளாகக் கூறப்படுவதே யல்லாமல் தமிழன் என்ற பெயரினை யாரும் இழிவாகப் பேசவில்லை. அப்படி பேசியிருந்தால் தாங்கிக் கொள்வோமா?

எட்டயபுரத்தாரும் கட்டபொம்மனும் தெலுங்கர்கள். எட்டயபுர மன்னர்கள் அனைவரும் இயல், இசை, நாடகம் வளர்த்தனர். முத்தமிழ்க் காவலராக இருந்தனர். எனவே இனியாவது நாம் இந்தப் பழிச்சொல்லை அகாராதியிலிருந்து நீக்குவோம். இது நம் கடமை. இதுவே என் அன்பு வேண்டுகோள்.

அலைகள் மீண்டும் வரும்