Friday, April 30, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-10

உலகச்சுழற்சியில் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சில மாறுதல்கள் மட்டும் மனத்தை அதிகம் ஈர்க்கின்றன.

கடவுளைப் பற்றிய நம்பிக்கைகளை உடைத்தெறிந்திருக்கின்றார் காரல்மார்க்ஸ். எனவே, பகுத்தறிவு வாதம் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சாகடிக்கப்பட்ட சாக்ரட்டீஸ், மூடப் பழக்க வாழக்கங்களை ஏற்கனெவே சாடியிருக்கின்றார். அவைகளில் முளைத்த காளான்கள் தான் சாதிகள்.

தந்தை பெரியார் சொன்ன பொழுது ஏன் துடித்து எழுந்தோம்?

அவர் பேச்சு மேடைப் பேச்சல்ல; அந்த இடத்தைவிட்டுப் போகவும் தேய்ந்து போக. வீட்டுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஒலி; தன்மானத்தைத் தட்டி எழுப்பிய குரல்;நாம் புரிந்து கொள்ள முடிந்த மொழி.

அவர் பேச்சுக்கு உயிரோட்டம் அதிகம். மனிதனை மனிதன் ஒடுக்கும் கொடுமை வலியைக் கொடுக்க ஆரம்பித்தது. சமுதாயம் விழித்துக் கொண்டுவிட்டது. இந்தியாவில் வல்லபாய் படேல் அவர்களை இரும்பு மனிதன் என்பார்கள். தூங்கிக் கொண்டிருந்த மனிதனைத் தட்டி எழுப்பியவர் அன்புக்கனி வெள்ளைத் தாத்தா. அவருக்குத் தலைமகனாய் அமைந்தார்அறிஞர் அண்ணா.

இந்திய மண்ணில், உள்ளம் கவர்ந்தவர்களுக்கு உறவு கொடுத்துவிடுவோம்.

காந்தி தாத்தா,நேரு மாமா, தந்தை பெரியார், மற்றும் “அண்ணா” என்ற பெயரிலே ஓர் அண்ணா.எனக்கு இந்த உறவுகள் பிடித்திருந்தன.

அடுக்குத் தொடர் தமிழ் பிடித்திருந்தது. ஏற்கனவே உள்ளத்தை ஆட்டிவைத்த சில பிரச்சனைகளுக்கு ஊக்கம் கிடைத்தது. பேசியப்பன் கொடுத்த எல்லாப் புத்தகங்களையும் படித்தேன். அண்ணா எழுதிய "கம்பரசம்", "ரங்கூன் ராதா", கலைஞர் எழுதிய "வாழமுடியாதவர்கள்" புத்தகங்கள் படித்தேன். ஆனால் இந்தப் புத்தகங்களைவிட அண்ணாவின் பேச்சுக்கள் தாங்கி வந்த அந்த சின்னஞ்சிறு புத்தகங்கள்தான் அதிகமாக என்னைக் கவர்ந்தன. அதன் தாக்கம் என் பேச்சுக்களில் காண ஆரம்பித்தது.

எனக்குள் எப்பொழுதும் துணை இருந்தவர்கள் பாரதியும் தந்தை பெரியாரும்.

எங்கு சென்றாலும் துணிச்சல்காரி என்ற பெயரும் தொடர்ந்து கிடைத்தது.

ஒரு நிகழ்ச்சி கூற விரும்புகின்றேன்.

சாதாரணமாக ஒரே ஒரு வீட்டுக்குதான் என் தந்தை அனுப்புவார்; என் பாட்டிவீடு. அம்மாவைப் பெற்றவர்கள். என் தகப்பனார் சத்தியாகிரகப் போராட்ட காலத்தில் எங்களை விட்டுப் போயிருந்த காலத்தில் ஹோட்டலில் மாவரைத்து, வீடுகளில் சமையல் செய்து என்னையும் என் தாயையும் காப்பாற்றியவர்கள்.

ஒரு கிராம முனிசீப் மனைவியாக வாழ்ந்து சீக்கிரமே கணவரைப் பறிகொடுத்து, இரண்டு பெண்களுக்கு ஐந்து நாட்கள் திருமணம் செய்து வைத்து ஓட்டாண்டியாகி, பின்னரும் தன் ஒரே மகனுடன் மகள், பேத்தி இருவரையும் காப்பாற்ற உழைத்த ஒரு மூதாட்டி என் பாட்டி. அவர்கள்.

மதுரையில் கீழ அனுமந்தராயன் கோயில் தெருவில் ஓர் வீட்டில் ஒண்டுக்குடித்தனம் இருந்தார்கள்.

செல்லமைய்யர் வீட்டில் ஐந்து குடித்தனங்கள். எல்லோரும் உறவினர்கள். என் பாட்டியை குப்புச் சித்தி என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்.

அந்த வீட்டிற்கு ஒரு விஷேசம் உண்டு. அந்த வீட்டைப் பஜனை அய்யர் வீடு என்று அழைப்பார்கள். வீட்டுக்கு நடுவில் பெரிய ஹால் ஒன்று உண்டு. அங்கேதான் வாரம் ஒரு நாள் பஜனை நடக்குமாம். பக்கத்து தெருக்களிலிருந்தும் ஆட்கள் வருவார்கள்.

அடுத்து இருந்த மேல அனுமந்தராயன் கோவில் தெருவில் குடியிருந்த வீணை சண்முகவடிவு கூட சிலசமயம் அங்கு வந்து பஜனையில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். வரும்பொழுது தன் மகள் குஞ்சமாளையும் அழைத்து வந்ததுண்டு என்று கூறுவார்கள். அந்த குஞ்சம்மாள் வேறு யாருமல்ல; இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமிதான்.

நான் அந்த வீட்டிற்குச் சென்ற பொழுது பஜனை நடத்துவது நின்று போயிருந்தது. அங்கே சீதாமாமி என்பவரை எனக்குப் பிடிக்கும்; அவருக்கும் என்னை பிடிக்கும். ஆனால், அவர்கள் கணவருக்கு என்னைப் பிடிக்காது. நான் அனாசாரமாகப் பேசுகிறேனாம். ஆமாம், வித்தியாசமாகப் பேசினேன்.

ஆமாம், மத்த ஜாதிக்காரா மேலே பட்ட காத்து நம்ம மேலே படரதே"

காத்துக்குத் தோஷம் இல்லே

அப்போ தண்ணி?"

தண்ணிக்கு தோஷம் இல்லே

தவிர்க்க முடியாதவைகளுக்குத் தனி சமாதானங்கள்!

பாட்டி,நீ சுத்தத்துக்காக எல்லாம் அலம்பறியா, அல்லது மத்தவா தொட்டுட்டான்னு அலம்பறியா? உப்பையும் சர்க்கரையும் அலம்பு பாட்டி!"

அந்த வீட்டில் நான் பொருந்தவில்லை.

சீதாமாமி என்னைத் தனியாகக் கூப்பிட்டு,“பாப்பா, காலம் மாறிண்டு வர்றது. இதுவரை பழக்கப்பட்டுட்டா. நீ சின்னப்பொண்; இப்படியெல்லாம் பேசி மத்தவா வாயிலே விழாதே!“

எனக்குத்தான் எத்தனை பெயர்கள்!

பிறந்த பத்து நாட்களில் ஹோமம் வளர்த்து எனக்கு என் தந்தை வைத்த பெயர் சீதாலட்சுமி. அவர் எங்களை விட்டு ஜெயிலுக்குப் போயிருந்த பொழுது என் தாயார்தான் முதல் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள் அப்பொழுது வைத்த பெயர் குஞ்சம்மாள். எல்லோரும் கூப்பிடும் பெயர் பாப்பா.

மாமியின் அன்பு வார்த்தைகளுக்குக் கட்டுப்பட முயன்றேன்.

நவராத்திரி நேரம் நான் சென்றிருந்தேன். மதுரையில் கோவில்கள் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் கூட பொதுமக்கள் பார்க்கச் சில இடங்களில் கொலு வைத்திருப்பார்கள்.

வெங்கலக் கடைத்தெருவில் தனியார் கொலுமண்டபம் ஒன்றிற்குச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்தது. பாட்டியுடன் சென்று கொண்டிருந்தேன்.

திடீரென்று யாரோ என்னைத் தொடும் உணர்ச்சி. கூட்டத்தில் தற்செயலாக நடக்கக் கூடியதுதான். நான் திரும்பிப் பார்த்தேன்; என் முதுகுப் பக்கமாய் கை வளைந்து என் தோளைத் பிடித்துக்கொண்டு ஒருவன் அசட்டுச்சிரிப்பு சிரித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான்.

அவ்வளவுதான்! நானும் அவனை இறுகப் பிடித்து முதுகில் குத்து குத்தென்று குத்தினேன். எனக்கு எப்படி ஆவேசம் வந்தது என்று தெரியாது. குத்துப்பட்டவன் கீழே விழுந்து எப்படியோ எழுந்து ஓடிவிட்டான். அதற்குள் கூட்டத்தினர் பார்த்து விட்டனர்.

எல்லோரையும் பார்த்தேன்; ஒருவரிடமும் பாராட்டும் முகமோ இரக்க உணர்வோ தெரியவில்லை.

மாறாக ,"சே, இப்படியும் ஒரு பொண்ணா? அடங்காப்பிடாரி! கூட்டம்னா மேலே படாம போக முடியுமா?வெக்கம்கெட்டவ! கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம, ஒரு ஆம்புள்ளையத் தொட்டு அடிச்சுட்டாளே! ஏய் கிழவி, உம் பொண்ண அடக்கிவை. இல்லே,ஒரு நாள் அறுத்துக்கிட்டுப் போய்டும்."

கூட்டமே கோரஸ் பாடியது.

என் மனக்குரலில் பாரதியின் இசை:

பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா

மோதி மிதித்துவிடு பாப்பா-அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"

அவன் முகத்தில் காறித்துப்பவில்லையே என்ற குறை எனக்கு. என் பாட்டி என் கையை இறுகப் பற்றிக்கொண்டு அழுது கொண்டே கூட்டிச் சென்றார்கள்.

நானா தப்பு செய்தேன்? என்னைக் கட்டிபிடிச்சவனை நான் அடித்தது தப்பா?

வெட்கத்தை நாய்க்குப் போடச் சொன்ன பாரதியை பெரிய மனுஷன்னு ஒத்துக் கொள்ளும் இந்த சமூகம், தீமையைக் கண்டு பொங்கி எழும் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கும் பட்டம் “வெட்கம் கெட்டவள்"

மனக்கொதிப்பை என் பாட்டிக்ககாக அடக்கிக் கொண்டு மவுனமாய் நடந்தேன்.

மறுநாளே என்னை எட்டையாபுரத்திற்குக் கூட்டி வந்து விட்டார்கள். என்மேல் மிகவும் பிரியம் வைத்தவர்கள் பாட்டி. அவர்கள் மனம் வருந்தும்படி நடந்துவிட்ட சம்பவத்திற்கு வருந்தினேன். அவன் மட்டும் மீண்டும் கிடைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அவனை அடித்திருப்பேன்.

நான் தூங்கிவிட்டேன் என்று என் பாட்டி அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“குழந்தைய நினச்சா கவலையா இருக்கு. ஏன் இப்படி மாறிட்டா? பேப்பர்லே வந்திருந்தா யாராவது கல்யாணம் செய்துப்பாளா? பொண்ணா வளரலியே! அவ அப்பன் வளர்ப்பு அப்படி; பத்திரமா பாத்துக்கோ!அந்த மீனாட்சிதான் இவளுக்கு நல்ல புத்தி கொடுக்கணும்.“

பாவம் பாட்டி! என் புத்தி கெட்டு விட்டது என்று முடிவிற்கு வந்து விட்டார்கள்.இது அக்கிரஹாரப்பாட்டி. இதுவே கிராமத்துப் பாட்டியாக இருந்திருந்தால், எனக்குப் பேய் பிடித்துவிட்டது என்று பேயோட்டுபவனை அழைத்துவந்து வேப்பிலை அடித்திருப்பார்கள்.

மீனாட்சி புத்திகொடுப்பாள்னா அவள் என் பக்கம் தான் பேசுவாள்! அவள் ராணியாச்சே!

நடந்ததை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். மேலே இடிமட்டும் பட்டிருந்தால் கூட்டத்தைக் காரணமாக நினைத்து ஒதுங்கியிருப்பேன். கட்டிபிடித்தது தற்செயல் நிகழ்வாக எப்படி நினைக்க முடியும்? சாமி கும்பிட வந்த இடத்தில் மனதில் வக்கிரம். அவனையல்லவா பெண்கள் கண்டித்திருக்க வேண்டும்?

பெண்ணே இப்படியிருந்தால் ஆண்களை மட்டும் குறை கூறிப் பயன் என்ன? புதைகுழியில் மூழ்கிவிட்ட பெண்ணின் திறன் மீண்டு வருமா?

பாட்டிக்கும் அம்மாவிற்கும் இன்னொரு கவலை. பெண்ணுக்கு 15 வயதாகிவிட்டது; யாராவது கல்யாணம் செய்து கொள்வார்களா என்று.

நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். புருஷன் என்ன தப்பு செய்தாலும் பெண்டாட்டி பொறுத்துக்கொள்ள வேண்டும். இது என்னால் முடியாதது. அதனால் அவர்கள் கவலையைப் பற்றி கவலைப்படவேண்டாம்.

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருக்கின்றது,"என்று என் பாரதி குமுறினானே!

இந்தக் கொடுமை நீங்க என்ன செய்யலாம்?

ஓடி விளையாடி உற்சாகமாக இருக்க வேண்டிய வயதில் ஊர்க்கவலை! அந்தக்காலத்தில் இப்படி ஒரு பெண். அதுவும் கிராமத்தில் வளர்ந்த பெண்!

அக்காலச்சூழல்,படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், பழகிய மனிதர்கள், வளர்ந்த குடும்பம் இவைகளால் உருவாகப்பட்ட ஒருத்தி. ஆனால், பிற்காலத்தில் அவள் மேற்கொண்ட பணிக்கு உறுதியான நெஞ்சுக்கு உரமிட்ட காலம்.

மனிதனின் வளர்ச்சியில் பிள்ளைப்பருவம் மிகவும் முக்கியம் வாய்ந்தது.

(ஊர்வலம் தொடரும்)

Wednesday, April 28, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 05

படைப்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் திறன் வேண்டும். எனக்குப் படிக்கும் ஆர்வம் வளர்ந்ததுவும் ஒரு கதையே!

பாரதி இல்லத்தில் பிறந்தது ஆர்வம்

சிறுமியாய் இருக்கும் பொழுது மாலை நேரங்களில் எங்கள் தெருவில் இருக்கும் சாம்பு மாமாவிடம் போய் உட்கார்ந்து கொள்வேன். அவர் பாரதி பாடல்களை எனக்குப் பாடக் கற்றுத்தருவார். அதுவும் பாரதி எப்படி பாடினாரோ அதே ராகங்களில், அதே பாணியில் சொல்லித் தருவார். பாட்டின் அர்த்தங்களையும் விளக்குவார். அப்பொழுது சுதந்திரம் பெறாத காலம். எனவே எங்கள் பாட்டுக்களில் வேகம் அதிகம் இருக்கும்.

கையில் ஒரு நோட்டுப் புத்தகம் எடுத்துச் செல்வேன். அவர் சொல்லும் பாட்டுக்களை எழுதிக் கொள்வேன். அவர் முழுப் பெயர் திரு.சாம்பசிவ அய்யர். பாரதியின் தாய்மாமன். படிக்கும் ஆர்வத்திற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டவர் அந்த மாமா தான்.ஆர்வம் பிறந்த இடம் பாரதி பிறந்த இல்லம்.

கல்கியின் சந்திப்பு ஆசைக்கு வித்திட்டது

பாரதிக்கு நினைவு மண்டபம் கட்டும் விஷயமாக எட்டயபுரத்திற்கு ராஜாஜி அவர்களும் கல்கி அவர்களும் வந்திருந்தனர். அரண்மனை விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்தனர். என் அப்பா சுதந்திரப் போராட்டத்தில் மும்முறை சிறைக்குச் சென்றவர். எனவே எட்டயபுரத்திற்கு வரும் தலைவர்கள் அரண்மனையில் தங்கினால் போய்ப் பார்ப்பார். மேலும் எங்கள் ஊர் ராஜா, வரும் விருந்தினர்களைக் கவனிக்கச் சிலருக்குப் பொறுப்பு கொடுத்து வைத்திருந்தார். அவர்களில் அப்பாவும் ஒருவர்.அவர் போகும் இடங்களுக்கு என்னையும் கூட்டிச் சென்று அவர்களை நமஸ்காரம் செய்யச் சொல்லுவார். அன்றும் வழக்கம் போல் ராஜாஜி அவர்களையும் கல்கி அவர்களையும் நமஸ்காரம் செய்தேன். திரும்பி வரும் பொழுது இருவரைப் பற்றியும் அப்பா நிறைய பேசினார். அந்த வயதில் மனத்தில் பதிந்தது கல்கி கதை எழுதுகின்றவர் என்பதுதான். அதன் பின்னர் அப்பா வாங்கிப் போடும் விகடன், கல்கியைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த வயதிலேயே கல்கியின் வரலாற்றுக் கதைகளை விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன்.

கற்பனைத் தேரில் ஏற்றிவிட்டவன் பாரதி

பாரதி திருமணமான பிறகு எட்டயபுரம் வந்தபொழுது தான் பிறந்த இல்லத்திற்கருகில் உள்ள வீட்டில் கொஞ்ச காலம் குடியிருந்தார். அதே வீட்டில் நாங்களும் குடியிருந்தோம். என்னைக் கற்பனையில் மிதக்கப் பழக்கிய வீடு. அவன் தொட்ட இடமெல்லாம் நான் தொட்டு மகிழ்ந்தேன்

மாடியென்ற ஓர் சின்ன அறை.கற்பனையில் பாரதியுடன் அரட்டை.

கொல்லைப்புறமும் சின்னதுதான். அதனால்தான் காணி நிலம் வேண்டினானோ?அவன் நினைவுகள் என்னைத் தாலாட்டின.

ஏழு வயதில் எனக்குக் கிடைத்த விளையாட்டுத் தோழன் பாரதி

இலக்கியமும் வரலாறும் என்னைப் பிடித்துக் கொண்டன

நான் படித்த பள்ளியும் பாரதி படித்த பள்ளி. எங்கள் ஆசிரியர்களும் பாரதியைப்பற்றி அதிகமாகப் பேசுவார்கள். அந்தக் காலத்துச் சூழ்நிலையில் இருந்த சுதந்திர தாகம் அப்படி பேச வைத்தது.

துரைராஜ் என்று ஓர் ஆசிரியர். என் அப்பாவுக்குச் செல்லப் பிள்ளையானார். காரணம் அவர் நிறைய புத்தகங்கள் படிப்பார்.

என் தந்தை எனக்கு வரலாற்றுப் புத்தகங்கள் கொடுத்தால் என் ஆசிரியர் இலக்கியப் புத்தகங்கள் கொடுத்தார்.

புதுமைப்பித்தனிடம் அழைத்துச் சென்றவர் சிதம்பர ரகுநாதன்

முத்து என்று இன்னொரு ஆசிரியர் வந்தார். திரு.பாஸ்கரத்தொண்டைமான் மற்றும் தொ.மு.சி.ரகுநாதன் ஆகிய இருவரும் இவருக்குத் தாய்மாமன்களாவார். வாத்தியார் துரைராஜின் தங்கையை முத்து மணந்தார். அதனால் நெல்லைக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. பெரியவரை ஒரு முறை பார்த்திருக்கின்றேன். ஆனால் ரகுநாதன் அவர்களைப் பல முறைப் பார்க்க முடிந்தது. பழகவும் முடிந்தது. அவருடைய எழுத்துவன்மை அப்பொழுது எனக்குத் தெரியாது. நான் ஒரு பள்ளி மாணவி.

பாரதியைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்பார். கல்கி கதை படிப்பதைச் சொன்னேன். அப்பொழுது அவர் எனக்குச் சில பத்திரிகைகள்,புத்தகங்களைக் கொடுத்து நான் படிக்க வேண்டும் என்று சொன்னார்.

வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டியன இருக்கும் புத்தகங்கள் என்றார். அத்தனையும் புதுமைபித்தன் எழுதியவைகள். எட்டயபுரம் சென்று அவைகளைப் படித்தேன். ஆனாலும் அப்பொழுது எனக்கு கதைபடிக்கப் பிடித்தது. புத்தகங்களைப் பத்திரமாக வைத்திருந்தேன்.

ஜெயகாந்தன் வருகை

படித்து முடித்து களப்பணிக்குச் சென்றவுடன் திடீரென்று பெரிய மனுஷியாகிவிட்டதைப் போன்று உணர்ந்தேன். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பணி. சமுதாயத்துடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். புதுமைப்பித்தனை மீண்டும் படிக்க ஆரம்பிக்கவும். ஜெயகாந்தனின் எழுத்துக்களும் உடன் புகுந்தன. ஏனோ அவர்கள் இருவரும் எனக்கு உறவுகளாய் உணர்ந்தேன். அப்பொழுது ஒருவர் உயிருடன் இல்லை. இன்னொருவரின் முகம் பார்த்ததில்லை

நான் செல்லும் மூலை முடுக்குகளுக்குக்கூட என் சிந்தனையுடன் அவர்கள் எழுத்துக்களும் தொடர்ந்தன

வியப்பளித்த தி.ஜ.ரா

நான் வேலைக்குப் போன இடத்தில் சோமமகாதேவன் என்ற ஓரு எழுத்தாளரும் பணியாற்றிக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியவர். எல்லாம் கிராமீயக் கதைகள். அவருக்கு நாடக உலகத்திலும் பயிற்சி உண்டு. அக்காலத்தில் இத்தகைய திறனுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைகள் தரப்பட்டன. அவர் என் படிக்கும் ஆர்வம் பார்த்து இன்னொரு பெயரைக் கூறிப் படிக்கச் சொன்னார். தி.ஜானகிராமன் அவர்களின் எழுத்தைப் படிக்க ஆரம்பித்தது அப்பொழுதுதான். அவர் எழுத்து எனக்கு பிரமிப்பைக் கொடுத்தது. இவர்கள் எல்லாம் மனிதர்களுக்குள் புகுந்து, உணர்ந்து பார்த்து வந்து எழுதுகின்றார்களோ என்ற வியப்பு.

இவர்களால் எனக்குள் ஓர் ஆசை உதித்தது. நானும் ஒரு நாள் மனிதமனங்களைபற்றி எழுத வேண்டும் என்பதே!

நானும் எழுத்தாளர்கள் குடும்பத்தில் ஒருத்தியானேன்

இன்னொரு எழுத்தாளரும் அங்கு வேலை பார்க்க வந்து சேர்ந்தார். அவர் பெயர் ருத்ர.துளசிதாஸ். இன்று 47 புத்தகங்களுக்குச் சொந்தக்காரர். அவர் என்னை எழுதத்தூண்டியது மட்டுமன்றி என்னை எழுத வைத்து, என் கதையைப் பத்திரிகைக்கும் அனுப்பினார். மரபுக்கவிதை எழுதக் கற்றுக் கொடுத்தவரும் அவரே. இன்னொரு எழுத்தாளரையும் கண்டு பிடித்தார்.

ஓ.எஸ். கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரிலும் அருள் சுடர் என்ற பெயரிலும் பல கதைகள் வெளி வந்திருக்கின்றன. விகடனில் என்னுடைய ஒரு கதை முத்திரை பெற்றதென்றால் அவருடைய பல கதைகளுக்கு முத்திரை கிடைத்தன. அவர் மகள் பெயருக்கு பூரணி என்று பெயர் வைத்தார். அப்பொழுது எங்கள் நண்பர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சிமலர் வெளிவந்து கொண்டிருந்தது. நாங்கள் தேனாறு என்ற கையெழுத்துப் பத்திரிகையும் நடத்திவந்தோம். நாங்களும் மதுரையில் இருக்கும் நா.பார்த்தசாரதி உட்பட சில எழுத்தாளர்களும் சேர்ந்து ஒரு சிறுகதைப் புத்தகம் வெளியிட்டோம்.

நட்புக்கு இலக்கணமாய் வந்தார்கள் மணியனும் சாவியும்

வளர்ச்சிப் பணிகளைப் பார்க்க விகடன் ஒரு பத்திரிகையாளரை அனுப்பியிருந்தது. அவர்தான் மணியன். அவரைக் கிராமங்களுக்கு அழைத்துச்சென்று சுற்றிக் காண்பிக்கும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. அன்று ஆரம்பித்த நட்பு அவர் சாகும் வரை நீடித்தது. என் குடும்பத்தில் ஓர் அங்கமானார். மணியன் விகடனில் வேலை பார்க்கும் பொழுது அவருக்கு மிகவும் பிடித்தமானவர் ஜெயகாந்தன். இருவரும் கடற்கரைக்குச் சென்று உட்கார்ந்து பேசுவார்கள் என்று மணியன் கூறியிருக்கின்றார். விகடன் அலுவலகம் சென்ற பொழுது சாவியும் அறிமுகம் ஆனார். அவர் நட்புக்குரிய நல்ல மனிதர். அவரும் எனக்கு நெருங்கிய நண்பரானார்.

சாவியும் மணியனும் இரு வேறு திசைகளில் திரும்பிய பொழுதும் என்னுடன் கொண்ட நட்பைமட்டும் மாற்றவில்லை.

இந்தத் தொடரின் நாயகன் ஜெயகாந்தனை மட்டும் பார்க்க பல வருடங்களாயின. 1970ல் தான் பார்க்க முடிந்தது. ஆனால் அவர் படைப்புகள் 60க்கு முன்னால் என்னிடம் வந்துவிட்டன. புத்தகங்களும் அவைகளின் படைப்பாளிகளும் எனக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை.பிரபலமான எழுத்தாளர் ஒருவரை ஓர் மூதாட்டி தன் நண்பர் என்று கூறுவதை நம்புவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இப்பொழுது கதை சொல்லிவிட்டதால் நம்பிக்கை பிறந்திருக்கும்.

என் வாழ்க்கைப் பயணத்தில் சக பயணிகள் பலர் பத்திரிகை உலகைச் சேர்ந்தவர்கள்.அவர்களில் முதன்மையானவர்கள் மூவர்: ஜெயகாந்தன், மணியன் மற்றும் சாவியுமாவார்கள்.

ஜெயகாந்தனின் சில கதைகள் உருவானதைப்பற்றிப் நாங்கள் பேசியிருக்கின்றோம். பொதுவாக அவர் கதைகளைவிட என் அனுபவங்களைப்பற்றி அதிகம் பேசினோம். அரசியலும் பேசுவதுண்டு. என் அனுபவங்கள் ஒன்றுக்கு அவர் கூறிய கருத்துக்களைப் பார்க்கலாம்.

மோகமுள்ளின் அவதாரங்கள்

தி.ஜ.ராவின் கதைகள் எனக்குள் தங்கி என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன. மோகமுள்ளில் பாலுவின் மன நிலையை யதார்த்தமாகக் கொண்டு சென்றிருந்தார். அப்படியும் இருக்க முடியுமா என்று எனக்குள் தவித்த கேள்விக்கு வேறு ரூபத்தில் ஒருவரைப் பார்க்க நேரிட்டது.

அவர் பள்ளிப் படிப்பு முடிக்கும் முன்னர் நாற்பது வயதான பெண்மணி ஒருத்தி புதிய விளையாட்டை அவருக்கு அறிமுகப் படுத்தினாள். அவருக்கு அது பிடித்திருந்தது. அந்த விளையாட்டிற்கு யார் கூப்பிட்டாலும் மகிழ்வுடன் பங்கு கொண்டார். நாட்கள் செல்லச் செல்ல வட்டம் குறுகியது. அந்த வட்டமும் புள்ளிவடிவாகி, அவரைத் தேடி வருகின்றவர்களை விடுத்து அவர் விரும்புகின்றவர்களுடன் விளையாட்டைத் தொடர்ந்தார். அந்த பட்டியலும் குறுகி , சிறுத்து மறைந்தும் போனது.

ஜே.கேயுடன் இந்த மன நிலைபற்றிப் பேச்சு வந்தது. "தவறு என்று திருந்திவிட்டானோ?“என்று கேட்டேன்.

அவர் பதில் முதலில் வியப்பைக் கொடுத்தாலும் அதன் யதார்த்தம் பின்னர் புரிந்தது.

எப்பொழுதும் சரி,தப்பு என்று நினைத்திருக்க மாட்டான். யதார்த்தமாகக் கிடைப்பதை அனுபவித்து வந்திருக்கின்றான்.காலம் மாற மாற ரசனைகளும் ஈர்ப்புகளும் மாறுவது இயற்கை. அதற்கேற்ப அவன் செயல்களும் மாறி வந்திருக்கின்றன."

இது எல்லோருக்கும் பொருந்துமா?

அப்படிச் சொல்ல முடியாது. சிலர் வாழும் சூழலில் தங்களுக்கென்று ஒழுக்க விதிகளை வகுத்துக்கொண்டு இது சரி, இது தவறு என்று தங்களை மாற்றிக் கொள்பவர்களும் உண்டு. .

இப்படியும் ஓர் மனிதன்

இப்படிப் பேசிக்கொண்டு வரும் பொழுதே எனக்கு ஒருவனின் நினைவு வந்தது. அவன் பெயர் பெரியகருப்பன். மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவன். ஓர் செல்வந்தரின் அடியாள். எஜமான் காட்டுகின்ற ஆளின் கையை, காலை வெட்டி ஜெயிலுக்குப் போகின்றவன். அவன் சிறைக்குப் போயிருக்கும் காலத்தில் அவன் தாய்க்கு ஜீவனத்திற்குப் பணம் கொடுத்து விடுவார். எனவே கருப்பனுக்கு அது ஓர் வேலை. பாவ புன்ணியம்பற்றி அவனுக்குத் தெரியாது. அவனைப் பெற்றவளும் மகனின் வேலையாகத் தான் நினைத்தாள்.

சிறையிலிருந்து வரும் பொழுது முதலில் என் வீட்டிற்குத்தான் வருவான். அவனுக்கு நான்,அவன் அன்பான அக்கா. அவன் செய்வது தவறு என்று நான்தான் சொல்லிக் கொண்டு வந்தேன்

பழகிபோச்சு அக்கா. பாவபுண்ணியம்லாம் நேக்குத்தெரியாது. எஜமான் சொல்றதைச் செய்வேன்.

அவன் ஒரு அம்பு;அவ்வளவுதான்! இத்தகைய அடியாட்களைக் கொத்தடிமை என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது. மனிதர்கள் இப்படியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதுதான் உண்மை.

அந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போக விட்டு அவனுடன் தொடர்பில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து அவன் என்னைத் தேடி கோயமுத்தூருக்கு வந்தான். அப்பொழுது நான் கர்ப்பிணி. அவனைப் பார்க்கவும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது

எப்படி கண்டு பிடிச்சு வந்தே?எங்கே இருக்கே? கல்யாணம் ஆச்சா?

நீங்க எங்கே போனாலும் உங்களைப் பத்தி நான் விசாரிச்சுக்கிட்டு வந்தேன். நீங்க போனப்புறம் நீங்க சொன்னது என்னை உறுத்திக்கிட்டே இருந்தது. இதே ஊரில் இருந்தா எங்க எஜமான் சொல்றதைக் கேட்டுத்தான் ஆகணும். நான் ஊரைவிட்டே போய்ட்டேன். நான் இருக்கற லட்சணத்துக்கு கல்யாணம் எதுக்கு அக்கா? இப்போ கூலிவேலை செய்து பிழைக்கறேன். நீங்க புள்ளே உண்டாயிருக்கிற விஷயம் கேள்விப்பட்டேன். பழனி கோயிலுக்குப் போய் நம்ம முருகன் சாமியை உங்களுக்காக வேண்டிக்கிட்டு பிரசாதம் கொண்டாந்திருக்கேன். இந்தாங்க!

அவன் பேச்சு என்னை நெகிழ வைத்தது. அவன் கைகளில் பிரசாதம். அந்தக் கைகளில் முகம் புதைத்து அழுதேன். குழந்தை மனமும் பாசமும் என்னை உருக்கிவிட்டது.

அந்தக் கைகள் பலரை வெட்டிய கைகள். ஆனால் எனக்கு? என் மீது பாசம் கொண்ட ஒரு குழந்தையின் கைகளா அல்லது பரிவு காட்டும் தாயின் கரங்களா?


அந்தக் கைகள் உணர்த்திய அன்பு என்னை மெய் சிலிர்க்க வைத்தது.

சில நேரங்களில் சில மனிதர்கள்

இது கதையல்ல;இதுதான் நிஜம்

(தொடரும்)

நன்றி திண்ணை

Monday, April 26, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-09


பார்ப்பவையெல்லாம் இதயத்தில் பதிந்து விடுவதில்லை. மனம் எங்கோ லயித்து இருக்கும் பொழுது பார்வையில் படும் பல கவனத்தை ஈர்ப்பதில்லை. சில சாதரணமாகத் தாண்டிப் போய்விடும். சிலவற்றை நாம் பெரிது படுத்தாமல் தெரிந்தே ஒதுக்கி விடுகின்றோம். மிச்சமிருப்பவை எண்ணக்கிடங்கில் தங்கிவிடும். தூசிதட்டி எடுப்பதுவும் உண்டு, இல்லையெனில் தேவையில்லையெனத் தூக்கி எறிவதும் உண்டு.

எண்ணக்கிடங்கு குப்பைக் கிடங்காக மாறுவதும் உண்டு.

இத்தனையும் பெரும்பாலானோர் இயல்பு. சிலர் அவைகளை வெளிப்படுத்தும் பொழுது வியந்து போகின்றோம். அப்பொழுது கூட அவைகள் நாம் துக்கி எறிந்தவைகள் என்பதை உணர்வதில்லை.

என்னைப் பொறுத்தவரையில், குப்பைகளைக்கூடச் சுத்தப்படுத்திச் சேமித்து வைத்துக் கொள்வேன். மதுரையில் விதைத்த விதை, முளைத்துச் செடியாகியது எட்டையாபுரத்தில்தான். அதிலும் பெரும் பங்கு வகிப்பது இப்பொழுது புலம்பெயர்ந்து சென்ற இடமும், அங்கே உணர்ந்த நிகழ்வுகளும்.

எட்டயாபுரத்தையும் நடுவிற்பட்டியையும் இணைக்கும் பாதையில் அமைந்திருந்தன பள்ளியும், சினிமாத் தியேட்டரும். எங்கள் ஹோட்டல் தியேட்டரை ஒட்டியிருந்தன. அதற்கு இருவாயில்கள். முன்வாயிலும் பின்வாயிலும் தெருவை நோக்கி அமைக்கப் பட்டிருந்தன. பின் வாயிலை ஒட்டி ஒரு சின்ன ஓட்டு வீடும், குளியல் அறையும் கழிப்பறையும் கட்டப் பட்டிருந்தன. நடுவில் திறந்தவெளி முற்றமும் ஒரு சின்னத் திண்ணையும். இருந்தது.

சிலிர்ப்பைத் தரும் வயது “டீன் ஏஜ்“. கனவுகளில் மிதக்கும் காலம் பருவகாலம். மயக்கத்தில் துள்ளித் திரியும் பருவம். எனக்கோ அப்பொழுதே முதுமை காலம் தொடங்கி விட்டது.

பத்திரிகைகள் 9 வயதிலேயே படிக்க ஆரம்பித்துவிட்டேன். சிறுகதை, துணுக்குகளுடன் தொடர்கதைகளும் படித்தேன். எல்லா வார இதழ்களும் மாத இதழ்களும் கிடைத்தன. இத்துடன் தினசரிப் பத்திரிகைகள். கதைகளில் ஆரம்பித்த பழக்கம்,தலையங்கம் படித்தபின்னரே கதைகள் படிக்கும் நிலைக்கு மாறினேன். பத்திரிகையில் ஓவியங்கள், ஏன் விளம்பரங்களைக் கூட ரசிக்க ஆரம்பித்தேன். இந்த நிலையில் தான் வீடு மாற்றம் நிகழ்ந்தது.

புது இடத்தில் என் தந்தை எனக்கு இரு புத்தகங்கள் கொடுத்தார்.

ஒன்று காந்திஜியின் "சத்தியசோதனை";

இன்னொன்று வீரசவர்க்கார் எழுதிய நூலின் மொழி பெயர்ப்பு நூல்

எரிமலை

பாரதி ஏற்கனவே படித்து விட்டேன். படிக்கிறேன் என்று என் தந்தையை நான் ஏமாற்ற முடியாது. கேள்விகள் கேட்பார். சரியான பதில் சொல்லாவிட்டால் பிரம்படி. கசை அடிகளில் நடனமாடிய கதைகள் கேள்விப் பட்டிருக்கின்றோம். பள்ளிப் பாடங்கள் சரியாய்ப் படிக்காவிட்டலும் பெற்றோரிடம் அடி வாங்கிய கதைகளும் தெரியும்.

என் தந்தை வித்தியாசமானவர். மகளுக்கு சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். பிற்காலத்தில் நேருஜி தன் மகளுக்கு உலக வரலாற்றைக் கடிதங்கள் மூலமாக எழுதிய செய்தி தெரியவும் என் தந்தையின் மனத்தில் எங்கிருந்து தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால் இவர் கையாண்ட முறைகளால் எங்களுக்குள் இடைவெளி அதிகமாகிக்கொண்டே போயிற்று.

என் சந்தேகங்களைத் தீர்க்க இன்னொருவர் கிடைத்தார்.

எங்கள் ஹோட்டல் ஒரு சின்ன சமஸ்தானம் போல் இருந்தது. அங்கு சமஸ்தான வித்துவான்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒன்று நாதஸ்வர வித்துவான் நீராறு அண்ணாவி. அவர் நிகழ்ச்சிகளுக்குப் போன நேரம் போக மற்ற காலங்களில் எங்கள் ஹோட்டல்தான் வாசஸ்தலம்.

என் பாட்டுப் பயிற்சி நின்று போனது. என் தந்தை சொன்ன காரணம் “என் பெண்ணுக்குப் பெண்பார்க்கும் நிகழ்ச்சி கிடையாது. அவள் ஜாதகம் சரியில்லை. ஆண்பிள்ளைபோல் வளர்ப்பேன். B. A. வரைக்கும் படிப்பாள். விமானத்தில் பறப்பாள்.“

அக்காலத்தில் அக்கிராமத்தில் ஒரு பெண்ணின் உயர்ந்த படிப்பாக இருந்தது பெண் பட்டம் வாங்குவது, அடுத்து விமானத்தில் பறப்பது என்பதும் உச்சக்கட்ட ஆசை. பின்னால் ஒரு முறையல்ல பல முறை, பல நாடுகள் விமானத்தில் பறந்து விட்டேன்.இன்னும் பறந்து கொண்டிருக்கின்றேன்.

இந்த சோதிடம் தான் குழப்பம் ஏற்படுத்தியது. எங்கோ உருளும் உருண்டைகள் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்று புரியவில்லை. ஆனாலும் இதுபற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அப்பொழுது ஏற்படவில்லை.

அண்ணாவி அன்புடன் பழகுவார். அவரிடம் என் ஆதங்கங்களைக் கூறுவேன். அவ்வளவுதான்.

இன்னொருவரின் பெயர் சுப்பையா பிள்ளை. காங்கிரஸ்காரர். அவரும் எப்பொழுதும் கதர்தான் உடுத்துவார். நான் கதருடன் சீட்டித் துணியும் உடுத்த ஆரம்பித்தேன். சுப்பையாபிள்ளையிடம் என் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். அவரும் அயராமல் பதில் கொடுப்பார்.

திலகர்,கோகுலே இருவரின் கோட்பாடுகளைக் கூறினார். சுபாஷ் சந்திரபோஸ் பற்றி நிறையவே சொன்னார். சிப்பாய் கலகம் முதல் அமிர்தசரஸில் நடந்த ஜாலியன்வாலா படுகொலைபற்றி வரையும் கூறினார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைகள், இந்து-முஸ்லீம் கலவரம், மகாத்மாகாந்தியின் கொலை இவைகளைப் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்ததுடன் புத்தகங்களும் படிக்கக் கொடுத்தார்.

அவர் கொடுத்த இன்னொரு புத்தகம் புதிய ஆர்வத்தைக் கொடுத்தது. அது காரல் மார்க்ஸின் பொது உடைமைக் கொள்கைகள் பற்றிய புத்தகம். லெனின் பற்றிக் கூறியதுடன் ஸ்டாலின் மேல் பிரமிப்பு ஏற்படும் வண்ணம் ஒரு இரும்பு மனிதராகச் சித்தரித்தார். அந்த பிரமிப்பு ஏற்படுத்திய ஈர்ப்பில் முதலாளித்துவம், தொழிலாளித்துவம் பற்றியும் கூறினார்.

அவருக்குத் தெரிந்ததை அவர் கூறினார்.

என் புரிதல் சக்திக்கேற்ப ஏதோ புரிந்து கொண்டேன்.

அவர் ஒருகேள்வி கேட்டார்.

மாகாளி ருஷ்யாவில் ஏன் பார்வை வைத்தாள்?அவள் பார்வை பட்டவுடன் யுகப்புரட்சி எழுந்தது என்று பாரதி கூறுகின்றார். அவர் நாட்டு சுதந்திரம் வேண்டியவர். மனித உணர்வுகளைத் தூண்டிவிடும் பாடல்கள் பாடியவர். “தனி ஒரு மனிதனுக்குணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்“ என்று கூறுகின்றாரே. இவைகளைச் சிந்தித்துப் பார்த்தாயா?

அன்று முதல் இக்கேள்வி என் மனத்தில் தங்கி, கிடைக்கும் விடைகளை சரியா என்று சிந்திப்பேன். அவர் பதில் கூறவில்லை. என்தேடல்களுக்குக் கேள்விகளே மலையென வளர ஆரம்பித்தது.

தேடல்கள் முக்கியமானது.

சில மலர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை என்று அன்று பல மாதங்கள் ஒரு வீட்டில் காத்து நின்ற தமிழ்த் தாத்தாவின் தேடலில் குறிஞ்சிப்பாடல் முழுமையானது. தேடிச்சேர்த்துப் பின் தொகுக்கப்பட்டது பெரிய புராணம்.

இன்று தேடலின் திசை மாறியுள்ளது.இது காலத்தின் கட்டாயம்.

தேடலில் நான் அலுக்கவில்லை. பதிலாக அதில் ஒருவகை உற்சாகம் அடைய ஆரம்பித்தேன். இன்று வரை ஏதாவது ஒரு தேடலில் இருந்து கொண்டே இருக்கின்றேன். வெற்றிகளும் தோல்விகளும் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தேடலுக்கும் என்மேல் பிரியம். சில சமயம் தானாக அது என்னை வந்து சேரும்.

அப்படிஒரு தேடல் என்னிடம் வந்தது மட்டுமன்றி என்னை ஒரு புதிய பாதைக்கும் அழைத்துச் சென்றது. என் கடைக்கு பேச்சியப்பன் என்று ஒருவர் பால் கொண்டுவந்து கொடுப்பார். அவர் ஒரு மாட்டுக்காரர்;பால் வியாபாரி;எழுதப்படிக்கத் தெரியாதவர். ஆனால், நன்றாகச் சிந்திக்கத் தெரிந்தவர். படித்தவன்தான் அறிவாளி என்பது இல்லை என்பதற்கு எடுத்துக் காட்டும் மனிதனாக இருந்தார்.

சுப்பையா பிள்ளையுடன் எங்கள் நூலக அறையில் உட்கார்ந்து பேசமுடியும். ஆனால் பேச்சியப்பனுடன் என் வீட்டுக்குள் உட்கார்ந்து தான் பேசுவேன்.

அவர் நிறைய புத்தகங்கள் எடுத்து வருவார்.சின்னதாக இருக்கும். வானொலிப்பேச்சு அல்லது மேடைப் பேச்சுக்கள். அடுக்குத்தொடர் தமிழில், வாசிக்கும் பொழுதே குரலுக்கு ஓர் கம்பீரம் வரும் எழுத்துக்கள். இளைஞர்களின் மனத்தைச் சுண்டி இழுக்கும் வசீகரம் படைத்த எழுத்து. அவைகள் அத்தனையும் பகுத்தறிவு வாதங்கள்.

அந்த எழுத்துக்களுக்கும் ஒரு மூலவர் இருந்தார். அந்த வெண்தாடி மனிதர் என்னை நன்றாகவே உசுப்பி விட்டார்.எனக்குள் போராட்டம்.

என் பிஞ்சுப் பருவத்தில் என் மனத்தில் ஒட்டிவைத்த முருகன் சிரித்துக்
கொண்டிருந்தான். குடிவந்த பாரதியும் பாடிக் கொண்டிருந்தார். என்னைக் கவர்ந்த காந்திஜியும் அமைதியாக அமர்ந்திருந்தார்.இப்பொழுது நுழைந்தவர்கள் சமுதாயச்சிற்பி தந்தை பெரியாரும், அடுக்குத்தொடர்ப் பேச்சு மன்னர் அறிஞர் அண்ணாவும்.

இந்த வாழ்க்கை என் 14 வயது முதல் ஆரம்பமாகி இன்றுவரை தொடர்ந்து வருகின்றது.இப்பொழுது இன்னும் பலர் நுழைந்துவிட்டனர்.

நான் அரசியல்வாதியல்ல; ஆரோக்கியமான சமுதாயத்தை விரும்புகிறவள் நான். என் படிப்புணர்வும், அதன் மூலம் நான் அறிந்தவர்களும்,புரிந்துகொண்டவர்களும் என்னில் ஏற்படுத்திய தாக்கத்தினை என் அனுபவங்கள் காட்டும்.

இந்த சமுதாயம் பல சோதனைகளுக்குப் பிறகு ஓர் அருமையான அமைப்பை உருவாகிக்கித் தந்திருக்கின்றது. குறைகள் இருக்கலாம்;ஆனால்,நிறைகள் நிறைய உள்ளன. நாம் சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த நன்மைகளைச் செய்யவேண்டும்.

என்னுடைய எண்ணங்கள் சமுதாயநலப் பணிகளின் கோர்வைகள்

(ஊர்வலம் தொடரும்)

Saturday, April 24, 2010

மரத்தடியில் முக்கனிகள்-02


தெய்வப் பழம் தனி ருசியைக் காட்டிட்டுது. பொண்டாட்டியப் பாத்து விபரம் கேட்டான்.

பாவம் அந்த அம்மா! இந்தக் காலமா இருந்தா அடுக்கடுக்கா பொய் வந்திருக்கும். சினிமா,டி.வி பாக்கறாங்களே!

அந்த அம்மா உண்மையைச் சொல்லிடுத்து. விடுவானா புருஷன்?

"அதென்ன சாமி கொடுத்ததுன்னு கதை சொல்றே? என் முன்னால் இன்னொண்ணு வரவழச்சு காட்டு,"ன்னு சொல்லிட்டான்.

"சரிதான் போய்யா." என்று சமஉரிமைக்குரலில் பேச இந்தக் காலம் இல்லியே! கடவுளைக் கூப்பிட்டாங்க அந்த அம்மா. அதான் சிவன் அய்யா காத்துக்கிட்டே இருந்தாரே!

உடனே அந்த அம்மா கைய்யில் இன்னொரு மாம்பழம் வந்துடுச்சு.

புருஷன் அரண்டுட்டான். ஆம்புளங்க அவ்வளவுதான். ஜம்பமா பேசத்தான் தெரியும். பொண்டாட்டி நிமிந்துட்டா அடங்கிப் போய்டுவான்.

அப்போ அவன் ஒண்ணும் பேசல்லே.வியாபாரத்துக்குப் போனவன் போனவன் தான்; வரவேயில்லே.

புனிதம்மா வருஷக் கணக்கா காத்திருந்தாங்க. மதுரைலே இருக்கான்னு தகவல் கிடைச்சது. புருஷனைப் பாக்கப் புறப்பட்டுட்டாங்க. தைரியசாலிதான்!

கண்ணகி காலமா இருந்தா சாகுற வரை வூட்டுக்குள் இருந்திருப்பாங்க.

வூட்லேயே இருந்திருக்கலாம். அந்த அம்மாவை எலும்புப் பேயாக்கிடணும்னு சிவக்கடவுள் முடிவு செய்துட்டாரே!

புனிதம்மா போனா, அவங்க புருஷன் இன்னொரு பொண்ஜாதி பிள்ளைகளோட வந்து அம்மா கால்லே விழுந்துட்டான்.

இதுதான் சரணாகதிபோல! ஆம்புளங்க கெட்டிக்காரங்க. ஊருக்கு ஒருத்தியை மத்தவங்களுக்குத் தெரியாம வச்சுக்க முடியுது. அந்தக் காலத்துலிருந்து ஒரே கதைதான். இது மனுஷங்க விவகாரம்.

அம்மா விஷயத்துக்குப் போகலாம். புருஷன் கால்லே விழவும் துடிச்சாங்க. வூட்டுக்கு வந்து காலத்தைக் கடத்தியிருக்கலாம். நல்ல வசதி இருந்தது. ஆனால் அந்த அம்மாவுக்கு உலகமே வெறுத்துப் போச்சு.

கடவுள் கிட்டே புலம்பி அழுதாங்க. அவர்தான் காத்துகிட்டே இருந்தாரே. அந்த
அம்மாவை எலும்புப் பேயாக்கிட்டாரு. இதுவும் அவர் இருக்குற மலைக்குப் போயி ,தலைகீழா படி ஏறி சிவன் சாமியைக் கும்பிட்டாங்க.

இந்த அம்மா இப்படி ஆனதுக்கும் மாம்பழம் காரணம்னு சொல்ல வச்சுட்டாரு. விளையாடறது இந்த சாமிகள்; குற்றம் சொல்றது மத்தவங்களை!

மாங்கனி கதை முடிக்கவும் வாழையின் மனமும் கனிந்தது.

“மாங்கனி, உன் மனசு கஷ்டம் புரியாம பேசிட்டேன். மனசுலே வச்சுக்காதே. நாம சாதாரணப் பழங்க. கடவுளோட போட்டி போட முடியுமா? கவலையை விடு," என்று வாழைக்கனி ஆறுதல் கூறியது.

“எல்லாம் அந்த நாரதர் ஆரம்பிச்சு வச்சது. நமக்கும் ஒரு காலம் வரும்,“ என்று பலாக்கனி கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே நாரதர் வந்து சேர்ந்தார்.

நாரதர் முகத்தில் உற்சாகம் இல்லை.

இப்பொழுது பலாக்கனிக்கு நேரம்

"என்ன நாரதர் சாமி, கலகத்துக்கு ஆள் கிடைக்கல்லியா?" என்று அக்கறை கொண்டது போல் நாசுக்கா கேட்டது பலா.

நாரதருக்குக் கோபம் வந்தது. இந்த சாதாரணப் பழங்கள் கேலி செய்வதா? சமயம் வரட்டும் என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டார்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை,“ என்றார் நாரதர்.

“சாமி, நமக்குள்ளே என்ன சாமி, நாங்க மனுஷப் பிறவியா? சீக்கிரம் உசுரை விடற பிறவிங்க.“ என்று மெதுவாகக் கூறிவிட்டு, மேலும் தொடர்ந்து பேசியது பலா.

“சாமி, நீங்க பூலோகத்துக்கு வந்துட்டீங்க. அதுவும் எங்க நாட்டுக்கு. ஊருக்குள் போய்ப் பாருங்க. நிறைய கதை கிடைக்கும். உங்களுக்கும் பொழுது போகும்.“

நாரதர் யோசித்தார் முகத்தில் புன்னகை பிறந்தது.

“நான் போய்ட்டு வரேன்,“ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டார் நாரதர்.

"எங்கே போறாரு?" என்று ஆவலுடன் கேட்டது வாழை.

பலாவோ,"வேடிக்கை பாருங்க!“ என்று மட்டும் கூறியது.

போன நாரதர் கொஞ்ச நேரத்தில் வந்தார்.

"ஊரு இப்படி கெட்டுப் போயிருக்கே, இனிமே கடவுள் கூட எட்டிப் பார்க்க முடியாது,“ என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.

"என்ன நடந்தது?" என்று அப்பாவியாகக் கேட்டது மாங்கனி.

“வேறென்ன, ஊருக்குள்ளே இப்போ எல்லாரும் நாரதர்தான். கலகம் செய்ய மேலேருந்து வரணுமா? உனக்குக் கெட்டபேரு வரவச்சாரில்லே? இனிமே பூலோகம்னா அலறுவாரு. சரியான பாடம்!"

பலா முரட்டுத்தனமாக பதில் கூறியது.

மற்ற இருகனிகளும் பலாவை வியப்புடன் பார்த்தன.

“பலா, படைப்புலே, உனக்கு வெளிப்புறம் முரட்டுத்தோல். உள்ளேதான் இனிப்புப் பழம். சுலபமா எடுத்துட முடியாது. உன் புத்தியும் சுலமாப் புரிங்சுக்க முடியல்லே. இருந்தாலும் இப்போ சந்தோஷமா இருக்கு. நாம ஒத்துமையா இருந்தா போதும்,“ என்று மாங்கனி கூறியது.

மாங்கனியின் பேச்சு இனித்தது.

கதை முடிந்தது.

Friday, April 23, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-08

எண்ணங்களின் பயணத்தில் அவ்வப்பொழுது மனம் லயித்து அங்கேயே தங்கிவிடுகின்றது. Time Machine எதுவுமின்றி அக்காலத்திற்கே போய் விடுகின்றேன். தோல்விகளைக் கூடச் சுவையாக உணர்கின்றேன்.

என் நண்பர்கள் கூறுவார்கள்: "உனக்கு வயதாகியிருக்கலாம். ஆனால் நீ பேசும்பொழுது உன் பேச்சில் இளமை இருக்கின்றது.

மூளைக்கு வேலைகள்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வளமான சிந்தனைகள் சீரிளமைகாக்கும். தோல்விகளில் மூழ்கி விடாமல், சிறிய வெற்றியாயினும் அதனை நினைத்து உற்சாகம் கொள்ளுதல் மனத்திற்குச் சத்துணவு. என் சிறிய சாதனைகளையும் நினைத்து மகிழ்வதால், என் உடல் தளர்ந்த பொழுதும் மனம் இளமையின் வலிவுடன் இருக்கின்றது.

முதல் வெற்றியும் முதல் தோல்வியும் ஒரே இடத்தில் கிடைத்தன.

என் தோழியின் வீட்டு வாயிற்படியில் உட்கார்ந்து விட்டேன். அவள் பெற்றோருக்கு என்னை மிகவும் பிடிக்கும்.

வாசலில் உட்கார்ந்த என்னைப் பார்த்துத் தவித்துப்போனார்கள். அவர்கள் மிகவும் அமைதியானவர்கள்.ஊர்ப்பழி வந்தால் மகளுக்குத் திருமணம் ஆகாதே என்ற பயம்.

இராமபிரானே ஊர்ப்பழிக்கு அஞ்சி தன் ஆசைமனைவியை அக்கினியில் குதிக்கவைக்கும் பொழுது, கிராமத்து மனிதன் என்ன செய்ய முடியும்?

வேடிக்கை பார்க்க சிலர் வந்து விட்டனர்.

வந்தவர்களுக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆச்சரியம் என்னவெனில் வந்தவர்களில் சிலர் என்பக்கம் பரிந்து பேசினர். சில மாதங்களுக்குள் மனிதமனம் மாறிய விந்தை உணர்ந்தேன். என் தோழியின் அப்பாவும் மகளைப் பள்ளிக்கு அனுப்ப ஒப்புதல் கொடுத்து விட்டார். உடனே அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து என் தோழியின் கையால் உணவு உண்டேன்.

அவள் முகத்தைப் பார்த்தேன். ஜீவனில்லாச் சிரிப்பைக் கண்டேன். அப்பொழுது அதன் அர்த்தம் தெரியவில்லை. சில மாதங்களில் புரிந்த பொழுது திடுக்கிட முடிந்ததேயொழிய கையாலாகாமல் நின்றுவிட்டேன்.

அவளுக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டது!

அவள்கவிதை மனத்திற்குச் சமாதி கட்டப் பட்டுவிட்டது.

திருமணமானால் கவிதை போய் விடுமா என்று கேட்கத் தோன்றும் . எங்கள் காலச்சூழல் அப்படி!

காலத்தைச் சொல்லும் பொழுது என் தாயின் காலம் நினைவிற்கு வருகின்றது.

ஒரு பெண் பூப்படையும் முன் திருமணம் செய்துவிட வேண்டும் என்று பிராமணச் சமுதாயத்தின் கட்டுப்பாடு. என் பெரியம்மாவுக்கு ஐந்து வயதில் திருமணம். அவர்கள் 21 வயதில் கணவனை இழந்தார்கள். அவர்கள் மிகவும் அழகானவர்கள் நீண்ட கூந்தல். கணவனை இழக்கவும் அவர்கள் கூந்தல் மழிக்கப்பட்டது.

உண்பதிலிருந்து உறங்குவது வரை கட்டுப்பாடுகள்.

என் தாய்க்கு 12 வயதில் திருமணம். அக்காலத்தில் ஐந்து நாட்கள் திருமணம். பெண் பாட்டு கற்றிருக்க வேண்டும். பெண் பார்க்கும் சடங்கில் பெண் பாடிக்காட்ட வேண்டும். அவளுக்குப் பேசத்தெரிந்திருக்கிறதா, கூந்தல் நீளமானதா, சரியாக நடக்கத் தெரிகிறதா, ஏன், அடுப்பு பற்ற வைக்கத் தெரிகிறதா என்றெல்லாம் பரிசோதிப்பார்கள்.

பெண்ணைச் சந்தைமாடாக நடத்திய காலத்தில் பிறந்தவள் நான்.(திருமணத்திற்குப் பின் எத்தனை நாட்கள் பெண்ணைப் பாடச் சொல்லிகேட்டிருக்கின்றார்கள்?). என் தாயின் திருமணத்தின் பொழுது 13 ரூபாய்க்கு ஒரு பவுனும், ஒரு ரூபாய்க்கு 12 படி அரிசியும் விற்ற காலம். ஒரு சல்லிக்கு ஒரு கூறு கடலை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். ஓட்டைக் காலணாக்கள் சேர்த்து மாலை கட்டி விளையாடியிருக்கின்றேன். எரிச்சலும் இன்பமும் கலந்த கலவை உணர்வுகள்.

என் தோழிக்குத் திருமணமாகிச் சென்றுவிட்டாள். அடுத்து மீனாட்சி சடங்கானபின்னும் பள்ளிக்கு அனுப்பப்பட்டாள். பெண் பூப்படைவதைச் சடங்காகிவிட்டாள் என்றும் கூறுவதுண்டு.

எப்படியோ கிராமத்திலும் பெண்கல்விக்குத் தடை நீங்கியது. தொடர்ந்து கற்கின்றார்களா என்பது வேறு பிரச்சனை. முட்டுக்கட்டை நீக்கப்பட்டதே பெரிது. எங்கள் வீட்டில் ஒருத்தியாய் இருந்த முத்துவிற்கும் திருமணமாகி கோயில்பட்டிக்குச் சென்றுவிட்டாள். பிரிவுகளின் வலியையும் புரிந்து கொண்டேன்.

என் மனத்தை மிகவும் பாதித்த செய்தி அண்ணல் மகாத்மா காந்தியின் மரணச்செய்தி.

அதிலும் அவர் கொலை செய்யப்பட்டது தாங்கிக் கொள்ள முடியாத அதிர்ச்சியாக இருந்தது. வானொலியில் செய்தி அறிவித்த பொழுது என் தந்தை உடனே மயக்கம் போட்டு விழுந்தார். அவர் விழுந்ததைக்கூட உணரமுடியாமல் அருகில் மலைத்துப் போய் நின்று கொண்டிருந்தேன். அதிர்ச்சி முதலில் ஊமையாக்கிப் பின்னர் அழவைத்தது. கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என் தந்தையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

ஓர் நல்ல மனிதரை ஏன் சுட்டுக் கொன்றார்கள்? இரண்டுங்கெட்டான் வயது. புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவேசம் தோன்றியது. என் பார்வையின் வட்டம் பெரிதானது. ஒவ்வொரு செயலையும் ஊன்றிப் பார்க்க ஆரம்பித்தேன்.

இதுவரை தோன்றாத எண்ணங்கள் தோன்றலாயின. அதுவும் என் வீட்டில்
ஆரம்பித்தது. என்னை உருவாக்கியதில் என் தந்தை பெரும் அக்கறை எடுத்துக் கொண்டார்;மறுக்கவில்லை.ஆனால் அவருடைய இன்னொரு முகம் தெரிந்த பொழுது எழுந்த கோபத்தைப் பாசத்தால் அழிக்க முடியவில்லை.

என் தந்தைக்கு முன் கோபம் அதிகம். எதற்கெடுத்தாலும் பிரம்பெடுத்து அடிக்க ஆரம்பித்து விடுவார். என்னைவிட என் தாயார்தான் நிறைய அடிகள் வாங்கியுள்ளார். அவர் சொன்னவுடன் செய்துவிட வேண்டும். இல்லையென்றால் அடி. நான் தவறு செய்து அடி வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது என் தாயார் குறுக்கே விழுந்து நிறைய அடிகளை வாங்கிக் கொள்வார்.

“பெண்ணை வளர்த்திருக்கிறாயே, கொஞ்சமாவது அடக்கம் இருக்கா?" இப்படி ஒரு பழியை என் தாயின் மேல் போடும்பொழுது என் தந்தையை முறைத்துப் பார்ப்பேன். “என் மகளைஆண்பிள்ளை போல வளர்ப்பேன் “ என்று என்னை முரட்டுத்தனமாக வளர்த்தது என் தந்தை!

புகழ் வந்தால் தந்தைக்கு, பழி வந்தால் தாய்க்கா? என்னடா உலகம்?

மனம் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. இவ்வளவு அடி வாங்க விட்டு என் தாயார் தந்தைக்குக் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து,"குழந்தையை மன்னிச்சுடுங்கோ," என்று கெஞ்சுவார்கள். அப்பொழுதும் திட்டிக் கொண்டே தந்தை போவார். நான் பெரிதாகத் தப்பும் செய்திருக்க மாட்டேன். எனவே அவர் கொடுத்த தண்டனை நியாயமற்றது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். அடி வாங்கிக் கொண்டே கீழே விழுந்து வணங்கும் என் தாயின் அசட்டுத்தனம் எரிச்சலைக் கொடுத்தது. பலமுறை இதைப் பார்க்கவும் என் ஆத்திரம் கூடியது.

ஏமாற்றுபவர், ஏமாறுபவர் இருவர் மீதும் கோபம் வந்தது.

இன்று அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இதனை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது இங்குள்ள சூழல்கள், விதிகளை ஒப்பிட்டுப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. இங்கு பிள்ளைகளை அடிக்க முடியாது. போலிஸ் வந்து விடும்.

பெற்றோரின் வன்முறைச் செயல்கள் பிள்ளைகளை எப்படி மாற்றிவிடும் என்பதைப் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உளவியல்படி மனிதனின் பெரும்பாலானக் குணங்கள் பிள்ளைப் பருவத்தில் பதியப் படுகின்றன.

என் காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களைத் தலையில் குட்டுவார்கள்; கிள்ளுவார்கள்; பிரம்படி கொடுப்பார்கள்;பெஞ்சுமேல் நிற்க வைப்பார்கள்! இங்கே மாணவர்களைத் தொட்டால்கூட குற்றமாக்கி விடுவார்கள்.

என் காலத்து ஆசிரியர்களை இக்காலத்தில் கற்பனையில் கொண்டுவந்து ரசித்தேன். இந்த வயதிலும் இப்படி ஒரு அற்ப சந்தோஷம்.

மற்ற குடும்பங்களையும் பார்க்க ஆரம்பித்து விட்டேன். வீட்டுக்குக் குடித்துவிட்டு வரும் ஆண்கள், பொண்டாட்டி பிள்ளைகளை அடிக்கும் ஆண்கள், மனைவி இருக்கும் பொழுதே இன்னொரு பெண்ணுடன் வாழும்ஆண்கள்,செய்யும் தவறுகளை நியாயப்படுத்தும் ஆண்கள் எனக்குள் ஏற்கனவே தோன்றியிருந்த கோபத்தை மேலும் வளர்த்தனர்..

அப்பாவும் அம்மாவும் உடலுறவு கொண்டு பிள்ளையைப் பெறுவார்கள் என்றுகூட எங்கள் காலத்தில் தெரியாது. அப்பாவித்தனத்துடன் வாழ்ந்த காலம். இன்று பிரமிக்கத்தக்கச் சூழலில் குழந்தைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அக்காலத்தில் யார் எதைச்சொன்னாலும் நம்புவோம். மூடப்பழக்கங்களுக்கு அதுவும் ஒரு காரணம். அர்த்தமற்ற அச்சங்கள் அவைகள் வளர்வதற்கும் காரணம் என்பதையும் மறத்தல் கூடாது.

முரண்பாடுகளை உணரத் தொடங்கிய பொழுது எனக்கு வயது 14. இனிமையைச் சுவைக்க வேண்டிய பருவத்தில் கசப்பான நிகழ்ச்சிகளைப் பார்க்கப் பார்க்க மனக்கசப்பும் வளர ஆரம்பித்தது. பேச்சுக்கும் செயலுக்கும் மாறுபாடாக நடக்கும் பல பெரியவர்களின் நிழலாட்டம் என்னைப் போராளியாக உருவாக்க ஆரம்பித்தது. இந்நிலையில் எங்கள் குடும்பம் இடம் மாறியது. வெளி உலகம் பற்றிய செய்திகள் அறியும் சூழலுக்குள் நுழைந்தேன்.

இந்த வயதிலேயே உலக அரசியல் தொடங்கி உள்நாட்டு அரசியல் வரை கற்க ஆரம்பித்தேன். நிமிர்ந்து நின்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.

ஊர்வலத்தின் உற்சவத்திற்கு அச்சாரம் போட்ட அனுபவங்கள் பெற புதிய குடிலுக்குச் சென்றேன்

(ஊர்வலம் தொடரும்)

Wednesday, April 21, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 04

நெஞ்சக் கொதிப்பு இன்னும் அடங்கவில்லை!

குமுறல்களைக் கொட்டிவிட்டால் எழுத்திலும் சிந்திப்பதிலும் தெளிவு இருக்கும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். இன்னும் இரு சம்பவங்களைக் கூறிவிட்டு தொடரில் தொடர்வேன்.

ஓர் ஆசிரியர் செய்த சைட் வியாபாரம். மாணவர்களுக்கும் உடன் வரும் இளைஞர்களுக்கும் ப்ளூ பிலிம் போட்டுக் காட்டி சமபாதிப்பது. ஒரு நிருபர் என்னிடம் சொன்ன பொழுது நான் நம்ப வில்லை. நானும் என் தோழியும் அவருடன் சென்றோம். என் மனம் கொதித்தது..அந்த மனிதருக்கு அது ஒரு வியாபாரம். படம் தொடங்கியவுடன் கத்தினேன். என்னை அங்கிருந்து கூட்டிவருவதற்குள் நிருபர் கஷ்டப்பட்டுபோய்விட்டார். அந்த ஆசிரியர் வெட்கித் தலை குனிந்து உட்கார்ந்திருந்தார்.

தெய்வத்திற்கு முன் வைத்துப் போற்றிவரும் தொழில் ஆசிரியத் தொழில்.எனக்கு நாட்டுப்பற்றையும் துணிச்சலையும் கற்றுக் கொடுத்தவர் என் ஆசிரியர். பாரதியை எனக்குள் புதைத்தவர் எங்கள் ஆசிரியர் கே.பி.எஸ் நாராயணன் அவர்கள். இன்றும் எட்டயபுரத்தில் அவரிடம் படித்த மாணவர்கள் அனைவரும் அவரை நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

எனக்கு மிகவும் பரிச்சயமான மனிதர். ஒருவர், தரகரிடம் குடும்பப் பெண் கேட்டு வீட்டிற்கே அழைத்துச் செல்லப் பட்டார். இவர் உள்ளே நுழையும் பொழுது வீட்டிற்குள் இருந்து ஓர் ஆண் வெளியில் சென்றிருக்கின்றான். கூடத்தில் ஒரு கிழவி சுவற்றின் பக்கம் முகம் திருப்பி படுத்துக் கொண்டிருக்கின்றாள். இவர் உள்ளே போய் உடலுறவு கொண்டிருந்த பொழுது குழந்தை அழும் சத்தம் கேட்டு உடனே அந்தப் பெண் இவரைப் பிடித்து தள்ளிவிட்டு எழுந்திருந்திருக்கின்றாள். பால் குடிக்கும் குழந்தை.

அதன் பின்னர் அவர் விசாரித்த பொழுது அழுதது அவள் குழந்தை; வெளியில் சென்றது புருஷன்; கூடத்தில் படுத்திருப்பது மாமியார் என்று சொல்லி இருக்கின்றாள். ஒன்றும் பேசாமல் பணம் கொடுத்துவிட்டு வந்து விட்டார்.

என்னிடம் சொன்ன பொழுது ஓங்கி அடித்துவிட்டேன். அந்த மனிதனுக்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர். சிறுவயது முதல் அவர்கள் குடும்பம் எனக்குப் பழக்கமானது. அவருக்குள் இப்படி ஒரு மிருகம் இருந்தது அன்றுதான் தெரியும்.

கள்ள உறவுக்கு எதுக்கைய்யா குடும்பப்பொன்ணும் கல்லூரி மாணவியும்?

நான் இத்தனை சம்பவங்கள் கூறினால் எதை எழுதுவார், எதைவிடுவார்? இவைகளைக் கூறியதற்கு நான் எத்தகைய பணியில் இருந்தேன் என்பதைப் புரிய வைக்கவும் நம்மைச் சுற்றிக் கொட்டிக் கிடக்கும் குப்பைகளையும் கொஞ்சம் அடையாளம் காட்டவும் தான்.

ஜெயகாந்தனின் பேச்சைக் கேட்க வருகின்றவர்கள் போல் அவரிடம் நிறைய பேச விழைகின்றவர்களும் வருவார்கள். சாதாரணமாகப் பார்க்க வருவார். அவர் பார்வை, அவர் சிரிப்பு, நம் நெஞ்சுக்குள் புதைந்திருக்கும் செய்திகளைத் தானே கொத்திக் கொண்டுவந்துவிடும்.

கோயிலுக்குப் போகின்றோம். கடவுளிடம் நிறைய புலம்புகிறோம். உடனே அவர் காட்சியளித்து நம் கவலைகளைப் போக்கி விடுவதில்லை. நம் கவலைகளைச் சொல்லும் பொழுது மனத்தை அழுத்தும் பாரம் குறையும்.

இப்படி எழுதுவதால் ஜெயகாந்தனைக் கடவுளாக்கிவிட்டார் சீதாலட்சுமி என்று நினைத்துவிட வேண்டாம்.

குறைகளும் நிறைகளும் கலந்த ஓர் மனிதர் ஜெயகாந்தன்.


ஆனால் அவரிடம் மனம் விட்டுப் பேசும் பொழுது ஓர் ஆறுதல் கிடைக்கின்றது.

சில மனிதர்களிடம் சில மின் அதிர்வுகள் இருக்கும். சிலர் மீது ஈர்ப்பு தோன்றுகின்றது. சிலரை வெறுக்கின்றோம்; நமக்கே காரணம் தெரியாது

அரசியல்வாதிகள் கால்களில் விழும் கலாச்சரத்தைப் பார்த்துக் கேலி செய்கின்றவள் நான். ஒரு நாள் என்ன நடந்தது தெரியுமா?

1986ல் நான் வெளி நாட்டிற்கு முதல் பயணம் செல்லவேண்டி வந்தது. அதுவும் மகளிர் நலன் பேசும் ஓர் கருத்தரங்கில் கலந்து கொள்ளப் போக வேண்டும். முதல் அமைச்சர் அவர்களிடம் சொல்லிவிட்டுப் போக நினைத்து கோட்டைக்குப் போனேன். அப்பொழுது முதல்வராக இருந்தவர் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர் அவர்கள். அவரைப் பார்க்க நான் நுழையும் பொழுது அவர் வெளியில் செல்ல எழுந்து நின்று கொண்டிருந்தார். அவரை வணங்கிவிட்டு நான் செல்லப் போவதைக் கூறினேன். அவரும் சில விபரங்கள் கேட்டார். அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு விடை அளித்து வந்தவள் திடீரென்று அவர் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்தேன். இது ஒரு அனிச்சை செயல்.

ஜெயகாந்தனிடம் அவர் தங்கி இருக்கும் இடத்தில் போய்ப் பார்த்தால் சிலரால் உணர முடியும். இப்படி எழுதுவதால் கிண்டல் செய்யத் தோன்றும். உங்கள் சிலரிடமும் அந்த சக்தி இருக்கலாம். உங்களை அறியாதவர்கள், புதியவர்கள் கூட உங்களைப் பார்க்கவும் விரும்பலாம். சிலருக்கு வெறுப்பு தோன்றலாம். நாம் இவைகளை உணர்வதில்லை.

ஜெயகாந்தனிடம் உளவியலை தர்க்க ரீதியாகப் பேசும் திறமை உண்டு. அந்தப் பேச்சுதான் பாதிக்கப் படும் மனங்களுக்கு ஒத்தடமாக இருக்கும். இங்கே நான் அவர் மேடைப் பேச்சைப் பற்றிச் சொல்ல வில்லை.

எல்லோருக்கும் எல்லோரையும் பிடித்துவிடாது. சங்கீதத்தை எடுத்துக் கொள்வோம். சிலருக்கு தோடி ராகம் பிடிக்கும். சிலருக்கு பைரவி பிடிக்கும். ரசனைகள், ருசிகள் தனிப்பட்டவை. ஒரு காலத்தில் ஜி.என்.பி. அவர்கள் சுத்த கர்நாடகத்தில் கலப்பு கொண்டு வருகின்றார் என்று கிசுகிசுத்தனர். டி.கே.பட்டம்மாள் மாதிரி எம்.எஸ்.சுப்புலட்சுமி இல்லை;பட்டம்மாள் பாடும்பொழுது ராகத்திற்காக சொற்களைப் பிரிக்காமல், அர்த்தம் பிரிந்து நிற்காமல் பாடுவார் என்பார்கள்.

ஜெயகாந்தனைப் பற்றியும் பல விமர்சனங்கள் இருப்பதை அறிவேன். நான் ரசித்ததை, நான் உணர்ந்தவைகளைக் கூறுகின்றேன். அவர் இல்லம், அவர் மற்றவர்களைப் பார்க்கவும், பேசவும் எடுத்துக் கொண்ட ஆழ்வார்பேட்டைக்குடில், இரண்டிற்கும் போயிருக்கின்றேன்.அவருடன் கிராமங்களுக்குப் போயிருக்கின்றேன்; பயணங்கள் செய்திருக்கின்றேன். அவரின் பரிமாணங்களைப் பார்த்தவர்களில் நானும் ஒருத்தி. என் அனுபவங்களைக் கூறுகின்றேன், அவ்வளவுதான்.

மாற்றுக்கருத்துக்களை மதிப்பவள் நான் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உண்டு.

எழுத்தாளர்கள் எதனையும் விருப்பம் போல் வளைத்து எழுத முடியும்.ஆனால் செயலாற்றுகின்றவர்கள் நிலை அப்படியல்ல. பிரச்சனைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவைகளைச் சீராக்க வழி வகைகள் காண வேண்டும். செயல்படுத்தும் பொழுது வெற்றியும் கிடைக்கலாம்; தோல்வியுற்றும் திரும்பலாம். விருப்பம் போல் அவ்வளவு எளிதில் முடிக்க முடியாது.

ஒரு காலத்தில் நானும் கதைகள் எழுதிக் கொண்டிருந்தவள். எனவே இரண்டின் பலமும் பலஹீனமும் தெரியும்!

(தொடரும்)

நன்றி -திண்ணை

Tuesday, April 20, 2010

மனம் திறந்து....உங்களுடன் இந்த அம்மா மனம் திறந்து பேச விரும்புகின்றாள்.

பதிவுகளைப் படிக்கின்றீர்கள் என்று தெரியவும் மகிழ்ச்சியும், ஊக்கமும் ஏற்படுகின்றது. உங்கள் எல்லோருக்கும் நன்றி!

நாம் யாவரும் ஒரு குடும்பம்; நான் உங்கள் அம்மா; நீங்கள் எல்லோரும் என் பிள்ளைகள்-அந்த எண்ணத்தில் இதனை எழுதுகின்றேன். பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் அம்மா.

என் பதிவுகள் பல கோணங்களில் எழுத ஆரம்பித்திருக்கின்றேன்.

நீங்கள் படிக்கும் பொழுது சில வரிகளில் ஆழமாகப் புதைந்திருக்கும் சிந்தனைகளைப் புரிந்து கொண்டு படிக்க வேண்டிக் கொள்கின்றேன்.காரணம் உண்டு! சில விஷயங்களை ஓரளவுதான் வெளிப்படையாக எழுத முடியும்; செய்திகள் இருக்கும்.

உதாரணமாக ஜெயகாந்தன் தொடரில் தாம்பத்யம்பற்றி எழுதியிருக்கின்றேன் . குறை சொல்லுவதாக நினைத்தல் கூடாது. நான் ஒரு சமூக மருத்துவர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுடன் பழகியவள்; பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தவள். ’ஆமாம், இது போன்று இருக்கின்றது,’ என நினைப்பு வருவது யதார்த்தம். ஆனால் நான் உங்களை வேண்டுவது, அந்த பிரச்சனைகளை நான் எப்படி தீர்த்தேன் என்பதில் கவனம் செலுத்துங்கள். வெற்றி என்றால் எப்படி முடிந்தது, தோல்வி என்றால் ஏன் என்று பார்க்கவும்.

குறைகள் என்னிடம் இருந்தாலும் மறைக்காது கூறிவருவேன். அனுபவங்களில் ஒரு பெண் பக்குவப்படுவதும் சக்தி பெறுவதும் படிப்படியாகப் பார்க்கலாம். என்னிடமிருந்த திறமைகள், பத்திரிகை பலம் எந்த அளவு என் முயற்சிகளுக்கு உதவியாக இருந்தன என்பதையும் விளக்கமாகக் காட்டி வருகின்றேன்.

புகழ் வேண்டி எழுதவில்லை! என் அனுபவங்களைச் சொல்வதன் மூலம் நாம் வாழும் சமுதாயத்தின் வரலாற்றைக் கூற வேண்டியது என் கடமையாக நினைத்து எழுதுகின்றேன்.

வெறும் வலைப் பூவாக இருப்பதை விட ஒரு வழிகாட்டும் இல்லமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன்.
நான் 75 வயதைக்கடந்த ஓர் முதியவள். ஆனால் ஆசைகள் நிறைய இருக்கின்றன. கணினிபற்றி எனக்கு அதிகம் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுவருகின்றேன். அதனால்தான் பின்னூட்டங்களுக்குக் கூட உடனே பதில் போட முடியவில்லை. ஒவ்வொன்றும் கேட்டு கேட்டு செய்கின்றேன்.விரைவில் கற்றுக் கொள்வேன். பின்னூட்டம் இடுங்கள். நமக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும். எனக்கும் வலி மறந்து எழுத சக்தி கிடைக்கும்.

சில வியாதிகளுக்கு என்னைப் பிடித்துவிட்டது. என்னுடன் இருந்து அவ்வப்பொழுது ஆட்டி வைக்கின்றன. எனவே சில நேரங்களில் முடக்கம் ஏற்படுகின்றது. எனக்கு ஊக்கம் அளியுங்கள். அதுவே என் சக்தி.

முடிந்த மட்டும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற துடிப்பு. பார்க்கலாம்.

நம்மைச் சுற்றி பிரச்சனைகள் குவிந்து கிடக்கின்றன. அரசில் உதவி செய்ய பல அமைப்புகள் இருக்கின்றன. அவைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். உங்களிடம் தங்கள் துயரைக் கூறும் பொழுது முடிந்த அளவு உதவி செய்யுங்கள். வழிகாட்டவாவது செய்யுங்கள்.

அரசியலும் அரசு இயந்தரமும் அணுகிச் செல்லும் பொழுது பல இடர்பாடுகள் பார்க்கலாம். என்னால் முடிந்த அளவு உங்களுக்கு வழிகாட்டுவேன்.

நான் இருப்பது அமெரிக்கா. நம் மண்ணில் இருந்தால் உங்களுடன் இருந்து உரியதைச் செய்ய முடியும். நம்மால் முடிந்ததைச் செய்வோம். ஏற்கனவே நிறைய பணிகள் இருக்கும் பொழுது என்ன செய்ய முடியும் என்று மனம் தளர வேண்டாம்.

ஒருவருக்கு உதவி செய்தாலும் அது உயர்ந்தது. மனித நேயம் காப்போம்.

நான் இருந்த வரை உள்ள திட்டங்கள் தெரியும். இப்பொழுது இருப்பவைகளுக்குப் புள்ளிவிபரங்கள் கேட்டிருக்கின்றேன். கிடைக்கக் கிடைக்க தகவல் தருகின்றேன்.

எண்ணங்கள் ஊர்வலம் முடியவும் நினைவலைகள் ஆரம்பம். அது ஒரு சமுதாய வரலாறு. என்னை சாட்சியாக்கி அதனை எழுதுகின்றேன்.

அரசும் அரசியல்,சமுதாயம் இந்த மூன்றையும் சுற்றி வரப் போகின்றது. வரலாற்று அடிப்படையிலும் செய்திகள் வரும். மிருகமாய் வாழ்ந்த மனிதன், நல்ல கோட்பாட்டைக் கொண்டு வந்து நாகரீகமாக வாழ்ந்து இப்பொழுது மீண்டும் பழைய மிருக வாழ்க்கைக்குப் போய்க் கொண்டிருக்கின்றான். நம் சந்ததியை, நம் சமுதாயத்தைக் காப்பாற்ற ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கின்றது.

நடு நிலையுடன் எழுதிவரும் தொடர் நினைவலைகள்.

சாதி, மதம், அரசியல், மொழி, நாடு என்ற எந்த வலைக்குள்ளூம் நான் இல்லை. மனித நேயமே என் மதம். உலகம் நான் வாழும் மண். உலக சமுதாயத்தில் நானும் ஒருத்தி. மீண்டும் மீண்டும் இதனை எழுதக் காரணம் சார்பு நிலை வந்துவிட்டால் உண்மையான சரித்திரம் எழுத முடியாது.

இது ஒரு சத்திய சோதனை! ஊன்றிப்படிக்க வேண்டிக் கொள்கின்றேன்.

என்னையும் மீறி தவறுதலாக யாரையாவது புண்படுத்திவிட்டால் இப்பொழுதே மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.

என்னைப்பற்றி அடுத்து தனியாக எழுதுகின்றேன்.முதலில் என் நோக்கம்பற்றி எழுதுவதே சரியானது.

என் பயணத்தில் தொடர்ந்து வரப்போகும் சக பயணிகள் நீங்கள்.

உங்களை அன்புடன் அழைக்கின்றேன்

சீதாம்மா

Monday, April 19, 2010

எண்ணங்கள் ஊர்வலம் -07

சிறு வயது முதல் முரட்டுப்பெண்ணாகவே வளர்ந்துவந்தேன்.மரம் ஏறுவது, சுவர் ஏறுவது எல்லாம் எனக்கு சுலபம்;பயமறியாமல் வளர்ந்தேன்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

என்னுடன் பாரதி இருக்க நான் ஏன், யாருக்கு அஞ்சவேண்டும்?

என்னைச் செல்லமாக வளர்த்த என் அப்பாவிடம் பல முறை பிரம்படியும் பட்டிருக்கின்றேன்.

ஒரு நாள் அப்பாவிடம் சொல்லாமல் சினிமாவிற்குச் சென்று விட்டேன்.திரும்பி வந்தால் வீடு உள்ளே பூட்டியிருந்தார்கள். அப்பா வந்து விட்டார் என்று புரிந்து கொண்டேன். வாசலில் ஓர் வேப்ப மரம். அதி ல் ஏறி, மொட்டை மாடியில் இறங்கி, வீட்டு நடுவில் இருந்த முற்றத்தில் குதித்தேன். சப்தம் கேட்கவும் பின்கதவு திறந்தது. என் அப்பா கையில் பிரம்புடன் நின்று கொண்டிருந்தார். அன்று நடந்த பிரம்படி உற்சவம் இன்னும் மறக்கவில்லை.

ஆகஸ்டு 15 சுதந்திரம் பிறந்தது.

ஊரெல்லாம் கொண்டாட்டம்; வீட்டிலே விருந்து.

அடுத்து உடனே வந்த நிகழ்ச்சி. பாரதி மணி மண்டபத் திறப்பு விழா. ஆசையுடன் எதிர்பார்த்த விழா. இராஜாஜி, டிகே.சி. கல்கி, சதாசிவம், எத்தனை பெரிய மனிதர்களைப் பார்க்கும் வாய்ப்பு அந்த சின்ன ஊர் மக்களுக்குக் கிடைத்தது. என்னால் மட்டும் முழுமையான மகிழ்ச்சியில் இருக்க முடியவில்லை. பெண்ணுக்கு இயற்கையாக வரும் சோதனை எனக்கும் அப்பொழுது வந்தது.

எட்டையாபுரத்தில் பூப்பெய்த பெண்களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. பாரதி பிறந்த மண்ணில் அவர் மறைந்த பின்னும் பெண்ணின் நிலை மாறவில்லை.

என்னை என் தந்தை பள்ளிக்கு அனுப்பினார். வயதுக்கு வந்த பெண் பள்ளிக்குச் சென்றவர்களில் வரிசையில் நிற்கும் முதல் பெண் நான் தான்.

அடக்கி வைக்காம, இப்படியா ஒரு பெண்ணைப் படிக்க அனுப்புவாங்க? பிழைக்க வந்தவங்க தானே. ஊர் கட்டுப்பாட்டை மதிப்பாங்களா ?

எழுதப் படாத கட்டுப்பாடுகள் ஒவ்வொரு ஊரிலும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம்.

அதை உடைத்துக் கொண்டு வெளியேறிய என்னைத் தூற்றியது. என்னால் சுதந்திரமாக ஆரம்பத்தில் வெளியில் நடமாட முடியவில்லை. என்னுடைய ஒவ்வொரு அசைவிலும் குற்றம் கண்டனர். சில நாட்களில் மனம் தெளிந்து விட்டது. இது போன்ற வம்புகளுக்கு அதிக ஆயுள் கிடையாது. வேறொன்று பேச கிடைத்து விட்டால் இதன் வலிவு குன்றி விடும்.

சமுதாயத்தைச் சமாளிக்க நான் கற்றுக் கொண்ட முதல் பாடம்.

என் ஆசிரியர் கே.பி.எஸ் அவர்களிடம் மட்டும் குறை பட்டுக் கொண்டேன். அவர் என்னை அடிக்கடி, “பாரதி கண்டபுதுமைப் பெண் நீ “என்பார். இத்தனை வசைச்சொற்களின் மாலைகளுடன் போய் அவர் முன் நின்று, “சார், நான் புதுமைப் பெண் அல்ல; புரட்சிப் பெண்.. ஊருக்கு நான் ஒர் அடங்காப்பிடாரி," என்று கூறினேன்.

என் குரலில் அவர் எதை உணர்ந்தாரோ தெரியாது, அவர் உடனே என்னிடம் கூறியது:

"பாரதியின் கண்ணுக்குப் புதுமைப் பெண். அவர் சொன்னபடி , நிமிர்ந்த நன்நடையும், நேர் கொண்ட பார்வையும், ஞானச்செருக்கும் கொண்டு, அச்சத்தையும் நாணத்தையும் நாய்களுக்கு எறிந்து விட்டு ஒருத்தி நடந்தால், அவளுக்கு இந்தப் பெயர்கள்தான் கிடைக்கும். பயபடாதே. இதுதான் சமுதாயம். உன் மனத்திற்கு சரி என்று பட்டதைச் செய். மூட நம்பிக்கைகளை, பழக்க வழக்கங்களை உடைத்துவா! முதலில் செல்பவர்கள் சொல்லடிபட்டுத்தான் ஆக வேண்டும் .தயங்காதே!”

என் இரத்தத்தோடு கலந்து விட்ட சொற்கள்.

முரட்டுப் பெண் உதயமாகி விட்டாள்.

இந்த சமுதாயம் அவளை உருட்டிப் புரட்டி அலைக்கழித்தபொழுதும் நம்பிக்கையுடனும், துணிவுடனும் இன்றுவரை வாழ்ந்து வருகின்றாள்.

என்னுடன் படித்த அரண்மனைப் பெண் படிப்பை நிறுத்தி விட்டார்கள்.பிரிவு மட்டும் என்னைப் பாதித்தது.

எனக்கு, சுப்புலட்சுமி, மீனாட்சி என்று இரு சிநேகிதிகள். அடுத்த வகுப்பில் படித்து வந்தனர். என்வகுப்பில் நான் மட்டுமே பெண். மற்றவர்கள் ஆண்கள். ஒருவருக்கொருவர் பாசத்துடன் பழகும் பண்பு அவர்களுக்கிடையில் இருந்தது. கேலிப்பேச்சால், மனம் புண்படும் வார்த்தைகளால், , ஆபாசச் சொற்களால் உடன்படித்த மாணவர்கள் என்னைக் காயப் படுத்தியதில்லை.

ஊரார் சொற்களால் என்னை வதைப் படுத்திய பொழுது எனக்கு ஆறுதலாய்த் துணை நின்றவர்கள் என் பள்ளித் தோழர்கள்.

அடுத்து என் போராட்ட வாழ்க்கைக்கு அரங்கேற்றம்.

சுப்புலட்சுமி பூப்பெய்து விட்டாள். அவளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்துக் கொண்டனர். என் மனம் பதறியது. சுப்புலட்சுமி ஒரு கவிஞர். அவளெழுதிய கவிதை ஒன்றில் மூன்று வரிகள் இப்பொழுதும் என் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

தமிழே, தமிழே, தழைத்தோங்கும் தமிழே
தமிழர் போற்றும் தத்துவத் தமிழே
இன்னமுதூட்டும் இன்பத் தமிழே

ஏழாவது வகுப்பில் படிக்கும் பொழுது அவள் எழுதிய வரிகள். அவள் பெற்றோர் மகளைப் பூட்டி வைத்துவிட்டதாக நினைத்தனர்- தமிழயல்லவோ பூட்டி வைத்து விட்டார்கள்

பொங்கி எழுந்தேன். அவளைப் பள்ளிக்கு அனுப்பும் வரை அவள் வீட்டு வாசல் படியில் உட்கார வேண்டும், உண்ணா விரதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து தமிழ்ப்பெண் வீட்டுப் படிகளில் உட்கார்ந்து விட்டேன்.

தந்தையிடமோ, ஆசிரியரிடமோ அனுமதி வாங்கிச் செல்லவில்லை.

என் மனம் வழி நடத்தியது.

என்னைப் போராளியாக்கிய முதல் போராட்டம்

அமர்ந்து விட்டேன்!

(ஊர்வலம் தொடரும்)

Friday, April 16, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-06


மனித வாழ்க்கையில் மாணவர் பருவம் கவர்ச்சிகரமானது.
உடல், மனம் இரண்டிலும் மாறுதலை உணரும் பருவம்; உல்லாசப் பறவைகள்.
வயதான காலத்திலும் “அக்காலம் வராதா ?” என்று ஏங்க வைக்கும் பருவம.

எட்டையாபுரம் அமைப்பினைப் பார்க்கலாம்.

அது ஒரு சின்ன ஊர். ஜமீன் அரண்மனை மத்தியில் அமைந்திருந்தது. பெரும்பாலானோர் அரண்மனைத் தொடர்புள்ளவர்கள். மற்றும் பள்ளி போன்ற இடங்களில் வேலை பார்க்கும் நடுத்தர மக்களும், உழைத்துக் களைத்துப் போன ஏழைகளும் உடன் வசித்தனர்.எட்டையாபுரத்தையொட்டி நடுவிற்பட்டி என்று அழைக்கப் பட்ட ஓர் இடமும் இணைந்திருந்தது. இங்கு வணிகர்கள், வசதியுள்ளவர்கள் இருந்தனர். இரண்டையும் இணைக்க ஒரு தெரு. அந்தத் தெருவில் தான்“ராஜா உயர் நிலை”ப் பள்ளியும் “பாரதமாதா”என்ற தியேட்டரும் அமைந்திருந்தன. அட்டக்குளம் என்று ஒரு குளமும் உண்டு. அது குடி தண்ணிர்க் குளமல்ல. தியேட்டரையொட்டி ஒரு சிங்காரத் தோப்பு. அரண்மனையைச் சேர்ந்தது. மஹாராஜாவின் தனியிடம். இங்கு தங்கிக் கொண்டு ஓவியம் வரைவதும், சங்கீதம் கற்பதும் போன்ற அவர் கலைப்பசிக்கு அது உபயோகப் பட்டது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.பொதுமக்கள் அரண்மனைகளைப் பார்வையிட முடியாது. பள்ளிக்கூடமும் சினிமா அரங்கும் அரண்மனை நிர்வாகத்தில் இயங்கி வந்தன.

ஊரிலிருந்து பள்ளிக்குள் நுழையும் பொழுது ஒரு பழைய மண்டபம் இருக்கும். வெளிப் புறத்திலும் வகுப்புகள் நடக்கும். கொழுந்துவேல் வாத்தியார், சங்கர வாத்தியார், அய்யாக்குட்டி வாத்தியாரின் நினைவுகள் வருகின்றன. கொழுந்துவேல் வாத்தியார் சிரித்துப் பார்த்ததில்லை. மிகவும் கண்டிப்பானவர். அவர் உட்கார்ந்திருந்தால் எந்த சேட்டையும் செய்யாமல் நல்ல பெண்ணாக நடந்து செல்வேன்.

என்னால் சும்மா இருக்க முடியாது. வருகிறவர்களை வம்புக்கிழுப்பேன். குச்சி கையில் வைத்துக் கொண்டு “இதோ பார் கத்தி “என்று சுழற்றுவேன். எம்.ஜி. ஆர் அவர்களைச் சின்னப் பிள்ளைகள் விரும்பியது போல் அப்பொழுது பி. யூ. சின்னப்பா குழந்தைகளுக்குப் பிடிக்கும். இருப்பினும் சினிமா மோகம் இக்காலத்தைப்போல் அப்பொழுது வேரூன்றவில்லை.

கொழுந்துவேல் வாத்தியாரின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் என் வாழ்வில் தொடர்புள்ளவர்களானார்கள்.என் இலக்கிய ஆரவத்திற்கு கு. துரைராஜ். இவர் பின்னால் உசிலம்பட்டிகல்லூரியின் முதல்வரானதுடன், சாலமன் பாப்பைய்யாவின் பட்டிமனறம், மற்றும் வழக்காடு மன்றங்களில் முக்கியமானவராகத் திகழந்தார். நாராயணன் என் வகுப்புத் தோழன். தமிழில் நானோ அவனோதான் முதல் மதிப்பெண் பெறுவோம். கடுமையான போட்டி. ஒரே மகள் பாப்பாவும் ,ராஜனும் என் மாணவர்கள். கே.கே ராஜன் இப்பொழுதும் சிறுகதைகள் எழுதி வருகின்றார். 200க்கும் மேற்பட்டு எழுதியுள்ளார். இவர் கதைகள், விகடன், கல்கி, குமுதம். அமுதசுரபி இன்னும் பல பத்திரிகைகளில் வருகின்றன.

சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு நான் படித்த அரங்கத்திற்குப்போகலாம்.

மண்டபத்துக்கடுத்து ஒரு புதிய கட்டடம் (அப்பொழுது ).அடுத்து பக்கத்தில் வரிசை வீடுகள் போல் வகுப்பறைகள் கட்டப் பட்டிருக்கும். சுற்றி ஒரு காம்பவுண்ட் சுவர். பின் பக்கம், சுவர் தாண்டினால் ஒரு வயல், அடுத்து ஒரு நீண்ட பாதை. கோவில்பட்டியிலிருந்து வரும் பேருந்துகள் வரும் பாதை. அதனையடுத்து நிமிர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாரதி மணிமண்டபம்.வெற்றுத்தரையாய்க் கிடந்த பூமியில் மண்டபம். பூரணமாக வளரும் வரை தினமும் பார்த்து வளர்ந்தவள் நான். பாரதியைத்தான் பார்க்க முடியவில்லை. அவன் நினைவில் எழும்பும் மாளிகையையாவது பார்க்கலாம் என்ற துடிப்பில் அதன் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்தவள்.என் பள்ளிக்குள்ளும் ஒரு பாரதி இருந்தார். அவர்தான் கே.பி. எஸ்.நாராயணன்.அவர் ஒரு ஆசிரியர். பரீட்சைக்காக மட்டும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் அல்ல. பல பேச்சாளர்களை, பல எழுத்தாளர்களை, பல கலைஞர்களை, பல சமுதாயச் சிற்பிகளை உருவாக்கியவர்.

அவர் பாடம் நடத்துவதே அழகு. புதிய அர்த்தங்கள் நிறைந்தவை. இலக்கிய மன்றம் அவர் பொறுப்பில். பள்ளி வகுப்புகள் முடிந்தாலும் அவரைச் சுற்றி வருவோம். பாரதியின் ஒவ்வொரு வரிகளையும் எங்கள் இதயங்களில் புதைத்தவர். அவர் கூறுவது இப்பொழுதும் நினைவிற்கு வருகின்றது.

“நிறைய படிக்கலாம். எழுதலாம், பேசலாம். இவைகள் மட்டும் போதாது. நல்ல எண்ணங்களைச் செயல்படுத்த வேண்டும். செயல்கள்தான் சமுதாயத்தைச் செம்மை படுத்தும். மாறுதல்களை உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நெஞ்சில் உரத்துடன் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாது உழைக்க வேண்டும். சோம்புதல் கூடாது. அவர்களைக் கண்டு சுருண்டு விடக் கூடாது. சுத்தமான மனம் முக்கியம். சாதி, மதம், என்ற பிரிவினைகளால் ஒற்றுமை சிதறாமல் பாதுகாக்க வேண்டும். ஒர் ஆணுக்கு உண்டான அனைத்துக்கும் உரிமை படைத்தவள் பெண். ஆணும் பெண்ணும் ஆரோக்கியமான உணர்வுடன் நட்பு கொள்ள வேண்டும்."

அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவைகள் கொஞ்சமல்ல. செயலிலும் பயிற்சி கொடுத்தார். எந்தத் தலைப்பில் பேசப் போகின்றோம் என்று. தெரியாது. மேடையேறியவுடன் தலைப்பை கூறுவார். நாங்கள் பேச வேண்டும். கவனத்தை ஈர்க்கும் பேச்சு நடை இருக்க வேண்டும். கருத்தாழம் கொண்டிருந்தால் மட்டும் போதாது, புதியனவும் இருக்க வேண்டும். அசைவுகளையும் (body language) சொல்லித்தர மறக்கவில்லை.

நாங்கள் உருவாக்கப் பட்டவர்கள். சிலர் மட்டும் செதுக்கப் பட்டார்கள்.அத்தனை பெருமைக்கும் சொந்தமான சிற்பிக்கு என் நன்றியை இப்பொழுதும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் கற்றுக் கொடுத்த பேச்சுத் திறமையால்தான் உயர்மட்ட அறிஞர்களின் நட்பு கிடைத்தது.

என் பள்ளிப்பருவத்தின் செயல்பாட்டைப் பார்க்கலாமா? நான் ஒரு சுட்டிப்பெண். பயம் அறியாதவள். அதுமட்டுமல்ல, பெண்ணுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எதுவும் இல்லாத ஒருத்தி. பெருமையாகச் சொல்லுவதாகத் தயவு செய்து நினைக்காதீர்கள். இக்குணங்களின் பலமும், பலஹீனங்களும் என்னைப் புரட்டி எடுத்திருக்கின்றன.

இந்த இயல்பு எப்படி வந்தது?என் தந்தைக்கு ஒரே மகள். வேறு மகனும் கிடையாது. என்னை ஆண்மகனைப் போல் வளர்த்தார். பள்ளித் தோழிகளுடனும் அதிகமாகப் பொழுதைப் போக்கியதில்லை. எங்கள் ஹோட்டலில் வேலை பார்த்த பையன்கள் விளையாட்டுத் தோழர்கள்.என் வீட்டில் வசித்த முத்துவும் முக்குலத்தோர் பெண். தைரியசாலி.

(ஊர்வலம் தொடரும்)

Wednesday, April 14, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன்-03


சென்னை மெரீனா கடற்கரை சென்றால் வித விதமான,சுவாரஸ்யமான காட்சிகள்.


அங்கே டொம்மிகுப்பம், நொச்சிகுப்பம் இருக்கின்றதே, போயிருக்கின்றீர்களா?

அங்கே ஏதாவது ஓர் விட்டுக்குள் நுழைந்து பார்த்திருக்கின்றீர்களா?

ஒர் வீட்டில் அரிய காட்சியொன்றை நான் கண்டேன்.

தாயென்றால் பாலூட்டி சீராட்டும் அம்மாவை நமக்குத் தெரியும்.நான் போன பொழுது வீட்டுக்கதவு பூட்டப்படாமல் சாத்தி இருந்தது. பெயர் சொல்லிக் கூப்பிட்டேன்.யாரும் வரவில்லை.மெதுவாகக் கதவைத் திறந்தேன். ஓர் குழந்தை தூளியில் தூங்கிக் கொண்டிருந்தது. இது ஒரு அதிசயமா என்று கேலியாகப் பார்க்கின்றீர்களா? கொஞ்சம் பொறுங்கள்!

பக்கத்து வீட்டுக்காரி வந்தாள்

எங்கே வள்ளி?

அவள் வீட்டு வேலை செய்யப் போய்ருக்கா! வர நேரமாகும்.

குழந்தை எழுந்தா யார் பாத்துப்பாங்க?

அது எழுந்திருக்காதும்மா. சாராயம் கொடுத்துத் தூங்க வச்சுட்டுப்போவா

பாலூட்டும் தாய் சாராயம் கொடுத்துத் தூங்க வைத்திருக்கின்றாள்.இந்தக் கொடுமையை நான் பார்த்த பொழுது துடித்தேன்.

என்னம்மா செய்றது? பச்சபுள்ளையை வேலை செய்ற வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியாது. புருசனும் குடிகாரன். இவதான் சம்பாதிக்கறா. ஏதோ அரை வயத்துக் கஞ்சியாவது கிடைக்குது.

அரசாங்கத்தை,அல்லது ஆளும் கட்சியைத் திட்டத்தோன்றுகின்றதா?

நம் நாட்டு வளர்ச்சியை வரை கோடு போட்டு பார்க்கக் கூடாது.முக்கோணம் போடுங்கள். அதான், குடும்பக்கட்டுப்பாட்டுக்கு போடுவோமே. இந்த முக்கோணம் மூன்று பக்கமும் ஒரே அளவா போடக் கூடாது. அடிப்பாகம் மிக மிகப்பெரிது. ஆம், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் அதிகம். மத்தியதரக் குடும்பம்;ரெண்டுங்கெட்டான். அரசாங்கத்திடம் கற்பக விருட்சம் கிடையாது. வரிப்பணம் அதிகரிக்க வேண்டும்.மேலும் சுமை.

அர்த்தம் கெட்டு நாம் நிறைய பேசுகின்றோம்.

என்னளவில் செய்ய முடிந்ததைச் செய்தேன்.முழுப்பிரச்சனையைத் தீர்க்கும் வலிமை எனக்குக் கிடையாது. கோபம் மட்டும் வந்தது.

இன்னொரு அம்மாவையும் காட்ட விரும்புகின்றேன். கிண்டியிலிருந்து 45B பஸ் பிடித்து நந்தனம் சென்று கொண்டிருந்தேன். அலுவலக நேரம்; கூட்டம் அதிகம். சைதாப்பேட்டையில் பஸ் சில நிமிடங்கள் நின்றது.ஒரு பெண் கையில் அழும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள். அவ்வப்பொழுது துணியை விலக்கிக் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிக் கொண்டு வந்தாள். என் பார்வைக்கு வந்த பொழுது நான் அதிர்ந்துவிட்டேன். குழந்தையின் ஆசனவாயிலில் சிகப்பாக பெரிய சதைக் கட்டி! என்னவென்று கேட்கும் முன் பஸ் புறப்பட்டு விட்டது.அன்று முழுவதும் அமைதி இல்லை.

இரண்டு நாட்களில் அவளை எலெக்ட்ரிக் டிரைனில் பார்த்தேன். என் பக்கம் வரவும் காசு கொடுத்து மெதுவாக விசாரித்தேன். அவள் குழந்தையை எக்மோர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றாளாம். அவர்கள் கவனிக்கவில்லையாம். காசு வசூலித்து வேறு நல்ல டாகடரிடம் காட்டப் போகின்றாளாம்

எனக்குப் புரிந்துவிட்டது. நானே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போகின்றேன் என்றேன்.திருதிருவென்று விழித்தாள்.மெதுவாக நகர ஆரம்பித்தாள்.எக்மோர் வந்தது. அவளை இறுகப் பற்றிக் கீழே இறக்கினேன். திமிறி ஓடப் பார்த்தாள். பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்குக் கூப்பிட்டேன்.முதலில் தயங்கினார்கள்.” இவள் பெரிய தப்பு செய்யறா. குழந்தையைக் காப்பாத்தணும் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இவளைக் கூட்டிப்போக வாங்க. உடனே நீங்க போய்டலாம். நான் ஒரு பெரிய ஆபீஸர்தான்,” என்றேன்.பின்னர் தயங்காமல் வந்தனர்.அவளைப் பிடித்துக் கொண்டு ரயில்வே போலீஸ் நிலையம் சென்றோம்.

உள்ளே போகவும் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.உடன் வந்தவர்களை அனுப்பிவிட்டேன். அங்கிருந்து எங்கள் டைரக்டருக்கு போன் செய்து விபரம் கூறவும் அவர்களே போலீஸ் நிலயத்திற்கு தொலை பேசியில் பேசி உதவி செய்யச் சொன்னார்கள். போலீஸ் ஜீப்பில் எக்மோர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். அப்பொழுது அங்கே டைரக்டராக இருந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

விசாரித்ததில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.அவள் துணைக்குத் தங்க வேண்டும் என்று சொன்னவுடன் தங்க மாட்டேன் என்று போய் விட்டாளாம். அவளிடம் உண்மையைக் கூறும்படி மிரட்டவும் உண்மைகள் வெளிவந்தன். அவள் கணவனும் குடிகாரன். குழந்தையைக் காட்டி பிச்சை எடுக்கச் சொன்னது அவனே தான்.புருஷன் அடிப்பான் என்று அழுதாள். இவள் அம்மா மட்டுமல்ல;ஒருவனின் மனைவியும் கூட! பெற்றவளேயானாலும் தான் பெற்ற பிள்ளை வலியால் துடித்தும், பெற்றமனம் இங்கே கல்லாகிவிட்டததைக் காண்கின்றோம்..

தாய்ப்ப்பாசத்தைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுகின்றோம். இந்த வகையினரை எதில் சேர்ப்பது?

இச்சையில் ஆடவன் மிருகமானால் இல்லற சோதனையில் பெண் இயந்திரமாக மாறுகின்றாளே!

பாசம்,பரிவு எல்லாம் பதுங்கி விடுகின்றன.

குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அவள் கணவனை போலீஸ் உதவியுடன் கூட்டி வந்து எங்கள் டைரக்டர் முன் நிறுத்தினேன். அவனுக்கு மனைவி, குழந்தை வேண்டுமென்றால் அவளை அவன் கொடுமைப் படுத்தக் கூடாது அல்லது பிடித்து கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் என்று கூறவும் பணிந்தான். குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு. ஆனால் பொண்டாட்டியை அடித்தால் போலீஸ் வந்துவிடும் என்று தெரிந்தததால் திட்டுவதுடன் நிறுத்திக் கொண்டான். குழந்தை பிழைத்தது. அடிவாங்குவதும் அப்பொழுது நின்றது. ஆனால் இது முழுமையான தீர்வாகுமா?

தீர்வு காணமுடியாத பிரச்சனைகள் எத்தனை எத்தனை?

தினமும் பல பிரச்சனைகள் சங்கிலலித் தொடராக என்னைத் தேடிவரும்.

நான் பார்த்த பணி சமூகநலம்.நான் ஓர் சமூக மருத்துவர். இலாக்கா அளவில் முடிந்ததைச் செய்வோம். ஆனாலும் மனத்தில் திருப்தி இருக்காது.

மணியனிடம் போய்ச் சொல்லுவேன்.”அசடு, ஊர்ன்னு சொன்னா எல்லாம்தான் இருக்கும்.“ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

சாவியிடம் சொன்னால் ’உச்’ கொட்டுவார்.ஆரம்பத்தில் கொஞ்சம் சொன்னேன். எதிரொலி இல்லை.

ஜெயகாந்தனிடம் ஓடிப் போய் புலம்புவேன்.

ஒரு நாள் அருகில் இருந்த ஒருவர் “அம்மா பாவம், உளர்றாங்க” என்றார்.

அன்று முதல் நானும் ஜெயகாந்தனிடம் “உங்களிடம் உளறணும் எப்போ வர?“ என்று கேட்க ஆரம்பித்தேன். அவரும் “எப்போ வேணும்னாலும் வாங்க; உளறுங்க! உளறலைக் கேட்க எனக்கு இரண்டு காதுகள் இருக்கின்றன,"என்பார்.

ஆமாம்! ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு விடலாம். மண்டைக்குள் செலுத்தினால்தானே கோலுக்கு வந்து அது எழுத்தாகும்.

சமத்துப்பிள்ளையாண்டான்!

சொல் விளையாடலில் சாம்பியன்.

குடிகார புருஷனைப்போல் பொறுப்பில்லா அப்பனாக இருந்துவிட்டால் அங்கும் கொடுமைகளும் நடக்கும்.

இன்னொருத்தியைப்பற்றி ஒரு புகார்; நிலையான வேலை பார்க்கின்ற ஒருத்தி விபச்சாரமும் செய்கின்றாள் என்று புகார். அவளிடம் பேசினேன். எனக்கு ஒரு ராசி உண்டு. என்னிடம் பேசுகின்றவர்கள் அவர்கள் துன்பத்தை அப்படியே கொட்டிவிடுவார்கள். அவளும் தான் செய்யும் இன்னொரு தொழிலை மறைக்கவில்லை.அவள் சொன்னதைச் சொல்லுகின்றேன்

என் அப்பா ஒரு சூதாடி! பணம் திருடினதால் வேலை போச்சு. அதனாலே கவலையாம்; கவலை மறக்க குடிக்கணுமாம். வீட்டில் இருக்கும் ஒவ்வொன்றாய் காணாமல் போச்சு. காப்பாத்த வக்கில்லாத ஆம்புள்ளைக்கு புள்ளங்க இருக்கலாமா? குடும்பக்கட்டுப்பாடு திட்டத்துலே ஆப்பரேஷன் செய்தால் அவன் ஆம்புள்ளைத்தனம் போய்டுமாம். புள்ளே பெத்து பெத்து அம்மா உடம்பும் கெட்டது. லூப் போட்டுக்கோன்னு அம்மாகிட்டே சொன்னேன். என் தலைவிதி, அம்மாகிட்டே மக சொல்ல வேண்டியிருக்கு. ஏற்கனவே ஆறு புள்ளங்க. எங்கே தப்போ, அப்புறமும் ரெண்டு குழந்தைங்க.பிறந்துச்சு. அம்மா ஆப்பரேஷன் செய்துட்டாங்க. என் சம்பாத்தியம் முழுசும் குடும்பத்துக்கு.ப் போய்டும். வெட்கம் கெட்ட அப்பன் எங்கே எனக்குக் கல்யாணம் செய்து வைக்கப் போறான்? கல்யாணம்னா அங்கேயும் நகை காசு இல்லாம நடக்குமா? அதுக்குத்தான் என் கல்யாணத்துக்குப் பணம் சேர்க்க இதை சைட் பிஸினஸாகச் செய்கின்றேன்."

என்னை யாரோ அடிப்பதுபோல் உணர்ந்தேன். அவள் உடல் பசிக்கு இரை தேடவில்லை. திருமணத்திற்குக் காசு வேண்டி விபசாரத் தொழில்.

இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கேட்டிருக்கிங்களா?

பேசும் சக்தி இழந்து விழித்துக் கொண்டிருந்தேன். அடுத்த அடி விழுந்தது!

என்னம்மா, அதிர்ச்சியா? உங்களுக்குத் தெரியுமா? இந்த தரகங்கிட்டே வர்ர ஆம்புள்ளங்க கேக்கறது அவங்களுக்குக் குடும்பப் பொண்ணு அல்லது காலேஜ் படிக்கிற பொண்ணு வேணுமாம். அவனுக்குக் குடும்பம் இல்லியா? இவன் மக காலேஜுக்குப் போக மாட்டாளா? இவனுக்கு மட்டும் பத்தினி பொண்டாட்டி.வேணும். அடுத்தவன் பொண்டாட்டி இவனுக்கு வேணும்! பாவிங்க, இவங்க திருந்தாம இருந்தா இனிமே பொண்டாட்டி second hand ஆகத்தான் கிடைப்பா."

இது கற்பனையல்ல. இப்படி விதவிதமான எரிமலைக் குமுறலைக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

(தொடரும்)

நன்றி -திண்ணை

Monday, April 12, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-05

எட்டையாபுரக் கடைத்தெருவில் ஊர்வலம் நுழைந்து செல்ல ஆரம்பித்தது. அந்தத் தெருவின் மத்தியில் எங்கள் ஹோட்டல் “லலிதாமணி பவன்“ அமைந்திருந்தது. அதையொட்டிய வீட்டில் நாங்கள் குடி புகுந்தோம். கடையின் பின் புறமும் வீட்டுப் பின் புறமும் தடுப்பின்றி சேர்ந்து ஒரே முற்றமாக இருந்தது எங்களுக்கு வசதியாயிற்று.

அமைதிச் சூழலிலிருந்து பரபரப்பு வட்டத்திற்குள் நான் அடியெடுத்து வைத்தேன். மனம் மட்டும் ஊருக்குள் புகுந்து சுற்றிவிட்டு வரும்.

நவராத்திரியின் பொழுது, சேர்ந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் போய்ச் சுண்டல் வாங்கிச் சாப்பிடுவோம். நாங்களும் அலங்கரித்துக் கொண்டு பவனி வருவோம். பாடச் சொன்னால் ஏதோ ஒரு பாட்டு பாடுவோம்.

இதைப் போலவே இன்னொரு பண்டிகையும் உண்டு. மண்ணிலே பசு செய்து ஒரு வீட்டில் வைத்து பத்து நாட்கள் பூஜை செய்வோம். சின்னப்பெண்களுக்குக் கொண்டாட்ட விழா. குஞ்சம் வைத்த பின்னல் ஆட, கூந்தலில் மல்லிகை மணக்க, தழையக் கட்டிய பாவாடை தெருவைத் தழுவ, மைய்யிட்டச் சுடர்விழிகள் சுற்றிச் சுழல, தெருக்களில் ஆடிய கோலாட்டம் தெருவே மகிழ்ந்து சிரிக்கும். இது பத்து நாட்கள் கொண்டாட்டம்.

எல்லாத் திருவிழாக்களும் மூட நம்பிக்கை காரணம் காட்டி ஒதுக்குதல் சரியல்ல என்பது என் கருத்து.

நான் ஆஸ்திரேலியா நாட்டிற்குச் சென்ற பொழுது அங்கு ஒரு செய்தி படித்தேன். பழங்குடியினர் கூட்டம் கூட்டமாகப் பிரிந்து வாழ்வது பழக்கம். வருடத்தில் ஒன்றிரண்டு தினங்களில் ஒரே இடத்தில் கூடிக் கொண்டாடுவதை வழக்கமாக்கி அதனைத் திருவிழாவாக்கி மகிழ்கின்றனர் இப்பழங்குடியினர் அங்கு குடியேறி சுமார் 40000 ஆண்டுகளாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள்.ஆக திருவிழாக்கள் தொன்மையானது என்று தெரிய வருகின்றது.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதறி, சுதந்திரப் பறவைகளாய் வாழும் மேலைநாட்டார்,நன்றி தெரிவிக்கும் தினம்,தாயார் தினம்,தந்தை தினம், ஏன் காதலர்களுக்கும் ஒரு தினமென்று கூடி மகிழ்கின்றனர், உறவுகளும், நட்புகளும் ஒன்று கூடி மகிழ்வதைத் திருவிழாக்களாய்க் கொண்டாடி மகிழ்ந்தோம். காலம் மாறினாலும் பெயர்கள் மாறியிருக்கிறதேயொழிய அந்தப் பழக்கங்களில் நாம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கின்றோம். இரண்டையும் பார்த்த எம்போன்றோர்க்கு அதில் உணர்ந்த இனிமையும், உள்ளுணர்வின் சுகமும் இதில் இல்லை.பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே என்பது இலக்கணம்;ஒப்புக்கொள்கிறேன்.

பறந்து சென்ற மனப்பறவையைக் கூட்டுக்குள் வைத்து நிகழ்காலத்திற்கு வந்தேன். என் தந்தை கர்நாடக சங்கீதம் கற்றவர். என் தாயாரை என் தந்தைக்கு மணமுடித்து வைத்தவர் ஒரு பாட்டு வாத்தியார்தான். எனக்கு சங்கீதப் பயிற்சி ஆரம்பமானது.

அம்பி அய்யர் சாது. அவர்தான் பொறுமையாகக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். மோகன வர்ணம் தொடங்கவும் பிரச்சனையும் ஆரம்பித்தது. “நின்னுக்கோ “ என்று ஆரம்பிக்கவும், நான் நின்று கொண்டு “நின்னுக்கோ,உக்காந்துக்கோ,“ என்று ஆடுவேன். ஸ்வரங்களைக் கேலி செய்வேன். பாவம் அவர்;இப்பொழுது நினைத்து மனம் கஷ்டப்படுகின்றது.

என் தந்தை மூலமாக அடுத்து இடையூறு. “தமிழ்ப்பாட்டு சொல்லிக் கொடுய்யா.உடனே கண்ணன் வரக் காணேனே கழுதை வரக் காணேனே என்று பாட்டு சொல்லிக் கொடுக்கக் கூடாது. “சத்தியம் வெல்லும்“ பாட்டு,வந்தே மாதரம் பாட்டு சொல்லிக் கொடு. தேசிய கீதங்கள் அவள் பாட வேண்டும்.“

வாத்தியாருக்கு இது பெரிய சோதனை. தியாகராஜரின் தெலுங்குக்கீர்த்தனைகளும் தீட்சதர், சாமாசாஸ்திரிகள் பாடல்களும் தான் ல்லிக் கொடுத்துப் பழக்கம்.அவர் ருவதை நிறுத்தவில்லை. அவர் தமிழ்ப் பாடல்களைக் கற்றுக் கொண்டு எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது. சேட்டை செய்யாமல் நான் பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

என் தந்தை தேசியப் பாடல்கள் கற்றுக் கொள்ளச் சொன்னதில் அர்த்தமுண்டு. அப்பா ஒரு காங்கிரஸ்காரர். தேசியவிடுதலைப்போராட்டத்தில் மும்முறை சிறைக்குச் சென்றவர். இன்னும் போராட்டம் முடியவில்லை. ஒன்றிரண்டு ஊர்வலங்களில் முதலில் காங்கிரஸ் கொடி பிடித்து என்னை நடக்கச் சொல்லுவார். தேசியப் பாடல்கள் பாடச் சொல்லுவார்.

தூத்துக்குடிக்கு ஏ.பி.சி வீரபாகு, நெல்லையில் சோமையாஜுலு போன்றவர்களைப் பார்க்கப் போகும் பொழுது என்னையும் பல முறை கூட்டிச் சென்றிருக்கின்றார்.கூடிக் கூடிப் பேசுவார்கள். புரியாத பொம்மையாய் உட்கார்ந்திருப்பேன். போகப் போக அவர்கள் பேச்சுக்கள் புரியா விட்டாலும் அவர்களின் துடிப்பும் வேகமும் புரிந்தது. எங்கும், எந்த நேரத்திலும் பய உணர்ச்சி வரவில்லை.

இந்த அனுபவங்கள் நல்ல அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்தது.

அரசியல் தலைவர்களாயினும் அதிகாரத்தில் உயர் நிலையில் இருப்பவராயினும் என்னால் எளிதாக அணுக முடிந்ததற்குக் காரணம் என் பிள்ளைப் பருவத்தில் கிடைத்த அனுபவங்கள் காரணம்.

என் தந்தை உள்ளூரிலும் காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய உறிப்பினராக இருந்தார். எனவே வருவோரும் போவோரும் அதிகமாக இருந்தனர். அரசியலையும், அரசியல்வாதிகளையும் பார்க்கஆரம்பித்தேன். காங்கிரஸ்காரர்கள் கதர் உடுத்தி யிருப்பார்கள். நானும் சர்க்கா, அதாவது ராட்டை நூற்கக் கற்றுக்கொண்டு, சிட்டங்களைக் கதர்க் கடையில் போட்டுத் துணி வாங்கி, பாவாடைசட்டை தைத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றேன். சின்ன வயதில் கதராடை உடுத்தி வளர்ந்தவள்.

“அதிகமாக ஆடைகள் தேவைக்கு மேல் வைத்திருக்கக் கூடாது,வைத்தால் அவன் திருடன்” என்று என் தந்தை கூறுவார். ஏழையின் கஷ்டத்தை உணர்ந்து எளிய ஆடை உடுத்திய காந்தியோ, தேவைக்கு மேல் வைத்துக் கொள்வது தவறு என்று சொன்ன என் தந்தையோ பொது உடைமை வாதிகளல்ல. மனித நேயம் என்பது மனிதத்திற்கு முக்கியமானது. இது ஒரு ஒழுங்குமுறை.

இதுவரை தொடர்ந்து வரும் எளிய பழக்கங்கள்அப்படியே இருக்கின்றன. எப்பொழுதும் விலையுயர்ந்த ஆடைகள் என்னிடம் கிடையாது. துணிக்கடையைவிட எனக்குப் புத்தகக் கடைகள் பிடிக்கும். ஆசைகள் குறைவாக இருந்தால் குறுக்குவழி வாழ்க்கையைத் தேடமாட்டோம்.

(ஊர்வலம் தொடரும்)

Saturday, April 10, 2010

மரத்தடியில் முக்கனிகள்-01

மரத்தடியில் முக்கனிகளும் அமர்ந்திருந்தனர்.மா, பலா, வாழை.வாழையிடம் ஒரு வாட்டம். மேலும் மாங்கனியைப் பார்த்த பார்வையில் நேசமில்லை. பலா அதனைக் கவனித்துவிட்டது.

“என்ன வாழையம்மா, வாடிப்போயிருக்கீங்க ?மனதிலே ஏதோ ஒண்ணு உங்களை உருத்திக்கிட்டு இருக்கு. வெளி வந்துடட்டும். பாரம் போய்டும்” என்று சாமர்த்தியமாக விசாரித்தது பலாக்கனி.

“நன்றி கெட்ட ஜனங்கள். காலம் பூராவும் அவங்களுக்குக் கிடைக்கற மாதிரி இருக்கேன். குறைச்ச காசுக்குக் கிடைக்கும்.பழங்கள் வரிசை போடறப்போ என் பேரையில்லே முதல்லே போட்டிருக்கணும்.
நீங்க ரெண்டு பேரும் சீசன் பழங்க. மாம்பழத்துப் பேரை முதல்லே போடலாமா ?” கேள்வியை ஆத்திரத்துடன் கேட்டது வாழை. மாங்கனி சிவந்து விட்டது.

“முதல்லே பேரைப் போட்டுட்டு மொத்து மொத்துனு அடிக்கறாங்களே அது கண்ணுக்குத் தெரியல்லியா?” என்று வருத்ததுடன் கேட்டது மாங்கனி. பலாக்கனிக்கு சுவாரஸ்யம் வந்துவிட்டது.

“ஆஹா, இன்னிக்குப் பொழுது போகும். கதை கிடைச்சிருச்சு. “என்று மனத்திற்குள் நினைத்தது. அதன் தோற்றத்திற்கேற்ற புத்தி. உள்ளும் புறமும் வித்தியாசம்.

“அதென்ன மாங்கணி, உன்னை யாரு மொத்தறாங்க” என்று கனிவான குரலில் கேட்டது பலா.

வாழைக்கனி மவுனமாக நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்தது.

மாம்பழத்தின் கதை

நாரதர் ஒரு மாம்பழத்தைக் கைலாயத்திற்கு எடுத்துச் சென்றது அவர் தவறு.மகேசனே ஆனாலும் மனைவி மக்களை விட்டுச் சாப்பிடுவாரா ? குழப்பத்தை உண்டு பண்ணவே ஒற்றைக் கனியைச் சிவனிடம் கொடுத்தார்..வந்து தொலைந்தது பரிசோதனை.

உலகைச் சுற்றி முதலில் வரும் பிள்ளைக்கு மாங்கனி.

இது குசும்புதானே. உடனே சுட்டிப் பிள்ளை முருகன் மயிலில் பறந்துவிட்டான். பாவம் விநாயகர். பார்த்தார். அப்பா, அம்மாவைச் சுற்றினால் யோசனை சொல்லுவார்கள் என்று நினைத்து ஒரு வலம் வந்தார். அவ்வளவுதான். அவரை உற்சாகப் படுத்த எல்லோரும் கை தட்டினார்கள். பிள்ளையார் மேல் இரக்கங்கொண்டு, அப்பா அம்மாவைச் சுற்றினால் உலகம் சுற்றியதற்குச் சமம் என்று சொல்லி விட்டார் ஒருவர்.

பிள்ளையார்குட்டியும் உடனே அதையே சொல்லிவிட்டது. குழந்தைகள் சில நேரம் கிளிப் பிள்ளைகள் மாதிரி சொன்னதைத் திருப்பிச் சொல்லுவார்கள்..மாம்பழம் அவர் கைக்கு வரவும் அப்பாவியாய்த் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தார்.

பொடிப்பைய்யன் வந்துவிட்டான். பார்த்தான். எல்லோரும் ஏமாற்றிவிட்டதை உணர்ந்தான்/ காரமான பொடியன். அவ்வளவுதான்.ஆடைகளைத் தூர எறிந்தான். ஆபரணங்களையும் வீசி எறிந்தான். கட்டிய கோவணத்துடன் பழனி மலைக்குப் பறந்து விட்டான்.(அக்காலத்தில் ஜட்டி கிடையாது. அதுதான் கோவணத்துடன் பறந்தான். கோவணத்தாண்டி என்ற பட்டம். (ஜட்டி போட்டிருந்தால் ஜட்டி ஆண்டி என்று பெயர் வந்திருக்கும்)

இத்தனைக்கும் நாரதர்தான் மூலகாரணம். மாம்பழம் வாங்கினா ஆண்டியாய் விடுவான்னு கேலி பேசினா வருத்தம் வராதா?

மாம்பழத்துக்குச் சிவன் மேலும் கோபம்.அவர் இன்னொரு இடத்திலும் விளையாடியதால்தான் கேலி நிலைத்து விட்டது.

நம்ம சாலமன் பாப்பைய்யா பட்டி, மன்றத்தில் ராஜா கேலி பண்ண ஆரம்பிச்சுடுவார்னு கவலை வேறு.
பலாக்கனி கேட்டுக் கொண்டதால் இன்னொரு கதையயும் மாங்கனி சொல்லிற்று.

காரைக்காலில் புனிதவதின்னு என்று ஒரு அம்மா. நல்லவங்க. பசின்னு யார் வந்தாலும் சோறு கொடுப்பாங்க. அவங்க புருஷன் ஒரு வியாபாரி. அடிக்கடி வெளியூர் போய்டுவான். ஒருதபா ரெண்டு மாம்பழம் வாங்கிக்கிட்டு வந்து பொண்ஜாதியிடம் கொடுத்தான்.

கைலாயத்தில் ஒரு மாம்பழம். காரைக்காலில் ரெண்டு மாம்பழம். இந்த சிவனுக்கு எப்படி குசும்பு.எல்லாம் அவரோட விளையாட்டு. (நம்ம சிவனை நம்ம நாட்டுக்குப் பிரதம மந்திரியாக்கிடலாமான்னு பலா மெதுவாக் கேட்டது. மாவோ கதை சொல்லுவதிலே கவனம். கதை தொடர்ந்தது)

புனிதம்மா புருஷன் வெளியிலே போயிருந்தப்போ ஒரு சாமியார் “பசி” ன்னு வந்தார். சோறு இல்லை. ஒரு மாம்பழத்தை அவருக்குக் கொடுத்தாங்க.பசிக்கு அதாவது கிடச்சதேன்னு சாப்பிட்டுட்டு சாமியார் போய்ட்டார்.

போன புருஷன் வீட்டுக்கு வந்தான். நல்ல வேளை சாமியார் போனவுடன் அந்த அம்மா சமையல் முடிச்சிட்டாங்க. (இந்தக் காலம்னா ரெஸ்டாரண்ட்டுக்குப் போகலாம்னு சொல்லிடுவாங்க, புருஷனும் பயந்து போய் கூட்டிட்டு போவான். இந்த ஆம்புள்ளங்களுக்கு வேணும். என்னமா ஆட்டிவச்சாங்க. காலம் மாறிடுச்சுடோய்ய்ய்ய் .பயந்து நடங்க!மாம்பழ மனத்தில் இடையில் இப்படி ஒரு நாதம்)

சாப்பிட உட்கார்ந்தார் அய்யா. சாப்பாட்டு இலையில் ஒரு மாம்பழம் கொண்டு வச்சாங்க. பழத்தை ருசி பார்த்தவன் இன்னொரு மாம்பழத்தையும் கேட்டுட்டான்.பொண்டாட்டி சாப்பிட இருக்கட்டும்னு புருஷன் நினைக்கல்லே. விவஸ்தைகெட்ட மனுஷன்.

அவள் சாமியார் விஷயத்தைச் சொல்லியிருக்கலாம். ஒண்ணும் பேசாம உள்ளேபோய்ட்டு சிவன் அய்யாவை நினச்சு அழுதா. (ஆமாம் , இந்தப் பொம்பளைங்களுக்கு எப்படி பொசுக்குன்னு அழுகை வருது. அமெரிக்காவிலே பிரிசிடெண்டுங்க பொண்டாட்டிங்க மேடையிலே புருஷன் ஜெயிச்சா அழுதுடுவாங்களாம் ஆனால் கிளிண்டன் பொண்ஜாதி அழமாட்டாங்களாம்ஆனால் அவரு அழுதுடுவாராம். அவருக்கு நல்ல மனசுய்யா)

சிவன் அய்யாவுக்கும் இரக்கம் வந்து ஒரு பழம் கொடுத்தாரு. (அது இரக்கமா, இல்லே புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டுக்கட்டும்ங்கற நினைப்புதான். கைலாயத்திலே அண்ணன் தம்பிச் சண்டை இங்கே புருஷன் பொண்டாட்டி சண்டை.கடவுளுக்குக் கூட fighting பார்க்க ஆசைதான்.)

(அடுத்ததில் முடிவு)

Friday, April 9, 2010

எண்ணங்கள் ஊர்வலம் -04

சரித்திரம் தேர்ச்சி கொள்


பழங்கதை தெரிந்து கொள்வதில் அர்த்தமென்ன இருக்கின்றது?

பின் பாரதி உள்ளிட்டப் பல பெரியவர்கள் எதற்காக இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்?

சிந்திக்க ஒரு கேள்வி!

வேர்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற அனுபவசாலிகளின் கூற்று பொருளற்றதா?


தெரிந்து கொண்டதில் நல்லன ஏற்று அல்லன ஒதுக்க அது ஒரு குறிப்பேடு என்றும் எடுத்துக் கொள்ளலாமே! வாழ்க்கை செம்மையாகவும், செழுமையாகவும் அமைய அது ஒரு வழிகாட்டி. இக்கருத்தை எனக்குள் புதைத்தவர்கள் என் தாயும் தந்தையும் ஆவார். தாய் மூலம் சேய் அறிந்து கொள்வதில் பல உணர்ச்சிபூர்வமானவை.

கல்கியையும் பாரதியையும் அடையாளம் காட்டியவர் என் தந்தை.பாரதி சிறிது காலம் வாழ்ந்த இல்லத்தில் நானும் சிறிது காலம் வாழ்ந்தது எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பு, அதுவே என் வாழ்க்கை அமைவுக்கு ஓர் அஸ்திவாரமாகி விட்டது. அந்த வீடு ஓர் கற்பனைக்கருவூலமாக உணர்ந்தேன். வீட்டில் இருக்கும் பொழுது எனக்குச் சொல்லப்பட்டவைகளை மனத்தில் அசைபோட்டுக்கொண்டு கற்பனையில் மூழ்கும் பழக்கம் தொடங்கியது.

பல்ளியில் இருந்து திரும்பியபின் விளையாட என் வயதுப் பிள்ளைகள் அந்தத் தெருவில் எனக்குக் கிடைக்கவில்லை. அதே தெருவில் இருந்த பாரதியார் இல்லத்திற்குச் சென்று விடுவேன். பாரதியின் தாய்மாமன் சாம்பவசிவ அய்யர் இருப்பார். அவரிடம் போய்ப் பேசிக் கொண்டிருப்பேன்.அப்பொழுது சுதந்திரம் கிடைக்காத காலம். பாரதியும் காலமாகி விட்டார். சாம்பு மாமா என் ஆர்வத்தைப் பார்த்து கதை சொல்லுவார். பாரதியைப் பற்றிப் பேசுவார். பெரியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்பொழுது தூணைக் கட்டிக் கொண்டு நின்று கேட்பாராம். சட்டென்று அவருக்குத் தோன்றியதைத் தயங்காமல் கூறுவாராம். பாரதியின் துணிச்சலைப் புகழ்வார். மாமாவைப் பாடச்சொன்னாலும் அவர் அடிக்கடி என்னிடம் பாடிக்காட்டிய பாடல்:

ஜய பேரிகை கொட்டடா!” - உரத்துப் பாடுவார்.

“கொட்டடா” என்பதை ஏற்றத்தில் ஒருமுறை இறக்கத்தில் ஒரு முறை பாடுவார். அவர் உடல் முழுவதிலும் துடிப்பு இருக்கும். மாமாவே இப்படியென்றால் மருகன் எப்படி இருந்திருப்பார்? அந்தக் காலத்தில் பாரதியின் பாடல்களைப் பாடும் பொழுது உடலெல்லாம் உணர்ச்சி வெள்ளம். அடிமையராய் வாழ்ந்த காலம். ’ஆடுவோமே பள்ளு பாடுவோமே!’ என்று அப்பொழுதே பாடிவிட்டான் பாரதி. அவன் ஓர் தீர்க்கதரிசி.

மாமா பாட நான் ஆடுவேன்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை

இந்த வீரவரிகள் என் இரத்தத்துடன் கலந்துவிட்ட வரிகள்.

துணிச்சல்காரி என்ற பட்டம் கிடைக்க நான் கற்ற முதல் வரிகள்.

இதனைச் செய்தவர் பாரதியின் தாய்மாமன்.

என் துணிச்சல் பிறந்த இடம் பாரதி பிறந்த இல்லம்

பாரதியைப் பார்க்க முடியாமல் போய் விட்டதற்கு அழுகையாக வரும். குழந்தைப் பருவத்தில் இழப்பின் துயரை முதலில் எனக்கு உணர்த்தியது பாரதியின் மரணம்.

பாப்பா பாட்டைப் பாடிக் காண்பிப்பார்.

நல்ல எண்ணங்களைப் பிஞ்சுப் பருவத்தில் பதிய வைப்பது பலன் உண்டு என்பதைப் புரிந்தவர் பாரதி.

ஓடி விளையாடு பாப்பா! "அருமையான பாட்டு. ஒவ்வொரு குழந்தைக்குத் தெரிந்திருக்க வேண்டிய பாட்டு.

பொய் சொல்லக் கூடாது பாப்பா
புறஞ்சொல்லக் கூடாது பாப்பா

பெற்றவள் தன் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பாட்டு.

அர்த்தமில்லா பாட்டு பாடும் பிள்ளைகளை ரசிக்கும் பல தாய்மார்களைக்காணும் பொழுது மனம் வருந்துகின்றது.

பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம்
பயங் கொள்ளக்கூடாது பாப்பா

அப்பப்பா, இந்த வார்த்தைகள் எனக்குள் புதைந்து, சூறாவளிச்சுருளில் நான் சுருண்ட பொழுதிலும் தலை நிமிர்ந்து நடக்க வைத்த மந்திரச் சொற்களாய் வாழ்ந்து வருகின்றன.

பாரதியின் துணிச்சல் பிடித்திருந்தது. இன்றுவரை என்னை அறிந்தவர்கள் என்னைப்பற்றிக் குறிப்பிடுவது

துணிச்சல்காரி!"

எனக்குள் பாரதி இருக்கின்றான்.

இன்னும் நினைவில் இருக்கும் வரிகள்

“குன்றென நிமிர்ந்து நில்”
“கொடுமையை எதிர்த்து நில்”
“புதியன விரும்பு”

பாரதியார் தெருவில் சாம்பு மாமாவால் கற்றுக் கொடுக்கப் பட்டவை.

பாரதி உயிருடன் இருக்கும் பொழுது அவர் பெருமையை, அவரின் சக்தியைப் பெரும்பாலோர் புரிந்து கொள்ளவில்லை. அவர் பிறந்த மண்ணில், அரண்மனையில் பெரியவர்களால் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டவர். எட்டையபுரம் சமஸ்தானம் கலைஞர்களுக்கு ஒரு தொட்டில். பாரதி பட்டமே கிடைத்தது அங்கேதான்.

இளசை என்ற பெயர் ஊரின் எழிலுக்காக வந்த பெயர். ஆனால் நான் பார்த்த எட்டையபுரம் தண்ணீர்ப் பஞ்சமுள்ள ஊர். இரண்டு குளங்கள் உண்டு. ஒன்று நல்ல தண்ணீர்க் குளம். இதிலிருந்துதான் குடிதண்ணீர் எடுக்க வேண்டும். குளம் வற்றும் பொழுது வடிகட்டித்தான் தண்ணீர் குடிக்க முடியும்.இங்கே கவிஞர்களும், கலைஞர்களும் வாழ்ந்தது கலையுள்ளமும் கருணை மனமும் கொண்ட எட்டயபுரம் சமஸ்தான மன்னர்கள் புரவலர்களாக அமைந்தது தான்.

பாரதி இந்த ஊரை விட்டு வெளிச்சென்று விட்டார். ஒரு ஊருக்கு மட்டும் சொந்தமானவரல்லவே.அவர் இறுதி ஊர்வலத்திற்கு பதினைந்து பேர்கள்தான் சென்றனர் என்ற செய்தி மனத்தைக் காயப் படுத்தாமல் இருக்க முடியாது.

நெஞ்சு பொறுக்குதில்லையே!” என்று பாடத் தோன்றுகிறது.

குழந்தைகளுக்குக் கதை கேட்கப் பிடிக்கும். கதைகள் சொல்லவும் பிடிக்கும். அவர்களின் கற்பனை வேடிக்கையாக இருக்கும். நானும் கதை சொல்ல ஆரம்பித்து விட்டேன். ஆம். பாரதி வாழ்ந்த வீட்டில் ஓர் எழுத்தாளன், பேச்சாளன் உதயமாகிவிட்டான்.

பாரதியார் தெருவை விட்டு மேலவாசலில் உள்ள ஒரு வீட்டிற்குக் குடிபோக நேர்ந்தது. என் தந்தை அரண்மனை வேலை விட்டு, மேலவாசலில் ஒரு ஹோட்டல் ஆரம்பித்தார். கடைக்கு அடுத்து இருந்த வீட்டில் குடும்பம் இருந்தது.

பத்திரிகைகள், புத்தகங்கள் நிறைய வாங்கிப் போட்டார். நான் படிக்க ஆரம்பித்து விட்டேன். இக்காலத்தில் குழந்தைகள் படிப்பதற்கென்று புத்தகங்களும் வருகின்றன. எங்கள் காலங்களில் குழந்தைப் பருவத்தில் புத்தகங்கள் படிக்கச் சொல்லுவதில்லை. தொடர்கதைகளும் படித்தேன். கல்கியை எழுத்தில் ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் பள்ளி வாழ்க்கை மறக்க முடியாது. என்னை உருவாக்கிய பள்ளி சாதாரணமானதல்ல.பாரதியும், ஸ்வாமி சிவானந்தரும் படித்த பள்ளி. பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சமுதாயப் பணியாளர்களையும் உருவாக்கிய பள்ளி.

“ராஜா உயர் நிலைப்பள்ளி"

(ஊர்வலம் தொடரும்)

Wednesday, April 7, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன் 02

சீதாலட்சுமி, என்னைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?"

என்னைக் கேள்வி கேட்பது போன்ற பார்வை.. அதற்கு ஓர் தனி அர்த்தம் உண்டு. என்னைப்பற்றி, என் அனுபவங்களைப் பற்றி எழுத நான் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்தான் ஜெயகாந்தன்.

எங்கள் முதல் சந்திப்புக்குக் காரணம் அதுதான்.

என் தோழிகள் அமைத்துக் கொடுத்த சந்திப்பு. அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க எங்களைப் பார்க்க வந்தார். .அன்று என்னைப் பேச விட்டு அவர் மவுனமாக இருந்தார். என் தோழிகள்தான் இடையில் பேசுவார்கள். ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டும் உதிர்த்தார்.(எழுதத்தான் தெரியும் போல் இருக்கின்றது. சரியான உம்மணாம் மூஞ்சி என்று நினைத்துக் கொண்டேன்). நான் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். என் குறைகளில் அதுவும் ஒன்று. சமுதாயத்தில் மீது இருந்த கோபத்தில் உரத்துப் பேசிய கணங்களும் உண்டு. அவரோ பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

He is a good listener

அவர் எழுத்தின் வலிமைக்கு அதுவும் ஒரு காரணம். அவர் புறப்படும் பொழுது என் தோழி பழனியம்மாள் தான் ஒன்றைக் கேட்டார்கள்.

சீதா சொன்னவைகளை எழுதுவீர்களா?

என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கின்றார்கள் எல்லாம் கொட்டிவிட்டார்கள். இவர்களுக்கு ஒரு வடிகால் தேவை. அவர்கள் மனம் இப்பொழுது சமாதானம் ஆகியிருக்கும். இவர்களைப் பற்றி எழுதமாட்டேன். சீதாலட்சுமியால் என்னைப் புரிந்து கொள்ள முடியும்.

அவர் பார்வையை என் பார்வை சந்தித்த பொழுது அவர் கூற்றின் உண்மையை நான் உணர முடிந்தது.

ஆம், என்னைப்பற்றி யாரும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன்.

ஒரு ஆண்மகனிடம் புலம்பி என்னைக் கோழையாக்கிக் கொண்ட அவமானத் துடிப்பு சிறியதாக உணர்ந்தேன். மனக்குரங்கு குதிப்பதை அடக்கினேன்.அதே நேரத்தில் உளவியல் தெரிந்த ஒருவரிடம் பேசியதில் ஒரு திருப்தியும் தோன்றியது. எனக்கு ஒரு நண்பன் கிடைத்துவிட்டான் என்று மனம் குதியாட்டம் போட்டது

எங்கள் நட்பு இத்தனை ஆண்டுகாளகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எங்கள் சந்திப்புகளில் நான் வெளிப்படுத்திய செய்திகள் எத்தனை எத்தனை!. ஆனால் அவர் எழுத்தில் என் செய்திகளின் சாயல் கூட வந்ததில்லை. சொன்ன வாக்கின்படி நடக்கின்றார்.

He is a gentleman of words

அவரைப்பற்றி, அவர் எழுத்துக்களைப் பற்றி பலரும் எழுதிவிட்டார்கள். நம்மில் ஒருவராக அவரைப்பற்றி எழுத விரும்புகின்றேன். அவரை நான் கண்ட கோணங்களில் காட்ட விரும்புகின்றேன். ஒவ்வொருவருக்கும் அவரைப்பற்றிய கருத்து இருக்கும். அது அவர்கள் சுதந்திரம். நான் எழுதுபவைகள் அவருடன் பழகிய பொழுது நான் உணர்ந்தைவைகள். .எல்லாவற்றையும் எழுதினால் நீண்ட தொடராகிவிடும். சில காட்சிகளாவது பார்க்கலாம்.

அப்படி என்னைப்பற்றி எழுத நான் என்ன தனித் தகுதி படைத்தவளா? அவர் பாத்திரங்கள் சாதாரணமானவர்கள். ஆனால் ஒருவருக்கு ஒன்று, அல்லது சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால் பிரச்சனைக் குவியலில் வாழ்ந்த ஒருத்தி, சமுதாயத்துடன் மோதிய ஓர் போராளி.! உருண்டு புரண்டு, மீண்டும் எழுந்து நிமிர்ந்து நின்றவள் நான்.

எழுத்தாளர் டாக்டர் லட்சுமி அவர்களும் என்னிடம் ஒரு விருப்பம் தெரிவித்தார்கள்.

சீதாலட்சுமி, ஒருவாரம் நாம் இருவரும் மகாபலிபுரம் போய்த் தங்குவோம். உங்கள் அனுபவங்கள் எல்லாம் கூறுங்கள் நான் எழுத விரும்புகின்றேன்."

அவர்கள் மென்மையானவர்கள். ஆப்பிரிக்கவிலிருந்து திரும்பிய பின், பத்திரிகைகளைப் படித்துவிட்டு அதிர்ந்தார். மாற்றங்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உலகம் யாரையும் பொருட்படுத்தாது மாற்றங்களில் உருண்டு ஓடிக்கொண்டிருக்கும்.

உங்கள் எழுத்துக்கு நான் பொருந்தமாட்டேன். நான் அடக்கமில்லா ஒரு பெண். பிரச்சனைகளைக் கூட முரட்டுத்தனமாகவே சந்திக்கின்றவள். ஒரு காலத்தில் என்னைப்பற்றி ஜெயகாந்தன் எழுதவேண்டுமென்று விரும்பினேன். பின்னால் யாரும் எழுதுவதை நான் விரும்பவில்லை. என் ஓட்டம் நின்று களைத்துப்போய் உட்காரும் பொழுது நானே எழுதுவேன்."

ஜெயகாந்தன் எழுத மறுத்த கதையின் நாயகி நான்.

அவளே பேச வந்துவிட்டாள்

கதைப் பாத்திரமும் கதாசிரியனும் சந்தித்துப் பேசுவது கதையில் கண்டிருக்கலாம்.

இப்பொழுது வாசகர்களும் பார்க்கப் போகின்றார்கள். விசித்திரமான, வேடிக்கையான சந்திப்பு. இனி கற்பனைக் குதிரைகளுக்கு கிராக்கி வந்துவிடும். விமர்சனங்கள் பறக்கலாம்.சுவையான பயணம் மட்டுமல்ல சூடான விருந்தும் உண்டு.

அவரிடம் செய்திகளைக் கூறும் பொழுது சில கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லில் பதில் இருக்கும். சில கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் கிடைக்கும். ஆனால் பல கேள்விகளுக்குப் பதில்களாகக் கிடைத்தது ஒன்று சிரிப்பு அல்லது மவுனம்.

அடுத்து எழுதப் போகும் இரு சம்பவங்களுக்கு உளவியல்ரீதியாக ஜெயகாந்தன் கொடுத்த விளக்கங்ககளை எழுதுவேன்.

(தொடரும்)

நன்றி -திண்ணை