Monday, August 16, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 17

ஜய ஜய சங்கர" கதையைத் தொடங்கும் முன் ஜெயகாந்தனின் முன்னுரை!

"நமது பத்திரிகையாளர்களுக்கு மேற்சொன்ன அந்த பாக்கியம் லபித்ததோ என்னவோ,ஆசார்ய ஸ்வாமிகளின் ஆக்ஞைக்கு ஏற்ப, இயல்பாகவே எழுதுகிறவன் என்கிற முறையில் இந்த மேலான பாக்யத்தை முழுமையாக அடைந்துள்ளவன் நான். இதன்பொருட்டு நானும், என் சமகாலத் தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவது இயல்பு.

இந்த “ஜய ஜய சங்கர “ ஒரு கதை; கற்பனை;கனவு;ஆனால் பொய் அல்ல: சத்தியம். உங்கள் நடைமுறை வாழ்க்கையைவிடவும், நமது நிதர்சனங்களைவிடவும், எனது கனவுகளும் கற்பனைகளும்,கதையும், மேலான அர்த்தமும் ஆக்கசக்தியும் உடையவை. நான் எழுதுவதுதான் முக்கியமே தவிர எந்தப் பத்திரிகையில் அல்லது பனை ஓலையில் எழுதினேன் என்பதால் எழுத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படுவதில்லை. எழுத்தின் தலைவிதி எழுதப்படுவதாலேயே தீர்மானமாகிறது. விளைவுகள் நம் அனைவரையும் மேன்மையுறச் செய்யட்டும்."

ஜய ஜய சங்கர” ஒரு கதை என்று ஆசிரியரே சொல்லிவிட்டார். அது கற்பனையென்றாலும் அவரது கனவு என்றும் ஒப்புதல் தருகின்றார். அவரது காலத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களுக்கு சாட்சியாக எழுத்துடன் செல்கின்றார்.

அவர் மட்டுமா? நானும் தான். நானும் ஒரு நேரடி சாட்சி. எங்கள் குடும்பம் நேரடியாகப் பாதிக்கப்பட்டது. இப்படி எத்தனை பேர்கள் வாழ்க்கையோ? இந்தக் கதை வந்த பொழுது எழுந்த விமர்சனங்களும் மிக அதிகம். அர்த்தமுள்ள ஆசை; மறுப்பதிற்கில்லை

கதையைப் பார்ப்போம்.

கதையின் கரு உணர்ச்சிபூர்வமானது. கம்பி மேல் நடப்பது போன்று கழைக்கூத்தாடியாக இருந்து கதையை நகர்த்தியிருக்கின்றார்

இறந்த காலத்தின் எலும்புக்கூடாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமம் சங்கரபுரம். அவருடைய எரிச்சலை ஆரம்பத்திலேயே பதிந்திருக்கின்றார்.

நாஸ்திகம் என்னும் நிர்மூடவாதம் ஓர் நாகரீகமாய்க் கவிந்திருக்கின்றது.கோயிலுக்கு முன்னாலுள்ள மைதானத்தில் கால மழையில் கரைந்து போகிற ஒரு சிலையை எழுப்பி அதன்கீழ் “கடவுளை நம்புகிறவன் முட்டாள்” என்றும் அதுமாதிரியான இன்னும் ஏதேதோ மொழிகளையும் செதுக்கிவைத்திருக்கிறது.

ஊர் எத்தனை வகைப்பட்டுப் பகைகொண்டு பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றது என்பதற்கடையாளமாய்ப் பல கம்பங்களில் பல கொடிகள் அங்கு பறந்து கொண்டிருக்கின்றன. (இதை எழுதும் பொழுதே நெஞ்சம் பதைக்கின்றது.
எத்தனை எத்தனை பிரிவினைகள்! எவ்வளவு காழ்ப்புணர்ச்சி! இதற்கா சுதந்திரம் வேண்டிப் போராடினோம்? நெஞ்சு பொறுக்குதில்லையே என்று மனம் அலறுகின்றது)

அந்த ஊரில் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயர் “சங்கராபரணம்

கதையின் நாயகனின் பெயரும் சங்கரன்.

ஆசிரியரை அந்த “சங்கரன்” பலமாகப் பிடித்துக் கொண்டிருப்பது தெரிகின்றது !

அகண்ட காவிரிபோல் இருக்கும் ஆற்றின் இரு கரைகளுக்கிடையில் பாலம் அமைத்து கதையை நகர்த்துகின்றார். என்னே கற்பனை!

அங்கே இரு சிறுவர்கள்!

ஒருவன் பெயர் சங்கரன்; அக்கிரஹாரத்துப் பிள்ளை

இன்னொருவன் பெயர் ஆதி;சேரிப் பையன்

சங்கரன் ஒரு கரையில் இருந்து கொண்டு தூரத்தே தெரியும் பறைச்சேரியையும் சுடுகாட்டையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இந்தப் பிரபஞ்சம் சார்ந்த எல்லாவற்றிலும் அவன் பிரம்மத்தையே தரிசனம் செய்து கொண்டிருந்தான்.

ஆதி என்ற பெயர், குறளில் வரும் ஆதி பகவனைக் குறிப்பது என்று ஆசிரியர் சொன்னாலும் என் மனம் நினைப்பது வேறு. ஆதி சங்கரரை இரண்டு பாகமாக்கி ஆதியாகவும் சங்கரனாகவும் படைக்கும் உணர்வு அவரையும் அறியாமல் தோன்றியிருக்குமோ?

பிள்ளைப்பருவ நட்பிலே அப்படி ஒரு லயிப்பு, இணைப்பைக் காண்கின்றோம்!

மகாலிங்க அய்யர் ஓர் அந்தணர். சிவன் கோயில் குருக்கள். சாஸ்திரங்களை நன்கு பயின்றவர். அவருடைய தம்பி சதாசிவ அய்யர். அவரும் சாஸ்திரங்களைப் படித்திருந்தாலும் பக்கத்து ஊருக்குச் சென்று ஆங்கிலம் , இன்னும் சில மொழிகளையும் கற்றவர். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. காந்தி பக்தரானார்.

மகாலிங்க அய்யரின் புதல்வன் சங்கரன்.சதாசிவம் அய்யரின் புதல்வி சுதந்திர தேவி.

இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைபட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் ராலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைதனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே.

சதாசிவ அய்யரின் மனத்தில் மந்திரமாய் உச்சரித்துக் கொண்டிருந்த மந்திரம் இது. எனவே அவருக்குப் பெண்குழந்தை பிறக்கவும் சுதந்திர தேவி என்ற பெயரையே சூட்டினார்.

ஜெயகாந்தன் போற்றித் துதிக்கும் கவிஞன் பாரதி! அவனை இங்கே எட்டிப் பார்க்க வைத்துவிட்டான்!

இந்தியா அடிமையாக இருந்த காலத்தில் இந்த சுதந்திர தாகம் எங்கும் இருந்தது. நானும் அக்காலத்து மனுஷி. சுதந்திரம் கிடைக்கும் முன்னரேயே “ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் “ என்று கூத்தாடினான் பாரதி. நாங்களும் அதைப் பாடி ஆடினோம். பாரதி பிறந்த வீட்டில் அவரின் தாய்மாமன் சாம்பசிவ அய்யர் பாட நிஜமாகவே நான் ஆடியிருக்கின்றேன்.

சதாசிவ அய்யர் தேச சேவையில் தண்ணை ஐக்கியப்படுத்திக் கொண்டார். காந்திஜியின் சிந்தனைகளைப் பற்றி பிரசங்கம் செய்யத் தொடங்கினார். “வந்தேமாதரம் ‘ . “ஹரிஜன்” என்ற சொற்கள் அடிக்கடி புழங்கலாயின. அவர் அத்துடன் நிற்காது சேரிக்கும் போய்ப் பழக ஆரம்பித்தார். அங்கே பள்ளி தொடங்கி எல்லோருக்கும் கற்றுத்தர விரும்பினார். அந்த மூங்கில் குடியிலேயே ஆஸ்ரமம் அமைத்துத் தங்கவும்ஆசைப்பட்டார். சிவன் கோயிலில் ஹரிஜன ஆலயப்பிரவேசம் செய்யப் போவதாகக் கூறவும் மகாலிங்க அய்யர் துடித்துப் போனார்

சில நம்பிக்கைகள், வழக்கங்களுக்குப் பழக்கமாகிப் போன பின்னர் ஏதாவது மாற்றங்கள் வருவதானால் அவைகளைக் கண்டு மனிதன் நடுங்குகின்றான். அதனை ஏற்க அவன் மனம் மறுக்கின்றது; மகாலிங்க அய்யரும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆலயப் பிரவேசத்திற்கு ஹரிஜனங்களைக் கூட்டி வந்தால் கோயிலில் குறுக்கே படுத்து உயிரை விட்டுவிடுவதாகக் கூறினார்.

இந்த இடத்தில் என் கடந்த கால நினைவுகள் வருகின்றது. என் தாய்க்கு பதினெட்டு வயது, எனக்கு ஒரு வயதாகி இருக்கும் பொழுது என் தந்தை எங்களை விடுத்து சத்தியாகிரஹப் போராட்டத்தில் கலந்து கொள்வதாய்க் கூறிவிட்டுச் சென்றவர்தான்;வீட்டிற்கு வரவில்லை. பல ஆண்டுகள் எங்கள் குடும்பம் எதிர் கொண்ட சோதனைகள் கொஞ்சநஞ்சமல்ல!

மதுரையில் நடந்த ஓர் வரலாற்று நிகழ்வின் பொழுது நானும் ஒரு சாட்சியாக இருந்தேன். ஆனால்,குழுந்தை சாட்சி!

என் தாயார் வீட்டைவிட்டு வெளியில் செல்வது கோயிலுக்கு மட்டும் தான்.கணவன் இல்லாத வீடு. சின்னப் பெண். எனவே என் பாட்டி அதற்குமட்டும் தான் அனுமதி கொடுத்திருந்தார். மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போவதாகச் சொல்லித்தான் என் தாயார் என்னை கூட்டிச் சென்றார்கள். நாங்கள் குடியிருந்தது தளவாய் அக்கிரஹாரம் என்ற தெருவில் கோயில் பக்கத்தில்தான் இருந்தது. ஆனால் அன்று அம்மா என்னைக் கூட்டிச் சென்ற இடம் எனக்குக் கோயிலாகப்படவில்லை.ஒரு ஓலைக் கொட்டகை. அங்கே மேடை அமைத்து அதில் ஒரு அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. வந்தவர்கள் அந்த அம்மனைத்தான் கும்பிட்டார்கள். நான் ஏதோ கேட்க வாய் திறந்த பொழுது அம்மா என்னைப் பேசவிடவில்லை. வெளியில் வந்த பிறகுதான் பேச அனுமதித்தார்கள்.

"உம்மாச்சி கோயிலுக்குக் கூட்டிண்டு போறேன்னு சொன்னியே, இங்கே ஏன் வந்தோம்?"

"இப்போ இதுதான் உம்மாசி இருக்கும் இடம்."

"ஏன்?"

"அந்தக் கோயில்லே ஹரிஜனங்கள் நுழஞ்சுட்டாளாம்.அதனால் உம்மாச்சி கோபிச்சுண்டு இங்கே வந்துட்டாளாம்."

"ஹரிஜனன்னா யாரு? அவாளும் மனுஷாள் தானே. உம்மாச்சி எப்படி கோவிச்சுப்பா?"

"நேக்கு அதெல்லாம் தெரியாது;பெரியவா சொன்னா. அதைத்தான் நானும் சொன்னேன்."

புரியாத வயது. ஏதோ தப்புன்னு மட்டும் தெரிந்தது. என் குழந்தைப் பருவக் கதைகளை என் தாயார் என்னிடம் அடிக்கடி கூறுவார்கள். என் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பவம் இது.

அதாவது தியாகி வைத்தியநாதய்யர் தலைமையில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தது. அதை எதிர்த்தவர்கள் நடேசய்யர் தலைமையில் அவசரமாக ஒரு கோயிலை உண்டு பண்ணிவிட்டார்கள். ஆனால் அந்த அமைப்பு வந்த வேகத்திலேயே போயும்விட்டது.

ஹரிஜனங்களுக்குத் தலைமை வகித்தவனும் ஒரு பிராமணன்; எதிர்த்தவனும் ஒரு பிராமணன்.

வைத்தியநாத அய்யர் அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமே சுதந்திரப் போரரட்டத்தில் கலந்து கொண்டது. கையிலிருந்த காலணாவையும் போராட்டத்தில் செலவழித்த மனிதர்;அரசியலை வியாபாரமாக்கி கோடிப் பணம் சேர்த்தவர் இல்லை.

அவருக்குச் சிலை எழுப்பினார்கள். ஆனால் அது காக்காய்க்கு கழிப்பிடமாக மாறியது. வருடத்திற்கு ஒரு நாள் கூட மாலை மரியாதை கிடையாது. தியாகத்திற்கு மனிதனிடம் கிடைக்கும் மதிப்பு இவ்வளவுதான்.

சதாசிவம் அய்யர் ஒரு நாள் இரவு மூங்கில் குடியில் தங்கி விட்டார். அவ்வளவுதான். அக்கிரஹாரத்தில் ஓர் புகைச்சலை உண்டுபண்ணிவிட்டது.

ஒரு பிராமணன் சேரியில் தங்கி அவர்களுடன் பழகுவதும் அவர்களுடன் உண்பதும் சாதிக்குப் பாதகமாகத் தெரிந்தது. சாதிபிரஷ்டம் செய்து விட்டால் என் செய்வது என்று கவலைப்பட்டார் மகாலிங்க அய்யர்.

எங்கள் குடும்பத்தில் அந்தக் கொடுமை எட்டிப் பார்த்தது.

ஐந்தாண்டுகள் கழித்து என் தந்தை எங்கள் வீட்டிற்கு வந்தார். என் தாயாருக்கு அப்பொழுது இருபத்தி மூன்று வயது. கணவனைப் பார்க்கவும் மகிழ்ச்சி. மற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த பாக்கியம் எனக்கு கிடையாது. அதாவது தந்தை மடியில் உட்கார்ந்து கொஞ்சி விளையாடுவதுதான்.அன்றுதான் உட்கார்ந்து அவரைத் தொட்டுப் பார்த்து, கட்டிப்பிடித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

என் தந்தை வந்து ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்காது. வீட்டுக்கார மாமி வந்தார்கள். என் தந்தையை முறைத்துப் பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கினார்கள்.

அங்கிச்சி, இதான் உன் ஆம்படையானா? ஜெயிலுக்குப் போனவர் தானே.அங்கே எல்லா ஜாதிக்காராளோடேயும் தங்கினவர். அவாளோடே அவா சமைச்ச சாப்பாட்டைச் சாப்பிட்டவர். அவர் இந்த ஆத்தில் இருக்கப்படாது. இது ஆச்சாரமான குடும்பம். அவரை உடனே அனுப்பிடு. அவர் ஆத்துக்குள்ளே வந்திருக்கக் கூடாது. சாந்தி செய்யணும்

நாங்கள் ஒண்டுக் குடித்தனக்காரர்கள். பல ஆண்டுகளாய்ப் பிரிந்திருந்த கணவனுடன் ஒரு நாள் கூடச் சேர்ந்திருக்க முடியாமல் துரத்திய சாதிக் கொடுமையை அனுபவித்தவர்கள் நாங்கள். எங்களுக்குச் சமாதானம் கூறிவிட்டு என் தந்தை புறப்பட்டு விட்டார். மீண்டும் மூன்று மாதங்கள் அவர் இருக்கும் இடம் தெரியாது. பின்னர் ஒரு நாள் எட்டயபுரத்திலிருந்து கடிதம் வந்தது. எங்கள் குடும்பம் எட்டயபுரம் சென்றது. இச்சம்பவத்தால் என் தாயும் சாதியை வெறுக்கத் தொடங்கினார்.

வீடு திரும்பின சதாசிவம் அய்யரிடம் அவர் நோயுற்ற மனைவிதான் கரிசனத்துடன் விசாரித்தாள். பழம் சாப்பிட்டதாகக் கூறினார். அவர் பேசியது மகாலிங்க அய்யருக்கும் காதில் விழுந்தது. அந்த நேரத்தில் கவலை ஒழிந்தாலும் பிரச்சனை முற்றிலும் நீங்கவில்லை.

சதாசிவ அய்யர் எதைப்பற்றியும் கவலைப் படவில்லை. அவருக்கு காந்திதான் எல்லாம். காந்தி சொல்தான் அவருக்கு வேதம். எனவே மூங்கில் குடிக்குப் போவதை அவர் நிறுத்தவில்லை. அங்கே இருந்தவர்களுகுக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

அண்ணன் தம்பி கதை இப்படியென்றால் அந்த நதிக் கரையோரங்களில் இன்னொரு நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. .

இடைவெளி அதிகமாயினும் இதயப்பறிமாற்றம் இயலுமா? எல்லைகளைத் தாண்டாமல் இருந்து ,தனித் தனியாய் நின்று, ஒன்றாகிப் போகும் விந்தை அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஆதி ஒரு அனாதை; ஹரிஜனப்பையன்.மாமன் தான் அவனுக்குப் பாதுகாப்பளித்தான் சும்மா அல்ல. மாமனின் ஆடுமாடுகளை அவன் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆதியும் மன மகிழ்வுடன் தன் கடமையாகக் கருதி செய்துவந்தான்.

ஆடுமாடுகளுடன் வருகின்றவனை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருப்பான் சங்கரன். அவன் வரவும் பேச ஆரம்பித்துவிடுவார்கள் ஆதியும் சங்கரனும். சங்கரனுக்காக ஆதி மரத்தில் ஏறி நாவற்பழம் உலுக்குவான். பனங்காய்ப் பறித்துக் கொண்டு வந்து சீவி நுங்கு எடுத்துத் தருவான். முந்திரித் தோப்பிலிருந்து முந்திரிக்கொட்டைகளைக் கொண்டுவந்து தீ மூட்டிச் சுட்டுத் தருவான்.

சங்கரன் நிறைய கதைகள் சொல்லுவான். ஆதியும் நிறைய கேள்விகள் கேட்பான். ஆதி சங்கரரின் கதையையும் சொன்னான் சங்கரன்.

ஒரு கிராமத்தின் நதிப்புறத்தில் அந்த இரண்டு குழந்தைகளும் தம் நடுவே ககல காலமாய்க் கிழிக்கப் பட்டிருக்கும் கோடுகளைத் தாண்டாமலேயெ ஒரு நதியின் இரண்டு கரைகளிலும் -விலகி உறவு கொண்டு நிற்கும் அக்கிரகாரத்தையும் சேரியையும் போல்-விலகி நின்றே விளையாடினர்

ஒரு நாள் ஆற்றங்கரையில் ஆதியைச் சந்தித்த பொழுது சங்கரன் வேட்டியை வரிந்துகட்டி நின்றான். சங்கரன் நீரில் பாயவும் ஆதியும் குதூகலத்துடன் நதியில் பாய்ந்தான் இருவரும் வேகமாக நீந்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஆதி கத்த ஆரம்பித்தான்.

சாமி,அந்தப் பக்கம் போகாதே,சுழல் .. உன் சோத்துக்கைப் பக்கத்துக்கு வா. சாமி அந்தப் பக்கம் போகாதே ... சாமி ..” என்று தீனமாய் அலறினான் ஆதி.

ஜலப்பிரவாகத்தின் நடுவே இடம் எது ?வலம் எது ?

திசை தெரியாமல் எந்தப்பக்கம் போகக் கூடாதோ அந்தப்பக்கம் போய்க் கொண்டிருந்தான் சங்கரன். ஒரு சுழல் அவனை இழுத்து முறுக்கிற்று. நீரின் அலைகள் மலைப்பாம்புக் குவியல் மாதிரி அவன் மீது கவிந்து மேலே தலை தூக்க முடியாமல் அழுத்தி எங்கோ இழுத்துக்கொண்டு போயின.

(தொடரும்)

நன்றி -"திண்ணை"

No comments: