Friday, September 3, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 19

சங்கரபுரம்! காலச்சக்கரம் வேகமாக உருண்டோடினாலும், அந்த குக்கிராமம் தனக்குரிய வரலாற்றில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தது.

மகாலிங்க அய்யர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காசிக்குப் போனவுடன் அர்ச்சகர் தனியே நின்றார்; இப்போதும் நிற்கிறார். எல்லாம் கெட்டுப்போன இந்தச் சூழ்நிலையிலும், எல்லாவற்றையும் சமமாகப் பாவிக்கும் அத்வைத சிந்தாத்தத்தின் அடையாளமாக, இவர் வயோதிகத்தால் கூன் விழுந்து இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஞானமும் அறிவும் மனுஷனுக்கு எவ்வளவு சொந்தமோ, இயல்போ, அதே அளவு அஞ்ஞானமும் அவனுக்குத்தானே சொந்தம் !

கிராமம் சின்னதாயினும் ஏதேதோ நடந்து முடிந்துவிட்டது.என்றாவது நல்லது நடக்காதா என்ற நம்பிக்கையில் அய்யர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

அப்பைய குருக்களின் தவம் பலித்தது. ஆச்சார்ய ஸ்வாமிகள் திக்விஜயம் செய்யப் போகின்றார். இந்த சின்ன கிராமமும் புண்ணியம் செய்திருக்கின்றது. சுவாமிஜி இங்கு வந்து சிறிது காலம் தங்கப் போகும் செய்தி அறிந்தது முதல் குருக்களின் மனத்தில் ஓர் சமாதானம்.

இந்த இடம் ஸ்வாமிஜியின் பூர்வாஸ்ரம பூமி.

யானை மீது அம்பாரி கட்டி ஆரோஹணித்து ஊருக்குள் பட்டண பிரவேசம் செய்கின்றார் ஸ்வாமிகள். திரண்டு நிற்கும் பெருங்கூட்டத்தில், அவருடைய பார்வை பரவி வரும் பொழுது அந்தப் பெரும் திரளின் நடுவேயிருந்து உயர்ந்தெழுந்து நேருக்கு நேர் வந்து நிற்பன போல் இரண்டு விழிகளை அவர் ஒரு நொடியிலே அடையாளம் கண்டு கொண்டார்.

“பகவன் முதற்றே உலகு “ என்ற குறளின் பாதி அடிகளை அவரது திருவாயின் செவ்விதழ்கள் முணுமுணுத்தன.

ஆதியை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அவருடன் பேச விரும்பி , மடத்தில் வசித்துவரும் கிருஷ்ணனை ஆதியிடம் அனுப்புகின்றார்.

ஜெயகாந்தன் இதனைக் கதை என்றும் தன் கனவென்றும் சொன்னது மிகவும் பொருத்தமானது. அவர் கற்பனைச் சிறகுகள் வெகு உயரத்தில் பறக்கின்றன. எங்கெங்கோ வட்டமடிக்கின்றன. ஒருவரின் கனவை விமர்சிப்பதை என் மனம் ஏற்கவில்லை. ஆனாலும் அப்படியே விட்டு விலகவும் முடியவில்லை. சில இடங்களையாவது பார்த்தல் வேண்டும்.

மகாலிங்க அய்யர் காசிக்குப் போனதும், சதாசிவம் அய்யர் கோயிலில் ஹரிஜனங்களை ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தது. அதனால், அவர் சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு, தன் குடும்பத்துடன் அவர் மூங்கில் குடிக்கே போனது எல்லாம் கடந்த காலச் செய்திகள்.அவர் ஆரம்பித்த ஆஸ்ரமத்தில் ஆதியும் ஒரு மாணவன். முதல்தர மாணவன். அவரது கொள்கைகளை அப்படியே உள்வாங்கி காந்தீய வாதியாக, சத்தியப் பிரதிநிதியாக வாழ ஆரம்பித்தவன் ஆதி.

ஸ்ரீராமானுஜர் செய்தவைகள் ஆசிரியரின் கருக்குக் காரணமாக இருந்திருக்குமோ?

சதாசிவ அய்யர் பல முறை சிறைக்குச் சென்றார். அலிப்புரம் ஜெயிலைப் பற்றிய குறிப்பு வரவும் எங்கள் குடும்பத்தின் கடந்த கால நிகழ்வுகள் நினைவிற்கு வந்தன.

என் தந்தை மும்முறை ஜெயிலுக்குப் போயிருக்கின்றார். அலிப்புரம் ஜெயிலுக்கும் சென்றிருக்கின்றார். எட்டயபுரத்திற்குச் சென்ற பிறகும் என் தந்தை வெளியூர்களுக்கெல்லாம் செல்லும் பொழுது. சில சமயங்களில் என்னையும் கூட்டிச் சென்றதுண்டு.

தூத்துக்குடி சந்திப்பில். ஏ.பி. சி வீரபாகு அவர்கள் இருந்தது நினைவிற்கு வருகின்றது. அதே போல் நெல்லையில் திரு சோமயாஜலு அவர்களைப் பார்க்க முடிந்தது. கூடிக் கூடிப் பேசுவார்கள். அப்பொழுது அதன் அர்த்தம் எனக்குத் தெரியாது. கொஞ்ச நேரம் தான் இருப்பேன். பிறகு என்னை இன்னொரு அறைக்குத் தூங்க அனுப்பிவிடுவார்கள். எல்லோரிடமும் ஒரு வேகம் ஒரு துடிப்பு. நான் சிறுமியாக இருந்தாலும் அந்தத் துடிப்பின் தாக்கம் என்னிடமும் வந்தது. காங்கிரஸ் ஊர்வலத்தில் முதலில் கொடி ஏந்தி போயிருக்கின்றேன். ராட்டினம் நூற்று, அந்தச் சிட்டங்களைக் கதர்க்கடையில் போட்டுத் துணி வாங்கி உடுத்தியிருக்கின்றேன். அந்த வயதில் நான் கதராடைதான் அணிந்தேன்.

கதராடை பள்ளிச் சீருடையல்ல. அதை அணிகின்றவர்கள் காந்திஜியின் உணர்வுகளைச் சுமந்து வாழ்ந்தோம்.

பாபுஜி என்ற ஒரு மகா புருஷர் சூத்திரதாரியாக நின்று வெறும் பிண்டங்களாக இருந்த மனிதர்களை, உயிரும் ஆத்மாவும் கொடுத்து லட்சியப்பொம்மைகளாக மாற்றி ஆட்டினார். இதுவரை மாமூலாயிருந்த வாழ்க்கையிலிருந்து கிளப்பி ஒரு புதிய வாழ்க்கையோடு பொருத்தி வைத்தார். சரித்திரம் உருவாக்குகிற செயல்களும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து மிக விரைவாய் நடந்து கொண்டிருந்தன. மனத்தில் துன்பப்படுகின்ற பொழுதிலும் கூட தொடர்ந்து ஒரு நிறைவு ததும்பிக் கொண்டிருந்தது. மகத்தான செயலில் ஈடுபட்டிருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் சரித்திரத்தை உருவாக்குகின்ற அணியின் முன்வரிசையில் சிந்தனையும் செயலும் ஒன்றாய் இணைந்து சென்று கொண்டிருந்தோம். காந்திஜி எப்பொழுதும் முன்னே நடந்து கொண்டிருந்தார்.

ஜெயகாந்தனின் இந்த வரிகளின் அர்த்தத்தை பூரணமாக அனுபவத்தில் பார்த்திருக்கின்றேன்.

சின்னச் சின்ன விஷயங்களில் கூட தேசிய உணர்வின் ஆக்கிரமிப்பைக் காணலாம்.

உதாரணமாக ஒன்றைச் சுட்டிக் காட்ட முடியும். தியாகராஜ கீரத்தனைகளைச் சொல்லிக் கொடுக்க வந்த பாட்டு வாத்தியார் கூட, வைஷ்ணவ ஜனதோ என்றும் சாந்தி நிலவ வேண்டும் என்ற பாடல்களை முதலில் தான் அறிந்து கொண்டு எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றார். காந்தீய அலை பெரியவர்களை மட்டுமல்ல ; சிறுவர்களிடமும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியிருந்தது. கதையில் சில நிகழ்வுகள் வரும் பொழுது அக்கால நிகழ்வுகள், அனுபவங்கள் இவைகளின் நினைவுகள் வந்து அப்படியே மெய்மறக்கச் செய்வதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

கதைக்களன் போய்ப் பார்க்கலாம்

கிருஷ்ணனிடம் தான் ஒரு ஹரிஜன் என்று சொல்லுகின்றார் ஆதி. இதைக் கேட்கவும் முதலில் திகைப்பை அடைகின்றான் கிருஷ்ணன். சுற்றுப்புறத்தைப் பார்க்கின்றான்.காரல்மார்க்ஸ், காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்ஸர் , விவேகாநந்தர்,வள்ளலார், ஆச்சார்ய சுவாமிகள்,கவி பாரதி ஆகியோரின் நூல்கள் நிறைந்த ஷெல்ப்கள் இருந்தன அந்த வீட்டில் ஓர் அபூர்வ அமைதியை அவனால் உணர முடிந்தது. இருக்காதா பின்னே!

சதாசிவ அய்யரின் மனைவி மறைந்தார். பலமுறை ஜெயிலுக்குச் சென்று வந்த அய்யர் ஒரு முறை போனவர் திரும்பி வரவில்லை. அவர் அன்பு மகள் சுதந்திர தேவியின் திருமணம் நடந்தது. அவள் கை பிடித்த கணவர் நம் ஆதிதான்.தோழனாய் இருந்தவர் துணைவனாய் ஆனார். அக்கிரகாரத்துப் பெண்ணை சேரிப் பையன் ஒருவனுக்கு மணமுடித்து அவர்களை ரசிக்கின்றார் ஆசிரியர். அக்காலத்திலேயே கலப்புத்திருமணம் செய்து அழகு பார்க்கின்றார். அதுமட்டுமா, அவர்களின் இல்லறத்தைப்பற்றிப் பேசும் பொழுது நம்மை வியக்க வைக்கின்றார். லட்சியங்களுக்கேற்ப நம்மால் வாழ முடிகின்றதோ இல்லையோ ஆதி தம்பதிகள் எடுத்துக்காட்டாக வாழ்வதை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றார். அந்த இல்லறத்தின் பயனாக இரு மகன்களும் ஒரு மகளும் அவர்கள் பெறுகின்றனர்..

காலம் ஓடியது. அவர்கள் ஆஸ்ரமத்தை அரசு எடுத்துக் கொண்டு ஓர் அனாதை ஆஸ்ரமமாக்கிவிட்டது. அதே மூங்கில் குடியில் கொள்கைகளைச் சுமந்து கொண்டு வேறு இடத்தில் வாழ்ந்துவந்தார்.
.
கிருஷ்ணனின் வருகையின் அர்த்தம் புரியவும் தன்னைப்பற்றிய உண்மையை உடனே தெரிவித்துவிடுகின்றார். உண்மையின் வெளிச்சத்தால் தாக்கப்பட்ட கிருஷ்ணன் ஸ்வாமிகளிடம் திரும்புகின்றான். ஸ்வாமிகள் விபரம் அறியவும் ஆதியை மீண்டும் வரச்சொல்லி அதற்குரிய வழிகளையும் கூறுகின்றார்.

மீண்டும் கிருஷ்ணன் திரும்பி வருகின்றார் அப்பொழுது ஆதி மனம் திறந்து பேசுவதில் ஜெயகாந்தனைக் காணலாம்.

சாமி, ஒரு சேரிக்குள் நுழைவதற்கு உங்களுக்கு எப்படி கூசுமோ, அதைப்போலவே இம்மாதிரியான இடங்களுக்கும், சனாதினிகள் கூடியிருக்கும் சபைக்கும் போக என் உடம்பும் ஆத்மாவும் கூசுகிறதே. இது ஏதோ என் பிறவி குறித்து எனக்கிருக்கிற தாழ்வுணர்ச்சி என்று நினைத்துவிடாதீர்கள். -இப்போது என்முன் நிற்கும் உங்களுக்கு இல்லாவிட்டாலும் என்னைப்போல் உள்ள யாரையோபற்றி அப்படி ஓர் உணர்ச்சி யாருக்குமே இல்லை என்று நீங்கள் சொல்லிவிடமுடியுமா?"

ஆதிக்கு முன்னரே தேவியும் , அவர்களின் மகள் வேதவல்லியும், சின்ன மகன் சதாசிவமும் ஸ்வாமிகளைப் பார்க்கச் சென்றுவிட்டனர். ஸ்வாமிகளின் தரிசனம் அவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. அக்காவின் அறிவுரைக் கேற்ப குழந்தை சதாசிவம் இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு,

“கஜானனம் .. பூதகணாதி .. ஸேவிதம் ...
கபித்த .. ஜம்பூபல ..ஸார ..பக்ஷிதம் ..
உமா .. ஸுதம் ..சோக .. விநாச .. காரணம் ..
நமாமி .. விக்னேஸ்வர .. பாத ..பங்கஜம்

என்று மழலை மொழியில் திக்கித்திக்கி பக்தியுடன் சொல்லக் கேட்ட ஸ்வாமிகள், பரவசமுற்று கற்கண்டு கட்டிகளைக் குழந்தைக்குக் கொடுக்கின்றார்.

நற்குணங்களை குழந்தையிடம் விதைக்கப்பட வேண்டியது பெற்றோரின் கடமை. மனம் வளமாயிருந்தால் வாழ்க்கையும் செம்மையாக இருக்கும்.

குடும்பக்கதை அனைத்தும் அவர்கள் கூற எல்லாம் அறிந்து கொண்டார் ஸ்வாமிகள். தந்தை போன பிறகு தோழர் ஆதியை மணந்து கொண்டிருக்கின்றார். வேத பிராமண குடும்பத்துப் பெண்ணை சேரியில் பிறந்த ஓர் செம்மலுக்கு கலப்புத்திருமணம் நடத்தி உவகை கொள்கின்றார் கதாசிரியர்.

அரசாங்கத்தால் இவரது தியாகத்துக்கு, மானியம் கொடுக்க வந்த பொழுது மறுத்துவிட்டார்

மீண்டும் என் குடும்ப நினைவு

தியாகிகளுக்கு ஆரம்பகாலத்தில் அரசு நிலம் கொடுக்க முன் வந்தது. என் தந்தை அதனை வாங்க மறுத்துவிட்டார். அப்படி உதவி பெற்றால் தன் நாட்டுக்காகச் செய்த பணிக்குக் கூலி வாங்கியது போலாகும் என்றார். அதுமட்டுமல்ல, பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் அறிவுரையின் படி கிராம சேவைக்குச் சென்ற பொழுது என் தந்தை எனக்குக் கூறிய அறிவுரை:

“நம்மூர் ஜனங்களுக்கு வேலை செய்யப் போறே. இதுக்கு அரசாங்கத்திலிருந்து சம்பளம் வாங்கறதே சரியில்லே. ஆனாலும் நாம மனுஷா. ஜீவனம் நடத்த வேண்டியிருக்கே? சம்பளம் வாங்கறதனாலே உனக்கு பொறுப்பு இரட்டிப்பாறது. நேரம் காலம் பாக்காம அக்கறையுடன் வேலை செய்யணும்.

தீமைகளைக் காணும்பொழுது இந்த வயதிலும், இந்த உடல் நிலையிலும் கொதித்து எழுவேன். எப்படி இந்த உணர்வு வந்தது.? காந்தியின் சத்திய வாழ்க்கையின் வேகம் ஒரு இடத்துடன் முடங்கியதல்ல. நாடு முழுவதும் பரவியிருந்த காலத்தில் வளர்ந்தவள். பாட்டிக் கதை, வடைக் கதை என்று கேட்டு வளரவில்லை. சோறு ஊட்டும் பொழுதே என் தாயார் நாட்டுப்பற்றையும் ஊட்டி வளர்த்தார்கள்.

இன்று எங்கும் பிரிவினைகள், எங்கும் வன்முறைகள், காழ்ப்புணர்ச்சி, சுயநலமும் சுரண்டலும்! மாறிவரும் சூழலைப் பார்த்து மனம் பதறுகின்றது

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ? சர்வேசா !இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ ?"

பாரதியின் பாடலை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

எங்களைப் போன்றவர்களுக்குக் கிடைக்கும் பட்டம்: “பிழைக்கத் தெரியாத பைத்தியங்கள் “

ஜெயகாந்தனும் நானும் சம காலத்தவர்கள். சரித்திரத்தின் சாட்சிகளாக இருக்கின்றோம்.

தேவி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாள்.

“எங்களது லட்சியமும் அனுபவமும் எங்கள் பிள்ளைகள் கூட நம்ப முடியாத பழங்கதையாகிவிடுமோ என்கிற அச்சம் நாளும் எனக்குப் பெருகி வருகின்றது “

ஆசிரியர் அன்று தேவியின் வாயிலாக காட்டிய அச்சம் உண்மையாகிக் கொண்டிருக்கின்றது. அன்பை விதைக்க வேண்டியதற்குப் பதிலாக காழ்ப்புணர்ச்சியை வளர்த்து, பிரிவினை உண்டாக்கிவிட்டார்கள் என்று காட்டி பலநூறுகளாகப் பிரிவினைகளை வளர்த்து, பணத்திற்காக எதையும் செய்யலாம் என்பதை மறைமுகக் கொள்கையாக்கி வருபவர்களைக் காணும் பொழுது “நெஞ்சு பொறுக்குதிலையே “ என்று கத்தத் தோன்றுகின்றது.

உண்மைகளைப் புதைத்து புதிய வரலாறுகளை எழுதி இளைய சமுதாயத்தைத் திசை திருப்புவர்களைக் கண்டால் மனம் வேதனைப் படுகின்றது. நான் அரசியல் வாதியல்ல. எந்தக் கட்சியையும் சேர்ந்தவள் அல்ல. சாதி, மதங்கள் வலைக்குள் கூட என்னைப் பிணித்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த சமுதாயத்தின் மீது ஆழமான பாசம் கொண்டவள். பெரியவர்களின் மீது மரியாதை கொண்டவள். தியாகத்தைப் போற்றுகின்றவள். என் மனக் குரலைப் பதிய வேண்டியது என் கடமையாக உணர்கின்றேன்.

“இளைய சமுதாயமே, மனிதனின் சுயநலத்தால் உண்மைகள் புதைகுழிக்குள் புதைக்கப்பட்டு வருகின்றன. தேடுங்கள் உண்மைகளை! மனித நேயம்தான் வாழ்க்கையில் அமைதி கொடுக்கும்.”

நண்பரே, என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் முகத்தில் புன்னகை காண்கின்றேன். உங்கள் நோக்கமும் இதுதானே. உங்களுடைய இந்தக் கதையைப் படிக்கும் பொழுது ஒவ்வொருவரும் சத்தியப் பாதையைப் பார்க்க வேண்டும் என்பதுதானே. உங்கள் எழுத்தைப் படிக்கவும் எனக்குள் ஏற்பட்ட உணர்வுகளையும் பதிந்துவிட்டேன்.

ஜெயகாந்தனின் “ஜெய ஜெய சங்கர” நான்கு பகுதிகளிலும் அவர் இதயக் குரலைப் பதிந்திருக்கின்றார். அவர் எண்ணங்களுக்காகப் பரிசு கிடைத்தது.

ஆஸ்ரமத்திற்கு நாமும் செல்வோம். ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி மறுநாள் அவரைத் தரிசிக்க வந்தார் ஆதி .உடன் குழந்தை சதாசிவத்தையும் கூட்டி வந்திருந்தார். கண் மூடி அமர்ந்திருந்த ஸ்வாமிகளைப் பார்க்கவும் “ஜெய ஜெய்ய சங்கல..ஹலஹல சங்கல” என்று குழந்தை முணங்கிற்று. குரல் ஒலிகேட்டு கண்விழித்த ஸ்வாமியின் பார்வை ஆதியில் மேல் வீழ்ந்தது.

வேலிக்கு அப்பால் வாய்க்கால் கரை மேட்டில்சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுந்த ஆதியின் தோற்றம், கையில் தொறட்டிக் கொம்புடன் பதினைந்து வயது தோற்றத்தில் அவன் நிற்பதாய் ..

அரசமரத்தடிமேடையில் கதை சொல்லிக் கொண்டு,பிரபஞ்சம் சார்ந்த எல்லாப் பொருட்களிலும் பிரம்மத்தையே தரிசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் ஒரு பிராமணச் சிறுவனாய் ..

பரஸ்பரம் தோற்றங்கொள்ள ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்து இருவரும் மாறிமாறிப் புகுந்து இதயம் எய்த ..

இதைப்படிக்கும் பொழுது கம்பனின் நினைவு வருவதைத் தடுக்க முடியாது

இடையில் முள்வேலி நின்று கொண்டிருந்தது. பக்தி, பரவசம் என்கிற மிகச் சாதாரண உணர்ச்சிகளை எல்லாம் கடந்து வியவகார ஞானத்தோடு தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டார் ஆதி. முன் தினம் தேவி உரைத்த சம்சார சரித்திரத்தின் இன்னொருபகுதியை ஆதி கூறலுற்றார். முதல் மகன் மகாலிங்கம் தன் பிறப்பைக் காட்டி அரசின் சலுகை பெற்றதைக் காணவும் மகனையே வீட்டைவிட்டுத் துரத்தியதையும் விடவில்லை.

ஆதியின் கொள்கைப்பிடிப்பு நடை முறை சாத்தியமா இல்லையா என்று ஆராய வேண்டியதில்லை. இது கதாசிரியரின் ஆசை. அவருடைய கற்பனை. நல்லவைகளை நினைத்தாவது பார்ப்போமே!

ஸ்வாமிகள் பேசப் பேச தான் அப்படி செய்தது தவறென்பதை உணர ஆரம்பித்தார். மகாலிங்கத்தைப் பார்க்க விரும்புவதைக் கூறி அவனைத் தேடி அனுப்பும்படி அன்புக் கட்டளையும் பிறப்பித்தார் ஸ்வாமிஜி.

(தொடரும்)

நன்றி: "திண்ணை"

No comments: