வரலாறுக்கும் பல முகங்கள் உண்டு. ஒரே நிகழ்வை வெவ்வேறு கோணங்களில் பார்ப்பதுண்டு.
உதாரணமாக, நரசிம்மவர்மனின் வாதாபி படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம். காஞ்சியை நோக்கிப் படையெடுத்து வந்த புலிகேசி மன்னர் காஞ்சி கோட்டையை முற்றுகையிட முடிந்ததே யொழிய உள்ளே புக முடியவில்லை. எனவே சுற்றி இருந்த கிராமங்களை அழித்துவிட்டுச் சென்றார். பழி வாங்கப் புறப்பட்ட நரசிம்ம வர்மர் வாதாபியைத் தீவைத்துக் கொளுத்தி புலிகேசியையும் கொன்றார். தமிழகத்தில் இதனைப் புகழ்ந்து எழுதியிருக்கின்றோம். ஆனால் கர்நாடகாவில் நரசிம்ம வர்மனைக் கொடியவனாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. புலிகேசி காஞ்சியை வென்றதாகவும், தன் நகரைக் காப்பாற்றப் போராடி வீர மரணம் அடைந்ததாகவும் எழுதபட்டுள்ளது. அதனால் வரலாற்றைப் படிக்கும் பொழுது பல விஷயங்கள் ஒப்பு நோக்க வேண்டும்.
எனக்குச் செய்திகள் கிடைத்த விபரங்களைக் கூறி, சம்பவங்களைத் தொகுத்தும் கொடுக்க விரும்புகின்றேன்.
எட்டயபுர மன்னனுக்கும் ஏற்பட்டது சூழ்நிலைச் சறுக்கல்.அப்பொழுது துண்டுதுண்டாக நாடுகள் இருந்தன. எங்கும் குழப்பம். இதற்கிடையில் எட்டயபுர சமஸ்தான எல்லைகளில் கட்டபொம்மனால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர். ராஜா போராடியும் வெற்றி கொள்ள முடியவில்லை.
தன் நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டி உதவி கிடைக்கவும் அதனை ஏற்றுக் கொண்டார். திட்டமிட்டு நடந்தது அல்ல.
டபிள்யூ.இ.கணபதியாபிள்ளை எழுதியுள்ள எட்டயபுரம் வரலாறு (Ettayapuram-Past and Present) என்ற புத்தகத்தில் மிகவும் விரிவாககக் கூறப்பட்டுள்ளது. இப்புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியவர் தமிழுலகம் நன்கறிந்த பிஷப்.கால்டுவெல். யாஹூவில் உள்ள ‘பொன்னியின் செல்வன்’ குழுமமும் ‘Forum Hub’ குழுமமும் இதுபற்றி விவாதங்கள் நடத்தியிருக்கின்றனர்.தற்போது நான் வசிப்பது அமெரிக்காவில். என்னிடம் இந்தப் புத்தகங்கள் கிடையாது. இருப்பினும் கணபதியாபிள்ளை புத்தகம் மட்டும் என் நண்பர் வாங்கி நான் கேட்கும் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றார். சில தகவல்களை தொலைபேசி மூலம் பேசி பெற்றுவருகின்றேன். கணிணி வலைகளில் பல தகவல்கள் இருக்கின்றன.
எட்டயபுரம் ஊர்ப்பெயர் காரணப்பெயர்.
இப்பொழுது இன்னொரு செய்தியும் கிடைத்தது. அங்குள்ள சிவன் கோயிலில் இருக்கும் ஆண்டவரின் பெயர் எட்டீஸ்வரர். எட்டப்பன் என்பதை அன்பு, கனிவு என்று கொண்டு, ஊர்ப்பெயர் முதல் கோயிலில் குடிகொண்டிருக்கும் ஈஸ்வரன் வரை எட்டப்பன் பெயரை இணைத்துள்ளார்கள். என்று அந்த ஊர் உருவானதோ அன்றே வைத்த பெயர்கள். இப்படி இருக்கும் பெயரான“எட்டப்பன்”, நம்மிடையே நமக்குத் தெரியாமலேயே சிதைக்கப்பட்டது வருத்தத்தைக் கொடுக்கின்றது.
நான் சிறு பெண்ணாய் எட்டயபுரத்தில் வாழும் பொழுது நடந்த ஓர் சம்பவம் கூற மறந்துவிட்டேன். ராஜா அவர்கள் ஹரிஜனங்களை ஆலயப் பிரவேசம் செய்ய விரும்பினார். அப்பொழுது ராஜாஜி அவர்கள் அந்த நாளில் தானும் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினார். ராஜாவின் பிறந்த நாளன்று ராஜாஜி, கல்கி இருவரும் எட்டயபுரத்திற்கு வந்து ராஜாவுடன் ஹரிஜனங்களுடன் ஆலயப் பிரவேசம் செய்தார்கள் என் நினைவு சரியா என்பதை ராஜாவின் மூத்தமகன் துரைப்பாண்டியனிடம் விசாரித்தேன். உறுதி செய்துவிட்டு இதனை எழுதுகின்றேன்.
காட்டிக் கொடுக்கப்பட்ட பரம்பரையென்றால் மூதறிஞர் ராஜாஜி கலந்து கொண்டிருப்பாரா? பாரதி பட்டம் கொடுத்தது எட்டயபுரம் ராஜா. நாட்டைக் காட்டிக் கொடுத்தவன் பரம்பரை கொடுக்கும் பட்டத்தைத் தூக்கி எறிந்திருப்பான். கட்டபொம்மன் தேசீயப் போராட்ட வீரர் என்றால் பாரதி பாடியிருக்கமாட்டனா? யாருக்கும் பயப்பட மாட்டான். அச்சமில்லை, அச்சமில்லை என்று கர்ஜிப்பவன்.
கட்டபொம்மன் செயல்களால் ஆங்கிலேயர்கள் எடுத்த நடவடிகைகள், கட்டபொம்மனை எங்கே, யாரால் அடையாளம் காட்டப்பட்டு பிடிபட்டார் என்பதுபற்றி முழு விபரங்கள் பல வரலாற்றுப் புத்தகங்களில் சான்றுகளுடன் இருக்கின்றன. பின்னர் எவ்வாறு அவைகள் மாற்றப்பட்டன, எந்த சான்றுகள் அடிப்படையில் மாற்றப்பட்டன என்பதனை வரலாற்று ஆய்வாளர்கள் மீள்ஆய்வு செய்து தயக்கமின்றி உண்மைகளை எடுத்துக் காட்ட வேண்டும். வரலாற்றில் குழப்பம் இருத்தல் கூடாது.
நாயக்க அரசால் அவர்களுக்கு உதவி செய்ய நியமிக்கப்பட்டவர்கள் பாளையத்துக்காரர்கள், ஆட்சியில் ருசி கண்டபின் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டனர். தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் முனைந்தனர். அச்சூழ்நிலையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டனர் ஆங்கிலேயர்கள். அங்கு நடந்த போராட்டம் சொந்த நன்மைக்கா அல்லது சுதந்திரப் போராட்டமா என்ற கருத்தாடல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.
சினிமாவுடன் போட்டி போட முடியுமா? பெருமாளாய், திருமாலாய் நடித்த என். டி. ஆர் அவர்களை ரசிகர் பார்க்கப் போகும் பொழுது தேங்காய், பழம், சூடத்துடன் சென்று அவர் முன்னிலையில் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபடுவார்களாம். சினிமாவின் தாக்கம் மக்கள் மனத்தில் ஆழ்ந்து பதிந்து விடுகின்றது. இனியாவது பிழையைத் திருத்திக் கொள்ளலாமே.
மக்கள் திலகம் தான் பெற்ற தங்க மோதிரம்பற்றி விகடனில் எழுதிய அவர் சுயசரிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். பார்த்துக் கொள்ளலாம். படித்த நினைவில் எழுதியிருக்கின்றேன். சம்பவம் உண்மை ஆனால் ராஜாவின் பெயர் நான் குறித்ததுபோல் காசி விஸ்வநாதனாக இருக்கலாம் அல்லது பிதாமாஹாராஜாவாக இருக்கலாம். எட்டயபுர ராஜாக்களில் ஒருவர்தான் அவருக்கு மோதிரம் அளித்தது. என்னிடம் அப்புத்தகம் இல்லை.காசிமகாராஜா பற்றி தினமணியில் ராஜாமணி எழுதியிருக்கின்றார். கணிணியில் வலம் வந்தால் பல செய்திகள் காணலாம்.ஆனால் தனித் தனியாக எழுதப்பட்டுள்ளது. என் நினைவுகளை மட்டும் வைத்து எழுதா மல் அதுபற்றிய தகவல்கள் விசாரித்தபொழுது, விபரங்கள் தந்தவர்கள் ராஜாவின் புத்திரர்களும் என் நண்பர்களும்தான்.மன்னர் ஆட்சி முடியும் முன் அங்கு வாழ்ந்து ராஜாவின் ஆட்சியைப் பார்த்தவள் நான்.
வரலாறு யூகங்களில் எழுதப்படக்கூடாது.ஆனால் சான்றுகள் கிடைக்கும் பொழுது பலகோணங்களில் ஒப்பிட்டுப் பார்த்து முடிவிற்கு வரவேண்டும். வரலாற்று விஷயத்தில் நம் அணுகுமுறையில் ஒரு குறையுண்டு. இதனை பிரிட்டிஷ் நாட்டு வரலாற்று அறிஞர் திரு டேவிட் கீஸ் குறிப்பிட்டிருக்கின்றார். இவர் 60 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் செய்தவர்.மாமன்னர் இராஜ இராஜன் புகழ்பாட உடனே தஞ்சைப் பெரிய கோயிலைக் காட்டுவோம். கட்டடக்கலையில் உன்னதமானது மறுக்கவில்லை. ஆனால் அது முழுமையான வரலாறாகுமா? ஆனால் அதை மட்டுமே கூறி வருவது சரியல்ல. அந்த வரலாற்று ஆசிரியர் கூறுவதைப் பார்ப்போம்.
நிர்வாகச் சீரமைப்பு, ஒழுக்கக் கட்டுப்பாட்டின் விதிமுறைகள், வரவு செலவுக்ககணக்குகள்பற்றி வெளிப்படையான கல்வெட்டு சாசனங்கள், ஒரு காசு கொடுக்கப் பட்டாலும் அவனுடைய பெயரைக் கல்வெட்டில் பதிந்த நாகரீகம் உலக அரங்கிற்குச் சொல்லப்படவில்லை. “சோழ நாடுமட்டும் எங்கள் ஐரோப்பாவில் இருந்திருந்தால் உலகப் புகழ் பெற்றிருக்கச் செய்திருப்போம்“ என்று கூறியுள்ளார்.
மன்னரிடம் அவர் நன்மைக்காக கோயிலில் விளக்கு போட ஓர் கிராம அதிகாரி அனுமதி கேட்கின்றான். மன்னரோ ஊர் மக்கள் நன்மைக்காக விளக்குப் போடச் சொல்கின்றார். அதிகாரி ஊர் நன்மைக்கு ஓர் விளக்கும், ஊர் மக்களின் நலனையே நினைத்து வாழும் மன்னர் நலத்திற்கு ஓர் விளக்கும் போடுகின்றான். இது கல்வெட்டில் பதிக்கப் பட்டிருக்கின்றது. ஆட்சி செய்பவனுக்கு நேர்மையும் மனித நேயமும் முக்கியம். இது உலகம் முழுவதிற்கும் பொதுவானதல்லவா? எதிரியைக்கூட நயமாகச் சுட்டிக் காட்டும் உயர்ந்த உள்ளம் படைத்தவன் மன்னன் இராஜராஜன். எப்பொழுதும் விரோதியாக இருந்த சிங்கள நாட்டாரை, முரெட்டெழு சிங்களவர் என்று குறிப்பிடுகின்றான். அவனல்லவோ மாமன்னன். நாம் இவைகளை ஒருங்கிணைத்து உலக அரங்கிற்கு கொண்டு போகவில்லை.
நடந்தவைகளைத் தனி தனியாகப் பார்ப்பதில் புகழ் பாதிப்பது மட்டுமல்ல; இகழ்ச்சியும் ஏற்பட்டு விடுகின்றது. எட்டயபுரம் வரலாறு இதற்குச் சான்று.
வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்து முடிந்து அறிக்கை கொடுப்பதுடன் அவர்கள் கடமை முடிந்து விடுகின்றது. பாதுகாக்க வேண்டியது சமுதாயத்தின் கடமை. உண்மைகள் மாறாமல் இருக்க விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். அல்லது உண்மை அழிந்துவிடும்.
எட்டயபுர வரலாற்றிலும் கட்டபொம்மன் சம்பவம் ஓர் நிகழ்வு. பாரதத்தில் தர்மர் சூதாடினார். தன் உடன் பிறந்தவர்களையும்,தன் மனைவியையும் பணயம் வைத்தான். ஆனாலும் பாரதம் போற்றப்படும் நூல். காரணம் பல நல்ல செய்திகள் இருக்கின்றன.
எட்டயபுரம் என்றால் பாரதி மட்டும் தான் பலருக்கும் தெரியும். நான் எழுதியவைகளை விட இன்னும் நிறைய செய்திகள் இருக்கின்றன. அவைகள் தொகுக்கப் பட வேண்டும். பெருமைக்குரிய ஓர் சிற்றரசைக் காணலாம். நான் இதை எழுதி வரும் பொழுது என் நண்பர் ஒருவர் ஓர் வலைச்சுட்டியின் பெயர் அனுப்பினனர். அதைப் படிக்கவும் எனக்கு வியப்பேற்பட்டது. உங்கள் பார்வைக்கும் அதனை வைக்கின்றேன்.
For starters, here's an article I found on the web, which may interest you
http://historicalleys.blogspot.com/2008/12/cat-ettappa-dumby.html
இதைப்பற்றி நான் அலசப் போவதில்லை. என் நோக்கம் எட்டப்பன் என்ற சொல்லை அவச்சொல்லாகப் பேசுவதை நிறுத்திடக் கோரிக்கை வைப்பதே யாகும். ஆனாலும் ஒரு கருத்தைமட்டும் முன் வைக்க விரும்புகின்றேன்.
வரலாற்றை விருப்பம்போல் மாற்றி எழுதுதல் கூடாது. இதனை நான் பொதுப்படையாகக் கூறுகின்றேன். எதனையும் குறித்தல்ல.
சமீபத்தில் ’மின் தமிழுக்கு’ ஒருவர் அனுப்பிய மடல் பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். தமிழகத்தில் விருப்பம் போல் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் அதிகம் இருப்பதால் சரியான வரலாற்று நூல்களைப் பார்க்க முடியவில்லையென்று தெரிவித்துள்ளார்., மேலை நாட்டு மாணவன் ஒருவன் நம் நாட்டு வரலாற்றைக் கற்க விரும்யிருக்கின்றான்.அதற்கான சரியான நூல்களைப் பரிந்துரைக்க வேண்டிக் கொண்ட மடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நம்மைப்பற்றி நாம் பெருமை பேசிக் கொள்வதைவிட பிற நாட்டார் நம் பெருமை பேச வேண்டும். நாம் நம் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்தால் ஒரு நாள் ஆய்வாளர்கள் உண்மை காண நேரிடும். அது நமக்குப் பாதகமாகாதா? வரலாற்று ஆர்வலர் என்ற முறையிலும், நாட்டுப்பற்றின் காரணமாகவும் என் ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றேன். யாரையும் குறை சொல்லும் நோக்கில் இவைகளை எழுதவில்லை.
இன்றைய இளைஞர்கள் கற்பூரப் புத்தி கொண்டவர்கள். மேலோட்டமாகப் பார்ப்பதில்லை. குழுமங்களில் அரட்டைகளும் உண்டு. விருப்பு வெறுப்பின்றி ஒரு விஷயத்தை அலசுபவர்களும் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் உண்மைகளைக் கோண்டு வர அவர்கள் போதும். நான் வயதான ஒரு மூதாட்டி. வருங்கால சந்ததிகளுக்கு தங்கள் ஆணிவேர்களைக் காட்டத்துடிக்கும் இவர்களைக் காணும் பொழுது மனம் சமாதான மடைகின்றது.
யாராக இருந்தாலும், குறிப்பாக சக்தி வாய்ந்த ஊடகங்கள், வரலாற்றைத் தொடும்பொழுது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குற்றவாளி தப்பலாம் ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று நமக்குத் தெரியும். அதனால் தான் இந்த வேண்டுகோளை சமுதாயத்தின் முன் வைக்கின்றேன்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு
எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய வரிகள்.
விழிப்புணர்வுக்கு நாடகம், சினிமா போன்றவைகளின் பங்கைக் கூறுமிடத்து அவைகளால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்பதற்குச் சான்றாக எட்டயபுரம் வரலாறு இருக்கின்றது.
1 comment:
உங்களது இந்த இடுகையை வலைசரத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_12.ஹ்த்ம்ல்
நன்றி
குணா
Post a Comment