Sunday, August 19, 2012

நினைவலைகள் -19


நினைவலைகள்  -19

சின்னச் சின்ன செய்திகள்
நான் ரசித்தவைகள். இன்றும் நினைவிற்கு வருபவை
அண்டைப் பக்கம் செய்திகள்.
அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்
இவைகளை விடுத்தால் என் வாடிப்பட்டி வாழ்க்கை நிறைவாகக் காட்டப்பட்டது என்று சொல்ல முடியாது

அப்படியென்ன வாடிப்பட்டி முக்கியம்? சமூகக் கல்வி அமைப்பாளராக
நான் பணியாற்றிய ஐந்தரை ஆண்டுகளில் வாடிப்பட்டியில் நான் இருந்தது ஐந்து ஆண்டுகள். என் வளர்ச்சிக்கு வித்திட்ட ஜன்ம பூமி. நான் செல்ல வேண்டிய பாதைக்கு என்னைத் தயார்ப்படுத்தி அனுப்பிய பட்டிக்காடு.
இதன் பின் மாவட்ட அளவில் அதிகாரியாகி பறக்க ஆரம்பித்துவிடுவேன். எனவே வீட்டுக்குள் நுழைந்து பார்ப்பதையும் விடாமல், ஒன்றிரண்டு காட்சிகளையாவது சொல்லி வருகின்றேன். பின்னர் என் பயணம் பல திக்குகளில் போக வேண்டியுள்ளது. நான் நடிகையானதும் இங்குதான். எழுத்துலகில் நுழைந்ததும் இங்குதான். பத்திரிகையுலகின் நட்பும் அரசியல் உலகில் நெருக்கமும் இங்குதான் ஆரம்பம்.
 வாடிப்பட்டியில் இருக்கும் பொழுது தமிழ்நாடு அரசிலும் இரு மாற்றங்கள் தோன்றின. பஞ்சாயத்துராஜ் திட்டம் தோன்றி,, பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் நிர்வாக முறை வந்தது. மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், மூன்று அமைப்புகள் மூலமாக நடந்து வந்தன. மகளிர் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறையில் மகளிர் நலம், சமூக நல வாரியம் ஆகிய மூன்றையும் இணைத்து மகளிர் நலத்துறையானதும் வாடிப்பட்டியில் பணியாற்றிய பொழுதுதான் நடந்தது. எனவே வாடிப்பட்டிப் பணிக்காலம் முக்கியமானது. பல கோணங்களில் செல்ல வேண்டி இருக்கின்றது. ஒப்பு நோக்குதலும் தேவையாக இருக்கின்றது.

சில காட்சிகள்  பார்த்துவிட்டு என் நாடக உலகம் செல்ல விரும்புகின்றேன்

அலங்கா நல்லூர்
இந்தபெயரைக் கேட்டவுடன் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டுதான்
வாடிப்பட்டிக்கு அருகில் உள்ள ஊர். நானும் ஜல்லிக் கட்டு பார்க்கப் போனேன்  பேசத் தெரியாத மாடு. நன்றாக உண்டு கொழுத்த மாடு. கொம்பு சீவி ஜல்லிக்கட்டுக்கு என்றே வளர்க்கப் பட்ட மாடு. சின்ன வாயில் வழியாக வெளியில் வரும் பொழுது தன் மேல் பாய வரும் மனிதக் கூட்டத்தைக் கண்டு வெருள்கின்றது. அச்சத்தில் எதிர் வருகின்றவர்களை முட்டித் தள்ளுகின்றது. இந்த விளையாட்டை நுணுக்கமாகப் பார்த்தேன். முன்னால் செல்லக் கூடாது. லாகவம் புரிந்தவன் பக்கவாட்டில் சென்று அதன் திமிலைப் பிடித்துப் பின் மாட்டை அணைத்துக் கொள்ள வேண்டும். இங்கே கட்டிப்புடி முறை உதவுகின்றது. அவனுடைய அழுத்தமான அரவணைப்பில் தனக்கு தீங்கில்லை என்று நினைத்த மாடு அவன் தழுவலில் அடங்கிப் போகின்றது. .

தாம்பத்தியத்தில் ஆண் மறந்துவிடும் ஓர் செயல். ஆரம்பகாலத்தில் காட்டும் ஆர்வமும், துடிப்பும் பின்னால் இருப்பதில்லை. குழந்தை எப்படி தாயின் அரவணைப்பில் சுகம் காண்கின்றதோ, மனைவி கணவனின் அரவணைப்பில் அமைதி காண்கின்றாள். எத்தனை பிரச்சனைகள் வரினும்
இந்த ஒரு செயலில் அவள் மனம் சமாதானம் அடைந்துவிடும்.கட்டிபுடி வைத்தியம் என்று கமல் படத்தில் கூறிய பொழுது அதை நகைச் சுவையாக நினைத்துச் சிரித்தோம். ஆனால் அது வாழ்க்கையில் சாதிக்கும் சக்தி அதிகம். அன்புடன் அணைத்தால் எதிரியும் வசமாவான்

எனக்கு சிலம்பாட்டம் பிடிக்கும். கம்பைச் சுழற்ற வேண்டிய முறையில் சுழற்றினால் ஒரு சிறு கல் வீசினாலும் அது அவன் மேலே விழாமல் தடுத்துவிடும். உலகம் தோன்றிய நாள் முதலாய் அவன் தன்னைப் பாதுக்காக்க எத்தனை வழிகள், எத்தனை ஆயுதங்கள் கண்டுபிடித்தான்

விளாம்பட்டி என்ற கிராமத்தில் மணி என்பவரின் வீட்டிற்குச் சென்றேன். ஏற்கனவே அவ்வூர் கிராம நல உழியர் என் ஆர்வங்களைப் பற்றி மணியிடம் கூறியிருந்ததால் அவர் ஓர் அறைக்குக் கூட்டிச் சென்றார்
அப்பப்பா, அது ஓர் ஆயுதக் கிடங்கு போல் ஓர் மூலையில் என்னவெல்லாமோ வைக்கப் பட்டிருந்தன.

முள் வார்.  பத்தடிக்கு மேல் நீளம் இருக்கும் என்று நினைக்கின்றேன். அதைச் சுழற்றினால் யாரும் அருகில் செல்ல முடியாது. தாக்க வருபவனை சுழற்றி அடித்தால் அவன் உடம்பின் சதை பிய்ந்து இரத்தம் கொட்டும்

அடுத்து சுருள் கத்தி. அதுவும் நீளமானது. கூர்மையானது. பாம்பைப் போல் நெளிய முடிந்தது. அந்தக் கத்தியைச் சுழற்றினால் எதிரியின் உடலில் காயமல்ல, அவன் உடல் பாகங்களே வெட்டுண்டு விழும்.

கைத்தடிகூட ஒரு ஆயுதம். பிடியைக் கழற்றினால் கத்தி சேர்ந்து வரும். எதிரியைக் குத்துவது சுலபம்.

பார்த்தவைகளை எடுத்து மணி அவர்கள் சொன்னது போல் செய்து பார்த்தேன். தூக்கவே கஷ்டமாக இருந்தது. கைத்தடி பரவாயில்லை
என்ன ஒரு மாதிரியாகப் பார்க்கின்றீர்கள் . நான் வித்தியாசமான
வள்தான்.பின்னால் கொசுவம் வைத்து, தலை முடியைத் தூக்கிச்
சொருகி நின்றால் பார்ப்பவர் என்னை மதுரைக்கார மறத்தி என்று சொல்லுவார்கள்.

சொல்லிக் கொண்டே போகலாம். கோயில் சிற்பங்களையும் பார்த்து ரசிப்பேன். இப்படி ஆயுதங்களையும் பார்ப்பேன். என் குணம் “தேடல்”
நான் எங்கு சென்றாலும் எதையாவது கூர்ந்து பார்ப்பேன். மனிதர்களைப் படிப்பதும் பிடிக்கும். என்னுடைய வேலை என் தேடல் குணத்திற்குத் தீனி போட்டது. என் பணிக்களம் பல வாய்ப்புகளைத் தானே கொடுத்தது..

அண்டை வீட்டுச் செய்தி. அதாவது அருகில் அமைந்திருந்த வத்தலக் குண்டு வட்டாரத்துச் செய்தி. ஏன் அதைக் கூற நினைத்தேன் என்றால்
அங்கே நடந்த சிறப்புப் பணி எங்கள் வட்டாரத்தில் இல்லை.

நாம் அடிமையாக இருந்த காலத்தில் உதயமான காங்கிரஸ், அரசியல் கட்சி இல்லை. அது ஓர் இயக்கம். சுதந்திரம் பெற எல்லோரும் கூடிச்
செய்த இயக்கம்.. இயக்கத்தில்தான் வேகம் வரும். ஒன்றிய மனமும்,
சுயநலமற்ற குணமும், இருப்பதையெல்லாம் கொடுக்கும் தன்மையும்
சேரச் சேர இயக்கத்தின் வலு கூடும். சுதந்திரம் கிடைக்கவும் காங்கிரஸ் பெயரை மாற்றச் சொன்னார் காந்திஜி. ஆனால் இயக்கம் அரசியல் கட்சியானது. அரசியல் களம் குருஷேத்திர சண்டை நிகழும் இடத்தை ஒத்தது. மனித மனங்கள் மாறிவிடும்

பின்னர் சர்வோதயா இயக்கம் வலுப் பெற ஆரம்பித்தது. எழைகளின் துயர் துடைக்கத் துடித்தது. நிலமற்றவனுக்கு, இருப்பவன் நிலம் கொடுக்க வேண்டும். அதற்குப் பெயர் பூமிதான். ஓர் கிராமத்தில் அதிகமான நிலங்கள் ஏழைகளுக்குச் சொந்தமானால், அதாவது செல்வந்தன் உரிமையை விட்டுக் கொடுத்தால் அந்தக் கிராமம் கிராம்தான் ஆகிவிடும். கூட்டுறவு முறையில் எல்லாப் பணிகளும் செய்தல் வேண்டும்.

வினோபாஜி அவர்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, இயக்கத்திற்கு வலுவூட்டினார். அவருடன் இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களை மறக்க முடியாது. யாராலும் அசைக்க முடியாது என்று கூறிவந்த காங்கிரஸ் அரசை மத்தியில் மாற்றவைத்தது அவருடைய இயக்கம். . சில நேரங்களில் சக்தி வாய்ந்த இயக்கங்கள் ஆலமரமாய் இருப்பவரையும் சாய்த்துவிடும்.

சமுதாயத்தில் வேரோடியிருந்த சாதிப் பிணியைத் தொட்டுக்காட்டி சுரணை
ஏற்படுத்திய வெண்தாடிக் கிழவரின் அடிபற்றி தொடர்ந்தார் ஓர் அண்ணா
அந்த எழுச்சியும் , விழிப்புணர்வுமிக்க ஊடகமான திரையுலகப் பங்கீடும்
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியது. இன்றுவரை திராவிடக் கட்சிகளுக்கு முன்னால் எழுந்திருக்கமுடியாத நிலை, நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பெரியகட்சியின் நிலை

விவசாயச் சங்கத் தலைவராக வந்தார் நாராயணசாமி நாயுடு அவர்கள். அதுவும் ஓர் இயக்கம். விவாசாயிகளில் ஒட்டு மொத்த உணர்வுகளின் கூட்டம். எந்தக் கட்சியாக இருந்தாலும் விவசாயி என்ற ஓர் குடைக்குள் அணிவகுத்து விட்டனர். . பதவியிலிருந்து கீழ் இறக்கிய காங்கிரஸ் கட்சி, பழி சுமத்தப்பட்ட கட்சியுடன் கூட்டு சேர்ந்த சமயத்தில் மக்கள் திலகமான எம்.ஜி. ஆர் அவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் தோற்றார். ஆனால் தன் தோல்விக்குக் காரணம் யார் என்பதைத் துல்லியமாக உணர்ந்தார். அவர்  உடனே நடவடிக்கை எடுத்தார். அவருக்கும் நாராயணசாமிக்கும் உடன்படிக்கை ஏற்பட்டது. அதனால் சட்டசபை தேர்தலில் வென்றார்

நாட்டு நடப்பைப் புரிந்துகொள்ள நாம் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை நாட்டுப் பற்று இருந்தால் போதும். நடு நிலையுடன் பார்த்தால் உண்மைகள் புரிந்து கொள்வது கடினமல்ல.

சர்வோதயா இயக்கத்தில் வத்தலக் குண்டு வட்டாரம் பங்கேற்றது. அங்கே பூமிதானங்களும் கிராம தானங்களும் நடந்தன. அங்கு பொறுப்பேற்றுக் கொண்டவர்கள். ஜகன்னாத அண்ணாவும் , கிருஷ்ணம்மா அக்காவும்தான். அப்படித்தான் அவர்கள் இருவரையும் எல்லோரும் அப்பொழுது அழைத்து வந்தோம்.

வத்தலக்குண்டு வட்டாரத்தில் அமைப்பாளராக வேலை பார்த்தவள் என் அருமைத் தோழி கஸ்தூரி. அழகிய கண்கள், அமைதிப் புன்னகை.
அவள் ஓர் அனாதைப் பெண்ணாக இருந்தாள். அந்த சின்னஞ்சிறு குழந்தையை எடுத்து வளர்த்து, படிக்க வைத்து, மாப்பிள்ளையும் பார்த்து மணமுடித்துக் கொடுத்து அவளை ஓர் நிலைக்குக் கொண்டு வந்தது காந்தி கிராம ஸ்தாபகர் டாக்டர் சவுந்திரம் ராமச்சந்திரன். கஸ்தூரியைப் போல் பல பெண்களுக்கு வாழ்வளித்தவர். அன்றிருந்த காந்தி கிராமத்தை
நாங்கள் யாரும் மறக்க மாட்டோம்.

கஸ்தூரியால்தான் அண்ணாவையும் அக்காவையும் அறிய வாய்ப்பு கிடைத்தது. நான் வேறு வட்டாரத்தில் இருந்ததால் அதிகம் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் சில முறை கஸ்தூரியின் அழைப்பின்பேரில் அக்காவுடன் கிராமங்களுக்குச் சென்றிருக்கின்றேன்.
அந்த வட்டாரத்தில் இன்னொரு சிறப்புண்டு. சமூக நல வாரியத்தின் கீழ் இயங்கும் ஓர் மையம் இருந்தது. அதன் கிளைகள் சில கிராமங்களில் இருந்தன. அந்த மாதர் சங்க உறுப்பினர்களைத் தன் இயக்கத்துடன் இணைத்துப் பணியாற்றினார் அக்கா.

திரு. ஜகன்னாதன், அவர் மனைவி திருமதி. கிருஷ்ணம்மாள் இருவரும்
எளிமையாக உடை உடுத்தி கிராமங்களில்  எத்தனை தூரமாயினும் நடந்து பணியாற்றியதை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் அந்த இயக்கத்தின் தொண்டர்கள். அது அரசியல் இயக்கமல்ல. அரசியல் ஆடம்பரத்திற்கு
தங்களை ஆட்படுத்திக் கொள்ளாத புனித ஆத்மாக்கள். இன்றும் கிறுஷ்ணம்மா அக்கா அதே எளிமையான தோற்றத்தில் காண்பது
அந்த இயக்கத்தின் வலிமையைக் காண முடிகின்றது.

பேருக்காகவும், பணத்திற்காகவும் செய்வதல்ல சமுதாயப் பணி. ஆத்மார்த்தமாகச் செய்யவேண்டும்.

அலைகள் இன்னும் வரும்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் பதிவு மூலம் நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது... நன்றி சகோ...

/// பேருக்காகவும், பணத்திற்காகவும் செய்வதல்ல சமுதாயப் பணி. ஆத்மார்த்தமாகச் செய்யவேண்டும். ///

நல்ல கருத்தோடு முடித்துள்ளீர்கள்... தொடர வாழ்த்துக்கள்...

R.Ravichandran said...

Dear Madam, Good posts, Today i read some of your posts, very interesting and your writing style is excellent. Best wishes.