Thursday, March 28, 2013

நினைவலைகள் -26


நினைவலைகள் -26

கதை எழுதுதல்

கற்பனை உலாவில் ஒரு இன்பம்

முதல் கதை நான் எழுதிய பொழுது என் வயது 14

கதையின் பெயர் ‘கதிரேசன் மலை”

இராஜா, இராணி, மாறு வேடங்கள் , துப்பு துலக்குதல் இப்படி ஒரு கதை நாற்பது பக்க நோட்டுப் புத்தகத்தில் எழுதினேன். கல்கியின் கதைகள் படித்ததின் தாக்கமாக இருக்க வேண்டும். இப்பொழுதும் அந்த நோட்டுப் புத்தகம் இருக்கின்றது. அடுத்து பதினாறு வயதில் ஒரு நீண்ட கதை.

கல்லுரியில் இருக்கும் பொழுது கண்ணகி, வீரத்தாய்  ஓரங்க நாடகங்களுக்கு வசனம் எழுதினேன். நானூறு பக்கங்களில் மனச் சுழல் என்ற கதை எழுதினேன். நிறைய படங்களும் அதில் வரைந்திருக் கின்றேன். அக்காலத்தில் கல்கியில் வினு, சந்திரா ஓவியங்கள் வந்தன. என் படங்கள் சந்திராவின் படங்களை ஒத்து இருக்கும். அந்த நோட்டுப் புத்தகமும் என்னிடம் இருக்கின்றது.

படிக்கும் பொழுது எனக்குப் பிடித்த வரிகள், புற வாழ்வில் மனத்தைப் பாதித்தவைகள் எல்லாவற்றிற்கும் குறிப்புகள் எடுக்கும் பழக்கம் உண்டு இப்பொழுதும் குறிப்புகள் எடுப்பேன். பழையன எல்லாம் இல்லா விட்டாலும் இன்னும் சில அழியாமல் இருக்கின்றன. எண்ணுவதிலும் எழுதுவதிலும் அத்தனை ஆசை. ஆனால் பத்திரிகைக்கு எழுதியவைகளை அனுப்ப ஆரம்பித்தது வாடிப்பட்டியில் இருந்த பொழுதுததன்.

வாடிப்பட்டியில் எழுதிய உயிர்மேல் ஆசைதான் முதலில் பிரசண்ட விகடனில் வெளியாயிற்று. 58ல் எழுத ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் எழுதினேன். 63 சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளிவந்திரூகின்றன.என் கதைகள் அதிகமாக வெளிவந்த பத்திரிகை சுதேசமித்ரன் வாரமலர்.  என் குருநாதர் ருத்ர துளசிதாஸுக்கே அந்த பெருமை சாரும்.

என்னுடன் எழுத ஆரம்பித்த ஓ.எஸ்.கே அவர்களின் கதைகளும் நிறைய வந்திருக்கின்றன. என்னை விட அதிக முத்திரைகள் விகடனில் வாங்கியவர் அவர்தான். சோமமகாதேவன் எப்பொழுதும் போல் நிறைய எழுதினார். மற்றவர்கள் ஓரளவுதான்.

அடிக்கடி மதுரைக்குச் சென்று அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்திப்போம். நா.பா வீட்டிற்குப் பல முறை போயிருக்கின்றேன். அவரும் எங்கள் மதுரை வட்டத்தில் ஒருவர். என் குறும்புத்தனமும் வாயாடித்தனமும் அவருக்குத் தெரியும். அப்பொழுது அவர் எழுதிய “குறிஞ்சிமலர்”
தொடர் வந்து கொண்டிருந்தது. ஓ.எஸ்.கே அவர்கள் தன் மகளுக்கு பூரணி என்று பெயர் வைத்தது அதன் தாக்கமே.

எங்களில் முன்னணி எழுத்தாளர்களும் உண்டு முன்னுக்கு சென்று கொண்டிருந்தவர்களும் இருந்தனர். ஊக்கப்படுத்தினார்களே தவிர ஒதுக்கிவைக்கமாட்டார்கள். எங்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை இருந்தது.

நாங்கள் எல்லோரும் சேர்ந்து அதாவது மதுரை மாவட்ட எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு சிறுகதைத் தொகுப்பு பிரசுரிக்க விரும்பினோம். தலைப்பு
என்ன வைக்கலாம் என்று யோசித்து எங்கள் எல்லோருடைய கதைகளின் தலைப்புகளையும் சின்னக் காகிதத்தில் எழுதி குலுக்குச் சீட்டு முறையில் குலுக்கிப் போட்டோம். ஓ.எஸ்.கே கதையின் பெயர் “பஞ்சும் நெருப்பும்”
வந்தது. எங்களிடையே நா.பார்த்தச்சரதி, சோமமகாதேவன், ருத்ரதுளஸிதாஸ் இருந்தும் அவர்கதையின் பெயரைத்தான் போட்டோம். நாங்கள் எழுதி வெளிவந்த கதைகளின் தொகுப்பு.அந்த அளவு எங்களுக்கிடையில் புரிதல் இருந்தது. புத்தகம் அச்சிட்டு விழா நடத்தி வெளியிட்டோம்.

துளஸி எனக்கு மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். என்னுடன் ஓ.எஸ் கே அவர்களும் மாணவனாகச் சேர்ந்தார். இந்தக் கட்டுப்பாடுகள் இலக்கண வடிவத்தில் வந்தாலும் எனக்குப் பிடிக்காது.
இலக்கணத்தை நினைத்துக் கொண்டு வார்த்தைகளைக் கோர்க்க முடியவில்லை. வெண்பா எழுதவே வரவில்லை. எப்படியோ விருத்தப்பா
எழுத முடிந்தது.

கவிதை என்பது தானாக வரும் நீரூற்றுப்போல் இருக்க வேண்டும். அல்லது நயமிருக்காது. என் கவிதைகள் சிலவும் பத்திரிகைளில் வந்திருக்கின்றன. ஆனாலும் கவிதைப் பெண் என்னுடன் ஒட்டவில்லை. இந்த லட்சணத்தில் பிற்காலத்தில் நூறு விருத்தப்பாக்கள் எழுதி புத்தகமும் வெளியிட்டேன்.

ஓ.எஸ். கே யால் அருமையான கவிதை எழுத முடிந்தது. ஆரம்பித்தில் அவர் அதற்காகப் போட்ட ஒரு கண்டிஷனைக் கேட்டு எங்கள் வட்டம் சிரித்தது. ஆனால் நான் தயங்காமல் ஒப்புக்கொண்டேன். கவிதை எனக்கு எழுத வரவில்லையே தவிர கவிதையைக் காதலிக்கின்றவள்.

எனக்கு “சுடர்விழி” என்று பெயர் வைத்தார். தினமும் அலுவலகத்தில் மாலையில் ஒரு ரோஜாப்பூ கொடுப்பதைப் போல ஒரு கவிதையைக் கொடுப்பார். நானோ எல்லோர் முன்னிலையிலும் வாசிப்பேன்.
அநேகமாகக் காதல் கவிதையாக இருக்கும். எல்லோரும் ரசிப்பார்கள். அந்த அளவு ஆரோக்கியமான நட்பு வட்டம்.

ஓ.எஸ் கே அவர்கள் திருமணமானவர். அவர் மனைவி பெயர் சுந்தரா. சுந்தரமானவள். எனக்குக் கொடுத்த கவிதையை தினமும் அவரிடம் வாசித்துக் காட்டுவேன். அவர் என்ன சொல்வார் தெரியுமா?

“டபிள்யூ, கவிதை நன்னா இருக்குல்லே. அவரைத் தப்பா எடுக்காதீங்கோ
உங்களைப் பாக்கும் போதுதான் இன்ஸ்பிரேஷன் வருது.கவிதைக்கு அது முக்கியம் இல்லியா?”

இந்த வரிகள் எழுதும் பொழுது இப்பொழுதும் அழுகின்றேன். புருஷன் ஒரு பெண்னைப் பார்த்தாலே மனவிக்குத் தாங்காது. இத்தகைய பெண்மணிகள் எத்தனைபேர்களைப் பார்த்திருப்போம்.?! நான் நேசித்த என் சுந்தரா இப்பொழுது இல்லை.
என் உத்தியோகத்தின் பெயர்ச் சுருக்கம் S.E,O,W. சுந்தராமட்டும் என்னை டபிள்யூ என்று கூப்பிடுவார்களேயொழிய பெயர் சொல்லி அழைத்ததில்லை.

கடைசி முறையாக சென்னைக்கு சென்ற பொழுது ஓ.எஸ்கே வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்பொழுதும் ஒரு கவிதை மலர் கொடுத்து வரவேற்றார்.

என்னுடன் கவிஞர் நிலாரசிகனும் கவிஞர் சஹாராத் தென்றலும் இருந்தார்கள். கவிஞர்களையே மலைக்க வைத்துவிட்டார். இப்பொழுது அவருக்கு வயது எண்பத்து இரண்டு. கவிஞர்களை முதுமை அண்டாது. இளமையின் இன்பத்தை அவர்களால் எப்பொழுதும் அனுபவிக்க முடியும்.

“சீதா அப்பொழுது அழகாய் இருந்தார்கள் இப்பொழுதுதான் இப்படி ஆகிவிட்டார்கள்”

அய்யோ, எங்கு போனாலும் இந்தப் பாட்டைக் கேட்டு அலுத்துவிட்டது.

ஓ.எஸ். கே அவர்கள் மிகவும் நகைச் சுவையுடன் பேசுவார். ஒரு முறை அவர் சென்னைக்கு வந்த பொழுது சில இடங்களுக்குக் கூட்டிச் சென்றேன்

விகடன் அலுவலகம் சென்ரிருந்தோம். மணியன் எங்களை உட்கார வைத்துவிட்டு சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிப் போனார். போகும் பொழுது, “காபி, டிபன் வரும் , சாப்பிடுங்கள்” என்றும் சொல்லி விட்டுப் போனார் ஓ.எஸ்.கே அப்பொழுது பேசியது இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கின்றது.

சீதாலட்சுமி. மனத்தைத் தேற்றி வைத்துக் கொள்ளுங்கள் இப்பொழுது நாம் அனுப்பிய கதைகள் நம்மைப் பார்த்துச் சிரிக்கப் போகின்றன

என்ன சொல்லுகின்றீர்கள்

இப்பொழுது பலகாரம் வருமே அதைச் சுற்றி வரும் காகிதங்கள் எல்லாம் நாம் கதை எழுதிய பேப்பர்கள் ஆனால் நீங்கள் கவலைப் பட வேண்டாம். உங்கள் கதையில் ஸ்வீட் இருக்கும். என் கதையில்தான் மிக்சர் இருக்கும் என்றார்

நான் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன். மணியன் வந்த பொழுது நடந்ததைச் சொன்னேன். அவரும் சிரித்தார்
வந்தவர்களுக்குக் காகிதப் பொட்டலமாகவா கொடுப்பார்கள். பிளேட்டில் வந்தன.

மாலா என்று ஒரு பத்திரிகை அப்பொழுது இருந்தது.வைஜயந்திமாலாவின் ஆதரவில் நடந்து வந்த பத்திரிகை. அங்கு சென்ற பொழுது ஆசிரியர், என்னை அவர்கள் பத்திரிகையில் எழுதச் சொல்லி வற்புறித்தினார்கள்.  ஓ.எஸ்.கே அங்கே ஒன்றும் பேசவில்லை வெளிவரவும் அவர் பேசியது

இதென்ன கூத்து. தமிழ் நாட்டில் உங்களைத் தவிர எழுத்தாளர்கள் கிடையாதா? போகும் இடங்களில் எல்லாம் உங்களைக் கெஞ்சுகின்றார்கள். தமிழ் நாட்டிற்கு என்னமோ ஆய்டுத்து. அது சரி அய்யர் பத்திரிகை களுக்குக் கதை எழுத என்ன கஷ்டம் பிராமண பாஷயில் மாமியின் கலாட்டான்னு எழுதுங்களேன். எத்தனை எத்தனை சொன்னார். நடுத்தெருவில் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தார்.

இயல் இசை நடகம் மூன்றிலும் எங்கள் வாடிப்பட்டி வட்டாரம் கோலோச்சியது. மறக்க முடியாத நாட்கள்

என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. கதைகள் படித்து பிடித்துவிட்டால் உடனே கதாசிரியருக்குக் கடிதம் எழுதிவிடுவேன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சென்னை சென்று எழுத்தாளர்களை, பத்திரிகை அலுவலங்களைப் பார்ப்பேன்.
இப்பொழுது கூட குழும நண்பர்களுக்குத் தனி மடல் போடத் தயங்குவதில்லை. ஏனோ இப்பழக்கம் சிறு வயது முதல் தொடர்ந்து வருகின்றது. இதை எழுதும் பொழுது ஒரு சம்பவம் நினைவிற்கு வருகின்றது.
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏதோ பத்திரிகை பார்த்து ஒரு பேனா நண்பரைக் கண்டு பிடித்தேன். அவர் காஷ்மீர்ப் பகுதியில்
மிலிட்டரியில் வேலை பார்த்து வந்தார். என் கடிதத்திற்குப் பதில் போடும் பொழுது தன் போட்டோவையும் அனுப்பியிருந்தார். என் அப்பாவின் கையில் அக்கடிதம் கிடைத்துவிட்டது. கண்டவன் போட்டோ அனுப்பும் அளவு நான் கெட்டுப் போய்விட்டேன் என்று  கத்திவிட்டு பிரம்பாலும் அடித்தார். எழுதியவன் யாரென்றே என்று எனக்குத் தெரியாது. அது ஒரு சாதாரணக் கடிதம். 60 ஆண்டுகளுக்கு முன் எங்கள் சூழல் அப்படி இருந்தது.

பழமையை உடைப்பதில் அப்படி ஒரு தைரியம்.சரியோ தவறோ என் குணம் அப்படி இருந்தது. என்ன அடிபட்டாலும் பயம் வரவே இல்லை.

என் கடித அணுகுமுறையும் என் பேச்சும் பலரையும் ஈர்த்தன. எனவே நட்பு வட்டம் நாளுக்கு நாள் வளர ஆரம்பித்தது.

மனிதர்கள் எட்ட இருந்து பார்க்கும் மனிதர்களை கிட்ட இருந்து என்னால் பார்க்க முடிந்தது.

தொடரும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான அனுபவங்கள்...

உங்களைப் போல் தான் அனைத்து பெண்களும் இருக்க முயல வேண்டும்...

உங்களின் மன உறுதிக்கு வாழ்த்துக்கள்...