Wednesday, May 5, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 06

இலக்கியம் கற்பனையை அறிதல் முறையாகப் பயன்படுத்தி வாழ்வை மதிப்பிட முயலும் ஒரு துறை." ஜெயமோகன்

வாழ்க்கையைக் கற்பனைச்சிறகென்ற கோலினால் மெருகுபடுத்தி வரையும் ஓவியமே இலக்கியம்.

வாழ்வின் ஆதார உணர்வுகள் உயிர்ப்புடன் எழுதப்படும் பொழுது அவைகள் அழியாத்தன்மை பெறுகின்றது. அது எல்லோராலும் முடிவதல்ல.

வாழ்க்கையை ஊடுருவிக் காட்டிய ஒரு சிலரில் நம் ஜெயகாந்தனும் ஒருவர். எழுத்துக்களால் நம்மிடம் நெருக்கமாகிவிடுவர் படைப்பாளிகள்.

அவர்களைப் பார்க்க வேண்டுமென்பதோ, பழக வேண்டுமென்பதோ தேவையில்லை. நாம் ரசிப்பது அவர்கள் படைப்புகளை! சிலருக்குப் படைத்தவனுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும்பொழுது, அவனுடைய பல முகங்களையும் காண முடிகின்றது. இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால், எல்லா முகங்களும் அழகாய் இருக்கும் என்று உத்திரவாதத்துடன் சொல்ல முடிவதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையை இங்கு நான் குறிக்கவில்லை. அவர்கள் அந்தரங்கம் நமக்கு வேண்டாம். எழுதத் தெரிந்தவர்கள் சிலருக்குப் பேசத்தெரிவதில்லை. சிலர் பேசினால் இவரா இப்படி அருமையாக எழுதுகின்றார் என்று தோன்றும். ஆனால், மற்றும் சிலருடன் உரையாடும் பொழுது அவர் இன்னும் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தை உண்டு பண்ணிவிடுவார்கள். ஜெயகாந்தனிடம் நான் உணர்ந்தது இது.

என் தோழி ஒருத்தி சமகால எழுத்தாளர்கள் பெயர்களைக் கூறி அவர்களைப் பற்றியும் நான் எழுதப்போகின்றேனா என்று கேட்கின்றாள்.

நான் இங்கு யாரைப்பற்றியும் திறனாய்வு செய்யவில்லை என்று மீண்டும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். என் சமுதாயப் பணியில் நான் கண்ட பிணிகளைப்பார்த்த பாதிப்பில், ஓடிச்சென்று இளைப்பாறிய இடம் ஜெயகாந்தன் குடில்! பயணத்தில் சிலர் எட்டிப்பார்க்கலாம். அவ்வளவு தான்! ஆனால், ஒன்றை ஒப்புக்கொள்கின்றேன். 90 வரைக்கும் அநேகமாக தமிழகப்பத்திரிகைளில் வந்தவைகளைப் படித்திருக்கின்றேன். அதன்பின், தமிழகத்தைவிட்டு வெளியிடங்களில் வாழ வேண்டிய சூழலால் படிப்பது குறைந்துவிட்டது. விருப்பு, வெறுப்பு என்று என் படித்தலில் கிடையாது;எல்லாம் படிப்பேன். எப்படியும் ஒரு செய்தியாவது இருக்கும்.

சமுதாய அக்கறை உள்ளவன், எதையும் என்னவென்று பார்க்காமல் ஒதுக்கமாட்டான்.

"சில நேரங்களில் சில மனிதர்கள்"

இது கதையின் தலைப்பு.

ஒவ்வொருவனின் வாழ்க்கையிலும் அவனே கூட ஒவ்வொரு நேரத்தில் ஒரு விதமாக இருப்பான். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. இந்தத் தலைப்பை என்று பார்த்தேனோ அன்று முதல் அதை நினைக்காத நாளில்லை. இது உளவியல் ரீதியாக எனக்கு உதவி செய்தது. குற்றவாளிகளைக்கூட அவர்கள் செய்த தவறுகளாக நினைத்து அவர்களுடன் இயல்பாகப் பழக முடிந்தது. பெரியகருப்பனைப் போன்றவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

நான் பணிக்கு வந்த மறுநாள் ஒருவனால் கெடுக்கப்பட்ட ஒருத்தி எனக்குக் கூறிய அறிவுரை:

எல்லாரும் கெட்டவங்க இல்லே. ஆனா எப்போ கெட்டது செய்வாங்கன்னு தெரியாது.பெண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்."

படிப்பிலும் பதவியிலும் என்னைவிடக் குறைந்தவள்; ஆனால், அவள் கூறியதுதான் எனக்குக் கிடைத்த அரிய படிப்பினை.

இதே கருத்தை,“சில நேரங்கள் சில மனிதர்கள்," என்ற ஒற்றை வரியில் அழகாகச் செதுக்கியவர் நம் ஜெயகாந்தன். பொதுவாக ஒரு சிலரின் கதைத்தலைப்புகள் மனதைவிட்டு நீங்காது நிலைத்துவிடுகின்றன.

இன்னொரு தலைப்பு தி.ஜ.ராவின் “மோகமுள்." ஆனால், இதனைச் சேர்த்து நினைக்கவில்லை. மோகம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது என்ற உண்மை நெஞ்சில் முள்ளாய்த் தங்கிவிட்டது. ஏற்கனவே ஆணினம் மேல் இருந்த கோப உணர்வு, சமுதாயத்தில் சில அவலங்களைப் பார்க்கப் பார்க்க, ஆண் சிறுதப்பு செய்தால் கூட சீறும் குணம் வளர்ந்துவிட்டது. வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவள், கணவனால் கைவிடப் பட்டவள், ஆதரவற்ற பெண்கள் இவர்களுக்குப் புனர்வாழ்வு அமைத்துக் கொடுக்கும் பணி என்னுடையது. தினமும் அத்தகைய புகார்களைக் கேட்க வேண்டி வந்ததால் குற்றவாளிக் கூண்டில் ஆண் இனத்தை நிறுத்திப் பார்த்துவந்தேன். மோகம் என்பது பெண்ணுக்கும் உண்டு என்பதை அனுபவங்கள் காட்டிக் கொடுக்கவும் என் சீற்றம் குறைந்தது.

சின்னஞ்சிறு பெண்ணைக் குதறிவிட்டு, பின் கொன்று குப்பைத்தொட்டியில் வீசும் ஆணை எப்படி வெறுக்கின்றேனோ அதை விட வயதான ஒருத்தி பள்ளிப்படிப்புகூட முடிக்காதவனை விளையாட்டு என்று சொல்லிக் கெடுக்கும் பெண்னை அதிகமாக வெறுக்கின்றேன். இருவரையும் என்னால் மன்னிக்க முடியவில்லை.

ஏனோ திடீரென்று ஜெயகாந்தன் கதை படிக்க வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. அமெரிக்கா வரும்பொழுது எத்தனை புத்தகங்கள் தான் எடுத்துவருவது? ஆனால் ஜெயகாந்தன் புத்தகங்கள் மூன்று இருந்தன.

ஆனால் அவைகளைப் பார்க்க விரும்பாமல் கணினியில் மதுரைத்திட்டம் போய் என் பார்வையை ஓட்டினேன்.

யுகசந்தி

என் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது. அதற்குக் காரணம் உண்டு. முதலில் அந்தக் கதையைக் கொஞ்சம் சேர்ந்து பார்ப்போம்

பத்துவயதில் திருமணம், பதினாறு வயதில் விதவையான கௌரிப்பாட்டிக்குக் குழந்தை இருந்து பேரன் பேத்திகளும் இருந்தனர். ஆசாரவாழ்க்கை, அதாவது கட்டுப்பாடான வாழ்கை! காலம் சுழல்வதை யாராலும் மாற்ற முடியுமா? அவள் பேத்தி கீதா திருமணமாகி பத்து மாதங்களில் விதவையாகி பிறந்தகம் வந்து பாட்டியின் மடியின் முகம் புதைத்துக் கதறி அழுதபொழுது பாட்டி அவளை அரவணைத்துக் கொண்டாள். அதற்கு பாசம் மட்டும் காரணமல்ல. இறந்தகாலத்தின் நிகழ்காலப் பிரதிநிதியாய் அவளில் தன்னைக் கண்டாள்.

கீதா வீட்டிற்குள் முடங்காமல் படித்து, ஆசிரியர் தொழில் பார்க்க அயல் ஊருக்குச் சென்ற பொழுது பாட்டியும் உடன் சென்றாள். தன் மகனைக் காண கிராமத்திற்கு வந்த பொழுதுதான் அந்த செய்தியை அறிகின்றாள்.

விதவைப்பெண் கீதா மறுமணம் செய்து கொள்ளப் போகின்றாளாம். பிறந்தவீடு தன்னை ஒதுக்கிவிடும் என்பதை உணர்வாள். தனக்கு வாழ்வு வேண்டிச் செல்வதை மறைக்காமல், தெரிவிக்க வேண்டியதைக் கடமையாக நினைத்துக் கடிதம் அனுப்பியிருக்கின்றாள். மேலும் கூறுவதை அப்படியே ஜே.கே அவர்களின் வார்த்தைகளைக் கூற விரும்புகின்றேன்:

உணர்வுபூர்வமான வைதவ்ய விரதத்திற்கு ஆட்பட முடியாமல் வேஷங்கட்டித்திரிந்து, பிறகு அவப்பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணந்திருக்கின்றேன். ஆமாம், ரொம்ப சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத்ததிவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து தியாகம் செய்துவிட்டார்கள்! "

கீதா இப்படியாகி வந்தபிறகுதான் பார்வதி அம்பியையும் ஜனாவையும் பெற்றெடுத்தாள். அதற்கென்ன , அதுதான் வாழ்கின்றவர்களின் இயல்பு.

வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து சிதைந்து, மக்கி மண்ணாகிப் பூச்சி அரித்து அரித்துப்புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை கனவுகளை அவர்கள் அறிவார்களா?

மொட்டையடிப்பதை விடுத்துப் பின்னல்போட அனுமதித்தவர், வெள்ளைத்துணியை கலர்த்துணியாக உடுத்தும் பொழுது ஒத்துக் கொண்டவர், வாழ்வுக்கு ஏங்கும் இயல்பில் மட்டும் கலாச்சாரம் போய்விட்டதாகக் கத்தும் போலித்தனத்தை கௌரிப்பாட்டியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வீட்டில் எதிர்ப்பு வரவும், “நான் பிறந்த யுகம் வேறடா” என்று கூறிவிட்டு புதுயுகம் போய்விட்ட பேத்தியைக் காணப் புறப்பட்டுவிட்டாள்.

இரு யுகங்களின் சந்திப்பு நிகழ்ந்தது.


புதிய வார்ப்பு

இந்தக் கதையிலும் அதே இதயஒலியைக் கேட்கலாம்

பதினேழு வயது நிரம்பாத இந்துவிற்கு வேணு மீது காதல். அவனுடன் புறப்பட்டுவிட்டாள். விஷயம் தெரியவும் பெற்றவன் இருவரையும் பிடித்து விட்டான். வேணுவின் மேல் திருட்டுப் பட்டமும், சின்னப் பெண்னை ஏமாற்ற நினைத்த குற்றமும் சொல்லி சிறைக்கு அனுப்பினான். மகளையே காதலனுக்கு எதிராக பொய்சாட்சி சொல்லச் செய்தான். வேணு அரசாங்கச் சிறையில்; இந்துவும் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டாள். தினமும் சொல்லம்புகளால் காயப்படுத்தி அவளை நடைப் பிணமாக்கினான் தகப்பன். வாழவேண்டிய பெண் ஏக்கத்தில் தவிக்க, பெற்றவர்கள் எல்லா சுகங்களையும் அனுபவிக்க, இங்கும் மனப்போராட்டம். சிறையிலுருந்து திரும்பிய வேணு வரவும், அவனுடன் இப்பொழுது பயமின்றிப் புறப்பட்டு விட்டாள்.

இந்து வேணுவிடம் சொன்னது:

நாம் செய்தது, அப்ப செய்தது தப்பாக இருக்கலாம். அந்தக் காரியம் தப்பாப் போனதற்கே காரணம் நாம அதை அப்போ செய்ததுதான். நான் அப்போ என் வாழ்க்கையைத் தீர்மானிக்கற வயசிலே இல்லே. அதே காரியத்தை நான் இப்போ செய்யல்லேன்னா வாழ்க்கை கெட்டே போய்டும். எனக்கு வயசு வந்தாச்சு."

இவள் ஒரு புதிய வார்ப்பு.

இரண்டு கதைகளிலும் ஒரு காட்சியில் ஒற்றுமையைக் காட்டுகின்றது.

வீட்டில் வாழ முடியாமல் இருக்கும் பெண் இருந்தால் பெற்றவர்கள் கூடத் தங்கள் நெருக்கத்தைக் காட்டுவது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

எனக்கு வயது எழுபத்தைந்தாகிவிட்டது. நானே மூன்று நிலைகளைக் கண்டிருக்கின்றேன். நான் கிராமத்துப் பெண். எங்கள் காலத்தில் அப்பாவும் அம்மாவும் சேர்ந்தால்தான் பிள்ளை உண்டாகும் என்று தெரியாது. அம்மா வயிற்றில் இருக்கும் பாப்பா வருவதைக் கூட, “சாமி வருவார். அம்மா வயத்தை தொடுவார். டபக்குன்னு பாப்பா வந்துடும்.“ என்று கூறுவார்கள். கல்யாணமாகத பெண் வீட்டில் இருந்தால் பையன்களுக்குக் கூடத் திருமணம் செய்வதை ஆதரிக்க மாட்ட்டர்கள். முதலில் பெண்ணின் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பார்கள்.

அடுத்து வந்த காலம் “ரெண்டுகெட்டான் காலம்" என்று அவர்கள் பாணியிலேயே கூறலாம். சுழலின் தாக்கம் மனத்தில் ஏக்கத்தை உண்டாக்கியது. இந்தக்காலத்தில்தான் புதுமைப்பித்தன், தி.ஜ.ரா, ஜெயகாந்தன் போன்றவர்கள் மனப் புழுக்கத்தைச் சுற்றி அதிகமாக எழுதினர்.

இப்பொழுது பெண்ணிற்குச் சமாளிக்கத் தெரியும்.

ஒர் நிஜத்தை ஏற்கனவே உங்கள் முன் காட்டினேன். இதே சூழலால்,மனக் குமுறல் மட்டுமல்ல, நிலையான வருவாய் இருந்தும் விபச்சாரத்தைத் தொழிலாய் எடுத்த அந்தப் பெண் மட்டும் அப்படிப்பட்ட முடிவை ஏன் எடுத்திருக்க வேண்டும்? கண்ணியமான காதலன் கிடைக்கவில்லையா? கதைகளில் நல்ல நாயகனைக் காட்டிப் புதுயுகம் காட்டலாம்; ஆனால், வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. ஏற்கனவே வருவாய் இருக்கும் பொழுது ஒரு பெண் விபச்சாரத்தைச் சட்டென்று தன் தொழிலாக எடுக்க மாட்டாள். ஏதோ நடந்திருக்க வேண்டும்.

எனக்கு மிகவும் தெரிந்தவர் ஒருவர் மூலம் அவள் கதையறிந்தேன். நான் கேள்வி கேட்ட விதத்திலிருந்து என்னுடைய அக்கறையைப் புரிந்து கொண்டதால் பதில் கூறினாள்.

நான் ஒன்றும் அவளைக் கேட்கவில்லை. அந்த நிலையில் அதிகம் கேட்கக்கூடாது என்று எங்களுக்குச் சொல்லப் பட்டிருந்தது. அந்த நாள் சமூகசேவகி திருமதி.அம்புஜமாள் அவர்கள் எங்களுக்குக் கொடுத்த பயிற்சி; ஒருத்தி மனக்குமுறலுடன் முன்னால் வந்து நிராதரவாய் நிற்கும்பொழுது, கேள்விகள் கேட்கக் கூடாது

அவளே நொந்து போய் வந்திருக்கா;நீயும் குதறாதே! முதல்லே உள்ளே கூட்டிண்டு போய் சாப்பிடச் சொல்லு. தூங்கட்டும் ரெண்டு நாள் ஆனா அவளே சொல்லுவா."

அந்தக்காலத்தில் எங்களுக்குக் கிடைத்த வழிகாட்டிகள் மிக உயர்ந்தவர்கள். பெயருக்காக “சமூகசேவை" என்று சொல்கின்றவர்களல்ல!

என் துறையைச் சேர்ந்த பிரச்சனைகளை மட்டும் தீர்ப்பதுதான் என் வேலை என்று நினைப்பவள் இல்லை. எங்கு துயர் கண்டாலும் முடிந்தமட்டில் தீர்க்க முயல்வேன்.

விசாரணை செய்த என்னால் அவளுக்கு மாப்பிள்ளை தேடி திருமணம் செய்து வைக்க முடியாது. ஆனால், ஏதாவது ஓர் தீர்வு காண வேண்டும்

இது கதையல்ல; விருப்பப்படி முடிவு செய்து விட முடியாது! ஆனாலும் ஏதாவது செய்யவேண்டும். எனக்குத் தோன்றிய வழி ஒன்று தான்

உனக்கு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கித் தருகின்றேன். அங்கே உனக்குப் புதுவாழ்வு கிடைக்கலாம். அப்பா, அம்மா பத்தி கவலை வேண்டாம். பட்டுத் திருந்தட்டும். உன்னால் முடிந்த அளவு பணம் மட்டும் அனுப்பு. பொறுப்பைத் தலையில் சுமக்க வேண்டாம். இந்த வாழ்க்கை வேண்டாம்மா.

நான் கூறியதை கேட்டவுடன் ஓவென்று அழுதாள். அது நிஜ அழுகை. அவள் விடும் கண்ணீர், ஏதோ ஓர் வெறுப்பில் இந்த அவலவாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருப்பாள் எனத் தெரிந்தது. அவளை அணைத்துக் கொண்டேன். மார்பில் முகம்புதைத்து அழுதாள். அவளுக்கு அப்பொழுது அந்தத் தாய்மைப் பரிவு தேவையாக இருந்தது. இடம் மாறினால் அவளுக்கும் புதிய வாழ்வு கிடைக்கலாம். எல்லாம் ஓர் நம்பிக்கைதான். வாழ்க்கையின் அச்சாணிதானே நம்பிக்கை.

என்னால் பிரச்சனைகளை விட்டு ஓடமுடியாது. எப்பொழுதும் வெற்றி கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. ஆனால், முயற்சி செய்யாமல் விடமாட்டேன்.

நான் கதாசிரியர் அல்ல; சமூகத்தில், அதன் நலம்விரும்பும் ஓர் போராளி! செயலில் இறங்க வேண்டும்.


ஆமாம், யுகசந்தி என்ற தலைப்பைப் பார்க்கவும் சிரித்தேனே! காரணம் தெரிய வேண்டாமா?

அது ஒரு வேடிக்கையான சம்பவம். அடுத்து கூறுவேன்.

(தொடரும்)

நன்றி: திண்ணை

2 comments:

பனித்துளி சங்கர் said...

//////ஆமாம், யுகசந்தி என்ற தலைப்பைப் பார்க்கவும் சிரித்தேனே! காரணம் தெரிய வேண்டாமா? ////////

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள் !மிகவும் ஆவலாக இருக்கிறேன் அறிந்துக்கொள்வதற்கு . பகிர்வுக்கு நன்றி !

பிரபாகர் said...

ஜெயகாந்தனின் எழுத்துக்களை விமர்சிக்கும் விதம் அற்புதமாக இருக்கிறது!

அனுபவங்கள் அருமை அம்மா! தொடருங்கள்!

பிரபாகர்...