Thursday, May 13, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 07


குறிப்பேடு எழுதும் பழக்கம் என் சிறு வயதிலேயே ஆரம்பமாகிவிட்டது. படிக்கும் பொழுது பிடித்த வரிகள், மற்றவர்கள் பேச்சில் என்னை ஈர்த்த வைகள்,சில அனுபவங்கள் ஆகியவைகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிவைத்துக் கொள்வேன். ஏதாவது வித்தியாசமாகக் கண்டாலும் குறித்து வைப்பேன். நிலைத்துவிட்ட நினைவலைகள் இப்பொழுது குதித்து வருகின்றன.

1958

வாடிப்பட்டியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சுதந்திரம் கிடைத்த பின் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில் முக்கியமாகக் கருதியது மக்களிடையே பல விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாங்களும் கதாகாலட்சேபம், நாடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்தோம். நாடகம் பார்க்கும் பொழுது அவைகள் பிரச்சார நாடகமாகத் தெரியாது. மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி ’செட்’டின் நாடகத்திற்குத் தனிப்புகழ் உண்டு. அந்தப் பெருமைக்கு உரியவர் சோம மகாதேவன் என்பவரே! நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியவர். நாடகக் கம்பெனியில் இருந்தவர். எனவே எங்கள் நாடகம், அதனைத் தொழிலாகக் கொண்டவர்களின் நிகழ்ச்சியைப் போன்று சிறப்பாக அமைந்திருந்தன.

"மனமாற்றம்”-எங்கள் நாடகத்தின் பெயர்!

இரு சகோதரர்கள். மூத்தவர், அந்த ஊரில் பெரிய பணக்காரர்; பேராசை பிடித்தவர். அவருடைய தம்பி ஊருக்கு உழைப்பவன். இரு துருவங்களான சகோதர்களுக்கிடையில் போராட்டங்கள். செல்வந்தருக்கு முதல் மனைவி இறக்கவும் இளையவளாக ஓர் குணவதி வந்து சேர்ந்தாள். கணவரின் போக்கு பிடிக்கவில்லை. அவளும் நியாத்தைச் சொல்லிப் போராடுவாள். சண்டைகள் வலுத்து ஓர் நாள் இளம்மனைவி தற்கொலை செய்து கொண்டு உயிர் நீக்கின்றாள் அப்பொழுதுதான் சுயநலக் காரனின் மனம் திருந்துகின்றது. கிழக் கணவனாக வந்தவர் சோம மகாதேவன். இளம் மனைவியாக நடித்தவள் நான். நான்கு இடங்களில் அந்த நாடகத்தை நடத்திவிட்டு ஐந்தாவதாக வாடிப்பட்டிக்கருகில் இருந்த வடுகபட்டியில் நடத்தினோம்.

அன்று என் அம்மாவையும் கூட்டிச் சென்றிருந்தேன். நாடகம் முடிந்து திரும்பி வரும் பொழுது அம்மா ஒன்றும் பேசவில்லை. வீட்டிற்குள் நுழையவும் ’ஓ’வென்று அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

"என்னம்மா ஆச்சு?"

"இனிமேல் என்ன ஆகணும்? எல்லாம் போய்டுத்து! உன்னைப் பெத்ததக்கு உசிரை வச்சுக்கலாமா?"

"நான் என்ன தப்பு பண்ணினேன்?"

"இன்னும் என்னடி பண்ணனும்? எவனோ ஒரு கட்டேலே போற தடியன் உன்னை மடியில் போட்டுண்டு தொடறான், அழறான்? இந்தக் கண்ராவிக் காட்சியைப் பாக்க என்னை ஏன் கடவுள் வச்சிருக்கார்?"

"அது நாடகம் அம்மா!"

"ஏண்டி, உனக்குச் சுரணை கிடையாதா? வேற்று மனுஷன் ஒரு பொம்மனாட்டியைத் தொடலாமா? கற்பு போய்டுத்தேடி! இதுக்கா உன்னை வளத்தேன்? பொண்ணு வேலைக்குப் போனா இப்படி வெக்கம் மானம் இல்லாமலா நடக்கறது? எங்க காலத்துலே முதுகுலே போடர துனி நழுவறது கூட பாவம்னு நினைப்போம். என் வயத்துலே பிறந்தவ இப்படி இருக்கியே?என்னாலே தாங்க முடியல்லேடி."

என் அம்மா ’கற்பு” என்று சொல்லவும், மனத்துக்குள் கோபம், ஆத்திரம்,சிரிப்பு எல்லாம் தோன்றியது. என் உணர்வைக் காட்டவில்லை. என் அப்பாவி அம்மாவைச் சாந்தப் படுத்த வேண்டும். பக்கத்தில் உட்கார்ந்து ஏதேதோ பேசினேன். கொஞ்சம் கொஞ்சமாக அழுகை அடங்கியது.

“இனிமேல் மற்ற ஆண்களைத் தொட்டு நடிக்க மாட்டேன்."என்று கூறினேன். என் வேலை பிரச்சாரம் செய்வது. எனவே நாடகத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியவில்லை. என் பேச்சில் முழுசமாதனம் அடையாவிட்டாலும் அழுகை நின்றது.

என்றோ கற்பிக்கபட்ட கற்பு அன்று என் வாழ்க்கையில் சோகத்தை வரவழைத்தது. ஆத்திரத்தையும் வரவழைத்தது.
ஓடும் ஆற்று நீரில் விண்ணில் பறந்த ஓர் கந்தர்வனின் அழகைச் சில வினாடிகள் ரசித்துவிட்டாள் ஓர் பெண்மணி. அதை உணர்ந்த அவள் கணவர், மகன் கையால் தாயின் தலையைக் கொய்யச் செய்தார். நிழலைப்பார்த்து ரசித்தவளுக்குத் தலை போயிற்று.

இக்காலத்துப் பெண்களை நினைத்துப் பார்த்தேன்.

சினிமா நாயகர்களை ரசிக்கும் பெண்களின் தலைகளைக் கொய்ய ஆரம்பித்தால், ஊரில் தலையில்லா முண்டங்கள் தான் நடமாடும்.
டவுண் பஸ்ஸில் எப்படி இடி படாமல் இருக்க முடியும்? கண்டவன் செய்யற சேட்டைகள் உணர்ந்தும், முகத்தை மட்டும் சுளித்து உடம்பை நெளிந்து கொள்ள முடிகிறதேயொழிய வேறு என்ன செய்ய முடியும்? சில நேரங்களில் சில மனிதர்கள் கதையில் கங்கா படும் பாட்டை ஜெயகாந்தன் எவ்வளவு தத்ரூபமாக எழுதியிருக்கின்றார்!

அரசு வண்டியில் நாங்கள் போகும் பொழுது ஜீப்பில் பின்னால் ஆறு பேர்கள் இடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். எங்களுக்கு ஒட்டாமல் உட்கார இடம் ஏது? எவனாவது அயோக்கியன் உட்கார்ந்தால் , பஸ்ஸில் படும் வேதனைகளும் சோதனைகளும் ஜீப்பிலும் இருக்கும். அவன் அசட்டுச் சிரிப்பையும் சகித்துக் கொள்ள வேண்டும்.

கற்பாம் கற்பு!

எனக்கேற்பட்ட வயிற்றெரிச்சலை ஒரு கதையில் எழுதி அனுப்பி அதுவும் வெளி வந்தது. ரசித்தவர்களும் யாரோ ஒருத்தன் பெண் பெயரில் எழுதியிருக்கின்றான் என்றார்கள்.

பெண்ணுக்குச் சுதந்திரமாக எழுதக் கூட உரிமையில்லை.

“பாரிஸுக்குப் போ” ஜெயகாந்தன் எழுதினால் ஓஹோ! இருவர் கதையை இரு பெண்கள் எழுதினால் “பெண்கள் எழுதற கதையா” என்று பரிகாசம்!
மணமான பெண்ணிடம் சலனம் ஏற்படுவதைக் கூட ஆண்தான் எழுதவேண்டும்.
இதே அம்மா, பல வருடங்கள் கழித்து ஓர் நிகழ்வில் எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்த்தோமானால். வியப்பு வரும்.

குருவம்மா ஓரு கிராமத்துப் பெண். அவள் பட்டப்படிப்பு முடித்து என் துறையில் பணியாற்ற சேர்ந்தாள். சில மாதங்களில் அவள் வாழ்வில் காதல் புகுந்தது. செய்தி அறிந்த அவள் தந்தை கொதிப்படைந்து அவளைச் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று சொந்தக்காரப் பையன் ஒருவனுடன் கட்டாயத் திருமணம் செய்து முடித்துவிட்டார்.

ஒருவர் வாழ்க்கை திருமணம் முடியவும் முடிவடைவதில்லை. அது ஆரம்பம். பொருந்தாத திருமணம். குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை.நாளுக்கு நாள் அது அதிகமாகவும், கணவனை உதறிவிட்டாள்.

“இணையாது கலந்து இரண்டு ஆத்மாக்கள் இரு வேறு உலகங்களில் பிரிந்து கிடந்தாலும் அந்த அனுபவமே தாம்பத்யம் தான். இரண்டு ஆத்மாக்கள் சங்கமமில்லாமல் உடல்கள் என்னதான் ஒட்டிக் கலந்து உறவாடிய போதிலும் அந்த வாழ்வே ஒரு தனி வாழ்க்கைதான் “

காலச் சக்கரத்தின் சுழற்சியின் வேகத்தில் தாம்பத்தியத்தின் இலக்கணமும் மிதிபட்டுக் கொண்டிருக்கின்றது.
பெற்றவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், அவள் ஒதுங்கிய இடம் ஓர் போலீஸ் அதிகாரியின் நிழல். குருவம்மாளுக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவர் திருமணமாகதவர். யாராவது அவளை முதலில் பார்க்கின்றவர்களாக இருந்தால்,“எவ்வளவு அடக்கமான பெண்; நல்ல பெண்!“ என்று போற்றுவார்கள்.;அவர்களைத் தூற்றுவாரும் இருந்தனர்!

என் மீது அவளுக்குப் பிரியம். என்னுடன் மனம்விட்டுப் பேசுவாள்;என் வீட்டிற்குத்தான் வருவாள். என் தாயாரைப் பார்க்க வரும்பொழுது பூ வாங்கி வந்து அம்மா கையில் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்வாள்.

குருவம்மாள் ஒருவனைக் காதலித்தாள்; இன்னொருவனை மணந்தாள்; கட்டியவனை உதறிவிட்டு இன்னொருவனின் கையைப் பிடித்துக் கொண்டுவிட்டாள். பழங்கால மாமியின் அபிப்பிராயம் தெரிய ஆவல்!

“எங்க காலத்துலே பொண்களுக்கு எந்த வாழ்க்கை அமையறதோ அதுலே ஐக்கியமாயிண்டு வாழ முடிஞ்சுது. இப்போ காலம் மாறிடுத்து.கன்னாபின்னான்னு கண்டவனோட சுத்தாம யாரோ ஒருவனுடன் எப்போ வாழ ஆரம்பிச்சுட்டாளோ அப்பறம் அவளைப் பத்தி பேச என்ன இருக்கு? இப்போ மனம் ஐக்கியமா இருக்கற இடத்துலே நன்னா வாழறா"
என் அம்மாவா இப்படி பேசறது?ஆமாம்! ஒரு ஆடவன் கைபட்டால் கற்பு போச்சுன்னு அழுத அம்மாதான். இதுதான் யதார்த்தம். இதுதான்நிஜம்.

ஒன்றில் பழகிட்ட மனசு இன்னொன்றை ஏற்றுக் கொள்வது எளிதல்ல. முப்பது வருடங்களில் இந்த மாற்றம்.

மாறிவிட்ட சூழல் மனிதனை எப்படி பேச வைக்கின்றது?! முன்பு யுகசந்திப்புகள். இப்பொழுது காலச் சக்கரத்தின் வேகம் அதிகம். எனவே யுகங்களுக்காகக் ககத்திருக்க வேண்டியதில்லை. வினாடிப் பொழுது கூடப் போதும்.

ஜே.கேயின் கதை கற்பனையல்ல. மாற்றங்களை ஜீரணித்து வருபவர்களில் பாட்டியும் ஒருத்தி. அன்று எழுதப்பட்டவைகள் இப்பொழுது சாதாரணமாகிவிட்டன.

என் களம் மணம் வீசும் மலர்கள் நிறைந்த நந்தவனம் இல்லை. என் மனத்தில் குழப்பம் ஏற்படும் பொழுது நான் தேடிச் செல்லும் இடம் ஜெயகாந்தன் குடில்.

அவர் எனக்கு சுமைதாங்கியல்ல;ஓர் ஊன்றுகோல்!என் தள்ளாட்டத்தை ஒடுக்கி நிமிர்த்தும் ஓர் உறுதியான ஊன்றுகோல்.
ஜெயகாந்தனைப் பார்க்க, அவருடன் பேச பலர் வந்து போவதுண்டு. இயல்பாக பேசுவதும் உண்டு. ஓரிருவர் வந்தால் பேசுவதைவிடக் கூட்டமாக சிலர் இருந்தால் திடீரென்று வேகம் வந்துவிடும். காட்டாறு போல் வார்த்தைகள் வரும். எதிரே உட்கார்ந்திருப்பவர் மயங்கி உட்கார்ந்திருப்பர். பலமுறை நான் கண்ட காட்சி. எங்கிருந்து இந்த திறனைப் பெற்றார்!? அவர் புத்தகங்கள் படிப்பதை நான் பார்த்ததில்லை.

எனக்கு அதுபற்றித் தெரியாது. பிள்ளைப்பருவக் கதைகள் இப்பொழுது எங்கும் காணலாம். அங்கும் அரசியல் வாடை அடிக்கின்றதே தவிர, இந்த தத்துவங்கள் பேச எங்கு கற்றார்? அவர் ஓர் சுயம்பு. ஒருவேளை பூர்வ ஜென்மம் என்று சொல்வார்களே அப்படி தொடர்ச் சங்கிலியாய் வந்ததுவோ!?

மேடைப் பேச்சில் எதையாவது சொல்லிவிடுவார். அவைகள் பிரச்சனையாகிவிடும். நான் சொல்வது மேடைப் பேச்சையல்ல. அவர் தங்குமிடத்தில் நாம் உட்கார்ந்து பேச வேண்டும். வான் மழைக்குக் காத்திருப்பது போல் காத்திருக்க வேண்டும். அந்த சொல்மாரியைத் தான் புகழ்ந்துரைக்கின்றேன்

ஜெயகாந்தனின் வீடு கே.கே. நகரில் இருக்கின்றது. முன்பு இவருக்கு இன்னொரு இடம் உண்டு. ஆழவார்பேட்டையில் பிள்ளையார் கோயிலுக்கு மேல் ஓர் மாடி இவருடைய இடம். காலையில் கடமைகளை முடித்துவிட்டு இங்கு வந்து விடுவார். இரவில்தான் போவார்.

ஒரு சின்ன அறை. முன்னதாக ஒரு சின்ன ஹால். அவ்வளவுதான். அந்த ஹாலில் ஒரு பக்கம் பாதியளவில் ஒரு சுவர். சின்ன அறையில் ஒரு கட்டில் அதில் ஒரு விரிப்பும் ஒரு தலையணையும் இருக்கும். ஒட்டி ஒரு நாற்காலியும் இருக்கும். இன்னொரு நாற்காலி அந்த குட்டைச் சுவர் அருகில் இருக்கும். அதிலேதான் இவர் உட்கார்ந்திருப்பார்.

சுவரை யொட்டிக் கிழே பார்த்தால் ஒரு சின்ன சந்து. இருபக்கமும் வீடுகள். ஏழைகள் வாழும் தெரு அது. எப்பொழுதும் சத்தம் இருக்கும். நம் நாயகனுக்கு அதைப் பார்க்கப் பிடிக்கும். இடுப்பில் ஒரு கைலி, மேலே சட்டை கிடையாது. ஒரு சின்னத் துண்டு. மீசையை முறுக்கிக் கொண்டு அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்

எத்தனை வருடங்களாக அந்தத் தெருவையே பார்த்துக் கொண்டு வாழ்ந்தார். அந்த சின்னஞ்சிறு உலகில் கண்ட, உணர்ந்த வாழ்வின் ஆதார ஸ்ருதி, அவர் எழுத்துக்களில் இசைத்தது.அவருக்கு அலுப்பே வரவில்லை. பார்வையிலோ ஒரு சின்ன தெருவும் , வீதியில் தெரியும் காட்சிகளும். ஆனால் மனம் சுற்றிவந்ததோ இப்பரந்த உலகை.

அவர் குடிலைப் பார்ப்போம் அவர் குட்டைச் சுவர் அருகில் உட்கார்ந்து கொண்டு தன் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார் ஹாலில் சிலர் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப் பார்கள். ஒரு சின்ன இடத்தில் இரு சின்ன உலகங்கள்.

ஒரு நாள் அவர்களிடம் கேட்டேன்

“ஏன் இப்படி இங்கு வந்து உட்கார்ந்திருக்கின்றீர்கள்?"

“அம்மா, அவர் திடீரென்று பேச ஆரம்பிப்பார். அவர் பேச்சைக் கேட்கத்தான் காத்திருக்கின்றோம்"

அவர்கள் பைத்தியக்காரர்களா? ஆமாம்! அறிவுப்பைத்தியம்.

ஜெயகாந்தனிடம் வெட்டி அரட்டையை எதிர்பார்க்க முடியுமா?

இப்பொழுது அப்படிப்பட்ட காட்சிகள் கிடையாது. அவர் வீட்டின் மாடியில் கூரை வேய்ந்த இடம் இருக்கின்றது. அங்கே சந்திப்புகள் நடக்கின்றன. கலந்துரையாடல்களும் இங்கேதான். ஆனால் அந்தக் காலத்து அதிரடி கச்சேரிகள் இப்பொழுது கிடையாது. அந்தக் காலத்தில் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அந்தக் குடிலுக்கு வருவார்கள்.

நான் இரு இடங்களுக்கும் சென்றிருக்கின்றேன். நாங்கள் மனம்விட்டுப் பேசுவோம். ஆன்மீகம் முதல் அரசியல் வரை பேசுவோம். சமுதாயத்துடன் உறவாடுபவள் நான் எனக்கு உளவியல் பிடிக்கும். அவர் பார்வையும் சமுதாயத்தில்தானே இருக்கின்றது. பல விஷயங்களில் இருவருக்கும் ஒத்த உணர்வுகள் இருந்ததால் நல்ல நண்பர்களாக இருக்க முடிந்தது. மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் புரிந்து கொண்டு அவர்களை அப்படியே எற்றுக் கொண்டால் நட்பில் விரிசல் வராது.

ஜெயகாந்தன் பார்க்கும் ஒவ்வொன்றும் அவர் கதையில் வந்துவிடும்.

ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கேயே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு பெண் தலையில் செங்கல்லைச் சுமந்து போய் கொடுத்துக் கொண்டிருந்தாள். போகின்ற பாதையில் ஒரு கையால் செங்கல் கூடையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் இடுப்பில் இருக்கும் வெற்றிலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு போகின்ற பாதையில் சுவற்றில் அவள் ஏற்கனவே ஒட்டியிருந்த சுண்ணாம்பை எடுத்து நாக்கில் தடவிக் கொண்டு சென்றாள். இந்தக் காட்சியை அவர் எத்தனைமுறை பார்த்திருப்பார்.! “சினிமாவுக்குப் போன சித்தாளு“ என்ற கதையில் இக்காட்சி வரும். இலக்கியவாதிக்கு மண்ணும் உயிருள்ளதே!

அவருடைய கதை “புதுச்செருப்பு கடிக்கும்“ எனக்கு மிகவும் பிடிக்கும்

அதில் வரும் உரையாடல்களில் அவருடைய வார்த்தைப் பிரயோகங்களைப் பார்க்க வேண்டும்!

சொல்லால் சவுக்கடி கொடுக்க முடியுமா? ஜெயகாந்தனால் முடியும்!

(தொடரும்)

நன்றி - திண்ணை

1 comment:

virutcham said...

ஒரு பதிவு கூட விடாமல் மொத்தமும் கிட்டத்தட்ட ஒரே மூச்சில் வேலை எல்லாம் விட்டு விட்டு படித்தேன். பிரமிப்பாக இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. நீங்க உங்களை முரட்டுப் பெண் என்று திரும்ப திரும்ப சொல்ல வேண்டாம். படிக்க சங்கடமாக இருக்கு. முரட்டுப் பெண் அடங்காப்பிடாரி அப்படீங்கற இந்த காலத்து பிம்பம் வேறே. உங்களோடது வேறே. உங்களோடது ஆக்க சக்தி.

http://www.virutcham.com