Friday, July 16, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 14

இதயம் பேசுகிறதுமணியன்- என் அரிய நண்பர்! அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளையிட்டுவிட்டார். என்னால் அதைத் தவிர்க்க முடியாது.

கரும்பு தின்னக் கூலியா?’ என்ற பழமொழிக்கேற்ப இருந்தது அந்த கட்டளை. ஆம், எங்கள் நண்பர் ஜெயகாந்தன் மதுரைக்கு வருகின்றார்; அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும்; அவர் போகும் இடங்களுக்கெல்லாம் நானும் உடன் செல்ல வேண்டும்; அவர் சென்னைக்கு ரயில் ஏறும் வரை அவர் வசதிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்;

மணியன் எப்பொழுது மதுரைக்கு வந்தாலும் டி.வி.எஸ் விருந்தினர் இல்லத்தில்தான் தங்குவார். அப்பொழுது டி.வி. எஸ் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தவர் திரு.தேசிகர்; சாமர்த்தியசாலி! நான் அப்பொழுது மதுரையில் உலக வங்கித் திட்டத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தேன். தேசிகர் எனக்கும் நன்றாகத் தெரிந்தவர்.

இது நடந்த வருடம் 1981!

ஜெயகாந்தனுக்கு அதே விருந்தினர் இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்திருந்தோம். அந்த நிறுவத்தினரே காரும் கொடுத்திருந்தார்கள்.

ஜெயகாந்தனுடன் சில நாட்கள்.

இந்த சிங்கத்தை எப்படி சமாளிக்கப் போகின்றேன் என்று மணியனிடம் கேட்ட பொழுது, "ரொம்ப அலட்டிக்காதே. அந்த சிங்கத்தைச் சமாளிக்கும் சாமர்த்தியம் உனக்குண்டுன்னு தெரியும்” என்று கூறி என்னை அடக்கிவிட்டார்.

ஜெயகாந்தனை வரவேற்க ரயிலடிக்குச் சென்றிருந்தேன். அவருடன் இன்னொருவரும் வந்தார். பெயர் மறந்துவிட்டேன்; மணி என்று வைத்துக் கொள்வோம்-அடையாளத்திற்கு ஒரு பெயர். ஜெயகாந்தனின் தேவைகளைக் கவனிக்க ஒருவர் உடன் கூட்டிவந்தது கண்டு நான் புன்னகைத்தேன். அவரும் என் பார்வை போன திக்கையும் பார்த்து என் எண்ணங்களின் ஓட்டத்தையும் புரிந்து கொண்டு ஒரு சிரிப்பைக் காட்டினார். இருவரும் சிரிப்புகளால் எண்ணங்களைப் பறிமாறிக் கொண்டோம்.

விருந்தினர் இல்லத்தில் அவரை விட்டு விட்டு மதிய உணவு நேரம் வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். எனக்குக் காலையில் கொஞ்சம் வேலைகள் இருந்ததால் உடன் இருக்க முடியவில்லை.

என் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பிய பொழுது அதற்குள் சிலர் அங்கு கூடி அவருடன் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டேன். ஜெயகாந்தன் வருகையைச் சிலருக்கு தேசிகன் கூறியதன் விளைவு. பெயரில் காந்தம்; அவருடன் கலந்துரையாட எத்தனை ஆர்வம்! இக்காட்சியை அவர் எங்கு சென்றாலும் கண்டிருக்கின்றேன்.

நாங்கள் கிளம்பியாக வேண்டும்.

ஒரு கிராமத்துப் பிரச்சனை

அந்தப்பிரச்சனை காட்டுத்தீயைப்போல் பரவிவிடும் போல் இருந்தது. பத்திரிக்கைகாரர்கள் பிரச்சனைக்குப் பல வர்ணங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர். மணியனுக்கும் ஆர்வம். அதன் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினார். அதற்கு ஜெயகாந்தனே பொருத்தமானவர் என்று நினைத்து அனுப்பியிருந்தார். அவர்கள் இருவரும் நண்பர்கள். எனவே அவரும் மறுப்பு கூறாமல் புறப்பட்டுவிட்டார்.

மதிய உணவு சாப்பிட்டுப் புறப்பட பிற்பகல் மூன்று மணியாகிவிட்டது.

கார் ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் அவரவர் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரமல்ல. சில மணி நேரம் அப்படி அமர்ந்திருந்தோம். இருவரும் சுயநிலைக்கு வந்த பின்னரும் அவர் என்னுடைய புதிய பணிகளைப்பற்றித்தான் விசாரித்தார்.

சில குறிப்பிட்ட பிரச்சனைகளைப்பற்றி பேசினோம்.

நாங்கள் போக வேண்டிய முதல் இடம் வந்தது. அங்கே சந்திக்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு நேராகக் குற்றாலம் சென்றோம். அங்கே தான் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன்.

இரவு 8.30 மணி.

இறங்கியவுடன் ஜெயகாந்தன் ஒரு கோரிக்கை வைத்தார். முன்னதாக இது பயணத்தில் சேர்க்கப்படவில்லை. திடீரென்று கேட்கவும் அப்படியே அதிர்ந்து போனேன்.

சீதாலட்சுமி, காலையில் நான் ஒரு கசாப்பு கடைக்குப் போக வேண்டும். ஆடு வெட்டும் முன் போக வேண்டும். சாயபுவிடம் முன்னதாகப் பேச வேண்டும். ஆடு வெட்டும் பொழுதும் இருக்க வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள்."

அவர் இதனைக் கேட்ட நேரத்தைப் பாருங்கள். இதற்கு மேல் நான் தேடிப்போய் ஏற்பாடு செய்ய வேண்டும்,. மதுரையிலேயே சொல்லித் தொலைத்திருக்கக் கூடாதா? அவரை எப்படி திட்டுவது? மணியனைத் திட்ட நினைத்தாலும் அவரும் சென்னையில் இருக்கின்றார். மறுக்கவும் மனமில்லை. பெண்ணால் முடியவில்லை என்று நினைத்துவிட்டால் என் தகுதி என்னவாகிறது? வீராப்பு பேசும் பொம்புள்ளையாச்சே!

அவரை மணியுடன் அவர் அறைக்கு அனுப்பிவிட்டு நான் கசாப்புகடை பற்றி விசாரிக்கச் சென்றேன். கண்டு பிடிக்காமல் இருப்பேனா? தமிழ் நாடே என்னுடையது போல் ஒரு திமிர். எப்படியோ எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தங்கும் இடம் வந்தேன்.

அவர் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கதவைத் தட்டவும் மணி திறந்தான். நான் உட்காரவில்லை.செய்த ஏற்பாடுகளைக் கூறிவிட்டு, “கார் டிரைவருக்கும் சொல்லிவிட்டேன். மணியைக் கூட்டிக் கொண்டு போய்விட்டு வாருங்கள் “ என்றேன்

நீங்கள் வரவில்லையா?

அவரை முறைத்துப் பார்த்தேன். அவர் சிரித்துக் கொண்டே,” சரி சரி, நான் போய்விட்டு வருகின்றேன் “ என்று சொன்னார்.

நான் என் அறைக்குச் சென்றேன். வெளியில் அன்று நல்ல மழை. அருவி சத்தம் வேறு. ஏனோ இயற்கையே பேயாட்டம் போடுவது போன்று ஓர் உணர்வு. என் உணர்விற்கேற்ற பின்னணி இசை!

மேஏஏஏஏ!

அய்யோ, ஆடு அழுவது போன்று ஓர் எண்ணம். யாருக்காவது காயம் பட்டால் கூட அந்த இரத்தத்தைப் பார்க்க மாட்டேன். இப்பொழுது ஓர் ஆட்டை யாரோ வெட்ட வருவது போலவும் , அந்த ஆடு அழுவது போலவும் காட்சிகள் வந்து என் நிம்மதியைக் கெடுத்துவிட்டது. இப்படி ஒரு கோரிக்கை வைப்பார் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஏதோ கிராமத்திற்குச் செல்லப்போகின்றோம் என்று நினைத்து வந்தவளுக்கு இப்படி ஒரு இம்சையா?

இரவு நகர்ந்து பொழுதும் விடிந்தது. நான் தூங்கவே இல்லை சீக்கிரம் குளித்துவிட்டு மழையையும் மலையையும் பார்த்துக் கொண்டிருந்தேன். கற்பனை வரவில்லை

ஜெயகாந்தனின் கதைகளை நினைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. அவர் கதையொன்றின் காட்சி மனத்திரையில் ஓட ஆரம்பித்தது.

ஆண் குருவி பேனில் அடிபட்டு செத்து விழ, அதைப் பார்த்த பெண் குருவி பதைபதைத்ததை எழுதியிருந்தது நினைவிற்கு வந்தது. ஜெயகாந்தன் காட்டும் காட்சி

அந்தப் பெண் குருவி தவிச்ச தவிப்பு இருக்கே ..

கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். கடைகெட்ட அரக்கனுக்குமில்லாத சித்திரவதையை ரசிக்கிற குரூர மனசு படச்சவன்னு இல்லேன்னா, சாவுன்னு ஒண்ணு இருக்கும் பொழுது பாசம்னும் ஒண்ணை உண்டாக்குவானா?"

இப்படி எழுதின ஜெயகாந்தன் ஏன் கொலைக்களத்துக்குப் போயிருக்கின்றார்? நானும் பல முறை கடவுளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி கேள்விகள் கேட்பேன்.

ஜெயகாந்தன் ஏற்கனவே எழுதிய ’அக்கிரஹாரத்துப் பூனை,’ கதையும் நினைவிற்கு வந்தது.

அக்கிரஹாரத்தில் ஒரு பூனை நிறைய சேட்டைகள் செய்து வந்தது. ஒருவனுக்கு அதன் கொட்டத்தை அடக்க வேண்டுமென்ற ஆத்திரம்;கொன்றுவிடவும் நினைத்தான். ஆனால் கொல்ல முடியவில்லை. எனவே ஓர் கோணிக்குள் அடைத்துக் கொண்டு செல்லும் பொழுது ஓர் சாயபுவைப் பார்க்கின்றான்.

பூனை ரொம்பவும் லூட்டி அடிக்கறது.அதுக்காக அதைக் கொன்னுடறதுக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன். நீங்கதான் ஆடெல்லாம் வெட்டுவேளே.அதனாலே நீங்களே இதை வெட்டணும்

பூனையை இதுவரை நான் வெட்டினதில்லே.ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே.நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா ?

உவ்வே ! வெட்டிக் குழியிலே புதச்சுடலாம்

"நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன் ? எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடல்லேன்னா நான் வெட்டவும் மாட்டேன்.நான் ஆடு வெட்டறப்ப நீ பார்த்திரூக்கிறீயா?

"ஓ, பார்த்திருக்கேனே ! ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க..அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே

"மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம்பிக்கறப்போ ஆண்டவனைத் தொளுவறது இல்லையா? அதுதான். வெட்றது விளையாட்டில்லே. தம்பி. அதுதான் என் குடும்பத்துக்குக் கஞ்சி ஊத்தற தொளில்.அதுக்காவ உங்கிட்டே காசு ,கீசு கேக்கல்லே.நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி.எதையும் வீணாக்கக் கூடாது.வீணாக்கினா அது கொலை. அது பாவம். என்னா சொல்றே?

"இன்னிக்குமட்டும் விளையாட்டுக்காக இந்த பூனையை வெட்டுங்களேன்

வெளையாட்டுக்குக் கொலை செய்யச் சொல்றியா? த்சு...த்சு ! வெளையாட்டுக்குக் கொலை செய்ய ஆரம்பிச்சா, கத்தி பூனையோடு நிக்காது.தம்பி, நான் உன்னைக் கேட்கறேன், வெளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன ?

எப்பேர்ப்பட்ட தத்துவம்!

எவ்வளவு எளிதாகக் காட்டிவிட்டார்!

புதிதாக இனி என்ன பார்க்கப் போகின்றார்?

இந்தக் கதை எழுதிய வருடம் 1968!

மணி வந்து கூப்பிட்டான். ஜெயகாந்தன் ஏதோ யோக நிஷ்டையில் இருப்பது போன்று கண்மூடி அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்கவும் என் கோபம் பறந்துவிட்டது. அதுமட்டுமல்ல; அவர் முன்னால் பவ்யமாக உட்கார்ந்துவிட்டேன். அவராகப் பேசும்வரை காத்திருக்க வேண்டும் என்று என் மனக்குரல் அறிவித்தது.

அவர் கண்விழித்தாலும் அவர் மனம் எங்கோ சஞ்சரிப்பதை உணர முடிந்தது. குற்றாலத்தில் இன்னொரு பேரருவியைப் பார்க்கப் போகின்றேன் என்று என் உள்ளுணர்வு உணர்த்தியது.

அருவி கொட்ட ஆரம்பித்தது!

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் எனக்குக் கிடைத்த விருந்து. அன்று பதிவு செய்ய என்னிடம் சாதனங்கள் இல்லை. நினைவிலே இருப்பதின் சுருக்கம் மட்டுமே தர முடிகின்றது.

சாயபுவுடன் மனம் விட்டுப் பேசி இருக்கின்றார். முதலிலேயே சொல்லி வைத்திருந்ததால் உரையாடல் திருப்திகரமாக நடந்திருக்கின்றது.

அவர் கண்ட காட்சியும் அவர் உணர்வுகளும்!

"சீதாலட்சுமி, ஆடு வரும் பொழுது கண்களைப் பார்த்தேன். அதன் அசைவுகளைப் பார்த்தேன். அதற்கு தான் சாகப் போகின்றோம் என்று தெரிந்திருக்கின்றது. ஆனால் பயமில்லாமல் மெதுவாக வந்து நின்றது. “உனக்கு என் உயிர் தானே வேண்டும் எடுத்துக் கொள்” என்று சொல்வதைப் போல் நின்றது. அதற்கு ஐந்தறிவு என்கின்றார்கள். ஆனால் அதன் உள்ளுணர்வு மனிதனைப்போல் இருக்கின்றது. மனிதன் கூட மரணம் வரும் பொழுது பயப்படுவான். ஆனால் மிருகம் தயாராகிவிட்டது."

"பற்றற்ற துறவியாய், ஞானியாய் கண்டேன். உயிர் எடுக்கப்போகும் மனிதனிடம் கொலை வெறி இல்லை. சாத்வீக நிலை. கடமைவீரனாகத் தெரிந்தான். தன் தொழிலைத் தொடங்கும் முன் இறைவனை வேண்டிய பொழுது அவனும் ஞானியாகவே தோன்றினான்."

அது கொலை பூமியல்ல. ஞான பூமி.

உயிர் கொடுப்பவன் யார் ?

உயிர் எடுப்பவன் யார் ?

உயிர் எங்கே போகின்றது?

விலகும் உயிரைப் பிடித்து நிறுத்த முடியுமா?

உயிர் என்று வந்து விட்டால் அது மிருக உயிர், மனிதர் உயிர் என்று பேதம் உண்டா?

தெளிவு பிறந்துவிட்டால் உயிர் உடலில் இருந்தாலும் அது வெளியில் பறந்தாலும் ஒன்றே என்ற நிலை வந்துவிடுகின்றது.

அது ஆடானாலும் புரிந்து கொண்டு அமைதி காத்தது .

ஆட்டின் கண்கள் பேசின சீதாலட்சுமி. புல்லரித்துப் போனேன். வெட்டுண்ட தலை கீழே விழுந்த பொழுதும் அதன் விரிந்த கண்கள் வாழ்வின் அர்த்தத்தைக் கூறின”.

தன் கடமையை முடித்தவன் முகத்திலும் சாந்தம்.

அந்த சூழல், அந்த நிகழ்வு அதிசயத்தைக் காட்டியதேயொழிய அச்சத்தைக் கொடுக்கவில்லை

ஜெயகாந்தன் பேசிக் கொண்டே இருந்தார். ஏதோ ஞானோபதேசம் கேட்பதைப் போன்று அடக்கமாக இருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அன்றைய பேச்சு போல் என்றும் அவரிடம் நான் கேட்டதில்லை. சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கிவிடுவார். திடீரென்று பேசுவார். பிறப்பு, இறப்பு, இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை என்று நிறைய பேசினார். அலைபாயும் மனித உணர்வுகள்பற்றிக் கூறினார்.

வாயாடிப் பெண் நான். ஆனால் வாய்மூடி உட்கார்ந்திருந்தேன். அன்று அரங்கம் எடுத்துக் கொண்டது ஐந்து மணி நேரம். அவர் மட்டுமே பேசினார்

அது ஒரு சுகானுபவம் . அதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்கத் திறனில்லாப் பெண்மணி. அற்புதங்கள் எப்பொழுதாவதுதான் நடக்கும்.

இன்றும் என் மதிப்பில் உயர்ந்தவர் ஜெயகாந்தன்

அவருடைய பன்முகங்களைக் கண்டிருக்கின்றேன்.

(தொடரும்)

நன்றி-திண்ணை

No comments: