"நகரேஷு காஞ்சி" - சொன்னவன் ஓர் வடமொழிப்புலவன். கல்விச்சாலையாக, கலைக்கோயிலாக,பல்சமயத்தலமாக, அத்துடன் அரசியலிலும் பெருமைபெற்று தொன்றுதொட்டு விளங்கும் நகர் காஞ்சி.
அந்தக் காஞ்சியில் நான்கு வருட வாழ்க்கை. என் சில தேடல்களுக்கு விடைகள் கிடைத்த இடம்; சில ஆசைகள் நிறைவேறிய இடம்; வாழ்க்கைப் பயணத்தில் ஏற்றம் கண்ட இடம்; இன்றும் என் நினைவில் வாழும் இடம்
காஞ்சியில் வாழ்ந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஓர் கலைஞன். எழுத்தாளன். அவன் எழுதிய நகைச் சுவை நாடகம் போற்றி புகழப்பட்டது. கல்லை கலைவண்ணங்களாக்கி, புதுமை படைத்தவன். எதிரியையும் மயக்கிப் பரிவை ஏற்படுத்தி , பரிசளிக்க வைத்த கைலாசநாதர் கோயிலை கட்டுவித்த இராசசிம்மன் வரலாற்றில் புகழ் படைத்தவன். தமிழுக்கு ஓர் தண்டி மட்டுமல்ல, கலம்பகம் கேட்கத் தன்னுயிரைத் தந்த நந்திவர்மன கதையும் வரலாற்றில் பேசப் படுகின்றன. காஞ்சியில் இன்றும் வரலாற்று நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்திய நாட்டு சுதந்திரத்திற்காகப் போராடி வெற்றி கண்ட காங்கிரஸ் ஆட்சியை மாற்றி, அரியணையில் முதலில் ஏறிய அறிஞர் அண்ணா தோன்றியதும் காஞ்சியில்தான்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கமும் காஞ்சி மண்ணில்தான். அறிஞர் அண்ணாவின் ஊரில்தான் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று விரும்பிய மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் காஞ்சியில் பஜார் தெருவில் தேர்முட்டிக்கருகில் அறிவிப்பு செய்தார்.
காஞ்சிப்பட்டின் அழகுபற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அப்பேர்ப்பட்ட காஞ்சியில் பல ஆண்டுகள் வாழ நேர்ந்தது எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு!
பிள்ளைப் பருவ முதல் இன்று வரை மாறாது இருக்கும் ஓர் குணம் - “தேடல்”. படிப்பது, அறிஞர்களைச் சந்தித்து கேள்விகள் கேட்பது, இடங்களைப் பார்ப்பது, விஷயம் தெரிந்தவர்களிடம் விவாதிப்பது, இவைகள் என் தேடலுக்காக நான் கடைப்பிடித்த முயற்சிகள்.
ஒரு கேள்வி! கடவுள் உண்டா இல்லையா?
ஷஷ்டி விரதம் இருந்து சங்குப்பால் குடித்து விரதமிருந்து என்னைப் பெற்றார்களாம் என்னைப் பெற்றவர்கள். எனவே குழந்தை மனத்தில் முருகனை விதைத்து ஆலயம் கட்டியது என் அம்மா. இன்று வரை அந்த ஆலயத்தில் முருகன் அழகாக வீற்றிருந்து புன்னகைக்கின்றார் .
பின் என்ன பிரச்சனை? எனக்குள் நிறைய சந்தேகங்கள்! புராணங்கள் உண்மையா?
பிள்ளைப் பருவத்தில் படிக்க ஆரம்பித்தவுடன் நான் படித்தவைகளில் தந்தை பெரியாரின் உரைகளும், சின்னப் புத்தக வடிவில் அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகளும் அடங்கும். எங்கள் காலத்தில் அண்ணாவின் அழகுத் தமிழில் ஓர் மயக்கம். கடவுளைப்பற்றியும், ,புராணங்களைப் பற்றியும் அவர் செய்த விமர்சனங்கள் இளம் உள்ளாங் களை ஈர்த்தன. முருகனை நெஞ்சிலே ஏந்திக் கொண்டு நானும் அந்த விமர்சனங்களைப் பேசிக் கொண்டிருந்தேன்
நான் படிக்கச் சென்ற கல்லூரி கன்னியாஸ்திரீகளால் நடத்தப்பட்ட ஒன்று.
அவர்களின் அன்புக்குரலிலும் மெய்மறந்தேன்.ஏற்கனவே சுவாமி சிவானந்த மகரிஷியுடன் கடிதத் தொடர்பு இருந்துவந்தது. அவர் அனுப்பி வைத்த புத்தகங்கள் அனைத்தும் படித்தேன். ரிஷிகேஷம் போய் துறவறம் பூண வேண்டுமென்ற ஆசையும் வளர்ந்தது.
கடந்த கால நினைவுகளில் புரளும் பொழுது ஒரு கதையின் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை. ஜெயகாந்தன் எழுதிய கதை “துறவு “.
இளவயது அதிலும் குறிப்பாக “டீன் ஏஜ் “ என்று சொல்ல கூடிய இரண்டுங்கெட்டான் காலத்து உணர்வுகளை அப்படியே படம் பிடித்துக்கட்டுகின்றது. நாமும் காட்சிகளுடன் நகரலாம். ஜெயகாந்தன் வரிகளில் காண்பதுதான் சரியாக இருக்கும்.
சோமுவுக்கு வயது பதினைந்துதான் .அதுதான் மனிதனுக்குப் பித்துப் பிடிக்கும் பருவம். சோமுக்குவுக்கு அங்க வளர்ச்சிகளும் , ஆண்மை முத்திரைகளும் ஏற்படும் பருவம் அது. உடலிலும் மனசிலும் சதா ஒரு துடிப்பும் வேகமும் பிறந்தது.மனம் சமபந்தமில்லாத ஸ்தாயிகளிலெல்லாம் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது.உலகையும் வாழ்வையும் அறிய உள்ளம் பரபரத்தது. ஏதோ ஒரு இடத்தைத் தொட்டவுடனே எல்லா இடத்தையும் தொட்டுவிட்டதாக எண்ணி இறுமாந்தது.
சோமுவும் எதை எதையோ நினைக்க ஆரம்பித்தான் உற்றார், உறவினர், வாழ்வு அனைத்திலும் வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது. தனிமையை நாடினான். வீடே வெறுத்தது. சோமுவுக்கு வந்தது வேதாந்தப் பித்து. சுவாமி அருளானந்தரின் சொற்பொழிவைத் தொடர்ந்து கேட்டதில் சோமுவுக்கு ஞானம் பொழிய ஆரம்பித்தது.
“ஆமாம்,தாய், தந்தை,உடன்பிறந்தார்,சுற்றம்,செல்வம்,உலகம் எல்லாம் பொய்தானே? சாவு வரும். அதுமட்டும் தான் உண்மை.அந்தப்பெரிய உண்மைக்கு நேரில் இவையெல்லாம் அற்பப் பொய். படிப்பு ஏன்? சம்பாதனை ஏன்? முடிவில் ஒரு நாள் செத்துப் போவேனே .. அப்பொழுது இவற்றில் ஏதாவது ஒன்று, யாரவது ஒருவர் என்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியுமா, என்ன எல்லாம் வெறும் பொய். மரணத்தை மனிதன் வெல்ல முடியாது. ஆனால், ஆசைகளைத் துறப்பதன் மூலம் மனிதன் கடவுளை அடையலாம். “
கடவுளைக் காண கைலாயம் புறப்பட்டுவிட்டான். வீட்டில் சொல்லவில்லை. அழகு சுருட்டை முடியைத் துறந்தான். நடந்தான் நடந்தான்.நடந்தான். கால்கள் வலித்தன. பசியை அடக்க முடியவில்லை. போகும் பாதையில் காணும் நாவல் கனியைக் கூட ஆசையுடன் பார்க்க ஆரம்பித்தான். உடம்பு தளர தளர அவன் வைராக்கியமும் தளர ஆரம்பித்தது. அவன் நிலையைக் கண்ட ஓர் முதியவர் அவனிடம் பரிவுடன் நெருங்கினார். கனிவுடன் பேசி அவன் நிலையைப் புரிந்து கொண்டார். சுமைகளை உதறிவிட்டு வந்த சோமுவுக்கு சோறில்லாமல் வெற்றுடல் சுமையாக் கனக்கிறது. அவரிடம் அழுது கொண்டே பேசினான்.பக்தி வெறியும் வேதாந்தப் பித்தும் பிடிதளர்ந்தன. வீடு திரும்பவேண்டும் என்று சொன்னான்.
“பந்தங்கள் இருந்தால்தான், பாசம் கொழித்தால்தான் பக்தியும் நிலைக்கும்” என்ற உண்மையை உணர்ந்தான். வீடு நோக்கித் திரும்பினான்.
சாதாரண கதையாகத் தெரியலாம். ஆனால் எப்பேர்ப்பட்ட தத்துவத்தை ஓர் சின்னப் பிள்ளையின் மூலமாகக் காட்டுகின்றார் ஆசிரியர்.
ஒரு சின்னப் பெண்ணின் வாழ்க்கையில் இருபது வயதுக்குள் எத்தனை எத்தனை சிந்தனைக் குவியல்கள் , குழப்பங்கள். நான் அனுபவபூர்வமாக அனுபவித்தவை. நல்ல வேளையாக நான் படிப்பைவிட்டு ஓடவில்லை. நினைப்புடன் நின்றுவிட்டேன்.
இக்காலமாக இருந்திருந்தால் துறவறத்திற்குப் பதிலாக வெள்ளித் திரையில் அல்லது சின்னத் திரையில் நடிக்கும் ஆசையில் ஓடிப் போயிருக்கலாம். இன்று நடப்பதைத்தான் கூறுகின்றேன்.
காலம் என்னை சமுதாய வீதிக்குக் கொண்டு சென்றது. அதற்குப் பிறகு இது போன்ற சிந்தனைகள் எதுவும் இல்லை. எப்பொழுதும் முருகன் மட்டும் என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் காஞ்சிக்கு வந்த பின்னர் என்னுடைய தேடல் என்னைத் தேடி வந்து ஒட்டிக் கொண்டது.
அன்று பிரிக்கப்படாத செங்கை மாவட்டத்தின் தலை நகர் காஞ்சி. நான் மாவட்ட சமூக நல அலுவலராக இருந்தத்தால் மாவட்டம் முழுவதும் பயணம் செல்ல வேண்டும். பல இடங்கள் சென்னை சென்று அங்கிருந்து போவதும் உண்டு.
தமிழ்ப் பித்து காரணமாக இரண்டாண்டுகள் விடுப்பு எடுத்து ராணி மேரி கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றேன். அக்காலத்தில்தான் பல இலக்கிய மேதைகள், எழுத்தாளர்கள்,பத்திரிகை நிருபர்களின் நட்பு கிடைத்தது. அவர்களில் ஜெயகாந்தனும் ஒருவர்
மயிலாப்பூர் கற்பகாம்பிகா கோயிலில் உதவி ஆணையாளராக திரு. நாகராஜன் பணியாற்றி வந்தார். என் நண்பர்கள் வட்டத்தில் அவரும் ஒருவர். நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்களிலும் சொற்பொழிவுகள் உண்டு. என்னையும் ஒருநாள் பேச்சாளாராகக் குறித்து அழைப்பு விடுத்தார்.
தலைப்பு “காஞ்சி காமாட்சி - காசி விசாலாட்சி “
இப்பொழுது நான் புராணங்கள் பற்றிப் பேச வேண்டும். ஸ்தல புராணங்கள் படித்தேன். பல கேள்விகள் என்னை முட்டித் தள்ளின. சங்கர மடத்தை சேர்ந்த ஒருவரை அணுகி என் சந்தேகங்களைக் கேட்டேன். என்னை முறைத்துப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்.
கேள்விகளில் இருவகை உண்டு. ஒன்று அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் பிறக்கும் கேள்விகள். இன்னொன்று கேலியாக் கேட்பது.
என் தேடல் முயற்சியில் ஒர் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டேன். உபநிஷதமடம் என்று சொன்னார்கள். அது ஒரு அழகான நந்தவனம். அங்கே வயதான ஒரு பெரியவர் இருந்தார். அவரிடம் போய் என் சந்தேகங்களைக் கேட்கச் சொன்னது ராஜம்மாள் என்ற ஒரு பெண்மணி. அவர் ஆன்மீகப்பற்று கொண்டவர்.
அந்தப் பெரியவரிடம் என் தவிப்பைக் கூறீனேன். அவரோ முகம் சுளிக்காமல் பொறுமையாகக் கேட்டு என் எல்லாக் கேள்விகளும் பதில் கொடுத்தார். பல ஆண்டுகளாக எனக்குள் இருந்த பல குழப்பங்கள் நீங்கின. பின்னர் நம்பிக்கையுடன் கோயிலுக்குப் பேசச் சென்றேன். எல்லோரும் பேச்சு நன்றாக இருந்தது என்றார்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு என் அணுகுமுறை பிடித்திருந்தது. கூட்டம் முடிந்தவுடன் என்னிடம் வந்து பேசினார்கள். அடுத்த வருடமும் பேசப் போனேன். மூன்றாவது முறை கூப்பிட்ட பொழுது நயமாக மறுத்துவிட்டேன். காரணம் என் குறை எனக்குப் புரிந்து இருந்ததால் ஒதுங்கிக் கொண்டேன்.
என் சொற்பொழிவு அர்த்தமுள்ளதாக இருக்கலாம். ஆனால் உருக்கமில்லை. ஆன்மீகச் சொற்பொழிவுகளில் உருக்கமும் இருக்க வேண்டும். எல்லோர் மதிப்பையும் பெற்ற உயர்திரு வாரியார் அவர்களின் பேச்சைக் கேட்டு மெய்மறப்பவள். அவர் ஒரு கடல். ஆன்மீக மேடைக்கு நான் பொருந்தாதவள் என்று என்னை உணரவைத்தவை வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுகள்தான்.
ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுயதரிசனம் செய்து கொள்ள வேண்டும். இயலாமை என்பது பெரிய குற்றமல்ல. நமக்குத் தெரியாததைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் போலிதனம் தான் குற்றமானது.
“சுயதரிசனம்” என்று ஓர் கதை எழுதியுள்ளார் நம் ஜெயகாந்தன். அதில் வரும் கணபதி சாஸ்திரிகளீன் பாத்திரப்படைப்பு தனித்தன்மை வாய்ந்தது.
“எதையுமே சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும். என் அனுபவத்திலே செய்யறது கூட சுலபம். ஆனா சொல்றதுதான் கஷ்டமா இருக்கு”
கண்பதி சாஸ்திரிகளின் கடித்ததின் வாசகங்கள் இது. அவர் யார்? எதைச் சொல்ல கஷ்டப்பட்டார்? அவருக்கு மகன், மருமகள், பேரக்குழந்தைகள் எல்லோரும் உண்டு. ஆனால் அவரோ யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் ஊரைவிட்டுப் ஓடிப்போய்விட்டார். ஏன்? வேதம் கற்றவர். பெரிய சாஸ்திரிகளின் மகன். அவரின் ஓட்டம் உணர்ச்சியால் உந்தப்பட்டாலும் நடந்த அவமானத்தை விவேகத்துடன் எடுத்துக்கொண்டுவிட்டார். அப்படியென்ன நடந்துவிட்டது.?
கனபாடிகள் அன்று அவரை மிகவும் கேலிசெய்து திட்டிவிட்டார்.
“மந்திரத்திற்கு அர்த்தம் சொல்லத் தெரியாத நீ பிராமணனா?” என்று பலர் முன்னிலையில் கேட்டுவிட்டு மேலும் கடும் சொற்களை வீசிக் காயப்படுத்திவிட்டார்.
கணபதி சாஸ்திரிகளை அந்தக் கேள்விகள் அப்படியே ஆட்டிப் படைத்தன. அவருக்கு அர்த்தம் சொல்லத் தெரியவில்லை. பூணூலை எறிந்துவிட்டு “நான் பிராமணன் இல்லை.“ என்று சொல்லிக் கொண்டு அந்த ஊரையேவிட்டு ஓடிப்போய் விட்டார்.
முதல் சில நாட்கள் அவருடைய மகன் அவர் இல்லாததைப் பொருட்படுத்தவில்லை. மருமகளும் அசட்டையாக இருந்தாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர் இல்லாதது உறுத்த ஆரம்பித்தது. அந்த தருணத்தில்தான் அவரிடமிருந்து கடிதம் வந்தது. சாஸ்திரி என்ற சொல்லை விடுத்து வெறும் கணபதியாக எழுதியிருந்தார்.
அவரின் சுய தர்சனம்.
“மந்திரங்கள் தெய்வீகமான, புனிதமான,பவித்திரமான விஷயங்களைப் பத்திப் பேசறதுங்கற நம்பிக்கையிலே அதை நான் மனனம் பண்ணிட்டேன். “தாய்ப்பால்லே என்னென்ன வைட்டமின் இருக்குன்னு தெரிஞ்சுண்டா குடிக்கிறது ! அது அவசியம் இல்லையா? நோயாளிக்கு மருந்துதான் முக்கியமே ஒழிய ஒவ்வொரு மாத்திரையிலேயும் என்னென்ன ரசாயனம் கலந்து இருக்குங்கற ஞானம் அவசியமா என்ன? அது போல்தான் மந்திரம். உனக்கு அது தேவை .அதை ஜபிப்பதன் மூலம் அதற்குரிய பலன்கள் உன்னை வந்தடையும் “னு ஒரு பெரிய மேதை எழுதியிருந்தார். அதைப்படிச்சப்பறம்தான் எனக்கு ஆறுதல் பிறந்தது. ஆனால் அந்த ஞானியின் இந்த வாதமும் எனக்குத் தக்க சமயத்துலே கைகொடுக்கல்லே. அறுபது வருஷமா அர்த்தமில்லாம பேத்திண்டே வாழ்ந்திருக்கேன் ..நான் இப்ப சாஸ்திரி இல்லே.எனக்கு, என் மனச்சாட்சிக்குத் துரோகம் செஞ்சுக்காத ஒரு நேர்மையான மனுஷன் நான் .”
தன் பெயருடன் இணைந்த சாஸ்திரி பட்டத்தைத் துறந்து சாதாரண மனிதராக வாழத் தொடங்கிவிட்டார். தன் மாற்றங்களை, உலகப் போக்குகளை விரிவாக எழுதியிருந்தார். அவர் மகனும் மருமகளும் உருகிப்போய் நின்றனர்.
அவருக்குக் கற்றுக் கொடுத்தவர் கோபக்காரர்.பயந்து கொண்டே அவரிடம் எந்தக் கேள்விகளும் கேட்க மாட்டார். அவர் சொன்னதைக் கேட்டு கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டுவந்து விட்டார். இருந்தாலும் தன் குறை உணர்ந்த பொழுது பொருந்தாத சாஸ்திரிகள் பட்டத்தைத் துறந்தார்.. இப்பொழுது அவரிடம் எந்தக் குற்ற உணர்வும் இல்லை.
ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் ஏதாவது சின்னச் சின்ன சலனங்கள், சம்பவங்கள் இல்லாமல் இருக்காது. பெரிய பிரச்சனைகளில் உழலும் பொழுது இவைகளின் நிறம் மங்கிவிடும். அவ்வளவுதான்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இன்னொரு செயலை நான் கேலி பேசியிருக்கின்றேன். கிறிஸ்தவர்கள் பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்பதுபற்றித்தான்.
“பாவங்கள் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் போய்விடுமா? “ என்று கேட்பேன்.
ஆனால் காலம் செல்லச் செல்ல அனுபவங்களில் நான் பக்குவப்பட்ட பொழுது பாவமன்னிப்பின் பலனை உணர முடிந்தது. மனிதன் தன் குறைகளை, குற்றங்களை எண்ணிப்பார்க்க மாட்டான். அவைகளை அவன் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் கூட அவன் தவறுகள் செய்யும் பொழுது தயக்கம் ஏற்படும். வாய்விட்டு இன்னொருவரிடம் தன் தவறுகளைச் சொல்ல முடிந்தால் அவன் செய்யும் தவறுகளும் குறைய ஆரம்பிக்கும்.
மனிதனைச் செம்மைப்படுத்த, நல்வழிப்படுத்தத்தான் மதங்கள் தோன்றின. சரியான அர்த்தம் கூறப்படவில்லையென்றால் அது மூடப் பழக்கமாகக் கருத வழி வகுக்கும். அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன் விவேகத்துடன் நம்பிக்கைகளை விளக்கியிருக்கின்றார். அவர் ஓர் நாஸ்திகராக இருந்தவர். ஆத்திகராக மாறவும் தான் கிளப்பிய கேள்விகளுக்குத் தானே விடைகளை அருமையாக விளக்கிச் சொல்லுகின்றார்.
காலம் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றது. சின்னக் குழந்தைகள் கூட ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். இன்றைய இளைஞர்கள் கற்பூர புத்தியுடையவர்கள். அவர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கத் தயங்கக் கூடாது.
பண்பாடுபற்றி பேசுகின்றவர்கள் வாழ்க்கையில் ஒழுக்க நெறியுடன் வாழ்ந்து காட்ட வேண்டும். இரட்டை வாழ்க்கை வாழ்பவரின் வார்த்தைகளை இக்காலப் பரம்பரை மதிக்காது. போலித்தனமும் பகட்டும் வெகுநாட்கள் நிலைக்க முடியாது. வெறும் எழுத்தில், பேச்சில் மட்டும் ஒழுக்கம் இருந்தால் போதாது. வழி காட்டுகின்றவர்கள் நெறியுடன் வாழ்ந்தால்தான் வழிகாட்டும் பொழுது இன்றைய தலைமுறை அவர்களை ஏற்றுக் கொள்ளும்
காஞ்சியில் எனக்கு இன்னொரு அனுபவம் கிடைத்தது. மகாப்பெரியவர் சன்னிதானத்தில் நான் உணர்ந்தவைகளை அடுத்துக் கூறுகின்றேன்
(தொடரும்)
நன்றி -திண்ணை
No comments:
Post a Comment